சங்க இலக்கிய
குறுந்தொகையில் உளவியல் கூறுகள்
முனைவர் பூ.மு.அன்புசிவா
இலக்கியம்
என்பது மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி என்று
குறிப்பிடுவர். பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களில்
பெண்பாற்புலவர்கள் தமது உணர்வுகளைப் புலப்படுத்துவதற்குத் தனித்துவமான
ஒரு மொழி நிலையைக் கையாண்டுள்ளனர். இப்பாடல்கள் ஆண்பாற் புலவர்களின்
பாடல்களிலிருந்தும் முற்றிலும் வேறானவை. பெண், பெண்ணாக நின்று
வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கும், ஆண், பெண்ணாக நின்று வெளிப்படுத்தும்
உணர்வுகளுக்கும் கவிதை மொழியில் நுண்ணிய வேறுபாடுண்டு. பெண்கள் தமது
உணர்வுகளைப் புலப்படுத்துவதற்குத் தனித்துவமான மொழியினைக் கையாண்டுள்ளமை
சங்க அகப்பாடல்கள் ஊடாக விளக்கப்படுகின்றது. பெண் மொழியின் பயன்பாடும்
புலமைச்சிறப்பும் பெண்பாற் புலவர்களின் கவிதை மொழியின் மூலம்
இனங்காணப்படும். சங்ககாலப் புலவர்கள் காதல், வீரம், கொடை முதலியவற்றைப்
பொருளாகக் கொண்டு பாடல்களை இயற்றியுள்ளனர் இப்பாடல்களில் இன்ப துன்ப
உணர்வுகளின் வெளிப்பாடுகள் உரையாடல்களாகவோ தனக்குத்தானே கூறிக்
கொள்வனவாகவோ அமைந்தாலும் மனஉணர்வுகள் வலுப்பெற்றுள்ளன. இதனால்
அகஇலக்கியங்கள் முழுமையும் உளவியல் சிந்தனை நிறைந்து காணப்படுவதை
அறியலாம். மேலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கல்வி கற்றிருந்த
நிலையினை சங்கப்பாடல்களில் பெண்பாற்புலவர்களின் பாடல்களும்
இடம்பெற்றிருந்ததன் வழி உணர முடிகிறது.இந்த வகையில் சங்க இலக்கியத்தில்
காணப்படும் உளவியல் கூறுகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பெண்பாற்புலவர்கள்
சங்கப் புலவர்கள் மொத்தம் நானூற்று எழுபத்து மூன்று பேர். இவர்களில்
நாற்பத்து ஐந்து (45)
புலவர்கள் பெண்பாற்புலவராக அறியப்படுகின்றனர். இவர்களில் இருபத்து ஐவர்
அகப்பொருள் மட்டும் பாடினர். புறப்பொருள் மட்டும் பாடியோர் பதினொருவர்,
அகமும் புறமும் மட்டும் பாடியோர் ஒன்பதின்மர். பெண்பாற் புலவர்களில்
ஒளவையாரே அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் அகமும் புறமுமாக 59
பாடல்களைப் பாடியுள்ளார்.
எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, பதிற்றுப்பத்து,
புறநானூறு ஆகிய ஐந்து நூல்களில் பெண்பாற்புலவர்கள் இயற்றிய பாடல்கள்
இடம்பெற்றுள்ளன. இவற்றில் அகப்பொருள் துறையையே பெண்பாற்புலவர்கள்
அதிகமாகப் பாடியுள்ளனர். அதிலும் தலைவி கூற்று பாடல்களே மிகுதியாக
இடம்பெற்றுள்ளன ஏனெனில் தன்மையிடத்தில் தான் தன் ஆழமான உணர்வுகளை
எளிதில் வெளிப்படுத்த இயலும்.
அக இலக்கியமும் உளவியலும்
மக்களின் காதல் வாழ்வை இன்றளவும் உலகிற்கு எடுத்துரைக்கும் வல்லமை
படைத்தவை அகஇலக்கியங்கள். அக்காதல் வாழ்வில் களவு மற்றும் கற்பு
காலத்தில் ஏற்பட்ட இன்ப துன்ப உணர்வுகளில் மகளிரே மிகுந்த
பாதிப்புக்குள்ளாயினர். தலைவனின்; பிரிவு, தலைவனைச் சந்திக்க இயலாத
தனிமை, அத்தனிமைக்குக் காரணமான சுற்றம், தலைவனின் மாறுபட்ட செயல்பாடு (பரத்தையர்
பிரிவு) போன்ற நிலைகளிலிருந்து விலக முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்
கொள்வதால் மனஇறுக்கம் ஏற்படுகின்றது. அந்த மன இறுக்கத்தின் வெளிப்பாடே
உறக்கமின்மை, பகற்கனவு, திரிபுணர்ச்சி, மனவெழுச்சி வடிவாகவும்
மனநோயாகவும் உருவெடுக்கிறது.
மனக்காயம்
தலைவி தன்னைப் பழித்தாள் என்று கேள்வியுற்ற பரத்தைக்குச் சினம் வந்தது
அதனால் பரத்தையின் சுயமோகம் காயம்பட்டு விட்டது. இந்நிலையை மனக்காயம்
(Trauma)
என்று மன ஆய்வாளர்கள்
குறிப்பிடுவர்.
''பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃதயர்கம் சேறுந்தானஃது
அஞ்சுவது உடையாளாயின் வெம்போர்
.......................................................................
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே'' (குறுந். பா. 80)
இப்பாடல் தலைவி தன்னைப் பழித்துக் கூறியமைக்கு விடை கூறும் முகமாக
பரத்தை கூற்றாக அமைகிறது. பரத்தை தலைவன் தன்னுடன் புனலாட வருவதை காண
இயலாதவளாக தலைவி அஞ்சுவதாகவும். தலைவனைத் தன்னிடமிருந்து காக்க
வேண்டுமாயின் வள்ளல் எழினி பகைவர்களிடமிருந்து தன் ஆநிரைக் கூட்டத்தைக்
காத்ததுபோல் தலைவியும் தன் சுற்றத்தாரோடு வந்து தன் கணவனைக் காத்துக்
கொள்ளட்டும் என்கிறாள். இந்நிலையைப் பற்றி ஒவ்வொறு தனிநபருக்கும் எது
உண்மை அல்லது யதார்த்தமோ அதைச் சுற்றியே வாழ்க்கையானது சுழல்கிறது.
அதாவது என்னவென்று சொல்லமுடியாத ஒன்று, மேலும் நம்முடைய தனி நபருக்கான
குறிகள் நம்மில் அனைவருக்கும் உண்டு. எது யதார்த்தமோ அல்லது உண்மையாக
நமக்கு உள்ளதோ அது குறியீடாக வெளிப்படுகிறது) ஐ.க.பாண்டியன், (ஒளவையின்
உளவியல் ப்ராய்டு லெக்கானின் மன அலசல். ப.181)
என்று உளவியலறிஞர் லெக்கான் குறிப்பிடுகின்றார். மனக்காயத்தின்
வெளிப்பாடாக பரத்தை தலைவியால் தலைவனை மீட்க முடியாது என்பதன் மூலம்
தலைவியின் இடத்தில் தான் இருப்பதாக தன் நனவிலி ஆசையை
வெளிப்படுத்துகிறாள்.
உள்ளப் போராட்டம்
ஒரு விருப்பத்தை நிறைவு செய்ய எண்ணும் மனம் உள்ளப்போராட்டத்திற்கு
ஆளாகின்றது. தன் விருப்பம் சரியா தவறா என்றும் சமூகம் இதனை ஏற்றுக்
கொள்ளுமா என்றும் போராட்டம் நிகழ்கிறது. உள்ளப் போராட்டம் பற்றி
ப்ராய்டு பாலுணர்ச்சிக்கு முரண்பட்ட பண்பாட்டு உணர்ச்சி
உளப்போராட்டத்தில் பங்கு கொள்கின்றது. இவ்விரு உணர்வெழுச்சிகள்
இயல்பிலேயே முரண்பட்டிருப்பதால் ஒற்றுமைக்கு வாய்ப்பின்றி ஒன்றை
மற்றொன்று ஆளுகைக்கு உட்படுத்துவதில் முனைப்பாகச் செயல்படும். இதில்
தத்தமது வலிமையைக் காட்ட தீவிரமாகப் போராடுகின்றன. இவ்விரண்டும்
வலிமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. உடலியல் மனிதனுக்குப்
பாலுணர்ச்சியும், சமூக மனிதனுக்குப் பண்பாட்டு உணர்ச்சியும் மூலங்களாக
இருப்பதால் இவ்விரண்டில் எதையும் விட்டுக்கொடுக்க அதே வேளையில்
முழுமையாகச் சார்ந்திருக்க முடியாத இக்கட்டான நிலை மனிதனுக்கு
ஏற்படுகின்றது|| (தி.கு. இரவிச்சந்திரன் சிக்மண்ட் ப்ராய்ட்
உளப்பகுப்பாய்வு அறிவியல், ப.152) என்கிறார்.
தலைவன் பொருள் தேடச் செல்கிறான், செல்லும் வழியெல்லாம் தலைவியை
நினைத்துக் கொண்டே செல்கின்றான். இதனால் தலைவி மீது ஏற்படும்
காமஉணர்வானது வெள்ளப்பெருக்கு போன்று பெருகுகின்றது, எனினும்; பொருள்
தேடிச் சென்று இடையில் திரும்பமுடியாத இவ்வுலகத்து இயல்பினால் ஏற்படும்
தலைவனின் உள்ளப் போராட்ட நிலையை
"நினைத்தனென் அல்லனோ பெரிதே
நினைத்து
மருண்டனென் அல்லனோ,
உலகத்துப்பண்பே
.................................
.................................
அனைப் பெருங்காமம் ஈண்டுகடைக்
கொளவ" (குறுந்.பா.99)
- என்று ஒளவையார் திறம்பட விளக்குகின்றார்.
திரிபுணர்ச்சி
பிறழந்த நடத்தைகளில் ஒன்றாக இருப்பது திரிபுணர்ச்சி. இத்திரிபுணர்ச்சி
கொண்டோர் தற்செயலாக இயல்பான நிகழ்ச்சிகளிலும் மறைபொருளையே காண்பர்.
ஒருவர் அவரைச் சாதாரணமாகப் பார்ப்பதை எச்சரிக்கும் முறைப்பாகவும்
இயல்பாக நடைபெறும் இயற்கை நிகழ்வுகளைத் தன்னைப் பயமுறுத்துவதாகவும்
எண்ணுவர். இத்துன்புறு எண்ணங்கள் பெரும்பாலும் புறத்தெரியப்படுவனவாகவே
வருகின்றது. ஷஷதிரிபுக் காட்சிகள் என்பன இருக்கும் புலன் தூண்டல்களைத்
தவறாகப் புலன் உணர்வதால் ஏற்படுவனவாகும்|| (பெசன்ட் கிரீப்பர்ராஜ் (தமிழாக்கம்)
பிறழ்நிலை உளவியல், ப.78)
பருவ மாற்றத்தின் அடிப்படையில் கார்ப்பருவம் இயல்பாக வருகின்றது.
இந்நிலையில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியைத் தேற்றிய தோழியிடம்,
பாம்புகள் இறந்துபடுமாறு மிகுந்த வேகத்தோடு இடிக்கப்படும் இடியோசையும்இ
புயற் காற்றோடு வரும் பெருமழையும் தலைவனைப் பிரிந்திருக்கும் என் மீது
இரக்கம் காட்டாது துன்புறுத்துகின்றன என்கிறாள்.
''ஆர்அளி இலையோ நீயே? பேர்இசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர், அளியர்இ பெண்டிர் இஃது
எவனோ?" (குறுந் பா.158)
இயற்கை பருவ மாற்றமாகிய கார்காலம் தன்னைத் துன்புறுத்தவே வந்தது என
நினைப்பது தலைவியின் திரிபுணர்ச்சி நிலையேயாகும்.
மனவெழுச்சி
மனிதனின் உள்ளமும் உடலும் எழுச்சிப்பெற்றுச் செயல்படுகின்ற நிலையை
மனவெழுச்சி என்பர். இம்மனவெழுச்சி அகப்புறக் காரணிகளால் தோற்றுவிக்
கப்படுகின்றன. அச்சம், கவலை, பிரிவு, துன்பம், உறக்கமின்மை போன்றவை
இனிமையற்ற மனவெழுச்சிகளாகும்.
கவலை
கவலையால் உள்ள விறைப்பு நிலை, உள்ளவிறைப்பு நிலையால் கவலை என ஒன்று
காரணமாகவும் மற்றொன்று விளைவாகவும் மாறி மாறி அமைகின்றது தலைவனுக்கு
வழியிடை நேரும் துன்பம் பற்றிய அச்சம், இரவுக்குறி மறுத்ததால்
தலைவனுக்கு நேரும் வருத்தம், தலைவியைக் காண விரும்பும் ஆர்வம் கலந்த
அன்பு, கண்டால் பெறலாகும் இன்பம் பற்றிய விழைவு ஆகிய பல்வேறு
உணர்வுகளின் மோதலில் உள்ள இறுக்கம் அடைகின்றது. அடிப்படை உணர்வுகள் சில
தம்முன் ஒன்றை ஒன்று பாதித்துச் செயல்பட்டுச் சிக்கல் உருவாவதே
கவலையாகும். மணம் புரியும் வேட்கையால் தலைவனை வரைவு கடாவுதற்காகத்
தலைவியும் தோழியும்; இரவுக்குறி மறுப்பர். அந்நிலையில் குறையுற்ற
தலைவனின் மனக்குமுறலாக ஓளவையார்,
"பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீங்கி
அரிதவா உற்றனை" (குறுந்.பா.29)
என்று குறிப்பிடுகின்றார். அன்புடையாராலேயே மறுக்கப்பட்டமையால் தலைவனால்
எதிர்த்துப் போராட இயலவில்லை. ஒப்புக் கொண்டு ஏற்கவும் இயலவில்லை.
தலைவனின் உள்ள நெருக்கடியானது மழைநீரால் உருகும் பச்சை மண்
பாத்திரத்திற்கு உவமையாகக்கூறப்பட்டுள்ளது. "கவலை என்பது
வலிமையின்மையையும் காப்பின்மையையும் ஒத்துக் கொள்வத" (பெசன்ட்
கிரீப்பர்ராஜ், பிறழ்நிலை உளவியல், ப.88) என்னும் உளவியல் கருத்தின்
விளக்கமாக இவ்வுவமை விளங்குகிறது.
உள்ளநிலை உடல்நிலையாதல்
உள்ளத்தின் அமைதி இன்மை உடலின் அமைதியின்மையாக மாறுகிறது. இதனால்
உறக்கமின்மை, வெப்பப் பெருமூச்சு போன்றவை ஏற்படுகின்றன. உள்ளம்
துன்புறும் போது உறக்கக்கேடு நிகழ்கிறது. உடல்நலக்கேடும்,
உறக்கமின்மையும் இணைகின்றன. தலைவன் மீது விருப்பு கொண்டு காதல் நோயால்
துன்புறும் தலைவி உறக்கமின்றித் தவிக்கிறாள். அதனால், உறங்கும்
ஊர்மக்கள் மீது சீற்றம் கொள்கிறாள். தலைவியின் செயல்பாட்டினையும்
புலம்பும் நிலையினையும்
"ஆஅ! ஒல்! எனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே'' (குறுந்.பா.28)
-என்று அழகுற காட்சிப்படுத்துகின்றார் ஒளவையார்
வெப்பபெருமூச்சு
துன்பநிலையிலும். உள்ளத்தின் ஆரவாரக் கிளர்ச்சியினால் நேரும் உடலின்
இயலாமையாலும் வெப்ப பெருமூச்சு ஏற்படும். தலைவனின் பிரிவால் ஆற்றாது
வருந்தும் தலைவி தோழியிடம் தலைவனின் பிரிவினை எண்ணினால் தன் உள்ளமானது
வெந்துபோகிறது என்றும் அதற்கு அஞ்சினால் இத்துன்பம் தன்னால் தாங்கிக்
கொள்ளும் அளவிற்கு உரியது அன்று என்றும் குறிப்பிடும்நிலையினை.
"உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே
வருத்தி'' (குறுந். பா. 102)
- என்ற பாடலடிகள் வழி அறியமுடிகின்றது
முடிவுரை
புறமனத்தில் உண்டாகும் இயல்பான ஆசைகளை, காமஉணர்வுகளை அடக்கி வைக்கும்
போது அவை உள்ள இறுக்கமாக, உடல் பிணியாக, மனவெழுச்சியாக உருமாற்றம்
பெறுகின்றன. உள்நோய்க்குத் தீர்வாக இயற்கை நிகழ்வைத் தன் நிலையோடு
ஏற்றிக் கூறுகிறாள், தோழியிடம் தன் கவலையை, ஏக்கத்தை
வெளிப்படுத்துகிறாள், தன் நிலை அறியாது இன்பமாக உறங்கும் ஊரினை
சாடுகிறாள், உறக்கமின்றித் தவிக்கின்றாள். மேற்குறிப்பிட்ட செய்திகளை
ஒளவையார் பாடல்கள் புலப்படுத்துகின்றன. காதல் உணர்வினை ஒளவையார்
குறுந்தொகையில் தலைவி கூற்றாக 8
பாடல்களிலும், தலைவன் கூற்றாக 2
பாடல்களிலும், தோழி கூற்றாக 2
பாடல்களிலும், பரத்தை, இற்பரத்தை கூற்றாக தலா 1
பாடல்களிலுமாகப் பாடியுள்ளார் ஆண் ஆதிக்கச் சமூகத்தில் பெண்ணின் காம
உணர்வை துணிவுடன் பாடிய பெண்பாற் புலவர்களுள் ஒளவையாரும் ஒருவர் ஆவார்.
முனைவர் பூ.மு.அன்புசிவா
149 ஹரிஸ்ரீ
காடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர் - 641 007
பேச:098438 74545.
|