ஏழு வள்ளல்களில் சிறப்பு.
முனைவர்.இரா.குணசீலன்
கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்...........
வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............
பிற உயிர்களையும் தன்னுயிர் போல மதித்தவர்கள்......
எனப் பல்வேறு சிறப்புக்களுக்கும் சொந்தக்காரர்களாக விளங்கியவர்கள் கடையேழு
வள்ளல்களாவர்................
இன்றெல்லாம் சிறு உதவி செய்தால் கூட அதைப் பெரிய அளவில்
விளம்பரப்படுத்திக்கொள்வோரையே அதிகம் காணமுடிகிறது.........
ஒரு கோயிலுக்கு ஒருவர் மின்விளக்கை கொடையாக அளிக்கிறார் என்றால்
அவ்விளக்கு மறையும் அளவுக்கு அதில் தன் பெயரை எழுதிவைத்துவிடுகிறார்.............
காரணம் தான் கொடை தந்தமை அடுத்தவருக்குத் தெரியவேண்டும் என் எண்ணம்.......
இன்று மட்டுமல்ல காலந்தோறும் இவ்வாறு தான் மக்களின் மனநிலை
இருந்திருக்கும். இது போன்ற பண்புடைய மக்களுக்கு இடையே எந்த ஒரு புகழையும்
எதிர்பார்க்காமல் கொடை கொடுத்ததால் புகழ்பெற்றனர் கடையேழு வள்ளல்கள், கால
வெள்ளத்தில் அவர்கள் மறைந்தாலும் அவர்களின் கொடைத்திறம் மறைந்து விடாது
போற்றப்பட்டுதான் வருகிறது.
கடையேழு வள்ளல்களைப் பற்றி,
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில், சிறுபாணாற்றுப்படையில் குறிப்புள்ளது...
வானம் வாய்த்த வள மலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன், பேகனும், சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய,
பிறங்குவெள் அருவி வீழும் சாரல் 90
பறம்பின் கோமான், பாரியும், கறங்குமணி
வால் உளைப் புரவியொடு வையகம், மருள,
ஈர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்,
கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ் 95
நீலம், நாகம் நல்கிய, கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த,
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்,
ஆர்வ நன் மொழி, ஆயும்; மால் வரைக்
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி 100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்,
அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது,
நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை, 105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு
நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
ஓரிக் குதிரை,ஓரியும்; என ஆங்கு,
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம்
( சிறுபாணாற்றுப்படை)-பத்துப்பாட்டு.
வள்ளல்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் கர்ணர், தர்மர்,
அவர்களுக்கு அடுத்து நம் நினைவுக்கு வருபவர்கள் கடையேழு வள்ளல்களாகவர்.
பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகிய ஏழு வள்ளல்கள் செய்த
கொடையை இந்நாளில் நல்லியக் கோடன் ஒருவனே செய்கிறான் என்று
சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
1.பருவமழை தவறாது பொழிவதால்
காட்டு மயில் அகவியதைக் கேட்டு அது குளிரால் நடுங்கியது என எண்ணி
இரக்கமுற்று தம் போர்வையைக் கொடுத்தான் பேகன்.
மயிலுக்குப் போர்வையைத் தருவது அறிவுடைமையா?
அது சரியா? தவறா?
போர்வை கீழே விழுந்தால் மயில் அதனை மீண்டும் எடுத்துப் போர்த்திக்
கொள்ளுமா?
எனப் பல ஐயங்கள் தோன்றுவது இயற்கையே....
தோகை விரித்து ஆடுவது என்பது இயற்கை என்று பேகனின் அறிவு சொல்கிறது..
இல்லை அது தன்னைப் போலக் குளிரால் நடுங்குகிறது..........
என்கிறது பேகனின் உணர்வு....
உணர்வு, அறிவை வெல்கிறது......
இதையே கொடை மடம் என்கிறோம்.....
2.முல்லைக் கொடி படர தம்
பெரிய தேரினை ஈந்தான் பறம்பு மலைக்கு அரசனான பாரி.
முல்லைக் கொடி படர சிறுபந்தல் போதுமே....
ஆனால் அந்த கண்ணோட்டத்தில் முல்லைக் கொடியைப் பாரியால் பார்க்க
முடியவில்லை.
முல்லைக் கொடி, தான் படர்வதற்கு வழி இல்லையே என்று வாடுவது போல பாரிக்குத்
தோன்றுகிறது.
அடுத்த நொடியோ அக்கொடியின் துயர்நீக்க, தன்னால் என்ன செய்ய இயலும் என்று
சிந்திக்கிறான்..
தன்னிடமிருந்த தேரினை அக்கொடி படர்வதற்காக அவ்விடத்தே விட்டுச்செல்கிறான்..
3.வலிமை மிக்க குதிரையையும்,
நல்ல சொற்களையும் கொடையாக இரவலர்க்கு வழங்கியவன் காரி.
துன்பத்துடன் வாடிவரும் கலைஞர்களுக்கு வலிமைமிக்க குதிரையும் நல்ல
சொற்களும் வழங்கியதால் வள்ளல் எனப்பட்டவன் காரி...
பொருள் கொடுத்துத்து துயர் நீக்குதல் ஒரு வகை, நல்ல துயர் நீக்கும்
சொற்களால் துயர் நீக்குதல் இரண்டாவது வகை..
அவ்வகையில் நல்ல சொற்கள் வாயிலாகவே கலைஞர்களைக் கவர்ந்தவன் காரி.
4.ஒளிமிக்க நீலமணியையும்இ
நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்க்குக் கொடுத்தவன் ஆய். தான் மிகவும்
உயர்வாகக் கருதும் நீலமணியையும், நாகம் தனக்குத் தந்த கலிங்கம் என்னும்
ஆடையையும் இரவலர்களுக்கு அளித்து மகிழ்வித்தவன் ஆய்.
5.அமிழ்தம் போன்ற நெல்லிக்
கனியையும் தாம் உண்ணாமல் ஒளவைக்கு ஈந்தவன் அதியன்.
நீண்ட நாள் உயிர் வாழ்க்கையளிக்கும் அரிய நெல்லிக்கனி தனக்குக்
கிடைத்தபோது...
சிந்தித்தான் அதியன்...
இக்கனியைத் தான் உண்டால் இன்னும் தன் நாட்டின் பரப்பு அதிகமாகும்.. பல
உயிர்கள் மேலும் அழியும்..
ஆனால் இக்கனியை ஔவையால் உண்டால் நீண்ட காலம் அவர் உயிர் வாழ்வார் ...
தன்னை விட இவ்வுலகில் அதிக காலம் வாழ வேண்டியவர் புலவரே...
அவரால் தமிழ் மேலும் சிறப்புப் பெறும்...
என்று கருதிய அதியன் கனியை ஒளைக்குத் தந்து வள்ளள் என்னும் பெயர் பெற்றான்...
6.இரவலர்க்கு வேண்டிய
பொருள்களை அதிகமாக வழங்கி ஆவர்கள் மனநிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி.
பசிப்பிணியோடு வாடி வந்த இரவலர்களுக்கு அதிகமாகப் பொருள் வழங்கி அவர்களின்
மன நிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி..
7.கூத்தாடுவோருக்கு வளமான
நாடுகளை வழங்கி மகிழ்தவன் ஓரி. கூத்தாடும் கலைஞர்களின் கலைத்திறனை மதித்து
வளமான பல நாடுகளை வழங்கி மகிழ்ந்தவன் ஓரி.
மண்ணில் எத்தனையோ பேர் வள்ளல்களாக வாழ்ந்து மறைந்திருந்தாலும். இன்றளவும்
கடையேழு வள்ளல்கள் என நாம் இவர்களை மதிக்கிறோம் என்றால் அதற்கு
அவ்வள்ளல்களிடம் இருந்த சிறந்த பண்புளான, அஃறிணை உயிர்களிடத்தும் அன்பு
கொள்ளுதல், கலைஞரைப் போற்றுதல், இரவலரை ஓம்புதல் ஆகியவையே காரணமாகும்.
gunathamizh@gmail.com
|