மணவை முஸ்தபா:
அறிவியல் தமிழின் பிதாமகன்
ஆயிஷா இரா.நடராசன்
தமிழுக்கு
உலக அரங்கில் அந்தஸ்தைப் பெற்றுத்தந்த அறிஞர்
தமிழகம்
உலகுக்கு வழங்கிய சிறந்த அறிஞர்களில் ஒருவரான மணவை முஸ்தபாவின் மறைவு
தமிழ் அறிவுலகத்துக்கு மிகப் பெரும் இழப்பு. தமிழுக்குச் செம்மொழி
அந்தஸ்து பெற்றுத்தர உலகஅளவில் நிர்ப்பந்தம் கொடுத்த போராளிகளில் ஒருவர்,
அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினித் துறை என நவீனத் தமிழுக்கு
எட்டு கலைச்சொல் அகராதிகளை மகுடமாகச் சூட்டியவர் என்று பல சாதனைகளை
நிகழ்த்தியவர் அவர்.
'பிரித்தானிக்கா' கலைக் களஞ்சியத்தைத் தமிழுக்குக் கொண்டுவரும் பணியும்
அவரது தலைமையில்தான் நடந்தது. ஆங்கிலத்தின் முதல் அகராதியைக்
கொண்டுவந்த சாமுவேல் ஜான்சன் தொடர்ச்சியாக ஐந்தாறு நாட்கள் உணவு,
உறக்கமின்றி உழைப்பார் என்று சொல்வார்கள். மணவை முஸ்தபாவுக்கும் அது
பொருந்தும். பல நாட்களுக்கு ஓய்வே எடுத்துக்கொள்ளாமல் உழைத்தவர் முஸ்தபா.
தமிழில் யுனெஸ்கோ கூரியர்
1966-ல்
பாரீஸில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு தொடங்கி பல உலகத் தமிழ்
மாநாடுகளிலும் அறிவியல் தமிழ் குறித்து அவரது ஆய்வுக் கட்டுரைகள்
இடம்பெற்றன. பாரீஸ் மாநாட்டை நடத்திட 'யுனெஸ்கோ' உதவியது. அன்று
யுனெஸ்கோவின் தலைமை இயக்குநராக இருந்தவர் மால்கம் ஆதிசேஷையா. அந்த
மாநாட்டில் 53
நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டதைக் கண்டு அதிசயித்த
யுனெஸ்கோ, தமிழில் தனியாக யுனெஸ்கோ கூரியர் இதழ் தொடங்க முடிவுசெய்தது.
எனினும், தமிழ் இந்திய ஆட்சிமொழி அல்ல இந்திய பிராந்திய மொழிகளில் ஒன்று
என்பதால் யுனெஸ்கோ கூரியரைத் தமிழில் தொடங்க மத்திய அரசின் அனுமதி
கிடைக்கவில்லை. யுனெஸ் கோவின் உறுப்பினராக இருந்த முஸ்தபா, முதலமைச்சர்
அண்ணாவைச் சந்தித்து நிலைமையை விளக்கினார். அண்ணாவின் நிர்ப்பந்தத்தைத்
தொடர்ந்த, யுனெஸ்கோ கூரியரை இந்தியிலும் நடத்தினால் ஒப்புக்கொள்வோம்
என்று லால் பகதூர் சாஸ்திரி அரசு அறிவித்தது. இதழின் ஆசிரியரைத்
தேர்ந்தெடுக்கும் பொறுப்பு 'டெக்கான் ஹெரால்டு' இதழின் ஆசிரியர்
கிருபாநிதியிடமும், மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிஞர் தெ.பொ.
மீனாட்சி சுந்தரத்திடமும் விடப்பட்டது. மணவை முஸ்தாவையே ஆசிரியராகத்
தேர்வுசெய்தது அந்தக் குழு. 1967-ல்
தமிழில் யுனெஸ்கோ கூரியர் வெளியானது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் தவிர,
அரபிஇ சீனம் ஆகிய செம்மொழிகளில் மட்டுமே வெளிவந்த யுனெஸ்கோ கூரியர் இதழ்,
தமிழில் வெளிவந்தது என்பது தமிழுக்கான செம்மொழிப் போராட்டத்தின்
உலகளாவிய நிகழ்வாகப் பதிவு செய்யத்தக்கது. மணவை முஸ்தபா ஆசிரியராக
இருந்தபோது தமிழ்ப் பதிப்பு 5
லட்சம் பிரதிகள் விற்று யுனெஸ்கோ
இதழ்களில் நான்காம் இடத்தை பிடித்திருந்தது.
ஒவ்வொரு கட்டுரையையும் மிகச் சிறந்த ஒளிப்படங்களுடன், நேர்த்தியான
தமிழில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை
செலுத்தினார். ஏற்கனவே அறிவியல் தமிழ் எனும் தனித்துறையை உருவாக்குவதில்
ஈடுபட்டிருந்தாலும், யுனெஸ்கோ தமிழ்ப் பதிப்பிலும் மிகச் சிறந்த
பங்களிப்பை வழங்கினார். 35
ஆண்டுகள் கழித்து நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி யுனெஸ்கோ தமிழ்
இதழ் நிறுத்தப்பட்டது வரை அதன் ஆசிரியராக அவரே தொடர்ந்தார்.
1984-ல் தமிழ்ப்
பண்பாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்த இதழ் உலகம் போற்றும் உன்னதப் படைப்பு!.
கலைச்சொல் அறிஞர்
அறிவியல் தமிழில் எழுதுபவர்கள் எல்லோரிடத்திலும் தொடர்பில் இருந்தவர்
மணவை முஸ்தபா. தனது பெரும் முயற்சியால் 'அறிவியல் தொழில்நுட்பக்
கருத்துப் பரிமாற்றம்' எனும் பெயரில் முதன்முதலாக நடந்த அறிவியல்
தமிழ்க் கருத்தரங்கை நடத்திக்காட்டினார். 15 நாட்கள் நடந்த அந்தக்
கருத்தரங்கை ஒரு பயிற்சிப் பட்டறை போலவே நடத்தினார். மருத்துவம்,
இயற்பியல், தொழில்நுட்பம், வாகன இயல் என, உயிர்க்காப்பு மருந்து முதல்
உதிரிப் பாகங்கள் வரை எல்லாவற்றுக்குமே தமிழ்ப் பெயர்கள் இருக்க
வேண்டும் எனும் பேராவல் கொண்டவர்.
தமிழின் அறிவியலுக்கு அவர் தந்த 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்', 'அறிவியல்
தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' ஆகிய இரு பிரம்மாண்ட
படைப்புகளை துணையாகக்கொண்டே கடந்த 25
ஆண்டுகளாகப் பள்ளிக் கல்வித் துறையின் தமிழ்ப் பயிற்று மொழி சார்ந்த
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான நூல்களை
ஆசிரியர்கள் உருவாக்கிவந்துள்ளனர். 'கணினி கலைச்சொல் களஞ்சிய
அகராதி'யும் அவரது அபார உழைப்பில் விளைந்த பொக்கிஷம். இன்றும் கூகுள்
பயன்படுத்தும் 'தேடல்', 'துழாவி', 'உள்நுழைக' போன்ற பதங்கள் அவர்
நமக்களித்த கொடைகள்தான்!.
1985-ல்
கலைமாமணி விருது வழங்கப்பட்டபோதும், 1987-ல்
சிந்தனை யாளர் கழகம் சார்பில் அறிவியல் தமிழ் சிற்பி விருது
வழங்கப்பட்டபோதும் அவர் வழங்கிய ஏற்புரைகளில் பிரதானமாக இருந்தது 'தமிழுக்குச்
செம்மொழி அந்தஸ்து தரப்பட வேண்டும்' என்பதுதான். தமிழின் பெருமைகளையே
உயர்த்திப் பேசிய அவர் அதற்காக வேறு எந்த இந்திய மொழியையும் மட்டம்
தட்டிப் பேசியதில்லை.
மிஷெயில் ஹார்ட் எனும் அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் எழுதிய 'தி100'
எனும் நூலை தமிழில் ('100
பேர்') கொண்டுவந்தவர் மணவை முஸ்தபா.
இதற்காக மிஷெயில் ஹார்டை நேரில் சந்தித்து தமிழ்ப் பதிப்புக்காகத் தனி
முன்னுரை பெற்று வெளியிட்டார். அடுத்த இரண்டாண்டுகளில் ஹார்ட் அந்த நூலை
சில மாற்றங்களுடன் மீண்டும் கொண்டுவந்தபோது, அதே மாற்றங்களைத் தமிழில்
ஏற்படுத்தி அடுத்த பதிப்பைக் கொண்டுவந்தார். ஒரு மொழிபெயர்ப்பு நூலை
எப்படிக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான பாடம் இது!.
திண்டுக்கல்லில் ஒரு சாதாரண விவ சாயக் குடும்பத்தில் பிறந்து தன்னையும்
தமிழையும் உயர்த்திய மணவை முஸ்தபா இன்று இல்லை என்று நினைக்கவும்
நம்பவும் மனம் மறுக்கிறது. 'இந்த இதழ் விரைவில் வந்து விட வேண்டும்;
விரைவில் நிறைவு செய்யலாம்' என்று இன்னமும் அவர் சொல்வது போலவே
இருக்கிறது. தமிழ் இன்று செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு தனக்கான தனி
இடத்தைப் பிடித்துள்ளது. அதன் பின்னணியில் அவரது அர்ப்பணிப்பு மிக்க
உழைப்பும் இருக்கிறது.
ஊடகத் துறை நண்பர் சொன்ன ஒரு தகவல் இது. இஸ்லாமியரான அவர் தனது
நிலைப்பாடுகளையும் மாறுபாடுகளையும் மறந்து வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது
பாஜகவின் அப்போதைய தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசனைச் சந்தித்து ஒரு
வேண்டுகோள் விடுத்தார்: 'தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும் என
நீங்கள் விரும்பினால், தமிழ்மொழியைச் செம்மொழி என்று அறிவித்தால் போதும்.'
தமிழ் மீது எத்தனைக் காதல் இருந்தால் இப்படி ஒரு கோரிக்கையை அவர்
முன்வைத்திருப்பார்! தமிழுக்கு உலக அரங்கில் அந்தஸ்தைப் பெற்றுத்தந்த
பெருமையோடு அவர் மறைந்துவிட்டார். எனினும், தமிழிலேயே பொறியியல்,
மருத்துவக் கல்வி எனும் அவரது கனவை நனவாக்குவதுதான் அவருக்கு நாம்
செலுத்தும் உண்மையான அஞ்சலி!.
ஆயிஷா இரா. நடராசன்,
eranatarasan@yahoo.com
|