சங்க இலக்கியத்தில் குறுந்தொகை காட்டும் மனித வாழ்வியல் உறவுகளும் நெறிமுறைகளும்

முனைவர் பூ.மு.அன்புசிவா

ங்க இலக்கியம் செம்மொழி, செவ்வியல், இலக்கியம் என கொண்டாப்படுகின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓராயிரம் பண்பாட்டுக் களஞ்சியங்களைத் தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற இலக்கியமாக சங்க இலக்கியம் விளங்குகின்றன. அழகு நற்றிணையும், நல்ல குறுந்தொகையும், ஐவகை நிலம்காட்டிட்ட ஐங்குறுநூறும், பண்பாடு காட்டிடும் பதிற்றுப் பத்தும், ஓங்கு பரிபாடலும், கற்றறிந்தார் போற்றும் கலித்தொகையும், உறவுகளின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய உன்னத இலக்கியங்கள் சங்க இலக்கியமாகும்.

குறுந்தொகை

எட்டுத்தொகை நூல்களில் 'நல்' என்ற அடைமொழியைப் பெற்ற ஒரே நூல் குறுந்தொகையே ஆகும். நான்கு அடிச் சிற்றெல்லை, எட்டடிப் பேரெல்லை உடையதாக இந்நூலின் பாடல்கள் அமைந்துள்ளன. 'வளையுடைத் தனையதாகி' எனத் தொடங்கும் 307 ஆவது பாடலும், 'உவரியொருத்த' எனத் தொடங்கும்
391 ஆவது பாடலுமே பொதுத் தன்மையை விட்டு விலகி ஒன்பது அடிகளில் அமைகிறது. குறுந்தொகை நானூறு எனப் புகழ் பெற்றாலும் கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களை உடையதாக இவ்விலக்கியம் அமைகிறது. 201 புலவர்கள் பாடியிருக்க இந்நூலைப் பூரிக்கோ தொகுத்தார். 380 பாடல்களுக்குப் பேராசிரியரும், எஞ்சிய 20 பாடல்களுக்கு நச்சினார்கினியரும் உரை வகுத்தனர். உவே. சாமிநாதையர் 1927 இல் வெளியிட்ட ஆய்வுப் பதிப்புச் சிறப்பாக அமைந்துள்ளது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

என்ற எல்லா ஊரையும் தன் ஊராகவும், எல்லா மக்களையும் தன் உறவினராகவும் சங்கஇலக்கியம் பேணியது.

'அறிவை விரிவு செய்... அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானிட சமுத்திரம் நானெனக்கூவு'


என்று பாவேந்தர் பாடியதைப்போல அறிவை விரிவு செய்து அகண்டமாக்கு விசாலப்பார்வையால் மக்களை விழுங்கி மானுட சமுத்திரம் நானெனக் கூவும் வலிமை உறவுநிலைக்கே உண்டு.

தலைவன் தலைவி மீது வைக்கக் கூடிய காதல் உறவைச் சங்க இலக்கியம் முழுக்கக் காணமுடிகிறது. தலைவன் திருமணம் புரியாமல் காலம் கடத்துகிறான். தோழிக்குச் சினம் வருகிறது. தலைவன் செவியில் படுமாறு அவனது நட்பைத் தோழி பழித்துரைக்கத் தலைவி அதை ஏற்க மறுக்கிறாள். 'தலைவன் நட்பு உலகில் உள்ள அனைத்தையும் விட மிகச் சிறந்தது' என்று எண்ணும்படியாக

'நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே'


எனும் தேவகுலத்தாரின் குறுந்தொகைப் பாடல் தலைவன் தன் மீது கொண்டிருக்கும் காதல், பூமியை விட அகலமானது, வானை விட உயர்ந்தது, கடலைக் காட்டிலும் ஆழமுடையது என உவமிக்கிறது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, அன்பால் கருத்தொருமித்த தலைவன் தன்னைப் பிரிவானோ என்று தலைவி வருந்தும்போது, தலைவன் உறவு நிலைகளைச் சொல்லி அவனை ஆற்றுப்படுத்துகிறான்.

'யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே'


என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் உறவினரா? என் தந்தையும் நின் தந்தையும் உறவினரா? இப்போது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? என்று உறவுகளை அடுக்கி வினவிய தலைவன், செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர், மண்ணின் நிறத்தை ஏற்று, அம்மண் தண்ணீரின் தண்மையை ஏற்று ஒன்றியபின் யாரால் பிரிக்க முடியும்? இதையே கவியரசு கண்ணதாசன்

'நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?'


என வினவுகிறார்.

காலத்தைவீணாக்குகிறான் தலைவன், தலைவியின் மனம் வருந்துகிறது.

'யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்.'


இயல்புடைய தலைவி, 'எதுவும் பயன்படாமல் போய்விடக்கூடாது' என்ற கருத்திலே தலைவனோடு கொண்ட உறவு நிலையை அருமையான உவமைகளைச் சொல்லி வலியுறுத்துகிறான்.

'கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக்காங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உண்இயர் வேண்டும்
திதிலை அல்குல் என் மாமைக் கவினே'


என்று கன்றும் உண்ணாமல், கலத்தையும் நிறைக்காமல் வீணே தரையில் வழியும் பாலைப்போலே எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் உதவாமல் இளமை வீணாகிறது என்று தலைவி வருந்துவதைக் காண முடிகிறது.

பதின்பருவத்தைக் கடந்து கொண்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு உளவியல் நோக்கில் தோழனால் பாங்கனால் அழகான, சரியான வழிகாட்டுதலைத் தர முடியும். வள்ளுவர் நெறியில் சொல்ல வேண்டுமானால்

'உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு'
என்று கூறலாம்.

'நட்பு என்பது நடிப்பல்ல, அது நாடித்துடிப்பு' என்று தெளிவுபடுத்த முடிகிறது. தன்னை இடித்துக்கூறக்கூடிய பாங்கனின் அன்பு தலைவனை நெகிழ வைக்கிறது.

'நான் தவறு செய்வதாக இடித்துரைக்கும் நண்பனே! நமது அருஞ்செயலாக என் காமநோயைத் தடுத்து நிறுத்தலைச் செய்வீராயின் மிக்க நன்று'.

'இடிக்கும் கேளிர் நும் குறைஆக
நிறுக்கலாற்றினோ நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வௌ;வரை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே'


ஆம்! சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெம்மையான பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகியோடுகிறது. பாதுகாப்புக்கு நின்றிருந்த அவனுக்கோ கையில்லை. வாயோ பேச இயலாது. என்ன செய்ய முடியும்? அந்நிலையில் நான் இப்போது உள்ளேன் என்ன செய்ய முடியும்? என்று பாங்கனுக்குத் தலைவன் பதில் சொல்வதலிருந்து நண்பனிடம் கொண்ட பாசத்தை அறியமுடிகிறது.

கம்பராமாயணத்தில் இதுபோன்ற உவமையைக் கம்பர் அற்புதமாகப் பயன்படுத்தி உள்ளார். மிதிலையிலே இராமனைக் கண்ட சீதை, அவர் தன் நாடு விட்டுச் சென்றதும் பிரிவுத்துயிர் ஆற்றமுடியாமல் விம்முகிறாள். தோழியரிடம் கூடச் சொல்ல முடியாத வாய்பேச இயலாதவள் போல் சீதை மாறினாள் என்று மிதிலைக் காட்சிப் படலத்தில் கம்பநாடர் காட்டுகிறார்.

'நோமுறு நோய்நிலை நுவலகிற்றிலன்
ஊமரின் மனத்திடை யுன்னி விம்மினாள்'


மனப்போராட்டத்தை நீக்கும் உளவியல் மருத்துவராக நண்பரையும் தோழியையும் குறுந்தொகை காட்டுகிறது.

தாய் முதலியவர்களால் காக்கப்படுகிறாள் தலைவி, தலைவனைப் பிரிந்த சோகம் தாங்க முடியாமல் தோழியிடம் மனம் வெதும்புகிறாள்.

'பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன்உயிர் போகுகதில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே'


எனும் சிறைக்குடி ஆந்தையாரின் தோழி – தலைவியின் நெருக்கமான நட்பை வெளிப்படுத்துகிறது.

நீரிலே சோடியாக மகன்றில் பறவை பயணிக்கிறது. இடையில் சிறு பூ இடைப்படுகிறது. அந்த ஒரு வினாடிப் பிரிவு தாங்க முடியாமல் உடன் உயிர் போய்விட்டது என்று அஃறிணைப் பொருட்களைக் கொண்டு தோழியிடம் தலைவி ஆறுதல் அடைகிறாள்.

சங்க இலக்கியத்தில் தோழியின் பாத்திரம் இன்றியமையாத இடம் பிடிக்கிறது. தலைவியின் உளவியலை நன்கறிந்த உளவியல் அறிஞராக, அவளது உளநோய் நீக்கும் மருத்துவராக, காதல் வயப்பட்ட நிலையில் அதை அறத்தொடு நின்று உரியவர்களுக்கு உரிய முறையில் தெரிவித்த! ஊரார் அலர் தூற்றும்போது அதைத் தலைவனிடம் தெரிவித்துத் திருமணத்திற்கு வழிப்படுத்துபவளாகப் பல்வேறு பரிமாணங்களில் தோழியைப் பார்க்க முடிகிறது.

கடுந்தோட் கர வீரனாரின் குறுந்தொகைப் பாடலிலே, இரவிலே தலைவியைச் சந்திக்க வந்த தலைவனிடம் துணிச்சலாகத் தோழி மறுத்துப் பேசுகிறாள். கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்து போக, அதன் பிரிவால் ஏற்படும் கைம்மைத் துன்பத்தை ஆற்றாத பெண் குரங்கு தன் குட்டியைத் தன் சுற்றத்தாரிடம் விட்டு விட்டு ஓங்கிய மலை மீதேறி உச்சியில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளும். அத்தகைய சாரலையுடைய தலைவனே! நீ தலைவியைச் சந்திக்க நள்ளிரவில் வராதே! அப்படி வந்தால் 'உனக்கு என்ன நடக்குமோ' என்று எங்கள் நெஞ்சம் பதைபதைக்கும் என்று தோழி குறிப்பால் உரைக்கிறார்.

'கருங்கண் தாக்கலைப் பெரும் பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள் வாரல் வாழியோ
வருந்துதும் யாமே'

என்று வீரனார் அப்பாடலை அமைக்கிறார். தோழி தலைவியோடு மட்டும் அன்பு பாராட்டாமல், தலைவன் தவறு செய்யும்போது நயமாக இடித்துரைத்து அன்பு பாராட்டித் திகழ்ந்தான் என்று பார்க்க பவளாகவும் முடிகிறது.

'தலைவன் பொருள்வயிற் பிரிவை
மேற்கொள்ளப் போகிறான்'


என்ற செய்தி தலைவிக்கு இடியாய் இறங்குகிறது. தோழியிடம் வருந்தி அழுகிறாள். 'உலகை இயல்பைக் கூறி தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

தலைவியே! தொழில்தான் ஆண்மக்களுக்கு உயிராகும். மனையில் உறையும் மகளிருக்குக் கணவன் மாரே உயிர், இதை நமக்குக் கூறியவரே தலைவன்தான் என்று ஆறுதல் கூறுகிறான்.

'வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்
மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
அழா அல் தோழி! அழுங்குவர் செலவே'

ஆம்! பாரதியின் வரிகளில் கூறவேண்டுமெனில்

'உன் கண்ணில் நீர் வழிந்தால் கண்ணம்மா
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ'


என்று கூறலாம். கண்ணீரைத் துடைக்கக் கைகளிலிருந்தால் சோகம் கூடச் சுகமானது ஆறுதல் புலப்படுத்துகிறது.

தலைவன் தலைவியோடு கொண்ட காதல் உறவினைப் 'பயிலியது கெழீஇய நட்பு' என்று குறுந்தொகை போற்றுகிறது. வன்மையைப் பண்படுத்துகிறது.

'வெந்நீராயினும் செந்தீயை
அணைக்கும் தப்பம் உடையது'


என்கிறார் கபிலர்

அன்பு, அறிவு, ஆற்றல், திரு, உரு முதலிய பண்புகளில் ஒன்றிய தலைவனும் தலைவியும் இணைந்து வாழும் இல்லறத்தின் மாட்சியைக் குறுந்தொகைப் போற்றிப் புகழ்கிறது.

ஒரு பசுவினை மட்டுமே வளர்த்து அதனால் வரும் செல்வத்தைக் கொண்டு எளியவாழ்வு நடத்திய ஒருவன், தலைவியை மணந்தநாள் முதலாகப் பெருவாழ்வு பெற்று ஒவ்வொரு நாளும் விழாக்கோலம் பூண்ட வீட்டை உடையவனாகத் திகழ்ந்தான்' என்று பெண்ணின் பெருமையைக் குறுந்தொகை பாடுகிறது.

'ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனவிழ வாயிற்றென்னும் இவ்வூரே'


என்று குறுந்தொகை தெளிவுபடுத்துகிறது.

காதல் வாழ்வில் மட்டுமல்லாமல் விருந்தினரைப் பேணுதலிலும் தம்பதியினர் சிறந்து விளங்கினர். நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் உபசரிப்பர் என்பதை

'நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே'

என்று காட்டுகிறது.

விருந்தினர் பண்புகள்

விருந்தினர் உண்டு எஞ்சிய உணவை இல்லறத்தார் உண்பதே சிறப்பாகும் என்று குறுந்தொகை விளக்குவதைக் காணமுடிகிறது.

'பண்புடையார்ப் பட்டுண்டுலகு அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்'


கிடைத்தற்கரிய அமுதமே கிடைத்தாலும் தாமே உண்ணாமல் பிறர்க்குக் கொடுத்து உண்ணும் பண்புடையவர்களை இம்மண்ணில் இருப்பதால்தான் இப்பூமி நிலைத்து நிற்கிறது என்கிறது வள்ளுவம்.

தலைவனோடு தலைவியும், தலைவியோடு தோழியும் மட்டும் உறவு கொள்ளாமல் சமுதாயத்தோடும் உறவு கொண்டதையும் விருந்தினரைப் பேனுவதையும் காண முடிகிறது.

செவிலித்தாயும் நற்றாயும் ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சிக்குப் பேருதவி செய்தனர். தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றுவந்த செவிலித்தாய் நற்றாயிடம் தலைவியின் இல்லற மாண்பு குறித்துக் கூறினாள்.

'முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே'


எனும் கூடலூர்கிழார் பாடலில் தலைவியின் பொறுப்புணர்ச்சியைச் செவிலி கூற்றாகக் கூறுகிறார். முற்றிய கட்டித் தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலைத் துடைத்துக் கொண்டு ஆடையில் துடைத்துக் கொண்டு குவளைமலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்ப, தானே சமைத்த இனிய புளிப்பை உடைய குழம்பை தன் தலைவன் இனிதென்று உண்பதால் தலைவியின் முகம் நுண்ணியதாய் மலர்ந்தது என்கிறார் புலவர். செவிலித்தாய் நற்றாயிடம் கொண்டிருந்த உறவு இப்பாடலில் விளக்கப்படுகிறது.

வற்றல் குழம்பும் தயிர் சாதமும்

ஒரு தோழி அவள் நண்பி நடத்தும் திருமண வாழ்வை அறிய அவள் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றாள் பின்னர் திரும்பி வந்து அப்பெண்ணின் தாயிடம் சொன்னாள், அடியே! உன் மகள் வீட்டுக்குச் சாப்பிடப் போனேன். நல்ல அருமையான தயிர் சாதமும் வற்றல் குழம்பும் சமைத்து வைத்திருந்தாள். நல்ல வாசனை! தாளித்துக் கொட்டியிருந்தாள். அடுப்பின் புகை தாளாமல் எல்லாவற்றையும் புடவையிலேயே துடைத்துக்கொண்டாள்; கணவனோ அதை ரசித்து, ருசித்து சுவைத்து சாப்பிட்டான். அவள் முகம் மலர்ந்தது.

'முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
.....................................
தான் துழந்து இட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
– (கூடலூர்க் கிழார்,
167)

பறையும் சங்கும் ஊதி திருமணம் செய்தல் (ஆண்டாள் பாடிய வாரணம் ஆயிரத்திலும் உண்டு), திருமணம் செய்த பின்னர் பெண்ணின் சிலம்பைக் கழித்தல், சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுதல், முதியோர் சென்று திருமணம் பேசுதல், பிறையைத் தொழுதல் ஆகியவற்றைக் குறுந்தொகை நமக்கு அளிக்கிறது.

குறுந்தொகையின் வழியாக சங்ககால மக்கள் அகத்திலும் புறத்திலும் தன்னிகரில்லாத வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் குறிப்பாக காதல் வாழ்விலும், வாழ்வியல் நெறிகளிலும், புரிதலுடனும் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பக்குவத்துடனும் இருந்ததை உணர முடிகிறது. மேலும் விருந்தோம்பல் பொருள் தேடுதல் கல்வி ஈகை போன்ற நெறிகளை வாழ்வியலோடு வகுத்து வாழ்ந்தனர் என்பதையும் இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.
 


முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி,கோயம்புத்தூர்
-641 035
 


 

 

 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்