விருதுபட்டியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை!

பேராசிரியர் இரா.மோகன்

பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள்: 15.07.2017

காமராசரின் வாழ்வு படிப்படியான முன்னேற்றங்களைத் கண்டது. 1920-ஆம் ஆண்டு தமது 16-ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆன காமராசர், வாழ்வில் பல்வேறு விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு மொத்தம் 3000 நாட்கள் சிறைக்காற்றைச் சுவாசித்தார் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. எட்டுப் பேர் கொண்ட சிறிய அமைச்சரவையை அமைத்து ஒன்பது ஆண்டுக் காலம் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பில் இருந்தது, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இரு முறை பதவியில் வீற்றிருந்தது, மதிய உணவுத் திட்டம், சீருடைத் திட்டம் முதலான பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது, 'மூத்த தலைவர்கள் அனைவரும் தத்தம் பதவிகளைத் துறந்து கட்சி நலனுக்காகப் பாடுபடவேண்டும் என்று தாம் முன்மொழிந்த திட்டத்தின் படி முதற்கண் தமது முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தது என்றாற் போல் தமது வாழ்நாளில் காமராசர் செய்து காட்டிய தனிப்பெருஞ் சாதனைகள் பலவாகும்.

'இந்தியாவின் தென்கிழக்கு முனையில் உள்ள விருதுப்பட்டிக்கும் இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் சாலைக்கும் மிக நீண்ட தூரம். மிகக் குறைவான கல்வியறிவு பெற்றவரும் ஒரு துணிக்கடையில் விற்பனையாளராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கியவருமான ஒருவருக்கு இத்தனை தூரம் மேலும் அதிகமாகும். இந்தத் தூரத்தைக் கடந்து ஜந்தர் மந்தரை அடைவதற்கு அவருக்கு ஏறத்தாழ நாற்பது ஆண்டுக் காலம் ஆயிற்று' என ஒரு பத்திரிகை காமராசருக்குப் புகழாரம் சூட்டியது.

'ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையை எப்படி 'மர வீட்டில் இருந்து வெள்ளை மாளிகை வரை'
(From Log Cabin to White House)  என்று அழைத்தார்களோ, அதே போல காமராஜரின் அரசியல் பயணத்தையும் 'விருதுபட்டியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை' From Virudhupatti to Janthar Manthar) என்ற அழைத்தார்கள்' என ஏ.கோபண்ணா 'காமராஜ் ஆட்சி' என்னும் நூலில் குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு உண்மை.

'ஆகட்டும் பார்க்கலாம்!'

வியாபாரத்தின் போது வாடிக்கையாளர் யாராவது வந்து ஏதேனும் ஒரு பொருளை இருக்கிறதா என்று கேட்டால், அப்பொருள் தம்மிடம் இல்லாத நிலையிலும், 'இல்லை' என்று கூற மாட்டார்கள். 'உப்பு இருக்கிறதா?' என்று கேட்டால், 'பருப்பு இருக்கிறது' என்பார்கள். அவ்வாறே யாராவது வந்து எதனையாவது 'வேண்டுமா?' என்று கேட்டால் 'வேண்டாம்!' என்று பதில் வராது. 'வேண்டாம்' என்றிருந்தால் 'பார்க்கலாம்' என்பார்கள். இந்தப் பரம்பரைப் பண்பு தான் காமராசர் பெரிய அரசியல் தலைவர் ஆன பின்னரும் அவரது ஆளுமையில் படிந்திருந்தது. எதனையும் முடியாது என ஒரு போதும் சொல்ல மாட்டார் அவர். 'ஆகட்டும் பார்க்கலாம்!' என்பார். 'இல்லை', 'வேண்டாம்', 'முடியாது' என்ற எதிர்மறைச் சொற்கள் ஒருகாலும் அவரிடம் இருந்து வராது.

கல்விக் கண் திறந்த வள்ளல்

'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றார் திருமூலர்; காமராசரோ இன்னும் ஒரு படி மேலாக, தாம் பெறாத இன்பத்தையும் இவ்வையகம் பெறுவதற்காக அரும்பாடு பட்டார்; இளமையில் தமக்குக் கிடைக்காத கல்வியறிவை வரும் தலைமுறையினர் எல்லோரும் பெற வேண்டும் என அரிதின் முயன்றார். ஆறு வயதிலேயே தந்தையை இழந்த நிலையில் காமராசர் ஆறாவது வகுப்பிற்கு மேல் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர் ஆனார். இதனை ஈடு செய்யும் விதத்தில் அவர் தமது ஆட்சிக் காலத்தில் அனைவர்க்கும் கல்வி வழங்குதல் என்பதை ஒரு சபதம் போலவே ஏற்றார். அவர் காலத்தில் மட்டும் தமிழகத்தில் தோன்றிய பள்ளிகளின் எண்ணிக்கை 6000. இலவசக் கல்வித் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டன. கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுவது போல், 'தடுக்கி விழுந்தால் தொடக்கப் பள்ளி, ஓடி விழுந்தால் உயர்நிலைப் பள்ளி என்கிற நல்ல நிலை காமராசர் காலத்தில் உருவானது.'

'... அன்ன யாவினும் புண்ணியம்
ஆங்குஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'


என்ற மகாகவி பாரதியாரின் வைர வரிகளுக்குச் செயல் வடிவம் தந்தவர் காமராசர் எனலாம்.


'அரசர்களை உருவாக்குபவர்!'



1964 மே 27-இல் பாரதப் பிரதமர் நேரு இயற்கை எய்தினார். 'நேருவுக்குப் பிறகு யார்?' என்ற கேள்வி எழுந்தது; சிக்கல் உண்டானது. இச் சிக்கலைத் தீர்;த்து வைத்த பெருமை, காமராசரையே சாரும். முதலில் தனித்தனியாகவும், பின்னர் அனைத்துத் தலைவர்களுடனும் கூட்டாகவும் சந்தித்து உரையாடினார் அவர். எவ்விதச் சிக்கலும் இன்றி லால் பகதூர் சாஸ்திரியை நேருவுக்குப் பின்னர் பிரதமராகக் கொண்டு வந்தார். சிறிது காலத்திலேயே சாஸ்திரி ரஷ்ய நாடு சென்றிருந்த போது தாஷ்கண்ட் என்ற நகரில் காலமானார். மீண்டும் சிக்கல் உருவாயிற்று. இவ்வேளை நேரு பெருமகனார் நாட்டுக்குச் செய்துள்ள பணிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் எத்துணை அளவிற்குக் கடன்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தார் காமராசர். மற்ற தலைவர்களிடம் இது குறித்துப் பேசினார் அவர். நேருவின் புதல்வி இந்திரா பிரியதர்சினியை அடுத்த பிரதமராக எல்லோரும் ஒரு மனதாக ஏற்றனர். இவ்வாறு சிக்கலின்றி அடுத்தடுத்து இரு பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினைத் திறமையோடு செய்து முடித்து 'அரசர்களை உருவாக்குபவர்' (King Maker) என்ற பெருமையைத் தமதாக்கிக் கொண்டார் காமராசர்.

'காமராசரின் மிகப் பெரிய சாதனை எது?' என்று 'இலக்கியச் செல்வர்' குமரி அனந்தனிடம் ஒருமுறை கேட்ட போது அவர் ஒரே வரியில் இப்படிக் கூறினார்:

'நேரு மறைந்த பின் மேருவாக நின்றது!'


உடனடியாக அளிப்பதே நிவாரணம்!

தஞ்சை மாவட்டத்தில் கடுமையான புயல் தாக்கி இருந்த சமயம் அது; ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து, வெள்ளத்தில் சிக்கித் தவித்த நேரம் அது. முதலமைச்சர் காமராசர் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணம் அளிப்பதற்காகத் தஞ்சை மாவட்டத்திற்கு வந்திருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரும் கம்பலையுமாகத் தங்களுடைய துயரங்களை அவரிடம் முறையிட்டனர்; குறிப்பாகக் குடிசைகளை இழந்தவர்கள் தங்களுடைய தட்டுமுட்டுச் சாமான்களையும் இழந்து, மிகவும் இரங்கத்தக்க நிலையில் காட்சி அளித்தனர்.

அவர்களைப் பார்த்து முதல்வர் காமராசர், 'குடிசை போட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு செலவாகும்?' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையைச் சொன்னார்கள். காமராசர் ஒதுங்கி நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை அழைத்து, 'பெரியவரே, நீங்கள் சொல்லுங்கள்' என்றார்.

பெரியவர் சொன்ன தொகை காமராசருக்கு நியாயமானதாகப் பட்டது. உடன் வந்த அதிகாரிகளிடம் நிவாரணத் தொகை எவ்வளவு தேவைப்படும் எனக் கணக்கிடச் சொல்லி, உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு இட்டார்.

உடனே ஒரு மூத்த அதிகரி, 'ப்ரபோசலை ரெவின்யூ போர்டுக்கு அனுப்பி, சாங்ஷன் வாங்க ஏற்பாடு செய்து விடுகிறேன்' என்றார்.

காமராசருக்கு உடனே கோபம் வந்தது. 'என்னய்யா சொல்றீங்க? எப்போ சாங்ஷன் வாங்கி, வீடு வாசல் இழந்த இவங்களுக்கு எப்போ கொடுக்கப் போறீங்க? உள்ளூர் கஜானா பணத்தை எடுத்து உடனடியாகக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க. கொடுத்த பின்னாடி சாங்ஷன் வாங்கிக்கலாம். வீடு வாசல் இழந்தவர்களுக்கு உடனடியாகக் கொடுப்பது தானே நிவாரணம்?' எனச் சொல்லி உடனடியாக அவர்களுக்கு உதவி கிடைக்க ஏற்பாடு செய்தார்.

காமராசரின் நகைச்சுவை உணர்வு

  • ஒரு முறை ஓர் ஊருக்குக் காமராசர் வருகை புரிந்திருந்தார். அங்கு உள்ளோர் சிலர் அவரை அணுகித் தங்கள் ஊர் சுடுகாட்டிற்கு நல்ல வழி வேண்டும் என்று கேட்டனர். 'நான் இருக்கிறவர்களுக்கு வாழ நல்ல வழி தேடிகிட்டிருக்கேன். நீங்கள் சுடுகாட்டிற்கு வழி கேக்குறீங்களே?' என்று நகைச்சுவையாக அவர்களுக்குப் பதில் அளித்தார் காமராசர்.

  • மாணவர் குழு ஒன்று ஒரு முறை காமராசரைச் சந்தித்துப் பேசியது. மாணவர்களுள் ஒருவர் 'வருங்காலப் பிரதமரை நல்லவராகத் தேர்ந்தெடுங்கள்!' என்றார். காமராசர் அதற்கு, 'நான் பார்த்துக் கொள்ளுகிறேன்!' என்றார். மற்றொரு மாணவர், 'உங்களுக்குப் பின் யார்?' என்று சட்டென்று கேட்டார். காமராசரோ சற்றும் தாமதியாமல் அந்த மாணவரிடம் சிரித்துக் கொண்டே சொன்னார்: 'நீ வாயேன்!'

  • 'எளிமையே உன் பெயர்தான் காமராசரோ?' என்று சொல்லத் தக்க வகையில், கையில் கடிகாரம் கூடக் கட்டிக்கொள்ளாத முதலமைச்சராக விளங்கியவர் காமராசர். 'இப்படிக் கடிகாரம் கூட இல்லாமல் இருக்கிறீர்களே, எப்போதாவது நேரம் தெரிய வேண்டுமானால் என்ன செய்வீர்கள்?' என்று ஒருமுறை எழுத்தாளர் சாவி கேட்ட போது காமராசர் சொன்ன பதில்: 'கடிகாரம் எதுக்கு? யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க!'

பெரியார் குழந்தைக்கு இட்ட பெயர்

சென்னையில் ஒரு முறை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் தமது ஆண் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று அதன் தந்தை கேட்டுக் கொண்டார். இதற்காக வழக்கம் போல் கழக நிதிக்காக ஒரு ரூபாய் கொடுத்தார். 'இன்னும் ஒரு ரூபாய் கொடுத்தால் நல்ல பெயராக வைப்பேன்!' என்று பெரியார் கூறினார். 'அப்படியே கொடுக்கிறேன்!' என்று குழந்தையின் தந்தை கூறினார். 'காமராசர்' என்று பெரியார் குழந்தைக்குப் பெயர் இட்டார். கூட்டத்தினர் இடி முழக்கம் போல் கர ஒலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

காமராசரின் பூகோள அறிவு

தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் காமராசருக்கு நன்கு தெரியும். எனவே தான் அவரது பூகோள அறிவு பற்றி ஒரு முறை தரக் குறைவாகப் பேச்சு எழுந்த போது, 'பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மழை, மக்கள் வாழ்க்கை என்பதைப் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரையும் விட நான் நன்கு அறிவேன். புத்தக அறிவுரைகள் தான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது; அது எனக்குத் தேவையும் இல்லை' எனத் தமக்கே உரிய முறையில் மறுமொழி கூறினார்.

கண்ணதாசன் பாடிய 'காமராசர் தாலாட்டு!'

'தங்கமே! தண்பொதிகைச் சாரலே! தண்ணிலவே!
சிங்கமே!' என்று அழைத்துச் சீராட்டும் தாய்தவிரச்
சொந்தம் என்று ஏதும் இல்லை! துணையிருக்க மங்கை இல்லை!
தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதும் இல்லை!
ஆண்டி கையில் ஓடு இருக்கும், அதுவும் உனக்கு இல்லையே!'

எனக் 'காமராசர் தாலாட்டு' பாடியவர் கவியரசு கண்ணதாசன். ஆம்; ஆண்டியின் கையில் ஓடாவது இருக்கும்! தமக்கென்று அதுவும் இல்லாமல் - எதுவும் இல்லாமல் - வாழ்வின் இறுதி மூச்சு வரை எளிமையாக வாழ்ந்து காட்டியவர் காமராசர்.

காமராசர் மறைந்த உடனே, அவர் வாழ்ந்த வீட்டை அதன் சொந்தக்காரர் எடுத்துக் கொண்டு விட்டார்; அவர் பயன்படுத்திய காரைக் கட்சி எடுத்துக் கொண்டது. அவரது உடலை அக்கினி எடுத்துக் கொண்டது; அவருடைய பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது. அவர் மறையும் போடு விட்டுப் போன சொத்து
10 வேட்டியும், சட்டையும், ஒரு நூறு ரூபாய் நோட்டும் தான்!

காமராசரை வட இந்திய மக்கள் இன்னொரு காந்தியடிகளாகவே பார்த்தார்கள்; அதனால் தான் அவர்கள் அவரைக் 'காலா காந்தி' (கறுப்புக் காந்தி) என்று அன்போடு அழைத்தார்கள்! காமராசர் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர்
2-இல் காலமானது இருபெருந் தலைவர்களின் வாழ்வில் நேர்ந்த ஓர் அதிசய ஒப்புமை ஆகும்.

காமராசரின் பொன்மொழி!

காமராசர் காலமாகி ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. என்றாலும், அவர் இன்னமும் மக்கள் மனங்களில் கோலோச்சி நிற்பதற்குக் காணரம் இதுதான்; அவர் அடிக்கடி கூறும் ஒரு வாசகம் தான்!

'இறந்த பின்னும் நீ வாழ நினைத்தால் -
வாழும் போது பிறருக்கு நன்மை செய்!'


 

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்