ஈரோடு தமிழன்பனின் 'ஐந்திணை
ஹைகூ': தமிழ் ஹைகூ வரலாற்றில் தனித்தடம்
முனைவர் இரா.மோகன்
“80
அகவைக்குப் பின்னரும் ஒரு ஞானியைப் போல் தெளிந்தும், ஓர்
ஓவியரைப் போல
அழகுபடுத்தியும், ஒரு போராளியைப் போலத் துணிவாகவும் எழுதி இயங்குகிறவர்
கவிஞர் தமிழன்பன்” (‘இன்னும் பாடுக பாட்டே!’, ஈரோடு தமிழன்பன் ஆயிரம்,
ப.13) என்பது வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞரான ஈரோடு தமிழன்பனைப்
பற்றிய மக்கள் கவிஞர் இன்குலாப்பின் மதிப்பீடு ஆகும். அவரது
மதிப்பீட்டினை மெய்ப்பிக்கும் வகையில் ஈரோடு தமிழன்பனின் எழுதுகோல்
அண்மையில் ஈன்று புறந்தந்திருக்கும் படைப்பு ‘ஐந்திணை ஹைகூ’ (2016).
இருபதாம் நூற்றாண்டு கண்ட முன்னணிக் கவிஞர் வரிசையில் 1985-ஆம் ஆண்டில்
‘சூரியப் பிறைகள்’ என்னும் தலைப்பில் தனியொரு ஹைகூ தொகுப்பினை
வெளியிட்ட பெருமைக்கு உரியவர் தமிழன்பனே ஆவார். மேலும், வாய்ப்பு நேரும்
போதெல்லாம் அவர் தமது முன்னுரைகளிலும் நேர்காணல்களிலும் தமிழ் ஹைகூக்
கவிஞர்கள் நம் தமிழ் மொழியின் பழம்பெரும் இலக்கண நூலாகிய
தொல்காப்பியத்தைக் கட்டாயம் பயில வேண்டும் என்றும், தொல்காப்பியப்
பொருளதிகாரத்தினை நன்கு கற்று நம் காலத்திற்கு ஏற்றபடி திணைக்
கோட்பாட்டை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நம் மண்ணுக்கு
ஏற்றபடி ஹைகூவை வளர்த்தெடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
நம் மரபு வழி உதவியோடு ஹைகூவைப் படைக்க நம் கவிஞர்கள் முன்வர வேண்டும்
என்றும் தொடர்ந்து வலியுறுத்தியும் வழிகாட்டியும் வந்துள்ளார். இங்ஙனம்
வலியுறுத்தியும் வழிகாட்டியும் வந்ததோடு நில்லாமல், இவ் வகையான
முயற்சிக்கு ஒரு முன்னோட்டமாக – முன்மாதிரியாக – அவரே ‘ஐந்திணை ஹைகூ’
என்னும் தலைப்பில் ஒரு நூலினைப் படைத்துத் தந்திருப்பது போற்றத்தக்கது.
“சங்க இலக்கியச் சாரத்தில்
தோய்ந்து – சிலிர்த்து – அதன் பிறகு தான் ஐந்திணை ஹைகூ முயற்சியை
மேற்கொண்டேன். ஏறத்தாழ ஐவகை நிலப்பகுதிகளிலும் வாழ்ந்தவன் என்கிற
முறையில் திணைகள் என்னுள் வந்து தம்மைத் திறந்து ஹைகூவாகிவிட்டன என்று
தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது” (ப.22) எனப் ‘பொன்மணிகள்
மின்மினிகள்’ என்னும் தலைப்பில் இந் நூலுக்கு எழுதிய நீண்ட முன்னுரையில்
கவிஞர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருப்பது ஈண்டு மனங்கொளத்
தக்கதாகும்.
ஒவ்வொரு திணை பற்றியும் நூறு
நூறு ஹைகூ கவிதைகள் எழுத விரும்பிய கவிஞர், ஒரு தொடக்க முயற்சியாக
திணைக்கு முப்பது என்கிற கணக்கில் – முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம்,
நெய்தல் என்ற வரிசை முறையில் – 150 ஹைகூ கவிதைகள் அடங்கிய இத்
தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இனி, ஒரு பறவைப் பார்வையில் சங்க அகத்திணை
மரபின் வழி நின்று ‘ஐந்திணை ஹைகூ’ நூலின் அமைப்பும் அழகும் குறித்துக்
காணலாம்.
1.
முல்லை
ஒல்காப் பெரும்புகழ்த்
தொல்காப்பியர் தம் அகத்திணை இயல் நூற்பாவில் (951) முல்லையை முதலில்
வைத்துத் திணை வரிசையைத் தொடங்குவார். முல்லை, குறிஞ்சி, மருதம்,
நெய்தல் என்பது அவர் வகுக்கும் வரிசை முறை. முல்லைத் திணை என்பது காடும்
காடு சார்ந்த பகுதியும் ஆகும். இதன் பெரும்பொழுது கார் காலம் (ஆவணியும்
புரட்டாசியும்); சிறுபொழுது மாலை (இராப் பொழுதின் முற்பகுதி).
உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும். இவை மட்டுமன்றி, முல்லைத்
திணைக்கு உரிய கருப்- பொருள்களும் – வரகு, சாமை, மான், முயல், கொன்றை,
ஆநிரை, முல்லை யாழ் ஆகியனவும் – கவிஞரின் ஹைகூ கவிதைகளில் பயின்று
வருவதைக் காண முடிகின்றது. இவ் வகையில் கருத்தில் கொள்ளத் தக்க சில ஹைகூ
கவிதைகளை இங்கே சுட்டிக்காட்டலாம்.
வாசலில் கோலம் போட்ட வண்ணம்
நின்று கொண்டிருக்கிறாள் முல்லை நிலப் பெண் ஒருத்தி. வீட்டு வாசலில் ஒரு
புள்ளி மான் வந்து அவளிடம் கெஞ்சி நிற்கிறது. எதைத் தெரியுமா? கொஞ்சம்
புள்ளிகள் கேட்டாம். வீட்டு வாசலில் நின்று புள்ளி மான் ஒன்று
கள்ளியிடம் கொஞ்சம் புள்ளிகள் கேட்டு நிற்பதைப் படம்பிடித்துக் காட்டும்
கவிஞரின் அழகிய சொல்லோவியம் இது:
“கோலம் போடும் அவளிடம்
வாசலில் மான் கெஞ்சும்
கொஞ்சம் புள்ளிகள் கேட்டு” (18)
முல்லை நிலத்தில் மாலைப்
பொழுதில் மான்கள் எல்லாம் இணை இணையாகக் காட்சி அளிக்கின்றன. ஒரே ஒரு
மான் மட்டும் – பெண் மானான தலைவி மட்டும் – ஆற்றாமை உணர்வு மீதூரத் தனது
தலைவனின் வருகைக்காக சோகத்தோடு காத்திருக்கிறாள்.
“ஒரு
மான் தவிர
மான்கள் எல்லாம் இணை இணையாக
என்ன மாலை நேரம் இது?” (12)
‘கார் (காலம்) வரும் முன்
என் தேர் வரும்’ என்று சொல்லி விட்டுச் சென்றான் தலைவன். சொன்ன படியே,
கார் காலமும் தலைவனது தேரில் பூட்டிய குதிரையும் போட்டி இட, வாசலில்
வந்து நின்றதாம் தேர்!
“காரும் புரவியும்
போட்டியிட, வாசலில்
வந்து நின்றது அவன் தேர்” (17)
“வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்இயல் கலிமா உடைமை யான”
என்பது தொல்காப்பியம்
(1140).
செய்வினை முடித்த செம்மல் உள்ளத்தோடு திரும்பி வரும் தலைவன் இடை வழியில்
எங்கும் தங்காது, விரைந்து வந்து தலைவியைச் சேருவான். ‘இடைவழியில்
தலைவன் தங்குவான் ஆயின் மனையோள்மாட்டு விருப்பம் இன்றாம்’ என இந்
நூற்பாவுக்கு எழுதிய உரை விளக்கத்தில் நயமாகக் குறிப்பிடுவார்
இளம்பூரணர்.
“கற்களோடு மோதும்
தேர்த் சக்கரங்கள்; பரவுகிறது
தனிமை உடைபடும் ஓசை”
(16)
தேர்ச்சக்கரங்கள் கற்களோடு
மோத காற்றைப் போல், மனத்தைப் போல் வேகமாகத் திரும்பி வருகிறான் தலைவன்.
பிரிவாற்றித் தலைவனது வருகைக்காகத் காத்திருக்கும் தலைவியின் தனிமை
உடைபடும் ஓசை அங்கே பரவுகிறது!
‘பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப’ (அடி
23)
என முல்லைப்பாட்டு தலைவனது
பிரிவினை ஆற்றி இருக்கும் தலைவியின் பூப்போன்ற மையுண்ட கண்கள்
முத்துமுத்தாகக் கண்ணீர் உகுத்து நிற்கும் நிலையைச் சொல்லோவியம் ஆக்கும்.
இதன் ஹைகூ வடிவமே தமிழன்பனின் பின்வரும் வரிகள்:
“மாலை தொடுப்பவள்
கண்களில் முத்துக்கள்; யார்
தொடுப்பது?”
(13)
2. குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த
பகுதியும் குறிஞ்சி. கூடலும் கூடல் நிமித்தமும் அதன் உரிப்பொருள்.
குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் கபிலர். ஆரிய அரசன்
பிரகத்தனுக்குத் தமிழின் உயர்வினை உணர்த்தும் நோக்கில் அவர் பாடியது
குறிஞ்சிப் பாட்டு. அதன் தனிப்பெருஞ் சிறப்புக்களுள் ஒன்று 99 மலர்களின்
அணிவகுப்பு (அடி 61-97) இடம் பெற்றிருப்பது. இதனை நினைவு படுத்தும்
வகையில் தமிழன்பன் படைத்துள்ள ஒரு சுவையான ஹைகூ கவிதை இதோ:
“கபிலன்
கண்களில் படாத
பூவொன்று நேற்று
வெற்பன் கைகளில்”
(55)
வெற்பன் என்பது குறிஞ்சி
நிலத் தலைவனின் பெயர். ‘குறிஞ்சிக்குக் கபிலர்’ எனச் சிறப்பிக்கப்
பெறும் கபிலரின் கண்களில் படாத – கபிலர் குறிஞ்சிப்பாட்டில்
குறிப்பிடாத – பூ ஒன்றினைத் தலைவன் தன் கைகளில் வைத்திருந்தானாம்!
இந்தப் பூவும் சேர்ந்தால்
99-ஆக இருந்த
பூக்களின் எண்ணிக்கை 100-ஆகி
நிறைவு பெற்று விடுகின்றது!
குறிஞ்சி மலர் பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்பது அறிவியல் உண்மை; பயிரியல் தகவல்.
இதனை நெஞ்சை அள்ளும் ஓர் இலக்கியம் ஆக்குவது எப்படி? தமிழன்பனின்
சொற்களில் இவ்வினாவுக்கான விடை இதோ:
“பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை
பூக்குமாம் குறிஞ்சி; அப்படியா
காத்திருக்கும் காதல்?”
(59)
காதலர் நோக்கில் கவிஞர்
கேட்டிருக்கும் வினா நியாயமான ஒன்றுதானே? அவ்வளவு நீண்ட காலம்
காத்திருக்குமா உண்மைக் காதல்?
“கானம் கார்எனக் கூறினும்
யானோ தேறேன்அவர் பொய்வழங் கலரே”
(21)
என அறுதியிட்டு உரைப்பாள்
ஓதலாந்தையார் படைக்கும் ஒரு குறுந்தொகைத் தலைவி. தமிழன்பன் காட்டும்
குறிஞ்சி நிலத் தலைவி ஒருத்தியோ,
“அவன் பொய்யன் என்று
ஓலமிடும் அவன்நாட்டு அருவி
நான்ஏன் நம்பினேன்?
(51)
என அல்லற்பட்டு ஆற்றாது
அரற்றுகின்றாள்.
அருவியைப் பற்றிய தலைவனது
பார்வை வேறு வகையானது; வித்தியாசமானது. ‘அருவிக்கு ஏது இப்படி, இவ்வளவு
நறுமணம் வந்தது?’ என்று ஒரு பகல் எல்லாம் நீள நினைந்து பார்த்து, ஒரு
முடிவுக்கு வருகிறான் தலைவன்:
“அருவிக்கு ஏது இப்படி
நறுமணம்? குளித்து விட்டுப்
போயிருப்பாள் அவள்!”
(40)
இப்போது உண்மை நன்றாக
விளங்கி விட்டது! ஆம், தலைவி வந்து அருவியில் குளித்து விட்டுப்
போயிருப்பாள்! அதனால்தான் அருவிக்கு இவ்வளவு நறுமணமாம்!
காலில் முள் குத்திய வலியோடு
வந்தானாம் குறிஞ்சி நிலத் தலைவன் ஒருவன். தலைவி முள்ளெடுத்து விட்டாளாம்.
தலைவனது வலி தீர்ந்ததாம். ஆனால், இப்போது தலைவி தலைவனது காதல் பார்வை
ஆகிய முள் குத்தித் துடிக்கிறாளாம்! ‘முள்’ எனும் ஒரு சொல்லினை வைத்துக்
கவிஞர் நிகழ்த்தி இருக்கும் அருமையான வார்த்தை விளையாட்டு வருமாறு!
“முள் குத்திய வலியோடு வந்தான்
முள்ளெடுத்து விட்டாள்
முள்குத்தித் துடிக்கிறாள்”
(43)
3.
பாலை
அன்பின் ஐந்திணைகளைக் கூர்ந்து நோக்கினால் புலனாகும் உண்மை ஒன்று உண்டு:
அன்பின் ஐந்திணைகளுள் குறிஞ்சி மட்டுமே இன்பச் சுவைக்கு உரியது;
கூடலும் கூடல் நிமித்தமும் உரிப்பொருளாய் அமைந்தது. ஏனைய நான்கு
திணைகளும் அவலச் சுவையைப் பாடுபொருளாகக் கொண்டவையே. பிரிவை ஆற்றி
இருத்தல் முல்லை; பிரிவுக்காக இரங்கல் நெய்தல்; பரத்தையர் பிரிவுக்காக
ஊடுதல் மருதம்; பிரிதல் பாலை. காதலர் கூடலைப் பேசும் குறிஞ்சித் திணையை
விட, காதலர் பிரிவினைப் பாடும் பாலைத் திணைக்கு ஈர்ப்பு மிகுதி;
செல்வாக்கும் நிறைய. ‘துன்பத்தில் தோன்றும் இன்பம் இன்பத்தில் தோன்றும்
இன்பத்திலும் இனிமை மிக்கது’
(The
pleasure that is in sorrow is sweeter than the pleasure of pleasure
itself – Shelly)
என்னும்
ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் மேற்கோள் இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.
“பாலை புனைந்து வைத்த
பாடல் அவள்; வசந்தம்
படிக்க வருமா?”
(90)
என்னும் ஹைகூ, பாலை புனைந்து வைத்த, சோகமே உருவான பாடலாய்த் திகழும் ஒரு
தலைவியை நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. அவள்
‘வாழ்வில் வசந்தம் படிக்க வருமா?’ என்பது எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கம்.
‘பூ இடைப் படினும் யாண்டு கழிந்தன்ன, நீர்உறை மகன்றில் புணர்ச்சி போல’
(குறுந்தொகை, 57) என்ற படி, தலைவனது பிரிவை ஒரு கணம் கூடத் தாங்கிக்
கொள்ள முடியாத மென்மையான மனம் படைத்தவள் தலைவி. கவிஞரின் சொற்களில்
குறிப்பிடுவது என்றால், ‘கண்ணாடியால் ஆனவள் அவள்’. அவளைக் கண்ணாடியைக்
கையாளுவது போல, கவனமாகக் கையாள வேண்டும்; அங்ஙனம் கையாளாவிட்டால்
உடைந்து நொறுங்கி விடும். இது தெரியாமல் பிரிந்து சென்றிருக்கிறான்
என்றால், கல் மனம் கொண்டவனாகத் தான் தலைவன் இருக்க வேண்டும்.
“கண்ணாடியால் ஆனவள் அவள்;
கையாளத் தெரியாமல் எங்கே போனது
அந்தக் கல் மனம்?”
(88)
என்னும் கவிஞரின் ஹைகூ இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.
“ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார்
வருநாள் வைத்துஏங்கு பவர்க்கு”
(1269)
என்பது காமத்துப் பாடலில் வரும் ஒரு தலைவியின் கூற்று. தமிழன்பனோ
இன்னும் ஒரு படி கூடுதலாகச் சென்று,
“ஒரு நாளைக் கிள்ளிப் போட்டால்
ஒன்பது மாதங்கள் எரியும்;
பிரிவு நெருப்பின் மறுபெயர்”
(84)
எனப் பாடுகிறார். அவரது கருத்தில், ‘நெருப்பின் மறுபெயர் பிரிவு; ஒரு
நாளைக் கிள்ளிப் போட்டால், ஒன்பது மாதங்கள் எரியக் கூடிய பொல்லாத
பெருநெருப்பு அது!’
சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள பாலைத் திணைப் பாடல்கள் தலைவன்
தலைவியைப் பிரிந்து சென்ற வழியின் அருமையையும் கொடுமையையும் பலபட
எடுத்துரைக்கும். சங்கச் சான்றோரின் அடிச்சுவட்டில் தமிழன்பனும்,
“அவன் போன அரிய வழியில்
அவள் போக முடியவில்லை
அவள் அழகு போய்விட்டது”
(70)
என்றும்,
“மான்கொம்புக் கிளைகளாய்
அவன் சென்ற காட்டுவழிகுத்தும்
துயர விளிம்பில் அவள்”
(71)
என்றும் பாலைத் திணை சார்ந்த ஹைகூ கவிதைகளை உருக்கமாகவும்
உயிரோட்டமாகவும் படைத்துள்ளார். இங்கே, அகத்திணை இலக்கியத்தின் உயிர்க்
கொள்கையான ‘மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும், சுட்டி ஒருவர்ப் பெயர்
கொளப் பெறார்’
(1000)
என்பதைக் கவிஞர் பின்பற்றி இருப்பது நோக்கத்தக்கது. இயற்பெயர் என
எதையும் ஆளாமல், ‘அவன்’ என்றும் ‘அவள்’ என்றும் பொதுப் பெயராலேயே
தலைவன்-தலைவியரைச் சுட்டியுள்ளார் கவிஞர். தலைவன் சென்ற காட்டு வழி
‘மான் கொம்புக் கிளைகளை’ப் போன்றதாம்! அது ‘துயரத்தின் விளிம்பில்’
நின்ற தலைவியின் நெஞ்சினை முள்ளாய்க் குத்தியதாம்! தலைவன் போன அரிய
வழியில் தலைவியால் போக முடியவில்லையாம்! ஆனால் அவளது அழகு அவளிடமும்
கேட்காமல், தோழியிடமும் ஒரு வார்த்தை சொல்லாமல் தலைவனைப் பின்தொடர்ந்து
சென்று விட்டதாம்!
4.
மருதம்
வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதத் திணையின்பாற்படும். தலைவனது
பரத்தைமை இழுக்கம் காரணமாகத் தலைவிக்குத் தோன்றும் ஊடல் அதன்
உரிப்பொருள் ஆகும்.
மருத நிலத் தலைவனுக்குத் தமிழன்பன் சூட்டும் பெயர் வயலூரன் என்பதாகும்.
அவனது வாடிக்கைப் பண்பு எது தெரியுமா? ‘பேசுவது மானம் இடை பேணுவது காமம்’
என்பது போலத் தான் அவன் நடந்து கொள்வானாம்.
“புகழ்வது சந்தனத்தை
பூசிக்கொள்வது சேற்றை
வயலூரன் வாடிக்கை” (92)
என்பது சங்க இலக்கியச் சாயலில் தமிழன்பன் படைத்துள்ள ஹைகூ ஆகும். இங்கே
சந்தனம் என்பது தலைவியோடு இணைந்து நடத்தும் இல்லற வாழ்வையும், சேறு
என்பது பரத்தையோடு கூட நடத்தும் இழுக்க வாழ்வையும் குறிப்பாக உணர்த்தும்.
“இலங்கும்
அருவித்தே இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே, தான்உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை”
(41)
என்பது குறிஞ்சிக் கலியில்
வரும் ஒரு தலைவியின் கூற்று. இக் கலித்தொகைப் பாடலின் தாக்கம்
படிந்துள்ள தமிழன்பனின் ஹைகூ வருமாறு:
“நேர்மையில்லா அவன் ஊரில்
நேராக நடக்காமல்
பொய் சொல்லி நெளிகிறது நதி”
(93)
கலித்தொகைப் பாடலில்
இடம்பெற்றிருக்கும் அருவி தமிழன்பனின் ஹைகூ கவிதையில் நதியாக மாற்றம்
பெற்றுள்ளது. நேர்மை இல்லாத தலைவனது ஊரில் நதி கூட நேராக நடக்காமல்,
பொய் சொல்லி நெளிந்து செல்கிறதாம். நேர்மை தவறி, பொய் சொல்ல நேர்ந்ததால்
நதியால் கூட நேராக நடக்க இயலவில்லையாம்! பொய் சொல்லி - இல்லை, பொய்
சொல்வதால் - நெளிகிறாம் நதி!
“பன்மாய்க் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை”
(1258)
என்பது திருக்குறள்
காமத்துப் பாலில் வரும் ஒரு தலைவியின் கூற்று. அது போல, வயலூரன் தனது
பரத்தைமை இழுக்கத்தினை மறைப்பதற்கு – தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்கு –
சொல்லும் பொய்களுக்கு அளவே இல்லையாம்!
“வயல்களிலும் அவனூரில்
வளர்வன அவன் சொன்ன
பச்சைப் பொய்கள்”
(91)
என்கிறார் கவிஞர். அதுவும்
வயலூரன் சொல்லும் பொய்கள் எல்லாம் ‘பச்சைப் பொய்களாம்!’, ‘தானா எல்லாம்
மாறும் என்பது பழைய பொய்யடா!’ என்பார் ப(h)ட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்.
பரத்தையின் இல்லத்தில் இருந்து திரும்பி வந்த தலைவன் தன் வீட்டுக்
கதவைத் தட்டுகிறான். சங்க இலக்கியம் இதனை ‘வாயில் நேர்தல்’ எனக்
குறிப்பிடும். பரத்தைமை இழுக்கம் மேற்கொண்ட தலைவன் தனது வீட்டிற்குள்
நேரடியாக நுழைந்து விட முடியாது; தலைவியின் இசைவினைப் பெற்ற பிறகே அவனது
வீட்டிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்க முடியும். இதுவே ஒரு வகையில்
தலைவனது பரத்தைமை இழுக்கத்திற்குத் தரும் தண்டனை தான்! தலைவியும்
தோழியும் தலைவன் வீட்டிற்குள் நுழைவதற்கு இசைவு தராமல் மறுப்பதும் உண்டு;
இது ‘வாயில் மறுத்தல்’ எனப்படும்.
“கதவைத்
தட்டும் அவன்
முதுகுப் பக்கம் ஒளிந்திருக்கும்
கள்ளத் தனம்”
(98)
என்னும் கவிஞரின் ஹைகூ
தலைவனின் கள்ளத்தனத்தினை அம்பலப்-படுத்துகின்றது.
“இம்மை மாறி மறுமை ஆயினும்
நீஆ கியர் என் கணவனை
யான்ஆ கியர்நின் நெஞ்சு நேர்பவளே”
(49)
என அம்மூவனார் படைக்கும்
குறுந்தொகைத் தலைவி ஒருத்தி மொழிவாள். தமிழன்பன் படைக்கும் மருத நிலத்
தலைவியோ,
“நெஞ்சில் நான் இருந்து
என்ன பயன்? அவன் கையில்
யார் யார் முகவரிகளோ?”
(107)
என உள்ளம் வெதும்பிக்
கூறுகின்றாள்.
5.
நெய்தல்
அன்பின் ஐந்திணை மரபின் படி,
கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல். அதன் உரிப்பொருள் இரங்கலும்
இரங்கல் நிமித்தமும். இதனை,
“கடல் பல்கலைக்கழகம்
பாடல்கள் தேர்வுகள் பட்டங்கள்
எல்லாமே கண்ணீர்”
(150)
என்னும் ஹைகூவில் உணர்ச்சி
மிகு மொழியில் பதிவு செய்துள்ளார் தமிழன்பன்.
நெய்தல் நிலத் தலைவியின்
அவல நிலை,
“நீரை உடுத்திக் கொண்ட
வீட்டுக்குள்ளே அவள் இருக்கிறாள்
கண்ணீர் உடுத்திக் கொண்டு”
(145)
என்னும் ஹைகூவில் கவிஞரால்
அழகிய சொல்லோவியமாகத் தீட்டப்-பெற்றுள்ளது.
“தரைமேல் பிறக்க வைத்தான் – எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்”
(வாலி
1000
திரையிசைப் பாடல்கள்: தொகுதி
1,
ப.32)
என்னும் கவிஞர் வாலியின்
திரைப்பாடல் வரிகள் இங்கே ஒப்பு நோக்கத் தக்கன.
உப்பு விற்கும் உமணப் பெண்ணை உளமாரக் காதலிக்கிறான் ஓர் இளைஞன். அவளைக்
காணாத நாள் எல்லாம் அவனுக்கு எப்படித் தோன்றுகிறது தெரியுமா? இதோ,
கவிஞரின் நறுக்குத் தறித்தாற் போன்ற மறுமொழி:
“உப்பு விற்கும் உமணப் பெண்;
காணாத நாள்
சப்பென்று கழியும் அவனுக்கு”
(149)
‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. உணவில் உப்பில்லை
என்றால், சப்பென்று இருக்கும்; சுவையாகவே இருக்காது. அதுபோலத் தான்
உப்பு விற்கும் உமணப் பெண்ணை உயிருக்கு உயிராய்க் காதலிக்கும்
இளைஞனுக்கும். காதலியைக் காணாத நாள் அவனுக்கு ‘சப்பென்று’ கழிகிறதாம்!
“இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளாக அன்பன் கருதுவான். போர்க்களம்
புக்குப் புண்படாத நாளெல்லாம் புறங்கொடுத்த நாளாக மறவன் கருதுவான்.
அகம் புகுந்தவளின் மெல்லிய ஆகத்தை மேவாத நாளெல்லாம் வாழாத நாளாகக்
காதலன் கருதுவான்” (தமிழ்க் காதல், பக்.45-46) என்னும் மூதறிஞர்
வ.சுப.மாணிக்கனாரின் கருத்து ஈண்டு மனங்கொளத் தக்கதாகும்.
தலைவனது பிரிவினால் வருந்தும் தலைவி ஒருத்தி தனது காம மிகுதியால் கடலை
நோக்கி, “நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றாயே; யாரால் வருத்தம் அடைந்தாய்?”
என இரங்கிக் கேட்கிறாள்.
“யார் அணங்கு உற்றனை கடலே…
நள்ளென் கங்குலும் கேட்கும்நின் குரலே”
(163)
என்பது அம்மூவனார் படைக்கும் ஒரு தலைவியின் கூற்று.
‘நள்ளென் கங்குலில் நின்குரல் கேட்கும் என்றமையால் அதனைக் கேட்பாளாகிய
தலைவியும் அந்நள்ளிரவில் துஞ்சாமை பெறப்படும்’ (குறுந்தொகை மூலமும்
உரையும், ப.312)
என இப் பாடலுக்கு எழுதிய உரை விளக்கத்தில் குறிப்பிடுவர் ‘பதிப்பு
வேந்தர்’ உ.வே.சா.
அம்மூவனார் படைத்துள்ள இக் குறுந்தொகைப் பாடலின் தாக்கத்தினைத்
தன்னகத்தே கொண்ட தமிழன்பனின் ஹைகூ வருமாறு:
“விடிய விடியக்
கடல் அழ அவள் அழ
அவள் அழக் கடல் அழ”
(122)
பாவேந்தர் பாரதிதாசன் தமது ‘அழகின் சிரிப்’பில்,
“புரட்சிக்கு அப்பால் அமைதி
பொலியுமாம், அதுபோல் ஓரக்
கரையினில் அலைகள் மோதி
கலகங்கள் விளைக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட்கு அப்பால்
கடலிடை அமைதி அன்றோ!” (ப.7)
என ஆழ்கடலின் அமைதியும் அலைகளின்
ஆரவாரமும் குறித்துப் பாடுவார். இதன் எதிரொலியாகத் தமிழன்பன்
படைத்துள்ள ஹைகூ வருமாறு:
“கடல் விருப்பம் அமைதி
அலைகள் விருப்பமோ
அதற்கெதிராக”
(121)
இங்ஙனம் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் என்னும் சங்க அகத்திணை மரபின் வழி நின்று ஈரோடு தமிழன்பன்
‘ஐந்திணை ஹைகூ’ கவிதைகளைச் செவ்வனே படைத்துள்ளார். சான்றோர் கவியினது
இலக்கணம் கூற வந்த கவிப்பேரரசர் கம்பர் ‘அவி அகத் துறைகள் தாங்கி,
ஐந்திணை நெறி அளாவி’ (ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப் படலம், பா.1) எனக்
குறிப்பிடுவது நோக்கத்தக்கது. சுருக்கமாகக் கூறுவது என்றால், “நம்
அருமைச் சங்க இலக்கியச் செழுமைக்கு, நுட்பத்திற்கு, உத்தி அழகுக்கு,
உணர்வு வளத்துக்கு ஈடாக எதனைச் சொல்ல முடியும்?” (ப.21) என்னும் சங்க
இலக்கியம் பற்றிய கவிஞரின் மதிப்பீடு, அவரது ஐந்திணை ஹைகூ
கவிதைகளுக்கும் பொருந்தி வருவதே ஆகும்.
முனைவர் இரா.மோகன்
முன்னைத்
தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
eramohanmku@gmail.com
|