திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்?

முனைவர் ஆ.மணி
                                                                 
சுருக்கம்  (Abstract)

பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகிய திருக்குறள் பழங்காலத்தில் சுவடிகளில் எழுதப்பட்டுக் கற்கப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. பனையோலை எழுதும் முறைகளில் இருந்த சிக்கல்கள் எண்ணற்றவை. அச்சுக்கலையின் வருகை எழுதுவதில்; கற்பிப்பதில் பல வசதிகளைப் பரப்பியது. கி.பி. 1554இலில் போர்ச்சுகலில் இலிஸ்பன் நகரில் ரோமன் எழுத்துக்களில் அச்சிடப்பட்ட லூசோ தமிழ் வினாவிடை என்பதே தமிழின் முதல் அச்சு நூலாகும் என்பர். அதன்பின்னர்த் தமிழ் இலக்கியங்களில் அச்சான முதல் நூல் திருக்குறள் ஆகும் என்ப. அந்நூல் 1812இல் அச்சானது. அப்பதிப்பின் பதிப்பாசிரியர் பற்றிய செய்திகளை எடுத்துரைப்பது இக்கட்டுரை. 

1. உரைக்களம் / முன்னுரை (Introduction)

தமிழ் இலக்கியங்களில் முதல் அச்சு கண்ட நூல் எனக் கருதப்படுகின்ற திருக்குறள் 1812 இல் முதற்பதிப்பாக வெளிவந்தது. அப்பதிப்பு தஞ்சை நகரம் மலையப்பபிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் பதிப்பிக்கப்பட்டது எனப் பலரும் கருத்துரைத்துள்ளனர். அப்பதிப்பின் பதிப்பாசிரியர் அம்பலவாணக் கவிராயர் என்றும், பதிப்பாசிரியர் தெரியவில்லை என்றும் கூறுப. அக்கருத்துக்களின் பொருத்தத்தை ஆராய்ந்து விளக்குவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும்.

2. தரவுகளும் ஆய்வு அணுகுமுறைகளும்  (Materials and Methods)

திருக்குறள் 1812 ஆம் ஆண்டுப் பதிப்பு இவ்வுரைக்கு முதன்மைத் தரவாகும் (இப்பதிப்பு தற்போது பார்வைக்குக் கிட்டவில்லை. எனினும், அப்பதிப்பின் முதல் இரு பக்கங்கள் கிடைத்துள்ளன. ஒரு பக்கம் படப்படியாகவும், மற்றொரு பக்கம் நூல்களில் எடுத்தாளப்பட்ட நிலையிலும் கிடைத்துள்ளது. அவையே இங்கு மூலங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன). திருக்குறள் பற்றிய ஆய்வுநூல்களும், அச்சுக்கலை பற்றிய நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. சிக்கலை மையமிட்ட இந்த ஆய்வு, விளக்கமுறை (Descriptive Method), ஒப்பீட்டுமுறை (Comparative Method), மதிப்பீட்டுமுறை (Evaluative Method) ஆகியவற்றைப் பின்பற்றி, வரலாற்று அணுகுமுறையில் (Historical Approach) அமைந்ததாகும்.

3. பதிப்பாசிரியர் கருத்து வேறுபாடுகள்  

1812 இல் வெளிவந்த திருக்குறள் மூலபாடம் என்னும் பெயரிய நூலே தமிழ் இலக்கிய நூல்களில் முதன்முதலில் அச்சான நூல் எனக் கருதுப (தி. தாமரைச்செல்வி  2012: 24). திருக்குறள் மூலபாடம் எனத் தலைப்பிடப்பட்டிருந்தாலும், அப்பதிப்பானது நாலடியார்; திருவள்ளுவமாலை ஆகியவற்றின் மூலபாடங்களையும் கொண்டது என அறிஞர் கூறுப. ‘19ஆம் நூற்றாண்டில் அச்சான இலக்கிய நூல்கள்’ என்னும் தலைப்பில் 1812ஆம் ஆண்டுத் திருக்குறள், நாலடியார்ப் பதிப்பினைக் குறித்துள்ள மயிலை சீனீ. வேங்கடசாமி (1962: 379) பதிப்பித்தவர் பெயர் என்ற இடத்தில் தெரியவில்லை என்பதன் அடையாளமாக “---“ என்ற குறியீட்டைத் தந்துள்ளார். தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால்  அச்சிற் பதிக்கப்பட்டது. மாசத் தினசரிதையின் அச்சுக்கூடம் இ. ஆண்டு ௲௮௱௰௨ (1812) என ஆண்டு குறிக்கப்பட்டுள்ள அப்பதிப்பு ஞானப்பிறகாசனால் பதிப்பிக்கப்பட்டது என்னுமாப்போலப் அறிஞர் பலரும் மொழிந்துள்ளனர் (மா.சு. சம்பந்தன் 1997: 123; இ. சுந்தரமூர்த்தி 2006: 87; தி. தாமரைச்செல்வி  2012: 24). அம்பலவாணக் கவிராயரைப் பதிப்பாசிரியர் எனக் குறித்துள்ள இளங்குமரன் (2001: 148) அதற்கான காரணங்களை எடுத்துரைக்கவில்லை என்பது குறிக்கத்தக்கது. (ஞானப்பிறகாசன் எனப் பிரகாசன் என்பதை வல்லின றகரமிட்டே அப்பதிப்பு குறித்துள்ளது. சிலர் பிரகாசன் என இடையின ரகரமிட்டும் குறித்துள்ளனர்). 19. 04. 2014ஆம் நாளிட்ட தினமணி நாளிதழில் ’தமிழ் அறிஞர்கள் அறிவோம்: திருவள்ளுவர்- திருக்குறள்’ என்னும் தலைப்பில் வெளியான செய்தியில் ” மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்”  (http://www.dinamani.com/specials/kalvimani/2014/04/19/article2177357.ece) என்னும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. மலையப்ப பிள்ளை மலயத்துவசன் ஆகிவிட்டார். சென்னைப் பட்டினத்தில் வெளியான திருக்குறள் தஞ்சையில் வெளியாகிவிட்டது. இப்படித்தான் தமிழ் இலக்கியங்களின் பதிப்புக்களைப் பற்றிய செய்திகள் மக்களிடம் வழங்கி வருகின்றன என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

4. முற்காலப் பதிப்புக்களில் பெயர் குறிக்கும் முறை

தொண்டை மண்டலம் சென்னைப்பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால்  அச்சிற் பதிக்கப்பட்டது என்னும் தொடரை ஆழ்ந்து படிக்கும்போது, அது அச்சகத்தாரைக் குறிப்பதுபோலத் தோன்றுவதை உணரமுடிகின்றது. முற்காலப் பதிப்புக்கள் சிலவற்றைக் காணும்போது இவ்வாய்பாடு அச்சக உரிமையாளரைக் குறிக்கவே வழங்குவது வழக்கம் என்பதை உணரமுடிகின்றது. இவ்வுண்மையைப் பின்வரும் கருத்துக்கள் தெளிவுபடுத்தக் காணலாம்.

"தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்களில் நூலின் பெயரும், நூலாசிரியரின் பெயரும், நூலைப் பரிசோதித்தவரின் பெயரும், நூலைப் பதிப்பித்தவரின் பெயரும், நூலை மேற்பார்வையிட்டவரின் பெயரும், நூலை அச்சிட்டவரின் பெயரும் பொதுவாகக் காணப்படும். சில சமயங்களில் நூலை அச்சடுக்கியவரின் பெயரும் குறிக்கப்படுவதுண்டு” (மா.சு. சம்பந்தன் 1997: 313) என்னும் கருத்து முற்காலப் பதிப்புக்களையெல்லாம் ஒருசேர நோக்கி, அவற்றின் அமைப்பினை எடுத்து மொழிகின்றது. இதன் மூலம் முற்காலப் பதிப்புக்களில் நூல்; நூலாசிரியர் பெயர் மட்டுமன்றி, நூலைப் பரிசோதித்தவர், நூலை மேற்பார்வை செய்தவர், அச்சிட்டவர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்ததை அறியலாம். சில பதிப்புக்களில் அச்சடுக்கியவர் பெயர்கூடத் தரப்பட்டுள்ளது அறியத்தக்கது.

நூற்றலைப்புப் பக்கத்தில் பெயர்களை அச்சிடும்முறையையும் காண்பது பொருத்தமுடையது. “.. பொதுவாக நூலின் பெயரும், நூலாசிரியரின் பெயரும், நூலைப் பரிசோதித்தவரின் பெயரும் தடித்த எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும். சில நூல்களில் ஆசிரியரின் பெயர் சிறிய எழுத்திலும், பதிப்பித்தவரின் பெயர் பெரிய எழுத்திலும் அச்சிடப்படுவது உண்டு. சில நூல்களில் நூலாசிரியர் பெயரைக் காண்பதும் அரிதாகவே இருக்கும். சில நூல்களில் ஆசிரியர் பெயர் சிறிய எழுத்தில் அச்சுக்கோர்க்கப்பட்டு மறைவுண்டு, நூலை அச்சிட உதவியவரின் பெயர் பெரிய எழுத்தில் விளக்கமாகத் தரப்பட்டிருக்கும்” (மா.சு. சம்பந்தன் 1997: 313) என வரும் பகுதி நூலின் தலைப்புப் பக்கத்தில் பெயர்களை அச்சிட்ட முற்கால முறைமையை நமக்கு உணர்த்துகின்றது. இந்தப் பின்புலத்தில் திருக்குறளின் முதற்பதிப்பினை நோக்கும்பொழுது சில உண்மைகள் புலனாகின்றன.

1812ஆம் ஆண்டுத் திருக்குறட் பதிப்பில் நூலாசிரியராகிய திருவள்ளுவர் பெயர் சிறிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இலக்கணவிலக்கிய வாராய்ச்சியுடையவர்களால் சுத்தபாடமாக்கப்பட்டது எனக் குறிக்கப்பட்டுள்ளபோதிலும், அப்பக்கத்தில் அவர்கள் பெயர் குறிக்கப்படவில்லை. எனவே, அப்பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ள ஞானப்பிறகாசன் பதிப்பாசிரியரோ, பரிசோதனை செய்து கொடுத்தவரோ, மேற்பார்வை செய்தவரோ அல்ல என்பது உறுதியாகின்றது. எனவே, அப்பக்கத்தில் தரப்பட்டுள்ள ஒரே ஒரு பெயராகிய ஞானப்பிறகாசன் என்பது அச்சிட்டவர் பெயராகவே இருக்க வேண்டும். நூற்றலைப்புப் பக்கத்தில் அச்சிட்டவர் பெயர், அச்சகப்பெயர், அச்சகத்தின் ஊர் ஆகியவற்றைத் தருவது அக்காலத்தின் இன்றியமையாத வழக்கமாகும். அதன் அடிப்படையில் பார்த்தால், அப்பக்கத்தில் உள்ள அச்சகத்தின் ஊர், அச்சக உரிமையாளரின் ஊர், அவர்தம் தந்தை பெயர், அவர்தம் பெயர், அச்சகத்தின் பெயர் ஆகியன ஞானப்பிறகாசனையே குறிக்கும் என்பது தெளிவாகும்.

பிற்காலத்தோர் சிலர் இம்மரபினை மனங்கொள்ளாமல் அவரையே பதிப்பாசிரியர் எனக் குறித்து சென்றது வரலாற்று ஏடுகளில் பதிவாகியுள்ளது. முன்னுரை எழுதியவரைக்கூடப் பதிப்பாசிரியராகக் கருதும்போக்கு தமிழில் இருந்துள்ளது என்பதைச் சங்க இலக்கியப் பதிப்புக்கள் காட்டுகின்றன (விரிவுக்கு: ஆ.மணி 2014: 77). எனவே, திருக்குறள் மூலப்பாடப்பதிப்பின் பதிப்பாசிரியர் என ஞானப்பிறகாசன் கருதப்பட்டதில் வியப்பில்லை. எனினும், ஞானப்பிறகாசன் அப்பதிப்பினை அச்சிட்டவர் என்பதை மனங்கொள்வது நல்லது. இவ்வுண்மையை அப்பதிப்பின் தலைப்புப் பக்கத்தில் உள்ள “ ஞானப்பிறகாசனால் அச்சிற்பதிக்கப்பட்டது” என்னும் தொடரும் வலியுறுத்தும். ஞானப்பிறகாசன் பதிப்பாசிரியர் இல்லை என்றால் அப்பதிப்பின் பதிப்பாசிரியர் யார்? என்ற கேள்வி எழுவது இயல்பானது. அதற்கும் விடை காண்போம்.

திருக்குறள் முதற்பதிப்பின் பதிப்பாசிரியர்

திருக்குறள் மூலபாடப்பதிப்பின் உள்ளே வரலாறு என்னும் பெயரிய பதிப்புரை ஒன்று இடம்பெற்றுள்ளது. அப்பகுதி மா. சு. சம்பந்தன் (1997: 302 – 321) ; இரா. இளங்குமரன் (2001: 147 – 150) ஆகியோர் நூல்களில் தரப்பட்டுள்ளது. அதில் “… தெய்வப்புலமை திருவள்ளுவ நாயனாரருளிச் செய்த அறம் பொருளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்க வுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் முனிவர்க ளருளிச்செய்த நீதிநூலாகிய நாலடி மூலபாடமும் இப்போதச்சிற் பதிப்பிக்கப்பட்டன“  என்ற குறிப்புக்களும் அதன் கீழ் ”இப்படிக்கு அம்பலவாணக் கவிராயர், திருநெல்வேலி” என்னும் முகவரிக் குறிப்பும் உள்ளன. இவற்றை ஆராய்ந்து நோக்கும்பொழுது ஓர் உண்மை புலனாகின்றது. பதிப்புக்கான முயற்சிகளை எடுத்தவரே பதிப்பாசிரியர் ஆவார் என்பதே வரலாறு கண்ட உண்மை. அவ்வகையில் திருக்குறள்; நாலடியார் ஆகியவற்றின் பதிப்புக்களை அச்சிற் பதிப்பிக்க முயற்சி மேற்கொண்டவராகிய அம்பலவாணக் கவிராயரே திருக்குறள்; நாலடியார் பதிப்பின் பதிப்பாசிரியர் ஆவார் என்பதே பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது.

திருக்குறட் பதிப்பினைக் கொண்டு வரத் தாம் மேற்கொண்ட முயற்சிகளை அம்பலவாணக் கவிராயர், தாம் எழுதிய வரலாற்றுப் பகுதியில் விவரித்துள்ளார். அவற்றையும் காண்போம். ”இவை அச்சிற் பதிப்பிக்குமுன் தென்னாட்டில் பரம்பரை ஆதீனங்களிலும் வித்துவ செனங்களிடத்திலுமுள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்கு மிணங்கப் பிழையற – இலக்கண விலக்கிய வாராய்ச்சியுடையவர்களா லாராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன.

இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் திருவள்ளுவமாலையும் - ஆக மூன்று சுவடியும் வெகு மூலபாடங்கள் – உரைபாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் – இலக்கண விலக்கியங்களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடதீர்மானஞ் செய்து – ஓரெழுத்து – ஓர் சொல் நூதனமாகக் கூட்டாமற் குறையாகமலனேக மூலபாடங்களுக் கிணங்கினதாகத் தீர்மானம் பண்ணி யந்தப் பாடம் பார்த்தெழுதிச் சரவை பார்த்த பாடமாகையாலும் – அந்தப்படி – தீர்மானம் பண்ணியெழுதின பாடமென்பதும் – இவடங்களிருக்குந் தமிழாட்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்தின் றோன்படும் – ஆகையால் பாடங்களி லெள்வளவேனுஞ் சந்தேகப்படுவதின்று. இப்படிக்கு { அம்பலவாணக் கவிராயர்” (மா.சு. சம்பந்தன் 1997: 321). என்று எழுதிவிட்டு அதன் அடியில் “ இந்தப் பாடங்களை இவடம் வந்திருந்த திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான் சீர்காழி வடுகநாத பண்டாரம் – இவர்களாலும் மறுபடி கண்ணொட்டத்துடனாராயப்பட்டன” (மா.சு. சம்பந்தன் 1997: 321) என எழுதுகின்றார். இத்தகைய அரும் பெரும் முயற்சியை மேற்கொண்ட அம்பலவாணக் கவிராயரை மறந்து, அச்சிட்டவராகிய ஞானப்பிறகாசனையே தமிழுலகம் இதுகாறும் பதிப்பாசிரியராகக் கருதி வந்துள்ளதுஎனின், நம்முடைய நிலையை என்னவென்று சொல்வது?.

5. முடிவுரை (Conclusion)

தமிழ் இலக்கியநூல்களில் முதல் பதிப்புக் கண்ட நூல் எனக் கருதப்படுகின்ற பெருமைக்குரிய திருக்குறள் பதிப்பினைச் செய்தவர் யாரென அறிவதும், அவர்தம் பெயரைப் பதிவு செய்வதும் காலத்தின் தேவையாகும். அவ்வகையில் 1812ஆம் ஆண்டுத் திருக்குறள் பதிப்பின் பதிப்பாசிரியர் என அம்பலவாணக் கவிராயரைக் குறிப்பதும் இன்றியமையாத செயலாகும். ஞானப்பிறகாசன் அச்சிட்டவர் என்பதை அறிவதும் காலத்தின் தேவையாகும்.

6. பார்வைநூல்கள் (References)

1.     இளங்குமரன். இரா.. 2001. சுவடிப் பதிப்பியல் வரலாறு. சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.

2.     சம்பந்தன். மா.சு.. 1997 (திருத்திய பதிப்பு). அச்சும் பதிப்பும். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

3.     சுந்தரமூர்த்தி.இ. 2006. திருக்குறள் சில அரிய பதிப்புகள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

4.     தாமரைச்செல்வி.தி.. 2012. திருக்குறள் பதிப்பு வரலாறு. புதுச்சேரி: செயராம் பதிப்பகம்.

5.     மணி.ஆ.. 2014. மலைபடுகடாம் பதிப்பு வரலாறு (1189 – 2013). சென்னை: காவ்யா.

6.     வேங்கடசாமி. மயிலை.சீனி. 1962. பத்தொன்பதாம் நூற்ராண்டில் தமிழ் இலக்கியம். திருச்சி: அழகப்பா புத்தக நிலையம்.

7.   http://www.dinamani.com/specials/kalvimani/2014/04/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/article2177357.ece Accessed on 12.08.15.

 

பின்னிணைப்பு Appendix

1. திருக்குறள் 1812 பதிப்பு முகப்புப் பக்கம்

 


முனைவர் ஆ.மணி,
துணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
புதுச்சேரி
-8,
பேசி:
9443927141.