புதுக்கவிதையில் அறிவார்ந்த
நகைச்சுவை
முனைவர் இரா.மோகன்
வெளிப்படையான
மொழியில் நேரடியாக அமைந்து, கேட்ட அல்லது வாசித்த உடனேயே அவையோரை,
ஆர்வலர்களைச் சிரிக்க வைப்பது எளிய நகைச்சுவை
(Humour);
மாறாக, குறிப்பு மொழியில் செறிவாக அமைந்து, புரிந்து கொள்ளும் திறம்
வாய்ந்தவர்களே உணர்ந்து சிரிக்கத்தக்கதாக விளங்குவது அறிவார்ந்த
நகைச்சுவை
(Wit).
எளிய நகைச்சுவையும்
அறிவார்ந்த நகைச்சுவையும்
கேட்ட உடன் எல்லோரையும் சிரிக்க வைப்பது எளிய நகைச்சுவை
(Humour).
ஓர்
எடுத்துக்காட்டு.
“என்ன வரம் வேண்டும்
என்கிறார் கடவுள்.
அது தெரியாத
நீர் என்ன கடவுள்?”
நீலமணியின் இச்சிறு கவிதையைப் படித்தாலோ, யாரேனும் சொல்லக் கேட்டாலோ
உடனடியாகச் சிரிப்பு அலைகள் தோன்றிவிடும். ஒரு முறைக்கு இருமுறை நின்று
நிதானமாகப் பொருள் உணர்ந்து படித்த பிறகே மெல்லிய புன்னகையை வரவழைப்பது
அறிவார்ந்த நகைச்சுவையின் பண்பு. இவ்வகைக்கு ஆத்மாநாமின் ‘தரிசனம்’
என்ற கவிதை நல்லதோர் எடுத்துக்காட்டு.
“கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதினிலே ஒரு நிம்மதி”
சற்றும் எதிர்பாராத வேளையில் – சூழலில் – கடவுளைக் காண நேர்ந்ததாம்!
கடவுளைக் கண்ட பரபரப்பில் – பரவசத்தில் – அவரிடத்தில் வரமாக எதையும்
கேட்கவே தோன்றவில்லையாம் கவிஞருக்கு! ஒருவேளை, ‘வேண்டத்தக்கது அறிவோய்
நீ – வேண்ட முழுதும் தருவோய் நீ!’ என்று நினைத்தும் அவர் கடவுளிடம்
எதையும் கேட்காமல் இருந்திருக்கலாம். கடவுளோ புன்னகைத்துப்
போய்விட்டாராம்! நல்ல வாய்ப்பு தானாகத் தேடி வந்தும் அதை முறையாகக்
கவிஞர் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதை நினைக்கும் போது கடவுளுக்கு
மட்டுமன்று, வாசகர்கள் ஆகிய நமக்கும் சிரிப்பு வருகின்றது! என்றாலும்,
கடவுளைத் தரிசனம் செய்ய முடிந்ததே, அதில் மனதினிலே கவிஞருக்கு ஒரு
நிம்மதி கிடைத்ததாம்!
சொல் விளையாட்டில்
வெளிப்படும் அறிவார்ந்த நகைச்சுவை
‘நேயர் விருப்பம்’
தொகுப்பில் ‘சித்திர மின்னல்கள்’ என்னும் உட்பகுப்பில் கவிக்கோ அப்துல்
ரகுமான் படைத்துள்ள புதுக்கவிதைகள் சொற்சுருக்கமும் பொருட் செறிவும்
வாய்ந்தவை; அழகிய சொல் விளை-யாட்டாலும் அறிவார்ந்த நகைச்சுவைத்
திறத்தாலும் படிப்பவர் இதழ்களில் குமிண் சிரிப்பைத் தோற்றுவிக்க வல்லவை.
பதச்சோறாக, ‘அரசு மாற்றம்’ என்னும் தலைப்பில் மக்கள் தொகைப்
பெருக்கத்தின் தாக்கம் குறித்து அப்துல் ரகுமான் தீட்டியுள்ள
குறுங்கவிதை இது:
“பிள்ளை வேண்டும் என்று
பெண்கள் அரசு சுற்றியது
அக்காலம்
பிள்ளை வேண்டாம் என்று
அவர்களை ‘அரசு’ சுற்றுவது
இக்காலம்”
இங்கே ‘அரசு’ என்ற சொல்லை
இருபொருள் படும்படி திறம்படக் கையாண்டுள்ளார் கவிக்கோ. முதலில் வரும் ‘அரசு’,
மரத்தைக் குறிப்பது; பெண்கள் அக்காலத்தில் பிள்ளை வரம் வேண்டி அரச
மரத்தைச் சுற்றி வந்தனர். அடுத்து வரும் ‘அரசு’, அரசாங்கத்தைச்
சுட்டுவது; அளவுக்கு மேல் பிள்ளைகளைப் பெற்று மக்கள் தொகையைப் பெருக்க
வேண்டாம் என்று பெண்களை அரசாங்கம் சுற்றுவது இக்காலம்!
‘ஒரு நாமச் சண்டை!’
மனிதனை நெறிப்படுத்த
வேண்டிய மதம் இன்று வெறி ஊட்டி, சமுதாயத்தில் போரும் பூசலும் விளையக்
காரணமாக விளங்குவது கண்கூடு. இது கருதியே வள்ளலாரும், ‘மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்’ எனப் பாடினார். ‘ஒரு நாமச் சண்டை’ என்னும்
கவிதையில் கவிஞர் வாலி கோயில் யானைக்கு எந்த நாமம் போடுவது, வடகலை நாமமா,
தென்கலை நாமமா? என்பதில் மனிதர்க்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடு
நீதிமன்றம் வரைக்கும் சென்று வழக்காடப் பெற்றதைத் தமக்கே உரிய
நகைச்சுவைப் பாணியில் நுண்ணிய முறையில் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
“வட
கலையா?
தென் கலையா?
வாதியும் பிரதிவாதியும்
வாய்தா மேலே வாய்தா வாங்க
வழக்கு வருஷக் கணக்காக…
நெடுநாட்களாய்
நெற்றியில் நாமமே இல்லாமல்
நின்று கொண்டிருந்த
கோயில் யானை…
ஒருநாள்
சங்கிலியை அறுத்துக்கொண்டு
சொல்லாமல் கொள்ளாமல்
ஊரை விட்டு ஓடியே போயிற்று!
ஊர் பேசியது:
மதம் பிடித்ததால்
ஓடியது என்று.
உண்மையில்
மதம் பிடிக்காததால் தான் -
ஓடியது யானை!”
அழகிய முரணும் தேர்ந்த சொல்
விளையாட்டும் அறிவார்ந்த நகைச்சுவைத் திறமும் களிநடம் புரிந்து நிற்கும்
கவிதை இது! வடகலை x
தென்கலை, வாதி x
பிரதிவாதி என இயல்பான முரண்களைக் கவிதையின் தொடக்கத்தில் கையாளும்
கவிஞர், ஊர் பேசியதற்கும் உண்மைக்கும் இடையிலான உயிர்ப்பான
வேறுபாட்டினைச் சொல் விளையாட்டின் வாயிலாகவும், அறிவார்ந்த
நகைச்சுவையின் மூலமாகவும் திறம்படப் புலப்படுத்தி இருப்பது
குறிப்பிடத்தக்கது. ‘மதம் பிடித்ததால் யானை ஓடியது’ என்பது ஊரார் கூற்று.
ஆனால் ஆழ்ந்திருக்கும் கவிஞரின் உள்ளம் உணர்த்த விரும்புவது,
‘உண்மையில் மனிதர்களின் மதம் பிடிக்காததால் தான் – ஓடியது கோயில் யானை!’
என்ற உண்மையை. ‘மதம் பிடித்ததால்’ என்ற தொடர் யானைக்கு மதம் பிடிப்பதைச்
சுட்டுவது; அடுத்து வரும் ‘மதம் பிடிக்காததால் தான்…’ என்ற தொடர்
மனிதரின் மதம் கோயில் யானைக்குப் பிடிக்காததால் அது கட்டுத்தறியை
அறுத்துக் கொண்டு ஊரையே விட்டு ஓடிப்போவதை உணர்த்துவது. நுண்ணறிவு
கொண்டோர்க்கே இக் கவிதை உணர்த்தும் மெய்ப்பொருள் தெளிவாக விளங்கும்.
நுண்ணிய நகைச்சுவைத்
திறம்
நாட்டில் பிறருக்கு உபதேசம்
செய்வதற்கு ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்; ஆனால், உபதேசத்தைக் கேட்டு,
அதன்படி நடப்பதற்கோ பத்துப் பேர் கூடத் தேற மாட்டார்கள்.
‘ஊருக்குத்தான் உபதேசம், எனக்கு அல்ல’ என்பது தமிழ்நாட்டில் மக்கள்
நாவில் தொன்றுதொட்டு வழங்கி வரும் ஒரு பழமொழி ஆகும்.
எஸ்.வைதீஸ்வரன் ‘உபதேசம்’ என்னும் தலைப்பில் படைத்துள்ள புதுக்கவிதை
வருமாறு:
“நீ
புகை பிடிக்காதே’ என்று
என் தாத்தா தந்தைக்குச் சொன்னதை
என் மூலம் மகனும் தெரிந்து கொண்டான்.
இது நிஜம்.
(ஆனால்) நாங்கள் யாவரும்
விரும்பிக் குடிப்பது
மிக உயர்ந்த ரகம்.
என் பேரனே சாட்சி!”
‘புகை உயிருக்குப் பகை; எனவே,
புகை பிடிக்காதீர்கள்’ என்ற உபதேசம் காலங்காலமாகப் பலராலும்
செய்யப்பட்டு வருகின்றது; ஆனால் இந்த உபதேசத்தைக் கேட்டு யாரும் புகை
பிடிக்கும் இந்தக் கொடிய பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத்
தெரியவில்லை. இந்த அப்பட்டமான, கசப்பான உண்மையினை அறிவார்ந்த
நகைச்சுவைத் திறத்தோடு கவிதைப் பொருள் ஆக்கியுள்ளார் வைதீஸ்வரன். வயதான
தாத்தா தொடங்கிப் பேரன் வரையிலான ஐந்து தலைமுறையினராலும் புகை
பிடிக்கும் பழக்கம் கைவிடப்படாமல் பின்பற்றப்பட்டு வருவதை நுண்ணிய
இக்கவிதை, நகைச்சுவை உணர்வுடன் புலப்படுத்தி இருக்கும் திறம்
போற்றத்தக்கதாகும்.
அறிவார்ந்த நகைச்சுவையில்
அரசியல் சாடல்
இன்றைய அரசியல்வாதிகள்
தெளிவானர்கள்; விவரமானவர்கள். அவர்களது கவனம் எல்லாம் நாட்டை
முன்னேற்றுவதில் இல்லை; கட்சியை வளர்ப்பதில் இல்லை; ஏழை எளியவர்களைக்
காப்பதிலும் இல்லை; வறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் இல்லை.
அவர்களைப் பொறுத்த வரையில், ஏழைகள் எந்நாளும் ஏழைகளாகவே இருக்க வேண்டும்;
தொண்டர்கள் காலமெல்லாம் தொண்டர்களாகவே இருக்க வேண்டும். அப்போதுதான்
அவர்களது வாழ்க்கை அமோகமாக இருக்கும்! ஆனால் வாயைத் திறந்தால்
அவர்களிடம் இருந்து பிறக்கும் வார்த்தைகள் எல்லாம் – வாக்குறுதிகள்
எல்லாம் – ‘எங்கள் கட்சி உங்களுக்காகவே!’ என்பது போன்ற தேனான
வாக்குறுதிகள் தான்! இன்றைய அரசியல்வாதிகளின் இந்த இரட்டை வேடப்
போக்கினைக் கவிஞர் தமிழன்பன் ‘உங்களுக்காகவே’ என்னும் தம் கவிதையில்
அறிவார்ந்த நகைச்சுவைத் திறம் விளங்கத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
கவிஞரின் சொற்களில் அக்கவிதை வருமாறு:
“ஏழைகளே!
எங்கள் கட்சி
உங்களுக்காகவே
நீங்கள்
எமாற்றி விடாதீர்கள்!
(இப்படியே இருங்கள்)”
அரசியல்வாதிகள் ஏழைகளைப்
பார்த்து ‘ஏழைகளே! நீங்கள் இப்படியே இருங்கள்’ என்றால் என்ன பொருள்?
‘நீங்கள் இப்படியே இருந்தால்தான் – எளிதில் ஏமாறுகிறவர்களாக இருந்தால்
தான் – நாங்கள் எந்நாளும் இப்படி வசதியாக இருக்க முடியும்?” என்பது தானே?
அறிவார்ந்த நகைச்சுவையில்
சமூக அவலங்கள்
இன்று பெரும்பாலான ‘ரேஷன்’
கடைகளில் வழங்கப் பெறும் உணவுப் பொருள்களில் அளவு சரியாக இருப்பதில்லை.
தரமும் நன்றாக இருப்பதில்லை. ‘எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம்’
என்ற அவல நிலையே இன்று நடைமுறை ஆகிவிட்டது.
கவிஞர் கந்தவர்வன் ‘ரேஷன்’
என்னும் தலைப்பில் ஒரு புதுக்கவிதை படைத்துள்ளார். அதில் அறிவார்ந்த
நகைச்சுவைத் திறத்தோடு கலப்படத்தின் கொடுமையைச் சித்திரித்துள்ளார்.
“ரேஷன் கடையில்
அரிசி வாங்கிக்
கல்லையும் நெல்லையும்
பொறுக்க நினைத்து
அரிசியைப்
பொறுக்கி முடித்தோம்”
ரேஷன் கடையில்
வாங்கிய அரிசியில் கலப்படமே – அரிசியைப் போன்ற கல்லே – மிகுதியாக
இருந்ததாம்! பொறுக்கி எடுக்கும் அளவிலேயே அரிசி இருந்ததாம்! மிகையாகத்
தோன்றினாலும் கவிஞர் இங்கே கலப்படத்தின் தாக்கத்தினை வெளிப்படுத்தி
இருக்கும் பாங்கு கூர்மையான ஒன்றாகும்.
இங்ஙனம் இன்றைய
புதுக்கவிஞர்கள் அறிவார்ந்த நகைச்சுவையின் வாயிலாக நாட்டு நடப்புகளையும்
சமூக அவலங்களையும் இந்நூற்றாண்டு மனிதனின் நடத்தையினையும்
கலைநயத்துடனும் கூர்மையுடனும் சித்திரித்துக் காட்டியுள்ளனர்.
முனைவர் இரா.மோகன்
முன்னைத்
தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
eramohanmku@gmail.com
|