சங்க இலக்கியத்தில் முல்லை நில மக்களின் பண்பாட்டுக்கூறுகள்

முனைவர் பூ.மு.அன்புசிவ

க்களின் வளமான வாழ்விற்கும், வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழில்களாகும். அவ்வாழ்வியல் தொழில்களை மேற்கொண்ட பல்வேறுபட்ட தொழில் மாந்தர்களும் சங்ககாலத்தில் வாழ்ந்துள்ளனர். சங்ககாலத்தில் சாதிப்பாகுபாடு பிறப்பால் இருப்பினும் தொழில் அடிப்படையில் வெள்வேறு இன மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை சங்க நூல்கள் வழி அறியமுடிகிறது. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் போன்ற பிரிவுகளோடு பல்வேறு தொழில்களைச் செய்கின்ற பிற மக்களும் வாழ்ந்துள்ளனர். அவ்வகையில் குறிஞ்சி நிலத்தவர் குறவர் என்றும், முல்லை நிலத்தவர் ஆயர் என்றும், மருத நிலத்தவர் உழவர் என்றும், நெய்தல் நிலத்தவர் பரதவர் என்றும் பெயர் பெற்றனர். இவர்களைத் தவிர உழவர், நெசவாளர், கொல்லர், தச்சர், குயவர், வண்ணார், உமணர், பறையர், பாணர், துடியர், கடம்பர், வேட்டுவர், கணியர் போன்றோரும் வாழ்ந்துள்ளனர். அவர்களுடைய வாழ்வியல் நிகழ்வுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும், தொழில் திறத்தோடுகூடிய அம்மக்களின் நேர்மைப்பண்பையும் ஆராய்ந்து அவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது

குடும்பமும் அரசும்

ஐவகை நிலங்களுள் முல்லை நிலமே குடும்பம், அரசு தோற்றங்களுக்கு நிலைக்களனாக விளங்கியது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆநிரைகளைப் பேணிக்காத்து, அவற்றினால் பயன் பல பெற்று வாழ முனைந்த தனியுடமைச் சமுதாயமாக முல்லைநிலம் அமைந்திருக்க வேண்டும். ஆதிகால மக்களின் நாகரிக நிலைக்களமாக முல்லைநிலம் அமைந்தது. அப்பொழுது அவர்களுடைய உடமையாக ஆநிரைகள் போற்றப்பட்டன. தனியுடமை தோன்றவே, அங்குத் தலைமைப்பதவியும், அதனை விடுத்துச்செல்ல வாரிசுரிமையும் தோன்றலாயின. இந்த வாரிசுரிமையை நிலைநாட்ட ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவை மேற்கொண்டு வாழவேண்டும் என்ற எண்ணமும், அதில் தறு ஏதும் நிகழாமல் தடுப்பதற்காகக் 'கற்பு' என்னும் ஒழுக்கமும் உருவாயிற்று. சமுதாயத்தில் இத்தகைய நெறி முறைகள் தோன்றக் காரணமாய் அமைந்த நிலம் முல்லை நிலமாகும்1 என்று சசிவல்லி விளக்குகின்றார்.

முல்லை நிலமே அரசு தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை .சி.கந்தையா

'முல்லைநிலத்தில் மிகப் பல ஆடுமாடுகளை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தவரின் தந்தை செல்வத்தால் அடையக் கூடிய எல்லா முதன்மைகளையும் பெற்றான். நிலங்களைச் சிறு சிறு கூறுகளாகப் பிரித்தலினால். ஆடுமாடுகளை மேய்ப்பதற்குரிய வாய்ப்புகள் குன்றும் ஆகவே, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தன. இவ்வகையில் பல குடும்பங்களுக்கு ஒருவன் தலைவன் ஆனான். ஆதியில் அரசன் தோன்றுவதற்கு இம்முறையே காரணமாக அமைந்தது. இடையனைக் குறிக்கும் 'கோன்' என்னும் சொல் அரசனைக் குறித்தது. மந்தைகளை மேய்க்கும் இடையனது கோலே அரசனுடைய செங்கோலாயிற்று.' என்று தன்னுடைய 'தமிழர் சரித்திரம்' என்ற நூலில் விளக்கமளிக்கின்றார்.

முல்லை-நிலம்-பொழுது

ஐவகை நிலங்களுள் காடும் காடு சார்ந்த இடமும் 'முல்லை' எனப்பட்டது. முல்லை நிலக்காட்டைப் பற்றிய வாழ்வியலோடு இயற்கைச் சூழலோடு இணைந்து இராச மாணிக்கனார்.

'குறிஞ்சி நிலக்காடு போன்ற மரச் செறிவுடைய காடன்று. இளங்காடு என்று சொல்லத்தகுந்த முறையில் அமைந்த நிலப்பகுதியாகும். இங்கு ஆடுமாடுகளின் மேய்ச்சல் நிலம் நிறைந்திருந்தன. கொன்றை, காயா, குரந்தம் முதலிய மரங்கள் இருந்தன. மல்லிகை, முல்லை, விடவு, தளவம் ஆகிய செடி கொடிகள் இருந்தன. இங்கு வாழ்ந்த ஆயரும் ஆய்ச்சியரும் முல்லை மலர்களைச் சூடிச் கொண்டனர். ஆதலின் இந்நிலம் எனப் பெயர்ப்பெற்றது.' என்று குறிப்பிடுகின்றார். இக்குறிப்புரையில் கருப்பொருள்களான விலங்கு, மரம், மலர் மக்கள் மற்றும் செய்திகளும் அடங்கியுளளமை குறிப்பிடத்தக்கது.

 முல்லை நிலத்திற்குரிய பெரும் பொழுதாகக் கார்காலமும் சிறு பொழுதாக மாலையும் அமையும். மழை பெய்யும் கார்காலம் வேனிலின் லெம்மையைத் தணித்து, உயிரினமும் பயிரினமும் குளிர்ந்திட இடமளிக்கிறது. காடும், காடு சார்ந்த இடமுமாகிய முல்லை நிலத்திற்கு இளைந்த பின்னணியாகக் கார்காலம் அமைகிறது. எனவேதான், முல்லை நில வருணனையில் கார்காலச் சித்திரிப்பும் இணைந்தே அமைகின்றன.

முல்லைநிலம் கார்காலத்தில் செழித்து விளங்கும் தன்மையை ஐங்குறூநுற்றில் 'புறவணிப்பத்து' என்ற பகுதி சிறப்பாகச் சித்திரிக்கிறது: கார்கால வருணனையில் கார்காலம், மழையின் பொழிவு, தளிர்ந்த முல்லைக்காடுகள் உயிரினங்களின் மலர்ச்சிநிலை ஆகியன உவமைத்திறத்துடன் புலப்படுத்தப்பட்டுள்ளன.

கார்கால வருணனையை நெடுநல்வாடை, 'கார்காலத்தில் முல்லை நிலத்தில் பருவமழை நன்கு பெய்தது. வெள்ளம் கால்நடைகளுக்கு இடையூறாதலால் கோவலர் அதனை வெறுத்தனர். கால்நடைகளை மேட்டு நிலத்தில் யேமவிட்டனர் குளிரால் நடுங்கிய கரங்களை நெருப்பில் காட்டி சூடு உண்டாக்கிக் கொண்டனர். மாமேயல் மற்நதன, குரங்குகள் குளிரால் நடுங்கிள. வுhடைக் காற்றின் மிகுதியால் பறவைகள் மரங்களிலிருந்து கீழே விழுந்தன. பசுக்கள் குளிரால் கன்றுகளுக்குப் பால்தர மறுத்து உதைத்தன. மழைநீர் வரைந்து பாய்கையில் கயல்கள் அதன் போக்கை எதிர்த்து நீந்தின. அவற்றைப் பிடிக்கக் கொக்குகளும் நாரைகளும் காத்திருந்தன.' என்று சித்தரிக்கின்றது.

முல்லை - கருப்பொருள் - இறைவன்

முல்லை நிலத்திற்குரிய தெய்வமாக,

'மாயோன் மேய காடுறை உலகமும்'

என்று தொல்காப்பியம் திருமாலைக் குறித்துக் காட்டுகின்றது. முல்லைப் பாட்டின் தொடக்கத்தில் அமையும் மழையின் வரவு திருமாலின் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைகருப்பொருள் - முல்லைமலர்

முல்லைமலர் அரும்பும் காலம் கார்காலம். மலரும் பொழுது மாலைப் பொழுதாகும். 'காடும் மாலையும் முல்லைக்குரியன என்கிறது தொல்காப்பியம். இதனை ஐங்குநுறூறு.

'கார் நயந்து எய்தும் முல்லை'

என்று குறிப்பிடுகின்றது. நறுமணமும், தூய்மையும், வெண்மையும் கொண்ட இம்மலர் சங்ககால மக்களின் வழிபாட்டிலும், வாழ்த்திலும் முக்கிய இடத்தைப் பெற்றது.

'நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது'

மக்கள் வழிப்பட்டனர் என்று முல்லைப்பாட்டு விளக்குகிறது. முல்லைமலர் தமிழர் வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் மங்கலச் சின்னமாக இடம் பெற்றது. மணமகளை, முல்லை மலரை நெல்லோடு நீரில் கலந்து அந்நீரால் நீராட்டினர் என்று அகநானூறு சுட்டுகிறது.

இம்முல்லைமலரை மகளிர் ஒழுக்க வாழ்வோடு தொடர்புடைய ஒன்றாகவும் புலவர்கள் பாடினார். 'ஒரு பெண் இல்லற நெறியில் சிறப்புற்று விளங்குபவள்' என்ற கருத்தமையப் பாடவிழையும் புலவர்கள் முல்லைமலரைக் கற்பின் குறியீடாக்கிப் பாடினர்.

'முல்லைசான்ற கற்பின் மெல்லியல்'
'முல்லை சான்ற கற்பின் குறுமகள்'

முல்லை என்ற சொல்லுக்குச் சென்னைத்தமிழ் அகராதி, 'கொடிவரை, காட்டு மல்லிகை, முல்லைநிலம் உரிப்பொருட்களின் ஒன்றாகிய இருத்தல், கற்பு, வெற்றி, முல்லைக்குழல், முல்லைப்பாட்டு' முதலான பொருள்களைத்தருகிறது. அவற்றுள் 'கற்பு' என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால், முல்லை நிலத்திற்குச் சிறப்புச் செய்கின்ற முல்லை மலர் வழிபாட்டிற்கு உரியதாக, மட்டுமன்றி, கற்பின் குறியீடாகவும் வழங்கப் பெற்றுள்ளமையை உணரமுடிகின்றது.

முல்லைஉரிப்பெருள் - ஒழுக்கம்

அன்பின் ஐந்தினை ஒழுக்கங்கள் பற்றிய பழம்பாடல் ஒன்று.

'போக்கெல்லாம் பாலை புணர்தல்
நறுங்குறிஞ்சி
ஆக்கந்சேஞ் ஊடல் அணிமருதம் -
நோக்குங்கால்
இல்லிருத்தல் முல்லை இரங்கல் நறு
நெய்தல்
சொல்லிருந்த நூலின் தொகை.'

என்று விளக்குகிறது. இவற்றுள் முல்லைத்திணையின் உரிப்பொருளான ஒழுக்கம் 'இல் இருத்தல்' என்பது பெற்படுகின்றது.

சங்க இலக்கியமான ஐந்குறுநூறு முல்லைத்திணையின் நூறு பாடல்களைப் பேயனர் பாடியுள்ளார் இப்பாடல்கள் முல்லையின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகக் குறிக்கின்றன.

எனவே, முல்லையின் உரிப்பொருள் இருத்தலும் இருந்தல் நிமித்தமும் என்பது புலனாகிறது. 'இருத்தல்' என்பது 'இருத்தல் பொருந்திய இல்லற நெறியாகும்'. இதனால், குறிஞ்சிச் சமுதாயத்தை அடுத்துத் தோன்றிய முல்லைச் சமுதாயத்தில் இல்லற ஒழுக்கம் உருப்பெற்று இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. பழம்பாடலும் 'இல்லருத்தல் முல்லை' என்று விளக்குவது குறிப்பிடதக்கது.

சங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களுள் நிலம், காலம், nhழுது, மரம், மலர், புள், விலங்கு, பின்னணியாக அமைய, கருத்தொருமித்த தலைவனும் தலைவியும் வாழ்ந்த இனிய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பாடல்கள் சிலவாக உள்ளன. ஆனால், விளைமேற் சென்ற தலைவன், தான் குறித்துச் சென்ற கார்காலத் தொடக்கத்தே வாராதிருந்த காலத்தில் தலைவி வருந்தும் ஆற்றாமையைப் புலப்படுத்தும் பாடல்கள் பலவாக உள்ளன.

எனவே, 'இருத்தல்' என்பது தலைவனும் தலைவியும் இல்வாழ்க்கை மேற்கொண்டோழுகலைக் குறிக்கிறது. தலைவன் பிரிவால் எழும் தலைவியின் ஆற்றாமையும் அதன் தொடர்பான உணர்வு நிலைகளும் இருத்தல் நிமித்மாகக் கொள்ளலாம். தலைவி அன்பிற்சிறந்த தலவைனை மணந்து இல்லறத்தொழுகும் நாளில், தலவன் தலைவியைப் பார்த்து, 'அழகிய கூந்தலை உடைய நங்கையே, நம் முல்லை நிலத்தில் மேகம் திரண்டு மழை பெய்வதால் சிறந்த கார்ப்பருவம் தொடங்கிவிட்டது. நமது கானாற்றிலே பெருகி வருகின்ற விருப்பந்தருகின்ற புதுப்புனலில் நாம் விளையாட விரைந்து என்னோடு வருவாயாக' என்று அன்புடன் அழைக்கிறான். இந்த அழைப்பு, காதலர் இருவர் கருத்தொருமித்து வாழகின்ற இல்லற வாழ்க்கையைத் தெளிவாக்குகிறது.

இல்லற நெறியில் ஒழுகும் தலைமகன் பொருள், போர் காரணங்களுக்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வான். அவ்வாறு, வினைமேற்செல்லும் தலைவன் 'தான் முன்னிய வினைமுடித்துக் கார்ப்பருவம் தொடங்குமுன் வருவேன்' என்று கூறிச் செல்வான். குhர்காலத்தில் முதல்மழை பெய்தும் தலைவன் வாராதநிலையில் ஆற்றியிருக்க இயலாத சூழலில் தலைவி வருந்துவாள். இவளுடைய ஆற்றாமையை அகப்பாடல்,

'மாதிரம் புதையப் பா அய்கால் வீழ்த்து'
ஏறுடைப் பெருமழை பொழிந்தென
அவல்தோறும்
ஆடுகளப் பறையின் வரிநுணல்
கறங்க
ஆய்பொன் அவிழிழை
தூக்கியன்ன
நீடிணர்க் கொன்றை கவின்பெறக்
காடுடன்
சுடர்புரை தோன்றிப் புதறலைக்
கொளாஅ
முல்லை இல்லமொடுமலர
கல்ல
படுவாய்ப் பைஞ்சுனை மாவுண
மலிரக்
கார் தொடங்கிற்றே காலை
காதலர்
வெஞ்சின் வேந்தன் வியன்பெறும்
பாசறை
வென்றி வேட்கையொடு நம்முள்
உள்ளார்
யாது செய்வாங்கொல் தோழி
நோதகக்
கொலை குறித்தன்ன
மாலை
துணைதரு போழ்தின் நீந்தலோ அரிதே'

சொல்லோவியமாகக் காட்டுகிறது.

முல்லைநிலம் - ஏறுதழுவல் - திருமணம்

கலித்தொகை முல்லைக்கலிப் பாடல்கள் ஏறுதழுவலை விளக்குகின்றன. ஏறுதழுவலைப்பற்றி .சுப.மாணிக்கம்,

காளையை அடக்கியவனுக்கே பெண் கொடுப்பது முல்லை வழக்கம். ஏறதழுவா முன்னரே ஆயமகனுக்கும் ஆயமகளுக்கும் உள்ளப் புணர்ச்சி உண்டு என நல்லுருத்திரனார் புலப்புடுத்தலின் ஏறுகோள் வழக்கம். அகத்திணைக்கு இயைந்து ஒழுகுகின்றது'

என்று கருத்துரைக்கின்றார். ஏறுதழுவலைக் சித்திரிக்கும் முல்லைக்கலிப்பாடல்கள் ஏறுதழுவும் ஆயர்களின் வருணனை, ஆயமகளிர் வருணனை, ஏறுகளின் வருணனை, ஏறு தழுவும் காட்சிகள் ஆகியவற்றைச் சொற்சித்திரங்களாகக் காட்டுகின்றன.

ஏறுதழுவல் நிகழ்ச்சி முடிந்ததும் ஆய்ச்சியர், 'ஆய்ச்சியர் குரவை' அயர்வர், பின்னர், திருமண விழா நடைபெறுவதற்காக, ஆயர்தமது இல்லத்தைச் செம்மண் கொண்டு பூசுpப் பொலிவுபெறும்படிச் செய்வர், மனை முற்றத்தில் புதுமணல்பரப்பித் தம் குலவழக்கப்படி எருமைக்கோடு நட்டுத் தம் இறைவனை வழிபடுவர். பின்னர் புதைமணல் பரப்பிய இடத்தில் திரையிட்டு வதுவை நன்மணம் ஆற்றுவர்.

முல்லை நில ஆயர்

ஆயர்கள் காடும், காடு சார்ந்த பகுதியிலும் வாழ்ந்தனர். ஆயர் குல மகளிர் ஆய்ச்சியர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தனர்.

'மடப்பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த
குடப்பால்
'

என்று கூறுவதன் மூலம் ஆயமகளிர் பால் கறக்கும் தொழிலையும் செய்து வந்துள்ளனர். ஆடு, மாடுகளைப் பேணிப் பாதுகாத்து பிற உயிர்களுக்கு உற்ற துணையாகவும் விளங்கியுள்ளனர்.

தொகுப்புரை :

  • சங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களில் முதற்பொருள், கருப்பொருள் ஆகிய நிலம், பொழுது, இறைவன் மரம், புள், விலங்கு ஆகியவை பின்னணியாக அமைந்தன. இப்பன்னணியில் நாடறி நன்மணம் புணர்ந்த தலைவனும் தலைவியும் நடத்திய இனிய இவ்வாழ்க்கை உரிப்பொருளாய் அமைந்தது.
     

  • உரியபொருளாகிய 'இருத்தல் நிமித்தம்' ஒருவருக்கொருவர் ஆற்றியிருக்கும் பண்பாட்டைப் புலப்படுத்தியது. ஏறுதழுவி மணம் முடிக்கும் வழக்கம் முல்லை நிலமக்களிடம் மட்டுமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. முல்லை நில ஆயர்கள் காதல், வீரம் இரண்டையும் தம் இரண்டு கண்களாகப் போற்றினர்.
     

  • இங்ஙனம், தமிழ் மக்களுடைய பண்பாட்டு வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் முல்லைநிலப் பண்பாடு மருதநில வாழ்வியல் மலர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்பது உண்மை எனலாம்.

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்
தலைவர்
சங்கரா
அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி
,கோயம்புத்தூர் - 641 035

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்