சிரிப்போம் – வாழ்வில் சிறப்போம்!

முனைவர் இரா.மோகன்

தொ
ல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகையான மெய்ப்பாடுகளின் வரிசையில் முதல் இடத்தைப் பெறுவது நகைச்சுவை. சிரிப்பு, புன்னகை, புன்முறுவல் என்ற பெயர்களாலும் நகைச்சுவை அழைக்கப்படுவது உண்டு. ‘பவழக் கொடியில் முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பெயராகும்’ என்பார் கவிஞர் வாலி. ‘பற்கள் என்ற முட்கள் பூக்கும் மலர்’ என்பது புன்னகை குறித்துக் கவிக்கோ அப்துல் ரகுமான் தீட்டியுள்ள சித்திர மின்னல்.

“எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வ தேச மொழி சிரிப்பு
சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு
ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது
மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு”

எனச் சிரிப்பின் சிறப்பினை எடுத்துரைப்பார் கவிஞர் வைரமுத்து.

அண்ணாவின் முத்திரை நகைச்சுவை

றிஞர் அண்ணாவின் நா நலத்தில் சிறந்து விளங்குவது அவரது அறிவார்ந்த நகைச்சுவை. ஒரு முறை அவர் பேசிய கூட்டத்தில் சில முரட்டு இளைஞர்கள் முன்னே வந்து, “ஆணையிடுங்கள் அண்ணா! எல்லார் தலையையே கொடுக்கிறோம்” என உணர்ச்சி வயப்பட்டுக் கூறுகிறார்கள்.

அவர்களிடம் அண்ணா, “தம்பிகளே! உங்கள் தலைகள் வேண்டாம்; இதயங்கள் போதும் என்கிறார்”.

கூட்டம் முடிந்து காரில் திரும்பி வரும் போது, “இதயங்கள் தாருங்கள்; தலைகள் வேண்டாம் என்று ஏன் அண்ணா சொன்னீர்கள்?” என்று உடனிருந்த கலைஞர் கேட்க, அண்ணா சொன்ன பதில் அங்கே குழுமி இருந்த அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றது: “ஆமாம்! அவர்கள் தலையில் என்ன இருக்கிறது? அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?”

சிக்கலுக்குச் சிக்கெடுப்பது நகைச்சுவை

ரு நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும்?’ என்பதற்குக் கவிஞர் வைரமுத்து தரும் விடை இது:

“சிரிக்க வைப்பது மட்டுமா நகைச்சுவை? ஒரு சிக்கலுக்குச் சிக்கெடுப்ப-தல்லவா நல்ல நகைச்சுவை?”. இதற்கு அவர் காட்டும் சுவையான உதாரணம் :

சேலம் நகர்மன்றத் தலைவராய் வீற்றிருக்கிறார் மூதறிஞர் ராஜாஜி. நகர்மன்றக் கூட்டம் நடக்கிறது. “சேலம் சுடுகாட்டுக்குச் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டுமா? வேண்டாமா?” - அனல் பறக்கிறது விவாதம்.

அடிப்படை வசதிகளுக்கே நகராட்சியில் போதிய நிதி இல்லை. வாழ்க்கையில் போலவே சுடுகாட்டையும் கடைசியில் வைத்துக் கொள்ளலாம் என்பது ராஜாஜியின் எண்ணம். நிதி இல்லை என்பதை வெளியில் உடைத்துச் சொல்லவும் இயலவில்லை. விவாதம் சூடாகி வெடிக்கப் போகும் தருணம். அதுவரை அமைதியாக இருந்த ராஜாஜி தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொல்கிறார்: “சுடுகாட்டுக்குச் சுற்றுச்சுவர் தேவை இல்லை. ஏனென்றால் உள்ளே சென்றவன் வெளியே திரும்ப மாட்டான்; வெளியே உள்ளவன் உள்ளே செல்ல விரும்ப மாட்டான்”.

விவாதம் – நிதிப்பற்றாக்குறை இரண்டையும் தீர்த்து வைக்கிறது ஒரே நகைச்சுவை!

இயல்பான நகைச்சுவை

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நகைச்சுவை உணர்வு அசத்தலானது; அலாதியானது. இயல்பாகவும் உடனடியாகவும் நகைச்சுவை உணர்வு வெளிப்படும் வண்ணம் பேசுவது கலைஞரின் முத்திரைப் பண்பு. அவரது நகைச்சுவையில் அனைவரும் மிகவும் ரசிக்கத் தகுந்த ஒன்று.

ஓர் அரசு விழா. ‘இப்போது மீன் வளத்துறை அமைச்சர் பேசுவார்’ என்று அறிவிக்கப்படுகிறது. அமைச்சர் தம்மைக் கடந்து போகும் போது அன்றைய முதல்வர் கலைஞர் அவர் காதுக்குள் சொல்லி அனுப்புகிறார்: “அதிகம் பேசாதே; அயிரை மீன் அளவுக்குப் பேசு!”

தனிமையில் இருக்கும் போதும் கலைஞர் சொன்னதை நினைத்தால் யாருக்கும் சிரிப்புப் பொங்கி வரும்!

நெஞ்சிருக்கும் வரை நினைவில் இருக்கும் நகைச்சுவை

கோலாலம்பூரில் இருந்து பினாங்கு நோக்கிப் பறக்கிறது ஒரு கார். முன் இருக்கையில் கவியரசர் கண்ணதாசனும், பின் இருக்கையில் விழா ஏற்பாட்டாளர்களும் அமர்ந்திருக்கின்றனர்.

விழாவுக்கு நேரம் கடந்து விட்டது. 120 கி.மீட்டர் வேகத்தில் கார் விரைகிறது; வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது கவியரசருக்கு. ஓட்டுநரிடம் ‘மெதுவாப் போப்பா’ என்கிறார்.

ஓட்டுநர் கேட்கவில்லை. இன்னும் வேகம் கூடுகிறது. ‘மொதுவாப் போன்னு சொல்றேன் இல்லே’ என மீண்டும் ஓட்டுநரை நோக்கிக் கூறுகிறார் கவியரசர்.

‘இல்லீங்க அய்யா… இந்த வேகத்தில் போனாத்தான் விழாவுக்கு நேரத்துக்குப் போய்ச் சேர முடியும்’ என்கிறார் ஓட்டுநர்.

‘இந்தாப்பா! பத்து நிமிசம் லேட்டாப் போனாப் பரவாயில்லை. பத்து வருசம் முன்னாடியே போயிடக்கூடாது’ என்று கவிஞர் கூறியதும் காரின் வேகத்தையும் மீறி அங்கே சிரிப்பலை அதிர்கின்றது.

இனி கவியரசர் கண்ணதாசனை நினைக்கும் போதெல்லாம் – நெடுஞ்-சாலையில் பயணம் செய்யும் போதெல்லாம் – இந்த நகைச்சுவை நம் நெஞ்சில் மோனையைப் போல் முன்னே வந்து நின்றுவிடும் அல்லவா?

சொல் விளையாட்டு தோற்றுவிக்கும் நகைச்சுவை

தேர்ந்த சொல் விளையாட்டின் மூலம் நகைச்சுவையைத் தோற்று-விப்பதில் கவிஞர் வாலிக்கு நிகர் வாலியே. அவரோடு உரையாடிக் கொண்டே இருந்தால் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே இருக்கலாம். அவருடையே சிலேடைகளில் நயமான நகைச்சுவை உணர்வு எப்போதும் களிநடம் புரிந்து கொண்டே இருக்கும்.

ஒருமுறை ‘திரைப் பாடல்கள் நேற்றும் இன்றும்’ என்ற தலைப்பில் வாலியும் வரைமுத்துவும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திரைப் பாடலில் வளமான வரிகளை எழுதுவதற்கு முன்பு மாதிரி சரியான சூழல்கள் (Situations) அமைவதில்லை என்று வைரமுத்து தமது ஆதங்கத்தை வெளியிடுகிறார்.

திரைப் பாடல்களில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்து போனதைப் பற்றி வாலி குறைபட்டுக் கொள்கிறார். இதனைத் தமக்கே உரிய பாணியில், “முதலில் பதினாறு பாட்டு – பிறகு பத்துப் பாட்டு – அப்புறம் ஆறு பாட்டு – பிறகு நான்கு பாட்டு – அப்புறம் இரண்டு பாட்டு – கடைசியிலே போதும் நிப்பாட்டு – நிலைமை எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா?” என்கிறார்.

அவர் சொன்ன விதமும், கையாண்ட உத்தியும் எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைப்பனவாய் விளங்குகின்றன.

பட்டிமன்ற நகைச்சுவை

பட்டிமன்றங்களிலும் அவ்வப்போது திறமான, மறக்க முடியாத நகைச்சுவை முத்துக்கள் தெறிப்பது உண்டு.

ஒரு பட்டிமன்றத்தில் பேச்சாளர், “நடுவர் அவர்களே! கிளியோ-பாட்ராவைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் தன் முகத்தை மழமழவென்று மழித்துக் கொண்டு போவானாம் ஜுலியஸ் சீசர்” என நடுவரை நோக்கிக் கூறுகிறார்.

அப்போது குறுக்கிட்ட நடுவர், “அப்படியானால் கிளியோபாட்ராவுக்காக ஜுலியஸ் சீசர் தம் ‘ரோம சாம்ராஜ்ய’த்தையே தியாகம் செய்திருக்கிறான் என்று சொல்லுங்கள்!” என்று கூறி அவையில் பலத்த கலகலப்பை உருவாக்குகிறார். இவ்வாறு குறுக்கிட்ட பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் பா.நமசிவாயம் ஆவார்.

இனி ஒரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம்! கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பழமொழி. சிரித்த முகத்திற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இன்றைய புதுமொழி. எனவே, சிரிப்போம் – வாழ்வில் சிறப்போம்! சரி தானே?.


முனைவர் இரா.மோகன்
‘அறிவகம்’
78/1 ஆழ்வார் நகர்
நாகமலை, மதுரை
– 625 019


 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்