கவிஞர் இரா.காமராசு கவிதைகளில் பெண்ணிய நிலையும் ஆளுமைக் கோட்பாடுகளும்

முனைவர் பூ.மு.அன்புசிவா

மூகம் என்பது ஆண், பெண் உறவின் மீதே கட்டமைக்கப்பட்டதாகும். ஆனால் பெண்ணை பலவிதங்களில் ஆணினம் கட்டுப்படுத்தியே வந்துள்ளது. தொடக்கக் காலம் முதலே அடிமைப்பட்டிருந்த பெண்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியே வந்துள்ளனர். இலக்கியங்களே பதிவு செய்து வைத்துள்ளன. சங்ககாலத்தில் ஒளவையும் தன் பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். கைம்மை நோயின் கொடுமையை பெருங்கோப்பெண்டும் கணவரை இழந்த பெண்கள் மீது நடத்தப்படும் சடங்கு வன்முறையை தாயங்கண்ணியாரும் சங்க காலத்திலேயே பெண்ணியம் பேசியுள்ளனர். இம்மரபு நீடித்து இருபதாம் நூற்றாண்டில் புதுக்கவிதையிலும் தொடர்கிறது.

'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்'


என சமத்துவம் போதித்துள்ளார் பாரதியார்.

பாரதியைத் தொடங்கி வல்லமை பேசியுன் வீட்டில் - பெண் வாங்கவே வந்திடு வார்கள் சில பேர்கள் நல்ல விலை பேசுவார் - உன்னை நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள் என பாடியுள்ளார் பாரதிதாசன். பலரும் பெண்ணியம் குறித்து இலக்கியம் படைத்து வருகின்றனர். கவிதை, கதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் எதுவாயிணும் பெண்ணியம் பேசுவது நீடிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த இலக்கியம் இன்று நவீனத் தளத்தில் இயங்கி வருகிறது. இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய பயணத்தில் நவீன யுகத்தில் மட்டுமே பெண்ணியத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கின்றது. ஆண் படைப்பாளிகளின் பங்களிப்பு இருப்பிணும் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பே பிரதானம். குறிப்பாக கவிஞர்கள்.பெண்ணியம்
(Feminism)  என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். இது ஒடுக்கப்பட்ட பெண்களிடமிருந்து ஒரு சமூகப் பிரச்சினையாகவே வருகிறது. அதன் ஒரு பரிணாம வளர்ச்சியாக இன்று இலக்கியத் திறனாய்வுக் களத்தில் எண்பதுகளில் தமிழிலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கிய இக்கோட்பாடு தொண்ணூறுகளில் எழுச்சி பெற்று உத்வேகத்துடன் வளர்ந்து இன்று ஆக்கம் பெற்றுள்ளது.

பெண்ணியத்தின் தோற்றம்

(Feminism) என்ற ஆங்கிலச் சொல் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18.ஆம் நூற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது என்றாலும், பெண்ணியம் தனி ஒரு கோட்பாடாகவே வலுப்பெற்றது. கி.பி 19.ஆம் நூற்றாண்டில் தான் இக்கோட்பாட்டின் தோற்றம் பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவி வந்தன.

முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்த மார்க்சிய வர்க்கப் போராட்டத்தில், ஆதிக்க வெறி கொண்டவர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆண் ஆதிக்கத்;திற்கு எதிராகவும், பெண் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான், பெண்ணியத்தின் வேர் என்றும், இதிலிருந்துதான் தனி ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது என்றும் மார்க்சியப் பெண்ணிய வாதிகள் கூறுகின்றனர்.

ஆனால்
''Pure Feminism"  என்று சொல்லக்கூடிய தூய பெண்ணியவாதிகள் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியம் என்பது 19.ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாடுகளில் பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகள் வேண்டிப் பெண்கள் எழுப்பிய குரலில் தோற்றம் பெற்றது என்று கூறுகின்றனர்.

தோற்றம் எதுவாக இருந்தாலும் பெண்ணியம் என்பது அமைப்புகளால் ''
Feminist Movement'' வளர்ந்தது என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. தங்கள் மீது ஏவி விடப்பட்டிருந்த அடக்கு முறைக்கு எதிராகத் தீர்க்கமாக எழுப்பிய குரலே பெண்ணியத்திற்கு எழுச்சியூட்டியது.

பெண்ணியம் - சொற்பொருள் விளக்கம்

(Feminism) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேர் தமிழ்ச்சொல்லாகப் பெண் விடுதலை இயக்கங்கள் 'பெண் நிலை வாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். இச்சொல் சமூகவியல் நோக்கில் எடுத்தாளப்பட்ட சொல்லாகும். 'பெண்நிலை வாதம்' என்ற சொல் பெண்களை விவாத நோக்கில் பார்க்கிறது. 'பெண்ணியம்' என்ற சொல் அவர்களை ஆய்வு நோக்கில் பார்க்கிறது.

பெண்ணியம் விளக்கம்

'பெண்ணியம்' என்ற கோட்பாடு பெண்களை நவீன மயமாக்கும் சிந்தனையின் எழுச்சியாகும். இக்கோட்பாட்டைக் கீழ்க்காணும் வரையறைக்குள் ஓரளவு தெளிவுப்படுத்தலாம்.

பெண்ணியம் என்பது பெண்கள் மீதான வரலாறு, மதம், பொருளாதாரம், பண்பாட்டு ரீதியான ஒடுக்கு முறையின் பல்வேறு பரிணாமங்கள், அதற்கானத் தீர்வுகள், அதை அடைவதற்கான வழிமுறைகள் இவற்றை ஆராய்வதாகும்.

சமூக, அரசியல், பொருளாதாரம், போன்ற அமைப்புகளில் ஆண் ஆதிக்கத்தை இனம் காட்டுவது. சமூகத் தோற்றத்தை ஆராய்வது. அதாவது, தாய்வழிச் சமூக அமைப்பிலிருந்து பின் தந்தை வழிச் சமூக அமைப்பு தோற்றம் பெற்றதையும், அம்மாற்றத்தின் விளைவுகளையும் எடுத்துரைப்பது.

பெண்ணியத்தின் வகைகள்

மிதவாதப் பெண்ணியம்
(Liberal Feminism)
தீவிரவாதப் பெண்ணியம்
(Radical Feminism)
சமதர்மப் பெண்ணியம்
(Socialist Feminism)

என்பனவற்றை அடிப்படையாகச் சுட்டலாம்.

நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப வளர்ந்த பெண்ணியக் கோட்பாடு, இந்தியப் பெண்ணியம்
(Indian Feminism) என்று சொல்லப்படுகிறது. இந்தியப் பெண்ணியத்தின் முதல் காலகட்டச் சிந்தனை பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டது. பெண்களைப் பெண்களாகப் பார்க்கும் பார்வை சமுதாயத்தில் இல்லாமல் போகிறது.

இரா.காமராசுவின் கவிதைகளில் பெண்ணியம்

பெண்கள் எல்லாத் துறைகளிலும் பங்கேற்கிறார்கள். தாங்களும் அறிவு நுட்பம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், இக்காலத்தில் பெண்கள் சந்திக்கின்ற வாழ்வியல் சூழல்களைக் கூர்ந்து நோக்கும் போது அவர்கள் மீண்டும் ஆணாதிக்கத் தந்திரங்களால் நவீன அடிமைகளாகவே ஆக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர்கட்குத் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தின் தேவை இன்னுமிருக்கிறது என்பதையும் இரா.காமராசுவின் கவிதைகள் முன்மொழிகிறது.

பெண்கள் முன்னேற்றத்தில் தடை

பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக, மூடநம்பிக்கைகள், கல்வி மறுக்கப்படுதல், இளம் வயதில் திருமணம், பாலினப் பாகுபாடு, அடக்கு முறைகள், உழைப்பு மீதான சுரண்டல், பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருத்தல் போன்றவற்றை இரா.காமராசுக் கவிதைகள் சுட்டிக் காட்டுகின்றன.

மூடநம்பிக்கைகள்

எவ்வளவோ கல்வியறிவும் மாற்றங்களும் பெற்றுவிட்டப் பின்னரும் பெண்கள் மூட நம்பிக்கையின்பால் செல்லுகின்ற ஈடுபாடு அவர்களுக்கான விடியலைக் காலந்தாழ்த்துகிறது. தங்களைத் தாங்களே சிறைப்படுத்துக் கொள்கிற அவலம் இம்மூட நம்பிக்கைகள் என்பதை ஒரு நிகழ்ச்சியின் வருணனைக் கவிதையாக மூதேவிகள்| என்னும் தலைப்பில்,

'மகள் திருமணத்தின் மறுநாளே
கணபதி காலமானார்
அவருக்கிருந்த மாரடைப்பு நோயும்
அன்று தின்ற ஆட்டுக்கறியும்
காலன் வீசிய பாசக்கயிறுகள்
..........................................
..........................................
எல்லா வாய்களும் கடித்துக் கடித்துத்
துரத்தி துப்புகின்றன அவளை'
(இரா.காமராசு 'கணவனான போதும்;' மூதேவிகள், ப.
31)
இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் வறுமையிலும், துயரங்களிலும் மேலும் மேலும் பெண்களை அழ வைத்துக் கொண்டே இருக்கிறது என்பதைக் கவிஞர் அழகியலோடு கூறுகிறார்.

பெண்களுக்கு கல்வி மறுக்கப்படல்

எல்லா விதங்களிலும் தன்னுடைய உரிமைகளை உணர்ந்தவர்களாக மேலோங்க வேண்டும் என்று கருதி அகற்கான அறிவு தேவை என்பதை வலியுறுத்தி,

'அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்'
(பாரதியார், பா, கவி, ப.
28)
என்கிறார் பாரதியார்.

அறிவில் ஓங்கிடக் கல்விக்கு முதன்மை இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை,
'பயிற்றிப் பல கல்வி தந்து - இந்த
பாரை உயர்த்திட வேண்டும்'
(மேலது.ப.
28)

என்று கல்வி கற்றோர் பண்பாளராக வாழ வேண்டுமெனில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி ஆணுக்குப் பெண்கள் சமமாக இருக்கும் வாய்ப்பை நாம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் பாரதியார்.

கிராமப் பகுதியில் இன்றும் கூடப் பள்ளிக்கு அனுப்பப்படாத பெண் குழந்தைகளும், குறிப்பிட்ட வயதுவரை மட்டும் பெண்ணுக்குக் கல்வி போதும் என்பதுமான மனநிலை இச்சமூகத்தில் இருப்பதனை இரா. காமராசுவின் கவிதைகளில் காணமுடிகிறது. சான்றாக,

'அகர வரிசை அறிமுகம் ஆகாத
பொட்டை முகங்கள்|
நிறைந்து கிடக்கும் கிராமங்கள்
இந்த நிலையில்
.......................................
.......................................
கஞ்சியைச் தேடும் கிராமத்து தேவதைகள்'
(இரா.காமராசு. க,போ,கிராமத்து தேவதைகள், ப.
57)
என கிராமப்புறப் பெண்களை நினைத்து ஆதங்கப்படுகின்ற வகையில் இவரது கவிதைகள் காணப்படுகின்றன.

இளம் வயதில் திருமணம்

மனைவி என்ற நிலையில் குடும்ப முன்னேற்றத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறவள் பெண். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு குடும்பம் நடத்தும் பக்குவம் இல்லாத இளம் வயதில் திருமணம் செய்து வைத்தல் என்பது பயங்கரமான செயலாகும்.

பெண்களுக்குப் பதினெட்டு வயதிற்குள் திருமணமென்று, அவர்களது சுய ஆளுமை வளர்ச்சிக்குத் தடையாகவும், குடும்பச் சுமையைத் தாங்கள் மட்டுமே மிகுதியாகச் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். இதற்குக் குடும்பத்தில் குத்து விளக்கு| மகாலெட்சுமி| என்பன போன்ற மரபுப் பாசங்களும் ஆணாதிக்கத்தால் திணிக்கப்படுகின்றன. குறிப்பாகக் கிராமத்துப் பெண்கள் தம் மண வாழ்க்கைச் சார்ந்த தங்களுடைய மன உணர்வுகளை வெளிப்படுத்த இயலாதவர்களாக அவர்களைக் கருதுவதால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகின்ற சூழல் ஏற்படுகின்றது என்பதை,

'ஏழாவது படிக்கும்போது
பெரிய மனுசியா
பள்ளியிலிருந்து நின்று போனாய்
நான் பத்தாவது பாஸாகி
தந்த சாக்லேட்டை
உன் மகளுக்கு நீ ஊட்டியபோது
வெட்கம் பிடுங்கித் தின்றது

நம் இருவரையும்'
(இரா.காமராசு ஙப்போல் வளை பிள்ளைப் பிராயத்திலே, ப.
65)
என்று இளம் வயதில் கல்வி கற்காமல் திருமணம் செய்யும் அவலங்களை ஆசிரியர் சுட்டுகிறார்.

குழந்தைத் திருமணம் ஒரு காலத்தில் போற்றப்பட்ட நம் நாட்டில் ஆண் குழந்தைக்கென ஒரு நியதி பெண் குழந்தைக்கென ஒரு நியதி என்று குறித்து மனுசாஸ்திரத்தின் வழி இந்த இருவேறு நியதிகளைச் சட்டமாக்கிச் செயல்படுத்தி வந்திருக்கிறது இந்திய ஆதிக்க வர்க்கம். இதன் பின்னனியில் உடன்கட்டை ஏறுதலும், தெய்வீகப் பண்பாக சொல்லப்பட்டுள்ளது. பாரதிக்கு முன்பே உடன்கட்டை ஏறுவதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். ஆண்களுக்கு அடிமையாய் பெண் வாழ்வது அநியாயம் என்று அவர் காலத்தில் புரட்சியில் ஈடுபட்டவர் இராஜாராம் மோகன்ராய். தமிழகத்தில் நீதிபதி மயூரம் வேதநாயகம் பிள்ளை பெண்ணடிமை ஒழிய, ஆண், பெண் சமத்துவம் விடியப் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று பெண்ணுரிமைக்குக் கல்வியும், அறிவு வளமும் அவசியம் என்றார். இதே கருத்தை இரா. காமராசு வலியுறுத்துகிறார். பெண்கள் ஆண்களைப் போல் சம உரிமை நிலையில் வாழ்ந்தாலொழிய சமுதாயம் மேன்மை அடைய வழியில்லை என்று பெண்களுக்காக,

'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாந்தரறிவைக் கெடுத்தார்'
(பாரதியார்,பா.கவி-ப.
65)

என்று கூறுகின்றார். மேலும்,

'பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ'
(மேலது, ப.
262)

என்று வினா எழுப்பி, தன் மனைவியை அடிமைப்படுத்துவோன், பெண் குலத்தையே அடிமைப்படுத்துவோன் ஆகமாட்டானோ? என்கிறார் பாரதியார்.

பெண்களைப் பருவம் எய்தும் முன்பு மணம் செய்து கொடுக்கக் கூடாது. பெண்கள் இவ்வுலகின் கண்கள்| எனும் நிலையில் பாரதி பெண்களின் மேன்மையைப் போற்றுவதால், பெண்களுக்கு உரிமை நிறைந்த, அடிமைத்தனமற்ற விடுதலை வாழ்வு இல்லையெனில் இந்த உலகினிலே வாழ்க்கையே இல்லை என்று கூறுகிறார் பாரதியார்.

பாலினப் பாகுபாடுகளும் அடக்கு முறைகளும்


வழக்கமாகவே, சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை| என்று கற்பித்து வைத்திருக்கிற இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் இருக்கும் நிலையை மேலோட்டமாக பார்க்கும்போது பெண்ணியவாதிகள் பாலியல் அடிமைத்தனம்
(Serual Slavery) என்பது பற்றி விரிவாக பேசுகின்றனர். அடிமையாவது அவர்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று என்று அவர்கள் கூறுகின்றனர். 'இச்சமுதாயம் பெண்களைப் பெண்ணாக மாறு பெண்ணாகவே இரு பெண்ணாகவே வாழ் என்று சொல்லி அவர்களை அடிமை வாழ்விற்கு உருப்படுத்திவிட்டது. எனவே, பாலியல் அடிப்படையில் இச் சமுதாயம் உயர்நிலையை அடைய வேண்டும் என்றால் பால்வகை| என்பது அழிக்கப்பட வேண்டும் என்று பெண்ணியவாதிகள் கருதுகின்றனர்' (இரா.பிரேமா.பெண்ணியம் அணுகுமுறைகள். ப.116)

மரபு ரீதியான பெண்ணடிமைக் கருத்துருவங்களைத் தொல்காப்பியரின் நூற்பாக்கள் வழிநின்று அறிய முடிகிறது. மனோபாவம் என்பது உளவியல் சார்ந்தது. ஆண் இப்படித்தான் இருப்பான், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தை உருவாக்கிக் கொண்டு வருகின்ற தலைமுறையும் அதன்படி உருவாக்குவதே ஆகும்.
தொல்காப்பியர் ஆடவனின் இயல்பைப் பற்றிக் கூறும்பொழுது, பெருமையான பிறப்பும் வலிமையும் உடையவன் என்பதை,

'பெருமையும் உரனும் ஆடுஉமேன' (தொல்.நூ.
1042)

என்றும் பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும்பொழுது, அதனைத் தவிர்த்து அச்சம், மடம், நாணம் இருக்க வேண்டும் என்பதை,

'அச்சம் நாணம் மடனும் முந்துறல்
நிச்சமும் பெண்பாற்குரிய'
(தொல்.நூ.
1043)

என்றும் வரையறுக்கிறார்.

இதன் அடிப்படையில் ஆண் மகன் உரனுடையவனாக, பெருமைக்குரியவனாக உருவாக்கப்படுகிறான். பெண்மகளோ அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக, இரக்கமுடையவளாக, மெல்லியவளாக, உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக, செயல் திறனற்றவளாக உருவாக்கப்படுகிறாள் என்று கூறியிருக்கிறார் தொல்காப்பியர். மேலும்,

'ஏழாம் வகுப்பில்
பக்கத்து பெஞ்சுசித்ராவுடன்
ஏதோ பேசியதைப் பார்த்துவிட்ட
கணக்கு வாத்தியார்
பயலும் செருக்கியும் சோடி சேர்ந்தாச்சு
போட்ட கூச்சல்
வகுப்பே கூடி நிற்க
விசாரணையின்றியே கொடுத்த தண்டனை
இந்த நாற்பத்திரண்டிலும்
மனைவி, மகள், சக ஊழியை
எந்த பெண்களோடு பேசும் போதும்
ஆவி உருவங்களாய்
மனசை மிரட்டும் பயங்கரமாய்'
(இரா.காமராசு ஙப்போல் வளை,ப.
74)

என்ற கவிதையின் மூலம் பாலினப் பாகுபாட்டைச் சுட்டுகிறார் ஆசிரியர்.

பெண்களின் மீதான வன்முறைகள்


பெண் என்பவள் மதிப்பு மிக்கவள் என்ற காலம் மாறி, உபரி உற்பத்திப் பெருக்கக் காலத்தில், ஆண் சேமித்து வரும் சொத்துக்களுக்கு வாரிசு உருவாக்கித் தரும் பணியை ஏற்கும் நிலை பெண்ணுக்கு உருவாக்கப்பட்டது. பெண்களின் கடமைகள், ஆண்களின் ஆசைகளை நிறைவேற்றுவதும், குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதும் என்பதும் சமூக நியதியாகிவிட்டது. 'இதற்காகப் பெண்கள் ஆண்களால் கவரப்பட்டு, அடிமைப் படுத்தப்படுபவர்கள் பெண்ணினத்திற்கு ஏற்பட்ட உலகளாவிய வரலாற்று ரீதியான தோல்வி' (கவிதா, மார்க்சியமும் பெண்ணிலை வாதமும் ப.
28) என்று குறிப்பிடுகிறார் எங்கல்சு. ஏங்கல்சின் கூற்றுப்படிப் பெண்களை ஒடுக்கியது ஒரு குறைமணமும், அதன் குடும்ப அமைப்பு ஆகும். இதனை,

'பண்ணைகள் ஆண்டைகள் அய்யாக்கள்
அத்தனைபேர் முதல் ஆக்கிரமிப்பு
ஏழைப் பெண்ணின் இடுப்புத் துணிகளே
கல்விச் சாலையில் கூட
பெண்பிள்ளைகள் வளரல

சில அரைஞாண்களால் குதறப்படுகின்றன'
(இரா.காமராசு, கணவனான போதும், ப.
38)

என்னும் கவிதையில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளைச் சுட்டிக் காட்டுகிறார் இரா.காமராசு.

பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டல்

பொருளாதார ரீதியில் உழைப்பிற்கு ஊதியம் தராமல் ஒடுக்குதலைப் பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டல் என்று கூறப்படுகிறது. சமூகம் சார்ந்த பிரச்சினைகளைச் சந்திக்கும் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரியதாகக் கற்பித்து வைத்திருக்கும் இச்சமூக சூழலில் அவர்களுக்கு ஏற்படும் அவலநிலையை,

'ஆண் செய்யும் குடும்ப வேலை
அனைத்து இதழ்களிலும்
ஜோக்காகவே ஜொலிக்கிறது
மகாத்மாக்களும் மகாகவிகளும்
பார்க்க விரும்பியது சுதந்திரப் பெண்கள்
இன்று சுமைதாங்கிகளாய்
பெண்களின் தோள்கள்'
(இரா.காமராசு, ஙப்போல் வளை, ப.
43)

என்று பெண்களை உழைக்கும் இயந்திரமாகச் சுட்டுகிறார் காமராசு.

உண்மையில் பெண்களின் பொருளாதாரமும் அவர்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது என்ற உண்மையை கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது. படித்த, பணியாற்றுகின்ற பெண்ணை மணக்க விரும்பும் இக்கால பெரும்பான்மை ஆடவர் அப்பெண் செய்யும் வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதை ஆணாதிக்க கொடுமை என்று எடுத்துரைக்கிறார் காமராசு.

'மொட்டை மரம்' என்னும் கவிதையில் இரா.காமராசு, பெண்கள் ஆரம்பம் முதல் முடிவு வரைச் சார்ந்து வாழும் நிலையில் இருந்து மரித்துப் போகும் போது ஒன்றும் இல்லாத நிலையை,

'ஒரு கிளை கருகி விழுந்தது
கிளைகள் இழந்த ஒட்டு மரம்
மழை பெய்ய
இவை விட்டது
நான் மட்டும்
நான் மட்டும்'
(மேலது. கணவனான போதும், ப.
38)

என்று கூறி இறுதியில் பெண் தன்னிலையில் மொட்டை மரமாக இருக்கிறாள் என்பதைச் சொல்லும் விதம் அழகியலோடு தொடர்புடையது. இவ்வாறு ஒரு பெண்ணின் அவல நிலையைச் சமூகத்திலிருந்து பிரதிபலிப்பதைக் காமராசுவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

பெண்ணுக்கு பெண்ணே எதிரி

பல்வேறு இலக்கியப் படைப்பாளிகள் கவிதை, நாவல், சிறுகதை போன்றவற்றின் மூலம் சமூகச் சிக்கலைச் சொல்லி அவற்றிற்குத் தீர்வு காணும் பொருட்டு தனது படைப்பில் சொல்லியிருப்பார்கள். அதே போன்று இரா. காமராசுவும் தன்னுடைய படைப்புகளில் சமூகச் சிக்கலையும், பெண் கொடுமைகளையும் எடுத்துச் சொல்லி தீர்வு காணும் வகையில் கூறியுள்ளார்.

விதவை, வாழ்வு, மாமியார் கொடுமைகள், ஆண்களின் அடக்கு முறையின் கீழ் பெண்களுக்கு பெண்களே எதிரியாக மாறும் நிலையையும், பெண் கொடுமைகளையும் பற்றி காமராசுவின் கவிதைகளில் காண முடிகிறது. இதனை,

'பெண்களுக்கு மட்டுமே பெருமை சேர்க்கும்
விதவை வாழ்வு விரட்டப்படவில்லை
அடுப்புப் புகை கக்கிய இருள்'
(மேலது, ப.
73)

என்ற கவிதை வரிகளில் பெண்களின் உணர்வுகளைப் பெண்களே மதிக்காமல் பெண் கொடுமைகளைச் செய்யும் நிலையை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இரா.காமராசு கவிதையில் பெண்;ணுக்குப் பெண்ணே எதிரியாக இருக்கும் சூழல் 'வீடு| என்னும் கவிதையில் வரதட்சணைக் கொடுமையில் மன உளைச்சலை அனுபவிக்கும் ஒரு மகளின் குரலாக ஒலிக்கிறது என்பதனை,

'அழகிய குளம்
அமைதியான தண்ணீர்
மலர்ந்த தாமரை
மஞ்சள் பூசி மங்கலக் குளியல்
மனசென்னவோ
முரட்டு மாமியாரோடுதான்'
(இரா. காமராசு, க,போ, ப.
39)

என்று சொல்லப்படுகிற நிலை பெண்களுக்குப் பெண்களே எதிரியாக இருக்கின்றனர் என்பதை காமராசு கவிதைகள் தெளிவாகக் காட்டுகிறது.

தொகுப்புரை:

  • இரா.காமராசு தன்னுடைய கவிதைகளின் வாயிலாக பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளையும், கொடுமைகளையும், அவர்களின் மீதான உழைப்புச் சுரண்டல்களையும் ஆணாதிக்க தந்திரங்களினால் அடிமைகளாக ஆக்கப்படுகின்ற நிலைகளையும் எடுத்தியம்பியுள்ளார். பெண்ணியம் என்பது தொன்றுதொட்டு தொடரும் ஒரு பிரச்சனை இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்து பெண்ணுரிமைப் பேசப்பட்டாலும் நவீன இலக்கியத்திலேயே பெண்ணியம் முதன்மைப் பெற்றுள்ளது.
     

  • ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொருவிதமாய் ஒவ்வொரு யுத்தியுடன் எழுதியிருந்தாலும் பெண் விடுதலையே இலக்கு. பெண் சுதந்திரமே நோக்கம் பெண் உரிமையே கோரிக்கை. பெண் சமத்துவமே தேவை. பெண்ணியச் சிந்தனையுடன் எழுதப்பட்ட கவிதைகள் பிரச்சனைகளை, சிக்கல்களை, அவஸ்தைகளை முன் வைத்திருப்பிணும் தீர்வையே கோருகிறது.
     

  • ஆணாதிக்க சமுதாயத்தை தோலுரித்துக் காட்டவும் தயங்கவில்லை. எதிர்க்கவும் அஞ்சவில்லை. பெண்ணுக்கான விடுதலை, உரிமை, சுதந்திரம், சமத்துவம் வெகு தூரத்தில் இல்லை என்பதையே கவிஞர்களில் கவிதைப்படைப்புகள் கட்டியங் கூறுகின்றன. ஆயிணும் அவைகைள பெண் சமூகம் விரைவில் பெற பெண்ணியம் சார்ந்தப் படைப்புகள் அவசியம் ஆகிறது. அத்தகைய பெண்ணியப் படைப்புகளுக்கு இலக்கியமே களமாக உள்ளது.
     

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை
-641 035.

 

 

 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்