பாரதியாரின் வழியில் பாட்டுத் திறத்தால் வையகத்தைப் பாலித்திடும் கவிஞர் ப.தர்மராஜ்

முனைவர் இரா.மோகன்

“நான் இளவயது மாணவனாக இருந்த காலத்திலேயே கவிதை புனையும் திறனைப் பெற்றிருந்தேன். எழுதித் தயார் செய்யும் பழக்கம் இல்லாமலேயே மேடையில் பேசுகின்ற ஆற்றலும் பெற்றிருந்தேன். பள்ளி, கல்லூரிகளில் நான் ஒரு பேச்சாளனாகவும் கவிஞனாகவும் அங்கீகரிக்கப்பட்டேன். இறுதியாண்டு முடிந்து பயணிக்கும் பொழுது எழுதும் ஆட்டோகிராபில் கவிதையாலேயே கருத்தினைச் சொல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்” (‘என்னுரை’, உலகெலாம் உணர்ந்து, ப.13) என்னும் தாமரைக்குளம் ப.தர்மராஜின் தன்னிலை விளக்கம், கவிதைக் கலையிலும் பேச்சுக் கலையிலும் இளமைப் பருவத்தில் இருந்தே அவர் பெற்றிருந்த தனித்திறனையும் தணியாத ஆர்வத்தையும் தெற்றெனப் புலப்படுத்துவதாகும். பின்னாளில் அவர் முதன்-முதலாகப் பணி ஏற்ற பெருகவாழ்ந்தான் கிராமமும், பணி நிமித்தம் அவர் சென்ற மும்பை மாநகரின் இலக்கிய அமைப்புக்களும் அவரது படைப்-புள்ளத்தில் கவிதைப் பயிர் செழித்து வளர்வதற்கான அடியுரமாக அமைந்தன. ‘காலம் வரும்-என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்’ என்னும் கவியரசர் கண்ணதாசனின் அனுபவ மொழிக்கு ஏற்ப, பணிநிறைவு பெற்று மணிவிழாக் கண்ட தருணத்தில் காலம் தாமரைக்குளம் ப.தர்மராஜை ஒரு கவிதைத் தொகுப்பின் ஆசிரியராக உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. அரசுடைமை ஆக்கப்பெற்ற வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக மட்டும் இதுவரை அறியப் பெற்றிருந்த ப.தர்மராஜ், இப்போது ‘உலகெலாம் உணர்ந்து’ என்னும் அழகிய பெயரினைத் தாங்கிய தொகுப்பின் மூலம் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் கூறுவது போல், “அவர் (ப.தர்மராஜ்) தம் பாட்டு வங்கியில் போட்டு வைத்திருந்த கவிதைகளே இன்று வட்டியும் முதலுமாக இந்நூலாய் வளர்ந்திருக்கின்றன” எனலாம்.

‘உறவுகள்’, ‘மழலை’, ‘இயற்கை’, ‘சமூகம்’ என்னும் நான்கு பெரும் பிரிவுகளில்
114 கவிதைகள் இந் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நீதியரசர் கே.ரவிராஜபாண்டியனின் அணிந்துரையும், கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனின் வாழ்த்துரையும், இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மை.அப்துல் சலாமின் பாராட்டுரையும் தோரண வாயில்களாக அமைந்து நூலுக்கு வளமும் வனப்பும் சேர்த்துள்ளன. இனி, ஒரு பறவைப் பார்வையில் தாமரைக்குளம் ப.தர்மராஜின் கவிதை உலகின் நோக்கும் போக்கும் குறித்துக் காணலாம்.

கவிஞரின் ஆழ்ந்த தமிழ்ப் பற்றும் அகன்ற தமிழ்ப் புலமையும்

‘தமிழே நீ வாழி!’ என்பது தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் முதல் கவிதை; கவிஞரின் ஆழ்ந்த தமிழ்ப் பற்றினையும் அகன்ற தமிழ்ப் புலமையினையும் பறைசாற்றும் அருமையான கவிதையும் கூட. இதன் தொடக்கத்தில்,

“என்னை இந்தப் பூமிக்கு எடுத்துவந்த
       என்னுயிரே செந்தமிழே வாழி! வாழி!
உன்னை எந்தன் சிந்தையிலே அமரச்செய்து
       புதுநூல்கள் நான் படைக்க அருள்வாய் நீயே!”


என அன்னைத் தமிழிடம் உளமுருகி வேண்டுகோள் விடுக்கும் கவிஞர்,

“பிறப்பாலோ குமரி; வளர்ப்பாலோ வேந்தன்மடி;
       சிறப்பாலோ உலகமொழி; சிரித்தாலோ மழலைமொழி;
கருத்தெல்லாம் உருக்கொண்டு கடைசியிலே கணினிமொழி;
        உனக்குநிகர் உலகினிலே யாதுமொழி? ஏதுமிலை!”


எனப் பிறப்பு, வளர்ப்பு, சிறப்பு என்னும் மூன்று கோணங்களில் தமிழ்மொழியின் தனித்தன்மைகளை எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது. கவிஞரின் கண்ணோட்டத்தில் உலக மொழியாக உயர்ந்து விளங்குவதோடு மட்டும் அல்லாமல், கணினி மொழியாகவும் துலங்குவது தமிழ்மொழிக்கு வாய்த்த ஒரு தனிப்பெரும் சிறப்பு ஆகும். மேலும் முண்டாசுக் கவிஞர் பாரதியார் தொடங்கி தெய்வப் புலவர் சேக்கிழார் வரையிலான தமிழ்க் கவிஞர் பெரு-மக்களையும், வளையாபதி முதலாக ஆற்றுப்படை முடிய உள்ள முத்திரை பதித்த தமிழ் நூல்களையும் உரிய வகையில் பதிவு செய்திருப்பது இக் கவிதையில் காணலாகும் பிறிதொரு சிறப்புப் பண்பாகும்.


உலகளாவிய சிந்தனை


இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த அமெரிக்க அரசியல் அறிஞர் வெண்டல் வில்கி “வருங்காலத்தில் நம் சிந்தனை உலகாங்குப் பரந்திருத்தல் வேண்டும்”
(In future, our thinking must be world-wide; மேற்கோள்: தனிநாயக அடிகள், தமிழ்த் தூது, ப.31) என மொழிந்தார். நம் பழந்தமிழ்ச் சான்றோர்களோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகளாவிய, பரந்துபட்ட சிந்தனை கைவரப் பெற்றவர்களாக விளங்கினர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’, ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே’ (புறநானூறு, 192; 206, 207) என்னும் சங்கச் சான்றோரின் வாக்குகள் இவ் வகையில் மனங்கொளத் தக்கன. ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன், சாந்துணையும் கல்லாத வாறு?’ (397) எனக் கல்வியின் மேன்மையைப் பறைசாற்றினார் வள்ளுவர் பெருமான். ‘அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி, பகவன் முதற்றே உலகு’ (1) என ‘உலகு’ என்னும் சொல்லுடன் நிறைவு பெற்றது முதல் குறட்பா. ‘உலகம் யாவையும்’ எனக் கவிப்பேரரசர் கம்பரும், ‘உலகெலாம் உணர்ந்து’ எனத் தெய்வப் புலவர் சேக்கிழாரும் தத்தம் காப்பியங்களைத் தொடங்கி இருப்பது மனங்கொளத்- தக்கது. இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் தலைமகனான பாரதியாரும் ‘வள்ளுவன் தன்னே உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாடித் தமது உலகளாவிய பார்வையைப் புலப்படுத்தினார்.

இங்ஙனம் வாழையடி வாழை என வந்த தமிழ்க் கவிஞர் திருக்கூட்டம் உலகளாவிய, பரந்துபட்ட சிந்தனைக்குச் சொந்தம் கொண்டாடியது. இவ் வரிசையில் கவிஞர் தாமரைக்குளம் ப.தர்மராஜும் இணைந்து தம் தொகுப்பிற்கு ‘உலகெலாம் உணர்ந்து’ என்னும் சேக்கிழாரின் அழகுத் தொடரைத் தலைப்பாகச் சூட்டி இருப்பது போற்றத்தக்கது. ‘உலகெலாம் உணர்ந்து’ என்னும் தலைப்பில் படைத்துள்ள கவிதையில் ப.தர்மராஜ் உலகம் இன்பம் விளையும் தோட்டமாக ஆவதற்கான
36 விழுமிய கருத்தியல்களை நிரந்தினது கூறியுள்ளார். அவற்றுள்ள இன்றியமையாத சில வருமாறு:

“உலகெலாம் அமைதி மேவி
        உயரேநீ பறக்க வேண்டும்!...
பாரிலுள்ள மக்கள் எல்லாம்
       ஓரினமாய்த் தோன்ற வேண்டும்!

பசியில்லாப் புதுவுலகம்
       படைத்திடவே நினைக்க வேண்டும்!
படைப்பெல்லாம் மக்களுக்கு
        பங்காகிச் சேர வேண்டும்!...

கல்வியினில் நீ திறந்து
        கணிப்பொறிக்குள் நுழைய வேண்டும்!...
சொல்லெல்லாம் செயலாக்கும்
        சூத்திரங்கள் படைக்க வேண்டும்!

நாமிருக்கும் பூமிதனை
       வளம் கொழிக்க வைக்க வேண்டும்!...
நல்லதையே இலக்காய் வைத்து
        விஞ்ஞானம் வளர வேண்டும்!

நாளமிலாச் சுரப்பி நீர்போல்
        நன்னெறிகள் பரவ வேண்டும்…
கூட்டுக் குடும்ப வாழ்வு
       குடும்பத்தில் நிலைக்க வேண்டும்!

பண்பாட்டு நெறிகளுக்கு
        பாரதத்தின் தலைமை வேண்டும்!
பன்னாட்டு நூல்கள் யாவும்
        செம்மொழியில் பெயர்த்தல் வேண்டும்!...

நாளையது நமதே என்று
          நாடெல்லாம் முழங்க வேண்டும்!...
நீதிமன்றம் மக்களையே
          நெறிப்படுத்த மட்டும் வேண்டும்!

மாந்தரெலாம் உழவை ஏற்று
         மாநிலத்தைப் போற்ற வேண்டும்!
ஆண்டான் அடிமையற்ற
         ஆட்சியே அமைய வேண்டும்!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
         தாரக மந்திரம் தரணிக்கு வேண்டும்!...
உலகம் நிலைபெற உழைப்பே வேண்டும்
         உழைப்பவர் உயர்வே உலகுக்கு வேண்டும்!”
(பக்.
104-106)

கவிஞர் இங்கே முன்மொழிந்துள்ள உயரிய கனவுகள் யாவும் நடைமுறைக்கு வந்தால், ‘எல்லோரும் எல்லாமும் பெற்று, இங்கு இல்லாமை இல்லாத இன்ப நிலை உருவாகும்’ என்பது நெற்றித் திலகம்.

கவிஞர் போற்றும் பெண் உறவுகள்

உறவுகளைப் பொறுத்த வரையில் ஆண் உறவுகளை விடப் பெண் உறவுகளே கவிஞரின் உள்ளத்தில் தனி இடம் பெற்றுள்ளன; ‘அம்மா நீ’, ‘மகள்’, ‘சகோதரி’ என்னும் தலைப்புக்களில் கவிஞர் படைத்துள்ள கவிதைகள் இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

‘அம்மா நீ’ என்ற கவிதையில் கவிஞரின் மொழி ஆளுமை சுடர் விட்டு நிற்கக் காண்கிறோம். ‘வரமாகி நின்ற வரம்’, ‘துணையாகி நின்ற துணை’, ‘உயிராக நின்ற உயிர்’, ‘உருவாக்கித் தந்த உரு’, ‘போதித்த போதி மரம்’, ‘அறம் காட்டி நின்ற அறம்’, ‘வளம் தந்து நின்ற வளம்’, ‘விளக்கேற்றி வைத்த விளக்கு’, ‘பசியோடு உறவாடும் பசி’, ‘கண்ணீரில் குளித்து நின்ற கண்’, ‘உறவுக்கு உறவான உறவு’, ‘மெய்ப்பித்து நின்ற மெய்’ (ப.
22) என்னும் நெஞ்சை அள்ளும் பொருள் பொதிந்த தொடர்களால் அன்னையின் தனிப்பெருங் கருணைக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் கவிஞர்.

‘மகள்’ என்ற கவிதையில்,

“பெண்ணே பிறந்த தென்று
        பேதவித்த காலம் மாறி
பெண்ணே தான்வேண்டும் என்று
        பெருமை பொங்கும் காலம்இது!”


என இன்றைய கால மாற்றத்தைச் சுட்டிக்காட்டும் கவிஞர்,

“உள்ளத்தில் அனைவர்க்கும்
இன்பம் பொங்க வேண்டும் எனில்
பிள்ளைபேதம் பார்க்க வேண்டாம்
பெண்பிள்ளை ஆண்பிள்ளை இரண்டும் ஒன்றே”
(பக்.
25-26)

என இன்பம் தருவதில் பெண் பிள்ளையும் ஆண் பிள்ளையும் சரி நிகர் சமானமே என அறிவுறுத்துவது கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.

“எம் வீட்டில் எல்லாமே அவள் தந்தாள்,
மணம் முடித்துச் செல்கையிலே கண்ணீர் தந்தாள்”
(ப
.25)

என இக் கவிதையின் இடையே இடம் பெற்றிருக்கும் வரிகள் உயிர்ப்பும் உருக்கமும் மிக்கவை.

‘சகோதரி’ என்னும் கவிதையில், ‘தங்கையவள் எப்போதும் தங்கக் கம்பி, … அண்ணன் அவன் வாழ்வில் அவள் ஆதாரம்தான்’ என்று தங்கையையும், ‘என்பாலே உயிரை வைத்தாள் எனது அக்காள்… என் வாழ்வு அமையத்தான் எல்லாம் செய்தாள்’ (ப.48) என்று அக்காவையும் போற்றிப் பாடியுள்ளார் கவிஞர்.

இளமையின் துடிப்பும் முதுமையின் தவிப்பும்

கவிஞர் தாமரைக்குளம் ப.தர்மராஜின் படைப்பாளுமையில் காணப்படும் ஒரு தனிச் சிறப்பு இளமையின் துடிப்பையும் முதுமையின் தவிப்பையும் ஒரு சேர உருக்கமாகப் பதிவு செய்திருப்பது ஆகும்.

“தண்ணீரால் விளக்கெரித்தார் வள்ளலாரும் – நானும்
      கண்ணீரால் விளக்கெரித்தால் வருவாயோ நீ?
பன்னீரில் உனைநானும் குளிப்பாட்டித் தான் – உன்
       பாதமதே வாழ்வதுவாய் பணிவேன் யானே!”
(ப
.32)

எனத் ‘தாவணியே தா உனையே!’ என்னும் கவிதையில் இளைய தலை-முறையினரின் நெஞ்சில் கொலுவிருக்கும் மலரினும் மெல்லிய காதல் உணர்வினைச் சித்திரிக்கும் கவிஞர் தர்மராஜ்,

“பெத்த புள்ள பார்க்குமுனு
ஒத்தப் புள்ள பெத்திருந்தேன்!
பெத்த புள்ள இப்ப என்னை
பேதலிக்க வைத்தானே!
இல்லம் ஒண்ணு வாங்கத் தானே
எல்லாத்தையும் வித்து வந்தேன் – முதியோர்
இல்லம் தன்னில் என்னைச் சேர்த்து
முழிக்க வச்சுப் போயிட்டானே!”
(ப
.33)

என ‘முதியோர் இல்லம்’ என்னும் கவிதையில் கவலைகளைச் சுமந்து வரும் முதிய தலைமுறையினரின் உள்ளக் குமுறல்களையும் சொற்களில் வடிக்கத் தவறவில்லை.

“ஒத்தைப் பிள்ளை பெத்தவுக
       உங்களுக்கு சொல்லுகிறேன்:
தொத்தப் பிள்ளை ஆனாலும்
       துணைக்கு ஒண்ணு பெத்திடுங்க.
ஒண்ணு ஏனோ உங்களையும்
       தள்ளி வச்சுப் பார்த்தாலும்
மத்த ஒண்ணு பாத்திடுங்க
       மானிடரே கேட்டிடுங்க!”
(ப
.34)

என்பது இக் கவிதையின் முடிவில் கவிஞர் மனித குலத்திற்கு அறிவுறுத்தும் இன்றியமையாத அனுபவ மொழி ஆகும்.

மரணத்தின் மெய்ப்பொருளை உணர்த்தல்

தாமரைக்குளம் தர்மராஜின் படைப்புத் திறத்தைக் கண்டுகொள்ள அவரது ‘மரணம்’ என்ற ஒரு கவிதையே போதுமானது ஆகும். ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (355; 423) என்னும் வள்ளுவர் வாக்கோடு ஒரு சொல்லினைச் சேர்த்து, ‘மரணத்தின் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என நாம் மொழியலாம்.

“தூங்கியவன் எழுந்து நின்றால் துயில்;
மறந்து விட்டால் மரணம்!
தூங்குதலோ வாழ்வின் இடைச் சாக்காடு;
சாதலதோ ஆழ்ந்து விட்ட தூக்கம்!”


என்னும் மரணம் பற்றிய தெளிவான புரிதலோடு தொடங்குகின்றது அந்தக் கவிதை.

“உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”
(
339)

என்னும் திருக்குறளின் ‘நிலையாமை’ அதிகாரக் குறட்பா இங்கே ஒப்புநோக்கத் தக்கது.
நாடாளும் மன்னனாக இருந்தாலும் சரி, நலிவுற்று வறுமைக் கோட்டிற்குக் கீழே நடைப்பிணமாய் நாளைக் கழித்து வரும் ஏழையாக இருந்தாலும் சரி – வித்தை பல கற்றவனாக இருந்தாலும் சரி, வேடிக்கை மனிதனாக இருந்தாலும் சரி – சொத்து கோடி சேர்த்தவனும் சரி, அன்றாடங்-காய்ச்சியும் சரி – ஒருநாள் சாவது என்பது உறுதி; கவிஞரின் சொற்களில் குறிப்பிடுவது என்றால், ‘விதி வசமோ மதி வசமோ எது வசமோ, கதி மனிதனுக்கு இறுதியிலே சாவின் வசம்தான்! சேருமிடம் யாவருக்கும் ஆறே அடிதான்!’ ஆனால் ஒன்று மட்டும் உண்மை:

“ சாவதற்குப் பயந்திருப்பான் தினமும் சாவான்;
சாவதனை நினையாதான் தினமும் வாழ்வான்!”


‘பிறந்த உடல் ஒருநாள் மரிக்கும்; பெற்ற புகழ் ஒன்று மட்டும் நிலைக்கும்’ என்கிறார் கவிஞர். இன்னமும் கூர்மையான மொழியில்,

“செத்துவனை நினைத்து நின்றால் தெய்வம்;
சாகலையே எனப் பழித்தால் சாபம்!”


எனக் குறிப்பிடுகின்றார் கவிஞர்.

மனிதன் செத்த பிறகும் நிலைத்து நிற்பவை உயிர் வாழ்ந்த போது அவன் ஆற்றிய நல்ல செயல்கள்தான்; அவற்றால் அவன் ஈட்டிய புகழ்தான். ஆடையின்றிப் பிறந்து வந்த மனிதன், ஆசை கூட்டி அகிலத்தையே ஆள விழைகிறான்; இவ்வுலக வாழ்வு எனும் மேடைதனில் ஆட வந்த அவன், ஏனோ வேடமது முடிந்து விட்டால் விரைந்து சென்றுவிட வேண்டும் என்பதை உணராமல் இருக்கிறான்; ‘உடல் கூடத் தனக்குச் சொந்தம் இல்லை’ என்னும் உண்மையினை உணராமல் ஓட்டமாக ஓடிய வண்ணமே இருக்கிறான்.

“நாடு காக்க நீ நினைத்து எதுவும் செய்தால்
நலமுடனே நிலைத்திருப்பாய் நாட்டோர் நெஞ்சில்!”


என மனிதன் நாட்டினர் நெஞ்சில் நிலைத்து வாழ்வதற்கான வழிமுறையினை எடுத்துரைக்கின்றார் கவிஞர். முத்தாய்ப்பாக,

“மரணத்தை வெல்வதாகக் கூறி நின்றோர்
       மரணத்தோடு இயைந்து விட்டார் மரணமாகி;
மரணத்திற்கு மட்டும்தான் மரணம் இல்லை
       மனம் ஏற்பாய் மானுடனே! மரணம் வெல்லும்!”
(பக்
.131-132)

எனக் கவிதையின் முடிவில் மானுடன் மனம் கொள்ள வேண்டிய மாபெரும் வாழ்வியல் உண்மையை உணர்த்துகின்றார் கவிஞர்.

உடலுக்கு நலம் பயக்கும் எட்டுக் கட்டளைகள்


‘தேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு’ என்பார் கவியரசர் கண்ணதாசன். தாமரைக்குளம் ப.தர்மராஜோ ஹீலர் பாஸ்கரனின் கருத்துக்களின் அடிப்படையில் மனித குலத்திற்கு எட்டுக் கட்டளைகளை வகுத்துக் கூறுகின்றார்; ‘கட்டளை எட்டு களிப்புடன் பற்று, கவலைகள் இல்லை மகிழ்ந்து நில்லு’ எனவும் அறுதியிட்டு உரைக்கின்றார். கவிஞரின் சொற்களில் உடலுக்கு நலம் பயக்கும் அந்த எட்டுக் கட்டளைகள் வருமாறு.
 

  • 1. பசித்தால் மட்டுமெ உண்ணுதல் என்னும் பழக்கத்தினை வழக்கப்-படுத்திக் கொள்ளல்.
     

  • 2. மாதங்கள் மூன்றாய் கணக்கினில் வைத்து பேதிக்கு மருந்தை அருந்தல்.
     

  • 3. புசிக்கும் உணவினை வாயினுள் மூடி பொடியாய் அரைத்து விழுங்கி விடல்.
     

  • 4. இடைக்கு இடையில் பேசுதலைத் தவிர்த்து எண்ணத்தை முழுவதுமாக உணவினில் மூழ்க விடுதல்.
     

  • 5. உணவுக்கு முன்னும் இடையிலும் பின்னும் நீரினை அருந்தலைத் தள்ளி விடல்.
     

  • 6. அளவுக்கு மேலே ஆசையாய் உண்டு விட்டு அதனால் விளையும் அவதியைத் தவிர்த்தல்.
     

  • 7. உணவினில் வெள்ளைச் சர்க்கரை விடுத்து கருப்பட்டி, வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளல்.
     

  • 8. சின்னத் திரையினைப் பார்த்தவாறே சாப்பிடுவதைத் தவிர்த்தல். (ப.158)


‘படைத்தவனும் இங்கே பிறந்து துடிக்கணும்!’


“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்”
(
1062)

எனப் படைத்தவனுக்கே சாபம் இடுவார் வள்ளுவர் பெருமான்.

“இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?”


என வினவுவார் ‘மக்கள் கவிஞர்’ ப(h)ட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவ்விருவரையும் அடியொற்றி, ‘ஏழையை ஏன் படைத்தானோ?’ என்ற கவிதையைப் படைத்துள்ளார் தாமரைக்குளம் ப.தர்மராஜ். அதில் அவர் பெற்றவர்களாலும் கட்டிய கணவனாலும் சாதி ஜனங்களாலும் ஒதுக்கி வைக்கப் பெற்று வயிற்றுப் பசியின் கொடுமை தாங்காது பரிதவித்து நிற்கும் ஓர் ஏழைப் பெண்ணின் துயரினைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

“ஏழையென்று ஓர் இனத்தை
       ஏன் படைத்தானோ? இறைவன்
ஏங்கிநின்று அழுவோர் காண
       ஏங்கி நின்றானோ?
பாவியவன் படைக்கும் தொழில்
        மறந்து தொலைக்கணும் – செய்த
பாவத்திற்கு அவனும் இங்கே
        பிறந்து துடிக்கணும்!”
(ப.
180)

‘படைப்பவனே ஆனாலும் ஏழையாய்ப் பிறந்து ஏங்கித் தவித்து வறுமைக் கொடுமையை அனுபவித்துப் பார்த்தால் தான் ஏழையின் துயரத்தினை அவனால் உள்ளபடி உணர முடியும்; ஏழை என்று உலகில் ஓர் இனத்தைப் படைத்த பாவத்திற்காகப் படைத்தவனும் இங்கே ஏழையாய்ப் பிறந்து வறுமைத் துயரை அனுபவித்துத் துடிப்பதுதான் சரியான மாற்றாக இருக்கும்!’ என்கிறார் கவிஞர்.

கவிமணியின் இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்த கவிதைகள்

பேராசிரியர் மை.அப்துல் சலாம் குறிப்பிடுவது போல், “உணர்ச்சிப் பேரலையில் சிக்கி, அனுபவக் கரையேறி, இன்பம் பெற்ற படைப்புதான் ‘உலகெலாம் உணர்ந்து’ என்ற கவிதைத் தொகுதி நூல்” (‘பாராட்டுரை’, ப
.8).

“தோள் கொடுத்து நிற்கும் நண்பன் தோழன் ஆவான்
              உடை அவிழ்ந்தால் கைபோலே உதவி நிற்பான்”
(ப.
23)

எனத் திருக்குறட் கருத்தினைச் சாறுபிழிந்து தரும் போதும்,

“சொட்டுத் தேன் ஆனவளே!
             சுட்டுவிழி தாராயோ!”
(ப.
45)

எனச் ‘சின்னவிழிச் சூரிய’னான காதலியிடம் கெஞ்சி நிற்கும் போதும்,

“கண்ணாலே ஓவியத்தைக்
              காட்டுகிறாய் மோனலிசா”
(ப
.51)

எனத் தமது பெயர்த்தி முகிழ் வெண்பாவிற்குத் தாலாட்டுப் பாடும் போதும்,

“முக்கனியின் மூத்த மகன்
       நீயும் அல்லவோ?
மாங்கனியும் வாழையதும்
       உனது தங்கையோ?”
(ப.
72)

எனப் பலாப் பழத்தின் பெருமையைப் பேசும் போதும்,

“உலகெலாம் போற்றும் உத்தம புத்திரன்
            அப்துல் கலாம் தோன்றி அடங்கிய பூமி”
(ப.
89)

என முகவை மாவட்டத்தின் மாண்பினை மொழிந்திடும் போதும்,

“இந்தியர்கள் என்று சொல்ல
             இவ்வுலகே விழைய வேண்டும்”
(ப.99)

எனப் பெருமிதம் ததும்ப முழங்கும் போதும்,

“சின்னச்சாமி அய்யர் பெற்ற சிவப்புச் சூரியனே!
               சாதிக்கு நீ கொடுத்த சாட்டையடி சரித்திரம் தான்!”
(ப.
102)

எனப் பாரதியாரின் பாட்டுத் திறத்திற்குப் புகழாரம் சூட்டும் போதும்,

“கூடிவாழும் வாழ்க்கைதனை ஓடிவந்து பாருங்கள்
மனிதப் புறாக்களாய் நீங்கள் மாறுவது எப்போது?”
(ப
.111)

எனப் பாரதிதாசனின் அடிச்சுவட்டில் மணிப்புறாக்களை வைத்து மனித குலத்திற்கு வாழ்க்கைப் பாடத்தினை வலியுறுத்தும் போதும்,

“தேடியெங்கும் அலைதல் விட்டு சிந்தையினைச் சும்மா வைத்தால்
            வந்தவனும் சிந்தைநின்று – கண் மறைக்க கடவுள் கண்டேன்!”
(ப.
119)

எனத் தத்துவச் சிந்தனையை முத்திரை மொழியில் உரைத்திடும் போதும்,

“தலைவரவர் சிலவருடம் பதவி ஆளணும் - அடுத்த
              தலைமுறைக்குக் கொடுத்துவிட்டு காவல் காக்கணும்!”
(ப.
127)

என உண்மையான தலைவருக்கான தகுதிப்பாடுகளை வகுத்துக் கூறிடும் போதும்,

“நேரம் தனை நொடியாக்கிப் போராடு
நீள்புகழும் உனை நோக்கும் சீரோடு!”
(ப.
138)

என இளைய தலைமுறையின் நெஞ்ச வயலில் தன்னம்பிக்கையை விதைத்திடும் போதும்,

“கணவன் மனைவிக்குள்ளே பேச்சு - தினம்
         கைபேசி, சீரியலால் போச்சு!”
(ப.
149)

என நகைச்சுவை உணர்வோடு இன்றைய நடப்பியலைப் பாடும் போதும் ‘உள்ளத்தில் உள்ளது கவிதை – இன்பம் உருவெடுப்பது கவிதை, தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை தெரிந்து உரைப்பது கவிதை’ எனக் கவிமணி கவிதைக்குக் கூறிய இலக்கணம் உயிர் பெற்ற இலக்கியமாகக் களிநடம் புரிந்து நிற்கக் காண்கிறோம்.

‘பாலித்திடு வையகத்தை!’

‘ஈன்று புறந் தருதல் என்தலைக் கடனே’
(312) என்னும் சங்கச் சான்றோர் பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடலை நினைவுபடுத்தும் வகையில் ‘கடமை’ என்னும் தலைப்பில் ப.தர்மராஜ் ஒரு நல்ல கவிதை படைத்துள்ளார். அதில்,


“ஆசிரியர் பணிக்கு வந்தால் ஆயிரம் பேருக்கு ஏணி!
       நீதிபதியாகி நின்றால் நிமிர்ந்து நிற்கும் செங்கோல் தானே!
பா புனைவோன் நீயே என்றால் பாலித்திடு வையகத்தை!
       ஏருழவன் நீதான் என்றால் விரட்டியடி பஞ்சம்தன்னை!
கோமானாய்ச் சூடிநின்றால் குவலயத்தைக் காத்து நிற்க
        குறைகளினைப் பொசுக்குதற்கு குற்றங்கள் தடுத்து நில்லு!
அரசுப்பணி ஆகிடினும் அரசியல்வாதி ஆனாலும்
        கறைபடியாக் கரத்தான்ஆகி காத்தல்தானே உன் கடமை?”
(ப.
120)

என நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய தலையாய பணிகளை எடுத்துரைத்துள்ளார். இங்ஙனம் உலகிற்கு உரைப்பதோடு நில்லாமல், கவிஞராகத் தமது கரத்தில் எழுதுகோலை ஏந்தியுள்ள ப.தர்மராஜ், ‘உலகெலாம் உணர்ந்து’ என்னும் தொகுப்பின் வாயிலாகப் பாரதியாரின் வழியில் தமது பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலித்திடும் பணியைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளார் எனலாம்.

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.
 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்