குறுந்தொகையில் உவமை நயம்

முனைவர் நிர்மலா மோகன்

“உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல்” (பேராசிரியம், தொல்காப்பியம்: பொருளதிகாரம், ப.57) என்பது பேராசிரியர் தரும் விளக்கம். “புலன் அல்லாதன புலனாதலும் அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலும்?” (இளம்பூரணம், தொல்காப்பியம்: பொருளதிகாரம், ப.395) உவமையின் பயன்கள் என்பர் இளம்பூரணர்.

உவமை என்பது பேசத் தெரிந்த சிறு குழந்தை முதல் மாபெருங் கவிஞர் வரை அனைவரும் பயன்படுத்துகின்ற ஒன்றாகும். ‘அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்கல்’ என்பது உவமைக்குச் சொல்லப்படும் இலக்கணம். கவிதையில் மட்டுமன்றி, அன்றாடப் பேச்சு வழக்கிலும் உவமையின் ஆட்சியைப் பரக்கக் காணலாம். வெயில் ‘நெருப்பாய்’ எரிக்கிறது. கல்லூரிக் கலை அரங்கிலே மாணவர்கள் ‘வெள்ளமாய்’க் கூடியிருக்கிறார்கள். கோபத்தால் ‘கொதிக்கிறார்’ ஒருவர்; அன்பு ‘சுரக்கிறது’ மற்றொருவருக்கு; ‘பொம்மை’ மாதிரி இருக்கிறார் இன்னொருவர்; பிறிதொருவருக்குச் சிந்தனை ‘உதயமாகிறது’. சிலர் சொற்பொழிவாற்றினால் காலம் ‘ஓடுகிறது’; பசி வயிற்றைக் ‘கிள்ளுகிறது’ – இவை போன்றவை நாம் நாள்தோறும் கேள்விப்-படுபவை; நமக்கு நன்கு அறிமுகமானவை.

கவிதையை அழகுபடுத்தும் முதல் அணி அல்லது தாயணி உவமையாகும். அது காலத்தால் மிகவும் முற்பட்டதாகும். தொல்காப்பியர் அணியியல் என்னாது ‘உவமவியல்’ எனத் தனி ஓர் இயலையே வகுத்துச் சென்றிருப்பது இவ்வகையில் நினைவு கூரத்தக்கதாககும்.

இனி ‘குறுந்தொகையில் உவமை நயம்’ குறித்துக் காண்போம் குறுந்தொகையில் அள்ளூர் நன்முல்லையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், பாலை பாடிய பெருங்கடுங்கோ ஆகியோர் பாடல்களில் இடம்பெற்றுள்ள உவமைகள் மட்டும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன. இம்மூவருள் முதல் இருவரும் பெண்பாற்புலவர்கள்; பின்னையவர் அரசப் புலவர்.

I. அள்ளூர் நன்முல்லையார்

அள்ளூர் நன்முல்லையார் பாடிய பாடல்கள்: குறுந்தொகையில் 9 (பா.32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237); அகநானூற்றில் 1 (46); புறநானூற்றில் 2 (306, 340). ‘பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன’ (அகநானூறு, 46) எனத் தம் ஊரை உவமைப்படுத்திய அன்பினர் இவர். “அள்ளூர் என்பது பாண்டிய நாட்டில் சிவகங்கைக்கு அருகில் உள்ள ஊர்” (குறுந்தொகை மூலமும் உரையும், ‘பாடினோர் வரலாறு’, ப.110) என்பர் உ.வே.சாமிநாதையர். இவர்தம் பெயரில் ‘முல்லை’ இருந்தாலும், இவரது பாடல்களில் முல்லைத் திணை இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது. மருதம் இல்லது பரத்தையிற் பிரிவு என்பது இவர் துறைபோய பொருள். இவரது குறுந்தொகைப் பாக்களில் 6 உவமைகள் இடம்பெற்றுள்ளன.

தலைவனது பிரிவை ஆற்றாத தலைவி ஒருத்தி, தோழியை நோக்கி, ‘பிரிந்து சென்ற தலைவர் நம்மை நினையாரோ, நினைப்பின் வந்திருப்-பாரன்றோ’ என்று வருந்திக் கூறுகிறாள். தலைவன் பிரிந்து சென்ற பாலை நிலத்தை வருணிக்கும் பொழுது அள்ளூர் நன்முல்லையார் ஓர் அருமையான உவமையினைக் கையாளுகின்றார். ஒரு கிளி, தன் வளைந்த அலகினிடத்திலே வேப்பம் பழத்தைக் கொண்டுள்ளது. இக்காட்சி, ஒரு பொற்கொல்லன் தன் கூரிய சிவந்த கைந்நகத்தில் கொண்டிருக்கும் ஒரு பொற்காசினைப் போன்று விளங்குகிறதாம் (பொற்கொல்லன் என்பதற்குப் பதிலாக, தலைவியின் கையில் உள்ள பொற்காசைப் போன்று விளங்குகின்றது என்று குறிப்பிடுவார் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார், குறுந்தொகை உரை, ப.98). ஈண்டு, கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள்.

“… கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்”   

                                                                            
(குறுந்தொகை,
67)

அள்ளூர் நன்முல்லையார் ஒரு பெண்பாற் புலவர் ஆகையால், எளிய வேப்பம் பழத்தைப் பார்க்கின்ற பொழுதும் அவருக்கு விலை உயர்ந்த, புத்தம் புதிய பொற்காசின் நினைவு வந்து விட்டது போலும்!

பாலை நிலைக் காட்சிகளைத் தீட்டும் போது நன்முல்லையார் கையாளும் இன்னும் சில உவமைகள் வருமாறு:

  • 1. காடைப் பறவையின் கால் போல் சிவந்த தாளை உடையது உளுந்து: ‘பூழ்க்கால் அன்ன செங்கால் உளுந்து’ (குறுந்தொகை, 68) – இது உரு  (வண்ண) உவமம்.
     

  • 2. கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடையது முதிய ஆண் ஓந்தி (ஓணான்): ‘வேதின வெரிநின் ஓதிமுது போத்து’ (குறுந்தொகை, 140) – இது மெய் (வடிவு) உவமம்.
     

  • 3. கடல் அலையைப் போலப் புலிகள் ஆரவாரிக்கின்றன: ‘மாக்கடல் திரையின் முழங்கி வலன்நேர்பு கோட்புலி வழங்குஞ் சோலை’ (குறுந்தொகை, 237) – இது வினை (செயல்) உவமம்.

‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்னும் உவமவியல் நூற்பா (8) விற்கு, ‘உவமானமும் பொருளும் தம்மில் ஒத்தன என்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும்’ (பேராசிரியம், ப.68) என விளக்கம் தருவார் பேராசிரியர். உலகத்தார் மகிழும் வகையில் உவமை கூறுவது எப்படி? அவரே அதற்கு இரு சான்றுகளையும் தருகிறார். ஒரு பெண்ணின் கூந்தலைப் பாராட்டும் போது ‘மயிற்றோகை போலுங் கூந்தல்’ எனலாம்; மாறாக, ‘காக்கைச் சிறகன்ன கருமயிர்’ என்று கூறக்கூடாது. பெண்ணின் செவ்விதழுக்குப் ‘பவளம் போன்ற இதழ்’ எனலாமேயன்றி, ‘சூளையிலே சட்ட செங்கல்லைப் போன்ற இதழ்’ எனக் கூறுதல் கூடாது. ஓர் இளைஞனின் செயல் திறனைப் போற்றும் போது ‘புலி போலப் பாய்ந்தான்’ என உவமை கூறலாமேயன்றி, ‘பூசை (பூனை) போலப் பாய்ந்தான்’ எனக் கூறக்கூடாது. இத் தொல்காப்பிய விதியின் அடிப்படையில் நன்முல்லையாரின் உவமைகளை எண்ணிப் பார்க்கும் பொழுது அவற்றின் பொருத்தமும் பொலிவும் புலனாகும்.

“குக்கூ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம்;
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே”    


                                                                       (குறுந்தொகை,
157)

என்பது மாதப் பூப்பு எய்திய ஒரு தலைமகள் உரைக்கும் பாட்டு. ‘நல்ல குறுந்தொகை’யில் இடம்பெறும் இப்பாடலைப் பாடியிருப்பவர் அள்ளூர் நன்முல்லையார். என்றும் தலைவனை ஆரத்தழுவி உடன்உறைய விரும்பும் ஒரு தலைவி, பள்ளியறையில் அவ்வாறு உடன் உறைந்திருக்கும் வேளையில் பூப்பு வந்துற்றது அறிந்து நெஞ்கம் கலங்குகிறாள். இவ் உடற்கூற்றால், தலைவனைச் சில நாள் பிரிய வேண்டுமே என்று வருந்துகிறாள்; பூப்பு நேர்ந்த வைகறைப் பொழுதினைத் ‘துண்டிக்கும் வாள்’ எனப் பழித்துரைக்கிறாள். ‘தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்’ என்ற அடைமொழியினால் பூப்பு வந்தபோது, இருவரும் இணைந்திருந்த நிலையினைச் சுட்டுகிறாள். ஒரு பெண்ணுக்கு உரிய வேட்கை மிகுதியும் நாண மிகுதியும் இப்பாட்டில் வெளிப்படுகின்றன.

‘அவையல் கிளவி மறைந்தனர் கிளத்தல்’ என்பது தொல்காப்பியம் கூறும் பேச்சு நாகரிகம். இத்தகு நயத்தகு நாகரிகம் இக்குறுந்தொகைத் தலைவிபால் காணப்படுகிறது. ஆதலின், அவள் தான் பூப்பு அடைந்ததை வெளிப்படையாகக் கூறாது தலைவனிடம் இருந்து தன்னைப் தனித்துப் பிரித்து வைக்கும் நாளினை ‘வாள்’ என்று சபிக்கின்றாள். பிரிக்கும் செயல் ஒற்றுமையால் வைகறைக்கு வாளை உவமை கூறியுள்ளார் புலவர். இது வினை உவமம்.

ஓர் ஆண்பாற் புலவரால் இத்தகையதொரு பெண் உள்ளத்தைச் சித்திரித்தல் இயலாது. “புலவர் எம்மாந்தைரையும் பாடலாம். தலைவன், தோழன் முதலான ஆண் மாந்தர்களை ஆண்பாற் புலவர் பாடும்போது ஆணுள்ளம் நன்கு வெளிப்படும் எனவும், தலைவி, தோழி, செவிலி முதலான பெண் கூற்றுக்களைப் பெண் புலவர்கள் பாடுங்கால் பெண் மனம் இயல்பாக விழும் எனவும் பொதுவாகக் கொள்வதில் தவறில்லை” (தமிழ்க் காதல், ப.324) என்னும் வ.சுப.மாணிக்கனாரின் கூற்று இங்கே நினையத்தகும்.

‘வாள் போல வைகறை வந்தன்றால்’ என்னும் அள்ளூர் நன்முல்லையாரது தலைவியின் கூற்றோடு ‘நாளென ஒன்று போல் காட்டி உயிர்ஈரும் வாள்அது உணர்வார்ப் பெறின்’ (குறள் 334) என்னும் வள்ளுவர் வாய்மொழி ஒப்புநோக்கத் தக்கதாகும்.

நெருஞ்சி மலர் காண்பதற்கு அழகுடையதாய் இன்பம் நல்கும். ஆனால், தொடும் போது அதன் முள் வருத்தும். இங்ஙனம் காணும்போது இன்பமும், தீண்டும் போது வருத்தமும் தரும் நெருஞ்சி மலரைப் போல, களவுக் காலத்தில் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனியவனாக இருந்த தலைவன், பின்னால் கற்புக் காலத்தில், தலைவியைப் பிரிந்து, பரத்தையை நாடிச் சென்று, தலைவிக்கு இன்னாதவன் ஆகின்றான். களவுக் காலத்தில், தலைவி பசிய வேப்பங்காயைக் கொடுத்தால் கூட ‘அருமையான வெல்லக் கட்டி’ என்று சொல்லிப் பாராட்டி உண்ட தலைவன், கற்புக் காலத்தில் அவள் பாரி மன்னனுடைய பறம்பு மலையினின்று தை மாதத்துக் குளிர்ந்த சுனை நீரைக் கொண்டு வந்து தரும்போது, ‘வெய்ய, உவர்க்கும்’ என்று பழித்துரைக்கின்றான் (குறுந்தொகை, 196). இங்ஙனம் தலைவனின் முரண்பட்ட – இன்னாத – பண்பு நலனுக்கு இனியதோர் உவமையை எடுத்துக்காட்டுகிறார் அள்ளூர் நன்முல்லையார்:

“நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்குஇன் புதுமலர் முட்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே”  


                                                                        (குறுந்தொகை,
202)

‘கட்கின் புதுமலர் முட்பயந்தாஅங்கு’ என்னும் இவ்வுவமையோடு Look like the innocent flower, but be the serpent under it’ என வரும் ஷேக்ஸ்பியரின் கருத்து ஒப்புநோக்கி மகிழத்தக்கது.

“உயர்ந்த கவிதைகளில் உவமைகளும் உருவகங்களும் புறத்தே நிற்பன அல்ல. அவையே கவிதையின் அகவுறுப்புகளாகி, கவிதையுடன் இரண்டறச் சேர்ந்து ஒன்றி நிற்கின்றன” (க.கைலாசபதி & இ.முருகையன், கவிதை நயம், ப.32) என்னும் அறிஞர் கூற்றிற்கு இலக்கியமாக நன்முல்லையாரின் இவ்விரு உவமைகளும் விளங்குகின்றன.

II. கச்சிப்பேட்டு நன்னாகையார்

கச்சிப்பேட்டு நன்னாகையார் சங்க காலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர். நன்னாகையார் என்ற பெயரிலும் சங்க காலத்தில் ஒரு பெண்பாற் புலவர் இருந்தமையை அறிய முடிகிறது. கச்சிப்பேட்டு நன்னாகையாரது 6 பாடல்கள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன (30, 172, 180, 192, 197, 287). அவரது பாடல்களில் இடம்பெற்றுள்ள உவமையின் எண்ணிக்கையும் ஆறு.

‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல, கச்சிப்பேட்டு நன்னாகையாரின் உவமைத் திறனுக்குக் கட்டியம் கூறும் ஒரு பாடலை முதற்கண் காண்போம். தலைவன் பிரிந்த காலத்து ‘தலைவர் நம்மைத் துறந்தார்; இனி வாரார்’ என்று வருந்திய ஒரு தலைவியை நோக்கி, ‘இதோ கார்ப் பருவம் வந்தது; இனி அவர் பிரிந்திரார்; வருவார்’ என்று தோழி ஆற்றுவிக்கின்றாள். அவளது ஆறுதல் மொழி இதோ:

“அம்ம வாழி தோழி! காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ?
முந்நாள் திங்கள் நிறைபொறுத்து அசை
,

ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்ற நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே” 


                                                                        (குறுந்தொகை,
287)

புளிப்புச் சுவையிலே விருப்பம் கொள்ளும் சூலுற்ற மகளிர், தாம் ஏற்ற கருவைப் பன்னிரு திங்கள் சுமந்து காக்கின்றனவாம் மேகங்கள். மேலும், பன்னிரு திங்கள் தாங்குவது போலக் கடலில் முகந்த நீரைக் கருக்கொண்டு, பன்னிரு திங்கள் பொறுத்த பொறையினை அக்கால முடிவில் பொழிந்து கரு உயிர்க்கின்றனவாம். சூல் கொண்ட மேகங்கள் தம் சுமை மிகுதியால் விண்ணகப் பரப்பிலே ஏற மாட்டாமல், அண்மையிலுள்ள குன்றம் நோக்கிச் செல்-கின்றனவாம்; இத்துணைச் செய்திகளையும் ஒரே பாடலில் அடக்கிக் கூறுகிறார் நன்னாகையார்.

‘முந்நால் திங்கள் நிறை பொறுத்து, அசை, ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல’ என்பது இப்பாடலில் வரும் அரிய, நுண்ணிய உவமை. மகளிர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருத்தலும் உண்டு. ‘பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப்பாங்கினால்’ என்பது பெரியாழ்வார் திருமொழி (3:2:8). சூலுற்ற மகளிரின் தளர்ச்சியையும், நடக்கமாட்டாத நடையினையும் ‘அசை, ஒதுங்கல் செல்லா’ என்னும் தொடரால் குறிக்கின்றார் புலவர். கருப்பையில் குடியிருக்கும் உயிருக்காக எந்தத் துன்பத்தையும் – தளர்ச்சியையும் – பொறுமையோடு தாங்கிக் கொள்வது பெண்ணின் இயல்பு. பெண்ணின் பெருமை இந்தப் பொறுமையில் தான் பொன் போல் சுடர்விட்டு நிற்கும். இதனை ‘நிறை பொறுத்து’ எனச் சுட்டுகின்றார் புலவர். சூலுற்ற பெண் களுக்குப் புளிப்புச் சுவையில் உள்ள பெருவிருப்பத்தினைப் ‘பசும்புளி வேட்கை’ என்னுந் தொடரால் பெற வைக்கின்றார் புலவர். பன்னிரண்டு திங்கள் சூல் தாங்குவதால், அதனைக் ‘கடுஞ்சூல்’ எனக் குறிக்கின்றார் புலவர்.

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் கூறுவது போல், “ஒரு புலவனுடைய சிறப்பை அறிவதற்கு அவன் கையாளும் உவமை ஒன்றே போதுமானது எனலாம். அன்றாடம் நூற்றுக்கணக்கான பொருள்களை நம் போன்றவர்கள்  காண்கின்றோம். ஆனால் இப்பொருள்களினிடையே காணப்பெறும் ஒப்புமை உண்மை நமக்கு விளங்குவதில்லை. இன்னும் பல சமயங்களில் புறத்தே காணப்படும் ஒப்புமை மனத்திற்படுகிறதே தவிர, ஆழ்ந்துள்ள ஒப்புமை நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. தொடர்பற்ற பொருள்களினிடையே கூடச் சிறந்த கவிஞன் ஒப்புமையைக் காண்கின்றான்; நம்மையும் காணுமாறு செய்கின்றான். நாம் கண்டும் காணாத பொருள்களை விளக்க உதவுவதுடன், அடிக்கடி காணும் பொருள்களின் தனிச்சிறப்பை விளங்கிக் கொள்ளவும் உவமையைப் புலவன் கையாள்கின்றான். ஆகவேதான் அவனுடைய புலமைச் சிறப்பு இதன் மூலம் வெளிப்படுகிறது என்று சொல்கிறோம்” (இன்றும் இனியும், ப.30). கச்சிப்பேட்டு நன்னாகையாரின் புலமைச் சிறப்பினை அறிவதற்கு இவ்வுவமை ஒன்றே போதுமானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

குறுந்தொகை 180-ஆவது பாடலில் வரும் பிறிதொரு உவமையும் இவண் குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கு, யானையின் கால் நகத்திற்குப் பேயின் பல்லை உவமையாகக் கூறுகிறார் புலவர்: ‘பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாஅடி இருங்களிறு’ (குறுந்தொகை, 180). நன்னாகையார் கையாண்டுள்ள இன்னும் சில உவமைகள் வருமாறு: பிரிவாற்றாமையால் வருந்தி மெலியும் தலைவிக்கு வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலர் ஒரு பாடலில் உவமையாகக் கூறப்பட்டுள்ளது (குறுந்தொகை, 30). பிறிதொரு பாடலில் வரும் தலைவியின் நெஞ்சம் வருந்தும் வருத்தம், ஓர் ஊரில் அமைத்த துருத்தி (கொல்லனுடைய உலைக் களத்தில் உள்ள துருத்தி), ஏழு ஊர்களின் பொது வேலைகளை ஏற்று வருந்துவது போல் அளவற்றதாக உள்ளதாம் (குறுந்தொகை, 172). கரிய குயிலின் இறகுகளில், இளவேனில் பருவத்து மாம்பூவின் தாதுக்கள் படிந்து மின்னுவது, பொன்னை உரைத்துப் பார்க்கின்ற பொற்கொல்லனது கரிய கட்டளைக் கல்லைப் போன்று காட்சியளிக்கின்றதாம் (குறுந்தொகை, 192) ஈண்டு மாம்பூவின் தாதுக்குப் பொற் பொடியும், குயிலுக்குக் கட்டளைக் கல்லும் உவமைகள் ஆகும்.

III. பாலை பாடிய பெருங்கடுங்கோ

பெருங்கடுங்கோ சேர அரச பரம்பரையினருள் ஒருவர். அவர் பாலைத் திணையைப் பலபடப் பல தொகை நூல்களில் சிறப்பித்துப் பாடியிருப்பதால் ‘பாலை பாடிய’ என்ற அடை மொழியைப் பெற்றார். “சோலையைப் பாடிய பிற புலவரைப் போலாது, பாலையைப் பாடத் துணிந்த இவர்தம் மனத்திட்பம் பாராட்டத்தக்கது” (குறுந்தொகைத் திறனாய்வு, ப.47) என்பர் அறிஞர் சோ.ந.கந்தசாமி. அவருடைய பாடல்களின் சொல் நயமும், பொருள் நயமும் படிப்பாரைப் பிணிப்பனவாய் அமைந்திருக்கும். இடையிடையே வாழ்வியல் அறங்களை அழகுற அமைத்துப் பாடுவது அவர்தம் சிறப்பியல்பு. அவர் குறுந்தொகையில் 10 பாடல்களையும், நற்றிணையில் 10 பாடல்களையும், புறநானூற்றில் ஒரு பாடலையும், அகநானூற்றில் 12 பாடல்களையும், பாலைக் கலியையும் (35 பாடல்கள்) இயற்றியுள்ளார் (மொத்தம் 68). அவருடைய குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள உவமைகள் ஏழு ஆகும்.

செவிப் புலன் மிக நுட்பமானது. அதன் வாயிலாகக் கேட்டுணரும் ஒலிகளுள் ஒப்புமை உடையவற்றை உணர்ந்து உவமைப்படுத்துதல் பெருங்-கடுங்கோவின் சிறப்பியல்பாக உள்ளது. பாலை வழியில், ஒரு பல்லி கள்ளி மரத்திலிருந்து ஒலிக்கின்றது. அந்த ஒலி, தன் துணையை அழைக்கும் மென்மையான ஒலி. பாலை வழியில் கானவர் தம் இரும்பு அம்புகளைத் தீட்டி நகத்தின் முனையில் புரட்டிப் பார்க்கிறார்கள். அப்போது எழும் ஓசை போலவே அந்தப் பல்லியின் ஒலி கேட்கிறது. ‘இவ் ஒலியினைக் கேட்டு, தலைவன் உன்னை நினைந்து மீண்டு வருவான்’ என்று கூறித் தலைவியை ஆற்றுவிக்கின்றாள் தோழி.

“உள்ளார் கொல்லோ தோழி! கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அம்கால் கள்ளியங் காடுஇறந் தோரே”   


                                                                      (குறுந்தொகை,
16)

இவ்வாறு தோழி குறிப்பிடுவதில் ஓர் இறைச்சிப் பொருள் – குறிப்புப் பொருள் – இடம்பெற்றுள்ளது. கொடிய பாலையிலும் இனிய அன்பினை நினைவுபடுத்தும் வகையில் ஆண் பல்லி தன் துணையை அழைக்கிறது. இதனைச் செவியுறும் தலைவன் தலைவியைக் காண விரைந்து வருதல் உறுதி. இங்ஙனம் பெருங்கடுங்கோவின் பாடலில் வரும் தோழி.

“அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டலும்
வன்புறை யாகும் வருந்திய பொழுதே”

                                                  (தொல்காப்பியம், பொருளியல், நூ.231)

என்னும் தொல்காப்பிய விதிக்கு ஏற்ப, தலைவிக்கு ஆறுதல் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய அன்புக் காட்சி ஒன்றினையே பிறிதொரு குறுந்தொகைப் பாடலிலும் (37) பெருங்கடுங்கோ காட்டுகின்றார். ’தலைவர் மிக்க அன்புடையவர்; அவர் சென்ற பாலை நிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும் காட்சியைக் கண்டு நின்னைப் பாதுகாக்கும் தம் கடமையை எண்ணி விரைவில் மீள்வர்’ என்று கூறித் தோழி தலைவியை ஆற்று-விக்கின்றாள்.

“நசைபெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழிஅவர் சென்ற ஆறே”    


                                                                                (குறுந்தொகை,
37)

இப்பாடலில் பெண் யானையின் பசியைப் போக்குவதற்குக் களிறு யா மரத்தின் பட்டையை உரித்துக் கொடுக்கும் அன்புக் காட்சியைக் காட்டுகிறார் பெருங்கடுங்கோ. இப்பாடலில் இறைச்சிப் பொருள் இடம்பெற்றுள்ளதாக நச்சினார்க்கினியர் பொருளியல் உரையில் எடுத்துரைத்துள்ளார். இறைச்சி என்ற சொல்லிற்குக் கருப்பொருள், நேயம் என்று இரு பொருள்கள் உண்டு. ‘பயணம் போகும் பாதையில் காணப்படும் கருப்பொருள்களாகிய பறவை, விலங்கு, ஊர்வனவற்றின் அன்புக் காட்சி தலைவனுக்குத் தலைவியின் அன்பினை நினைவூட்டும்’ என்ற குறிப்புப் பொருள் பயப்பதே இறைச்சி எனப்படும். இங்கு, பிடியின் பசி போக்கப் பெருங்கை வேழம் யாமரத்தின் சினைகளை ஒடிக்கும். இத்தகைய வழியில் சென்ற தலைவனுக்கு அறிவிற் குறைந்த இவ்விலங்கின் அன்புப் பெருக்கினை எண்ணுந்தொறும் தலைவியின் நீங்கா நினைவும் நிலையான பாசமும் தோன்றச் செய்யும்.

‘பாலை பாடிய’ என்னும் சிறப்பு அடைமொழிக்கு ஏற்ப, பெருங்-கடுங்கோவின் பாடல்களில் பாலைத் திணைச் செய்திகள் பல உவமை வடிவில் இடம்பெற்றிருக்கக் காண்கிறோம். ஒரு பாடலில் பசுமையின்றி, பொலிவு அழிந்து நிற்கும் ஓமை மரங்களை உடைய பாலை நிலத்திற்கு, குடிமக்கள் இன்றி, வறியனவாய்ப் பொலிவிழந்து, சிதைந்து கிடக்கும் வீடுகளை உடைய ஊர் உவமையாகக் காட்டப்படுகின்றது: ‘ஊர் பாழ்த்தன்ன ஓமையம் பெருங்காடு’ (குறுந்தொகை, 124). யானையினது அடிச்சுவட்டின்கண் தங்கிய நீர், கரும்பின் பாத்தியில் உள்ள நீரைப் போன்றது: ‘கரும்பு நடு பாத்தியன்ன, பெருங்களிற்று அடிவழி நிலைஇய நீரே’ (குறுந்தொகை, 262). கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய ஆறலை கள்வருக்குக் கூற்றுவன் உவமையாகக் கூறப்படுகின்றான்: ‘கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்’ (குறுந்தொகை, 283).

முடிவுரை:

இங்ஙனம் ‘உவமை என்னும் தவலருங் கூத்தி, பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து, பொலிவுற்றிருக்கும் காட்சி’யினைக் குறுந்தொகையில் பரக்கக் காண்கிறோம். “உவமையின் நயம், சங்க நூல்களைப் போலப் பிற்கால நூற்களில் காணல் இயலாது” (குறுந்தொகை மூலமும் உரையும், ‘நூலாராய்ச்சி’, ப.90) என்னும் பதிப்பு வேந்தர் உ.வே.சாமிநாதையரின் கூற்றுக்கு ஏற்பக் குறுந்தொகையில் நயமான உவமைகள் மலிந்து காணப்படுகின்றன எனலாம். “சங்கப் புலவர் காணும் உவமைகள், பொருளோடு ஒத்த தன்மையால் நெருக்கம் உடையனவாய் நின்று, உணர்வுக்கு இன்பஞ் செய்வனவாம்” (உரைநடைக் கோவை, இரண்டாம் பகுதி, இலக்கியக் கட்டுரைகள், ப.101) என்னும் பண்டிதமணி மு.கதிரேசனாரின் கருத்தும் ஈண்டு மனங்கொளத் தக்கதாகும்.


குறுந்தொகையில் உவமை நயம்
முனைவர் நிர்மலா மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்இ திண்டுக்கல்.

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்