ஆரிய அரசன் பாடிய அழகிய குறுந்தொகைப்
பாடல்
முனைவர் இரா.மோகன்
சங்க காலத்தில் ஆரிய அரசர் பலர்
தமிழின்பால் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு அதனைக் கற்றனர்; கற்றதோடு நின்று
விடாமல், அன்னோர் தமிழில் கவி பாடும் திறமும் கைவரப் பெற்றனர்.
குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள 184-ஆம்
பாடலைப் பாடியவன் ஆரிய அரசன் என்றும், யாழிசையில் வல்லவன் என்றும்,
பிரமதத்தன் என்ற இயற்பெயரினை உடையவன் என்றும் அறிய முடிகின்றது. சங்கச்
சான்றோருள் தலைசிறந்த கபிலர், ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ்
அறிவித்தற்குக் குறிஞ்சிப்பாட்டை இயற்றினார் என்பர். குறுந்தொகைப்
பாடலைப் பாடிய ஆரிய அரசனும், கபிலரால் தமிழ் அறிவுறுத்தப் பெற்ற ஆரிய
அரசனும் ஒருவரா என்பது ஆய்வுக்கு உரியது. பேராசிரியர் ந.சஞ்சீவி தரும்
ஆராய்ச்சி அட்டவணையின்படி, சங்க காலத்தில் விளங்கிய அரசப் புலவரின்
எண்ணிக்கை 31;
ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் தமிழ்ப்
புலவனாய் இருந்தமை எண்ணி மகிழத் தக்கது (சங்க இலக்கிய ஆய்வும்
அட்டவணையும், ப.273).
குறுந்தொகை 184-ஆம்
பாடல் நெய்தல் திணையில் தலைவன் கூற்றாக அமைந்தது. ‘கழறிய பாங்கற்குக்
கிழவன் உரைத்தது’ என்பது இப் பாடலின் துறைக் குறிப்பு. கழறுதல் என்பது
தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தல்; எதிர்மறை, தலைவன் பாங்கனுக்கு
எதிர்மறுத்து உரைத்தல்.
தலைவன் தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கி, “மயிற் பீலியினது கண்ணைப்
போன்ற மாட்சிமைப்பட்ட முடியினை உடைய பாவையைப் போன்றவள் தலைவி, நுண்ணிய
வலையினை உடைய பரதவர் குலத்து இளம்பெண்ணான அவளது கண் ஆகிய வலையில்
அவ்வழிச் செல்வோர் அகப்பட்டுக் கொள்வர். அத்தகைய கடற்கரைச் சோலையில்
சென்ற மாட்சிமையும் பண்பும் பொருந்திய என் உள்ளமும், ‘இப் பொருளுக்கு
இப்பொருள் ஏற்ற சிறப்பினை உடையது’ என்று சிந்தித்துப் பார்க்காமல்,
பரதவப் பெண்ணின் கண் வலையில் அகப்பட்டு, அவ்விடத்திலேயே தங்கிவிட்டது.
அறிவால் சிறந்த சான்றோர்க்குத் தாம் கண்டறிந்த ஒன்றை மறைத்து இல்லை எனப்
பொய்ச் சான்று கூறும் இயல்பு இல்லை. எனவே, யாம் கண்டறிந்த இதனை
உண்மையாகக் கொள்க. பரதவர் குலப் பெண் வாழும் அச் சிற்றூர்க்குச்
செல்லுதலைக் கை விடுமின்” எனக் கூறுகிறான். தலைவனது இக் கூற்றினைத்
தன்னகத்தே கொண்ட அழகிய குறுந்தொகைப் பாடல் வருமாறு:
“அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே;
இதற்குஇது மாண்டது என்னாது அதற்பட்டு
மயில்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉம் கான லானே.”
அறிகரி பொய்த்தல் என்பது தாம் அறிந்த ஓர் உண்மையான நிகழ்ச்சியை
மறைத்துப் பொய்ச் சான்று கூறுதல். அறிகரி – நெஞ்சறிந்த கரி (சான்று).
‘தன்னெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின், தன்னெஞ்சே தன்னைச் சுடும்’
(293)
என்னும் குறட்பா இங்கே நினைவு கூரத்தக்கது.
‘நுண்வலை’ என்றது நுண்ணிய நூலால் ஆன பரதவரது வலையை. ‘வலையை யுடையார்
மகள்’ என்றமையின் அவள் கண்ணையும் வலையாக உருவகித்தான் தலைவன். “‘கண் வலை’
என்றதற்கு ஏற்ப நெஞ்சை மீனாகக் கொள்க” (குறுந்தொகை மூலமும் உரையும், ப.349)
என இப் பாடலுக்கு எழுதிய உரை விளக்கத்தில் குறிப்பிடுவர் ‘பதிப்பு
வேந்தர்’ உ.வே.சா.
“என் நெஞ்சம் பரதவர் மடமகளான தலைவியின் கண்வலையில் பட்டு ஆண்டே
தங்கிவிட்டது; இந் நிலை எனக்கு மட்டும் அமைந்ததன்று; அவ்வழிச் செல்வோர்
யாராயினும் அவ்வலையிலே படுவர்; இது அனுபவத்தில் யான் கண்டறிந்த உண்மை;
ஆதலின் அவ்வழியே ஒருவரும் செல்லற்க; செல்லின் துன்புறுவீர்” என்னும்
கருத்துப்பட மொழிகின்றான் தலைவன்.
‘பரதவர் மடமகள் கண்வலை’ என்பது இப் பாடலில் படிம அழகு கொலுவிருக்கும்
தொடர் ஆகும். ஐந்து வகையாக ஒப்பனை செய்யப்படும் மகளிர் தலைமயிர்: கொண்டை,
குழல், பனிச்சை, முடி, சுருள் என்பன. இப் பாடலில் ‘மயிற்கண் அன்ன
மாண்முடிப் பாவை’ எனத் தலைவியின் கூந்தல் அழகு உவமை நயத்துடன்
சுட்டப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
“பரதவர் வலை ஒன்றுமறியாத மீனை அகப்படுக்கும்; இவள் கண்வலை என் மாண்டகை
நெஞ்சத்தை யகப்படுத்தது. ‘கண்வலை வீசிய போது உள்ள மீன் இழந்தான்’
என்னுந் திருக்கோவை இது கொண்டு கூறியதாம்” (குறுந்தொகை விளக்கம், ப.276)
என மொழிவர் மகாவித்துவான் ரா.இராகவையங்கார்.
நெய்தல் நிலத்தைச் சார்ந்த இளம்பெண் ஒருத்தியைக் காதலித்த தலைவனின்
கூற்றாக இப் பாடல் அமைந்துள்ளது ‘Love is blind’
என்பதால், ‘இதற்கு இது சிறந்தது’ என்று
ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் உணர்ச்சி வயப்பட்ட காதலர்க்கு
அமைவதில்லை. “பரதவர் விரிக்கும் நுண்ணிய வலையில் சிறுமீனும்
அகப்பட்டுவிடும். அதுபோல், அவர்தம் இளம்பெண் விரிக்கும் கண் ஆகிய
வலையில் காதலனின் நெஞ்சம் என்ற மீனும் அகப்பட்டு விடும். எனவே, அவ்வழிப்
போயிருப்பின் என்னை இடித்துக் கூற மாட்டாய் என்று பாங்கனை மறுத்துத்
தலைவன் பேசியதாக இப்பாடல் திகழ்கிறது” (குறுந்தொகை ஆராய்ச்சித் தெளிவுரை,
ப.55)
என்பது இப் பாடலுக்கு எழுதிய ஆராய்ச்சித் தெளிவுரையில் மூதறிஞர்
சோ.ந.கந்தசாமி சுட்டும் சிறப்புக் குறிப்பு ஆகும்.
நிறைவாக, ஓர் ஒப்புநோக்கு:
“என்னைக் கண்டதும்
கவிழும்
உன் இமைகள்
கொசு வலையா?
மீன் வலையா?”
- கவிக்கோ அப்துல் ரகுமான்
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|