காலத்தைக் கடந்த ரசனையும் காலத்திற்கு
ஏற்ற ரசனையும்
முனைவர் இரா.மோகன்
‘குடும்பத்
தலைவன்’ திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய புகழ் பெற்ற ஒரு
காதல் பாடல் ‘திருமணமாம்! திருமணமாம்! தெருவெங்கும் ஊர்வலமாம்!’ என்பது.
இதில் ஐந்து அருமையான உவமைகளைக் கையாண்டு ஊர்வலத்தின் நடுவினிலே கூரை
நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருக்கும் – ஒரு கூடை நிறையும் பூவைத்
தலையில் சுமந்திருக்கும் - மணமகளின் அழகுக்கு அழகு சேர்த்திருப்பார்
கண்ணதாசன்:
“சேர நாட்டு யானைத் தந்தம்
போல் இருப்பாளாம்! – நல்ல
சீரகச் சம்பா அரிசி போல
சிரித்திருப்பாளாம்!
செம்பருத்திப் பூவைப் போலக்
காற்றில் அசைந்திருப்பாளாம்!
செம்புச் சிலைபோல உருண்டு
திரண்டிருப்பாளாம்! – நல்ல
சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்!” (திரை இசைப் பாடல்கள்: முதல் தொகுதி, ப.75)
முதலில் கவிஞர் வருணிப்பது மணமகளின் நிறத்தினை; அது சேர நாட்டு யானைத்
தந்தம் போல் இருக்குமாம். எடுத்த எடுப்பில், முதல் பார்வையில் தனது
நிறத்தால் காண்பவரைக் கவரும் மணமகள், சற்றே நெருங்கிப் பார்த்தால் நல்ல
சீரகச் சம்பா அரிசி போல இருக்கும் தனது சிரித்த முகத்தால் அனைவரது
நெஞ்சங்களையும் கொள்ள கொள்வாளாம்! பொன்னிறம், சிரித்த முகம்
இரண்டிற்கும் பிறகு மணமகளின் ஒயிலான நடை – செம்பருத்திப் பூவைப் போலக்
காற்றில் அசைந்திருக்கும் அழகு – சிறப்பாக இருக்குமாம்; மணமகளின் முழு
உருவமும் செம்புச் சிலை போல உருண்டு திரண்டு இருக்குமாம்! மொத்தத்தில்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்து இருப்பாளாம் மணமகள்!.
சோழ நாடு சோறுடைத்து, பாண்டிய நாடு முத்துடைத்து என்பது போல சேர நாடு
வேழமுடைத்து; யானைக்குப் பெயர் பெற்றது. அதனால் சேர நாட்டு யானைத்
தந்தத்தினை மணமகளின் நிறத்திற்கு உவமை கூறுகின்றார் கண்ணதாசன். அழகிய,
சிறிய பல் வரிசைக்கு நல்ல சீரகச் சம்பா அரிசி பொருத்தமான உவமை. காற்றில்
அசைந்திருக்கும் செம்பருத்திப் பூவினை மணமகளின் ஒயிலான நடைக்கு –
சாயலுக்கு – உவமையாகக் கவிஞர் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘சாயல் என்பது மென்மை. அது நாயும் பன்றியும் போலாது, மயிலும் குயிலும்
போல்வதோர் தன்மை’ (தொல்காப்பியம்: பொருளதிகாரம், இளம்பூரணம், ப.357)
எனச் சாயலுக்கு விளக்கம் தருவர் பண்டைய உரையாசிரியர். தலை முதல் அடி
வரையிலான மணமகளின் முழு உருவ அழகுக்கு உருண்டு திரண்டு இருக்கும்
செம்புச் சிலை எவருக்கும் எளிதில் விளங்கும் உதாரணம் ஆகும். ‘எழில்
என்பது அழகு. அது மிக்கும் குறைந்தும் நீடியும் குறுகியும் நேர்தி
உயர்ந்தும் மெலிதாகியும் வலிதாகியும் உள்ள உறுப்புக்கள் அவ்வளவில்
குறையாமல் அமைந்த வழி வருவதோர் அழகு’ என்னும் இளம்பூரணரின் உரை விளக்கம்
(ப.357)
இங்கே மனங்கொளத்-தக்கதாகும். ‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
இவள், உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே’ என்னும் கபிலரின் குறுந்தொகைப்
பாடல் வரிகளை நினைவூட்டுவது போல், ‘நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்-பாளாம்!’ என்னும் கண்ணதாசனின் முத்தாய்ப்பான உவமை
அமைந்திருப்பது நன்று. முக்கனியில் முதல் இடம் மாம்பழத்திற்கு; அதுவும்
சேலம் ஜில்லா மாம்பழம் என்றால், கேட்கவே வேண்டாம்! கனிந்த நிலையில் அதன்
சுவையே தனி!.
‘இந்தியன்’ படத்திற்காக எழுதிய காதல் பாடலில் கவிஞர் வைரமுத்து
காதலியின் அழகினை வருணிக்கும் விதத்தில் கையாண்டுள்ள காலத்திற்கு ஏற்ற
உவமைகள் இங்கே ஒப்புநோக்கத்தக்கவை:
“டெலிபோன் மணி போல்
சிரிப்பவள் இவளா?
மெல்போர்ன் மலர் போல்
மெல்லிய மகளா?
டிஜிட்டலில் செதுக்கிய குரலா?
எலிசபெத்து டெய்லரு மகளா?
ஜாகீர் உசேன் தபேலா இவள் தானா?
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா?
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லுலர் போனா?
கம்ப்யூட்டர் கொண்டிவளை இந்த
பிரம்மன் படைத்தானா?” (ஆயிரம் பாடல்கள், ப.539)
காதலியின் சிரிப்புக்கு டெலிபோன் மணியையும், மென்மைக்கு மெல்போர்ன்
மலரையும் ஒப்பிடும் வைரமுத்து, அவளது குரல் டிஜிட்டலில் செதுக்கியது
போன்றது என்கிறார். உலக அழகி எலிசபெத்து டெய்லரின் மகள் போலத் தோன்றும்
அவள் ஜாகீர் உசேன் தபேலா என்றும், அவளது அங்கம் தங்கம் போன்றது என்றும்,
லேட்டஸ்ட் செல்லுலர் போனை அவளுக்கு ஒப்பிடலாம் என்றும் குறிப்பிடுகிறார்;
அந்த பிரம்மன் கம்ப்யூட்டர் கொண்டு தான் அவளைப் படைத்திருக்க வேண்டும்
என்றும் பாடுகிறார்.
ஒற்றை வரியில் மதிப்பிடுவது என்றால், கவிஞர் கண்ணதாசன் காலத்தைக் கடந்த
ரசனை; கவிஞர் வைரமுத்து காலத்திற்கு ஏற்ற ரசனை.
முனைவர் இரா.மோகன்
‘அறிவகம்’
78/1 ஆழ்வார் நகர்
நாகமலை,
மதுரை – 625 019
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|