ஹைகூ குயில் மயிலாடுதுறை இளையபாரதி
முனைவர் இரா.மோகன்
“யாருமற்ற தோப்பு
எதற்காகப் பாட்டு
சொல்லு குயிலே!” (நிலவின் புன்னகை, ப.19)
என்னும் மயிலாடுதுறை இளையபாரதியின் ஒரு ஹைகூ கவிதையை மேற்கோள்
காட்டிவிட்டு, “குயில் கேட்பவருக்காகவா பாடுகிறது? தன்னுள் இருக்கும்
தனக்காகப் பாடுகிறது. ஆனால் அது தனக்குள் நாதமூலச் சிலிர்ப்புகளை
யாசிக்கும் பிரபஞ்சத் துடிப்புகளை உள்ளடக்கிக் கொண்டல்லவா இருக்கிறது?”
என மொழிவார் மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன். இக் கருத்தின் தொடர்ச்சியாக,
“இன்று எவராலும் புறந்தள்ள முடியாத படி தமிழ் இலக்கியத்தின் ஒரு
பகுதியாக இடம்பெற்றுவிட்ட ஹைகூவிற்கு மயிலாடுதுறை இளையபாரதி இன்னுமொரு
குயிலாகக் கிடைத்திருக்கிறார்” என இளையபாரதியைப் பற்றிய தம்
கணிப்பினையும் அவர் பதிவு செய்வார்.
மயிலாடுதுறை இளையபாரதி இதுவரை வெளியிட்டிருக்கும் ஹைகூ தொகுப்புக்கள்
மூன்று. கால வரிசைப்படி அவை வருமாறு:
1.
‘நிலவின் புன்னகை’ (2006)
2. ‘நீ…
நான்… நிலா’ (2009)
3. ‘நகர்ந்து செல்லும் நத்தைக்
கூடுகள்’ (2017)
இம் மூன்று தொகுப்புகள் தவிர, மயிலாடுதுறை இளையபாரதியும் அவரது
துணைவியார் ரேவதி இளையபாரதியும் இணைந்து எழுதி வெளியிட்டுள்ள ஹைகூ
தொகுப்பு ‘அன்றில்கள்’ (2017). ‘தமிழின் முதல் இணையர் துளிப்பா நூல்’
என்னும் சிறப்பினைப் பெற்றது இத் தொகுப்பு நூல்.
“இருண்ட காடு
வெளிச்சப் பாதை
நரை முடி” (அன்றில்கள், ப.30)
என்பது படிம அழகு மிளிரும் ரேவதி இளையபாரதியின் ஹைகூ.
“செவ்வாயில் மாந்தன்
திருமணத் தடை
செவ்வாய் தோசம்” (அன்றில்கள், ப.60)
என்பது முற்போக்குச் சிந்தனை துலங்கும் மயிலாடுதுறை இளையபாரதியின் ஹைகூ.
கவிஞர் மு.முருகேஷ் குறிப்பிடுவது போல், ‘சின்னச் சின்ன வார்த்தைகளால்
இந்த இலக்கிய இணையர் தீட்டும் இத்தகைய துளிப்பா ஓவியங்கள், நம் மனக்
குளத்தில் பெரிய பெரிய எண்ண அலைகளை எழுப்பிப் போகின்றன’ (‘இணைந்த
இதயங்களின் இலக்கியப் பதிவுகளாக…’, ப.13).
இளையபாரதியின் படைப்புலகம்
இளையபாரதி பன்முகத் திறன்கள் கொண்ட ஒரு படைப்பாளியாக விளங்குகின்றார்.
ஹைகூ வடிவம் தவிர, புதுக்கவிதை. கவியரங்கக் கவிதை, தன்முன்னேற்றக்
கட்டுரை, தொகை நூல் முதலான பிற துறைகளிலும் அவர் தம் எழுத்துத்
திறத்தினை வெளிப்படுத்தியுள்ளார்; ‘கவி ஓவியா’ திங்கள் இதழின் ஆசிரியர்,
‘நம்மொழி பதிப்பக’ உரிமையாளர் என்ற பரிமாணங்களும் அவருக்கு உண்டு.
பேரறிஞர் அண்ணா விருது, சிந்தனைச் செம்மல் விருது, தாராபாரதி அறக்கட்டளை
விருது, கவிச்சிற்பி விருது முதலான விருதுகள் பலவற்றிற்குச்
சொந்தக்காரர் இளையபாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
‘நிழலுதிர் நேரம்’ (2005)
என்னும் அழகிய தலைப்பில் இளையபாரதியின்
புதுக்கவிதைகள் வெளிவந்துள்ளன. “‘நிழலுதிர் நேரம்’ என்பது இவரது கவிதைத்
தொகுப்பின் தலைப்பு. தலைப்பே ஒரு தனிக்கவிதையாய் தலை நிமிர்த்துகிறது.
‘ஒரு மரம் தன் நிழலை உதிர்க்கிறது’ என்ற கற்பனையே அற்புதமானது” (‘புன்னகை
செய்யும் புதுக்கவிதைகள்’, ப.11)
என இத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரையில் இளையபாரதிக்குப் புகழாரம்
சூட்டியுள்ளார் கவிவேந்தர் மு.மேத்தா.
குழந்தைத் தொழிலாளர்களின் வறுமைக் கோலங்கள் முதலாகக் கும்பகோணத்தில்
கள்ளங்கரவற்ற, சூதுவாது அறியாத குழந்தைகளின் உயிர்களைக் காவு கொண்ட
நெருப்பு வரையிலான இன்றைய சமூக அவலங்கள் பலவும் இளையபாரதியின்
புதுக்கவிதைகளுக்குப் பாடுபொருள் ஆகியுள்ளன. சான்றாக,
‘எதிர்பார்ப்புகள்’ என்னும் தலைப்பில் இளையபாரதி படைத்துள்ள ஒரு
புதுக்கவிதை இதோ:
“வரதட்சணை
கேட்காத / மணமகன்… கணவனாய்!
சீர்களின் பட்டியல் போடாத / மாமியார்… மறுதாயாய்!
இரு சக்கர வாகனம் கேட்காத / மாமனார்… தந்தையாய்!
நாளொரு மேனியும் அன்பாய் பேசும் / நாத்தனார்கள்… சகோதரிகளாய்!
தொட்டதற்கெல்லாம் குறை பேசாத / பிற உறவுகள்… தோழமையாய்!
நீ / வியப்பதற்கு முன் / ஒரு வார்த்தை…
கனவு கண்டேன் தோழி!” (நிழலுதிர் நேரம், ப.21)
கவிஞரின் சமூக உணர்வு கலை நயத்துடன் வெளிப்பட்டிருக்கும் ஆகச் சிறந்த
கவிதை இது!
அரங்கம் அதிர்ந்த கர ஒலிகளை மட்டுமன்றி, பரிசினையும் பாராட்டினையும்
விருதினையும் இளையபாரதிக்குப் பெற்றுத் தந்த 32
கவிதைகள் ‘அரங்க மின்னல்கள்’ (2007) என்னும் தொகுப்பாய் வெளிவந்துள்ளன.
இளையபாரதியின் கவியரங்கக் கவிதையில் இருந்து ஒரு தெறிப்பான சிந்தனைத்
துளி:
“இது / ‘கலியுகம்’ என்பதெல்லாம்
வெறும் பேச்சு;
இனி, / கணினி யுகம் என்று சொல்!
அது வீச்சு!” (ப.16)
இளையபாரதி எழுதியுள்ள 12
தன்முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு ‘வெற்றி உங்கள் பக்கம்’ (இரண்டாம்
பதிப்பு 2013).
அவரது மொழியிலேயே குறிப்பிடுவது என்றால், ‘முன்னேற்றம் குறித்த முத்தான
சிந்தனைகள் இந்நூலில் பதியமிடப்பட்டிருக்கின்றன’. இந் நூலில்
இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் மேலோரின் மேற்கோள்
ஒன்றினைத் தந்து சென்றிருப்பது சிறப்பு.
‘சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு’ (2016)
என்பது பிள்ளை-களுக்குப் புரியும் விதமாகவும் பெற்றோர் மனதில் பதியும்
வகையிலும் இளையபாரதி எழுதியுள்ள தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு.
பதச் சோறாக, இந்நூலில் இடம்பெற்றிருக்கும் அமுத மொழி ஒன்று:
“கேட்பதற்கு தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு
தாமதமாகவும் இருக்க வேண்டும்” (ப.61).
இளையபாரதி வெளியிட்டுள்ள பிறிதொரு குறிப்பிடத்தக்க தொகை நூல் ‘வாழ்வை
இனிமையாக்கும் வளமான பொன்மொழிகள்’ (2013)
என்பது. வாழ்க்கைக்கு வழிகாட்டும் 351 பொன்மொழிகளின் தொகுப்பு இந் நூல்.
‘ஓர் அழகிய பொன்மொழி நினைவில் இருப்பது நம் பணப்பெட்டியில் ஒரு பொற்காசு
இருப்பதைப் போன்றது!’ என்னும் கூற்று இத் தொகுப்பைப் பொறுத்த வரையில்
நூற்றுக்கு நூறு உண்மை.
குறுகத் தறித்த வடிவில் சாதனையாளர்களின் வாழ்வும் பணியும்
“வரலாறு என்பது
வந்து போனவர்களின் / கணக்கல்ல
தந்து போனவர்களின் / கணக்கு”
(ஒவ்வொரு மழையிலும் …, ப.24)
என்பார் கவிஞர் க.ஆனந்த். அவரது கூற்றுக்கு இணங்க, வரலாற்றுக்குத்
தங்கள் வாழ்வாலும் வாக்காலும் நிலையான பங்களிப்பினை நல்கியுள்ள
பெருமக்களைக் குறித்து இரத்தினச் சுருக்கமான வடிவில் ஹைகூ கவிதைகளைப்
படைத்துத் தந்துள்ளார் இளையபாரதி. இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஓர்
எடுத்துக்காட்டு:
“புவியில் பிறப்பு
விண்ணில் வாழ்வு
கல்பனா சாவ்லா” (நிலவின் புன்னகை, ப.62)
இங்கே ஆறே ஆறு சொற்களில் கல்பனா சாவ்லாவின் ஒட்டுமொத்தச் சாதனை வாழ்வையே
அழகிய சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார் இளையபாரதி. ஆம்; கல்பனா சாவ்லா
பிறந்தது என்னவோ எல்லோரையும் போல புவியில் தானாம்! ஆனால், முத்திரை
பதித்ததோ விண்ணிலாம்! விண்வெளி ஆய்விலாம்!
இளையபாரதியின் கண்ணோட்டத்தில் ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார்,
“ சாதித்தீ
பொசுக்கிய
வெண்தாடி.” (நீ… நான்… நிலா, ப.35)
பகலென்றும் இரவென்றும் பாராது, வெயில் என்றும் மழை என்றும் பனி என்றும்
கருதாது, கருமமே கண்ணாகக் கொண்டு நாட்டு எல்லைப் பகுதிகளில் காவல்
புரிந்து வரும் இந்தியச் சிப்பாய்களுக்கு ஹைகூ வடிவில் இளையபாரதி சூட்டி
இருக்கும் மகுடம் இது:
“எல்லைச் சாமிகளாய்
ஏராளமானோர்
இந்தியச் சிப்பாய்கள்” (நிலவின் புன்னகை, ப.85)
சமூகக் கண்ணோட்டம்
“விடியலுக்கான விதைகளை – வீரிய விதைகளைக் கையில் வைத்திருப்பவர்… நல்ல
சமூகக் கண்ணோட்டம் இவரிடம் இருக்கிறது… சமூக அக்கறையும், பண்பாட்டுக்
கவலைகளும் இவர் கவிதைகளில் அழுத்தமாகப் பதிந்துள்ளன” (‘அன்பில் கலக்கும்
மனித நேயக் கவிதைகள்’, பக்.8-9) என இளையபாரதியின் ‘நிழலுதிர் நேரம்’
என்னும் புதுக்கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரையில் பேராசிரியர்
இராம.குருநாதன் தம் மதிப்பீட்டினைத் தந்துள்ளார். இம் மதிப்பீடு அவரது
ஹைகூ கவிதைகளுக்கும் பொருந்தி வருகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகையில்
அமைந்த ஹைகூ கவிதைகள் சிலவற்றை இங்கே காணலாம்.
“அவர்கள் (சிறார்கள்) மூளையில்
விதையைப் போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியைப் போல்
அறையப்படுகிறது” (இன்னொரு தேசிய கீதம், ப.80)
என்பார் கவிஞர் வைரமுத்து. அவரை அடியொற்றி இளையபாரதியும் இன்றைய கல்வி
முறை பற்றிய தமது விமர்சனக் கண்ணோட்டத்தினை ஹைகூ கவிதைகளில்
வெளியிட்டுள்ளார். அவரது படப்பிடிப்பில்,
“நகர்ந்து செல்லும்
நத்தைக் கூடுகள்
பள்ளிக் குழந்தைகள்.” (நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள், ப.7)
இன்று குழந்தைகள் ‘வருத்தமுடன் / பாரம் சுமாக்கிறார்கள் / கட்டாயக்
கல்வி’யை; ‘திகட்டும் அளவிற்குத் திணிக்கப்படும் கல்வி’யால் அவர்கள்
வருத்தமுறுகிறார்கள்!
இன்று கோயில் உண்டியல்களில் வளமை கோலோச்சுகின்றது; ஆனால், கோயில்
படிக்கட்டுகளிலோ வறுமை அமர்ந்திருக்கின்றது. இந்தக் கசப்பான, முரண்பட்ட
உண்மையை இளையபாரதி தமது இரு ஹைகூ கவிதைகளில் படைத்துக் காட்டியுள்ளார்:
“வேண்டுதல்களால்
நிரம்பி வழிகிறது
கோயில் உண்டியல்.
வறுமை
அமர்ந்திருக்கிறது
கோயில் படிக்கட்டுகளில்.” (நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள்,
ப.44)
இன்று கடவுளிடம் மனிதன் முன்வைப்பதெல்லாம் ‘பிள்ளைச் சிறுவிண்ணப்ப’மும்
‘பிள்ளைப் பெருவிண்ணப்ப’மும் தான்! சிறியதும் பெரியதுமான விண்ணப்பங்கள்
– வேண்டுதல்கள் – மலிந்த பிரார்த்தனைகள் தான்! இன்னும் ஒரு படி மேலே
சென்று, ‘விருப்பங்களுக்கேற்ப / தரப்படுகிறது கையூட்டு / கடவுளுக்கு’
(ப.44) என்கிறார் கவிஞர்.
மக்கள் மனவயல்களில் விழிப்புணர்வினை விதைக்க வேண்டிய சமூக வளைத்தளங்கள்
இன்று பொன்னினும் மேலான காலத்தினை வீணடித்து, அறிவினை மழுங்கடிக்கும்
விதத்திலேயே முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. இதனை இளையபாரதி,
“வசியப்படுத்தும்
வலைத்தளப் பக்கங்கள்
விரயமாகும் காலம்” (நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள், ப.47).
என்னும் தம் ஹைகூ கவிதையில் சாடியுள்ளார்.
நமது குடும்பத் தலைவியரின் பொன்னான பொழுதை எல்லாம் கொள்ளை கொள்ளும்
இன்றைய தொலைக்காட்சித் தொடர்களையும் விட்டு வைக்கவில்லை கவிஞர்.
“அடுத்த வீடு
அந்நியப் படுகிறது
தொடரும் தொடர்கள்” (நீ… நான்… நிலா, ப.14)
என்னும் ஹைகூ இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.
“அடிமடி வலி
அலறும் ஆறுகள்
கொள்ளை போகும் மணல்” (நகர்ந்து செல்லும் நதிக்கூடுகள், ப.8)
என மணற் கொள்ளையால் விளையும் பெருந்துயரத்தினை எடுத்துக்காட்டும்
இளையபாரதி,
“விற்பனையில்
விளைநிலங்கள்
கேள்விகளுடன் எதிர்காலம்” (நகர்ந்து செல்லும் நதிக்கூடுகள்,
ப.9)
என விளைநிலங்கள் இன்று விலைநிலங்கள் ஆகி வரும் சமூக அவலத்தினைப்
பாடுபொருள் ஆக்குகின்றார்.
“சூடு பிடித்தது
அரசியல் வியாபாரம்
தேர்தல் நேரம்” (நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள், ப.41)
எனத் தேர்தல் காலத்தில் நிகழும் குதிரை பேரங்களைக் குத்திக் காட்டும்
கவிஞர்,
“உயரங்களைத் தொட
துயரங்களைக் கட
‘உழைப்பு உயர்த்தும் உன்னை!’”
(நகர்ந்து செல்லும்
நத்தைக் கூடுகள், ப.55)
என வாழ்க்கை மேம்பாட்டிற்கான மூலதனமாக உழைப்பினை உயர்த்திப்
பிடிக்கின்றார்.
“மத்தாப்பு ஒளி
மனதில் வலி
சிவகாசிச் சிறார்கள்” (நிலவின் புன்னகை, ப.24)
எனக் குழந்தைத் தொழிலாளர்களின் அவலத்திற்காகப் பரிவுடன் குரல்
கொடுக்கும் இளையபாரதி,
“திருமணப் பத்திரிகை
திரளும் கண்ணீர்
முதிர்கன்னி” (நிலவின் புன்னகை, ப.23)
என முதிர்கன்னியரின் வாழ்வில் மண்டிக் கிடக்கும் சோகத்தினையும்
உருக்கமாகச் சித்திரிப்பது குறிப்பிடத்தக்கது.
“படைப்பில் குறைபாடு
உழைப்பில் திறமை வெளிப்பாடு
மிளிரும் திருநங்கைகள்” (நிலவின் புன்னகை, ப.27)
எனத் திருநங்கைகளின் திறமைக்குப் புகழாரம் சூட்டும் கவிஞர்,
“உடல் ஊனம்
உதாசீனப்படுத்துவோம்
உயர்வாக்கும் சிந்தனைகளால்” (நிலவின் புன்னகை, ப.87)
என மெய்ப்புல அறைகூவலர்களையும் (Physically
Challenged People)
பெருமைப்படுத்துகின்றார்.
“பள்ளிகளில்
சாதிக்கச் சொல்லுங்கள்
சாதிகளைச் சொல்லாமல்” (நிலவின் புன்னகை, ப.54)
எனப் பெற்றோர்க்கு அறிவுறுத்தும் கவிஞர்,
“வாழ்க்கைப் பாதை
வசப்படும் வெற்றி
தடையல்ல வயது” (நீ… நான்… நிலா, ப.56)
என மாந்தர்க்குத் தன்னம்பிக்கை ஊட்டவும் தவறவில்லை.
தத்துவத் தேடல்
சமூகச் சாடலோடு தத்துவத் தேடலும் கைவரப் பெற்றவராக இளையபாரதி விளங்குவது
சிறப்பு. “சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் தத்துவம், தத்துவமாக நான்
சொல்லுவதெல்லாம் சத்தியம்” என்னும் கவியரசர் கண்ணதாசனின் வாக்கிற்கு
ஏற்ப, இளையபாரதி தம் ஹைகூ கவிதைகளில் ஆங்காங்கே வாழ்வின் தத்துவங்களை –
நிலையான சத்தியங்களை – பதிவு செய்துள்ளார். அவரைப் பொறுத்த வரையில்
இயற்கை மனித குலத்திற்கு உணர்த்தும் வாழ்க்கைப் பாடங்கள் பலவாகும்.
சான்றாக,
“நீரோட்டம் உணர்த்தும்
வாழ்க்கைப் பாடம்
ஓடிக்கொண்டே இரு” (நீ… நான்… நிலா, ப.26)
என்னும் ஹைகூ இவ்வகையில் கருதத்தக்கது.
‘வசப்படுகிறது வாழ்க்கை / ஒவ்வொருவருக்கும் / ஒவ்வொரு விதமாய்’ (நகர்ந்து
செல்லும் நத்தைக் கூடுகள், ப.61) என மொழியும் இளையபாரதி, வாழ்க்கை
முடிவில் – சாவில் – மயானத்தில் எரியூட்டப் பெறுவது எது என்பதை,
“சிதை வெப்பம்
எரிகிறது
மன அழுக்கு” (நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள், ப.61)
என்னும் கவிதையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
‘இந்த உலகில் நிலைத்தது எது?’ என்ற வினாவுக்குச் சங்கச் சான்றோர்
இரத்தினச் சுருக்கமாக ‘நில்லாமையே நிலையானது!’ என விடை கூறுவார். அவரது
வழியில் நடை பயிலும் இளையபாரதி,
“நுனிப்புல்
பனித்துளி
நிலையாமை உணர்” (நீ… நான்… நிலா, ப.54)
என மொழிகிறார்.
‘உள ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என
வேண்டினார் வள்ளலார் பெருமான். அவரது வாக்கினை அடியொற்றி,
“உருண்டோடும் காலம்
உணர்த்திச் செல்கிறது
உள்ளும் புறமும் ஒன்றாயிரு!”
(நகர்ந்து செல்லும் நத்தைக்
கூடுகள், ப.55)
என வலியுறுத்துகிறார் இளையபாரதி. ‘ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி’ எனக் கவிஞர் கண்ணதாசன் சேர்ந்து மனிதன் வாழும்
வகைக்குத் தெய்வத்தின் ஆறு கட்டளைகளுள் முதலாவதாகக் குறிப்பிடுவதும்
இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.
இன்றைய சூழலில் மனிதன் வாழும் முறையாக இளையபாரதி பறைசாற்றும் தத்துவச்
சிந்தனை இது தான்:
“எதிர்கொள்ளப் பழகு
எப்படியும் இருக்கும்
‘எதிர்காலம்!’' (நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள், ப.54)
விட்டு விலகி ஓடாமல் – நழுவிச் செல்லாமல் – ஒதுங்கிப் போகாமல் – எதையும்
நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் எதிர்கொள்ளப் பழகினால் போதும்,
நிகழ்காலத்தில் எந்தப் பிரச்சினையும் நம்மை அணுகாது; எப்படியும்
எதிர்காலம் நல்லதாகவே அமையும்!
ஒப்பீட்டு நோக்கில் ஹைகூ இணைகள்
“ஊர் கூடித்
தேர் இழுத்தது
உயர்சாதித் தெருவிற்குள்” (நிலவின் புன்னகை, ப.37)
என்பது இளையபாரதி படைத்துள்ள ஒரு ஹைகூ. ‘சாதியக் கட்டுமானத்தை சம்மட்டி
கொண்டு சாய்ப்பது போல அமைந்த இக் கவிதை சமதர்மத் தேருக்கு வடம்
இழுக்கும்’ (‘துளிப்பாக்கள்’, பக்.7-8) என இக் கவிதையை மதிப்பிடும் யுக
பாரதி, இதே சிந்தனையைக் குறித்து செ.ஆடலரசன் எழுதியுள்ள,
“எத்தனை பேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்” (சேரிக்குள் தேர், ப.36)
என்னும் பிறிதொரு ஹைகூ கவிதையை எடுத்துக்காட்டி விட்டு, “ஒரே சிந்தனை
இரண்டு நபர்கள் எழுதும் போது எத்தனை வேறுபட்ட வடிவத்தை எடுக்கிறது
என்பதைக் காட்டவே இந்த ஒப்பீடு” (ப.8) எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
இவ் வகையில் ஒப்பீட்டு நோக்கில் அலசத் தக்க இன்னும் சில ஹைகூ இணைகள் இதோ:
1.“ தலைமுறைக் கோபம்
ஓங்கி ஒலிக்கிறது
பறை” (இளையபாரதி, நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள், ப.32)
“தலைமுறைக் கோபம்
அடி விழ… அடி விழ
அதிரும் பறை” (மித்ரா, குட்டையில் கேட்ட பேச்சு, ப.38)
2.“ உலகின் உன்னதம்
உயிர் தாங்கும் காவியம்
தாய்மை” (இளையபாரதி, நிலவின் புன்னகை, ப.67)
“அடுப்புப் புகை
கரித்துணிக் கவிதை…
அம்மா” (மு.முருகேஷ், விரல் நுனியில் வானம், ப.19)
3. “ யாருமற்ற சாலை
வழித்துணையாக வருகிறது
நிலா” (இளையபாரதி, நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள், ப.23)
“தனியாய் நடந்தேன்
துணையாய்
நிலா” (அமுதபாரதி, நூறு நிலா, ப.21)
இந்த ஒப்பீட்டுக் கல்வி ஹைகூ கவிதையின் ஆழங்களையும் நுட்பங்களையும்
வாசகர்கள் உய்த்துணர்வதற்கு உறுதுணை புரியும்.
காதலின் செல்வி தலைப்பட்டுள்ள ஹைகூ கவிதைகள்
காதல் எனப்படுவது யாது? இவ் வினாவிற்கு இளையபாரதி தரும் நயமான,
நறுக்கான விடை இது:
“விழி ஈர்ப்புத் தீர்மானம்
இருமன ஒப்பந்தம்
காதல் என்றாகும்” (நிலவின் புன்னகை, ப.20)
‘நெஞ்சப் புள்ளியில் மையம் – நெடுஉடல் முழுதும் மகிழ்வு’ (நிலவின்
புன்னகை, ப.21): இதுவே காதல் எனப்படும் உணர்வு.
சரி, ‘காதல் சம்மதம்’ என்பதற்கான அடையாளம் யாது? ‘கவிழ்ந்த இமைகள் /
கால்விரல் கோலம்’ (நிலவின் புன்னகை, ப.36) இரண்டுமாம்!
‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்’ (71)
என்னும் திருக்குறளின் ஹைகூ வடிவம் இது:
“பிரிதலின் நிமித்தம்
கசியும் கண்கள்
காதலைச் சொல்லும்” (நீ… நான்… நிலா, ப.32)
இன்னும் சொல்லப் போனால், கூடலில் வெளிப்படும் காதலை விட, பிரிதலின் போது
கண்களின் கசிவில் வெளிப்படும் காதலுக்கே அடர்த்தியும் ஆழமும் மிகுதி!
காதலில் ஏக்கம் மூன்று வகை என்பார் சிறுகதை எழுத்தாளர் கு.ப.ரா. காதலர்
ஒருவரை ஒருவர் பார்க்க ஏங்குவது, பார்த்து ஏங்குவது, பார்க்காமல்
ஏங்குவது என்பது அவரது நுண்ணிய பாகுபாடு ஆகும். அது போல் காதல் வாழ்வில்
உணர்ச்சி மிக்க தருணம் காத்திருப்பு. இதனைப் புலப்படுத்தும்
இளையபாரதியின் ஹைகூ:
“காத்திருப்பில்
கரைகிறது
காதல்” (நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள், ப.48)
நிறைவாக,
“திருந்தும் சமூகம்
திரும்பிப் பார்க்கும்
எழுதிக் கொண்டிரு” (நீ… நான்… நிலா, ப.64)
என்னும் இளையபாரதியின் ஹைகூ கொண்டே நாம் அவரை வாழ்த்தலாம் போலத்
தோன்றுகின்றது!
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
|