தமிழ்ப்
பதிப்புக்கலை வரலாற்றில் நல்லதொரு மீள்தொடக்கம்
முனைவர் ஆ.மணி
(முனைவர் மா.பரமசிவனின் ‘அகநானூறு: ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும்’
(இராசகுணா பதிப்பகம், சென்னை, 2016) நூலுக்கு எழுதிய அணிந்துரை)
தமிழில் பதிப்புக்கலை
தமிழ்
நூல்களின் பதிப்பு வரலாறு போர்ச்சுகலின் தலைநகரான இலிசுபன் நகரில்
1554இலில் அச்சிடப்பட்ட லூசோ தமிழ்ச் சமய வினாவிடை (Luso Tamil
Catechism) என்னும் நூலில் இருந்து தொடங்குகின்றது என்பர். தமிழ்
மொழிபெயர்ப்புப் பகுதியில் தமிழ் வரிவடிவங்களைக் கையாளாமல் உரோம
வரிவடிவங்களைப் பயன்படுத்திய (இன்றைய வழக்கில் சொல்வதானால்
எழுத்துப்பெயர்ப்பு (Transliteration) முறையில் அச்சிடப்பட்ட) அந்நூலே
தமிழின் முதல் அச்சுநூலாகும் (மா.சு.சம்பந்தன் 1997: 47 – 48).
அதுமுதற்கொண்டு தமிழ்நூல்களின் பதிப்பு வரலாறும் தொடங்குகின்றது.
தமிழின் முதல் அச்சு நூல் மொழிபெயர்ப்பு நூலாகவும் இரு மொழி
அச்சுநூலாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
1556 இல் கோவாவிலும், 1557 இலில் கொல்லத்திலும், 1578 இல்
அம்பலக்காட்டிலும் 1578 இல் புன்னைக்காயலிலும்; வைப்புக்கோட்டையிலும்
பாதிரியார்களால் அச்சகங்கள் நிறுவப்பட்டன என்றும், கொச்சிக்கு
அருகிலுள்ள அம்பழக்காட்டில் ஏசு சபையினரால் ஏற்படுத்தப்பட்ட தமிழ்
அச்சகத்தில் 20.02.1557 இலில் தம்பிரான் வணக்கம் என்ற பெயரில்
மொழிபெயர்க்கப்பட்ட 16 பக்கங்களைக் கொண்ட நூல் அவ்வாண்டிலேயே
கொல்லத்தில் அச்சிடப்பட்டது என்றும் கூறுப( மா.சு. சம்பந்தன் 1997: 53
– 54). (அம்பழக்காட்டில் மொழிபெயர்க்கப்பட்ட தம்பிரான் வணக்கம் அங்கேயே
அச்சிடப்படாமல் கொல்லத்தில் அச்சிடப்பட்டது ஏன்?. தமிழ் அச்சு வரலாற்றை
எழுதியோர் பல்வேறு குழப்பங்களைக் கொண்டதாக அதனை அமைத்துள்ளனர் என்பது
தனிக்கதை. இக்குழப்பங்கள் களையப்பட வேண்டியது இன்றியமையாதது). 16 முதல்
18ஆம் நூற்றாண்டு வரை தமிழ் அச்சகங்களில் அச்சிடப்பட்டவை கிறித்தவ மத
நூல்களும் கிறித்தவப் பாதிரியர்களால் எழுதப்பட்ட நூல்களுமேயாகும்.
18ஆம் நூற்றாண்டு வரை எந்தவொரு தமிழ் இலக்கிய நூலும் அச்சிடப்பட்டதாகத்
தெரியவில்லை (வீரமாமுனிவர் நூல்கள் நீங்கலாக).
திருக்குறள் பதிப்பு
1812 இல் வெளிவந்த திருக்குறள் மூலபாடம்
என்னும் பெயரிய நூலே தமிழ் இலக்கிய நூல்களில் முதன்முதலில் அச்சான நூல்
எனக் கருதுப (தி.தாமரைச்செல்வி 2012: 24). திருக்குறள் மூலபாடம் எனத்
தலைப்பிடப்பட்டிருந்தாலும், அப்பதிப்பானது நாலடியார்; திருவள்ளுவமாலை
ஆகியவற்றின் மூலபாடங்களையும் கொண்டது என அறிஞர் கூறுப. தொண்டை மண்டலம்
சென்னைப்பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன்
ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிக்கப்பட்டது. மாசத் தினசரிதையின்
அச்சுக்கூடம் இ. ஆண்டு
௲௮௱௰௨ (1812) என ஆண்டு
குறிக்கப்பட்டுள்ள அப்பதிப்பு ஞானப்பிறகாசனால் பதிப்பிக்கப்பட்டது
என்னுமாப்போலப் அறிஞர் பலரும் மொழிந்துள்ளனர் (மா.சு.
சம்பந்தன் 1997: 123; இ. சுந்தரமூர்த்தி 2006: 87; தி. தாமரைச்செல்வி
2012: 24).
(ஞானப்பிறகாசன் எனப் பிரகாசன் என்பதை வல்லின றகரமிட்டே அப்பதிப்பு
குறித்துள்ளது. சிலர் பிரகாசன் என இடையின ரகரமிட்டும் குறித்துள்ளனர்)
ஆனால் அப்பதிப்பு ஞானப்பிறகாசனால் பதிப்பிக்கப்பட்டதன்று; அவர்
அப்பதிப்பினை அச்சிட்ட அச்சகத்தின் உரிமையாளர். முற்காலப்
பதிப்புக்களில் பதிப்பாசிரியர் பெயரைவிட அச்சக உரிமையாளர் பெயரே பெரிய
எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருப்பதை அப்பதிப்புக்களை உற்று நோக்குவோர்
எளிதில் அறிவர். சில பதிப்புக்களில் பதிப்பாசிரியர் பெயர் தலைப்புப்
பக்கத்தில் இல்லாமலும்கூட நூல்கள் வெளிவந்துள்ளன. பிற்காலத்தோர் சிலர்
இம்மரபினை மனங்கொள்ளாமல் அவரையே பதிப்பாசிரியர் எனக் குறித்து
சென்றதும் வரலாற்று ஏடுகளில் பதிவாகியுள்ளது. முன்னுரை
எழுதியவரைக்கூடப் பதிப்பாசிரியராகக் கருதும்போக்கு தமிழில்
இருந்துள்ளது என்பதைக் காணமுடிகின்றது (விரிவுக்கு: ஆ.மணி 2014:77).
எனவே, திருக்குறள் மூலப்பாடப்பதிப்பின் பதிப்பாசிரியர் என
ஞானப்பிறகாசன் கருதப்பட்டதில் வியப்பில்லை. எனினும், ஞானப்பிறகாசன்
அப்பதிப்பினை அச்சிட்டவர் என்பதை மனங்கொள்வது நல்லது. இவ்வுண்மையை
அப்பதிப்பின் தலைப்புப் பக்கத்தில் உள்ள “ஞானப்பிறகாசனால் அச்சிற்
பதிக்கப்பட்டது” என்னும் தொடர் வலியுறுத்தும். ஞானப்பிறகாசன்
பதிப்பாசிரியர் இல்லை என்றால் அப்பதிப்பின் பதிப்பாசிரியர் யார்? என்ற
கேள்வி எழுவது இயல்பானது. அதற்கும் விடை காண்போம்.
திருக்குறள் முதற்பதிப்பின் பதிப்பாசிரியர்
திருக்குறள்
மூலபாடப்பதிப்பின் உள்ளே வரலாறு என்னும் பெயரிய பதிப்புரை ஒன்று
இடம்பெற்றுள்ளது. அதில் “… தெய்வப்புலமை திருவள்ளுவ நாயனாரருளிச் செய்த
அறம் பொருளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்க வுணர்த்துந்
திருக்குறள் மூலபாடமும் முனிவர்க ளருளிச்செய்த நீதிநூலாகிய நாலடி
மூலபாடமும் இப்போதச்சிற் பதிப்பிக்கப்பட்டன“ என்ற குறிப்புக்களும் அதன்
கிழ் ”இப்படிக்கு அம்பலவாணக் கவிராயர், திருநெல்வேலி” என்னும் முகவரிக்
குறிப்பும் உள்ளன. இவற்றை ஆராய்ந்து நோக்கும்பொழுது ஓர் உண்மை
புலனாகின்றது. பதிப்புக்கான முயற்சிகளை எடுத்தவரே பதிப்பாசிரியர் ஆவார்
என்பதே வரலாறு கண்ட உண்மை. அவ்வகையில் திருக்குறள்; நாலடியார்
ஆகியவற்றின் பதிப்புக்களை அச்சிற் பதிப்பிக்க முயற்சி மேற்கொண்டவராகிய
அம்பலவாணக் கவிராயரே திருக்குறள்; நாலடியார் பதிப்பின் பதிப்பாசிரியர்
ஆவார் (விரிவுக்கு: ஆ. மணி, திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்?,
08.08.15இல் புதுவைப் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மையத்திற்கு
வழங்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைப்படி). அரும் பெரும் முயற்சியை மேற்கொண்ட
அம்பலவாணக் கவிராயரை மறந்து, அச்சிட்டவராகிய ஞானப்பிறகாசனையே தமிழுலகம்
இதுகாறும் பதிப்பாசிரியராகக் கருதி வந்துள்ளதுஎனின், நம்முடைய நிலையை
என்னவென்று சொல்வது?. இத்தகைய பின்புலத்தில்தான் நாம் அன்புக்குரிய
இளவல் முனைவர் மா. பரமசிவன் அவர்களின் “அகநானூறு ராஜகோபாலார்யன் உரையும்
உரைநெறியும்” என்னும் பதிப்பு; ஆய்வுநூலினை மதிப்பிட வேண்டியுள்ளது.
தமிழில் பதிப்பு வரலாறுகள்
ஏறத்தாழ 451 ஆண்டு கால வரலாறுடைய தமிழ்நூல்களின் பதிப்பு முயற்சிகள்
பற்றிய வரலாற்றுப்பார்வை தமிழர்களுக்கு அண்மைக்காலம் வரை பேரளவில்
இருந்ததாகத் தெரியவில்லை. தற்போது தில்லி ஜவகர்லால் நேரு
பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் இரா.
அறவேந்தன் அவர்களின் பெருமுயற்சியால் தமிழ்ச்செவ்வியல் நூல்களின்
பதிப்பு வரலாறு எழுதும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அவ்வகையில் முனைவர்
இரா. அறவேந்தன் அவர்களால் எழுதப்பட்ட குறுந்தொகைப் பதிப்பு வரலாறு
(1915 – 2010) என்னும் நூலே முதல் நூலாகும். (அந்நூலுக்கு முன்னர்
தமிழ்ப்பதிப்பு வரலாறுகள் பற்றிய கட்டுரைகளே எழுதப்பெற்றுள்ளன. ச.வே.
சுப்பிரமணியன் 1990இல் தொல்காப்பியப் பதிப்புகள் என்னும் நூலை
வெளியிட்டிருந்தாலும் அந்நூலின் முதன்மை நோக்கம் தொல்காப்பியப்
பதிப்புக்களை அறிமுகம் செய்து, அவற்றின் பதிப்பு முறைகளை எடுத்துரைப்பதே
என்பதால் தமிழ்ப்பதிப்பு வரலாற்று நூலாக அதனைக் கருத இயலவில்லை).
அரிய தமிழ்ப்பணி
பேராசிரியர்
இரா. அறவேந்தன் அவர்களின் வழிகாட்டலில் அகநானூற்றுப் பதிப்புகள் :
பாடவேறுபாடுகளும் உரைவேறுபாடுகளும் என்னும் தலைப்பில் முனைவர்ப் பட்ட
ஆய்வினை மேற்கொண்ட முனைவர் மா.பரமசிவன் அவர்கள் மரையா, மரையான், குருகு;
அகநானூற்றுப் பதிப்பு வரலாறு ஆகிய நூல்களைத் தமிழுலகுக்குத் தந்துத் தம்
புலமையை நிறுவியுள்ளார். இயல்பிலேயே பணிவும் அன்பும் கொண்ட பரமசிவன்
அவர்கள் முனைவர்ப் பட்ட ஆய்வாளராக இருந்த காலத்தில் (2010) காரைக்குடி
அழகப்பா பல்கலைக் கழகத்தில் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களால்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட நீதி
இலக்கியம் : பதிப்புக்களும் வெளியீடுகளும் என்னும் பெயரிய கருத்தரங்கில்
உரையாற்றச் சென்றபோது அறிந்தேன். நள்ளிரவு ஒரு மணிக்குக் காரைக்குடி
தொடர்வண்டி நிலையத்தில் சென்று இறங்கியபோது இரவென்றும் பாராமல்
எதிர்வந்து வரவேற்ற அவர்தம் அன்பும் ஆர்வமும் என்னைப் பெரிதும்
கவர்ந்தன. அன்று முதல் இன்றுவரை எங்களுடைய தமிழன்பு தொடர்கின்றது. கடின
உழைப்பும் மாளாத தமிழ்க்காதலும் ஆய்வாளர்களிடம் பேரன்பும் கொண்ட
பரமசிவன் அவர்கள் அகநானூற்றின் முதற்பதிப்பாசிரியராகக் கருதப்படுகின்ற
கம்பர் விலாசம் இராஜகோபாலார்யன் அவர்கள் செய்த அகநானூற்று உரையைக்
கண்டெடுத்துப் பதிப்பித்து வெளியிடுவது தமிழாய்வுலகுக்கு மகிழ்ச்சியான
செய்தி மட்டுமன்று; காலத்தின் இன்றியமையாத் தேவையுமாகும்.
மறக்கப்பட்டுவிட்ட ஒரு பதிப்பாசிரியரை / உரையாசிரியரை உரிய காலத்தில்
தமிழ்கூறு நல்லுலகுக்கு அடையாளம் காட்டியதன்மூலம் அரிய தமிழ்ப்பணி
ஒன்றையும் ஆற்றிய பெருமைக்குரியவராகின்றார் நண்பர் பரமசிவன் அவர்கள்.
தற்கால மீள்பதிப்புக்கள்
தற்காலத் தமிழ்ப்பதிப்புலகில் பதிப்பு,
மறுபதிப்பு, மீள்பதிப்பு, இரண்டாம் பதிப்பு ஆகிய சொற்கள் உரிய
பொருண்மைகளில் ஆளப்பெறுவதாகத் தோன்றவில்லை. மறுபதிப்பு அல்லது
மீள்பதிப்பினைச் செய்யும் ஒரு பதிப்பாசிரியர் தமக்குரிய கடைமைகளையும்
பொறுப்புக்களை உணர்ந்துதான் பதிப்பிக்கின்றார் எனச் சொல்ல இயலவில்லை.
முப்பது ஆண்டுகள் / நாற்பது ஆண்டுகள் தொல்காப்பியம் கற்பித்த
பெரும்புலமையாளர்கள்கூடத் தொல்காப்பிய உரைகளை வெளியிடும்போது தம்முடைய
வெளியீட்டுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட பதிப்பு இது என்றோ, இன்னின்ன
பதிப்புக்களைக் கொண்டு இவ்வெளியீடு உருவாக்கப்பட்டுள்ளது என்றோ சொல்லிச்
செல்லுகின்ற பதிப்பு நேர்மையுடைவர்களாக இருக்கவில்லை என்பதைத் தற்கால
வெளியீடுகளைக் கண்டறியலாம். ஓரிருவர் இன்ன பதிப்பின் மறுவெளியீடு இது
எனச் சொல்லிச் சென்றாலும், முன்னைய பதிப்பின் பல பகுதிகளை எவ்வித
அறநோக்கமும் இன்றி வெட்டியும், அவர்கள் எழுதாத பகுதிகளையெல்லாம் எழுதிச்
சேர்த்தும் வெளியிடுகின்ற அறக்கழிவுப்போக்குகளே இருப்பதையும்
காணமுடிகின்றது. குறுந்தொகையின் முதற்பதிப்பாகிய
திருக்கண்ணபுரத்தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கனின் உரையை
மறுவெளியீடாகக் கொண்டு வந்த ஒருவர் அந்நூலின் இன்றியமையாத
பகுதிகளையெல்லாம் “இப்பகுதிகள் வேண்டா என நீக்கப்பெற்றன” எனப்
பொறுப்பற்ற முறையில் எழுதிச் செல்கின்றார். நூலின் உள்ளும் பல
பகுதிகளைத் தம் போக்கில் திருத்திவிட்டு ‘இவை ஐயர் பதிப்பின்படி மாற்றம்
பெற்றன’ என்கின்றார். இவை எவ்வகைப் பதிப்பறங்களாகும் என நினைக.
இவ்வாறெல்லாம் செய்துவிட்டுக் குறுந்தொகையின் முதற்பதிப்பு எவ்வாறு
இருக்கும் என அறிய அவாவுவாருக்கு இந்நூல் துணையாகும் என்கின்றார்.
எவ்வகைத் துணையோ நாமறியோம். முன்னைய பதிப்புக்களை மறுவெளியீடு செய்ய
விரும்புவோர் முன்னைய பதிப்பின் எந்தவொரு பகுதியையும் நீக்கவோ; மாற்றவோ
அதிகாரமற்றவராகின்றார். ’’ தேவாரத்திற் போலவே பதினோராந் திருமுறைப்
பிரபந்தங்களிற் சிலவற்றினும் சில செய்யுள்களும் அடிகளும் சீர்களும்
இறந்துபோயின. இறவாதுள்ளவைகளினும் பல மிகப் பிறழ்ந்திருக்கின்றன.
பலவிடங்களினின்றும் வருவிக்கப்பட்ட பிரதிரூபங்களெல்லவற்றினும்
இக்குறைவுபாடு ஒத்திருக்கின்றது. ஆதலாற் சிற்றறிவுடைய
பசுவர்க்கத்துட்பட்ட சிறியேன் சிவாநுபூதிப் பெருவாழ்வுடையோர்
திருவாக்கிலே இறந்தவற்றைப் பூர்த்தி செய்தற்கும், பிறழ்ந்தவற்றை வேறு
பிரதிரூபங்காணாது திருத்திவிடுதற்கும் அதிகாரியல்லேன்” என்று
எழுதுகின்ற பதிப்புலக முன்னோடியான ஆறுமுக நாவலர் (1869: ப.எ.இ.)
போன்றோரை நினையும்போது தற்காலத்தோரின் இயல்பு வெளிப்படுகின்றது. தவிர்க்க
இயலாத சூழலில் செய்யும் மாற்றங்களை முன்னுரை / பதிப்புரை ஆகியவற்றில்
சுட்டுவதும், உரிய இடங்களில் மாற்றம் பெற்ற இடங்களைச் சுட்டுவதும்
இன்றியமையாப் பதிப்புநெறிகளாகும். இவற்றைச் சட்டம் போலக் கொள்வது
முன்னைய பதிப்பாசிரியப் பெருமக்களுக்கு நாம் காட்டும் நன்றியாகும்.
இவ்வுண்மையை மனங்கொள்வது நல்லறமாகும்.
நல்லதொரு மீள்தொடக்கம்
பன்னெடுங்காலம்
ஒருவர் உழைத்து உருவாக்கிய பதிப்பொன்றைக் கண்டெடுத்து, அதனை
மறுதட்டச்சிட்டு வெளியிடுவதே பதிப்பாசிரியனின் பணி என்ற அளவுக்கு
தமிழ்ப் பதிப்புலகம் தள்ளப்பட்டுள்ள இன்றைய நிலையில் முனைவர் பரமசிவனின்
இப்பதிப்பு ஒரு பதிப்பாசிரியனின் பணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும்,
தமிழ்ப்பதிப்புக் கலையில் நல்லதொரு மீள்தொடக்கமாகவும் அமைந்திருப்பது
போற்றுதலுக்குரியது.
அகநானூறு முதல் பதிப்பு
சி.வை.தாமோதரம் பிள்ளை,
இரா.இராகவையங்கார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், உ.வே.சாமிநாதையர்
ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட அகநானூற்றுப் பதிப்பு முயற்சிகள் நிறைவேறாமல்
போயின (மா.பரமசிவன் 2010:17–26). அதன் பின்னர் இராஜகோபாலார்யனின்
கதைநூல்களை வெளியிட்டு வந்த சென்னை க.குமாரஸாமி நாயுடு ஸன்ஸ்
சொந்தக்காரராகிய க.கன்னையா நாயுடு அவர்களின் வேண்டுகோளால் அகநானூற்றைப்
பதிப்பிக்கத் தூண்டுதல் பெற்ற இராஜகோபாலார்யன் அவர்கள் சென்னை, மேரி
ராணியார் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் கா.ரா. நமச்சிவாய முதலியாரிடம்
முதல் சுவடியைப் பெற்று 1916 ஆம் ஆண்டின் திசம்பர்த் திங்களில் (நள
ஆண்டுக் கார்த்திகை 21ஆம் நாள்) படி செய்துகொண்டார். அகநா. 337 முதல்
342 பாடல்களின் விடுபாடு; பல பாடல்களில் அடிகளின் விடுபாடு; சீர்களின்
சிதைவு; பிறழ்ச்சி ஆகிய காரணங்களால் மு. இராகவையங்காரின் உதவியை
வேண்டிக்கொள்ளும் இராஜகோபாலார்யன் இரா.இராகவையங்காரின் உதவியோடு
பதிப்புப் பணியைச் செய்து முடிக்கின்றார் (வே. இராஜகோபாலன்
1923:12-14). 1918இல் அணியமாகும் அவர்தம் அகநானூற்றுப் பதிப்பு
களிற்றியானைநிரை மட்டுமானதாகும் (மா. பரமசிவம் 2010: 7).
1920இல் அகநானூறு முழுமைப் பதிப்பும் (முதல் 90 பாடல்களுக்கான
பழையவுரையுடன்), 1923இல் மீண்டும் அகநானூறு முழுமைப் பதிப்பும் (முதல்
90 பாடல்களுக்கான பழையவுரையுடன்), 1926இல் அகநானூற்றின்
களிற்றியானைநிரைப் பதிப்பும் (முதல் 90 பாடல்களுக்கான பழையவுரை, இறுதி
30 பாடல்களுக்கான தம் உரை ஆகியவற்றுடன்), 1933 ஆகஸ்ட் / செப்டம்பரில்
(ஸ்ரீமுக - ஆவணி) அகநானூறு நித்திலகோவை மூலப் பதிப்பும், 1933
அக்டோபர் / நவம்பரில் (?) அகநானூறு முழுமைப் பதிப்பும் (முதல் 90
பாடல்களுக்கான பழையவுரை, அடுத்த 70 பாடல்களுக்கான உரை ஆகியவற்றுடன்) இராஜகோபாலார்யனால்
வெளியிடப்பட்டுள்ளன.
உரை யாருடையது?
1933 அக்டோபர் / நவம்பர் பதிப்பில் உள்ள முதல் 30 பாடல்களின் உரை
இராஜகோபாலார்யன் எழுதியது. எஞ்சிய நாற்பது பாடல்களின் உரை யாருடையது
என்ற குறிப்பு அப்பதிப்பில் இல்லை. மேலும் அப்பதிப்பில் நூற்பெயர்
அகநானூறு மூலமும் பழையவுரையும் என்றே உள்ளது குறிக்கத்தக்கது. எனவே,
அகநா. 121 – 160 ஆகிய பாடல்களின் உரை யாருடையது என்பதைத் தெளிவுபடுத்த
வேண்டிய பொறுப்பு முனைவர் பரமசிவன் அவர்களுக்கு உண்டு. 1926 ஆம் ஆண்டுப்
பதிப்புக்கு இராஜகோபாலார்யன் எழுதிய முகவுரையில் ”மணிமிடைபவளமும்
உரையுடன் அச்சாகி சர்வேச்வரன் கிருபையினால் விரைவில் வெளிவரும்
நிலையிலுள்ளது. இவ்வுரை அச்சாகுங் காலத்துச் சோதிக்கவேண்டிய அம்சங்களைச்
சோதித்தும், அரிய பல உரைநயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டியும் அருள்
புரிந்த சென்னை லெக்ஸிகன் கமிட்டித் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீ. உ.வே.மு.
இராகவையங்கார் ஸ்வாமிகளின் திருவடிகளை என்றும் மறவாத கடப்பாடுடையேன்”
என இராஜகோபாலார்யன் (1926: ii) எழுதுவது அவ்வுரை (121 – 160ஆம்
பாடல்களின் உரை) மு.இராகவையங்கார் செய்ததாக இருக்கலாமோ என எண்ணத்
தூண்டுகின்றது.
1933 ஆகஸ்ட் / செப்டம்பரில் (ஸ்ரீமுக - ஆவணி) வெளிவந்த பதிப்பில்
இரண்டாம் பதிப்பின் முகவுரை என்னும் பெயரில் இராஜகோபாலார்யன் எழுதிய
பதிப்புரை ஒன்றுள்ளது. அதில் மணிமிடைபவளப் பாடல்களுக்குத் தாம்
உரையெழுதியதாக அவர் குறிக்கவில்லை. ஆனால், 91 – 120 ஆம் பாடல்களின்
உரையையைப் பற்றி அவர் அப்பகுதியில் கூறியுள்ளார் என்பது குறிக்கத்தக்கது.
உடல்நலமில்லாது படுத்தபடுக்கையில் தாம் இருந்தமையால் மெய்ப்பு முதலிய
வேலைகளையும், அரிய பல உரைநயங்களையும் எடுத்துக்காட்டிப் பதிப்பினைப்
பூர்த்தி செய்தவர் மு.இராகவையங்கார் என்பதை இராஜகோபாலார்யன் (1933: ii)
எடுத்துரைத்துள்ளார். அப்பதிப்புரையின் இறுதியில் ஸ்ரீமுக ஐப்பசி என
ஆண்டுக் குறிப்புத் தந்துள்ளார்.
பதிப்பாண்டு எது?
உரை பற்றிய மேற்செய்திகளோடு, இந்த இடத்தில் மற்றொரு குழப்பத்தையும் நாம்
அறியவேண்டும். ஸ்ரீமுக என ஆண்டு குறிக்கப்பட்டுள்ள இந்தப் பதிப்பில்
இரண்டாம் பதிப்பின் முகவுரை என்ற பகுதியில் ஸ்ரீமுக ஐப்பசி என ஆண்டு
குறிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் உள்ள மயிலாப்பூர் கம்பர் விலாசம்
சக்ரவர்த்தி வே. இராஜகோபாலையங்கார் அவர்கள் என்னும் பெயரிய
பகுதியில் இராஜகோபாலையங்கார் 1935 ஜீன் 24ஆம் நாள் பரமபதம் அடைந்த
செய்தியும், Printed at the Coxton Press Madras – 1935 என்னும்
குறிப்பும் உள்ளன. இவற்றின்மூலம் இப்பகுதி இராஜகோபாலையங்காரின்
மரணத்தின் பின்னர் (1935 சூனுக்குப் பின்னர்) அச்சிடப்பட்டதை அறிய
முடிகின்றது. இப்பகுதி எப்படி 1933 பதிப்பில் இடம்பெற்றது?. மேற்பகுதி
1933 பதிப்பில் இடைச்செருகப்பட்டதா?. அல்லது முன்னர் (1933இல்)
அச்சிடப்பட்ட பகுதிகள் 1935 அச்சுடன் சேர்த்து நூலாக்கப்பட்டனவா?
என்பதையும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு நண்பர் பரமசிவனுக்கு உண்டு.
அகநானூற்றுப் பதிப்பு வரலாற்றையோ, பதிப்புக் குழப்பங்களையோ
எடுத்துரைப்பது நம் நோக்கமன்று. எனினும், ஓர் ஆய்வாளன் என்ற முறையில்
இவற்றை எடுத்துக்காட்ட வேண்டிய பொறுப்பு எனக்குண்டு. ஏனென்றால்
அப்பதிப்பு 1933இல் வெளிவந்திருந்தால், அதில் இராஜகோபாலார்யன் இறைவனடி
எய்திய செய்தி இடம்பெற்றிருக்க முடியாது; 1935 ஆம் ஆண்டுப் பதிப்பு
என்றால் அது இராஜகோபாலார்யன் வெளியிட்டதாக இருக்க இயலாது. ஆண்டுகள்
மாறும்போது பதிப்பு வரலாறும் மாறும்; இப்பதிப்பின் பகுதிகளும் மாற்றம்
பெறும் என்பதனால், அவர் அவற்றைச் செய்து முடிப்பார் என நம்புகின்றேன்.
பதிப்பமைதியும் சிறப்புக்களும்
அகநானூறு: இராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும் என்னும் பெயரிய இந்நூல்
பதிப்புரை, அணிந்துரை, உருவாக்கத்திலிருந்து சில ஆகிய முன்னிணைப்புப்
பகுதிகளையும், இராஜகோபாலார்யன் உரை, இராஜகோபாலார்யன் உரைநெறி ஆகிய
நூற்பகுதிகளையும், இராஜகோபாலார்யன் எழுதிய நூல்கள் முதலான 16
பின்னிணைப்புக்களையும் கொண்டுள்ளது.
அகநானூற்றுக்கு 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை
என்னும் பெருமைக்குரிய உரையாகிய இராஜகோபாலார்யனின் உரையைப் (அகநா. 91 –
160) பதிப்பிக்க முயலும் முனைவர் மா. பரமசிவன் அவர்கள் தமக்குக்
கிடைத்த 1926 ஆம் ஆண்டுப் பதிப்பையும், 1933ஆம் ஆண்டுப் பதிப்பையும்
ஒப்பிட்டு நோக்கி, அவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடுகளையும்
அடிக்குறிப்புக்களின்மூலம் தந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
இராஜகோபாலார்யனின் உரையை ஆராய விரும்பும் ஆய்வாளர்களுக்கு இப்பகுதி
பெரிதும் துணையாகும் என்பதில் ஐயமில்லை.
பதிப்பில் தாம் மேற்கொண்ட நெறிமுறைகளைத் தெளிவாகத் தந்திருத்தல் (ப.எ.இ.),
1926, 1933 பதிப்புக்களின் உரைப்பகுதிகளில் உள்ள பத்தி இடமாற்றங்களை
அடிக்குறிப்புக்களாக்கி இருத்தல் (பக். 18, 27, 86..), 1933 ஆம் ஆண்டுப்
பதிப்பில் இடம்பெறாத உரைச்சொற்கள்; தொடர்களைக் குறித்திருத்தல் (பக்.
10, 12, 18, 27..), மேற்கோள்கள் (பக். 3, 5, 6, 7,8, ..), உள்ளுறை;
இறைச்சிப் பகுதியில் உள்ளுறை, இறைச்சி என வருமிடங்கள் (பக். 3, 6, 18,
19, …), பாடவேறுபாடு (பக். 3, 10, 12, ..), பாடவேறுபாடுகளுக்குப் பொருள்
கூறுமிடங்கள் (ப. 72..), உரைமொழி மாற்றங்கள் (பக். 2, 4, 5, 7, …)
அகியவற்றைத் தடித்த எழுத்துக்களில் தந்து படிப்போருக்கும்
ஆய்வாளர்களுக்கும் உதவும் தன்மை இப்பதிப்பின் சிறப்புக்களுக்குச் ஒரு
சான்றாகும்.
உரையைப் பதிப்பித்ததோடு மட்டுமல்லாமல் அவ்வுரை பற்றிய நான்கு
கட்டுரைகளையும் முனைவர் பரமசிவன் அவர்கள் எழுதி இணைத்திருப்பது
பாரட்டுக்குரியது. இவை இராஜகோபாலார்யனின் உரையை நாம் புரிந்து கொள்ளத்
துணை செய்கின்றன; அத்தோடு அவரின் ஆய்வுத்திறனையும் விளக்கிக்
காட்டுகின்றன.
இராஜகோபாலார்யனின் உரையை உரைப்பகுதிகளின் அடிப்படையில் பகுத்து,
அவற்றில் உள்ள 17 உரைநெறிகளை உரிய சான்றுகளுடன் விளக்கியிப்பதும்,
கட்டுரைகளுக்கும்; ஆய்வாளர்களுக்கும் பெருந்துணையாகப்
பின்னிணைப்புக்களைத் தந்திருப்பதும் அவருடைய புலைமைத்திறனுக்கும்,
கடின உழைப்புக்கும் பதச்சோறாகும்.
மீள்பார்வைக்குரியன
பதிப்பு, ஆய்வு ஆகிய நிலைகளில் தற்கால மீள்பதிப்பு வெளியீடுகளில்
மாறுபட்டு, செவ்வையான நெறிகளின்படி உருவாக்கப்பட்டுள்ள இப்பதிப்பின்
கட்டுரைப் பகுதியில் முனைவர் பரமசிவன் அவர்கள் முன்வைத்துள்ள
கருத்துக்களில் ”உ.வே.சா. கூடத் தெளிவாக வரையறுக்காத உள்ளுறை, இறைச்சி
என்பதனை ராஜகோபாலார்யன் தெளிவாக வரையறுக்க முயல்கிறார்” (ப. 275)
என்னும் கருத்து மீளவும் சிந்திப்பதற்குரியது. இராஜகோபாலார்யனுக்கு
முன்னரே குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள உள்ளுறை; இறைச்சி
ஆகியவற்றைத் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளார் தி.சௌ.அரங்கனார். அவர்தம்
வழியிலேயே பிற்கால உரையாசிரியர் பலரும் உள்ளுறை; இறைச்சியை
வகைப்படுத்தியுள்ளனர் என்பது குறிக்கத்தக்கது (விரிவுக்கு: ஆ.மணி 2011:
137 139, 249). அதுபோன்றே உள்ளுறை; இறைச்சி பற்றிய சிக்கல் இன்னும்
தீர்க்கப்படவில்லை (ப. 274) என்பதும், பாலையிற் களவு. எனவே களவொழுக்கம்
திணைமயங்கி வருவதும் உண்டு (ப. 256) என்பதும் மீளவும்
சிந்திக்கத்தக்கவைகளே. உள்ளுறை; இறைச்சி சிக்கல் தீர்க்கமுடியாத
ஒன்றல்ல; மேலும், களவு என்பது கைகோள். அது வேறு; திணை என்பது வேறு. எனவே,
ஒரு கைகோள் ஒரு திணையில் வருவது திணை மயக்கம் ஆகாது; பொழுது,
கருப்பொருள் மயக்கமே திணை மயக்கம் ஆதலால்.
செழுமை பெற
கட்டுரைப் பகுதிகளுக்கு முழுமையான துணைநூல் பட்டியல் தருதல்,
இராஜகோபாலார்யனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை அவர்தம் கால்வழியினரைக்
கண்டு முழுமையாகத் தருதல், இராஜகோபாலார்யன் ஒரு பதிப்பாசிரியராக
உருவாகப் பெரிதும் துணைநின்ற இரா.இராகவையங்காரின் உருவப்படத்தைத் தருதல்
ஆகியவற்றால் இப்பதிப்பு மேலும் செழுமையும் செவ்வையும் பெறும். இனி வரும்
பதிப்புக்களில் முனைவர் பரமசிவன் அவர்கள் இவற்றைச் செய்தளிப்பார் என
நம்புகின்றேன். முனைவர் பரமசிவன் அவர்கள் இதுபோன்ற மேலும் பல
பதிப்புக்களைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்குவார் என வாழ்த்துவதில்
பேருவகை கொள்கின்றேன்.
தாளாத தமிழன்புடன்,
(முனைவர் ஆ.மணி)
துணைநூல்கள்:
-
அய்யப்பன்.கா. (பதி.ஆ.). 2009. செம்மொழித் தமிழ்நூல்கள் பதிப்புரைத்
தொகுப்பு. சென்னை: காவ்யா.
-
அரங்கன்.தி.சௌ. (உரைஆ.). 2000. குறுந்தொகை மூலமும் உரையும்.
சென்னை: முல்லை நிலையம்.
-
அரங்கனார்.தி.சௌ. (உரைஆ.
&பதி.ஆ.).
1915 (முதல்
பதிப்பு). குறுந்தொகை மூலமும் புத்துரையும். வேலூர்: வித்யரத்னாகர
அச்சுக்கூடம்.
-
அரவேந்தன்.இரா. 2010. குறுந்தொகைப்பதிப்பு வரலாறு (1915 – 2010).
சென்னை: காவ்யா.
-
சம்பந்தன்.மா.சு. 1997 (திருத்திய பதிப்பு). சென்னை: மணிவாசகர்
பதிப்பகம்.
-
சுந்தரமூர்த்தி.இ. 2006. திருக்குறள் சில
அரிய
பதிப்புகள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
-
தாமரைச்செல்வி.தி. 2012. திருக்குறள் பதிப்பு வரலாறு. புதுச்சேரி:
செயராம் பதிப்பகம்.
-
பரமசிவன்.மா. 2010. அகநானூறு பதிப்பு வரலாறு (1918 – 2010).
சென்னை: காவ்யா.
-
மணி.ஆ. 2011. குறுந்தொகை உரைநெறிகள்.
புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.
-
மணி.ஆ. 2014. மலைபடுகடாம் பதிப்பு
வரலாறு (1889 – 2013). சென்னை: காவ்யா.
-
மணி.ஆ. 2015. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்?.
புதுவைப் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மையத்திற்கு வழங்கப்பட்ட
ஆய்வுக்கட்டுரைப்படி - 08.08.2015.
-
ராஜகோபாலார்யன்.(பதி.ஆ.). 1920. அகநானூறு மூலமும் உரையும் –
முதற்பகுதியும் இரண்டாம் பகுதியும். சென்னை: கம்பர் விலாஸ் புக்
டிபாட்.
-
ராஜகோபாலார்யன்.(பதி.ஆ.). 1926. அகநானூறு களிற்றியானைநிரை மூலமும்
முதல் தொண்ணூறு பாட்டிற்குப் பழையவுரையும் இருதி முப்பது பாட்டிற்கு
ஸ்ரீவத்ஸ சக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும். சென்னை:
கம்பர் புஸ்தகாலயம்.
-
ராஜகோபாலார்யன்.(பதி.ஆ.). 1933 (?). அகநானூறு மூலமும் பழையவுரையும்.
சென்னை: கம்பர் புஸ்தகாலயம்.
-
ராஜகோபாலார்யன்.(பதி.ஆ.). 1933. அகநானூறு மூன்றாவது நித்திலகோவை
மூலம். சென்னை: கம்பர் புஸ்தகாலயம்.
-
ராஜகோபாலையங்கார்.வே. (பதி.ஆ.). 1923. அகநானூறு மூலமும் உரையும்.
சென்னை: கம்பர் புஸ்தகாலயம்.
3. குறிப்பு:
முனைவர்
ஆ.மணி,
துணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
புதுச்சேரி -8,
பேசி: 9443927141.
|