முடத்தாமக்
கண்ணியார் சித்திரிக்கும் பாடினியின் உடல் அழகியல்
முனைவர் இரா.மோகன்
உடல்
அழகியலைப் பொறுத்த வரையில், பெண்ணின் தோற்றப் பொலிவே சங்க இலக்கியத்தில்
பரவலாகக் கொண்டாடப் பெற்றுள்ளது. ‘எழில்மாமேனி’ என்றாற் போல் பெண்ணின்
ஒட்டுமொத்த உடல் அழகு போற்றப்படுவதில் இருந்து, முடி முதல் அடி
வரையிலான உடல் உறுப்புகள் யாவும் தனித்தனியே கலைநயத்துடனும்
நுட்பத்துடனும் வருணிக்கப் பட்டுள்ளன; நெற்றி, கண், புருவம், வாய், காது,
கூந்தல் ஆகிய உடலின் மேற்பகுதிகளும், தோள், கை, முலை,
கொப்பூழ், வயிறு ஆகிய
நடுப்பகுதிகளும், இடை, அல்குல், தொடை, கால், சீறடி ஆகிய
கீழ்ப்பகுதிகளும் ஓவியப் பாங்கில் அழகுறத் தீட்டப்பெற்றுள்ளன. இவ்
வகையில் பேராசிரியர் தி.சு.நடராசன் ‘தமிழ் அழகியல்’ என்னும் நூலில்
குறிப்பிடுவது போல், “சங்க இலக்கியத்தின் உடல் அழகியல், பின்னாளைய
சிற்பக் கலைக்கு முன்மாதிரியாக அமைகிறது” (ப.174) எனலாம். இக்
கருத்தியலின் ஒளியில் பத்துப்பாட்டின் பொருநர் ஆற்றுப்படையில் இடம்
பெற்றிருக்கும் பாடினியின் உடல் அழகியல் பற்றிய வருணனையில் துலங்கும்
கலை நயத்தினையும் நுட்பத்தினையும் ஈண்டுக் காணலாம்.
பத்துப்பாட்டில் இரண்டாவதாக வருவது பொருநர் ஆற்றுப்படை;
இது சோழன் கரிகால் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. இதில்
பாடினியின் உடல் வருணனை முடி முதல் அடி வரை – ‘கேசாதி பாதம்’ என்ற
முறையில் – 23 அடிகளில் (25-47) சொல்லோவியமாகத் தீட்டப் பெற்றுள்ளது.
முடத்தாமக் கண்ணியாரின் சொற்களில் பாடினி பற்றிய அழகிய அவ் வருணனைப்
பகுதி இதோ:
“அறல்போல் கூந்தல், பிறைபோல் திருநுதல்,
கொலைவில் புருவத்து, கொழுங்கடை மழைக்கண்,
இலவுஇதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்,
பலஉறு முத்தின் பழிதீர் வெண்பல்,
மயிர்குறை கருவி மாண்கடை அன்ன
பூங்குழை ஊசல் பொறைசால் காதின்,
நாண்அடச் சாய்ந்த நலம்கிளர் எருத்தின்,
ஆடுஅமைப் பணைத்தோள், அரிமயிர் முன்கை,
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரல்,
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்உகிர்,
அணங்குஎன உருத்த சுணங்கு அணி ஆகத்து,
ஈர்க்குஇடை போகா ஏர்இள வனமுலை,
நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்,
உண்டுஎன உணரா உயவும் நடுவின்,
வண்டுஇருப்பு அன்ன பல்காழ் அல்குல்,
இரும்பிடித் தடக்கையின் செறிந்துதிரள் குறங்கின்,
பொருந்துமயிர் ஒழுகிய திருந்துதாட்கு ஒப்ப
வருந்துநாய் நாவின், பெருந்தகு சீறடி…
பெடைமயில் உருவின், பெருந்தகு பாடினி”
கூந்தல் தொடங்கி சீறடி வரையிலான பதினெட்டு உறுப்புகளின்
சொல்லோவியங்களாக விளங்கும் இவ் வருணனைப் பகுதியில் மிளிரும் வண்ணமும்
வனப்பும் குறித்து நிரலே காணலாம்:
1).
கூந்தல் : ஆற்றில் உள்ள கருமணல் போன்று நெளிநெளியாகஇ
வரிவரியாக இருந்தது.
2). நெற்றி : பிறை நிலா போன்று அழகாக இருந்தது.
3). புருவங்கள் : வில் போன்று வளைந்து இருந்தன.
4). கண்கள் : செழுமையுடன் குளிர்ச்சி பொருந்தியனவாக இருந்தன.
5). இதழ்கள் : இலவம் பூக்கள் போன்று சிவப்பாக இருந்தன.
6). வாய் : இனிய சொற்களைப் பேசுவதாக இருந்தது.
7). பற்கள் : முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்தது போல் பளிச்சென்று
இருந்தன.
8). காதுகள் : அணிகளைக் கொண்டு கத்தரிக்கோலின் கைப்பிடி வளையம் போன்று
இருந்தன.
9). கழுத்து : நலம் மிக்கதாய் நாணத்தால் சாய்ந்து இருந்தது.
10). தோள்கள் : மூங்கிலைப் போன்று பருத்து இருந்தன.
11). முன்கை : மென்மையான மயிர்களின் ஒழுங்கினைப் பெற்றிருந்தது.
12). விரல்கள் : மலையிலே வளர்ந்த காந்தள் மலர்களைப் போன்று மென்மையாக
இருந்தன.
13).நகங்கள் : செந்நிற ஒளியும், வளமையும, கூர்மையும் வாய்ந்த
கிளியினுடைய
அலகினைப்
போன்று இருந்தன.
14). மார்புகள் : தேமல் படர்ந்து கண்டாரை வருந்தும் நிலையில்
நெருக்கமாகஇ இளமையோடு இருந்தன.
15). கொப்பூழ் : நீர்ச்சுழியினைப் போன்று அழகாக இருந்தது.
16). இடை : புறத்தோற்றத்திற்கு இல்லாதது போல் நுண்மையாக இருந்தது; இதில்
மணிகள் பதித்த மேகலையை அணிந்திருந்தாள் பாடினி.
17). தொடைகள் : யானையின் தும்பிக்கை போன்று ஒன்றித் திரண்டு செறிவாக
இருந்தன. கணைக்கால் வரை மயிர் ஒழுங்கு இருந்தது.
18). அடிகள் : ஓடி இளைத்த நாயின் நாக்குப் போன்று மென்மையாகவும்
அழகாகவும் இருந்தன.
19). முழு உருவம் : மொத்தத்தில் பெண் மயில் போல் இருந்தது பாடினியின்
முழு உருவ நலம்.
நோக்கு நெறி நின்று அலசிப் பார்க்கும் போது தெரிய வரும்
இவ் வருணனையின் சிறப்புக் கூறுகள் வருமாறு:
1. ஒவ்வோர் உறுப்பிற்கும் அழகுக்கு அழகு சேர்க்கும், பொருத்தமான
உதாரணங்கள் கையாளப் பெற்றிருத்தல்.
2. கத்தரிக்கோலைக் குறிக்கும் வண்ணம் ‘மயிர்குறை கருவி’ என்னும் அழகிய
சொல்லாட்சி பயன்படுத்தப் பெற்றுள்ளமை.
3. பாடினியின் சீறடிகளுக்கு
ஓடி இளைத்த நாயின் நாக்கினை உவமை காட்டி இருப்பது உடல் அழகியலின் உச்சம்;
மகுடம்.
4. முடி முதல் அடி வரை உள்ள இந்த நீண்ட வருணனைப் பகுதியில் மூக்கு
என்னும் இன்றியமையாத உறுப்பு இடம்பெறாதது நோக்கத்தக்கது.
5. “பாடினி, பாடலின் தலைவி அல்ல. அப்படியிருக்க, முதன்மைப்
பாத்திரமாகிய பொருநனையோ, பாட்டுடைத் தலைவனாகிய கரிகாற் பெருவளத்தானையோ
அழகுபட வருணிக்காமல், ஓர் ஆண்பாற் புலவரின் கோணத்திலிருந்து ஒரு
பெண்பாற் புலவர், பாடினியின் அங்க அவயங்களை வருணிக்கிறார்…; ஒரு பெண்ணை
முழுமையாக ஓவியம் தீட்ட முயலுகிறார்” (தமிழ் அழகியல், பக்.197-198).
‘சங்க இலக்கியத்தில் மகளிர் உடல் அழகியல்’ என்பது எதிர்காலத்தில்
உளவியல் பயிற்சியும் புலமையும் வாய்ந்த ஓர் இளம்ஆய்வாளர் முனைவர்
பட்டத்திற்கு மேற்கொள்ளத் தக்க நுண்ணிய ஆய்வுப் பொருள். அவ் வகையில் இக்
கட்டுரை ஒரு முன்னோட்டம்; முதல் அடி; கோலப் புள்ளி எனலாம்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
|