சங்கப் பெண்பாற்
புலவர் கச்சிப்பேட்டு நன்னாகையாரின் தனித்திறன்
முனைவர் இரா.மோகன்
சங்கத்தின்
இருபத்து மூன்று அகப்பெண் புலவர்களுள் ஒருவர் கச்சிப்பேட்டு நன்னாகையார்.
'செங்கற்பட்டு மாவட்டத்துக் காஞ்சிபுரத்துக்குச் சங்க காலத்தில்
வழங்கிய பெயர் கச்சி என்பது... பேடு என்பது ஓர் ஊரின் தனிப்பிரிவு...'
(ஔவை நடராசன், புலமைச் செவ்வியர், பக்.63-65).
எனவே, காஞ்சி நகரில் ஒரு பிரிவாகிய கச்சிப்பேட்டைச் சார்ந்தவர்,
நன்னாகையார் என்பது புலவரின் இயற்பெயர் எனக் கொள்ளலாம். இவர் இயற்றிய
அகப்பாடல்கள் ஆறு. இவை அனைத்தும் குறுந்தொகையிலேயே இடம் பெற்றுள்ளன.
இவற்றுள் நான்கு பாடல்கள் (30, 172, 192, 197)
தலைவி கூற்றாக அமைந்தவை; இரண்டு பாடல்கள் (180,
287) தோழி கூற்றாக உள்ளவை.
பெண்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் காதல் உணர்வு-களையும் கூர்மையாகவும்
நுட்பமாகவும் வடித்துக் காட்டுவதில் ஒரு பெண்பாற் புலவர் என்ற முறையில்
கச்சிப்பேட்டு நன்னாகையாரின் தனித்திறன் பளிச்சிடக் காண்கிறோம். இக்
கருத்தின் ஒளியில் அவர் படைத்துள்ள குறுந்தொகைப் பாடல்களை ஈண்டு அலசிப்
பார்ப்போம்.
குறுந்தொகை 30-ஆவது பாடல் தலைவி கூற்றாக அமைந்தது. தலைவன் தலைவியை
வரைந்து கொள்வதற்கான பொருளினை ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்கிறான். அக்
காலத்தில் தலைவியது ஆற்றாமைக்கான காரணத்தைத் தோழி வினவுகிறாள். அவளுக்கு
மறுமொழியாக, 'அன்புத் தோழியே,, யான் உரைப்பதைக் கேட்பாயாக! நேற்று
இரவுப் பொழுதில், தான் வருவதாகக் குறித்த நாளில் வந்து வரைந்து
கொள்ளாமல், பொய்யினை உண்மை போல் நம்பும் படி பேசுவதில் வல்லவன் ஆகிய
தலைவன், என் உடம்புடன் ஒன்றி அணைதலைப் பொருந்திய, உண்மையைப் போன்ற
தன்மையை உடைய பொய்யாகிய கனவு ஒன்று தோன்றி, எனக்கு மயக்கத்தை
உண்டாக்கிற்று. அந்த மயக்கத்தினின்றும் விடுபட்டு, துயில் உணர்ந்து
எழுந்து, உடனே அருகில் தலைவன் இருக்கிறான் என எண்ணிப் படுக்கையைத்
தடவிப் பார்த்து ஏமாந்தேன். வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப்
போல நலிவுற்ற, தலைவனைக் காணாமல் தனியொருத்தியாய் யான் மட்டுமே
இருந்ததையும் கண்டேன். அத்தகைய யான் அனைவரின் இரக்கத்திற்கும் உரியவள்
ஆனேன்!' என்கிறாள் தலைவி. அவளது ஆழ்ந்த உணர்வு நிலையைச் சித்திரிக்கும்
வகையில் அமைந்த குறுந்தொகைப் பாடல் வருமாறு:
'கேட்டிசின் வாழி தோழி! அல்கல்,
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட, ஏற்றுஎழுந்த,
அமளி தைவந் தனனே; குவளை
வண்டுபடு மலரின் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே!'
இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் 'வாய்த்தகைப் பொய்க்கனா' என்னும்
தொடருக்கு 'உண்மையைப் போலத் தோன்றிப் பொய்யாக முடியும் கனவு; இது கனவு
என்னும் மெய்ப்பாடு' (குறுந்தொகை மூலமும் உரையும், ப.70) என விளக்கம்
தருவர் 'பதிப்பு வேந்தர்' உ.வே.சா.
'கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி?'
(திரை இசைப் பாடல்கள்: முதல் தொகுதி, ப.343)
என்னும் கவியரசர் கண்ணதாசனின் திரைப் பாடல் வரிகள் இங்கே ஒப்புநோக்கத்
தக்கன.
குறுந்தொகை 287-ஆவது
பாடல் தோழி கூற்றாக அமைந்தது. 'பிரிவிடை வேறுபட்ட தலைவி நம்மைத் துறந்து
வாரார் என்று கவன்றாட்குப் பருவம் காட்டித் தோழி வருவர் எனச் சொல்லியது'
என்பது இப் பாடலின் துறைக் குறிப்பு.
'அன்புத் தலைவியே, கேட்பாயாக! பன்னிரண்டு மாதம் நிறைந்த கருப்பத்தைத்
தாங்கித் தளர்ந்து, நடக்க இயலாத, பசும்புளிச்சுவையில் விருப்பத்தை உடைய,
முதற்சூல் வாய்த்த மகளிரைப் போல, கடல் நீரை முகந்து கொண்ட, வானத்தில்
ஏற இயலாமல், அந்நீர்ச் சுமையைத் தாங்கிக் கொண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து,
வளம் மிக்க பல குன்றுகளை நோக்கிப் பெருமுழக்கம் இடும் மேகங்கள் விரைந்து
எழுகின்ற கார்ப் பருவத்தை இப்பொழுது கண்ட பிறகும் தலைவர் நின்னைப்
பிரிந்து வாராமல் இருப்பாரோ? வருவர்' எனக் கூறுகிறாள் தோழி அவளது கூற்று
வடிவில் அமைந்த குறுந்தொகைப் பாடல் வருமாறு:
'அம்ம வாழி தோழி! காதலர்
இன்னே கண்டும், துறக்குவர் கொல்லோ?
முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசை,
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர்கொண்டு,
விசும்புஇவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே'
மகளிர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருத்தலும் உண்டு என்பதும்,
கருவுற்ற மகளிர் வயா நோயால் வருந்தும் பொழுது புளிச்சுவை உள்ள பொருள்களை
விரும்புவர் என்பதும் இப்பாடலால் அறியப் பெறும் சிறப்புத் தகவல்கள்
ஆகும். முதற்சூல் கொண்ட மகளிரைக் 'கடுஞ்சூல் மகளிர்' என்னும் அனுபவத்
தொடரால் கச்சிப்பேட்டு நன்னாகையார் சுட்டியிருப்பது சிறப்பு. கண்ணன்
தேவகியின் வயிற்றில் 12
மாதம் கருவில் இருந்தான் எனப் பெரியாழ்வார் பாடியிருத்தல் (3.2.8)
ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது.
கச்சிப்பேட்டு நன்னாகையார் படைக்கும் பிறதொரு குறுந்தொகைத் தலைவி (172)
தமது தனிமைத் துன்பத்தைக் குறித்துக் கூட வருந்தவில்லையாம்; தன்னைப்
பிரிந்த தனிமையினால் தலைவர் துன்புறுவார் என்றே அவளது நெஞ்சம்
வருந்துகின்றதாம். அவளைப் பொறுத்த வரையில் மாலைக் காலம் என்பது
தனிமையில் இருப்பவர்க்குத் துன்பத்தைத் தரும் 'பையுள் மாலை'யாகத்
தோன்றுகின்றது. குறுந்தொகை 180-ஆம்
பாடல் தலைவர், பிரிந்து சென்ற இடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப்
பெற்றாரோ, இல்லையோ என எண்ணிக் கலங்கும் தலைவியை நம் கண்முன் கொண்டு
வந்து நிறுத்துகின்றது. கூந்தற் பாயலில் துயிலும் தலைவரைத் தழுவி மகிழ
வேண்டிய இனிய இளவேனிற் பருவத்தில், அவரைப் பிரிந்தமையால் புனையப்படாத
தனது வெறுமையான கூந்தல் தொகுதியைத் தடவிக் கிடக்கும் பிறிதொரு தலைவியைக்
குறுந்தொகை 192-ஆம்
பாடலில் காண்கிறோம். பருவ வரவின்கண, 'தலைவர் வருவர்; நீ வருந்தற்க' எனத்
துணிபு கூறிய தோழியை நோக்கி, 'என் உயிரைக் கொள்ள வருவது போல இக்கூதிர்ப்
பருவம் வந்தது; இனி என் செய்வேன்?' என்று வருந்திக் கூறும் தலைவியைக்
குறுந்தொகை 197-ஆம்
பாடல் காட்டுகின்றது. இங்ஙனம் தமது தலைவரைப் பிரிந்த துயரால்
அல்லற்பட்டு ஆற்றாது அரற்றும் தலைவியரின் உணர்ச்சி மிக்க தருணங்களைக்
கச்சிப்பேட்டு நன்னாகையார் தம் அனைத்துப் பாடல்களிலும் உருக்கமாகவும்
உயிரோட்டமாகவும் சித்திரித்துள்ளார்.
ஜேன் ஆஸ்டின் என்ற ஆங்கில நாவலாசிரியை பற்றித் திறனாய்வாளர்கள்
குறிப்பிட்டுள்ள கருத்து ஒன்று கச்சிப்பேட்டு நன்னாகையார்க்கும்
பொருந்தி வருவதாகும்: 'ஜேன் ஆஸ்டின் பெண் ஆகையால், பெண்கள் கூடிப்
பேசிக் கொள்ளுதலை நன்கு அறிந்திருத்தல் இயல்பு... ஆண்கள் மட்டும் கூடி
அளவளாவிப் பேசும் பேச்சுக்களை ஒரு பெண் நேரே அறிந்திருக்க வாய்ப்பு
இல்லை... ஆகவே ஆஸ்டின் என்னும் அந்த அம்மையார் தம் நாவல்களில் அத்தகைய
பேச்சுக்களை, இரண்டு இன்றியமையாத இடங்கள் தவிர வேறு எங்கும்
அமைக்கவில்லையாம்' (மேற்கோள்: மு.வரதராசன், இலக்கிய மரபு, பக்.118-119).
சங்கப் பெண்பாற் புலவரான கச்சிப்பேட்டு நன்னாகையாரும் தம் பாடல்களில்
தலைவரைப் பிரிந்து வாடும் தலைவியரின் ஆற்றாமை உணர்வுகளுக்கும்
பெண்களுக்கே உரித்தான தனிப்பட்ட அனுபவங்களுக்குமே அழுத்தமும்
முதன்மையும் தந்து பாடி இருப்பது இவ்வகையில் ஒப்புநோக்கத் தக்கது.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
|