குறுந்தொகையில் பயிரியலும் உயிரியலும்
முனைவர் இரா.மோகன்
“நிலமும் காலமுமாகிய முதற்பொருளமைந்த ஐவகைத் திணைகளில் உள்ள
கருப்பொருள்கள் பல. அவற்றுள் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை
ஆகியவற்றைப் பற்றிய அரிய செய்திகளைப் புலவர்கள் உணர்ந்து
வெளியிடுகின்றனர்” (நூலாராய்ச்சி, குறுந்தொகை மூலமும் உரையும்,p.xxxv)
என மொழிவர் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சாமிநாதையர். அவர் தம் குறுந்தொகை
உரையில் ‘நூலாராய்ச்சி’ பகுதியில் 32 பக்க அளவில் (pp.xxxv-lxv)
இவ்வகையில் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் அவரது ஆழ்ந்து அகன்று
நுண்ணிய அறிவுத் திறத்தினைப் பறைசாற்றுபவை. அவரை அடியொற்றி
குறுந்தொகையில் மரம் செடி கொடி விலங்கு பறவை குறித்து இடம்பெற்றுள்ள
அரிய செய்திகள் பத்தினை ஈண்டு சுருங்கக் காண்போம்.
1. ஆல மரத்தின் அடியில் அவை கூடுதல்
சங்க காலத்தில் ஆலமரத்தின் அடியில் அவை கூடுதல் என்பது வழக்கமாக
இருந்துள்ளது. ‘பலர் கூடியிருத்தற்கு ஏற்ற கிளைப்பரப்பும் நிழலும்
உடைமையின் ஆலமரத்தின் அடியிலே அவை கூடுதல் பண்டை வழக்கம் என்று
தெரிகின்றது’ (குறுந்தொகை மூலமும் உரையும், ப.38). கோசர் என்னும் ஒரு
வகையினர் ஒரு பழைய ஆலமரத்தின் அடியில் அவை கூடி ஆராய்ந்தது பற்றிய
குறிப்பு ஔவையாரின் குறுந்தொகைப் பாடல் ஒன்றில் உவமை வடிவில்
இடம்பெற்றுள்ளது:
“தொன்மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல” (15)
2.
தலைவியின் வால் எயிறு ஊறிய நீருக்குக் கரும்பின் அடிப்பகுதியில்
வெட்டிய துண்டு உவமை ஆதல்
கரும்பின் நுனிப்பகுதியை விட அடிப்பகுதி மிகச் சுவையுடையதாக இருக்கும்.
இக்கருத்து குறுந்தொகைப் பாடல் ஒன்றில் காணப்படுகின்றது. தலைவியின்
வெண்மையான பற்களிடத்தே ஊறிய நீரின் இனிமைக்குக் கரும்பின்
அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உவமித்ததால் குறுந்தொகையின் 267-ஆம் பாடலை இயற்றிய புலவர் ‘காலெறி கடிகையார்’ என்னும் சிறப்புப் பெயரினைப்
பெற்றார்:
“... ... ... கரும்பின்
காலெறி கடிகைக் கண்அயின் றன்ன
வால்எயிறு ஊறிய வசைஇல் தீநீர்க்
கோல்அமை குறுந்தொடிக் குறுமகள்”
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாய்எயிறு ஊறிய நீர்” (1121)
என வரும் திருக்குறள் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கதாகும்.
திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு, கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது
கருவினது முதிர்ச்சியைப் போன்று காணப்படுகின்றது என்பது குறுந்தொகைப்
பாடல் ஒன்றில் வரும் அரிய உவமை ஆகும்:
“சினைப்பசும் பாம்பின் நன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி” (35)
3.
நெல்லிக் காயைத் தின்ற பின்னர் நீரைக் குடித்தால் இனிக்கும்
நெல்லிக்காய் புளிச்சுவை உடையது. முதலில் புளிப்பும் பிறகு இனிமையும்
தோற்றுவித்தலின் ‘தீம்புளி நெல்லி’ (317)
என்றும், ‘நெல்லியம்புளி’
(201) என்றும், இக்காய் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லிக் காயைத் தின்ற பின்னர் நீரைக் குடித்தால் இனிக்கும் என்ற தகவல்
குறுந்தொகையின் இரு பாடல்களில் (262, 317)
பதிவு செய்யப்பெற்றுள்ளது.
பாலை நிலத்தில் செல்வோர் நெல்லியின் காயை உண்டு தமது தாகத்தைப் போக்கிக்
கொள்வர். அறச் செயலாக வழிகளில் நெல்லி மரங்கள் வளர்க்கப்படுவது பற்றி
பாலை பாடிய பெருங்கடுங்கோ தம் குறுந்தொகைப் பாடல் ஒன்றில் ‘அறந்தலைப்
பட்ட நெல்லியம் பகல்காய்’ (209) எனக் குறிப்பிட்டுள்ளார்.
4.
‘குருதிப் பூவின் குலைக் காந்தள்’
குறிஞ்சி நிலத்திற்கு உரிய மலர் காந்தள். இது மலை முழுவதும் கமழும்
நறுமணத்தை உடையது (‘தண்ணறுங் காந்தள்’, 259). மலைச்சாரலில் அருவியின்
அருகே கொத்துக் கொத்தாக, இரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் மலரும் இதனைக்
‘குருதிப் பூவின் குலைக்காந்தள்’ எனச் சுட்டுகின்றது குறுந்தொகை
முதற்பாடல். பண்டைக் காலத்தில் தலைவன் தலைவிக்கு அளிக்கும் கையுறைப்
பொருள்களுள் காந்தள் மலரும் ஒன்று என்பது இப் பாடலின் வாயிலாகத்
தெரிகின்றது. காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களைக் கொண்டவள் தலைவி
(167).
தலைவி தலைவனது மலையில் இருந்து ஆற்றினால் அடித்துக் கொண்டுவரப்பட்ட
காந்தள் செடியின் கிழங்கை எடுத்துத் தழுவி உளம் நெகிழ்கிறாள்; தன்
வீட்டில் நட்டு, போற்றி வளர்த்து அதைக் காணும் போதெல்லாம் தலைவனைக்
காண்பதாக நினைத்து ஆறுதல் பெறுகிறாள். இதனைக் கபிலர் தம் குறுந்தொகைப்
பாடலில் (361) அழகுறக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு பண்டைத் தமிழர்
வாழ்வில் இயற்கை பெற்றிருந்த உணர்ச்சி மயமான உறவினைப்
புலப்படுத்துவதாகும்.
இங்ஙனம் காந்தள் மலரைப் பற்றிய சுவையான செய்திகள் குறுந்தொகையின்
பத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் (1, 62, 76, 100, 167, 185, 239, 259,
284, 361, 373) இடம்பெற்றுள்ளன.
5.
நெருஞ்சி மலரின் தனித்தன்மை
நெருஞ்சி மலர் முல்லை நிலத்திற்கு உரியது. இதன் இலை மிகவும் சிறியது.
‘சிறியிலை நெஞ்சி’ (202) எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்று இதனைச்
சுட்டுகின்றது.
கதிரவன் எந்தத் திசையில் இருப்பினும் அத்திசையையே நோக்கி நிற்கும்
இயல்பு வாய்ந்தது என்பது நெருஞ்சி மலர் பற்றிய சிறப்புக் குறிப்பு ஆகும்.
6.
தாய் முகம் நோக்கி வளரும் ஆமையின் பார்ப்பு
ஆமையின் பிள்ளையைப் பார்ப்பு என்றல் மரபு, அது தாய் முகம் நோக்கி வளரும்
தன்மையை உடையது என்ற சிறப்புச் செய்தியினைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று
(152) தெரிவித்துள்ளது.
7.
குரங்குகளின் பாசமிகு காதல் வாழ்க்கை
ஆண்குரங்கு கடுவன், கலை என்ற பெயர்களாலும், பெண் குரங்கு மந்தி என்றும்,
குரங்கின் குட்டி குருளை, பறழ், பார்ப்பு என்றும் வழங்கப்படுகின்றன. இப்
பெயர்கள் தமிழ் மொழியின் சொல் வளத்திற்குக் கட்டியம் கூறுபவை.
‘மைபட் டன்ன மாமுக முசுக்கலை’ (121)
என ஆண்குரங்கின் கரிய முகத்தினைக்
கபிலர் தம் பாடல் ஒன்றில் சொல்லோவியம் ஆக்கியுள்ளார்.
பெண் குரங்கு தன் குட்டியை அகனுறத் தழுவிக் கொள்ளும். ‘இதுபோல மனம்
பொருந்த உன் கருத்தைத் தழுவிக் கொண்டு, உன் குறையைக் கேட்டு நிறைவேற்று
வாரைப் பெறுவாயின், உனது போராட்டம் மிகவும் பெருமை உடையது’ எனத் தலைவியை
இரவில் சந்திக்க விரும்பும் தலைவனிடம் கூறுகிறாள் தோழி. ‘உயர்கோட்டு
மகவுடை மந்தி போல, அகனுறத் தழீஇ’ (29) என ஔவையார் தம் குறுந்தொகைப்
பாடலில் கையாண்டுள்ள உவமை சிறப்பானது.
ஆண் குரங்கும் பெண் குரங்கும் ஒன்றனை ஒன்று அன்பு பாராட்டி தம்
குட்டிகளுடன் மகிழ்வுடன் வாழும் காதல் வாழ்க்கை பற்றிய சொற்சித்திரங்கள்
குறுந்தொகையில் காணப்படுகின்றன. சான்றாக, ஆண் குரங்கு மரத்தின் மேல்
இருந்து முதிர்ந்த இனிய பழங்களை உதிர்க்க, அம்மரத்தின் கீழே இருந்து
பெண் குரங்கு தன் குட்டிகளும் அவற்றுள் ஏற்பவற்றை எடுத்துத் தின்னும்
காட்சி குறுந்தொகை 278-ஆம் பாடலில் அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
“ ... ... ... கடுவன்
ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து
ஏற்பன ஏற்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை.”
9.
யானையின் கொம்பினை விற்று உணவு பெறும் குறிஞ்சி நில மக்கள்
யானையைப் பற்றிய சுவையான, நெகிழ்வான செய்திகள் பல குறுந்தொகையில்
இடம்பெற்றுள்ளன. “குறிஞ்சி நிலத்தில் வலியொடு உலவும் யானையையும் பாலை
நிலத்தில் உரனழிந்து வெம்மையால் துன்புறும் யானையையும் பற்றிய
நிகழ்ச்சிகளைப் புலவர்கள் புனைந்து உரைத்திருக்கின்றார்கள்” (நூலாராய்ச்சி,
குறுந்தொகை மூலமும் உரையும், p.lix). இவ்வகையில் கருதத்தக்க
குறுந்தொகைப் பாடல்கள் வருமாறு:
1. குறிஞ்சி: 13,225
2. பாலை: 37, 215, 255, 307, 308
‘நெடுநல் யானை’ (77, 357), ‘உரல்கால் யானை’ (232),
‘தடமருப்பு யானை’
(255), ‘ஏந்துகோட்டு யானை’ (258), ‘சிறுகண் பெருங்களிறு’ (88),
‘பெருங்கை வேழம்’ (37) ‘அண்ணல் யானை’ (260, 343), ‘தடக்கை யானை’ (332)
என்பன யானையைக் குறித்துக் குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் சித்திர
மின்னல்கள் ஆகும்.
யானையின் கொம்பு விலை உயர்ந்தது. அதனை விற்று அதன் விலையால் உணவு
பெறுதல் குறிஞ்சி நிலத்து வாழ்வார் வழக்கம். இதனைக் ‘காந்தள் வேலிச்
சிறுகுடி பசிப்பின், கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்’ (100) எனத் தம் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் கபிலர்.
10.
இணைபிரியா மகன்றில் பறவைகள்
நீர்வாழ் பறவையான இது பூக்களில் பயில்வது. ஆணும் பெண்ணும் பிரிவின்றி
எப்பொழுதும் இணைந்தே வாழும் தன்மையுடையது. தலைவனும் தலைவியும்
பிரிவின்றி ஒன்றி இருப்பதற்கு மகன்றில் சேர்க்கையைச்
சிறைக்குடியாந்தையார் தம் குறுந்தொகைப் பாடலில் உவமை வடிவில்
சிறப்பித்துப் பாடியுள்ளார்:
“பூஇடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போல” (57)
இங்ஙனம் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை ஆகியவற்றைப் பற்றி
குறுந்தொகையில் பதிவு செய்யப் பெற்றிருக்கும் அரிய செய்திகள் சுவையானவை.
அறிவியல் அடிப்படையில் அவை குறித்து நுண்ணாய்வு மேற்கொள்ளப் பெற்றால்
தெரிய வரும் அடிப்படையான உண்மைகள் பலவாகும். இவ்வகையில் மூதறிஞர்
பி.எல்.சாமியின் முன்னெடுப்பு - பங்களிப்பு - விதந்து போற்றத்தக்கதாகும்;
இளம்ஆய்வாளர்கள் பின்பற்றத்தக்கதும் ஆகும்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|