நாற்பது நவிலும் நான்கு அடிப்படை அறங்கள்

முனைவர் செ.சரசுவதி

மிழ் மொழி தனக்கெனத் தனிச் சிறப்புடையது. பன்னெடுங்காலமாக பயின்று வரும் மொழி தமிழ் மொழி. பாடல் பொருள்கள் காலங்களுக்கேற்ப மாற்றம் பெற்றுள்ளன. சங்க காலத்தை அடுத்ததை களப்பிரர் காலம் என்றும் இருண்ட காலம் என்றும், சங்க மருவிய காலம் என்றும் அழைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் அறம், அகம், புறம் என்று மூன்று பாகுபாடுகளில் இலக்கியங்கள் எழுந்துள்ளன. 'அறம்' முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. பிற சமயங்களின் ஊடுருவலும் இதற்குக் காரணம். மனிதனுக்கும், சமூகத்துக்கும் அறம் உணர்த்தும் இலக்கியங்களாக பதினெண்கீழ்க்கணக்கு எழுந்துள்ளன.

அறம் பாடுவன
12, அகம்பாடுவன 5, புறம் பாடுவன 1: இன்னா நாற்பது, இனியவை நாற்பது இரண்டும் நாற்பது பாடல்களில் இனியவை, இன்னா என்று அறங்களை பட்டியலிடுகின்றன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது என்று குறிப்பிட்டவற்றில் அறம்பாடும் நாற்பது இரண்டு; இனியவை என்று இனியவை நாற்பது நாற்பது பாடல்களையும், இன்னா என்று இன்னா நாற்பது நாற்பது பாடல்களையும் தருகின்றன.

இன்னா நாற்பது ஆசிரியர் கபிலர். ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன. இனியவை நாற்பது ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார். நான்கு பாடல்களில்
(1,3,4,5) மட்டும் தான் நான்கு இனிய கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. ஏனைய பாடல்களில் மும்மூன்று இனிய பொருட்களே கூறப்பட்டுள்ளன.

நாற்பது பாடல்களில் அறம் சொல்லும் இவ்விரு நுல்களும் ஒன்று நேர்மறையாகவும் ஒன்று எதிர் மறையாகவும் சொல்லுகின்றன. மனிதனுக்கு வேண்டிய ஒழுக்கங்களாக பொய் பேசாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை, இவை மிகுத்துப் பேசப்படுகின்றன. 'தனிமனிதனுக்கு அடிப்படை அறங்களாகக் கருதப்படும் நான்கு அறங்கள் குறித்துக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.'

கல்வி

மனிதன் முழுமையடைய உதவுவதே கல்வி. மனிதன் விலங்கிடமிருந்து வேறுபட்டு காணப்படுவதும் கல்வியால் தான். கல்வி தான் அனைத்திற்கும் அடிப்படை. கல்வியினால் தான் பல சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களுக்கும் மாக்களுக்கும் புலனறிவு பொதுவாக இருந்த போதிலும் மனம் என்னும் பகுத்தறிவு விலங்கிடமிருந்து மனிதனைப் பிரிக்கிறது. இதனைத் தொல்காப்பியர்

'ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே'
(தொல்
1526)

மக்களுக்கும் விலங்குகளுக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளதோ அவ்வளவு வேறுபாடு கல்வியறிவு இல்லாதவர்க்கும் உள்ளது. வள்ளுவர் இதனை,

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்
(குறள்:
410)

'சிறப்பானதும், அடிப்படையானதும் ஆன கல்வியை பிச்சை எடுத்தாவது கல்வியை கற்றல் வேண்டும் (இனி:நா) கல்வியானது இனிது (இனி:நா
12) என்றும். 'கண் இல்லாதவன் எவ்வளவு துன்பம் அடைவானோ? கல்லாதவன் அத்தகைய துன்பம் பெறுவான் என்றும், கற்காதவன் உயர்குலத்தில் இருப்பது துன்பம். கற்றவன் மிகப்பெரிய சிறப்பு உடையவன் ஆக கருதப்பட்டுள்ளான். கற்றவன் அனைத்தும் அறிவான் என்றும், கற்றவன் சொல்லும் கல்வி இனிமையானது என்றும் சொல்லுகின்றது.

'கற்றறிந்தார் ஏத்தும் கல்விப் பொருள் இனிது'
(இனி:நா
32)

'கல்லார் உரைக்கும் கருமப் பொருளின்னா' (இன்:நா
15)

சிறந்த நூல்களை நாள்தோறும் கற்க வேண்டும்
'நாளும் நவை போகான் கற்றல் மிக வினிதே'
(இனி:நா
3)

கல்வி கண் போன்றது, பிச்சை எடுத்து ஆவது கல்வி கற்க வேண்டும். கல்வி அறிவு உடையோரிடமே கற்றல் வேண்டும். தினந்தோறும் சிறந்த நூல்களைக் கற்றல் வேண்டும் என்று 'கல்வி' குறித்த அறங்களைத் தருகின்றன.

அன்பு

அன்பு அகத்தில் இருந்து கொட்டும் அதிர்வு. உலகம் இயங்க உந்து சக்தியாய் இருப்பது அன்பு. 'தனிமனிதன் சமூகம், உலகம் அனைத்தும் அன்பில் பிணைப்பாய் கட்டுண்டுள்ளன. அகிலத்தின் அத்தியாவசியத் தேவையும் அன்பு மட்டுமே. வள்ளுவர்

'அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு'
(குறள்:
80)

உயிர் இயங்கும் வழியே அன்புதான் என்கிறார். அன்பு இயற்கையான உணர்வு, மனித இருதயத்தில் இயற்கையாகவே அன்பு உருவாகிறது என்கிறார் வள்ளுவர். மனித வாழ்வு 'அன்பையும் அறிவையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனிதன் பி;ற உயிர்களிடத்து காட்டும் பரிவே அன்பாகும். அன்பு எனும் மழையினால் தான் உயிர்கள் தழைக்கின்றன. இதன் அடிப்படையில் தான் மனிதநேயம் பிறக்கின்றது. 'அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை' (நெய்
16) என்கிறது கலித்தொகை.

'அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதாரோயே'
(கடுவன் இளவெயினனார்)

அன்பு சுயநலம் அற்றது. அறம், அருள் இவற்றின் அடிப்படை என்று 'சங்க இலக்கியங்கள்' கூறுகின்றன. அன்பு செய்வதில் ஆர்வமுடையவராய் இருத்தல் வேண்டும், அன்புடையாரிடம் தாம் உற்ற துன்பத்தை கூறுதல் துன்பமானது ஆகும்.


'ஆர்வம் உடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறால் கேட்டல் இனிது'
(இனி:நா
8)

குற்றம் இல்லாத அன்புடையவராக இருத்தல் வேண்டும். எதையும் ஒளிக்காத 'தூய்மையான' அன்பு மிக இனிது என்றும் கூறுகின்றன. 'பங்கமில் செய்கையராகிப் பரிந்து பார்க்கும்அன்புடைய ராதல் இனிது' (இனி:நா
9)

மேலும் தனிமனிதன் மட்;டும் அன்றி மன்னவனும் குடிகளிடத்து அன்பு கொண்டு ஆட்சி செலுத்த வேண்டும் என்கிறது. அன்புடையார் எல்லாம் உடையார், அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை பாலை நிலத்தில் பட்ட மரம் தளிர்த்ததைப் போன்றது என்றும,; அன்பின் உயர் நிலையைக் கூறியுள்ளார். இதனையே நாற்பதின ;இலக்கியங்கள் கூறியுள்ளன.

நட்பு

ஒருவர் ஒத்த உணர்ச்சியால் பிறரிடம் பழகும்முறை நட்பு. தூயஅன்பால் எதிர்ப்பார்ப்புகள் இன்றி பழகுதல் நட்பு. சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு நட்பு பற்றிய கருத்துக்கள் இலக்கியங்களில் பயின்று வருகின்றது. கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார். ஓளவையார்-அதியமான். இவர்களின் நட்பு நட்புக்கு இலக்கணம் வகுப்பதாய் இருந்துள்ளன. வள்ளுவர்

'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும்


ஓத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு உரிமையைக் கொடுக்கும் என்கிறார். 'முகம் மலர மட்டும் கொள்வது நட்பன்று, துன்பம் வந்த இடத்து களைவது நட்பு என்றும் நட்பு குறித்து வள்ளுவர் கூறுயுள்ளாh.; நாற்பது இலக்கியம் 'நட்பை' வரையறுக்கவில்லை, நட்பு செய்தல் குறித்தும் நண்பர்கள் குறித்தும் கூறுகின்றன. நட்பு கொண்டவர்க்கு விரும்பி நன்மையே செய்தல் வேண்டும், துன்பம் வந்த போது விடுதல் தவறு, வறுமையுற்ற காலத்தில் நட்பினைக் கைவிடுதல் கூடாது என்றும் கூறுகின்றன.

'நட்டார்க்கு நல்ல செயலினது' (இனி:நா
17)

'நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிதே' (இனி:நா
19)

'.............இன்னா கெடும்இடம் கைவிடுவர் நட்பு ' (இன்:நா
36)

நண்பர்கள்

நண்பர்களாக அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல் துன்பத்தையே தரும். ஒழுக்கமில்லாதவனின் நட்பு துன்பம் தான் என்ற சுயநலம் கொண்டவரின் நட்பு துன்பம்;; கள்ளமனம் உடையவரின் நட்பு துன்பம். வஞ்சனை சொற்களை கூறுவோரின் நட்பு துன்பம், நிறைவில்லாத பேராசை, மனம் கொண்டவரின் நட்பு பெருந்துன்பம் என்று மேற்கண்டவர்களிடம் நட்பு கொள்ளுதல் கூடாது என்கின்றன. 'ஓட்டாரை ஓட்டிக் கொளல் அதனின் முன்இனிதே' (இனி:நா
17) 'ஆங்கின்னா கள்ளமனத்தார் தொடர்பு' (இன்:நா 33) 'வன்சொல் கூறுவாரது நட்பு இன்னா' (இன்:நா 3-3) 'இன்னா மனம் நிறைவில்லாதவர் தொடர்பு' (இன்:நா 18). நண்பராக்கிக் கொண்டபின் புறங்கூறுதல் சிறந்த நட்பல்ல, பெரியவர்களின் நட்பை விடாமல் காப்பாற்றிக் கொள்ளுதல் வேண்டும் என்றும் கூறுகின்றன.

'நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே' (இனி:நா
19)

'பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னர்'
(இன்:நா
26)

வள்ளுவரும் தீநட்பு கூடா நட்பு என்ற அதிகாரங்களில் நண்பராக்கிக் கொள்ள வேண்டியவர் யார் என்றும் கூறியுள்ளார். 'நண்பரைக் காட்டு உன்னை பற்றி கூறுகின்றேன் என்ற 'சிந்தனையாளரின் மொழி குறிப்பிடத்தக்கது. நம் வாழ்க்கையை நேர்மறையாகவும் மறைமுகமாகவும் நண்பர்களால் மாற்ற முடியும். ஏனவே நண்பர்களின் தேர்விலும் உடன் இருத்தல் பற்றியும் நாற்பது இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன.

ஈகை

தமிழர்களின் அறங்களில் ஈகை என்பது தனிச்சிறப்புடையது. தமிழர்களின் அடையாளமாக உள்ள செயல்முறை. சங்க காலங்களில் கடையெழு வள்ளல்கள் வாழ்ந்திருந்தனர். ஆற்றுப்படை இலக்கியங்களும் இருந்தன. இவையாவும் தமிழர்களின் ஈகைச் சிறப்பை பறைசாட்டுகின்றன.

'செல்வத்துப் பயன்ஈதல்' என்றும்
'செல்வர்க்கு அழகு செழுங்கினை தாங்குதல்
(ஒளவையார்)

செல்வத்தின் பயனும், அழகும் பிறருக்கு கொடுப்பது தான் என்கிறார். ஈகை குறித்து நாற்பது இலக்கியங்கள் தன்னிடம் உள்ளவற்றை பிறருக்குத் தருதல.; ஈகையால் இருவரும் இன்பம் அடைய வேண்டும் என்கிறது. வள்ளுவர் உயிர்க்கு ஊதியம் ஈதலே; பிறர்க்கு உதவி செய்து வாழ்தலே வாழ்வின் பயன் என்கிறார். வருவாய் அறிந்து பிறர்க்கு உதவுதல் வேண்டும். தன்னிடம் பொருள் இல்லாதவன் பிறருக்கு உதவ எண்ணும் எண்ணமே தவறு ஆகும்.

'உடையான் வழக்கினது..........' (இனி.நா 2)

'வருவாய் அறிந்து வழங்கல் இனிதே'
(இனி.நா
22)

'பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னா' (இனி.நா
36)

'கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை இன்னா'
(இனி.நா
39)

சிறிய அளவாக இருந்தாலும் தான் பிறரிடம் யாசிக்கக்கூடாது. மேலும் நிறைவு பெறாத மனம் உடையவர்க்குக் கொடுத்தல் கூடாது. அது கொடுப்பவனுக்கும் துன்பத்தையே தரும் என்கிறது. பல ஊர்களுக்குச் சென்று இரவாது வாழ்தல் சிறப்பானது. ஆடம்பர வாழ்கைக்கு ஆசைப்பட்டு பிறர் கைப்பொருள் எண்ணி ஆசைப்படாது இருத்தல் நலம்; தடுமாறும் மனதை தற்காத்துக் கொள்ள வேண்டும் போன்ற ஈகை குறித்த அறங்களை நாற்பது இலக்கியங்கள் நவில்கின்றன.


முனைவர் செ.சரசுவதி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சத்தியமங்கலம்.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்