கற்றல் கற்பித்தலில் மாற்றங்களும் வழிமுறைகளும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


மிழ் மொழி கற்பதற்கு எளிமையானது. இம்மொழியினை ஆர்வம் உண்டாக்கும் முறையில் கற்பித்தல் ஆசிரியரின் கடமையாகிறது. தமிழ்மொழி கற்பித்தலில் விளையாட்டுமுறை, நடிப்புமுறை, மேற்பார்வைப்படிப்புமுறை, செயல்திட்டமுறை, ஒப்பந்தமுறை, கண்டறி முறை, உரையாடல் சொற்பொழிவுமுறை, திட்டமிட்டதைக் கற்றல்முறை, மொழிப் பயிற்றாய்வுக்கூடமுறை, கட்டுரை படித்தல், பலர் கருத்துகளைத் திரட்டல, செயல்முறைக்கருத்தரங்கு, சொற்போர் போன்றவை பின்பற்றப்படுகின்றன.

இம்முறையில் கற்றல் என்பது தனிநபரின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இணையாக நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே கற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. எனவே ஒரு ஆசிரியரின் பங்கு அவற்றை நெறிபடுத்துவதே ஆகும்.

அவைகளில் சில :

  • கல்வி கற்க ஏற்ற சூழலை உருவாக்குதல்,

  • கற்றலின் நோக்கத்தைப் புரியவைத்தல்,

  • கல்வி உபகரணங்கள் மற்றும் பிற எழுதுபொருட்களை கிடைக்கும்படி செய்தல்

  • அறிவுசார் மற்றும் உணர்வு சார் கல்விக்கூறுகளை சமமாக வழங்குதல்

  • மாணவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் அவர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.

கீழ்க்கண்ட நிலைகளில் கல்வி கற்றலிற்கு ஏற்ற சூழல் அமையும்

  • மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்கிறார்கள் மற்றும் அதன் போக்கிலும்
    அமைப்பிலும் அவர்களின் பங்களிப்பு உண்டு.

  • செயல்முறை, சமூக, தனிமனித மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பிரச்சனைகளுக்கு
    இடையே நேரடி முரண்பாட்டின் அடிப்படையில் இம்முறை அமைந்துள்ளது.

  • சுய-மதிப்பீடு தான் இங்கு பிரதான மதிப்பிட்டு முறை. கற்றலின்
    முக்கியத்துவத்தையும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டியதன்டி அவசியத்தையும் ரோஜெர் குறிப்பிடுகிறார்.

அமலாக்கம்

செய்முறைக் கற்றல் முறை மாணவனின் தேவைகளையும் ஆர்வத்தையும் இனங்கண்டு அவனை அதிக ஈடுபாட்டுடன் கற்கச் செய்கிறது. இங்கு தன்னார்வம் மற்றும் சுயமதிப்பீட்டுத் திறன் அவசியம். இம்முறை சிறப்பாக செயல்பட செயல்திட்டம், குறிக்கோள் நிர்ணயித்தல் முதல் சோதனைகள் மூலம் இலக்கினை அடைந்துவிட்டோமா என்பதை அறியும் வரை அனைத்து பாகங்களும் செம்மையாக செய்யப்பட வேண்டும். இவ்வகை செயல்முறைகள் புதியவற்றை அறியவும், புதிய கோணங்களில் சிந்திக்கவும் உதவும்.

நாம் குழந்தையாக இருக்கும்போது விளையாடிய விளையாட்டுகள் நினைவிருக்கிறதா? இந்த எளிய விளையாட்டுகள் குழு நிர்வாகம், தலைமைப்பண்பு உள்ளிட்ட கல்வி மற்றும் சமூகத் திறன்களை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றன. செய்முறை வழிக் கற்றல் முறையைப் போலவே இவை பிரபலமடையக் காரணம் இவற்றில் உள்ள வேடிக்கை சமாச்சாரங்கள்தான். வேடிக்கையான முறையில் கல்வி கற்றால் அவை அதிக நாட்களுக்கு நம் நினைவில் நிற்கும். பெரும்பாலான கல்வியாளர்கள் செய்முறைக் கற்றலின் மகத்துவத்தை உணர்ந்துள்ளனர். நகைச்சுவை கலந்த வேடிக்கையான கல்விச் சூழல் கற்றலை அதிகம் மேம்படுத்துகிறது.

ஒவ்வொரு தனி நபரும் நேரடியாக ஈடுபடுவதால் செம்மையான புரிதலுக்கும் அதிக நாள் தக்கவைத்தலுக்கும் உதவும்.

கொள்கைகள்

  • மாணவருக்கு பாடத்தில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தால் மட்டுமே கல்வி பயிலுதல் நிகழும்.

  • வெளிப்புற தாக்கம் குறைவாக இருக்கும்போது தனி மனிதன் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும்.

  • தனி மனிதன் மீது அதிக தாக்கம் இருக்கும் போது கல்வி கற்றல் விரைவாக நிகழும்.

  • தானாக கற்கும் கல்வி அறிவு நீண்ட நாள் நிலைத்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

பகுத்துணர்ந்து கற்றல்

கவனித்தல், குறிப்பெடுத்தல் மற்றும் பிறர் போலச் செய்வது மூலமாக மனிதர்கள் சிறப்பாக கல்வி பெற இயலும். பகுத்துணர்ந்து கற்றல் என்பது கேட்டல், கவனித்தல், தொடுதல் அல்லது சோதனை வழி அறிதல் மூலம் நிகழ்கிறது. இம்முறையில் பிறர் செய்வது போல தானும் செய்வது மட்டுமல்லாமல் பல வழிகளில் அறிவு பெற வாய்ப்புள்ளது. இதைப்பற்றி இணையதளங்களில் படிப்பதால் மட்டும் இதன் முக்கியத்துவத்தை உணரமுடியாது. பகுத்துணர்ந்து கற்றல் என்பது மூளை அல்லது புலன் உறுப்புகள் வாயிலாக கல்வி அறிவு பெறுவதைக் குறிக்கிறது. ஒருபொருளைப் பற்றிய மனக் கண்ணோட்டமும் தகவல் பரிமாற்றமும் பகுத்துணர்ந்து கற்றல் முறையின் அங்கங்களாகும்.

கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இக்காரணிகள் கற்பவர் தன் இலக்கு நோக்கி செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும், பழக்கவழக்கங்கள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது.

கடந்த நூற்றாண்டுகளில் கல்வி பற்றி பல்வேறு வித பார்வைகள் இருந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது (கற்றல் மூளையின் செயல்திறனால் நிகழ்கிறது) அல்லது கல்வி வளர்ச்சி சார்ந்தது (கற்கும் அனுபவத்தால் அறிவு ஏற்படுகிறது) என்ற இருவேறுவித பார்வைகள் இருந்தது. இவ்விரு கொள்கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து பார்த்தோமானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உணரலாம். இவற்றை ஒருங்கிணைக்கும் போது பல்வேறு பிற காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சில - அறிவுத்திறன், கற்கும் முறை, பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை உள்ளவர்கள் மற்றும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவார்களின் கல்வி கற்கும் முறை

கொள்கை கட்டுக்கோப்புத்திறன் கொள்கையில் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்ற கல்வி, கருத்துகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி முறை அமைகிறது. தாங்கள் ஏற்கனவே அறிந்தவைகளோடு புதிய தகவல்களையும் சேர்த்து புதிய புரிதல்களை உருவாக்குகிறார்கள்.

இந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சிகளைக் கொடுக்கிறார். அதனை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை கவனித்து தக்க ஆலோசனை வழங்கி புதிய முறைகளில் சிந்திக்கத் தூண்டுகிறார். எளிய தகவல்களைச் சொல்லி அதில் மாணவர்களின் எண்ணங்கள் தூண்டப்படும் இம்முறையில் கல்வி அறிவு சிறிது சிறிதாக அதிகரிக்கப்படுகிறது. வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர்க்கும் இம்முறை ஏற்றதாகும்.

கண்ணோட்டம்

ப்ரூனரின் கோட்பாடுகளின்படி கற்றல் என்பது ஒரு சுறுசுறுப்பான நிகழ்வு. மாணவர்கள் தான் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளில் இருந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர் என்பது தான் இக்கொள்கையின் சாராம்சம். கொடுக்கப்பட்ட தகவலை அலசி, ஆராய்ந்து, கோட்பாடுகளை உருவாக்கி அறிவுசார் முடிவுகளை மாணவர்கள் எடுக்கின்றனர். தகவலின் அர்த்தம் புரிந்து அதை வகைப்படுத்துகின்றனர். இது கொடுக்கப்பட்ட தகவலுக்கு அடுத்த நிலையை சிந்திக்க வாய்ப்பளிக்கிறது.

பயிற்று முறையைப் பொறுத்தவரையில் மாணவர்கள் அவர்களாகவே கொள்கைகளைக் கண்டுபிடிக்கும்படி பயிற்சியாளர் ஊக்கப்படுத்த வேண்டும். இருவரும் ஆக்கப்பூர்வ உரையாடல்களில் அதிகம் ஈடுபடவேண்டும்

இங்கு ஆசிரியரின் பணி என்பது பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி மாற்றம் செய்வதுதான். பாடத்திட்டம் ஒரு சுருள் போல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளிலிருந்து புதியவற்றை அறிவார்கள்.

பயிற்று முறை கீழ்கண்ட நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

  • கற்றல் முறை பற்றிய பார்வை.

  • பாடத்திட்டம் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.,

  • எந்த வரிசையில் கொடுத்தால் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் என்பதை அறிதல்

  • பாராட்டுதல்கள் ரூ தண்டனைகளின் தன்மை மற்றும் அவற்றிற்கிடையேயான கால இடைவெளி.

எளிமை, புதிய கோணத்தில் வழங்குதல் அதிக தகவல்களை உள்ளடக்குதல் முதலியவை மூலம் கல்வியறிவை வழங்குதலில் புதிய வழிமுறைகள் காணப்பட வேண்டும்.

கற்றல் முறைகளில் சமூக மற்றும் கலாச்சாரத்தின் தாக்கத்தைப் பற்றி தன் சமீபத்திய நூல்களில் (1986,1990,1996) ப்ரூனர் குறிப்பிடுகிறார்.

பயன்பாடு

ப்ரூனரின் இந்த பயிற்று முறைக்கான கோட்பாடு தனிமனித அறிவுத்திறனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியுடன் இக்கொள்கை தொடர்புடையது. ப்ரூனரின் இக்கருத்துகள் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் முறை தொடர்பான கருத்தரங்கு மூலம் பெறப்பட்டது. சிறு குழந்தைகளுக்கான கணித, சமூக அறிவியல் பாடங்கள் வாயிலாக ப்ரூனர் தன் கொள்கைகளை விளக்குகிறார். ப்ரூனர், குட்நவ், ஆஸ்டின்
(1951) ஆகியோர் எழுதிய புத்தகத்தில் பகுத்தறியும் திறன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மொழியைக் கற்றுக்கொள்ளுதல் பற்றியும் ப்ரூனர் குறிப்பிடுகிறார்.

கொள்கைகள்

1. மாணவன் ஆர்வத்துடனும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் பாடக்குறிப்புகள்
அமைக்கப்பட வேண்டும்.

2. குறிப்புகள் எளிதில் புரியும்படி இருக்கவேண்டும்.

3. மேலும் பல தகவல்களை அறிய செய்யும் வண்ணம் விடுபட்ட செய்திகளை
அறியும்படி அமைக்கவேண்டும்.

ஈடுபடுதல்

'ஈடுபடும்' செயல் முன்பு கற்றவைக்கும் இன்று கற்கப்போவதற்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்; புதிய செயல்களை உருவாக்க வேண்டும்; மாணவர்களின் சிந்தனைகள் செயல்முடிவுகளை குறித்து இருக்குமாறு செய்ய வேண்டும். மனதளவில் அவர்கள் பாடத்திலும், செயல்முறையிலும் அல்லது பயிற்றுவிக்கப்படும் திறனில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பர். ஒவ்வொரு பாடமும் சிந்தனையைத் தூண்டும் ஒரு முக்கியமான கேள்வியைக் கொண்டிருக்கும். ஆராய்ந்து அறிதல் பகுதியில் உள்ளவற்றை அறியும் வண்ணம் சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

ஆராய்ந்து அறிதல்

இந்த கட்டத்தில் மாணவர்கள் பாடத்தை ஆழமாகப் படிக்கின்றனர். இங்கு அதிக வழிகாட்டுதல்களின்றி பாட புத்தகங்களை அவர்களாகவே படித்தறியும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் தேவைப்படும். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டு அவர்களின் உரையாடல்களை கவனித்து அவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

விளக்கமளித்தல்

இக்கட்டத்தில் மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை விளக்கிக் கூற உதவுகிறது. தாம் புரிந்துகொண்டதை வார்த்தைகளில் விளக்கிக் கூறவோ அல்லது தங்களின் திறமைகளை வெளிக்காட்டவோ வாய்ப்பு அமைகிறது. இக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் புதிய கலைச்சொற்கள், வரையறைகளைக் குறிப்பிடவும் திறன்களையும் பண்புகளையும் விளக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.

விவரித்தல்

இங்குதான் மாணவர்கள் ஒரு பயிற்சியில் நேரடியாக ஈடுபடுகிறார்கள். தாம் புதிதாக கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்தவும் அதில் தான் பெற்ற அனுபவங்களையும் சோதனை முடிவுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. மாணவர்கள் தங்களின் பரிசோதனை முடிவுகளை மதிப்பீட்டுக்கு வைக்கவும், முடிவுகளை சமர்ப்பிக்கவும் செய்கிறார்கள்.

மதிப்பிடுதல்

மாணவர்களுக்கு கல்வி சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் மதிப்பிடுகிறார். இக்கட்டத்தில் மாணவர்கள் சுய மதிப்பீடுஇ குழு மதிப்பீடு செய்யவும் மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகளையும் சாதனங்களையும் உருவாக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

விரிவாக்குதல்

இப்பகுதியில் பாடதிட்டத்திற்கு வெளியே உள்ளவற்றை அறிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாம் கற்றுக்கொண்டவற்றை பல புதிய விசயங்களுக்கும் புதிய சூழலுக்கும் பயன்படுத்த உதவுகிறது. எனினும் இச்செயல் மாணவர்களின் உற்சாகத்தால் விளைவதாகும். இது முழுக்க முழுக்க மாணவர்கள் தாங்களாகவே செய்யும் செயல். எனினும் ஆசிரியர்கள் சில ஆலோசனைகள் வழங்கலாம்.

காட்சி வழி கற்போர்

இவ்வகை கற்போர் ஆசிரியரின் உடலசைவு மொழிகள் மற்றும் முகபாவனைகளைக் காணும்போதுதான் பாடத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். கவனிக்கும்போது எதுவும் கண்ணை மறைக்காமல் இருக்க இவர்கள் வகுப்பறையில் முன் வரிசையில் அமர விரும்புவர். இவ்வகை கற்போர்கள் காட்சி வழியாகவே சிந்திக்கிறார்கள். படங்கள், சார்ட்டுகள், படங்களுடன் கூடிய பாடப்புத்தகங்கள், வீடியோ மற்றும் கையடக்க குறிப்புகள் மூலம் நன்றாக புரிந்துகொள்வர். வகுப்பில் பாடம் நடத்தும்போதோ ஆசிரியர் கலந்துரையாடும்போதோ இவ்வகை கற்போர் முழுதும் குறிப்பு எடுக்க விரும்புவர்.

கேட்டல் வழி கற்போர்

இவ்வகைக் கற்போர் லெக்ச்சர்கள், கலந்துரையாடல்கள், பாடத்தில் உள்ளவற்றைப் பற்றி பிறரிடம் விவாதித்தல் மற்றும் அவர்களின் கருத்துகளைக் கேட்டல் மூலம் சிறப்பாகப் பயில்வர். சொற்களில் பொதிந்திருக்கும் பொருளை ஆசிரியர் குரலின் பேச்சு சுருதி, வேகம் முதலியவற்றைக் கொண்டு அறிய முற்படுவர். இவர்களைப் பொறுத்தவரையில் எழுத்து வடிவில் உள்ளதைக் காட்டிலும் பேச்சு வடிவில் உள்ளது அதிக பயன்தரும். பாடத்தை சத்தமாகப் படிப்பதும் டேப் ரெக்கார்டர் மூலம் பாடத்தினை கேட்பதும் அதிக பயன்தரும்.

அசைவுகள், தொடுதல் வழி கற்றல்

இவ்வகை கற்போர் சுற்றுப்புற உலகில் உள்ளதை தாங்கள் நேரில் அறிந்து, ஆராய்ந்து கற்க விரும்புவர். ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். ஆராய்ச்சி செய்யும் எண்ணம் அவர்களின் கவனத்தை அடிக்கடி சிதைக்கும்.

பொகுப்புரை:

  • குழந்தைகள் அவரவர் வழியிலே பயில்கிறார்கள் தானே கற்றலில் அவர்களுக்குக் கால அவகாசம் அதிகமாகச் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வழி கற்றல் குறைக்கப்பட்டுள்ளது. இது குழுவின் மூலம் கற்றல், ஒருவருக்கொருவர் புரிந்து கற்றல் மற்றும் தானே கற்றலை மேம்படுத்துகிறது. ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரத்தை மாணவர்களுக்குள்ளேயே நேரத்தியாக பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவைபட்டால் மட்டும் குழுந்தைகளின் சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.

  • இம்முறை கற்றலின் வழியில் குழந்தைகள் பங்கேற்பை ஒவ்வொரு படிக்கட்டின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இம்முறையில் குழந்தைகளே அறிய முடியாத அளவில் மதிப்பீடு அமைக்கப்பட்டிருக்கிறது.

  • மனப்பாடம் அல்லது உருப்போட்டு படித்தலுக்கான வழியே இதில் இல்லை இம்முறையில் பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகள் ஒழுங்காகக் கண்காணிக்கப்படுவார்கள்.

  • வகுப்பறை நடைமுறைகள் குழந்தைகளின் தேவைகள் மற்றும் ஆர்வத்தையொட்டி இருக்கும்.

  • குழந்தை பயிலுவதிலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்பாட்டிலும் சுதந்திரம் இருக்கும். இம்முறை கற்றலில் பலகிரேட் மற்றும் பலமட்டங்கள் சிறந்து பயன்படுத்தப்படுகிறது.

  • எந்த ஒரு குழந்தையும் நேரடியாக, மேலே செல்ல முடியாது மைல்கல்லில் உள்ள ஒவ்வொரு படிகட்டையும் ஏறித்தான் செல்ல முடியும். தான் மைல்கல்லை அடைந்து விட்டோம் என்ற உணர்வு குழந்தைக்கு நம்பிக்கையையும், முயற்சியையும் ஏற்படுத்துகிறது.

  • கண்கவர் அட்டைகளும், செயல்பாடுகளும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

  • குழந்தையின் ஆக்கப்பூர்வமான செயல் மற்றும் தகவல் பறிமாற்றத் திறன்கள் வளர்ச்சி அடைய வழிவகுக்கிறது. குழந்தைகள் குழுவில் இருக்கும் பொழுது ஒருவித பாதுகாப்பை உணர்வார்கள்.

  • குழந்தைகள் ஒரே இடத்தில் இல்லாமல் வகுப்பறைக்குள்ளேயே நகர்ந்து செயல்பாட்டை முடிக்கலாம்.
     

 


முனைவர் பூ.மு.அன்புசிவ
உதவிப்
பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
- 641 028
பேச
: 9843874545, 09842495241.