கவிஞர் புவியரசு கவிதைகளில் சமூகமும்
இயற்கையும்
முனைவர் பூ.மு.அன்புசிவா
வாழ்க்கை
என்பது இயற்கையோடு இயைந்தது. உலக உயிர்கள் அனைத்தும் இயற்கையின்
இயல்பான வெளிப்பாடுகளாகும். அறிவாலும், அன்பாலும் அமைத்துக்கொண்ட ஒரு
கூட்டுறவு அமைப்பே மானுட வாழ்க்கையாகும். வாழ்க்கையின் இயக்க வெளிப்பாடே
இலக்கியம் ஆகும், படிப்போர்க்கு இன்பம் தரும் வகையில் நுண்ணறிவு
வாய்ந்த அறிஞர்கள் தம் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் முறைப்படுத்தி
எழுதுவது இலக்கியம் ஆகும். படைப்பாளி தன்னை உணர்ச்சி வயப்படுத்திய
பொருளை, நிகழ்வை அதே உணர்வோடு நமக்குக் காட்டும் வடிவமே இலக்கியம் ஆகும்.
காலத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்கும் இலக்கியம் காலந்தோறும் புதிய
கருத்துக்களைப் பெற்று, புதிய வடிவங்களை ஏற்று காலத்திற்கேற்ப
மாற்றங்களைப் பெற்று வளர்ந்து வந்துள்ளது. இலக்கிய வடிவமும்,
பாடுபொருளும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. தமிழ் தன் நிலைப்
பேற்றினை புதுப்புது வடிவங்களில் நிலைநிறுத்திக் கொள்கிறது.
அவ்விலக்கிய வகைகளில் புதுக்கவிதையும் ஒன்று. தொல்காப்பியர் இதனை,
'விருந்தேதானும் புதுவது புனைந்த
யாப்பின் மேற்றே'
(தொல் - செய். நூற்பா- 231)
என்கிறார் தொல்காப்பியர்.
கவிதை என்பது கவிஞரின் உணர்ச்சி வெளிப்பாடு. இக்கவிதை மனித வாழ்க்கையின்
வெளிப்பாட்டினை, சமூகத்தின் சிக்கல்களை ஆழமாகக் காட்டும் கண்ணாடியாகவும்
விளங்கி வருகிறது. கவிஞர் புவியரசு தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த
நன்முத்தாக காட்சியளிப்பவர். தான் சார்ந்த சமூகத்தை மேம்படுத்துவதிலும்,
நெறிபடுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர். அவர் எழுதிய கையொப்பம்
என்னும் கவிதைத் தொகுப்பின் மூலமாக புலப்படும் சமூகவியல் சிக்கல்களை
ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காலநிலை மாற்றங்கள் அன்றாடம் புதுப்புது விளைவுகளை ஏற்படுத்தும்
இம்மாற்றங்களால் மக்கள்படும் இன்னல்கள் நாம் அறிந்ததே. புது கவிதையின்
வாயிலாக சமூக மாற்றங்களை எடுத்துக் கூறுவதே இத்தலைப்பின் நோக்கமாகும்.
நேர்மையும் சத்தியமும் மிக்க கவிஞனுக்கு அவனுடைய ஒவ்வொரு கவிதையும் தானே
உண்மையான கையொப்பம்.
'கவிஞர் புவியரசுவின் கையொப்பங்களை இந்தத்தொகுப்பிலும் இடையுறாத
சத்தியத் தேடலின் தொடர்ச்சியாக காண முடிகிறது' என்கிறார் சிற்பி. (கையொப்பம்.
முன்னுரை ப -15)
இயற்கை என்பது இம்மண்ணின் கொடை. மனிதன் கூடிவாழ இயற்கையே துணை செய்கிறது.
அத்தகைய இயற்கையை இன்று பலரும் பல விதங்களில் சுரண்டி வருகின்றனர். இதன்
காரணமாக இயற்கையின் பல மாற்றங்களுக்குக் காரணம், இயற்கை வளங்கள் கொள்ளை
போவதே என்பதைக் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்.
'இது மண்சாலை அன்று
ஒரு காலத்தில்
நிரோடிக் கொண்டருந்த
உனது நதி
நீ
அமெரிக்காவுக்கு
சம்பாதிக்கப் போயிருந்தபோது
விற்றுவிட்டார்கள்' (ப-41)
நாட்டின் இயற்கைச் செல்வங்கள் யாவும் கொள்ளை போவதால்
இருக்கிறவற்றையேனும் ஒரு வரலாற்றுப் பதிவுக்காகப் படம் பிடித்து
வைத்துக் கொள்ளச் சொல்கிறார் கவிஞர். நாட்டில் உள்ள இயற்கை வளங்கள்
அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன. விவசாய விளை நிலங்கள் அனைத்தும்
பெரியவீடுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவருகின்றன. அடியோடு
அழிந்து வருகின்றது. இந்திய அறிஞர்கள் உலகமயமாதல் குறித்து
குமுறுகிறார்கள். இந்தக் குமறலே கவிதையின் பாடுபொருளாகிறது. எனவே நம்
நாட்டின் இயற்கை மண் வளங்களைக் காப்பதே நமது நாட்டிற்கும் வீட்டிற்கும்
மனித குலத்துக்கும் மண் மீது உள்ள உயிர்களுக்கும் நலம் பயப்பதாக அமையும்.
சமுதாயத்தில் அமைதி என்ற ஒன்று இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில்
ஆங்காங்கே கொலை, கொள்ளை போன்றவை நடந்து வருகின்றன. இதைத்தான் கவிஞர்
'இந்தியாவின்
மொத்தகடுகையும்
பெரியண்ணன் வாங்கிச் சென்றுவிட்டான.;
வரப்போகும்
ஈரான் போரில்
தாளிப்பதற்காக' (ப-48)
என்றவாறு குறிப்பிடுகிறார். நாட்டில் தீவிரவாதம் அதிகரித்துக்
கொண்டிருக்கும் வேலையில் கார்கில் போர் மற்றும் காஷ்மீரில் படுகொலைகள்
நடந்துக் கொண்டிருக்கின்றன. நாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தால்
தவறுகள் மற்றும் தீவிரவாதம் குறையும் என்பது இக்கவிதையின்
உட்கருத்தாகும். இதனை புறநானூறு,
'யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தரவாரா'
(புறம்-192)
என்கிறது.
எல்லோர்க்கும் எல்லா ஊரும் சொந்த ஊரெ என்னும் போக்கு சமுதாயத்தில் சாதி,
மத, இனம், மொழி என்னும் வகையால் நம் நாடு ஒன்றுபட்டு வாழவேண்டும்,
என்பதை வலியுறுத்துகிறது. அப்படி வாழ்ந்தால் சமுதாயத்தில் அமைதி தானாக
வந்துவிடும். அமைதி இருந்தால் தான் மகிழ்ச்சி தோன்றும்.
நம் நாட்டில் கேள்வி கேட்பதற்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால் பதில்
கூறுவதற்குத் தான் ஆள் இல்லை. இதனை,
'கையில்
அரிவாளைத் தூக்கிக் கொண்டு
ஆட்டம் போட்டது கேள்வி'
'நெடுநேரம் கழித்து
மெல்லமேலே எழுந்தது
பதில்
கையில் ஓர் அரிவாளுடன்!' (ப-57)
சமுதாயத்தில் ஒவ்வொரு வரும் கேள்வி கேட்க வேண்டும். சமூகத்தில் அநீதி
அவலங்கள் சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை போன்றவற்றை எதிர்த்து நீதிக்குரல்
கொடுத்து கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் நாடும் வீடும்
செழிப்படையும். தண்ணீர் அடுத்த உலகப்போரே தண்ணீருக்காகத்தான் ஏற்படும்
என்கிறார் வைரமுத்து. சமுதாயத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது
விவசாயம் பொய்த்துப் போய் விவசாயிகள் தற்கொலைச் செய்துக் கொள்ளும் அவலம்
ஏற்பட்டுவருவதை கீழ்வரும் கவிதைவரிகள் உணர்த்துகின்றன.
'வானம் பார்த்து
வறண்டு கிடந்தது அந்தக்குளம்
பாளம் பாளமாய்
வெடித்தது பிளந்த நெஞ்சுடன்' (ப-146)
மழை இல்லாமல் பூமியில் உள்ள குளம், குட்டை எல்லாம் வறண்டு கிடக்கிறது.
இக்காட்சியை காணும் போது மழை எப்போ வரும் என்று பூமி ஏங்கு விதமாக
உள்ளது. மேலும் நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துச்
சொல்கிறார். மக்கள் அன்றாடம் தோன்றும் காட்சிகளாய் அன்று தோன்றும்
பிரச்சனைகளை அன்றே முடிக்க பார்க்கிறார்கள். ஆனால் அதற்கு நிரந்தறத்
தீர்வுகளுக்கு பதில் இல்லை என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்.
மறதி என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பது. மறதி இருந்தால் தான்
அடுத்ததை பற்றி சிந்திக்க முடியும். எனவே மறதி மனிதனுக்கு இறைவன்
அளித்த வரமாகக் கொள்ளலாம். இதனை,
'ஒருவகையில்
மறதி வசதியானதுதான்
வாங்கிய கடனையும்
மறக்கநேர்ந்தால்' (ப-154)
சமுகத்தில் அனைவரும் ஏதாவது ஒரு கடனில் மூழ்கியுள்ளனர். அதிலிருந்து
வெளிப்படும் வழி தெரியாமல் அல்லல் பட்டுவருகின்றனர். இத்தன்மையை
ஆசிரியர் அழகாக புலப்படுத்தியுள்ளதன் மூலம் ஒவ்வொருவரும் தன்
வருமானத்தைப் பெருக்கி அளவோடும் வளத்தோடும் வாழவேண்டும் என்பதே
ஆசிரியரின் ஆவலாக உள்ளது.
மனிதம் இன்றைய நிலையில் இயந்திரத்தனமாக மாறிவிட்டான். எதையும் நின்று
நிதானித்து செயல்படும் முறை இல்லை. மதங்கள் போதித்ததையும் மேதைகள்
போதித்ததையும் மறந்து திரிகிறான். இதன் காரணமாக சமூக கட்டமைப்பு இன்று
கேள்விக்குள்ளாகிறது. சகமனிதனை மதிக்கும் தன்மை இல்லை. சுயம் பெருகி
சுயமிழந்து நிற்கும் நிலை உருவாகிவிட்டது. இதன் எதிர்காலம் மிகப்பெரிய
அச்சத்தைத் தரவல்லது. இதனை கவிஞர்,
'நான் அவரைச் சாப்பிட்டேன்
நன்றாக மென்று தின்றுதான்' (ப-54)
என்று விளக்குகிறார்.
மனிதன் சகமனிதனிடத்துக் காட்டும் அன்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ள
வேண்டும். நாகரிக வளர்ச்சி என்பது இயந்திரத்தனமானது அன்றும் என்றும்
எத்தகையச் சூழலிலும் தன் குண இயல்புகளை மாற்றிக் கொள்ளாமல்
சகமனிதர்களிடமும் அன்பு கொண்டவர்களாகவும் உறுதிக் கொண்டவனாகவும் திகழும்
போது அவன் மனிதன் ஆகிறான். அதனால் அவன் புனிதம் அடைகின்றான்
மனிதனது வாழ்க்கை ஒரு சக்கரம். அவனது வாழ்க்கை காலத்தைக் காட்டும்
கண்ணாடியாகிறது. கடிகாரமும் ஓடுகிறது அவனும் ஓடுகிறான். ஏதற்காக
ஓடுகிறான்? ஒருசான் வயிற்று பிழைப்புக்காகதான். அவன் கடைசியில் ஓய்வு
எடுப்பது அவன் மரணத்தில் தான் என்பதை உணர்த்துகிறது. இக்கவிதை,
'கடிகாரத்தில்
காலம் இருப்பதாகத்தான்
நினைக்கிறார்கள்
எல்லாரும்
பாவம்,அது
நேரம் காலம் இல்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது' (ப -58)
மனிதன் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். 'காலத்தே பயிர்செய்'
என்பார்கள் காலமும் நேரமும் ஒரு மனிதனுக்கு மிகமுக்கியமான ஒன்றாகும்.
இதனை திருக்குறள்,
'காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்' (குறள்-485)
இலக்கை அடைய வேண்டி விரும்புபவர் அதை நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்க
மாட்டார்கள். அத்தகைய இலக்கை அடையத் தக்ககாலத்தை எதிர் நோக்கிக்
காத்திருப்பார்கள். உழைப்பு என்பது காலம் நேரம் பார்க்காமல் உழைக்க
வேண்டும். அவ்வாறு உழைக்க மனிதன் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சமுதாயத்தில் உழைக்கும் மனிதர்கள் நம் நாட்டில் இருந்தால் நம்
நாடு ஒரு வல்லரசாக மாறும், என்பது என் கருத்து.
நீ எதை புதைத்தாலும் நான் மீண்டும் மீண்டும் முளைத்து வெளியே வருவேன்.
என் சமுதாயத்தில் குப்பைகளை புதைக்க வேண்டும். நல்ல எண்ணங்களை
ஊக்குவிக்க வேண்டும். வெளிக்கொனற வேண்டும்.
'நீ புதை
நான் தோன்றுகி;றேன்
எவ்வளவுகாலம் தான்
புதைத்துக் கொண்டே இருப்பாய்?
நீ இருப்பதைப் புதைக்கிறாய்
எனக் கானாததைப் புதைக்கிறாய்
நீதான் களைத்துப் போவாய்' (ப-109)
என் அறிவை, என் சிந்தனையை, என் எண்ணங்களை புதைத்தாலும் நான்
விஸ்வரூபமாக வெளியே கொண்டு வருவேன். கடைசியில் நீதான் கலைத்து போவாய்
சமுதாயத்தில் நல்ல மனிதத்தன்மை உடைய (குணமுடைய) மனிதர்களை காண்பது
அரிதாக உள்ளது. இவ்வாறு புதைப்பவர் தான் அதிகமாக இருக்கிறார்கள். இதனை
வள்ளுவர்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொருத்தல் தலை' (குறள் -151)
தன்னை தோண்டுபவரைக் கூட கீழே தள்ளாமல் தாங்கிக் கொண்டிருக்கிற நிலம்
போலத் தம்மைப் பழிப்பாரையும் மன்னித்தலே நல்லது. சமுதாயத்தில் தீய
எண்ணங்களை புதைத்தல் வேண்டும். நல்ல சிந்தனைகள் புதிது புதிதாகத் தோன்ற
வேண்டும்.
மெழுகுவர்த்தி எவ்வாறு தன்னை உருக்கி உலகிற்கு வெளிச்சத்தை தருகிறதோ
அதுபோல் சமுதாயத்தில் வாழும் மனிதன் தன்னை உருக்கி உலகத்திற்கு
வெளிச்சத்தைக் காட்ட வேண்டும்.
'மெழுகுவர்த்தி வாங்கி வை!
இருபத்தோராம் நூற்றாண்டிலும்
விளக்கணையும்' (ப- 145)
வாழ்க்கையில் எதிர்பாராதது எந்தநேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். மனிதன்
எப்பொழுதும் எதற்கும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை
இழந்தும் ஒளிதரும் மெழுகை போல, மனிதன் மற்றவர்களுக்குப் பயன்படும்
போதுதான் முழுமையாகிறான,; என மனிதனின் முழுமைக்குச் சான்று
தந்திருக்கிறார்.
நாடு செழிக்க வேண்டுமானால் நல்லெண்ணம் வளர வேண்டும். உதவும் மனப்பான்மை
இருக்கவேண்டும். நற்சிந்தனைகள் தோன்ற வேண்டும். எல்லோரும்
மெழுகுவர்த்திகளாய் திகழ வேண்டும். நல்ல சமுதாயம் உருவாக சாதி, குலம்,
இனம். மொழி, நாடு என்ற பேதம் இல்லாமல் வாழ வேண்டும். நல்ல சமுதாயத்தை
உருவாக்க வேண்டும் என்பது புலனாகிறது.
தொகுப்புரை:
-
இக்கட்டுரையின் வாயிலாக கவிஞர்
புவியரசுவின் கவிதைகளில் இயற்கை, விவசாயம், தண்ணீர் பிரச்சனைகளை
எடுத்துக் கூறியுள்ளார். மற்றும் தீவிரவாதத்தைப் பற்றியும்
சமுதாயத்தில் நடக்கும் அவலத்தை பற்றியும் அதை கலைந்து தீர்வுகாணும்
நோக்கில் எடுத்துக் கூறியுள்ளார்.ஒருமனிதன் இந்த சமுதாயத்தில்
நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்கும் மனிதனாக இருக்க வேண்டும்.
-
ஒரு மெழுகுவர்த்தி போன்று செயல்பட
வேண்டும், என்ற கருத்தினை நூல் முழுவதும் ஆங்காங்கே கூறிச்
செல்கிறார். தான் வாழ்ந்த காலத்தன் சமூக சூழல்களை, எடுத்துக் காட்டி
இனி வாழப்போகும் சமுகத்திற்கான அடுத்தக்கட்ட தேடல் எது என்பதையும்
ஆசிரியர் சுட்டிச் செல்வது அவரது இலக்கை வலியுறுத்துவதாக அமைகிறது.
முனைவர்
பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,கோயம்புத்தூர் - 641 035
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|