சங்க கால மக்களின் வணிகமும் பண்பாட்டுக் கூறுகளும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


க்களின் வளமான வாழ்விற்கும், வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழில்களாகும். அவ்வாழ்வியல் தொழில்களை மேற்கொண்ட பல்வேறுபட்ட தொழில் மாந்தர்களும் சங்ககாலத்தில் வாழ்ந்துள்ளனர். சங்ககாலத்தில் சாதிப்பாகுபாடு பிறப்பால் இருப்பினும் தொழில் அடிப்படையில் வெள்வேறு இன மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை சங்க நூல்கள் வழி அறியமுடிகிறது. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் போன்ற பிரிவுகளோடு பல்வேறு தொழில்களைச் செய்கின்ற பிற மக்களும் வாழ்ந்துள்ளனர். அவ்வகையில் குறிஞ்சி நிலத்தவர் குறவர் என்றும், முல்லை நிலத்தவர் ஆயர் என்றும், மருத நிலத்தவர் உழவர் என்றும், நெய்தல் நிலத்தவர் பரதவர் என்றும் பெயர் பெற்றனர். இவர்களைத் தவிர உழவர், நெசவாளர், கொல்லர், தச்சர், குயவர், வண்ணார், உமணர், பறையர், பாணர், துடியர், கடம்பர், வேட்டுவர், கணியர் போன்றோரும் வாழ்ந்துள்ளனர். அவர்களுடைய வாழ்வியல் நிகழ்வுகளையும், தொழில் திறத்தோடுகூடிய அம்மக்களின் நேர்மைப்பண்பையும் ஆராய்ந்து அவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.

உழவர்

ஒரு நாட்டின் தலைமைத் தொழிலாகவும், உயிர்த்தொழிலாகவும் போற்றப்படுவது உழவுத்தொழிலே. அவ்உழவுத் தொழில் பன்னெடுங்காலமாகத் தமிழரது தொழிலாக அமைந்திருப்பினும் இதற்கான முதல் சான்றினைத் தருவது பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியமேயாகும். அக்காலத்தில் உழவர்கள் 'வேளாண் மாந்தர்' என அழைக்கப்பட்டுள்ளனர்.

'வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிய பிறவகை நிகழ்ச்சி'


என்ற நூற்பா உழவர்கள் விளைச்சலைப் பெருக்குவதிலேயே தம் முழுகவனத்தையும் செலுத்தி ஆர்வத்தோடு செயல்பட்டுள்ளனர் என்பதை புலப்படுத்துகின்றது. புpற தொழில் செய்வோரையும் உயிர் வாழச் செய்கின்ற உழவர்களே இவ்வுலகத்திற்கு அச்சாணியாவர் என்பதை வள்ளுவர்,

'உழுவார் உலகத்தார்க்கு ஆணி அது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து'


என்று தமது குறட்பாவின் மூலம் விளக்கியுள்ளார். உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் என்ற சொற்கள் உழவுத் தொழில் செய்வோரையேக் குறிக்கும். தமக்குரிய நிலத்தில் தாமே உழுது பயிர் செய்பவர் 'களமர்' எனப்பட்டனர். உழவர் வீட்டிலிருந்து உணவும், உடையும் பெற்று அவர்களுடைய நிலத்தில் உழவுத்தொழில் செய்து வந்தவர் 'மனைக்களமர்' என அழைக்கப்பட்டனர். இதனை,

'களமர்க்கு அரித்த விளையல்'
'மனைக் களமரொடு களம்'


என்ற தொடர்கள் உறுதிப்படுத்துகின்றன. உழவர்கள் உண்ணுவதற்கேற்ற பொருள்களை விளைவித்துத் தாமும் உண்டு பிறரையும் உண்பிக்கின்ற மேலான .பண்பு உழவர்களிடம் காணப்பட்டது. மக்களை வாழ்விக்கும் உழவரே மன்னரின் ஆட்சிக்கு பெரும் துணை புரிகின்றார். ஏனெனில் உழவர் உழுதொழிலைச் செய்யாவிடில் உலகம் பசியால் வருந்தும். நாட்டில் பஞ்சம் ஏற்படும். அரசாட்சியை செவ்வனே செயல்படுத்த முடியாது. ஆகவே மக்களின் பசித் துன்பத்தைப் போக்கி நாட்டின் நல்லாட்சிக்குத் துணைபுரிவது உழவரே புலனாகிறது. தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டுவதை மறைத்து வைக்காது கொடுக்கும் இரக்கப் பண்பும் உழவர்களிடம் இருந்துள்ளது. அதனால் தான் ஒளவையார் இவ்வேளாளரின் உதவும் மனப்பான்மையை,

'செட்டி பொட்டி மக்கள் வழிச் செல்லோமே
செக்காரப் பொட்டி மக்கள் வாசல் வழிப் போகோமே
முட்டிபுகும் பார்ப்பாரகத்தை எட்டிப்பாரோமே
எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்'


என்ற பாடல் வழியே குறிப்பிட்டுள்ளார். மற்ற பிரிவினரைக் காட்டிலும் வேளாளரான உழவுத்தொழில் புரிவோர் பிறர்நலம் பேணும் பெருமைக்குரியவராதலால் அவரிடம் சென்று உதவி கேட்டால் உறுதியாக கிடைக்கும் என்பதை உணர்ந்த ஒளவையார் அதனை தமது பாடலின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையே வள்ளுவர்,

'இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்கரவாது
கைசெய்து ஊண் மாலையவர்'


என்று கூறியுள்ளார். உழவர் களை பறித்தல், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளைச் செய்வது இன்றியமையாததாகும். நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் சென்று வயலில் விளைவித்த பொருட்களை பாதுகாத்தல் அவசியமாகும். இவ் உழவுத் தொழிலின் சிறப்பை புறநானூறும்,

'பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே'


என்று குறிப்பிடுகின்றது. உழவர் நிலத்திலே உழுது அதிக விலை நெல்லைப் பெறுவர். களத்தில் நெல்லை அடித்து மணிகளை எடுத்த பின், வைக்கோலில் மாடுகளை விட்டு உழக்கி எஞ்சிய நெல்லையும் எடுப்பர் என்பதை,

'பரூஉப்பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்தாங்கு'


என்ற பதிற்றுப்பத்துப் பாடல் உணர்த்துகின்றது. மேலும்,

'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை'


என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப இவ்வுலகம் இயங்குவதற்குக் காரணமான உழவர் உழுது, பயிர் செய்து மக்களைப் பாதுகாக்கும் மேலான தொழில் செய்யும் நற்பண்பும் அவர்களிடம் காணப்பட்டன என்பது சங்கப்பாடல் வழி புலனாகிறது.

நெசவாளர்

ஒரு நாட்டின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் எடுத்துக்காட்டும் கருவி ஆடையாகும். அத்தகைய நாகரிகத்தின் சின்னமான ஆடை நெய்யும் தொழிலைச் செய்பவர்கள் நெசவாளராவர்.

'செய்யும் தொழிலனைத்தும் சீர்தூக்கிப் பார்க்குங்கால்
நெய்யுந் தொழிற்கு நிகரில்லை'


என்று சிறப்பித்துக் கூறப்படும் சீரிய தொழிலே நெசவுத்தொழிலாகும். மானத்தைக் காக்கும் மாபெருங்கவசமே ஆடையாகும். அதனால் தான், 'ஆடையில்லாதவன் அரை மனிதன், ஆள்பாதி ஆடை பாதி' என்னும் முதுமொழிகளை நம் முன்னோர் கையாண்டுள்ளனர். அக்காலத்திலேயே நெசவாளர்கள் தம் தொழில் திறத்தால் புகை போன்ற மென்மையும், ஆவி போன்ற நுண்மையுமான ஆடைகளை தயாரித்துள்ளனர் என்பதை,

'புகை விரிந்தன்ன பொன்துகில்'
'ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்'


என்ற தொடர்கள் உறுதிப்படுத்துகின்றன. பருத்தி நூலாலும், பட்டு நூலாலும் ஆடைகள் நெய்யப்பட்டுள்ளன. எலி மயிர் முதலியவற்றால் கம்பளங்களும் நெய்யப்பட்டுள்ளன என்பதை,

'நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதி'


என்னும் சிலப்பதிகார அடிகளால் அறிய முடிகிறது. ஆடைக்கு 'அறுவை' என்ற பெயரும் வழக்கில் இருந்துள்ளது. 'நீண்ட அளவினதாக நெய்யப்படும் ஆடை, தனித்தனியாக அறுக்கப்படுதலால் அறுவை எனப் பெயர் பெற்றது. அவ் ஆடை நெய்தோர் அறுவையர் என அழைக்கப்பட்டுள்ளனர்' என்று லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் 'சங்ககாலத் தமிழர் வாழ்வு' என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய நெசவாளர் வாழ்ந்த பகுதிகள் அறுவையர் தெரு என்றும் அழைக்கப்பட்டுள்ளமையை,

'கண்ணுழை கல்லா நுண்ணூல் கைவினை
வண்ண அறுவையர் வளந்திகழ் மறுகு'


என்ற மணிமேகலை அடிகளால் அறிய முடிகிறது. 'தற்போது காஞ்சிபுரம் பட்டு, ஆரணிப்பட்டு, தர்மாவரம்பட்டு, சின்னாளம்பட்டு என ஊர்களின் பெயர் தாங்கிப் பட்டாடைகள் விளங்குவது போல சங்ககாலத்தில் மாளிதம், கோசிகம், காம்பு, நேந்திரம் என்பன அக்காலத்தில் பட்டு நூலால் செய்யப்பட்ட ஆடைகளுக்கான பெயர்களாக வழங்கப்பட்டன'16 என்று மு.பி.பாலசுப்பிரமணியன், 'இலக்கிய நெஞ்சம்' என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பட்டுத்துணியை 'நூலாக் கலிங்கம்' என்றும் அழைத்துள்ளனர் என்பதை,

'நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ'


என்ற தொடர் மெய்ப்பிக்கின்றது. சங்ககாலமக்கள் அவரவரின் தகுதிக்கு ஏற்ப உடையணிந்துள்ளனர். ஆண்கள் இடையில் ஓர் ஆடையும், மேலே ஒரு துண்டும் அணிந்துள்ளனர். இதனை,

'உண்பது நாழி உடுப்பவை இரண்டே'


என்ற நக்கீரர் பாடலால் அறியலாம். மேலாடையும் கச்சும் மக்கள் அணிந்துள்ளமையை மதுரைக்காஞ்சியும்,

'திண்டேர்ப் பிரம்பிற் புரளும் தானை
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்தடி'


என்ற பாடல் வரிகளால் உறுதிப்படுத்துகின்றது, தொழில் திறம் வாய்க்கப்பெற்ற நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட செக்கர் வானைப் போன்ற செவ்வண்ண மூட்டிய, பூத் தொழில் செய்யப்பட்ட நுண்ணிய புடவைகளும் மதுரையில் விற்கப்பட்டன. இதனை,

'செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்
கண் பொருபு உகூஉம் ஒண் பூங்கலிங்கம்'


என்ற அடிகளின் மூலம் மதுரைக் காஞ்சியும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பாம்பின் தோல் போன்ற வடிவுடையனவாய், மூங்கிலின் உட்பக்கத்தில் உள்ள தோலைப் போன்று நெய்யப்பட்ட நூல் இழைகளின் வரிசையை அறிய முடியாதவாறு, அழகிய பூ வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடைகளையும், சங்ககாலத்து நெசவாளர் நெய்துள்ளனர் என்பதை,

'பாம்புரியன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழை அணிவாரா
ஒண் பூங் கலிங்கம்'
'நீலக்கச்சை பூவார் ஆடை'
'நேர்கரை நுண்ணூல் கலிங்கம்'


என்ற பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. சங்ககாலத்தில் நெசவாளர் பெருமக்கள் தழை, மரநார், பருத்தி, பட்டு ஆகியவற்றைக் கொண்டும் ஆடைகள் நெய்துள்ளனர் என்பதை,

'போது விரிப்பகன்றைப் புதுமலரன்ன
அகன்று மடி கலிங்கம்'


என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு அக்காலத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் வசதிக்கும் ஏற்ற ஆடைகளை நெய்து விற்கும் தொழிற் திறம் சங்க கால நெசவாளர்களிடம் இருந்துள்ளமை இதன் மூலம் தெளிவாகின்றது.

பொற்கொல்லர்

சங்ககால மக்கள், பொன், அணிகலன்களையும், கல் இழைத்த அணிகலன்களையும் அணிந்திருந்தனர். அரசனது கிரீடங்களும், அணிகலன்களும் மிக நுண்ணிய வேலைப்பாடு கொண்டதாக இருந்தது. இவற்றைச் செய்யும் சிறப்புடையோர் 'பொற்கொல்லர்' என்றும், 'கம்மியர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நால்வகைப் பொன்னையும் பகுத்து அறியும் ஆற்றல் பெற்ற பொன் வணிகர், இவ்விடத்து இப்பொன் உள்ளது என்பதை விளக்க விளம்பரக் கொடிக் கட்டி நேர்மையாக வாணிகம் செய்துள்ளனர். உண்மையும், நேர்மையும் மிக்க 'கம்மியன்' குற்றமறச் செய்த அழகு மிக்க மேகலையையும், பொன்னாலாகிய மாலைகளையும் அணிந்திருந்த ஒரு மறக்குடிப் பெண் அணிந்திருப்பாள். ஆதனை காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் என்னும் புலவர்,

'ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்
தருமணல் இயல்வோள்'


என்ற பாடலில் விளக்கியுள்ளார். இதன் மூலம் அக்காலப் பொற்கொல்லர்கள் தொழிலின் நேர்மைத் திறத்தோடு விளங்கிய பான்மையை அறியமுடிகிறது. ஆரச மாதேவியரும், வணிக மகளிரும் சீரிய வேலைப்பாட்டுடன் கூடிய அணிகலன்களை அணிந்துள்ளனர். வேந்தர்களுக்கென்று முடி முதலிய அணிகலன்களைச் செய்யும் அரண்மனைப் பொற்கொல்லரும் இருந்துள்ளனர். இவர்கள் அரசனால் சிறப்பு செய்யப்பட்டுள்ளனர்.

அணிகலன்களின் வகைகள்

மகளிர் பல்வேறு பெயர்களிலும் வெள்வேறு வகையான அணிகலன்களை அணிந்துள்ளனர். காலணிகளின் பெயர்கள் சிலம்பு, பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் என்பனவாகும்.

இடையணி

ஏழுகோவை, எட்டுக்கோவை, பதினாறு வகை, பதினெட்டுக்கோவை, முப்பத்திரண்டு கோவை உடையதுமான மேகலை இடைணியாகக் அணியப்பட்டது.

தோள் அணிகள்

கண்டிகை என்னும் மாணிக்க வளையும், பொன் தொடரால் பிணித்த முத்து வளையும் தோள் அணிகலன்களாகும்.

முன்கை அணிதல்

முகப்பிற் மாணிக்கங்கள் கட்டப்பட்டு அதன் பக்கங்களில் வயிரங்கள் பதிக்கப்பட்டு சித்திர வேலைப்பாடமைந்த சூடகம், செம்பொன்னால் செய்த வளை, நவரத்தினவளை, சங்குவளை, பவழவளை போன்றவையாகும்.

மோதிரங்கள்

வாளை மீன் வாய் பிளந்தாற் போல அமைக்கப்பெற்ற நெளி மோதிரமும், மாணிக்கங்கள் பதிக்கப்பெற்ற மோதிரமும் கைவிரல்களில் அணியப்பட்டன.

கழுத்தணிகள்

வீரச்சங்கிலி, நேர்ச்சங்கிலி, சரப்பளி, முத்துமாலை முதலியனவாகும்.

காதணிகள்

முகப்பிற் கட்டிய இந்திர நீலக்கற்களின் இடையிடையே வயிரங்கள் பதித்த குதம்பை காதணியாகும்.

தலைக்கோலம்

முத்து, வலம்புரிச்சங்கு, பொன், கற்கள் போன்றவற்றைக் கொண்டு செய்ய தலைக்கோலம் கூந்தலுக்கு அழகு செய்த அணிவகையாகும். 'இத்தகைய அணிகலன்களை மாதவி அணிந்துள்ளாள்' என்று சிலப்பதிகாரம் கூறுவதன் மூலம் அக்கால பொற்கொல்லரின் நுண்ணிய அறிவும், கற்பனையோடு கூடிய தொழிற்திறனும் வெளிப்படுகிறது.

அரசர்கள் செல்வ வளத்தின் காரணமாக தாமும் தம்மை நாடி வரும் பிறரும் உண்ணுவதற்கு பொன்னாலான பாத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். சான்றாக, குமணன் பாணர்களுக்கு தாளிப்புடன் கூடிய சுவை பொருந்திய நெய்யுடைய உணவினைப் பொன்னால் செய்த கலங்களில் இட்டு உண்ணும்படி செய்தான் என்பதையும் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர்,

'குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
மதிசேர் நாண்மீன் போல நவின்ற
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீ '
என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
'கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ'


என்ற தொடரும் இதனையே உணர்த்தி நிற்கின்றது. இதன் மூலம் சிறந்த வேலைப்பாடமைந்த உண்ணும் கலங்களும், பல்வேறு வகையான அணிகலன்களையும் செய்வதில் அக்காலப் பொற்கொல்லர் சிறந்து விளங்கியுள்ளனர் என்பது உறுதியாகின்றது. தன்னுடைய தொழிற்திறம் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற பொதுநலப்பண்பு பொற்கொல்லரிடம் மிகுந்திருந்தது.

தச்சர்

சங்ககாலத்தில் தச்சர்கள் அழகிய தூண்களையும், வேலைப்பாடு மிக்க திண்ணிய கதவுகளையும், அரசர்கள் பயன்படுத்துதற்குரிய அழகிய கட்டில்களையும் செய்து கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது மக்களுக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சாமான்களையும், வண்டிகளையும், தேர்களையும், கப்பல்களையும் செய்து கொடுத்துள்ளனர். மேலும், நால்வகைப் படைகளில் தேர்ப்படையும் ஒன்றாக இருந்ததால் தேர் செய்வது தச்சர்களின் முதன்மையான கடமையாக இருந்துள்ளது. அக்காலத்தில் தேர் செய்யப்பட்ட வன்மையை,

'--------------------------வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே'


என்ற புறநானூற்றுப் பாடல் மூலம் ஒளவையார் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு எட்டு தேர்களைச் செய்யும் ஒரு தச்சன் ஒரு மாத காலம் அரிதின் முயன்று திண்மையான தேரை செய்யக்கூடிய ஆற்றலோடும் விளங்கியுள்ளமையை இதன் வழி அறிய முடிகிறது. எனவே, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களையும், அரசாட்சிக்கும், வீரத்திற்கும் துணைபுரியும் தேர்களையும் உருவாக்கும் உன்னத தொழிலைத் தச்சர்கள் செய்துள்ளனர். பிறருடைய வாழ்க்கைக்குத் தேவையான மரச்சாமான்களை உருவாக்குவதிலும் தச்சர்கள் சிறந்து விளங்கினர். இதன் மூலம் மக்களின் அத்யாவசியத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உழைக்கும் உன்னதப் பண்பு தச்சரிடம் காணப்பட்டது.

குயவர்

மட்பாண்டம் செய்யும் தொழில்புரிபவர் 'குயவர்' எனப்பட்டனர். பச்சை மண்ணால் செய்த கலத்தைச் சூளையில் இட்டு எரித்துப் புனைவது மட்கலமாகும். பெரிய சூளைகளில் பானைகளும், பிற கலன்களும் சுடப்பட்டதை,

'இருள் திணிந்தன்ன கரூஉத்திரள் பரூஉப்பகை
அகல் இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை'


என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. இத்தகைய சூளைகளில் உருவாக்கப்பட்ட மட்பாண்டங்களையே சங்க கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். உணவு சமைத்தற்குரிய கலம் 'அடுகலம்' எனப்பட்டது. நீர் நிறைத்து வைக்கவும் மட்பாண்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், இறந்தவர் உடலைப் பெரிய மட்கலத்தில் இட்டுப் புதைப்பது அக்கால வழக்கமாகும். எனவே, உடல்களைப் புதைப்பதற்கும் தாழிகள் தேவைப்பட்டன.

வாணிகம்

நாட்டில் ஓர் இடத்தில் உண்டாகும் விளை பொருள்களை, அவை உண்டாகாத பிற இடங்களுக்கு அனுப்புதலும், பல நாட்டுப் பண்டங்களை வருவித்து விற்றலும், உள் நாட்டுப் பண்டங்களை வருவித்து விற்றலும் வணிகர் தொழிலாகும். இவ்வாணிகமே சங்ககாலத்தில் வெளி நாட்டு வாணிகம், உள்நாட்டு வாணிகம் என இருவகைகளில் சிறந்த முறையில் வளர்ச்சியடைந்திருந்தது. அப்பொழுது நடைபெற்ற வாணிகத்தை, கடல் வாணிகம் தரை வாணிகம் கரையோர வாணிகம் என்று மூன்றாகப் பகுத்துக் கூறலாம்.

கடல் வாணிகம்

கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழகம் கடல் வாணிகத்தில் சிறப்புற்றிருந்தது. கண்ணாடி, கற்பூரம், பட்டு முதலிய பண்டங்கள் சீனத்திலிருந்தும், இலவங்கப்பட்டை, கிராம்பு, சாதிக்காய் முதலியன நாகநாடுகள் எனப்பெயர்பெற்ற கிழக்கு இந்தியத் தீவுகளிலிருந்து, தமிழகத்தில் இறக்குமதியாயின.
குதிரைகள் அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன. சித்திரப்பேழை, பாவை விளக்கு, மது முதலியன மேற்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. தேக்கு, அரிசி, அகில், சந்தனம், இஞ்சி முதலிய பொருள்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. எனவே, தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும், கடல் சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடல் பயணம் செய்வதிலும் கப்பல் வாணிகம் செய்வதிலும் தொன்று தொட்டு ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. 'திரைக் கடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர் வாக்காகும். அதற்கேற்பவே சங்ககால மக்கள் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். சங்ககாலத்தில் புணை, பரிசல், தோணி, ஓடம் என்ற சிறிய கலங்களும், திமில், படகு, அம்பி என்ற சற்று பெரிய கலங்களும் இருந்துள்ளன. வங்கம், கப்பல், நாவாய், போன்ற மிகப்பெரிய கலங்கள் அயல்நாட்டிற்குச் சென்று திரும்பி வந்துள்ளன. கரிகால சோழனுடைய முன்னோனான ஒரு சோழ மன்னன் கடற் காற்றின் உதவியினால் கடலில் நாவாய் ஓட்டினான் என்பதை,

'நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக'


என்ற பாடல் உறுதிப்படுத்துகின்றது. கப்பல் வாணிகர் கடலில் உண்டான முத்துக்களையும், சங்குகளையும் அறுத்து செய்யப்பட்ட வளையல்களையும், நவதானியங்கள், மீன்களை உப்பிட்டுப்பதப்படுத்திய உப்புக் கண்டங்கள் (கருவாடு) ஆகியவற்றையும் நாவாய்களில் ஏற்றிச் சென்று அயல் நாடுகளில் விற்று வந்தனர் என்பதை,

'முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்
அரம் போழ்ந்து அறுத்த கண்நேர் இலங்குவளை
பரதர் தந்த பலவேறு கூலம்
இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள்உப்பு
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கைத்திமிலர்
கொழுமீன் குறைய துடிக்கண் துணியில்
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல்தோறும் வழி வழிச்சிறப்ப'


என்ற பாடல் எடுத்துரைக்கின்றது. மேலும் அயல் நாட்டிலிருந்து குதிரைகளையும் ஏற்றிக் கொண்டு வந்தனர் என்பதை, 'நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்' என்ற தொடரும் சுட்டி நிற்கின்றது. துறைமுகந்தோறும் கலங்கரை விளக்கம் இருந்தது.

துறைமுகங்களில், பல்வேறு நாட்டு மரக்கலங்கள், தத்தம் கொடிகளோடு காட்சி அளித்தன. அவை பலவகைப் பண்டங்களை நாள்தோறும் ஏற்றுவதும், இறக்குவதுமாய் இருந்தன. பொருள்கள், வரி வாங்குவதற்காக நிறுக்கப்பட்டு, அவ்வத் தமிழ்நாட்டு அரசரின் முத்திரை பொறிக்கப்பட்டது. பின் துறைமுகத்தை விட்டு நீங்கும் வரையில் அப்பொருள்கள் சிறந்த முறையில் காவல் செய்யப்பட்டன.

மீன்பிடிக்கும் கட்டுமரம் முதல் குதிரைப் படையை ஏற்றத்தக்க நாவாய் வரையில் பலதிறப்பட்ட மரக்கலங்கள் தமிழக வணிகர்க்கு உரியனவாய் இருந்தன. இதன் மூலம் சங்ககாலத்தில் கடல் வாணிகம் சிறப்புற்றிருந்தமையை உணர முடிகிறது.

கரையோர வாணிகம்

கொற்கை, தொண்டி, முசிறி, காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுகப்பட்டினங்களில் நாவாய்களிலிருந்து இறக்குமதி, செய்யப்பட்ட பொருள்களை வாங்கிக் கொண்டு தமிழகத்துப் பொருள்களான மிளகு, அகில், சந்தனம், பருத்தி, முத்து போன்ற பல்வேறு பொருள்களும் ஏற்றுமதி செய்யப்பட்டதால் அத்துறைமுகங்கள் கரையோர வாணிகத்திற்குப் பெரிதும் துணை புரிந்தன. சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தர்களும் வாணிகரை ஊக்குவித்தனர். சங்ககாலத்தில் நிகழ்ந்த தமிழர் - யவனர் வாணிகத் தொடர்பைப் பிளைனி, தாலமி முதலியோர் எழுதிய நூல்களில் இருந்து அறியமுடிகிறது.

யவனரோடு கொண்ட வாணிகம்

கிரேக்கர்களும், ரோமரும் யவனர் என்று அழைக்கப்பட்டனர். இவ்யவன வாணிகர் பொற் காசுகளையும், வெள்ளி காசுகளையும் கொடுத்துத் தமிழ்நாட்டுப் பண்டங்களை வாங்கிச் சென்றனர். உணவுக்கு மிக முக்கியமான பொருளாக விளங்கிய மிளகு சேரநாட்டு மலைச்சாரல்களிலே மேற்குத் தொடர்ச்சி மலைகளிலே பயிரிடப்பட்டன. சேரநாட்டு மக்கள் மிளகைப் பயிரிட்டு மிளகு உற்பத்தி செய்தார்கள்.

அது தவிர மலைகளில் சந்தன மரங்களின் மேலேயும் மிளகுக் கொடிகள் படர்ந்து வளர்ந்தன என்பதை, 'கறிவளர் அடுக்கத்து' என்ற தொடர் மூலம் அறியலாம். எனவே, சேரநாட்டு மக்கள் தம் நாட்டில் விளைந்த மிளகை வீடுகளில் மூட்டை கட்டி வைத்தார்கள். யவனக் கப்பல்கள் வந்த போது, மிளகு மூட்டைகளைப் படகுகளில் ஏற்றிச் சென்று, யவனர்களிடம் விற்பனை செய்தனர். அதற்கான விலையாக பொற்காசுகளையும் பெற்றுக் கொண்டனர் என்பதை பரணர்,

'மனைக்குவைஇய கறி மூடையால்
கலிச்சும்மைய கரைகலக் குறுந்து
கலம் தந்த பொற்பரிசம்
கழித் தோணியான் கரை சேர்க்கும்'


என்ற புறநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். யவனர்கள் தமிழர்களிடம் பொருள் வாங்கிச் செல்வதோடு, அவர்கள் நாட்டிலுள்ள மதுவையும் தமிழகத்திற்குக்கொண்டு வந்து வாணிகம் செய்தனர். அத்தகைய மதுபானத்தைச் சங்ககால அரசர்கள் அருந்தியுள்ளனர் என்பதை,

'யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்த நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
ஆங்கு இனிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற'
என்ற புறநானூற்றுப் பாடலால் அறியலாம்.


முத்து வாணிகம்

தமிழகத்து முத்துக்களில் பாண்டிநாட்டு முத்து உலகப்புகழ் பெற்றிருந்தது. முத்து நவஇரத்தினங்களில் ஒன்றாக மதிக்கப்பட்டது. செல்வர் வீட்டுப் பெண்களும், அரசகுமாரிகளும், அரசியரும் முத்து மாலைகளை அணிந்தார்கள். ரோமாபுரி நாட்டு மகளிர் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெரிதும் மதித்தனர். தமிழகத்துக்கு வந்த யவன வாணிகர் முத்துக்களையும் வாங்கிச் சென்றனர். இம் முத்து கிடைக்கும் கொற்கைத் துறைமுகத்தின் சிறப்பை மதுரைக்காஞ்சி,

'சீருடைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்
இலங்குவளை இருஞ்சேரிக்
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கை'


என்ற பாடலின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. சேரநாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய முசிறியிலும் முத்துக்கள் கிடைத்தன. அம் முத்துக்கள் முசிறியில் உள்ள 'பந்தர்' என்னும் ஊரில் விற்கப்பட்டன. என்பதை,

'பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்'
'பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்
--------------------------------------------
தென்கடல் முத்தமொடு'


என்ற பாடல் வரிகள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வாறு சங்க காலத்தில் மிளகு, முத்து, பருத்தி போன்ற பல்வேறு பொருள்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அயல்நாட்டு வாணிகம் மேன்மையுற்றிருந்தமையை இதன் மூலம் அறிய முடிகிறது.

தரை வாணிகம்

பண்டைத் தமிழர் தரை வழியாகவும், பல நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்துள்ளனர். இத்தரை வாணிகம் உள்நாட்டு வாணிகம், அயல்நாட்டு வாணிகம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் வாணிகம் செய்தவர்கள் 'பெருங்குடி வாணிகர்' என அழைக்கப்பட்டுள்ளனர். அயல் நாடுகளுக்கு வாணிகஞ் செய்யச் செல்லும்போது ஒன்று சேர்ந்து கூட்டமாகச் சென்றார்கள். இந்த வாணிகக் கூட்டத்துக்கு 'வணிகச் சாத்து' என்று பெயர். இவர்கள் வணிகப் பொருள்களை கழுதைகள், எருதுகள், வண்டிகள் ஆகியவற்றில் ஏற்றிச் சென்றனர். அவ்வாறு செல்லும்போது பாலை நிலங்களில் ஆறலைக்கள்வர் அவ்வணிகரின் பொருள்களைப் பறிக்க நேர்ந்தது. இதனால் அவர்களை அடித்து விரட்டி, தம் பொருள்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வாணிகக் கூட்டம் வில் வீரர்களைத் தங்களோடு அழைத்துச் சென்றார்கள். வாணிகர்கள் உப்பு, அறுவை என்ற துணி, போன்றவற்றை தரை வாணிகத்தில் விற்பனை செய்துள்ளனர்.

பண்ட மாற்று முறை

சங்ககால மக்கள் அன்றாடத் தேவையான நெல், உப்பு, தயிர், மீன் இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்து கொண்டார்கள். பண்டமாற்று என்பது, 'ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக மற்றொரு பொருளைக் கொள்வதாகும்'. அக்காலத்தில் அதிக விலையுள்ள பொருள்களை மட்டுமே காசு கொடுத்து வாங்கினார்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும், ஊர்களிலும், கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்துள்ளது. இத்தகைய பண்டமாற்று முறையில் உப்பினைக் கொடுத்து நெல்லைப் பெற்றுள்ளனர் என்பதை,

'வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப்பஃறி'


என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. வேடன் தான் வேட்டையாடிக் கொண்டு வந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை பெற்றுக் கொண்டான். ஆய்மகள் (இடைச்சியர்) தயிரைக் கொடுத்து நெல்லைப் பெற்றுக் கொண்டாள். இதனை,

'கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப'


என்ற பாடல் உணர்த்துகின்றது. கடற்கரையோரத்திலே நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர் கடலிலே சென்று இறால், மீன் முதலியவற்றைப் பிடித்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த மீனைப் பரதவ மகளிர் பண்டமாற்று முறையில் நெல்லாக மாற்றினார்கள் என்பதை, 'மீன் நொடுத்து நெல் குவைஇ' என்ற தொடர் உறுதிப்படுத்துகின்றது. வேடர் தேனையும், கிழங்கையும், யானைத் தந்தங்களையும், மதுபானக் கடையில் கொடுத்து அதற்கு மாறாக வறுத்த மீன் இறைச்சியையும் மதுவையும் வாங்கி உண்டனர் என்பதை,

'தேனொடு கிழங்கு மாறியோர்
மீனொடு நறவு மறுகவும்
தீங்கரும் பொரு அவல் வகுத்தோர்
மான் குறையோடு மது மறுகவும்'


என்ற பாடல் வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு சங்க காலத்தில் பண்டமாற்று முறை மக்களிடம் சிறப்பிடம் பெற்றிருந்தது. இதற்குக் காரணம் மக்கள் தம்மிடம் இருக்கக் கூடிய அதிகமான விளைப்பொருட்களை மற்றவருக்குக் கொடுத்து பிறர் நலம் பேணும் பண்பாளராகவும் விளங்கியுள்ளனர்.

அங்காடிகள்

மதுரை நகரிலே 'நாளங்காடி, அல்லாங்காடி' என்று இரண்டு வகையான வாணிகம் செய்யும் இடங்கள் இருந்தன. நாள் அங்காடி - பகலில் வாணிகம் நடைபெறும் இடம் அல் அங்காடி - இரவில் வாணிகம் நடைபெறும் இடம் எனப் பொருள்படும். இவ் அங்காடிகள் பெரிய நகரங்களில் கூடின. புகார் நகரத்து அங்காடிப் பற்றிச் சிலப்பதிகாரமும், மதுரை நகரத்து அங்காடி பற்றி மதுரைக்காஞ்சியும் குறிப்பிடுகின்றன.
பண்டைக் காலத்தில் கொடிகளையே விளம்பரக் கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர். மதுரைக் காஞ்சியில் விழாக்கொடி, வெற்றிக்கொடி, வியாபார விளம்பரக் கொடி எனப் பலவகையான கொடிகள் மதுரை நகரிலே பறந்து கொண்டிருந்த நிகழ்வு சுட்டிக் காட்டப்படுகின்றது. கடைகளில் விற்கப்படும் பொருள்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வகையான கொடி கட்டப்பட்டிருந்தது. மதுபானம் கிடைக்கும் இடத்தை அறிவிக்கும் விதமாக விளம்பரக் கொடி பறந்து கொண்டிருந்ததை,

'கள்ளின் களிநவில் கொடியொடு
பல்வேற குழுஉக் கொடிப் பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க'


என்ற பாடல் மூலம் அறியலாம். இவ்வாறு சங்ககாலமக்கள் வியாபார நுணுக்கத்தோடும், தம் பொருளை விற்கும் முறையில் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது இதன் மூலம் புலனாகிறது.

அல் அங்காடியின் ஆரவாரம்

மதுரைமாநகரில் கொண்டு வரப்பட்ட பலவகைப் பொருள்களை கடற்கரையில் இறக்கும் ஓசையும், அயல்நாட்டு வாணிகர் தமிழகத்தில் செய்த அணிகலன்களை விலைக்கு வாங்கும் போது உண்டாகும் பல்வேறு மொழிகளின் ஓசையும் பலவகைப் பறவைகளால் எழுப்பப்படும் ஓசையை ஒத்திருந்தது. இதனை

'பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மானகல்லென
நனந்தலை வினைஞர் கலம் கொண்டு மறுக
--------------------------------------------
பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே
அல் அங்காடி அழி தரு கம்பலை'


என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு இரவுப் பொழுதிலும் அல்லங்காடியில் மிகுந்த ஆரவாரத்தோடு வாணிகம் நடைபெற்றது. மதுரையில் இரவும் பகலும் வாணிகம் நடந்த வண்ணமே இருந்தது என்பதை இதன் மூலம் அறியலாம். ஓய்வில்லாது உழைத்து முன்னேற வேண்டும் என்ற பண்பு வாணிகரிடம் நிறைந்து காணப்பட்டன.

வணிகப் பண்பாடு

சங்ககாலத்தில் வாணிகர்கள் அறநெறி தவறாதவர்களாகவும், நன்னெறியில் நடப்பவர்களாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதை,

'அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி'


என்ற தொடரின் வாயிலாக அறியமுடிகிறது. இத்தகைய வாணிகரைப் பற்றி வள்ளுவரும் தம் குறளில் எடுத்துக்காட்டியுள்ளார்.

'வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்'


என்று வாணிகரின் நடுவுநிலைமையினைச் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, அக்கால வாணிகர் பிறர் பொருளையும், தம் பொருள் போல் எண்ணி நேர்மையாகச் செயல்படும் அறநெறியாளராகத் திகழ்ந்துள்ளனர். இதனை,

'நெடுநுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது
கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்'


என்று பட்டினப்பாலையும் எடுத்தியம்புகின்றது. சுயநலமில்லாது, பிறரை ஏமாற்றும் நோக்கம் இல்லாது சங்ககால வாணிகர் விளங்கினர். இவ்வாறு நவமணிகளை விற்ற வணிகர் முதல், பிட்டு, அப்பம் விற்ற வணிகர் வரை, வாணிகம் புரிந்து வந்த எல்லோரும் நடுவுநிலை தவறாது வாணிகம் நடத்தியுள்ளனர். இவ்வாணிகர் பொருள்களை நிறுப்பதற்கு துலாக்கோலையும், மரக்காலையும் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் வாங்குவதை அதிகமாக வாங்கிக்கொண்டு கொடுக்கக்கூடிய பொருளைக் குறைத்துக் கொடுக்கக்கூடாது என்ற நேர்மைப் பண்பும் சங்ககால வாணிகப் பெருமக்களிடம் காணப்பட்டது.

தொகுப்புரை:

  • சங்க காலத்தில் தொழில் அடிப்படையில் மக்களிடம் பல்வேறு பிரிவுகள் காணப்பட்டுள்ளன. அவ்வவ் பிரிவினரும், அவரவர் தொழிலைச் செய்வது அவரவர் கடமையாகக் கருதினர்.
     

  • உழவர், நெசவாளர், பொற்கொல்லர், தச்சர், குயவர், புலைத்தி, உமணர், குறிஞ்சி நிலக் குறவர், முல்லை நில ஆயர், பரதவர், கொல்லர், ஆடை வடிவமைப்போர், தந்தத் தொழில் செய்வோர் எனப் பல்வேறு தொழில்கள் சங்க காலத்தில் இருந்துள்ளன.
     

  • அது மட்டுமின்றி கடல் வாணிகமும், தரை வாணிகமும் சிறந்து காணப்பட்டன. கொற்கை, தொண்டி, முசிறி, காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுகப்பட்டினங்களால் கடல் வாணிகம் சிறப்புப் பெற்றது.
     

  • உள்நாட்டுப் பொருள்களை கிரேக்கர், ரோமர், யவனர் நாட்டு வாணிகர்கள் நாவாய்களில் ஏற்றுமதி செய்து கொண்டு சென்றனர். பண்டமாற்று முறையும் அக்காலத்தில் நடைமுறையில் இருந்தது. இரவு நேர அங்காடிகள், நாளங்காடிகள் மிகவும் சீரிய முறையில் செயல்பட்டன.
     

  • சங்க கால வாணிகர்களிடம் அறநெறி தவறாப் பண்பும், நேர்மையான முறையில் பொருள் ஈட்டும் பண்பும் காணப்பட்டன.

     

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை-
641 035.

 

 

 

 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்