வித்தியாசமான சித்தர்கள் சிலர்
கலாநிதி பால.சிவகடாட்சம்
உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய்ஞானம் தேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே
என்று உடம்பைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்
திருமூலர் என்ற சித்தர். இவரது கொள்கையைப் பற்றி நின்றோர் தாம்
காலாங்கிநாதர், போகர், புலிப்பாணி, கொங்கணர் போன்ற இரசசித்தர்கள்.
இவர்கள் கண்டறிந்த மருந்துகள் பாரம்பரிய இந்தியாவின் மருத்துவமான
ஆயுள்வேதத்தின் மருந்தகத்தை வளம்படுத்தியுள்ளன என்பதில் மாற்றுக்
கருத்து இருக்கமுடியாது. அதேசமயம் சித்தர்கள் என்று சொல்லப்படுகின்ற
அனைவருமே ஒரே கொள்கை உடையவர்கள் என்று கருதுவதும் தவறு.
மந்திரம் தந்திரம் மருந்து போன்றவற்றின் துணையுடன் அழியாத உடலையும்
பரம்பொருளை அறியும் ஞானத்தையும் பெற்றுவிடலாம் என்னும் தாந்திரீகக்
கோட்பாடுகளை அடியோடு நிராகரிக்கும் சித்தர்களும் உண்டு. இவர்களுக்கு
உதாரணமாகப் பட்டினத்தாரைக் குறிப்பிடலாம்.
தந்திரத்தை யுன்னித் தவத்தை மிகநிறுத்தி
மந்திரத்தை யுன்னி மயங்கித் தடுமாறி
விந்துருகி நாதமாம் மேலொளியைக் காணாமல்
அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகன் போல் ஆனேனே.
- பட்டினத்தார்
தாந்திரீகத்தை முயற்சித்து தியானத்தில் ஆழ்ந்தும், மந்திரங்களை
உச்சரித்து மனம் பேதலித்தும் அந்தப் பேரொளியைக் காணமுடியாமல் வழிகாட்ட
உதவும் கோலையும் தூக்கி எறிந்துவிட்டுத் தத்தளிக்கும் குருடன் போல்
ஆகிவிட்டேனே என்று புலம்பும் பட்டினத்தார் உடம்பின்மேல் ஆசைவைத்து
அதனைப் பேணிக்காப்பதன் மூலம் இறைவனை அறிந்து விடமுடியாது என்றும்
கூறிவைத்துள்ளார்.
ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றற் துருத்தியைச் சோறிடும் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றித் திரிந்து விட் டேன் இறைவா கச்சி யேகம்பனே. -
பட்டினத்தார்
ஊனுடம்பை ஆலயம் என்றார் திருமூலர். ஆனால் அதனையே ஊத்தைச் சரீரம் என்றும்
ஆபாசக் கொட்டில் என்றும் நிலையற்ற பாண்டம் என்றும் இழித்துரைக்கின்றனர்
பட்டினத்தாரும் அவர் வழிவந்த சித்தர்களும்.
அப்படியானால் இறைவனை அடைய வேறு என்னதான் வழி என்று கேட்பவர்களுக்குப்
பட்டினத்தார் போன்ற சித்தர்களிடமிருந்து நம்பிக்கை அளிக்கக்கூடிய பதில்
எதுவும் கிடைப்பதில்லை. அவர்களுக்கே அதற்கான வழி தெரியாதபோது
மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லமுடியும். தமது ஆற்றாமையையும்
விரக்தியையும் தம் பாடல்கள் மூலம் இவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ!
என்று அழுது புலம்பும் அழுகுணிச் சித்தரின் கையறுநிலையை இப்பாடலில்
உய்த்துணர முடிகின்றது.
பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்
முற்றும் துறந்த முனிவருக்கு ஓர் உதாரணம் பட்டினத்தார். அரையில் ஒரு
கோவணம். இருப்பதற்கும் படுப்பதற்கும் கோயில் வெளிவீதி. பிச்சையெடுக்கப்
பாத்திரம் இல்லலை. பிச்சை எடுக்கப் போவதுமில்லை. யாராவது இரங்கி அவர்
இருக்குமிடம் தேடி வந்து கொடுத்தால் தரையில் வைத்து உண்பார். இவரது
சீடரான பத்திரகிரியாரிடம் ஒரு ஓடு அதாவது பிச்சைப்பாத்திரம் இருந்தது.
அந்த ஓட்டுடன் வீடு வீடாகச் சென்று தமது குருவான பட்டினத்தாருக்கும்
சேர்த்துப் பிச்சை எடுத்து வருவார். என்றோ ஒரு நாள் தாம்
பிச்சையெடுத்துவந்த சோற்றில் சிறிதளவை அருகில் பசியோடு கிடந்த பெட்டை
நாய் ஒன்றுக்குப் போட்டுவிட்டார். அன்று தொடக்கம் அந்தப் பெட்டை நாய்
பத்திரகிரியாரின் பக்கத்திலேயே இருந்துவந்தது.
ஒரு நாள் பிச்சைக்காரன் ஒருவன் பட்டினத்தாரிடமே பிச்சை கேட்டு வந்தான்.
“என்னிடம் என்னப்பா இருக்கின்றது. அதோ அங்கே ஒருவர் குடும்பம்
நடத்துகின்றார். அவரிடம் போய்க் கேள்” என்று பத்திரகிரியாரைச்
சுட்டிக்காட்டினார் பட்டினத்தார். இதைக் கேட்டதும் பத்திரகிரியார்
அதிர்ந்து போனார். “இந்த ஓடும் இந்த நாயுமா என்னைக் குடும்பஸ்தன்
ஆக்கியது” என்று கூறிக்கொண்டே ஓட்டை அந்நாயின் மேல் விட்டெறிந்தார். ஓடு
உடைந்து சிதறியது. நாயும் இறந்தது. பத்திரகிரியாருக்கு முன்னர் துரோகம்
இழைத்ததன் காரணமாகக் கொல்லப்பட்ட அவரது மனைவியே அந்தப் பெட்டை நாயாக
மறுபிறவி எடுத்து வந்தவள் என்பதைப் பட்டினத்தார் பத்திரகிரியாருக்கு
உணர்த்தினார்.” தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் கதை இது.
உலகின் சுகபோகங்களில் நாட்டத்தைக் கைவிடமுடியாமல் அதேசமயம் ஆன்மீக
விடுதலையை வேண்டி நின்றவர் பத்திரகிரியார். வாழ்க்கையில் ஏழுமுறை
தவவாழ்வு மேற்கொள்ள முயன்றவர். ஒவ்வொரு முறையும் பெண்ணாசை காரணமாகத் தன்
முயற்சியில் தோல்வி கண்டவர். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இன்ப
துன்பங்களின் நிலையாமையை உணர்ந்து கொள்ளும் அறிவாற்றல் அவரிடம்
இருந்தும் ஆசைகளைக் கட்டுப்படுத்தும் மனப்பக்குவம் அவரிடம் இருக்கவில்லை.
பெரும் போராட்டத்தின் பின்னர் முற்றும் துறந்த முனிவராகினார்
பத்திரகிரியார். அவரது தேடுதல்களும் தோல்விகளும் அவரது ஆக்கங்களாக இன்று
கிடைக்கப்பெறும் வடமொழி மற்றும் தமிழ் நூல்களில் பதிவு
செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.
வடமொழியில் சிருங்கார சதகம், நீதி சதகம், வைராக்கிய சதகம்
என்னும் மூன்று நூல்கள் பத்திரகிரியாரின் நூல்களென வழங்கப்படுகின்றன.
சதகம் என்பது நூறு பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பைக் குறிக்கும். இந்த
நூல்களில் பெண்ணாசையால் விளையக்கூடிய தீங்குகள் பற்றிக் கூறுகின்றார்.
சாதிப் பிரிவினைகளை அடிப்படையாகக் கொண்ட அநீதியான சமூகக் கட்டமைப்பைக்
கண்டிக்கவும் செய்கின்றார். வாழ்வின் நிலையாமையைச் சுட்டிக்காட்டி
வெறுந்தரையே கட்டிலாக முழங்கையே தலையணையாக வானமே கூரையாக வாழும் துறவு
வாழ்க்கை இனிதானது என்கிறார் பத்திரகிரியார்.
இவரது சிருங்கார சதகம் பெண்ணழகில் மயங்கிப் பித்தாகும் அபாயம்
குறித்து எச்சரிக்கின்றது.
“முழுமதியை வென்ற முகத்தில் தேன் பொதிந்த உதடுகளுடன் கனிமரம்போல்
தித்திக்கும் மெல்லியலாளின் அழகு இந்தப் பருவகாலம் முடிந்ததும் கசக்கும்
விஷம் போல் ஆகின்றது.” பத்திரகிரியாரின் சிருங்கார சதகம்
48
“நண்பனே! நெருப்பென எரிக்கும் மங்கையின் பார்வையை விட்டு விலகிச்செல்.
படம் விரித்தாடும் விஷநாகம் எனும் பெண்ணிடமிருந்து விலகிச் செல்.
பாம்பின் விஷத்தை மருந்தினால் அகற்றிப் பாம்பு தீண்டியவனைக்
காப்பாற்றமுடியும். திறமையான பெண்ணொருத்தியால் ஊட்டப்பட்ட காதல் நஞ்சில்
இருந்து ஒருவனை மாந்திரீக யோகியும் காப்பாற்றமுடியாது.”
பத்திரகிரியாரின் சிருங்கார சதகம்
51
அண்டத்தைக் கட்டியெழுப்பிய பிரமன் இந்தப் பூமியை அலங்கரிக்கத் தான்
படைத்த உயிர்களுள் எல்லாம் மாணிக்கம் போல் மனிதனைப் படைத்தான். ஆனால்
அந்த மனிதனோ மற்றைய உயிர்களின் ஆயுட்காலத்தை வெகுவாகக் குறைத்துவிட்டான்.
என்னே பிரமனின் பொறுப்பற்ற செயல். நீதிசதகம்
93
வேதங்களையும் ஸ்மிரிதிகளையும் புராணங்களையும், நுட்பமான
சாஸ்திரங்களையும் படித்து என்ன பயன். சொர்க்கத்தில் ஓர் இடம்
கிடைக்கவேண்டிச் செய்யப்படும் மிக நேர்த்தியான சடங்குகளால் என்ன பயன்.
காலம் எனும் நெருப்பில் நிறைந்திருக்கும் துன்பங்களில் இருந்து விடுதலை
பெறும் வழியை அறிய உன்னுள்ளே புகுந்து தேடு. வைராக்கிய சதகம்
71
அண்டவெளிக்கும் காலத்துக்கும் அப்பாற்பட்டு முடிவில்லாத ஞானமும்
அமைதியும் நிறைந்த, உள்ளுணர்வே உருவமான, அனுபவத்தால் அறியப்படும் அந்தக்
கடவுளை வணங்குகின்றேன். நீதிசதகம்
தமிழில் பத்திரகிரியார் மெய்ஞானப்புலம்பல் என்று அறியப்படும்
நூல் அவரது பெயரில் வழங்கிவரும் வடமொழி நூல்களின் பிரதிபலிப்பாக
இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்?
காமக்கடல்கடந்து கரையேறிப் போவதற்கே
ஓமக்கனல் வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம்?
என்று பெண்ணாசையைத் துறக்கும் காலத்தை எதிர்நோக்கிய பத்திரகிரியாருக்கு
விரதங்களும் அனுட்டானங்களும் அமைதியைத் தரவில்லை. நான்மறை வேதங்களும்
சாஸ்திரங்களும் அவருக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
ஆசார நேச அனுட்டானமும் மறந்து
பேசா மெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்?
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்?
வேதங்களுக்கும் சாத்திரங்களுக்கும் யோகசாதனைகளுக்கும்
அப்பாலுக்கப்பாலாய் அண்டம் கடந்து நிற்கும் அந்த அற்புதப்பொருளை அறிவது
எக்காலம் என்று ஏங்கித் தவித்தார். மன அமைதியைப் பெறவேண்டி யோகிகளையும்
சித்தர்களையும் நாடி ஓடினார்.
அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம்?
பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம் படைப்பே
அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம்?
பத்திரகிரியாரை ஓரளவேனும் புரிந்துகொள்ள வேண்டுமாயின் அவரது வரலாறு
பற்றிக் கூறப்படும் மரபுக் கதைகளைத் தெரிந்திருப்பது அவசியம். ஒரேகதை
பல்வேறு வடிவங்களில் பல்வேறு விதமாகச் சொல்லப்படினும் அடிப்படையில் அவை
சொல்வது ஒன்றே.
“பத்திரகிரியார் என்பவர் வட இந்தியாவில் ஒரு சிறிய நாட்டை ஆண்ட மன்னர்.
அரச வாழ்க்கையில் எளிதில் கிடைக்கக்கூடிய அத்தனை சுகபோகங்களையும்
அளவுகடந்து அனுபவித்தவர். அதிலும் பெண்ணின்பத்தை எல்லை மீறி
அனுபவித்தவர். இறுதியில் அவர் மிகவும் நேசித்த ஒரு பெண்ணால்
ஏமாற்றப்பட்டு விரக்தியுற்று ஆட்சியைத் துறந்து ஆண்டியாகப் புறப்பட்டவர்.”
இந்த அடிப்படைக் கதையை மையமாக வைத்துப் பலகதைகள் உருவாகின. அவற்றில்
ஒன்றிரண்டை இங்கு நோக்குவோம்.
“மாளவதேசத்தின் மன்னன் பத்ரூஹரிக்கு ஆயிரம் மனைவிகள் இருந்தாலும் அவன்
மிகவும் நேசித்தது ராணி பிங்களாவைத்தான். ஒரு நாள் இந்த ராணி பிங்களா
அரண்மனைப் பணிப்பெண்ணிடம் தான் மன்னர் பத்ரூஹரியை மிகவும்
நேசிப்பதாகவும் அவர் இல்லாமல் ஒரு கணமேனும் தன்னால் உயிர்வாழ
முடியாதெனவும் கூறிக்கொண்டிருந்ததை பத்ரூஹரி கேட்டுவிட்டான். அவள்
கூறியது உண்மைதானா எனப் பரிசோதிக்கத் தீர்மானித்தான். காட்டுக்கு
வேட்டையாடச் சென்றிருந்த சமயம் ஒரு தூதுவனை அழைத்து மன்னர் பத்ரூஹரி
காட்டில் ஒரு புலியால் கொல்லப்பட்டுவிட்டார் என்று அரண்மனைக்கு
அறிவிக்கும்படி கூறிவிட்டான். தூதுவனும் மன்னன் சொற்படி ஒரு மானைக்
கொன்றுவிட்டு அதன் இரத்தத்தை மன்னரின் உடைகளில் பூசிவிட்டு அவற்றுடன்
அரண்மனை சென்று மன்னர் பத்ரூஹரி காட்டில் புலியால்
கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்தான். அச்செய்தி கேட்டவுடனேயே அரசி பிங்களா
விஷத்தைக் குடித்து இறந்துவிட்டாள்.
அரண்மனைக்குத் திரும்பிய பத்ரூஹரி இராணி பிங்களா இறந்து கிடப்பதைக்கண்டு
தாங்கொணாத் துயரமுற்றான். மன்னன் துயர்கண்டு நாட்டுமக்களும் அவரோடு
சேர்ந்து புலம்பினர். அந்த சமயத்தில்தான் கோரக்கர் என்னும் சித்தர்
அங்கு வந்து சேர்ந்தார். மன்னன் பத்ரூஹரி "ஐயோ பிங்களா, பிங்களா,
என்பிங்களா" என்று கதறிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவனிடம்
வந்தார். தான் கொண்டுவந்த மண்சட்டியைக் கிழே போட்டுவிட்டார். சட்டி
உடைந்து விட்டது. "ஐயோ என் சட்டி! என் மண்சட்டி! என் மண்சட்டி!" என்று
அரசனிலும் மேலாகச் சத்தம்போட்டுப் புலம்பத் தொடங்கினார் சித்தர். சத்தம்
கேட்டு அங்கு வந்த மன்னன் கோரக்கரின் துயரத்துக்கான காரணத்தைக் கேட்டான்.
தன் மண்சட்டி உடைந்துவிட்டதாகக் கூறி மேலும் அழத்தொடங்கினார் சித்தர்.
"அழுகையை நிறுத்தும். உமது மண்சட்டிக்காக அழுது எனது கவலையை மேலும்
கூட்டவேண்டாம். இதைவிட நல்லதாக நூறு மண்சட்டிகள் நான் உமக்குத்
தருகின்றேன்" என்றான் மன்னன் பத்ரூஹரி.
சித்தரோ அழுகையை நிறுத்தவில்லை. எனக்கு எனது பழைய மண்சட்டிதான் வேண்டும்.
அதன்மேல் எனக்கு அளவுகடந்த ஆசை" என்றார் சித்தர். " என்ன அறிவில்லாமல்
பேசுகின்றீர். உடைந்து போனதை எப்படி மீண்டும் பெறமுடியும்" என்றான்
மன்னன்.
கோரக்கர் இப்போது அழுகையை நிறுத்தினார். " அறிவுள்ள மன்னனே. உனக்குத்
தெரியுமல்லவா. இது தெரிந்திருந்தும் ஏன் உன் இராணிக்காக அழுகின்றாய்.
அவள் போய்விட்டாள். போனவள் திரும்பமுடியாது. உன் அழுகையால் அவளைத்
திரும்பக் கொண்டுவரமுடியுமா? உன்னிடம்தான் இன்னும் பல இராணிகள்
இருக்கின்றார்களே. இவளுக்காக ஏன் அழவேண்டும்" என்றார் கோரக்கர்.
“இராணியும் மண்சட்டியும் ஒன்றாகுமா?” என்று கேட்டான் மன்னன். “இரண்டும்
ஒன்றுதான். இரன்டுமே இந்த மண்ணில் இருந்து தோன்றியவைதான். அவை
திரும்பவும் ஒரு நாள் அந்த மண்ணுக்குத்தான் திரும்பவேண்டும். இது தான்
இயற்கையின் நியதி. அது போகட்டும். எனது யோகசக்தியால் இப்பொழுது உன்
மனைவியை உயிர்ப்பித்துத் தருகின்றேன். அவளை உன்னால் அடையாளம் கண்டு
கொள்ள முடியுமா?” என்று கேட்டார் சித்தர் கோரக்கர். "நிச்சயமாக" என்றான்
பத்ரூஹரி. தனது யோகசக்தியால் அங்கே நூறு பெண்களைத் தோற்றுவித்தார்
சித்தர். ஒவ்வொரு பெண்ணும் இராணி பிங்களாவின் அச்சுப்பிரதியாக அங்கே
நின்று கொண்டிருந்தனர். “உன் பிங்களாவைத் தெரிந்தெடுத்துக் கொள்”
என்றார் சித்தர். மன்னன் திகைத்தான். இந்த நூறு பிங்களாக்களுள் எந்தப்
பிங்களாவைத் தெரிந்தெடுப்பது. அந்தக் கணத்திலேயே ஆட்சியைத் துறந்து
கோரக்கரின் சீடனாகத் துறவறம் பூண்டான் மன்னன் பத்ரூஹரி.”
பத்ரூஹரி பற்றிய மற்றுமொரு கதையிலும் பிங்களா என்னும் பெண்
பேசப்படுகின்றாள். ஆனால் கதை முற்றிலும் மாறுபட்டது.
“உஜ்ஜைனி மன்னர் பத்ரூஹரிக்கு இராணிகள் பலர் இருந்தாலும் அவருக்குப்
பிங்களா என்பவளிடம்தான் அளவுகடந்த காதல். இது அவளுக்கும் தெரியும்.
மன்னரைக் கைக்குள் போட்டுக்கொண்டு பிங்களா அரண்மனையிலும் நாட்டிலும்
அதிகாரம் செலுத்தினாள். அரண்மனையில் வேலை செய்யும் ஒருவன்மேல் காதல்
கொண்டு இரகசியமாக அவனிடம் தொடர்பும் வைத்துக்கொண்டாள். இது பற்றி ஒரு
சிலர் மன்னரிடம் சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தனர். மன்னர் நம்பவில்லை.
இராணி பிங்களாமேல் குறை கூறியவர்களையெல்லாம் இராணியின் பேச்சைக்கேட்டுச்
சிறைக்குள் அடைத்தும் வேறு சிலரை நாட்டைவிட்டுத் துரத்தியும் விட்டார்.
ஒருநாள் பத்ரூஹரியைத் தேடி யோகி ஒருவர் வந்தார். அந்த யோகி மன்னனிடம்
ஒரு மாம்பழத்தைக் கொடுத்து இதைச் சாப்பிட்டால் ஒருவருக்குச் சாவே
கிடையாது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். மன்னன் பத்ரூஹரி அந்த
மாம்பழத்தைத் தன் அன்பு மனைவியான இராணி பிங்களாவுக்குக் கொடுத்தார்.
அவளோ அதைத் தன் அன்புக்காதலனாகிய அரண்மனைச் சேவகனுக்குக் கொடுத்தாள்.
அவனோ அந்த மாம்பழத்தைத் தான் பெரிதும் விரும்பும் விலைமாதுவிடம்
கொடுத்தான். அந்த விலைமாதோ இந்த அதிசயமான பழத்தை எங்கள் மன்னர் பத்ரூஹரி
அல்லவா சாப்பிடவேண்டும் என்று நினைத்தவளாய் அந்தப் பழத்தை
பத்ரூஹரிக்குக் கொண்டுவந்து கொடுத்தாள். தான் பிங்களாவுக்கு ஆசையோடு
கொடுத்த மாம்பழம் தன்னிடமே மீண்டும் வந்ததைப் பார்த்த பத்ரூஹரி
நடந்ததையெல்லாம் தீரவிசாரித்து உண்மையை அறிந்து கொண்டார். அவர்கட்டிய
காதல் மாளிகை இடிந்து விழுந்தது. ஆட்சியைத் துறந்தார்; அரண்மனையை விட்டு
வெளியேறினார். ஆண்டியானார்.”
பத்ரூஹரி என்பதன் தமிழ் வடிவமே பத்திரகிரி ஆகும். மன்னன் பத்ரூஹரி துறவு
பூண்டது தொடர்பாக வழங்கிவரும் பல்வேறு மரபுக்கதைகளில் இதுமட்டுமே
தமிழகத்தில் பத்திரகிரியார் பற்றி வழங்கப்படும் கதைளுடன் ஓரளவேனும்
ஒத்து நிற்கின்றது.
தமிழ் நாட்டு மரபுக் கதைகளின்படி சிற்றின்ப ஆசைகளுக்கும் துறவு
நிலைக்கும் இடையே அங்குமில்லாமல் இங்குமில்லாமல் அலைந்து திரிந்த
பத்திரகிரியார் பிற்காலத்தில் பட்டினத்தார் என்ற பரதேசியைக் குருவாகக்
கொண்டு அவர் பின்னே திரிந்து இறுதியில் திருவிடைமருதூரில் சமாதியடந்தார்.
பட்டினத்தார் பத்திரகிரியார் ஆகிய இருவருமே வாழ்க்கையில் சுகபோகங்களை
அனுபவித்தவர்கள். இறுதியில் நம்பி ஏமாந்துவிட்டோமே. காலத்தை வீணே
கழித்துவிட்டோமே என்று தம்மைத்தாமே நொந்துகொண்டவர்கள். பத்திரகிரியாரின்
வரலாற்றை நன்கு அறிந்து வைத்திருந்தார் பட்டினத்தார். பட்டினத்தாரின்
பாடல்களும் பத்திரகிரியாரின் பாடல்களில் கூறப்படும் கருத்துக்களை
வலியுறுத்துவது போல் உள்ளன.
கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையெடுத்து
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வைத்து அயல்வளவில்
ஒப்புடன் சென்று துயில் நீத்துப் பின் வந்து உறங்குவளை
எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சியேகம்பனே
போன்ற பட்டினத்தாரின் பாடல்கள் பலவும் பெண்ணாசையில் வீழ்ந்து
வாழ்க்கையைப் பாழாக்கிவிடவேண்டாம் என்று எச்சரிக்கின்றன. இந்தப்
பாடல்கள் பட்டினத்தாரின் சொந்த அனுபவத்தில் பிறந்ததா அல்லது
பத்திரகிரியாரின் அனுபவத்தினூடாக அவர் அறிந்துகொண்டதா என்பது
தெரியவில்லை. எனினும் பட்டினத்தாரின் பாடல்கள் பலவும் பத்திரகிரியாரின்
வடமொழிநூல்களில் வரும் பாடல்களை ஒத்திருப்பதைக் காணமுடியும்.
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டு என்றும்
குலையுங் காமக் குருடர்க்கு உரைப்பேன்;
நீட்டவும் முடக்கவும் நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உ தவியிங் கியற்றும்
அங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும்
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்
பட்டினத்தாரின் இப்பாடல்கள் பத்திரகிரியாரின் வடமொழிநூலான வைராக்கிய
சதகத்தில் வரும் பாடல்களைப் பெரிதும் ஒத்திருப்பதைக் காணலாம்.
“மாமிசப் பிண்டமான மங்கையின் மார்பகங்களைத் தங்கக் குடங்கள் என்கிறீர்.
எச்சில் ஊறும் அவள் வாயினைப் பிறைமதி என்கிறீர்”. வைராக்கிய சதகம்
16
மனிதவாழ்வின் நிலையற்ற தன்மை குறித்துப் பட்டினத்தார் மற்றும்
பத்திரகிரியார் பாடல்களில் கூறப்படும் கருத்துக்களே அழுகுணிச்சித்தர்,
சிவவாக்கியர் போன்ற தமிழ்நாட்டுச் சித்தர்கள் பாடல்களிலும் மீண்டும்
மீண்டும் பேசப்படுகின்றன. இந்தச் சித்தர் குழாமைச் சேர்ந்தவர்கள் எவரும்
மருத்துவநூல் எதையும் எழுதியிருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை. தமிழ்
மருத்துவர்கள் பயன்படுத்திவரும் இரசமருந்துகளை உபரித்தவர்களுள் தமிழர்
அல்லாதவர்களும் அடங்குகின்றனர். இந்தப் பின்னணியில் தமிழர்
மருத்துவத்தைச் சித்தமருத்துவமாக அடையாளப்படுத்துவதற்கான வாதங்கள்
மிகவும் பலவீனமாகவே உள்ளன.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|