சூர்யகாந்தன் நாவல்களில் சமுதாயச்
சிந்தனைகள்
முனைவர் பூ.மு.அன்புசிவா
சமுதாயத்தில்
நிகழும் நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து எழுதப்படும் புதினங்கள் சமூகப்
புதினங்களாகும். மு.வ. எழுதிய கள்ளோ காவியமோ, அல்லி, அகல்விளக்கு, கயமை,
நெஞ்சில் ஒரு முள் ஆகியன குறிப்பிடத்தக்கன. தேவன் என்னும் புனைபெயருடைய
மகாதேவன், எட்டுச் சமுதாயப் புதினங்களை எழுதினார். துப்பறியும் சாம்பு,
ஒருநாள், பொய்த்தேவு பாராட்டப்படுகின்றன. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்,
ரகுநாதனின் பஞ்சும் பசியும், சிதம்பர சுப்பிரமணியனின் இதய தாகம், ரா.கி.
ரங்கராஜனின் இது சொர்க்கம், கு.ராஜவேலுவின் மகிழம்பூ முதலியவை நினைவில்
நிற்பன.
விடுதலைப் போராட்டத்தையும் காந்திய நெறியையும் கருவாகக் கொண்டவை
கல்கியின் மகுடபதி, தியாகபூமி, அலையோசை, அகிலனின் நெஞ்சின் அலைகள்,
சிதம்பர சுப்பிரமணியத்தின் மண்ணில் தெரியுது வானம் ஆகியவற்றைச்
சொல்லலாம். அகிலனின் பாவைவிளக்கு, புதுவெள்ளம், நா.பார்த்தசாரதியின்
குறிஞ்சிமலர், பிறந்தமண், பட்டுப்பூச்சி, ஆத்மாவின் ராகங்கள் முதலியவை
புதின உலகில் தனிப்பெரும் சொத்துக்களாகத் திகழ்கின்றன.
இன்றைய சமுதாய நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்துப் பலரும் புதினம்
படைக்கின்றனர். ஆதவன், டி.செல்வராஜ், விட்டல்ராவ், வண்ணதாசன்,
நாஞ்சில்நாடன், பெருமாள்முருகன், சோ.தர்மன், பவாண்ணன், வண்ணநிலவன்,
உமாமகேஸ்வரி, சுப்ரபாரதிமணியன், பா.விஜய், சோலை சந்தர பெருமாள்,
சீ.ஆர்.இரவீந்திரன், பாரதிபாலன், பாலகுமாரன், பி.எம்.கண்ணன்,
ஆர்.வி.தங்கர்பச்சான், உமாசந்திரன் என்று ஏராளமான எழுத்தாளர்கள் தங்கள்
வாழ்க்கைக் குறிக்கோளைப் புதினமாக மாற்றித் தமிழ் மக்களுக்கு
வழங்குகின்றனர்.
மனித வாழ்க்கையில் பெற்ற கொள்கையை நோக்கிச் செல்ல நேர்வழி காட்டச் சமூக
நாவல் முயலுகிறது. நாவலாசிரியர் காட்டும் ஒளியின் துணை கொண்டு படிப்போர்
அக்குறிப்பிட்ட சமூகத்தினூடே வழிநடந்து சென்று உண்மையை உணர்த்துகின்றனர்.
இதனால் சமூக நாவல்கள் சமூகத் துன்பத்தை வெளிக்காட்டுவதையும்,
துன்பப்படுவோர் மீது துன்பத்தை வெளிக்காட்டுவதையும், துன்பப்படுவோர்
மீது பரிவு கொள்ளச் செய்வதையும், அவற்றை உணரும் அனுபவத்தை நாவலைப்
படிப்பவர் பெறச் செய்வதையும், காணமுடிகின்றது.
'மனிதன் தன்னந்தனியாக வாழ்பவன் அல்லன் கூடி வாழும் இயல்புடையவன். மனித
வாழ்வு சமுதாயச் சூழல்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. மனித ஆளுகை
சமுதயாத்தின் மீதும், சமுதாயத்தின் ஆளுகை தனி மனிதனின் மீதும், இறுகப்
படிந்துஒன்றையொன்று மாற்றிக் கொண்டே இருக்கின்றன'1
சமுதாயம் இன்றி இலக்கியம் இல்லை. இலக்கியமும் சமுதாயமும் ஒன்றை ஒன்று
சார்ந்தே வந்துள்ளது என்பதை இலக்கிய வரலாறு புலப்படுத்துகிறது. 'நாவல்,
சமுதாய மக்கள் அனைவரும் படித்து மகிழும் ஓர் இலக்கிய வகை. ஒவ்வொரு
ஆசிரியனும் அவன் காணும் சமுதாயத்தின் அலங்கோலங்களையும், எழிற்
காட்சிகளையும் நாவல் சட்டத்திற்குள் அடக்கிக் காட்டுகிறான்'2
சமூகச் சிக்கல்கள்
சமூகச் சிக்கல்கள் என்பது சமுதாயத்தில் நிகழும் சீர்கேடுகள். இது ஒரே
தன்மையன்று. இச்சீர்கேடுகள் காலத்திற்குக் காலம் மாறுபடும்.'ஒரு
காலத்தில் சமூகச் சிக்கல்களாகக் கருதப்படாத ஒன்று பிற்காலத்தில் சமுதாய
விழிப்புணர்வாலும், சீர்திருத்த இயக்கங்களாலும் சமூகச் சிக்கலாகக்
கருதப்படுவதனையும், தீர்வுகாணும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதையும்
வரலாறு உணர்த்துகிறது'3 என்பது சிந்தித்தற்குரியது.
சமுதாய நோய்
நோய் உடலுக்கு ஊறு விளைவிக்கும் நோய் வராமல் தடுக்க இயல்வது சிறந்த
அறிவு, 'தனி மனிதனுக்கு ஏற்படும் நோயால் அவன் மட்டுமே பாதிக்கப்படுவான்.
ஆனால் சமுதாய நோயால் அவன் சார்ந்த சமூகம் அதனோடு ஒட்டிய புற உலகம்
அனைத்துமே பாதிக்கப்படுகிறது. எனவே தான் சமூகச் சிக்கல்கள் சமூகத்தைப்
பிணைக்கும் நோய்கள் என்றே சொல்லலாம்'4
என்பர்.
பொருளாதாரச் சிக்கல்கள்
வாழ்விற்கு இன்றியமையாதது பொருள், பொருளிள்ளார்க்கு இவ்வுலகம் இல்லை,
எனவே, தான் ஈட்டுப் பொருளை என அறிவுறுத்தி வந்தனர். இவ்வாறு
பொருளீட்டும் போது நேர்மையான வழியில் பொருளீட்டுதல் அவசியமாகும், எனவே
தான் வள்ளுவர், 'பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள் அல்லது
இல்லை பொருள்'5 சங்ககால முதற்கொண்டு ஒவ்வொரு ஆடவனும் தொழிலை உயிராகப்
போற்ற வேண்டும் என்பதற்காக
'வினையே ஆடவர்க்கு உயிரே'6
வினையை உயிராகக் கொண்ட அந்த ஆடவன் நோய்வாய்ப்பட்டதால் குடும்பத்தில்
பொருளாதாரச் சிக்கல்கள் பெரிதும் காணப்படுகிறது. 'மருதமுத்துவின்
பேருக்கு இந்த ஒரு ஏக்கரா நிலத்தை அடமானம் வைத்து பணம் புரட்டிக் கொண்டு
போய்த்தான் ஆஸ்பத்திரிக் கணக்கை பூர்த்தி செய்து அவளைக் காட்டிக் கொண்டு
வேலம்பாளையம் வந்து சேர முடிந்தது'7
பாலியல் வன்முறைகள்
ஆணாதிக்க சமூகத்தில் மிக அதிகமான கொடுமைகளுக்கு ஆளாகின்றவர்கள்,
தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த பெண்களே என்பதைப் பெண்ணிய
விடுதலையில் நாட்டம் கொண்டோர் கூறுகின்றனர். மேல் சாதியினர்
கீழ்ச்சாதிப் பெண்களை இழிவு படுத்துவதை, 'பக்கத்துக் குடிசையில் தனியாய்
இருந்த ருக்குமணியை உள்ர்க் கவுண்டர் மப்பண்ணன் வந்து வம்பு செய்த போது
இந்தச் செவப்பிதான் அவளைக் காப்பாற்றினாள்'8 என ஆசிரியர்
கூறுவதிலிருந்து சேரிப் பெண்களின் அவல நிலை இப்புதினத்தில் தெளிவாகக்
காட்டப்படுகின்றது. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களைப் பார்த்து
அதற்குக் காரணகர்த்தாக்களே...
'இந்தா, ஐநூறோ ஆயிரமோ....! வாயை
மூடிட்டுப் பேசாம வாங்கிட்டுப் போய்ச்சேரு!
எங்கியாச்சும் டாக்டரையோ இல்லினா
நர்சுகளையோ புடுச்சு வவுத்திலே இருக்கற
தெக் கரச்சுப் போடு'9 என்று
அனுப்பி வைப்பதாக முடிகிறது.
பெண்ணியச் சுரண்டல்
சமுதாயத்தில் மிக அதிகமான சுரண்டலுக்கு ஆளாகின்றவள் பெண், ஒரு
குடும்பத்தில் பிறந்த குழந்தைகளில் பெண்களை விட ஆண்களையே அதிகம் படிக்க
வைக்கின்றனர்.
'சக்கிலியின் தலையெழுத்து உருண்டு பெரண்டு
எந்திரிக்கிற பொழப்புன்னு படைச்சவனே
எழுதிப் போட்டாண்டா! இந்த நெலமையிலே
நீ நம்ப பாப்பாளை மட்டும் படிக்க
வெய்க்கதாப் பிரியப்படுறியே! இதெல்லாம்
நமக்கு வேண்டாண்டா'10
என்று திம்மன் தன் மகள் பாப்பாளைப் படிக்க அனுமதிக்கவில்லை, பெண்கள்
இவ்வாறு படிப்பிலும் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பெண் அடிமைத்தனம் என்பது
பெண்களின் தனிப்பட்ட பிரச்சனை அன்று. இது மனித வர்க்கத்தின் பிரச்சனை.
இப்பிரச்சனையை வேரறுக்க வேண்டுமெனில் கல்வி ஒன்றினால் மட்டுமே முடியும்.
அன்பின் மகத்துவம்:
'அன்புஅகத்து இல்லாஉயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று'11
என்கிறார் வள்ளுவர்
அன்பு பிரதிப் பிரயோஜனம் வேண்டுவதில்லை. மாறா இருப்பின் அது அன்பாகாது,
வியாபாரமே ஆகும். அது மனிதனை உயர்த்தாது. மாறாகத் தாழ்த்தவே செய்யும்.
பலன் தேட அன்பே உயர்த்தும், தூய தாகும்' என்கிறார் காந்தியடிகள்
இக்கருத்துக்கு இந்நாவலில் மைனர் மோசமான மனிதனாக இருந்தாலும் தன் தங்கை
செல்வமணியிடம் நிதானமாகப் பேசுகிறான். செல்வா...நீ இன்னமும் சாப்பிடலெ?
போய்ச் சாப்பிடு போ....! பரிச்சை யெல்லாந்தா முடிஞ்சு போச்சே,
உன்னமென்ன பொஸ்தகத்தை எடுத்து வெச்சுப் படிச்சிட்டு இருக்கிறே' என்று
பாச உணர்வோடு கூறுகிறான். உயிர் கொல்ல்லாமை இது ஒரு சமூகச் சிக்கல்
ஆகும். கொலை செய்தல் பாவம் என்று சமய நூல்கள் கூறுகின்றன.
எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தலே சிறந்த அறம் என்ற நீதி நூலோர்
போற்றுகின்றனர். எனவே தான் திருக்குறள்
'நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி'12
என்று கூறும் எந்த உயிரையும் கொல்லாத அறத்தை நல்ல வழி என்று அறநூல்கள்
போற்றுவதாகக் குறிப்பிடுகின்றார். பஞ்சமா பாவங்களில் ஒன்றான கொலைத்
தொழில் இந்நாவலில் காண முடிகிறது.
கூடா நட்பு
கூடா நட்பு என்பது தீய நட்பாகும். நண்பனின் பண்புகளைக் கொண்டே அவனைச்
சார்ந்த மற்றொரு நண்பனின் பண்பு நலன்களை அறிந்து கொள்ளலாம் என்பது
ஆங்கிலப் பழமொழி, எனவே தீயொழுக்கம் உடைய ஒருவனை நண்பனாகக் கொள்ளக்
கூடாது. இந்நட்பு தீய விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தான் வள்ளுவர்
'ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை நடைமுறை
தான்சாம் துயரம் தரும்'13
என்று நட்பின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறார்.
அம்மன் பூவோடு நாவலில் தீய நண்பனாகிய மைனரால் வேலப்பன் வாழ்வு சீரழியக்
காரணம் என்று சித்திரிக்கப்பட்டுள்ளது. வேலப்பனே பின்னர் உணருகிறான்.
மைனரும், வேலப்பனும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பனாக இருந்து பின்னர்
பிரிகின்றனர். இதனைக் கண்ட ஊர்மக்கள் இருவரையும் திட்டுகின்றனர்.
'பண்ணாத அக்குருமங்களையெல்லாம் பண்றப்ப தெடனாப் பண்ணீட்டானுக. இப்ப
இவிக மனசுகளே இவிகளெக் குத்த ஆரம்பிச்சிடுச்சுப் போலிருக்குது'14 எதையோ
பறி கொடுத்தவனாட்டம் இருக்கிறான் ரெண்டு மூணு நாளாகவே! உனி என முப்போ
இவனுக்கு'
பூர்வீக பூமி நட்புறவு பாராட்டிய காரணத்தினால்தான் அவன் செய்யும்
அநியாயங்களை பழனியப்பனால் பொறுத்துக் கொள்ள முடிகின்றது. அவன் ஊர்ப்
பக்கத்தைச் சார்ந்த கரப்பாளையத்துக் கவுண்டரிடம் பழனியப்பன்
கொண்டிருந்த நட்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. கரப்பாளையத்துக்
கவுண்டரின் நட்பு பழனியப்பன் அவரிடம் சென்று ஆலோசனைகள் கேட்பதும்,
வைத்திய முறைகளை அறிந்து கொள்வதும் அவர் கூறும் புத்திமதிகளை ஏற்றுக்
கொள்வதும், அவருடன் சேர்ந்து நாட்டு நடப்பு பற்றி பேசுவது ஆகியவற்றின்
மூலம் சிறந்த நட்பு பேணப்படுவது காட்டப்பட்டுள்ளது.
மூட நம்பிக்கை
மனித வாழ்வில் முதன்மை பெற்று விளங்குவது நம்பிக்கை. நம்பிக்கை என்ற
சொல் குறித்து பல்வேறு பொருள்களை அகராதிகள் தருகின்றன. நம்பிக்கையை இரு
கூறுப்படுத்திக் காணலாம். அவை ஒன்று சமயம் சார்ந்த நம்பிக்கை, மற்றொன்று
வாழ்வியல் சார்ந்த நம்பிக்கை. சமூகத்தில் இன்று பல்வேறு மூடநம்பிக்கை
மக்களிடையே ஊறிப் போய் வாழ்வை நிலை குலையச் செய்கிறது.
நாவல் சில இடங்களில் மூடநம்பிக்கை மக்களிடையே இருப்பதைச்
சுட்டிக்காட்டுகிறது. நம்பிக்கை என்னும் அச்சாணியில் தான் இவ்வுலகம்
இயங்கிக் கொண்டிருக்கிறது. நாளை என்பது தன் கையில் சாத்தியமாகும் என்ற
எதிர்பார்ப்புடன் இன்றைய மனிதன் காலடி எடுத்து வைக்கிறான். வாழ்வும்,
தாழ்வும் நம்பிக்கையை ஒட்டியே அமைகின்றன.
தலித் கவிதை
காந்தியடிகள் முதல் எண்ணற்றோர் இந்த இன மக்களின் மேம்பாட்டிற்காக
உழைத்தனர். வேலை வாய்ப்புகளில் இவர்களுக்குத் தனிச் சலுகையும் உண்டு.
பல சமூக அமைப்புகளும் இவர்களுக்காகப் பணி செய்ய முன் வந்துள்ளன. இவ்வளவு
இருந்தாலும் இந்த இன மக்களது முன்னேற்றம் குறிப்பிடும்படி இல்லை. பிற
சமுதாயத்திற்கு அவர்கள் செய்யும் பணிகளை எண்ணிப் பார்க்கும் போது
நெஞ்சம் பதறுகிறது.
'உன்னுடைய செய்திக்காகப்
பறையடித்தோம்
உன்னுடைய செருப்பாகத்
தோல் உரித்தோம்
நீ
நாறிப் போவாய் என்பதற்காக
மலம் சுமந்தோம்
அழுகிப் போவாய் என்பதற்காக
குழி வெட்டினோம்
உழைத்துக் கறுத்த எங்களைப் பார்த்த்துப்
பறப்பயலே எட்டிநில் என்கிறாய்!'
இராச முருகு பாண்டியனின் இந்தத்தலித் கவிதையில் உணர்ச்சிக்
கொந்தளிப்பைக் காணலாம்.
பாலியல் வன்முறையை எதிர்த்தல் மேல்சாதியைச் சேர்ந்த காமுகர்களால்,
மாதாரிப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதையும், அக்கொடூரத்தை
எதிர்த்துப் போராடும் இப்பெண்களின் துணிவையும் இப்புதினத்தில் காணலாம்.
'ஏய்யா, மாதாரிச்சீனா உனக்கு அவ்வளவு எளப்பமாப் போச்சா...? இத்தச்
சோட்டு மனுசன் வந்து கையெப்புடிக்கிறானே எப்படினு இவிக
ஒத்துக்குவாங்கன்னு நெனச்செயாக்கு'15
'இங்கெ வந்து அக்குருமம் பண்ணுனாப்பிடியே... உங்க சனங்க இருக்குற
வழுவுல போயி எவளையாச்சும் புடிச்சு இழுத்துப்பாரு போ அப்புறம் உனக்கு
அங்கெ என்ன கைம்மாறு நடக்குதுன்னு தெரிஞ்சுக்குவே'
'உன்னையெல்லாம் நடு ஊருக்குள்ள நிறுத்தி பசப்படம் போட்டுத் தொலைக்
கோணுமாக்கு...'என வரும் பகுதிகள் அவற்றை உணர்த்தும், மேலும், 'மேல்சாதிப்
பெண்ணை கீழ்சாதிக்காரன் பொஞ்சாதி ஆக்குனது ஒத்துக்க முடியாததா
ஆகிப்போச்சு இவிகளுக்கு...! அப்படிப் பார்த்தா கீழ்ச் சாதிப் பொம்பளைகளை
மேல்சாதிக்கார ஆசாமிக கண்டுங் காணாமயும் திருட்டுத் தனமாகவும்...
வெப்பாட்டிகளாக்கிக்கத் திரியறானுகளே அதெயெ எந்தக் கட்டையெ வெச்சு
மொத்தறது?'16 என வரும் பகுதியிலும், மறைமுகப் பாலியல் உறவு கொள்ளும்
மேல்சாதிகாரர்களின் ஒழுக்கக் கேட்டைக் கடுமையாக எதிர்க்கும் மாதாரி
பெண்களின் மனத்துணிவையும் விதைச் சோள நாவலில் காணமுடிகின்றன.
தொகுப்புரை:
-
காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு
வரும் மக்களின் பண்புகள் அவர்களது பண்பாடுகளாக மாறுகின்றன.
அப்பண்பாடு மக்களின் அனைத்து விதமான அக மற்றும் புற வாழ்வியல்
கூறுகளையும் உள்ளடக்கியது.
-
உதிர உறவுகளுக்குள் திருமணம் செய்து
கொள்வது கிராமச் சமுதாயத்தில் பெருமளவில் நிகழ்கிறது. கிராமச்
சமுதாயத்தில் காலங்காலமாகக் காதல் கலப்புத் திருமணங்கள் பெருமளவில்
நிகழ்வதை ஆய்வுக்குட்பட்ட புதினங்களில் காண முடிகிறது.
-
கலப்புத் திருமணங்கள் பெருவாரியாக
நிகழ்வதற்கும், அவை கிராமியச் சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதற்கும்
மக்களின் கல்வியறிவும், நகர் மயமாதலும் காரணமாகின்றன.
-
கீழ்ச்சாதியினருக்கும்,
உயர்சாதியினருக்கும் நிகழும் திருமணங்கள் சமூகத்தில் அங்கீகாரம்
பெறாததுடன், கீழ்சாதியினர் மிகுந்த தண்டனைக்கு
-
ஆளாக்கப்படுகின்றனர். என்பதை 'விதைச்சோளம்'
நாவல் மூலம் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
-
விதவை நிலையை விரும்பி ஏற்றுக் கொண்டு
வாழ்வதும், மறுமணம் புரிந்து கொள்வதுமான நிகழ்வுகள் எதிரெதிர்
கோணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சான்றெண் விளக்கம்
1. மா.இராமலிங்கம், நாவல்
இலக்கியம் ப – 126
2. நா.ரமேஷ், அகிலனின் நெஞ்சின்
அலைகள் ஓர் ஆய்வு ப – 26
3. சி.இ.மறைமலை, இலக்கியமும்,
சமூகவியலும் ப – 70
4. சி.இ.மறைமலை, இலக்கியமும்,
சமூகவியலும் ப – 71
5. திருவள்ளுவர், திருக்குறள் -
751
6. குறுந்தொகை ப.எ – 135
7. சூர்யகாந்தன், மானாவாரி
மனிதர்கள் ப – 118
8. சூர்யகாந்தன், மானாவாரி
மனிதர்கள் ப - 87
9. சூர்யகாந்தன், விதைச்சோளம் ப -
18
10. திருவள்ளுவர், திருக்குறள் -
78
11. திருவள்ளுவர், திருக்குறள் -
324
12. திருவள்ளுவர், திருக்குறள் -
792
13. சூர்யகாந்தன், அம்மன் பூவோடு
ப – 146
14. சூர்யகாந்கன், விதைச் சோளம் ப
– 83
முனைவர்
பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோயம்புத்தூர் - 641 035
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|