மூவகை வீரமும் நனி சிறந்து விளங்கும்
நலங்கிள்ளியின் புறநானூற்றுப் பாடல்!
முனைவர் இரா.மோகன்
சங்க
கால அரசப் புலவருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவனாக விளங்கியவன் சோழன்
நலங்கிள்ளி. பாவலன் ஆகிய இவன், சான்றோரால் பாடப்பெறும் புகழுக்கு
உரியவனாகவும் திகழ்ந்துள்ளான். இவனை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
(27-30),
கோவூர்கிழார் (31-33,382,400),
ஆலத்தூர் கிழார் (68,225)
ஆகிய புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர்.
பாண்டிய நாட்டில் இருந்த ஏழு அரண்களை அழித்தவன்; தன் உறவினருடன்
மாறுபாடு கொண்டு உறையூரையும் ஆவூரையும் முற்றுகை இட்டவன்;
நெடுங்கிள்ளிக்குப் பகைவன்; ‘வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள
வல்லை ஆகுமதி’ (27)
என்னும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அறிவுறுத்தலால் அறம் செய்தலை
மேற்கொண்டவன் என்பன இவனைப் பற்றியத் தெரியவரும் குறிப்புக்கள் ஆகும்.
‘எனக்குப் பகையாயினாரை இன்னது செய்வேன்; செய்யேனேல் இன்ன தன்மையன் ஆவேன்
என்று கூறுதல்’ வஞ்சினக் காஞ்சி ஆகும். புறநானூற்றில் இத் துறையில்
அமைந்த பாடல்கள் மூன்று (71-73),
இவற்றைப் பாடியோர் முறையே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்,
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி ஆகியோர்
ஆவர்.
வஞ்சினக் காஞ்சித் துறையில் அமைந்த சோழன் நலங்கிள்ளியின் புறநானூற்றுப்
பாடல் வருமாறு:
“மெல்ல வந்து, என் நல்அடி பொருந்தி,
‘ஈ’ என இரக்குவர் ஆயின் சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர் ஆயினும் கொடுக்குவென்; இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சுபுலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால்அகப் பட்ட
வண்திணி நீள்முளை போலச் சென்றுஅவண்
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே.” (72)
‘மெல்ல வந்து எனது நல்ல அடியை அடைந்து, ‘கொடு’ என்று என்னைக் கெஞ்சிக்
கேட்டால், சிறப்புப் பொருந்திய, புகழுடைய, முரசோடு கூடிய என்னுடைய
உரிமைச் சொத்தாகிய இந்நாட்டைப் பெறுவது எளிது. அது மட்டும் அல்லாமல்,
எனது இனிய உயிரையும் கூடக் கொடுப்பேன். பல்வகைத் திறமும் பொருந்தியோர்
வீரத்தினை மதிக்காமல் என் வலிமையை இகழ்ந்த அறிவில்லாதோன், உறங்கும்
புலியின் மேல் கால் இடறி வீழ்ந்த பார்வை இல்லாதவன் போல் இங்கிருந்து
தப்பிப் போவது அரிது. மூங்கிலைத் தின்னும் வலிய யானையின் காலின் கீழ்
அகப்பட்ட நெடிய முளையைப் போல மேற்சென்று அவர்கள் வருந்துமாறு போரிடேன்
ஆயின், தீதில்லாத நெஞ்சத்தோடு காதல் கொள்ளாத பலவாகத் திரண்ட கரிய
கூந்தலை உடைய (விலை)மகளிரின் பொருந்தாத தழுவுதலால் எனது மாலை
குழையட்டும்!’ என்பது இப் பாடலின் தெளிவுரை ஆகும்.
“அவன் (சோழன் நலங்கிள்ளி) வீரம் இப் பாட்டிற் பலவகையாகப்
புலப்படுகின்றது. கொடுப்பதிலும் உயர்ந்து வீரங் காட்டுகிறான்;
பகைவர்க்கு இடங்கொடாமையிலும் மிகுந்த வீரங் காட்டுகின்றான். பொருட்
பெண்டிரைச் சாராத ஆண்மையிலும் பேராண்மை காட்டுகின்றான்” (சங்க இலக்கிய
இன்கவித் திரட்டு, பக்.101-102)
என மூதறிஞர் இளவழகனார் இப் பாடலில் காணும் நயமும் நுட்பமும் ஈண்டு
மனக்கொளத்தக்கன.
கொடுக்கும் பண்பில் மற்றவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு
நலங்கிள்ளி எவ்வளவு மேம்பட்டவனாக விளங்குகின்றான் என்பதை அவனது கொடை
வீரப் பேச்சாக வரும் இப் பாடலின் முதல் நான்கு அடிகள் நன்கு
உணர்த்துகின்றன. ஆழ்ந்து நோக்கின், ஒரு நிலையில் இருந்து அதனினும்
உயர்ந்த ஒரு நிலையில் மேம்படுதல் அன்றோ வீரம் என்பது!
அடுத்து, நலங்கிள்ளியினது படை வீரப் பேச்சில் இடம்பெற்றிருக்கும் இரு
உவமைகளும் மிகவும் திறமானவை. அவனது உள்ளத்தில் அத்தகைய மேம்பாடான வீரம்
கொலு இருந்ததனாலேயே, அவன் சொல்லில் இருந்து அத்தகைய வீர உவமைகள்
வெளிப்பட்டன என உய்த்துணரலாம்.
மூன்றாவதாக, இப் பாடலில் இடம் பெற்றிருப்பது நலங்கிள்ளியின் நடை வீரப்
பேச்சு. நடை – ஒழுக்கம்; ஒழுக்கத்தில் வீரம் காட்டுவது, வீர உணர்வுகள்
எல்லாவற்றிலும் தலையாயது. உயர்ந்தது என்று தாம் காலமெல்லாம் கருதிப்
போற்றி வருகின்ற ஒரு கருத்தின் மேலே தான் யாரும் வஞ்சினம் கூறுவது
இயல்பு; வழக்கம். ஆதலால், கொடை வீரம், படை வீரம் ஆகியவற்றை விட, நடை
வீரத்தையே நலங்கிள்ளி பெரிதும் மதித்து ஒழுகி வந்தவன் என்பது
பெறப்படுகின்றது. வஞ்சினம் கூறும் விதமாக இப் பாடலில் நலங்கிள்ளி
கருத்துக்களைப் புலப்படுத்தி இருக்கும் திறம் மிகவும் ஆற்றல் சான்றதாக
விளங்குகின்றது.
சுருங்கக் கூறின், கொடை வீரமும் படை வீரமும் நடை வீரமும் ஒருங்கே
களிநடம் புரிந்து நிற்கும் சோழன் நலங்கிள்ளியின் நனிசிறந்த புறப்பாடல்
இது எனலாம்!.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|