ஆழ்வார்களின் மொழி அமைப்பும் கருத்தியல் கோட்பாடும்

முனைவர் பூ.மு.அன்புசிவா
 

கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இயக்கக் காலமாகும். வைதிக மதத்தை மன்னர்கள் போற்றத் தலைப்பட்டனர். வைதிக மதம் என்பது சைவ வைணவ மதங்களாகும். சோழன் இராசராசன், நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு சைவத் திருமுறைகளைத் தொகுத்துத் தந்தான். அது போலவே வைணவப் பாசுரங்களை 10-ஆம் நூற்றாண்டில் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என்னும் பெயரில் நாதமுனிகள் தொகுத்து அருளினார். புறச் சமயத் தாக்குதல்களில் இருந்து விடுபட்ட சைவ வைணவம் சார்ந்த வைதிக சமயத்தார் தத்தம் கடவுளர்கள் தாம் முழுமுதல் கடவுள் என நிறுவத் தலைப்பட்டனர். இதன் விளைவு பயன் உரைக்கும் பாசுரங்கள் முகிழ்த்தன. ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் - அன்பில் - அருளில் - தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம். ஆழ்வார்கள் என்பது காரணப் பெயராகவும் அவர்கள் தொழிலால் பெற்ற பெயராகவும் கொள்ளலாம். திவ்வியப் பிரபந்தத்தைப் பாடி அருளியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.

இலக்கியம் என்பது மக்களின் வாழ்வியலைக எடுத்துகாட்டும் கண்ணாடியாகும். தமிழ் மொழி என்றாலே பக்தி மொழி என்று அறிஞர்கள் கூறுவதைக் காணமுடிகிறது. ஒரே இறைவனைப் பற்றி பலர் பாடியிருந்தாலும், அவர்கள் கையாளும் மொழி நடையில் வேறுபாடுகள் காணப்படுவதுண்டு என்பதை அறியமுடிகிறது. இறைவன் மீது அவர் கொண்டிருக்கும் பக்தி இறைவனின் அருளிச் செயல்களின் மீது அவர் கொண்ட ஈடுபாடு அவர் அறிந்த திருத்தலங்கள், மொழி ஆளுமை, எடுத்தாளும் திறன், புலப்படுத்தும் பாங்கு ஆகியவற்றின் வாயிலாக வேறுபாடு தோன்றுவதுண்டு. ஆழ்வார்களின் பாடல்களில் காணப்படும் கருத்துப் புலப்பாட்டினையும் அதனை வெளிப்படுத்த அவர்கள் கையாண்ட மொழிப்பயன்பாட்டையும், வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராமல், இறைவன் மீது கொண்ட அன்பே பக்தி என்று கூறுவர். திருமால் மீது ஆழ்ந்த பக்தி கொண்டதால் ஆழ்வார்கள் என அழைக்கப் பட்டனர். பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருவரே பெண்ணாவார். நாயக, நாயகி பாவம், குழந்தையாகப் பாவித்தல், சரணாகதி அடைதல், பரதத்துவம், இறைவன் நாமத்தின் மகிமை, இறைவனின் அருளிச்செயல்களில் கொண்ட ஈடுபாடுகாரணமாக கருத்தும் மொழியும் வேறுபட்டிருப்பதைக் காணமுடிகின்றது.

இறைவனை வருணித்தல்

பெரியாழ்வார் தன்னைத் தாயாகவும் கண்ணனைக் குழந்தையாகவும் பாவித்து, பல்லாண்டும், பிள்ளைத் தமிழும் பாடியுள்ளார். பிற்காலப் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்றுவதற்கு இவரது பாடல்கள் அடிப்படையாக அமைந்தன என்பதில் ஐயமில்லை. அதனால் ஒரு தாய் தன் குழந்தையை வாழ்த்துவது போல,

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் திண்டோள் மணிவண்ணா'


என்று வாழ்த்துகிறார் பெரியாழ்வார். மேலும் கண்ணனின் திருவுருவின் அழகினைப் பாதாதி கேசமாக வருணிக்கிறார். தேவகியைச் சீதக் கடலின் அமுதம் என்றும், யசோதையைக் கோதைக் குழலாள் என்றும் போற்றுகிறார். இருவருக்கும் மகனாக வளர்ந்த கண்ணன் ஆலிலைமேல் சிறுகுழந்தையாகப் படுத்திருக்கும் காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார்.

'பேதைக் குழலி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே'


                                                       (பெரி. ஆழ்
3ஆம் திருமொழி : பா -1)

என்ற வரிகளில் உலகையெலாம் தன் வயிற்றினுள் அடக்கி கால் விரலைப் பிடித்துச் சுவைத்து உண்ணும் ஆலிலைக் கண்ணனைக் காட்டுகின்றார். காத்தல், அழித்தல், படைத்தல் என்ற மூன்று கடமைகளையும், திருமால் ஒருவரே செய்கிறார் என்பதனை இதன் மூலம் உணர்த்துகிறார். பாதங்கள், பத்து விரல்கள், கணைக்கால், முழந்தாள், தொடை, உந்தி, உதரவிதானம், மார்பு,தோள், கைகள், கண்டம், தொண்டை, மூக்கு, கண்கள், புருவம், காது, நெற்றி, முடி என ஒவ்வொன்றையும் அழகுபெற வருணிக்கிறார். அவ்வாறு வருணிக்கும் போது, இறைவனின் அருளிச்செயல்கள், அவதாரச் செயல்கள் ஆகியவறறைச் சரியான இடத்தில் பயன்படுத்தி, திருமாலைப் புகழ்கிறார்.

'பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலவே கிடந்தஇப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான்
குறங்கு களைவந்து காணீரே குவிமுலையீர்! வந்து காணீரே!'


                                              (பெரி.ஆழ்;.
3 ஆம்  திருமொழி. பாடல். 3:5)

இப்பாடலில்; இறைவனின் தொடையின் அழகினை வருணிக்க வந்த பெரியாழ்வார் இரு அவதார நோக்கங்களப் புலப்படுத்துகிறார். கொடுமை செய்பவர்களைத் தண்டித்தல், நல்லவர்களைக் காத்தல் என்ற நோக்கத்தில் பெண் வேடமிட்டு வந்த பூதகி என்னும் அரக்கியைக் கொல்லுதல், தன் பக்தனான பிரகலாதனைக் காக்க அவன் தந்தையான இரணியனைக் கொல்லுதல் என்னும் இரு செயல்களைச் சுட்டிக் காட்டுகிறார். குழந்தையை மடிமீது வைத்து, பாலுண்ணக் கொடுத்தல், இரணியனைத் தன்மீது கிடத்திக் கூரிய நகத்தினால் மார்பைப் பிளந்து உயிரை எடுத்தல், என்னும் இரு செயல்கள் இப்பாடலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குழந்தையாக இருக்கும் போதும் நரசிம்மமாக வந்து இரணியனை வதைத்தல் ஆகிய இரு செயல்களிலும் தொடை முக்கியப் பங்காற்றுகின்றது. அதனை இப்பாடல் வாயிலாகப் புலப்படுத்துகின்றார்.

இதே பாதாதி கேச வருணனையாக திருப்பாணாழ்வார் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைப் புகழ்ந்து பாடுகிறார். பாதங்கள், உதரபந்தனம், அவர் அணிந்துள்ள ஆடை, மார்பு, தொண்டை, கண்டம், வாய், கண், நெற்றி, முடி என வருணிக்கிறார்.

'அமல னாதிபி ரானடி யார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரை யார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்
திருகமலப் பாதம்வந் தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே'


என்ற பாடலில் அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர்க்கோன், நிமலன், நின்மலன், நீதிவாணன் என்று திருமாலின் நாமங்கள் விதந்தோதப்பட்டன. அத்தகைய இறைவன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ளான். அவனது பாதங்கள் என் கண்களில் முதலில் தென்படுகின்றன என விவரிக்கின்றார். இப்பாடலில் திருமாலின் மீது பக்திகொண்ட அடியாரின் மனநிலை வெளிப்படுகின்றது. இறைவனின் அருங்குணங்களும், மற்றும் அவ்விறைவன் தேவர்களுக்குத் தலைவனாகவும், அவர்களின் துயர் துடைக்கும் அரசனாகவும் திகழ்வதைக் காண்கிறார் திருப்பாணாழ்வார் மேலும்,

'பரிய னாகிவந் தவவு னுடல்கீண்டு அமரர்க்
கரிய வாதிபி ரானரங் கத்தம லன்கத்துக்
கரிய வாகிப் புடைப் பரந்து மிளிர்ந்து செவவரியோடி நீண்டவப்
பெரிய வாயகண் களென்னைப் பேதைமை செய்தனவே'

                                                                      (திருபா. ஆழ.; பாடல்: 8)

என்ற பாடலில் நரசிம்ம அவதாரத்தின் நோக்கத்தினை எடுத்துக்காட்டி அவரது கண்களின் சிறப்பினை வெளிப்படுத்துகின்றார். திருப்பாணாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் பாடல்களில் பாதாதிகேச வருணனை காணப்பட்டாலும் மொழிநடையிலும், கருத்திலும் சிற்சில வேறுபாடுகள் காணப்படுவதை உணர முடிகின்றது. பெரியாழ்வார் தன்னைத் தாயாக நினைத்ததால் குழந்தைக் கண்ணனின் திருவிளையாடல் நிகழ்விலும் கண்ணனின் அழகினைப் புகழ்ந்து பாடுவதைக் காணமுடிகின்றது. பாணர் குலத்தில் பிறந்த பாணாழ்வார் இறைவனை நேரடியாகக் காணும் வாய்ப்புக் கிட்டியபோது திருமாலின் அழகு அவரைக் கவர்கின்றது. அதனால் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் வர்ணிக்கும் போது அதற்கேற்ற அவதார நிகழ்வினை விவரிக்கிறார். பெரியாழ்வார் இரணியன் என்று பெயரைச் சுட்டுகிறார். ஆனால் திருப்பாணாழ்வார் அவுணன் என்று விளக்குகிறார். இருவரும் நரசிம்ம அவதாரத்தை விளக்கினாலும், சொற்பயன்பாட்டிலும் கருத்திலும் வேறுபாட்டைக் காணமுடிகின்றது.

குழந்தையாகப் பாவித்தல்

பெரியாழ்வார் தன்னைத் தாயாகவும் திருமாலைக் குழந்தையாகவும் பாவித்ததால் தாலாட்டு, வருகை, சப்பாணி, அம்புலி காட்டல், நீராட அழைத்தல், காக்கையினை அழைத்தல் சோறுண்ண அழைத்தல், என்று பல நிலைகளில் மகிழ்வாகப் பாடுகின்றார்.


'மாணிக்கங் கட்டி வயிர மிடைக் கட்டி
ஆணிப்பொன் னாற்செய்த – வண்ணச் சிறுதொட்டில்
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ'

                                                                                              (பெரியாழ். 4:1)

என்ற பாடலில் கண்ணனைத் தாலாட்டுகிறார். கண்ணன் உறங்கும் தொட்டில் மாணிக்கமும் வைரமும் இழைத்த தங்கத் தொட்டில். அதனைப் பிரமன் செய்து தந்தான் என்று விளக்கி வாமன அவதாரச் சிறப்பினை இங்குச் சுட்டிக் காட்டுகிறார். வாமனனாக வந்து மூன்றடிமண் கேட்டு திரிவிக்கிரம வடிவத்தை எடுத்து இவ்வுலகையளந்தவன் என்று விவரிக்கின்றார். வானளாவ வளர்ந்த திருமால் இங்குக் குழந்தையாகத் தங்கத் தொட்டிலில் படுத்துள்ளான் என்ற பாடல் மூலம் உண்மையான பக்தி உடையவர் நெஞ்சில் குழந்தையாக வந்து இடம்பெறுவான் என்ற உண்மையைச் சுட்டிக் காட்டுகின்றார்.

'அப்பம் கல்தசிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்கட்டு வத்தேன் தின்ன லுறுதியேல் நம்பி
செப்பின மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச்சிரிப்பர்
சொப்பட நீராடவேண்டும் சோத்தம் பிரானிங்கே வாராய்'

                                                                          (பெரி. ஆழ்;.தி.மொழி.பா. 5)

என்ற பாடலில் கண்ணன் விரும்பி உண்பதற்காக அப்பமும், அக்கார அடிசிலும், செய்து வைத்திருப்பதாகக் கூறுகிறார். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் உணவாகவும், வயிற்றிற்குத் தீங்கு விளைவிக்காத உணவாகவும் இதனைக் கூறுகின்றார். குழந்தைக் கண்ணனை நீராட அழைப்பதாக இப்பாடல் கூறுகின்றது.

இதைப்போல குலசேகர ஆழ்வார், தன்னைத் தேவகியாகவும், தயரதனாகவும் பாவி;த்து, திருமாலின் கண்ணன், இராமன் குறும்புகளைக் காணாத நிகழ்வினை நொந்து பாடும் தாயாகவும், தந்தையாகவும் பாவித்துப் பாடுகின்றார்.

'முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும்
முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண் டப்பதற்க கௌ;கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுக யும்மஞ்சி நோக்குமந் நோக்கு மணிகொள்
செஞ்சிறு வாய்நெளிப்பதுவும்
தொழுகை யும்மிவைகண்ட யசோதை தொல்லை

யின்பத் திறுதிகண் டாளே'

                                                                 (குல. ஆழ.; பா.
8)

என்ற பாடலின் வாயிலாகக் கண்ணனின் பாலக விளையாட்டான தன் தாமரைக்கையில் வெண்ணெய் அளைந்து கொடுத்தலையும், செவ்வாயில் வெண் தயிர் தோய்ந்தமையும், கண்ணனை மிரட்டும்போது அவனது அழுகையும் பயந்தது போல் செய்யும் பாவனையையும்;, கைகூப்பித் தொழும் செய்கையையும், காணக் கொடுத்து வைக்கவில்லையே என்று தன்னைத் தேவகியாகப் பாவித்துப் புலம்புவதாகக் குலசேகராழ்வார் பாடுகிறார். ஆனால் பெரியாழ்வார் தன்னை யசோதையாகப் பாவித்து, கண்ணனைத் தூங்கவைக்கும் தாலாட்டையும், தளர் நடை நடந்து வரும் வருகையையும், கைகள் தட்டி சப்பாணிக் கொட்டுவதையும், அம்புலி காட்டி சோறு ஊட்டுவதையும், மிகவும் மகிழ்ச்சியாகத் தாயாக வெளிப்படுத்துகிறார்.

சோகம் ஒ மகிழ்ச்சி என்ற வகையில் இருவரின் கருத்துக்கள் இருந்தபோதும், கிருஷ்ணாவதாரம், இராமாவதாரம் என்னும் இரு அவதாரங்களில் கண்ணனைப் பிரிந்த தேவகி மற்றும் தயரதனின் சோக நிகழ்வினை வெளிப்படுத்துகிறார் குலசேகராழ்வார். ஆனால் பெரியாழ்வார் யசோதையாகப் பாவித்து கண்ணனின் பால லீலைகளையும், பிற அவதாரச் சிறப்புகளையும், அதன் வாயிலாகக் கொடுமையினை எதிர்த்துப் போராடும் நிகழ்வுகளைச் சரியான இடத்தில் சுட்டிக்காட்டுகின்றார்.

நாயக நாயகி பாவம்

இறைவனைத் காதலனாகவும், தன்னைக் காதலியாகவும் பாவித்து அகப்பாடலாகப் பாடுவதே நாயக நாயகி பாவம் எனப்படும். அவ்வகையில் நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பாடியுள்ளனர். ஆண்டாள் பெண்ணாக இருப்பதால் தன் மனவுணர்வினை, ஆழ்ந்த பக்தியினை, இறைவன் மீது கொண்ட காதலை மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது. அதனை,

'வாரண மாயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கணாக் கண்டேன் தோழீ நான்'

                                                   (ஆண்டாள் நாச்சியார் திருமொழி
-6)

என்ற பாடலில் திருமால் ஆயிரம் யானைகள் சூழ வந்து பூரண பொற்குடமும் தோரணம் கட்டிய மணப்பந்தலில் ஆண்டாளைத் திருமணம் செய்வதாகச் சுட்டப்பட்டுள்ளது.

சரணாகதி அடைதலும் இறைவனை வேண்டுதலும்

இறைவனைத் தவிர வேறு கதியில்லை என்று அவனைச் சரணடைதலே சரணாகதி என்பர். இதனை,

'தருதுயரந் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில் சூழ்விற்றுவக்கொட் டம்மானே
அரிசினத்தா லீன்றதா யகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழுங்குழவி யதுபே போன்றிருந்தேனே'


என்ற பாடலில் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னையே சரணடைந்தேன் என்று கூறி அதிகோபத்தினால் குழந்தையை அகற்றும் தாயின் அன்பை நினைந்து அழும் குழவி போன்று உன் அருள் நினைந்து சரணாகதியடைகிறேன் என்று விளக்குகிறார்.

'வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துய ரிடும்பையிற் பிறந்து
கூடினேன் கூடி யிளையவர் தம்மோ டவர்தரு கலலியே கருதி
ஓடினேன் ஓடி யுய்வதோர் பொருளா லுணர் வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடிN;னன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்'


என்ற பாடலில் இவ்வுலக வாழ்க்கையே இன்பம் என்று கருதி வீணே நாட்களைக் கழித்துவிட்டேன். இறுதியில் நாராயணா எனும் நாமத்தைக் கைக் கொண்டேன் என்று சரணடையும் நிலையைச் சுட்டிக் காட்டுகிறார் திருமங்கையாழ்வார். குலசேகராழ்வார் உவமையினை விளக்கிக் கூறி சரணடையும் நிலையைச் சுட்டுகிறார். உலக இன்ப வாழ்க்கையிலிருந்து மீள இறைவனின் நாமம் உதவியது என விவரிக்கினறார் திருமங்கையாழ்வார்.


தொகுப்புரை:

  • ஆழ்வார்கள் அனைவரும் திருமாலை முழு முதற் தெய்வமாகக் கொண்டு அந்த பக்தியில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் பாடலின் பொருளுக்கேற்ப மொழிப்பயன்பாடு வேறுபடுவதைக் காணமுடிகின்றது.
     

  • மகிழ்வான தாயின் மனநிலைக்கும், குழந்தையைப் பிரிந்த தாயின் மனவேதனைக்கும் இடையே, உள்ள வேறுபாட்டை பெரியாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் புலப்படுத்துகின்றார்.
     

  • ஒரு பெண்ணின் கடவுள் காதலுக்கும், ஆணின் கடவுள் காதலுக்கும் வேறுபாடுண்டு என்பதையும், சரணாகதி தத்துவத்தையும,; பரதத்துவத்தையும் விளக்குவதில் ஏற்படும் வேறுபாடுகளையும் இப்பாடல்கள் நமக்கு நன்கு புலப்படுத்துகின்றன.



முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,கோயம்புத்தூர்
- 641 035

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்