ஜெயகாந்தனின் கவிதை உலகு
முனைவர் இரா.மோகன்
ஜெயகாந்தன்
அன்னைத் தமிழுக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான ஞான பீடத்தினைப்
பெற்றுத் தந்த பெருமைக்கு உரியவர்; புனைகதை வடிவங்களான சிறுகதை,
குறுநாவல், நாவல் என்னும் மூன்றிலும் முத்திரை பதித்த எழுத்துக்குச்
சொந்தக்காரர்; ‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்னும் அனுபத் தொடர்
வாயிலாகப் புனைகதை அல்லாத குறுங்கட்டுரை
(Non-fiction) வடிவிலும் தடம்
பதித்த ஆளுமையாளர்; திரைப்படம், பத்திரிகை, அரசியல் ஆகிய
முத்துறைகளிலும் தமது அழுத்தமான, நிலையான பங்களிப்பினை நல்கி இருப்பவர்.
ஜெயகாந்தனின் நீண்ட, நெடிய எழுத்துப் பயணத்தில் கவிதைக் கலையும்
அவ்வப்போது அவரைத் தடுத்து ஆட்கொண்டுள்ளது; வேறு சொற்களில்
குறிப்பிடுவது என்றால், அவரது படைப்புலகில் கவிதைக் கலையும் சில
தருணங்களில் மூன்றாம் பிறை போல் முகம் காட்டியுள்ளது. “எனக்கு வெண்பா
என்றாலும், விருத்தப் பா என்றாலும் – ஏன் கவிதை என்றாலே – பாரதி தான்
கட்டளைக் கல்!... என்னுடைய கவிதைகள் குழந்தைகள் விளையாடும் ஏழாங்காய்க்
கற்கள் தாம்!” (முன்னுரை, ஜெயகாந்தன் கவிதைகள், ப.6) என ஒப்புதல்
வாக்குமூலம் தந்துள்ள ஜெயகாந்தன், பிறிதொரு கவிதையில், “நித்தம் ஒரு
கவிதை, நெஞ்சினில் ஊறி வரும்!” (ப.149) எனப் பாடி இருப்பது
குறிப்பிடத்தக்கது. “அவருள் ஒரு கவித்துவச் சுனை சூல் கொண்டு மகவு
ஈன்றிடத் துடிப்பதை நுண்ணுணர்வுடன் நோக்கினால் அடையாளம் கண்டு கொள்ள
முடியும்” (ஜெயகாந்தன், ப.56) என ஜெயகாந்தனின் நீண்ட கால நெருங்கிய
நண்பரான கே.எஸ்சுப்பிரமணியன் குறிப்பிடுவது ஈண்டு மனங்கொளத் தக்கது.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலான தமது எழுத்துப் பயணத்தில் ஜெயகாந்தன்
பல்வேறு சூழல்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ஜெயகாந்தன் கவிதைகள்’
என்னும் தலைப்பில் கோவையைச் சார்ந்த ‘தொடு வானம்’ பதிப்பகத்தார்
2008-ஆம் ஆண்டில் ஒரு நூலாக வெளி-யிட்டுள்ளனர். இத் தொகுப்பில்
ஜெயகாந்தனின் 155 கவிதைகள் இடம்-பெற்றுள்ளன. இனி, ஜெயகாந்தனின் கவிதை
உலகு குறித்துச் சுருங்கக் காண்போம்.
கவிதை ஒரு மூட்டைப் பூச்சி!
“இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்”
(சோதிமிகு நவகவிதை, ப.87)
எனக் காதலனின் கூற்றாகக் கவிதை ஒன்றினை வடிப்பார் கவிக்கோ அப்துல்
ரகுமான். ஜெயகாந்தனும் இதே போல,
“கவிதை ஒரு மூட்டைப் பூச்சி
இரவில் என்னைத்
தூங்க விடாமல் கடிக்கிறது!”
எனத் தம் கவிதை ஒன்றினைத் தொடங்குகின்றார். தொடர்ந்து அவர், “இலக்கணம்
ஏதும் கல்லாதவன், ஒண்டுக் குடித்தனவாசி, வீட்டில் ஆளும் அதிகம்;
அழுக்கும் அதிகம்! சுண்ணாம்பு அடிக்கிற பழக்கம் சுத்தமாய் இல்லை! இண்டு
இடுக்குகள் எங்கும் உண்டு, சந்துகள் பொந்துகள் சங்கதி தெரியும்!” எனத்
தம்மைப் பற்றியும் தம் வீட்டைக் குறித்தும் சுய அறிமுகம் செய்து
கொள்கின்றார். இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் – ‘தூக்கம் ஒன்றுதான்
துக்கம் கெடுக்கும்’ என்னும் நிதர்சன உண்மையையும் உணர்ந்து கொள்ளாமல் –
இலக்கணம் ஏதும் படித்திராத அவரைத் தூங்க விடாமல் கவிதை எனும் இந்த
மூட்டைப் பூச்சி கடிக்கின்றதாம்! இந் நிலையில், “என் செய? எழுதவா,
வேண்டாமா?” (ப.134) எனக் கேட்டு இக் கவிதையை முடிக்கின்றார் ஜெயகாந்தன்.
கவிதையை ஒரு மூட்டைப் பூச்சியாக – அதன் கடியாக – இதுவரை எவரும் சொன்னது
இல்லை; என்றாலும், மூட்டைப் பூச்சியின் கடியை அனுபவித்தவர்களுக்கே கவிதை
பற்றிய ஆழ்ந்திருக்கும் ஜெயகாந்தனின் உள்ளக் கருத்து – குறிப்பு –
விளங்கும்.
கவிஞன் ‘தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, வருமானம் – இவை உண்டு,
தான் உண்டு என்று எந்நாளும் இருக்கும்’ கடுகு உள்ளம் கொண்டவன் அல்லன்;
மாறாக, ‘தூய உள்ளம், அன்பு உள்ளம், பெரிய உள்ளம், தொல்லுலக மக்கள்
எல்லாம் ஒன்றே’ என்னும் தாயுள்ளம் படைத்தவனே உண்மைக் கவிஞன் ஆவான்.
இதனைப் புலப்படுத்தும் வகையில் ஜெயகாந்தன் புனைந்துள்ள கவிதை வருமாறு:
“என் வீட்டில் நல்ல இருட்டு
எதிர் வீட்டு வெளிச்சத்தில்
எழுதுகிறேன் கவிதை.
என் வீட்டு விளக்குக்கு
எண்ணெய் இல்லை என்கிற கவலை
எனக்கு இல்லை.
எதிர் வீட்டு விளக்குக்கு
எண்ணெய் இல்லை என்கிற கவலை
எனக்கு.” (ப.36)
ஜெயகாந்தனின் கண்ணோட்டத்தில் தன் வீட்டு விளக்குக்கு எண்ணெய் இல்லை
என்பது குறித்துக் கூட எண்ணிப் பார்க்காமல், கவலையும் படாமல், எதிர்
வீட்டு விளக்குக்கு எண்ணெய் இல்லையே என்றே கவலைப்படும் கருணை உள்ளம்
கொண்டவனே கவிஞன் ஆவான்.
உள்ளத்தை உருக்கும் ஒற்றைச் செருப்பின் சோகம்
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைக்கு எவரும் பாட்டுடைத் தலைவர் ஆகலாம்;
எதுவும் பாட்டுப் பொருள் ஆகலாம். தன்னேரிலாத் தலைவராக இருக்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லை; காதல், வீரம் என்ற இரு பெரும் உணர்வுகளைத் தான்
பாட வேண்டும் என்ற வரன்முறையும் இல்லை. வீதியில் கவனிப்பாரற்றுக்
குப்புறக் கிடக்கும் ஒற்றைச் செருப்பு கூட ஜெயகாந்தனின் கை வண்ணத்தில்
அழகிய கவிதைக் கோலத்தினைப் பூண்டுள்ளது.
“ஒற்றைச் செருப்பு
ஒன்று கிடக்கிறது
இடமோ வலமோ
எதுவும் தெரியவில்லை
குப்புறக் கிடந்து
குமுறி அழுகிறது!”
எனத் தொடங்கும் கவிதை, அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுத்து
ஒற்றைச் செருப்பின் அவலத்தை, ஆற்றாமையை உருக்கமாகப் பதிவு செய்கின்றது:
“இணைணயைப் பிரிந்த
இலக்கியச் சோகம்
இதற்கு மட்டும்
இல்லையா என்ன?
பொருள்வயின் பிரிந்ததோ?
போர்வயின் பிரிந்ததோ?
உயிர்செலப் பிரிந்ததோ?
ஊழ்வினை மேல்வந்து
உறுத்தலால் பிரிந்ததோ?
கவிதையின் சோகம் இக்
காலணிக்கு இல்லையோ?” (பக்.140-141)
ஜெயகாந்தனின் கைவண்ணத்தில் தனது இணையைப் பிரிந்த ஒற்றைச் செருப்பின்
சோகம் கூட கவிதைப் பொருள் ஆகியுள்ளது.
மாறுபட்ட கோணம்
இவ்வுலகில் நூற்றுக்கு நூறு நல்லவரும் இல்லை; முழுக்க முழுக்கக்
கெட்டவரும் இல்லை. வள்ளுவர் நோக்கில் குணம் நாடி, குற்றமும் நாடி,
அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வதே ஏற்புடையது. இந் நெறி நின்றே நாவலர்
சோமசுந்தர பாரதியார் ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்னும்
நூலினைப் படைத்தார்; பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனும் ‘இராவணன்
மாட்சியும் வீழ்ச்சியும்’ என்னும் நூலினை எழுதினார். ஜெயகாந்தன்,
“கைகேயி கெட்டவள் அல்லள்
கூனி கூடக் கெட்டவள் அல்லள்
காடு வரை போனவனைப்
பாதி வழி போய் மறித்துப்
பாதுகையைப் பறித்து வந்தான்
பரதனே பாவி!” (ப.19)
எனப் படைத்திருக்கும் கவிதையும் இவ் வகையில் கருதத்தக்கதாகும்.
இராமாயணத்தில் கூனியும் கைகேயியும் இல்லை என்றால். இராவண வதம் என்னும்
இமாலய நிகழ்வு (Mega Event) நடப்பதற்கான வாய்ப்பே உருவாகி இருக்காது.
இக் கண்ணோட்டத்தில் அணுகினால் கைகேயி கெட்டவள் அல்லள்; கூனி கூடக்
கெட்டவள் அல்லள், தந்தையின் ஏவலை ஏற்றுக் காடு வரை போன இராமனப் பாதி வழி
போய் இடை மறித்து, அவன் அணிந்திருந்து பாதுகையைக் கூட வலுக்கட்டாயமாக,
விடாப்பிடியாகப் பறித்து வந்த பரதனே பாவி ஆவான்!
மெய்யியல் சிந்தனைகள்
‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினியே ஒளி உண்டாகும்’ (பாரதியார்
கவிதைகள், ப.155)
என்னும் பாரதியின் வாக்கிற்கு ஏற்ப, உண்மை ஒளி சுடர் விட்டு நிற்கும்
மெய்யியல் சிந்தனைகள் ஜெயகாந்தன் கவிதைகளில் அங்கு இங்கு எனாதபடி
எங்கும் மண்டிக் கிடக்கக் காண்கிறோம். இவ்வகையில் குறிப்பிடத்தக்க
பதச்சோறு ஒன்று:
“பொறி எங்கே போயிற்று?
புலனெல்லாம் அடங்கும் ஒரு
போதத்தில் போயிற்று!
அறிவு எங்கே போயிற்று?
அமைதியெனும் இடந்தேடி
அமர்ந்திடவே போயிற்று!
புகை எங்கே போயிற்று?
போகும் இடத்திற்கே
புறப்பட்டுப் போயிற்று!
சுகம் எங்கே போயிற்று?
சும்மா இருப்பவரின்
சொந்தமாய்ப் போயிற்று!” (ப.18)
பொறி, புலன் எல்லாம் அடங்கும் ஒரு போதம் தேடிப் போயிற்றாம்! அறிவு,
அமைதி எனும் இடம் தேடி அமர்ந்திடவே போயிற்றாம்! புகை, போகும் இடத்திற்கே
புறப்பட்டுப் போயிற்றாம்! சுகம், சும்மா இருப்பவரின் சொந்தமாய்ப்
போயிற்றாம்! இங்கே ஒற்றை வரிகளில் ஜெயகாந்தன் உணர்த்தி இருக்கும்
மெய்யியல் சிந்தனைகள் ஆழ்ந்து, அகன்று, நுண்ணிய திறத்தவை.
ஆன்மிக அனுபவத்தை ஒரு ஜென் கதை போல் குறுகத் தறித்த வடிவில் கூற
முடியும் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கும் ஜெயகாந்தனின் பிறிதொரு
அற்புதமான தத்துவக் கவிதை:
“நானொரு மூடன் – எனை
நம்பிவந் தான் ஒரு சீடன்.
என்னை வணங்கி எழுந்தான் – எனக்குத்
தன்னை வணங்கிடும் தன்மையைத் தந்தான்.
வந்தது ஞானம் என்று
வந்தவன் தன்வழி சென்றான்.
சிந்தையில் ஞானச் சிறுபொறி கனன்றது
சிரித்தேன்!” (ப.146)
பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு போல, நவில்தோறும் நயமும் நுட்பமும்
பற்பல உணர்த்தும் நல்லதொரு கவிதை இது!
தெய்வம் இருப்பது எங்கே?
‘தெய்வம் இருப்பது எங்கே?’ என்ற வினாவுக்கு ஜெயகாந்தன் தரும் விடை
வித்தியாசமானது; ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவது.
“தங்கக் கோபுரம் வைத்த கோயிலில் ஒரு பேய்
தங்கி யிருந்து வாழுது;
அங்கோர் காட்டினில் அடர்ந்த புதரிடை
அருட்சுடர் தெய்வம் வாழுது!” (ப.97)
தங்கக் கோபுரம் வைத்த கோயிலில் தெய்வம் இல்லையாம்! அங்கே ஒரு பேய் தான்
தங்கி இருந்து வாழ்கின்றதாம்! அங்கோர் காட்டினில் அடர்ந்த புதரிடையே
அருளே வடிவான, ஒளிபடைத்த தெய்வம் வாழ்கின்றதாம்! கோயிலின் இன்றைய நிலை
குறித்த கூர்மையான விமர்சனம் இக் கவிதை!
‘யாஅம் இரப்பவை, பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால், அருளும்
அன்பும் அறனும் மூன்றும், உருள்இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!’ (பரிபாடல்,
5) என முருகப் பெருமானிடம் மனமுருகி வேண்டினார் கடுவன் இளவெயினனார்.
தாயுமானவர் ‘நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர், பூசை
கொள்ள வாராய் பராபரமே!’ என இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இவர்களின்
அடிச்சுவட்டில் ஜெயகாந்தனும்,
“அன்பெனுந் தெய்வம்
அமர்ந்த நல் ஆலயம்
இன்ப நிலை கொழிக்கின்ற
ஏகாந்த சாகரம்!” (ப.116)
எனக் கவிதை படைத்துள்ளார்.
காதல் உணர்வின் செவ்வி
மலரினும் மெல்லிய காதல் உணர்வின் செவ்வி தலைப்பட்டுள்ள இடங்களையும்
ஜெயகாந்தன் கவிதைகளில் ஆங்காங்கே காண முடிகின்றது நெஞ்சை அள்ளும் ஓர்
எடுத்துக்காட்டு இதோ:
“மஞ்சள் பூசும் இடமெல்லாம் என்
மனம்பூசல் ஆகாதோ?
கொஞ்சம் எனைக் குங்குமமாய்க்
குழைத்தெடுத்தால் வாரேனோ?
படிக்கட்டில் ஏறிவரும்
பாதத்து எழில் பார்ப்பதற்குப்
படிக்கட்டின் இடையே ஓர்
படிக்கல்லாய் மாறேனோ?” (ப.130)
இவ் வரிகளில் குலசேகர ஆழ்வாரின் தாக்கம் பதிந்திருப்பது கண்கூடு.
பிறிதொரு கவிதையில் காதலன் தன் உள்ளங்கவர் காதலியை இனம் கண்ட விதத்தை
இயம்பி இருக்கும் பாங்கு நனி நன்று. ஜெயகாந்தனின் சுந்தரத் தமிழில் அக்
கவிதை வருமாறு:
“இங்கு உன்னை இப்போது நான்
இனம் கண்ட விதத்தை இயம்புகின்றேன் – முன்பு
சங்க இலக்கியங்கள் தந்த
அங்க அடையாளம் கொண்டு உனை
இங்கு கண்டேன்!” (ப.89)
உள்ளத்தை ஈர்க்கும் உவமை அழகு கொலு இருக்கும் ஜெயகாந்தனின் மற்றும் ஒரு
காதல் கவிதை இதோ:
“ஓலை பின்னுமாப் போல் – என்றன்
உள்ளம் பின்னி விட்டாள்!
சேலை பிழியுமாப் போல் – என்
சிந்தை முறுக்கி விட்டாள்!” (ப.88)
“தண்ணிக் குடமெடுத்து
தனிவழியே போற பெண்ணே!
தண்ணிக் குடத்தினுள்ளே
தளும்புதடி என் மனசு!’
(மா.வரதராஜன், தமிழகத் தெம்மாங்குப் பாடல்கள், ப.66)
என்பது நாட்டுப் புறத்தில் வழங்கும் ஒரு சுவையான தெம்மாங்குப் பாடல்.
இதன் சாயலில் ஜெயகாந்தன் படைத்துள்ள ஒரு காதல் கவிதை:
“குடத்தை இடுப்பில் இறுக்கியே
குலுக்கி நடக்கும் சிறுக்கியே – உன்
இடுப்பில் குடம்போல் இருக்கவே - மனம்
துடித்துத் துடித்துக் கிடக்குதே!” (ப.34)
தண்ணீர்க் குடத்தை இடுப்பில் இறுக்கி, தனி வழியே குலுக்கி நடந்து
செல்லும் சிறுக்கியின் இடுப்பில் குடம் போல் இருக்க வேண்டும் என்று
துடியாய்த் துடித்துக் கிடக்கின்றதாம் இளைஞனின் மனம்!
தொழிலாளரை உயர்த்திப் பிடித்தல்
“அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடு வீரே!
பெரும் புகழ் நுமக்கே இசைக் கின்றேன்,
பிரம தேவன் கலை இங்கு நீரே!...
தேட்டம் இன்றி விழியெதிர் காணும்
தெய்வமாக விளங்குவிர் நீரே!”
(பாரதியார் கவிதைகள், பக்.415-416)
எனத் தொழிலாளர்களைத் தெய்வங்களுக்கு நிகராக உயர்த்திப் பாடியவர்
பாட்டுக்கொரு புலவர் பாரதியார். அவரது வழியில் ஜெயகாந்தனும் தம் கவிதை
ஒன்றில்,
“மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க
நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க
நாளும் வளரணுங்க - நம்ம
நாடும் செழிக்கணுங்க!”
எனத் தொழிலாளர் இனத்திற்கு வாழ்த்து இசைக்கின்றார். இன்னும் ஒரு படி
மேலாக,
“மலையைப் பிளப்பவங்க மானம் காப்பவங்க
கலையை வளர்ப்பவங்க களையும் எடுப்பவங்க
கடவுள் உருவமுங்க - அவங்க
கையில் உலகமுங்க!” (ப.183)
எனத் தொழிலாளர்க்குப் புகழாரமும் சூட்டுகின்றார்.
“நாடு வளர்ந்து செழிக்குது – புது
நம்பிக்கைகள் பிறக்குது…
புவியினைக் காக்கும் உழைப்பவராலே
புதுமைகள் ஆயிரம் விளையும்” (ப.165)
எனப் பிறிதொரு கவிதையிலும் தொழிலாளரின் பெருமையை நம்பிக்கையோடு
பேசியுள்ளார் ஜெயகாந்தன்.
நிம்மதியாகச் சாக…
“இறந்தவனைச் சுமந்தவனும்
இறந்துட்டான் – அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க
மறந்துட்டான்!”
எனத் தொடங்கும் உவமைக் கவிஞர் சுரதாவின் தத்துவப் பாடல் திரையுலகில்
முத்திரை பதித்த ஒன்று. இதற்கு நிகராக ஜெயகாந்தனும் ஒரு தத்துவக்
கவிதையைப் படைத்துள்ளார்.
“செத்தவனுக்கு அழுதவனும்
செத்துவிட்டான் – இதைச்
சிந்தித்துப் பார்த்துச் சிரிக்க எவன்
கத்துக்கிட்டான்?”
எனத் தொடங்கும் அவரது கவிதை, அடுத்தவரது சாவில் இருந்து மனிதன் கற்றுக்
கொள்ள வேண்டிய இன்றியமையாத வாழ்க்கைப் பாடத்தினை ஆற்றல் சான்ற மொழியில்
உணர்த்துகின்றது.
“சத்துவகுண புத்தரும் சித்தரும்
என்ன ஆனாங்க? – ஒரு நாள்
சாம்பலாகி மண்ணுக்குள்ளே
மறைஞ்சு போனாங்க”
என்னும் நிதர்சன உண்மையை எடுத்துக்காட்டி, ஜெயகாந்தன் மனித குலத்திற்கு
அறிவுறுத்தும் ஆழமான செய்தி இதுதான்:
“கத்த வித்தை, பெருமையெல்லாம்
செல்லாதுங்க – ஒரு
காலம் வரும்போது ஏதும்
நிக்காதுங்க.
சத்தியமாகச் சொல்லிடுவேன்
சாவதற்கு முன்னாலே
நித்தியமாக நிலைப்பது போல்
நல்லது ஒண்ணு செஞ்சிடுங்க.
பிறகு,
நிம்மதியாகச் செத்திடுங்க.” (பக்.174-175)
சாவதற்கு முன்னால் நித்தியமாக நிலைப்பது போல் நல்லது ஒன்று செய்திட்டால்
போதும், இதுவே ஒரு மனிதன் நிம்மதியாகச் சாவதற்கும் செத்த பின்னும்
நிலைத்து வாழ்வதற்குமான நெறி என்பது ஜெயகாந்தனின் அழுத்தமான கருத்து.
கவிதைகளில் காணலாகும் சிறப்புக் கூறு
ஜெயகாந்தன் கவிதைகளில் காணலாகும் ஒரு தனித்தன்மை – சிறப்புக் கூறு –
அவரது புகழ் பெற்ற பிற படைப்புக்களின் பெயர்கள் ஆங்காங்கே பொருத்தமான
இடங்களில் எடுத்தாளப் பெற்றிருத்தல் ஆகும். இவ்வகையில் நினைவுகூரத்
தக்க ஓர் எடுத்துக்காட்டு.
“எத்தனை கோணம் எத்தனை பார்வை!
ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடிப்பில்
பாட்டில் படைப்பில் நாம் பார்க்கும் உண்மைகளில்
எத்தனை கோணம் எத்தனை பார்வை!” (ப.183)
‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ என்பது அவரது சிறந்த சிறுகதை ஒன்றின்
தலைப்பு ஆகும்.
இதே போல ‘கங்கை எங்கே போகிறாள்?’ என்னும் தம் புகழ்பெற்ற நாவலின்
தலைப்பினைக் கொண்டும் ஜெயகாந்தன் ஒரு கவிதை பாடியுள்ளார்.
“கங்கை எங்கே போகிறாள் – இந்தக்
கங்கை எங்கே போகிறாள்?
மங்கையர் கற்பு உள்ள வரை – எங்கள்
மாந்தரின் தருமம் ஓங்கும் வரை
செங்கதிர் போலே தண்மதி போலே - எங்கள்
செந்தமிழ் போலே இவள் வாழ்கிறாள்!” (ப.122)
ஜெயகாந்தனின் ஆளுமையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஓங்கூர் சாமியைப்
போற்றும் வண்ணம்,
“வீங்கி விகசிக்கும்
வேதப் புகை நடுவே வீற்றிருக்கும்
ஓங்கூர் சாமியின் - சிங்க
உருவம் தெரிகிறது” (ப.11)
என இத் தொகுப்பின் முதல் கவிதை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘அன்பினில் தோய்க!’
‘அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ என்ற படி, ஜெயகாந்தனின் சொற்களைக்
கொண்டே நாம் அவரது கவிதை உலகினை இப்படி மதிப்பிடலாம்:
“கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள்
கதையைச் சொல்லுகிறேன்…
நல்லதைச் சொல்லுகிறேன் - இங்கு
நடந்ததைச் சொல்லுகிறேன்…
வாழ்ந்திடச் சொல்லுகிறேன் - நீங்கள்
வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்…
கும்பிடச் சொல்லுகிறேன் - உங்களைக்
கும்பிட்டுச் சொல்லுகிறேன்…” (ப.124)
சுருங்கக் கூறின், ‘தமை நம்பவும், நம்பி அன்பினில் தோயவும் நம்பிக்கை’
கொள்ளுமாறு தம் கவிதைகளின் வாயிலாக உலகினர்க்கு அழைப்பும் அறைகூவலும்
விடுத்துள்ளார் ஜெயகாந்தன் எனலாம்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625
021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|