டமிலன் என்றொரு அடிமை

முனைவர்.இரா.குணசீலன்

மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இதனை உணராதாலேயே இன்று வரை தமிழன் அடிமையாக வாழ்ந்து வருகிறான் அவன் அடிமை என்பதற்கான அடையாளம் அவன் பேசும் மொழியிலேயே உள்ளது.ஆங்கிலத்தைத் தனியாகவோ, தமிழுடன் கலந்தோ அவன் பேசும் போது அவன் அடிமை என்று தன்னை அறிவித்துக் கொள்கிறான்.இதில் என்ன கொடுமை என்றால் இந்த அடிமை தமிழ்பேசும் அன்பர்களை இழிவாக நோக்குகிறது....

கவிஞர் தணிகைச் செல்வன் தமிழனின் நிலை பற்றிக் கூறும்போது,

மொழியை விடவும்
மேலானது
மொழி உணர்வு

எனவே
தமிழை விடவும்
தலையாயது
தமிழுணர்வு

மொழி உணர்வு
இறந்த தேசத்தில்
மொழியும் இறந்துபடும்

தமிழுணர்வு
இழக்கும் நாட்டில்
மிஞ்சுவது
தமிழின் சவமே

மொழி உணர்வைக்
கழித்துவிட்டு
மிச்ச உணர்வுகளை
ஊட்டுவது
பிணத்துக்கு ஏற்றும்
ஊசி மருந்துகளே

மொழி உரிமை
மறுக்கப்பட்ட மக்கள்
இன அடிமைகளாவது
இயல்பு

தமிழுரிமை பறிகொடுத்த
மக்களைத்
தளைப்படுத்துவது
எளிது

மொழி உணர்வின்
மறுபக்கம்
இன உணர்வு

இன உணர்வின்
இடப்பாகம்
மொழி உணர்வு

இன உணர்வற்ற
மொழி உணர்வு
காய்க்காத பூ
மொழி உணர்வற்ற
இன உணர்வு
காம்பிழந்த பூ

இரு உணர்வமற்ற
தமிழன் காகிதப்பூ

............
என்பர்.

காலந்தோறும் தமிழனுக்குத் தம் மொழியைவிட பிறமொழிகள் மீதே பற்று மிகுதியாக இருந்துள்ளது.அதன் காரணமாகவே அவன் அடிமையாக வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து வருகிறான்.

கிபி3 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய மணிப்பிரவாளம் தமிழனைப் பெரும்பாடுபடுத்தியது. தமிழுடன் வடமொழியைக் கலந்து பேசுவதை அக்காலத் தமிழன் பெருமையாகக் கருதினான்.
சான்றாக,


''கந்யகா யோக்யனாகிய பர்த்தா ஸஹஸ்ர கூடஜின

பவனத்தையடைதலும் சம்பகவிகாசமும் கோகில கோலாஹலமும்

தடாகபூர்ணமும் தக்கத குமுத விகாசமும் மதுகர சஞ்சாரமும்

கோபுரக வாகட விகடனமுமாகிய அதிசயங்களுள வாகுமென்று ஆதேசித்தனர்''

(சீனிவாசர்-வரலாற்றறிஞர் (Tamil studies . p-229)

அன்றைய தமிழனுக்கும் இன்றைய டமிலனுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.இன்றைய டமிலன் Tamil என்று தான் தன் மொழியைக் குறிப்பிடுகிறான்.  Thamizh  என்று அழைக்க மறுக்கிறான்.

செந்தமிழில் முனைவர் பட்டம் முடித்தவர் கூட தம் பெயருக்கு முன்னால் டாக்டர் என்றே இட்டுக்கொள்ள விரும்புகிறார்.

படிப்பறிவில்லாத கிராமத்துப் பாட்டிகூட இன்று 'ட்ரெயின் ஏறி ஸ்டேசன் போய் இறங்கி அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்ட்டு அங்கிருந்து போன் பன்றேன்னு சொல்லுது.

இவ்வளவு ஏன் நம் ஊரிலுள்ள குப்பைத் தொட்டிகள் கூட 'யூஸ் மீ' என்று தானே ஆங்கிலம் பேசுகின்றன.

தமிழ் மொழியை வேறு யாரும் வந்து அழிக்கவேண்டாடம் நம் தமிழனே போதும்.
போர்த்துகீஸியம், பிரெஞ்சு, இந்தி, மலாய், இசுபானியம்; பிரேசிலியன், பெர்ஸியம், சமஸ்கிருதம் மராட்டி, இலத்தின், உருது, ஆங்கிலம் என்னும் எல்லா மொழிகளும் இவன் வாயில் வருகிறது. இவன் தாய் மொழி மட்டும் வர மறுக்கிறது. இவன் வாயில் அமிலத்தை ஊற்றினால் என்ன?

'பிறமொழியைக் கற்று வை.
உன் தாய் மொழி மீது பற்று வை'

என்பது ஏன் இவனுக்குப் புரியாமல்ப் போகிறது.


இங்கு ஸ்போக்கன் இங்லீஸ் சொல்லித் தரப்படும் என்னும் விளம்பரப் பலகைகளைக் காணும்போது, எதிர்காலத்தில் இங்கு தமிழ் சொல்லித்தரப்படும் என்னும் பலகை வைக்கும் நிலை வருமோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.


இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ் என்னும் மொழியைத் தொலைத்து டமிலனாக, தமிங்கிலனாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அடிமை எதிர்காலத்தலைமுறையை உருவாக்கினால் எப்படி இருக்கும். எதிர்காலத்தலைமுறையும் 'டமில்'த்தலைமுறையாகவே உருவாகும்...............
என்று மாறும் இந்நிலை
?




gunathamizh@gmail.com