சிந்தனைக்கவிஞர் கவிதாசன் கவிதைகளில் சுய முன்னேற்றச் சிந்தனைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


'லட்சங்களை சம்பாதிப்பது என் லட்சியம் அல்ல
லட்சியவாதிகளை உருவாக்குவதே என் லட்சியம்'


சமூகம் குறித்த அக்கறை கொண்ட கவிஞர்களின் கவிதைகள் காலங்காலமாய் மனிதனுக்கு நீதி புகட்டிக் கொண்டே இருக்கின்றன. மனிதனுக்கு எளிதில் விரைவில் கருத்துக்களைக் கூற கவிதை வடிவம் மிகச் சிறந்த ஊடகமாய் உதவுகிறது. 'கவிதைக்கு உடலும் உயிரும் உண்டு. உடல் கவிதையின் வடிவம். உயிர் அதன் உள்ளடக்கம். இவை இரண்டும் பொருத்தமுற அமையும் போது தரமான கவிதை என்று பெயர் பெறுகிறது' அவற்றில் சுயமுன்னேற்றம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளில் காணலாகும் சுய முன்னேற்றச் சிந்தனைகளை இக்கட்டுரை காணலாம்.

முருகேசன் என்கிற கவிதாசன்

கோயம்புத்தூர் கந்தேகவுண்டன் சாவடியில்
1962 ஆம் ஆண்டு சுப்பண்ணன்,மயிலாத்தாள் இவர்களுக்கு பிறந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளிகளில் படித்து தன்னுடைய கல்லூரி பயணத்தை 1982 ஆம் ஆண்டு கோவைஅரசு கல்லூரியில் துவங்கினார். பெற்றோர்கள் பெரிய படிப்பாளிகள் இல்லை ஆதலால் இவர் தலைமுறைகளில் இவர்தான் முதல் பட்டதாரி.

மாநில அளவில் இவரது கவிதை முதல் பரிசைப் பெற்றது, அப்போது அந்த நிகழ்சியின் தொகுப்பாளர் பேசுகையில்:

'பாரதிக்கு தாசன் ஆனான் கனகு சுப்புரத்தினம்
கண்ணனுக்கு தாசன் ஆனான் முத்தையா
கவிதைக்கு தாசன் ஆனான் முருகேசன்'


என்று கூறினார். ஆம் அந்த முருகேசன் தான் நம் சிந்தனைக் கவிஞர் கவிதாசன். பின்னாளில் இவரது சிந்தனை மிக்க கவிதை வரிகளும் கம்பீரப் பேச்சும், நாடெங்கிலும் பரவி மக்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியத்தையும் கொடுத்தது. பெரும்பாலான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த இவர் எண்ணற்ற சாதனைகளையும் படைத்துள்ளார் மற்றும் இவர் எழுதிய சுய முன்னேற்ற கட்டுரை நூல்களும், எண்ணற்ற கவிதை நூல்களும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. எண்ணற்ற புகழுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான இவர்

'வெற்றி என்பது முடிவல்ல அது ஒரு பயணம்'
'லட்சங்களை சம்பாதிப்பது என் லட்சியம் அல்ல
லட்சியவாதிகளை உருவாக்குவதே என் லட்சியம்'


என்று சொல்வது இவரது தனிச்சிறப்பு.

சுய முன்னேற்றக் கூறுகள்

'திசைகள் தோறும் வாய்ப்புகள் இருக்கும்
திறமைகள் இருந்தால் வாவென அழைக்கும்.'


ஒரு மனிதன் போராட்டம் நிறைந்த இவ்வுலகில் வெற்றி பெற்று முன்னேறப் பல படிநிலைகள் உள்ளன. மனித வளம் உள்ள தனிமனிதனோ, சமூகமோ தான் முன்னேற இயலும். 'மனிதன் தனியாக அல்லது குழுவாக இணைந்து செயல்பட்டு, தனது படைப்புத் திறனால் தானும் முன்னேறி தன்னை சேர்ந்தவர்களும் முன்னேற உதவுதலாகிய செயல்பாடே மனித வளம் எனப்படும்' மனிதவள மேம்பாடைந்து முன்னேறுவதற்குப் பல கூறுகள் காரணிகளாக உள்ளன. அவற்றில் கவிதாசன் கவிதைகளில் காணலாகும் முயற்சி, பயிற்சி, திட்டமிடல், உழைப்பு, தன்னம்பிக்கை, தோல்வியை எதிர்கொள்ளல் என்ற கூறுகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

முயற்சியும் முன்னேற்றமும்

முயற்சியே முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆகும். முயன்று கொண்டே இருக்கும் மனிதன் கட்டாயம் ஒரு நாள் முன்னேறுவான்.

'முடங்கிக் கிடந்தால் சிலந்தியும்
உன்னைச் சிறைப் பிடிக்கும்!
எழுந்து நடந்தால் எரிமலையும்
உனக்கு வழி கொடுக்கும்!'


சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை விதைக்கும் அற்புத வரிகள் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் இந்த வரிகளை நினைவில் கொண்டு செயல்படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் எனத் தினந்தோறும் முயற்சி செய்யச் சொல்கிறார் கவிஞர். தானாகவே வெற்றி வந்து சேரும் என்று எண்ணிச் சோம்பி இருக்கும் மனிதர்களை நோக்கி,

'கடவுள் உனக்கு
முகவரிகளைத் தான் தருவார்
நீதான் போய்
கதவுகளைத் தட்;ட வேண்டும்'


என முயற்சியின் இன்றியமையாமையைக் கவிஞர் கூறுகிறார்.

முயலாமையால் தோல்வி தான் வரும். முயற்சியினால் பெருவெற்றி பெறலாம் என்பதனை,

'முயல் ஆமையிடம் தோற்றதற்கு
என்ன காரணம்
முயலாமை
முயற்சித்துக் கொண்டே இரு!
ஒரு நாள் உன் உச்சந்தலையில்
மேற்குவானம் இடிக்கும்'
என எடுத்துரைக்கிறார்.


நட்பு

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை படிக்கும் வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக எழுதி உள்ளார் இன்று உப்புச் சத்து நோய் வந்தவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் உப்பை தவிர்த்து சாப்பிட்டு வருகின்றனர் ஆனால் அவர்களால் நட்பை தவிர்க்க முடியாது அதனை உணர்த்தும் அற்புத வரிகள் இதோ !

'உப்பில்லாமல் கூட உயிர் வாழலாம் - ஆனால்
நல்ல நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது!'


முற்றிலும் உண்மை! நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் இந்த வாசகத்தை நேற்று மதுரையில் ஓடும் ஆட்டோ முதுகில் படித்தேன் இதுதான் படைப்பாளியின் வெற்றி. சிந்தனைக் கவிஞர் கவிதாசன் யார்? என்று தெரியாமலே அவர் எழுதிய வாசகம் பிடித்து எழுதி வைத்துள்ளனர் இப்படி நூல் முழுவதும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வைர வரிகளின் புதையலாக நூல் உள்ளது பாராட்டுக்கள் சிந்தனையாளர் முனைவர் வெ .இறையன்பு அவர்கள் சொல்லுவதைப் போல நாம் புரட்டும் புத்தகம் அல்ல இது நம்மை புரட்டும் புத்தகம்.

பயிற்சி

எந்த ஒரு செயலையும் பயிற்சியின் மூலம் எளிதாகச் சாத்தியமாக்க இயலும். பயிற்சி இருந்தால் எந்தவொரு துறையிலும் வெற்றிக் கனியைப் பறிக்கலாம்.

'முடியாது என்று முடங்கிவிட்டால்
மூச்சுக் காற்றும் நின்றுவிடும்
முடியும் என்று துணிந்து விட்டால்
மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும்'

'அவமானப்படுகிறபோது ஒரு அவதாரம் எடு
வீழுகிறபோது விஸ்வரூபம் எடு
புண்படுகிற போது புன்னகை செய்
யாரேனும் உன்னை ஏதேனும் சொன்னால்
அவர்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்லாதே
வாழ்ந்து காட்டு'


என்ற வரிகளின் மூலம் பயிற்சியே ஒரு சிறந்த சாதனையாளரை உருவாக்கும் என்று எடுத்துரைக்கிறார். தேர்வோ, போட்டியோ, பயிற்சி பெற்று சென்றால் தான் வெற்றி நிச்சயம். பயிற்சி இல்லாத ஆர்வம் செயல்களில் வெற்றியை ஈட்டித்தராது என்பதனை,

'போட்டிகளில் இறங்கினால்
பயிற்சியோடு இறங்கு
வெறும் ஆர்வம்
கோளாறாகும்'
என எடுத்துரைக்கிறார்.


திட்டமிடல்

முன்னேறுவதற்கான செயலை மேற்கொள்ளத் திட்டமிடல் என்பது அவசியமானதாகும். அரசாங்கமோ, தனிமனிதனோ, தனக்கான திட்டங்களைத் தீட்டி அதற்கான செயல்முறைகளை வகுத்த பின்னர் தான் வெற்றியை ஈட்ட முடியும்.

'அதிகாலையில் விழித்தலும்
அன்று செய்யும் கடமைகளைப்
பட்டியலிடு...'


என அன்றைக்குரிய வழக்கமான செயல்களுக்கும் திட்டமிடல் அவசியம் என்கிறார் கவிஞர்.

திட்டமிடலின் இன்றியமையாமையை,
'நேரம் கிடைக்கிறதா
திட்டமிடு!
பல செயல்கள் தோற்க
திட்டமிடாதே
காரணம்'


என்ற கவிதையின் வழி கூறுகிறார். திட்டமிட்டு ஈடுபடும் செயல் வெற்றியைக் கொணர்ந்து வரும்.

உழைப்பு

உயிரினங்கள் அனைத்தும் உழைப்பின் மூலமாகவே உயிர் வாழ முடியும். சிறு எறும்புகூடத் தனக்குத் தேவையான சிறிதளவு உணவையும் தேடல் என்னும் உழைப்பின் மூலமாகத் தான் பெற முடியும். உழைப்பின்றி ஒரே இடத்தில் சோம்பியிருந்தால் உண்ண உணவு கூட கிடைக்காது. எனில், எப்படி முன்னேற்றம் கிடைக்கும்.

'உழைக்கத் தயங்காதே
கிளைக்கத் தயங்கும் மரம்
தழைக்காது
உயர முளைக்காது'


எனக் கவிஞர் உழைப்பின் மேன்மையை கவிஞர் எடுத்துகக் கூறுகிறார்.

நேரத்தை வீணடிக்காமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களே வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர்.

'உலகம் ஓர் உண்டியல்
உழைப்பைச் செலவு செய்தவன்
வெற்றிகளைச் சேமிக்கின்றான்'


என உழைப்பின் மூலமாகவே வெற்றி சாத்தியம் என எடுத்துரைக்கிறார் கவிஞர்.

தன்னம்பிக்கையும் விட முயற்சியும்

யானைக்குத் தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை என்பர். யானையை அடையாளப்படுத்துவது தும்பிக்கை. அதுபோல மனிதனை மனிதனாக அடையாளப்படுத்துவது நம்பிக்கையே ஆகும். தன்னம்பிக்கை உடைய மனிதனுக்கு எந்த தடையும் தூசே ஆகும். எளிதில் ஊதித் தள்ளி விடுவான்.

'பழகத் தெரியாதவனுக்கு
வீடே உலகம்
பழகத் தெரிந்தவனுக்கு
உலகமே வீடு!'

'விடியல்கள் வர வேண்டும்
முதலில் மனதிற்குள்!
உள்ளே இருட்டானவன் யாரும்
வெளியே ஒளிர முடியாது'


என மனதில் உள்ள அவ நம்பிக்கை என்னும் இருட்டை விரட்டி நம்பிக்கை என்னும் வெளிச்சத்தை ஏற்றுபவனே முன்னேற முடியும் என்ற கருத்தை கவிஞர் முன்வைக்கிறார்.

கவிஞரின் கவிதைகள் பலவும் நம்பிக்கையை முன்னிறுத்தியே எழுதப்பட்டன. நம்பிக்கை தான் கவிஞர் இளைஞர்களுக்கு, முன்னேறத் துடிப்பவர்களுக்குக் கொடுக்கும் ஊக்க மருந்தாகும்.

'நம்பு
உன் ஆற்றலை
உன் வலிமைகளை
உன் திறமையை
உன் முயற்சியை
உன்னை நீயே நம்பாவிட்டால்
யார் உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது
நமக்கு நாமே குடிக்கும்
தாய்ப் பால்
அதை; துப்பி விடாதே'


என்று தாய்ப்பாலுக்கு நிகராக நம்பிக்கையை முன்னிறுத்துகிறார் கவிஞர்.

தோல்விகளை எதிர் கொள்ளல் எத்தகைய முயற்சிகள், பயிற்சிகள் இருப்பினும், தொடக்கத்திலேயே வெற்றி கிடைப்பது கடினம்.

அந்நேரத்தில் சோர்நது துவண்டு விடாமல் முன்னேறி நடக்க வேண்டியது அவசியமாகும். அதற்குத் தேவையான ஊக்கத்தைக் கவிஞரின் கவிதைகள் அளிக்கின்றன. வெற்றி என்பதே தோல்வியின் மூலம் பெறப்படுவது தான் என்பதனை,

'வெற்றிக்கான அடையாள அட்டை
தோல்வி என்ற அச்சு இயந்திரத்தில்
அச்சிடப்படுவது தான்'

என்பதன் வழி என்று கவிஞர் கூறுகிறார்.

தோல்வி அடைந்தால் அதனை எவ்வாறு அணுக வேண்டும் என்பதனை,

'தோல்வி என்பதனால்
வீழ்ந்து கிடப்பவன்
தோற்றவனாகிறான்
தோல்வி வந்தபின்
தெளிந்து நிற்பவன்
கற்றவனாகிறான்
தோல்வி அடைந்ததும்
எழுந்து நிற்பவன்
வென்றவனாகி விடுகிறான்'


என்ற கவிதை வரிகளின் வாயிலாக எடுத்துரைக்கின்றார்.

தோல்வியைக் கண்டு துவளாhத மனமே வெற்றியை ருசிக்கத் தகுந்தது என்பது கவிஞரின் கருத்தாகும்.


தொகுப்புரை:

  • காலத்துக்கேற்ற கருத்துக்களைக் கவிதைகளில் கொள்பவர் சிறந்த கவிஞராகிறார். மனிதர்கள் விரக்தியுடனும், தோல்வி மனப்பான்மையிலும், அவநம்பிக்கையிலும் உழன்று கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் உளவியல் சிகிச்சை போன்று சிறந்த கருத்துக்களைக் கூறி அவர்களது மனதைச் செப்பம் செய்வதாக கவிஞர் கவிதாசன் அவர்களின் கவிதைகள் அமைகின்றன.
     

  • முயற்சியின் முக்கியத்துவம், பயிற்சியினால் விளையும் பலன்கள், உழைப்பினால் ஏற்படும் உயர்வு, திட்டமிடலின் சீர்மை, தன்னம்பிக்கையின் தனித்துவம், தோல்விகளை வெற்றிகளாக்கும் மனநிலை என்பன குறித்து அமைந்திருக்கும் அவரது கவிதைகள் மனித மனத்தை மேம்படுத்தி உயரச் செய்வதாய் அமைகின்றன.
     

  • மேலும் இவர் எழுதிய நூல்கள் பள்ளி, கல்லூரிகளின் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைப் பயணங்கள் தொடரட்டும்.
     


 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை-
641 035.

 

 

 

 

 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்