குறும்பாவுக்கோர் மஹாகவி!

முனைவர் இரா.மோகன்

‘லிமரிக்’ (Limerick) என்பது ஆங்கிலத்தில் கவிதைத் துறையில் நகைச்சுவைக்கு என்றே தோற்றுவிக்கப் பெற்ற ஒரு தனிவடிவம். இது ஓர் ஐந்தடிக் கவிதை; இதில் கடைசி அடி தான் முக்கியம். ஒரு நகைச்சுவை வெடி அல்லது திடுக்கிடும் திருப்பம் அதில் இருக்கும். கவிக்கோ அப்துல் ரகுமானின் பின்வரும் ஐந்தடிக் கவிதை இவ் வடிவத்திற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு:

“வள்ளுவரும் மாணவராய் ஆனார்
திருக்குறளில் தேர்வெழுதப் போனார்
        முடிவுவெளி யாச்சு
         பெயிலாகிப் போச்சு
பாவம், அவர் படிக்கவில்லை கோனார்!”


                                   (உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், ப.
81)

‘லிமரிக்’ என்னும் கவிதை வடிவத்தினை முதன்முதலில்
1966-ஆம் ஆண்டில் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஈழத்துக் கவிஞர் மஹாகவி, ‘லிமரிக்’குக்கு அவர் சூட்டிய தமிழ்ப் பெயர் ‘குறும்பா’. உருவத்தில் குறுகியது; எனவே ‘குறும்பா’. “படிக்கிறவர்கள் ‘இவ்வளவு குறும்பா?’ என்று கேட்பார்கள்; எனவே உருவம், உள்ளடக்கம் இரண்டையுமே குறிக்கும் பொருத்தமான பெயர் ‘குறும்பா (உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், ப.82).

எஸ்.பொ.வின் புகழாரம்

“நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலைசிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி அவர்கள் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத் தக்கதாக நூறு குறும்பாக்கள் கொண்ட இக் கவித்தொகையைத் தந்ததின் மூலம், தமிழ்க் கவிவளத்தைச் செழுமைப் படுத்துகிறார்” (முன்னீடு, மஹாகவி குறும்பா, பக்.16-17) என்பது மஹாகவி பற்றிய எழுத்தாளர் எஸ்.பொ.வின் புகழாரம்; அவரது குறும்பா குறித்த மதிப்பீடு.

‘இளம்பிறை’ இதழில் வெளிவந்த காலத்திலேயே மஹாகவியின் குறும்பாக்கள் வாசகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பினைப் பெற்றவை. அப்பொழுது ‘இளம்பிறை’ நிர்வாகிகள் குறும்பாக்களின் நயங்களை வாசகரிடம் இருந்து வரவழைத்து, அவற்றுள் தரமானவற்றைத் தமது பத்திரிகையில் வெளியிட்டும், சிறந்தவற்றிற்குப் பரிசுகள் வழங்கியும் வந்தமை குறிப்பிடத்-தக்கது.

மஹாகவியின் குறும்பாக்கள் ‘தமிழுக்கு அறிமுகமாகும் புதிதான கவிதை வடிவம்’ என்னும் சிறப்புக் குறிப்புடன் மித்ர பதிப்பக வெளியீடாக
2002-ஆம் ஆண்டில் வெளிவந்தன. தொகுப்பின் உள்ளே ‘சிரிப்பும் சிந்தனைக்கும் கருத்துக்கும் கற்பனைக்கும் பெருவிருந்தாம் 100 குறும்பாக்கள்’ என்னும் அறிமுகமும் இடம்பெற்றிருந்தது.

“காசு கொடுத்து இக் கவித்தொகையை வாங்கினோர் ஆசைக்கு நன்றி. அவர்க்கே இது படைப்பு” என அமையும் இத் தொகுப்பின் படையல் குறிப்பிலும் குறும்பு ததும்பி நிற்கக் காண்கிறோம்.

குறும்பாக்களின் நோக்கும் போக்கும்

தொகுப்பின் முன்னுரையில் ‘சுவைஞரே’ என விளித்து மஹாகவி நமது குறும்பாக்கள் குறித்து வெளியிட்டிருக்கும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது; அவரது குறும்பா உலகின் நோக்கையும் போக்கையும் தெளிவுபடுத்த வல்லது,

“கவிதை உலகளவு பரந்து
பல்வேறுபட்டது.
கடவுளையும் காதலியையும் போற்றுவது
மட்டும் அன்று அதன் பணி.
கட்டித்த சிந்தனை உடைய
பண்டிதர்களும்,
கோட்பாடுகளை விழுங்கிவிட்டுச்
செமித்துக் கொள்ள முடியாதவர்களும்,
மோப்பதற்கும்,
மோந்து முணுமுணுப்பதற்குமாக
எழுதப் படுவதன்று கவிதை.
அது சாதாரண மனிதனின்
பழுது படா உள்ளத்திற் பாயப்
பிறப்பது.
ஓய்வு கடமையின் ஒரு கூறே ஆகும்.
எனது குறும்பாக்கள் முற்றும்
ஓய்வுக் குரியனவும் அன்று.”
(ப.
26)

மஹாகவியின் கருத்தியலில் கவிதை எனப்படுவது ‘சாதாரண மனிதனின் பழுதுபடா உள்ளத்திற் பாயப் பிறப்பது’; ‘ஆகுல நீர பிற’.

வாசகரின் மதிப்பீட்டில் மஹாகவியின் குறும்பா ஒன்று

‘மஹாகவி குறும்பா’ என்னும் தொகுப்பில் முதலாவதாக இடம்-பெற்றிருக்கும் குறும்பா:

“உத்தேசம் வயது பதினேழாம்.
உடல் இளைக்க ஆடல் பயின் றாளாம்.
         எத்தேசத் தெவ்வரங்கும்
          ஏறாளாம்! ஆசிரியர்
ஒத்தாசை யால், பயிற்சி பாழாம்”
(ப.
27)

தமிழரின் சொத்தான ஓர் அரிய கலை, நமது கண் முன்னாலேயே பாழாக்கப்படுவதை மஹாகவி இக் குறும்பாவில் படம்பிடித்துக் காட்டுகின்றார். இந்த அவலத்தை, ஆபாசமற்ற வார்த்தைகளில், ஆனால் உயிர்த் துடிப்பு சற்றும் குலைந்து போகாத வகையில் சித்திரித்துக் காட்டி இருப்பது மஹாகவிக்கே உரிய தனிச்சிறப்பு ஆகும். பொதுவாக, பதினாறு வயது இளமங்கை எனச் சொல்வது இலக்கிய மரபு.

குறும்பாக்கோவின் மங்கை உத்தேசம் பதினேழு வயதினள்; பதினாறு ஆகவும் இருக்கலாம். அந்த இளமை ஊஞ்சலாடும் உடல் இளைக்க – கலை நோக்கிற்காக அன்று – அவள் ஆடல் பயின்றாள். அவ்வாறு பயின்றவள் அரங்கேற்றத்திற்கும் தயாராக இருக்கின்றாள். குறும்பாவின் முதல் இரண்டு வரிகளிலே நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஓர் அழகிய பெண்ணையும், ஆடல் கலையில் அவள் அடைந்த தேர்ச்சியையும் அறிந்து நாம் இன்புறுகின்றோம். குறும்பாவின் மூன்றாம் நான்காம் வரிகளிலே குறும்புத்தனமான ஒரு புதிர் போடப்படுகின்றது. உடல் இளைக்கப் பயின்ற அந்த இளநங்கை இப்பொழுது ‘எத்தேசத்து எவ்வரங்கும் ஏறாளாம்!’ இந்த வரிகளிலே நம்மைத் தடுத்தாட் கொண்டு, நமது கற்பனையை மஹாகவி வேறு திசையினில் திருப்பி விடுகின்றார். ஆசிரியரின் ஒத்தாசையால், இளம்பெண்ணின் கற்பு, வயிறு ஆகியவற்றோடு ஆடற்கலையும் களங்கப்படுகின்றன. உடல் இளைப்பு நோக்கமும், உடல் பருப்பதில் முடிகிறது. ‘ஒத்தாசை’ என்ற வழக்குச் சொல்லே இக் குறும்பாவின் வெல்லும் சொல். வயதைக் குறிப்பிட்டு பெண் மடந்தைப் பருவத்தினள் என்பதை முதல் அடியில் மஹாகவி காட்டிவிட்டார். அந்த வயதில் அலைபாயும் மனத்திற்கு ‘ஒத்தாசையாக ஆசிரியர் இருந்தாராம்’. சமூகத்தில் இன்று ‘கலைப் பயிற்சி’ என்ற பெயரில் நடக்கும் விரசத்தை ‘ஒத்தாசை’ என்ற மலினமான சொல்லால் கவிஞர் சுட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி – கலைப் பயிற்சி என்ற பொருளில் – பாழ். அதை அரங்கேற்ற முடியாது. பயிற்சி – வழக்கம் என்ற பொருளில் வழங்கி வரும் கற்பு – பாழாகி விட்டதாலும் பாழ்! ஆடல் பயின்ற அந்த அழகு உடலினாள் வயிறு பெருத்து விட்ட விடயம் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகிறது. அதே வேளை, கலைப் பயிற்சி என்ற பெயரால் இளம் பெண்ணின் கற்பில் ஏற்படுத்தப்பட்ட களங்கம் – கறை – நம் சிந்தையைக் கிளறுகின்றது குறும்பாவில் பொதிந்துள்ள இத்தனை நயமும் நுட்பமும் ஒரு வாசகரின் மதிப்பீட்டில் வெளிப்படுத்தப் பெற்றிருப்பது சிறப்பு.

முத்திரைக் குறும்பா

மஹாகவி தமது குறும்பாக்கள் வாயிலாக இன்றைய சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் ஊழலை நையாண்டி செய்கின்றார். இதற்குக் கட்டியம் கூறி நிற்கும் குறும்பா வருமாறு:

“முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்.
முன்னாலே வந்து நின்றான் காலன்.
         சத்தமின்றி, வந்தவனின்
         கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான். போனான்
முச் சூலன்.” (ப.
55)

‘தம்பிக்குச் சம்பளம் இவ்வளவு, கிம்பளமாக் கிடைப்பது இவ்வளவு’ என பெருமையாகப் பேசிடும் அவல நிலை இன்றைய சமுதாயத்தில் காணப்படு-கின்றது. ‘லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்’ என என்னதான் உரத்த குரலில் கொள்கை முழக்கம் இட்டாலும், லஞ்சம் வாங்குவது என்பது இன்று அலுவலகக் கடைநிலை ஊழியர் தொடங்கி உயர்பொறுப்பில் வீற்றிருக்கும் அதிகாரி வரை பழக்கமாகத் தொடங்கி, வழக்கமாக வளர்ந்து, வாடிக்கையாகக் கனிந்து, முடிவில் அதுவே வாழ்க்கையாக ஆகிப் போவதே இன்றைய நடைமுறை ஆகும். இந் நோய் மண்ணுலகில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று இன்று எமலோகம் வரையில் சென்று விட்டது என்பதை மஹாகவி இக் குறும்பாவில் நையாண்டி செய்திருக்கும் பாங்கு நயத்தக்கது. ‘சத்தம் இன்றி’, ‘வந்தவனின் கைத்தலத்தில்’, ‘பொத்தி வைத்தான்’ என்னும் மூன்றே சொற்றொடர்களைக் கையாண்டு லஞ்சம் கொடுப்பது என்பது எவ்வளவு கமுக்கமாகவும், கவனமாகவும் அலுவலகத்தில் நடைபெறுகின்றது என்பதை மஹாகவி இக் குறும்பாவில் போட்டு உடைத்திருப்பது மிக நன்றாகக் கை கூடியுள்ளது. ‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்னும் பழமொழி, இன்று ‘கையூட்டு என்றால் காலனும் கை திறப்பான்’ எனக் காலத்திற்கு ஏற்ற புதுக்கோலத்தினைப் பூண்டுள்ளது. ‘மஹாகவி உண்மையில் ஒரு குறும்பாக் கோவே’ என்பதை நிலைநிறுத்த வல்ல அருமையான குறும்பா இதுவாகும்.

சிந்தனையைத் தூண்டும் சிரிப்பு

எழுத்தாளர் எஸ்.பொ. ‘முன்னீடு’ என்ற பெயரில் தொகுப்பிற்கு எழுதிய ஆய்வுரையில் குறிப்பிடுவது போல், “குறும்பாவின் உயிரோ சிந்தனையைத் தூண்டும் சிரிப்பாகும்! சிந்தனையைத் தூண்டிச் சிரிப்பைக் கக்க வைக்கும் இடத்திலே ‘இது தான் குறும்பா?’ (குறும்பு + ஆ) என மகிழ்கின்றோம். (உருவங் குறித்து மட்டும் அன்றி, உயிர்ப் பொருள் குறித்தும் குறும்பா என்னும் நாம கரணம் இப் புதுக்கவிதை முயற்சிக்கு வெகு இயல்பாகப் பொருந்துகின்றது). சிந்தனையைத் தூண்டும் சிரிப்பே உயர்ந்த நகைச்சுவையின்பாற்படும். எனவே, குறும்பாவால் தமிழ்க் கவிதையில் நகைச்சுவை, ஆழமும் அகலமும் இறுக்கமும் இலகுவும் பெற்று ஒரு புதிய உச்சத்தை அடைய வழி பிறக்கின்றது” (ப.
15). ஓர் எடுத்துக்காட்டினால் இக் கருத்தினை நாம் நிலைநிறுத்தலாம்.
‘உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர்’ என்பது போல், அடிப்படையான உண்மையினைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், எல்லாம் அறிந்தவர் போல் பேசி வருவோர் இன்று சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் காணப்படுகின்றனர். இசைத் துறையிலும் இத்தகையோருக்குப் பஞ்சம் இல்லை. இதனை வெளிச்சம் போட்டுக் காட்டும் மஹாகவியின் குறும்பா ஒன்று:

“ஆகா! என்றார் ஒருச மீந்தார்.
ஐந்து பவுன் சங்கிலியை ஈந்தார்.
        ‘மோகன மென்றால் எனக்கு
         மோகம்!’ என்றார். பாடகரோ,
‘சா… ஹா… னா!?’ என்றபடி சோர்ந்தார்.”
(ப.
100)

இசைக் கச்சேரியைக் கேட்க வந்த ஒரு சமீந்தார், ‘ஆகா! அற்புதம்! மோகனம் என்றால் எனக்கு மோகம்!’ எனப் பாராட்டி, பாடகருக்கு ஐந்து பவுன் சங்கிலியை ஈந்தாராம்! பாடகரோ ‘சா… ஹா… னா!?’ என்ற படியே சோர்ந்தாராம்! பாடகர் பாடியது மோகன ராகத்தில் அமைந்த பாடல் அன்று என்ற இசையுலகின் அரிச்சுவடியைக் கூட அறியாதவராக வசதி படைத்த அந்த சமீந்தார் இருப்பது தான் அவலத்தின் உச்சம்! இதனை அங்கதச் சுவையோடும் மெல்லிய நகைச்சுவை உணர்வோடும் மஹாகவி இக் குறும்பாவில் படம்-பிடித்துக் காட்டி இருப்பது சிறப்பு.

“இலக்கியக் கூட்டம்
பரவசமூட்டும் பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கன் சகிதம்
முன்னால் இருப்பாள்
அந்த மாது
காது மட்டும் கேட்காது”
(குக்கூ, ப.
23)

என்னும் கவிஞர் மீராவின் குக்கூ கவிதை இங்கே ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

விலையாகிப் போன நவயுகக் காதல்

‘யாயும் ஞாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!’ (குறுந்தொகை, 40) என மலரினும் மெல்லிய காதல் உணர்வின் மாண்பினைப் பறைசாற்றியது குறுந்தொகைப் பாடல் ஒன்று. சங்க காலத்து இந்த ‘செம்புலப் பெயல்நீர்க் காதல்’ எல்லாம் இன்று மலையேறி விட்டது! சரி, இந்த நூற்றாண்டுக் காதல் எப்படிப்பட்டது எனக் கேட்கிறீர்களா? உங்கள் கேள்விக்குக் குறும்பா வடிவில் குறும்பான மொழியில் மஹாகவி தரும் விடை இதோ:

“சொந்தத்திற் கார், கொழும்பிற் காணி,
சோக்கான வீடு, வயல், கேணி
          இந்தளவும் கொண்டு வரின்
          இக்கணமே வாணியின் பாற்
சிந்தை இழப்பான் தண்டபாணி.”
(ப.
42)

இன்றைய காதலன், ‘நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, இன்று முதல் நீ வேறோ நான் வேறோ?’ எனக் காதலியிடம் உரையாடும் நிலையில் இல்லை; ‘அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’ என்றும் ‘தன்னை மறந்த லயந்தனில்’ பேசவில்லை. ‘சொந்தத்தில் கார், கொழும்பில் காணி, சோக்கான வீடு, வயல், கேணி’ என இந்த அளவு கொண்டு வந்தால், இக்கணமே வாணியின்பால் தன் சிந்தையை இழப்பானாம் தண்டபாணி. ‘சொந்தத்தில் கார்’, ‘சோக்கான வீடு’, ‘காணி’, ‘கேணி’, என இக் குறும்பாவில் கவிஞர் கையாண்டிருக்கும் சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கவை. ‘வாணி’ என்றும், ‘தண்டபாணி’ என்றும் இக் குறும்பாவின் நாயகிக்கும் நாயகனுக்கும் கவிஞர் பெயர் சூட்டி இருப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

மண்ணுலகிற்கு வந்த சிவபெருமான் படும்பாடு

தென்னாடு உடைய சிவபெருமான் – எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவபெருமான் – ஒருநாள் மண்ணுலகிற்கு வந்தபோது எதிர்கொள்ள நேர்ந்த அனுபவம் அலாதியானது. அதனை மஹாகவி தம் குறும்பா ஒன்றில் பதிவு செய்திருக்கும் விதம் அற்புதமானது.

“சிவபெருமான் இந் நிலத்தில் வந்தார்.
சில்லாலைப் பக்கம் நடந்தார்.
            அவர் உடை கண்டால் விடுமா
            அவ்விடத்து நாய்? அப்பன்
அவசரமாய்த் தம்விடை இவர்ந்தார்”
(ப.
85)

ஒரு நாள் விண்ணுலகில் இருந்து இறங்கி வந்து, சில்லாலைப் பக்கம் நடந்து சென்ற எல்லாம் வல்ல சிவபெருமானுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தீர்களா? சிவபெருமானின் உடை கண்ட அவ்விடத்து நாய் விடவில்லையாம்! விடாமல் குரைத்ததாம்! வேறு வழி இல்லாமல் அப்பன் அவசரமாய்த் தம் விடையின் மீது ஏறி விண்ணுலகிற்கே புறப்பட்டுப் போனாராம்!

நடைமுறைக் கண்ணோட்டத்தில் படைக்கப் பெறும் இதிகாச மாந்தர்கள்

பாஞ்சாலி சபதத்தில் ‘துகிலுரித்தல் சருக்கம்’ துயர உணர்ச்சி ததும்பி நிற்கும் ஓர் இடம்.

“கண்ண பிரான் அருளால் – தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணவண்ணப்பொற் சேலைகளாம் – அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தில் அடங்காவே – அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ!”


            (பாரதி பாடல்கள்: ஆய்வுப் பதிப்பு, ப.
306)

எனப் பாடுவார் கவியரசர் பாரதியார். மஹாகவி இந் நிகழ்வினைத் தனக்கே உரிய தனிப் பாணியில் ஒரு குறும்பாவாகப் படைத்துள்ளார்.

“பாஞ்சாலி ஆடையை உரிந்தார்,
பாண்டவரோ கல்லாய்ச் சரிமந்தார்.
         ‘ஏஞ்சாமி?!’ என்றழுதாள்
          இவள் களிக்கக் கண்ணபிரான்
ஆம், சேவை ஆயிரமாய்த் தந்தார்.”
(
30)

கண்ணபிரான் சேலை ஆயிரமாய்த் தந்தால் பாஞ்சாலியின் உள்ளத்தில் களிப்பு பிறந்தாதா, என்ன? ஆழம் காண முடியாத பெண் மனத்தின் இரகசியப் பக்கத்தினை அல்லவா இந்தக் குறும்பா தோலுரித்துக் காட்டி விடுகின்றது?

மகாபாரதத்துப் பாஞ்சாலியை மட்டுமன்றி, இராமாயணச் சீதையையும் மஹாகவி தம் குறும்பா ஒன்றில் வரவழைத்துள்ளார். ‘உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது’ என்பது பழமொழி. இதனை நினைவூட்டுவது போல் கவிஞர் படைத்துள்ள குறும்பா இது:

“சீதையை இராமபிரான் மீட்டார்.
சிற்றிடையின் கற்பை எடை போட்டார்.
         ஏதும் அவர்க் கையம் இல்லை!
         என்றாலும் நாட்டவர் வாய்
தீது; இலையேல் செய்வாரா!... மாட்டார்!”
(ப.
50)

அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமபிரான் மீட்டார். சீதையின் கற்பு குறித்து அவருக்கு ஐயம் ஏதும் இல்லை! ஆனாலும் அவர் சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்லி கற்பை எடை போட்டார். நாட்டு மக்களின் வாய் பொல்லாதது; இன்னாதது. இல்லையேல் இராமபிரான் இப்படி நடந்து கொள்வாரா, மாட்டார் என முடிகின்றது குறும்பா.

மாமன்னனையே பாடலால் கொன்று விடும் புலவர்!

மாமன்னன் குலோத்துங்கன் பகைவர்களை எல்லாம் வெற்றி கொண்டு வாகை சூடியவன்; குவலயம் நடுங்க அரசாண்டவன். ஆனால் அவனையே ஒரு புலவர் கொன்று விடுகின்றாராம். எப்படி என்கிறீர்களா?

“குலோத்துங்கன் வாகையொடு மீண்டான்.
குவலயமே நடுங்க அரசாண்டான்.
          ‘உலாத் தங்கள் பேரில், இதோ!’
         ஒரு புலவர் குரலெடுத்து
‘நிலாத் திங்கள்…’ எனத் தொடங்க, மாண்டான்.”
(ப
.51)

மஹாகவியின் குறும்பு தமிழ்ப் புலவரையும் விட்டு வைக்கவில்லை.

‘இந்தியக் காலந்தவறாமை!?’

‘நிகழ்ச்சி சரியாக 6 மணி அளவில் தொடங்கும்’ என அழைப்பிதழில் போடுவது நம் தனிக்குணம்! ‘இந்தியன் காலந்தவறாமை’
(Indian Punctuality) என்று இதற்குப் பெயர்! நிகழ்ச்சிக்குச் சரியான நேரத்தில் செல்லாமல், தாமதமாகச் செல்வது நமது இரத்தத்தில் ஊறிய பண்பு. ‘சிலருக்கு இந்து மதம் பிடிக்கும்; சிலருக்கு இஸ்லாம் மதம் பிடிக்கும் சிலருக்கு கிறித்தவ மதம் பிடிக்கும்; சிலருக்கு சமண மதம் பிடிக்கும்; சிலருக்கு பௌத்த மதம் பிடிக்கும். எனக்குத் தாமதம் பிடிக்கும்!’ என ஒரு முறை நிகழ்ச்சிக்குக் காலந்தாழ்த்தி வந்த கவியரசர் கண்ணதாசன் சொன்னாராம்! இரயில் வர வேண்டிய நேரம் திங்கள் கிழமை மாலை 5.58; இரயில் வந்த நேரமோ செவ்வாய்க்கிழமை மாலை 5.57. ஒரு நாள் கழித்து வந்தாலும் ஒரு மணித் துளிக்கு முன்னதாகவே வந்து சேர்ந்து விட்டதாம் இரயில்!

“ஆத்திரம் இல்லாதவன் தான் காத்தான்
5.58 இரயில் பார்த்தான்.
            காத்து நின்று நின்று இறந்தான்
            காண்! இரயில் வந்ததுவோ
ஈற்றில்
5.57
போற்தான்!” (ப.70)

இங்ஙனம் மஹாகவியின் குறும்பா உலகில் சிந்தனையைத் தூண்டும் சிரிப்புகள் அங்கிங்கு எனாதபடி எங்கும் சுடர் வீசி நிற்கக் காண்கிறோம்.

முத்தாய்ப்பாக, எஸ்.பொ. குறிப்பிடுவது போல் “இக்கோவையில் இடம் பெறும் நூறு குறும்பாக்களும் நூறு வகையின. சுவைஞர்களின் இரசனைத் தளத்திற்கேற்ப அர்த்த விரிவும், அழகுப் பொலிவுங் காட்டுவன… தேவையான நேரத்தில், தேவைப்படும் சிறு அளவுகளில் இவற்றை உட்கொண்டால், சுவையும் பலனும் அதிகமாகக் கிடைக்கும்” (பக்.
23; 25).



 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்