பாரதியாரின் பார்வையில் பொருளாதாரம்

முனைவர் பொ.திராவிடபிரேமா


'தோன்றின் புகழொடு தோன்றுக'
1என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாழ்த்து மொழிக்கேற்ப தோன்றியவர் மகாகவி பாரதியார். தமிழுலகில் பல புதுமைகளைப் புகுத்திய பாரதியின் தோற்றம் தமிழன்னையின் தவப்பயனேயாகும். பாரதி ஒரு வரலாற்றுப் பெட்டகம். கருத்துப் புதையல். மலையெனக் குவிக்கும் கவிதைக் குவியல். அக்குவியலில் சமூகம், இலக்கியம், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அரசியல், பொருளாதாரம், பெண் விடுதலை, கல்வி, வேளாண்மை, தொழில், அறம் உள்ளிட்ட பல்வேறு கூறுகள் இடம்பெற்று, உலகத் தமிழர்களின் வாழ்வியல் களஞ்சியமாகத் திகழ்கிறது. நம் இந்திய நாட்டின் வளர்ச்சி பொருளாதாரத்தை மையமிட்டே அமைகிறது. ஒரு வீடும் நாடும் வளமும் நலமும் பெற வேண்டுமெனில் பொருளாதாரத் திட்டமிடல் என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு இல்லையெனில் சமுதாயம் பெரும் சீரழிவை நோக்கியே செல்லும். இக்கருத்தானது நாம், ஆங்கிலேயரின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு அடிமையாகிப் பொருளாதார சுரண்டல்களுக்கு இலக்காகித்

'தனி ஒருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
'
2 என்றும்

'தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலைத் தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை'
3

என பாரதி வருந்தும் கூற்றுகள் நமது இந்தியப் பொருளாதாரம் நலிவுற்றிருந்ததை உறுதிபடுத்துகின்றன. இச்சீரழிவிலிருந்து நாம் மீட்டுருவாக்கம் பெற்றிடும் வகையில் மகாகவி பாரதியின் பாடல்களில், இனிமையான வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரச் சிந்தனை அமையப்பெற்றதை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொருளின் இலக்கணம்

உயிரில் பொருள், சொல்லின் பொருள், செய்தி, உட்கருத்து, மதிப்புப் பண்டம் உள்ளிட்ட பல்வேறு கூறுகளைக் குறிக்க 'பொருள்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரம்
(Economics) என்பதற்கு 'செல்வநிலை' என்று பாரதி குறிப்பிடுகிறார். பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள் மனிதன் தன் அன்றாடத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்ற பொருட்களைத் தேடிய தொன்மைக் காலத்திலேயே தோன்றிவிட்டன. ஒரு பொருளாதாரம் நீடித்தும் நிலைத்தும் இருப்பதற்கு நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு ஆகிய நான்கு காரணிகள் சுட்டப்படுகின்றன. தொழில்நுட்ப உற்பத்தியில் மாறுதல்கள் ஏற்பட ஏற்பட நுகர்பொருட்களுடைய உற்பத்தியும் பெருகின. பொருள் உற்பத்தி பெருகியதன் காரணமாக தற்போது 'உலக மயமாதல்' கொள்கை பொருளாதார தளத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளன. இதனை பாரதியார்

'ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தலே உயர் நோக்கத்திலே
காக்கத் திறல் கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினிலே உயர் நாடு
'
4
தோட்டத்திலே மரக் கூட்டத்திலே கனி
ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே
தேட்டத்திலே அடங்காத நிதியின்
சிறப்பினிலே உயர் நாடு'
5
ஏன்று சிறப்பித்துப் பாடுகிறார்.

அரசியல் பொருளாதார சூழல்கள்

கி;.பி.
17,18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்குள் வாணிகம் செய்யும் நோக்கோடு குடியேறிய போர்த்துக்கீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளை தன்வயப்படுத்தின. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து கிழக்கிந்தியக் குழுமம், இந்திய சிற்;றரசர்களிடையே ஏற்பட்ட பிணக்குக் காரணமாக இந்தியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது. இந்தியாவில் நிலவிய காலனி ஆதிக்கம் பற்றியும், தேசிய எழுச்சி பற்றியும் பொருளியல் தத்துவ மேதைகளான கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதில், 'முகலாயர்களின் பேரதிகாரம் முகலாயப் போர்ப்படைத் தளபதிகளால் உடைக்கப்பட்டது. முகலாயப் படைத்தளபதிகளுடைய செல்வாக்கு மராட்டியர்களால் உடைக்கப்பட்டது. மராட்டியர்களின் அரசியல் அதிகாரம் ஆப்கன் நாட்டினரால் உடைக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த எல்லோரும் ஒருவருக்கொருவர் போராடிக் கொண்டிருக்கும்போது இங்கிலாந்து இந்தியப் பகுதிகளுக்கள் விரைந்தது. இவர்கள் அனைவரையும் அடக்கியது'6 என்று கார்ல் மார்க்சு குறிப்பிடுகிறார். இந்தியாவில் ஏற்கனவே கிழக்கிந்திய குழுமங்களால் ஏற்பட்ட பாதிப்பால், கைத்தொழில்களும் வேளாண்மையும் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைகளில் பெரும் சரிவினை ஏற்படுத்தின. வறுமை, பட்டினி, பஞ்சம் போன்றவை தலைவிரித்தாடின.

18,19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து அரசு நேரடியான ஆட்சியைக் கொண்டு வந்த பிறகு (1868-1908) இருபது பஞ்சங்கள் ஏற்பட்டதாகவும், பல இலட்சம் மக்கள் இறந்ததாகவும் ஆர்.சி.தத் என்ற பொருளியல் அறிஞர் குறிப்பிடுகிறார். ஆங்கில அரசு தனது சுரண்டல் முறைப்பொருளாதாரத்ததை நிலை நிறுத்திக் கொள்வதற்கும், பொருளளாதார உள்கட்டமைப்புகளைப் பெருக்கிக் கொள்வதற்கும் தேவையான பொதுச் செலவினை மக்களுடைய தலையில் வரிச்சுமையாக ஏற்றியது. இந்த அரசியல், பொருளாதார கொடுங்கோன்மையை எதிர்த்து அவ்வப்போது வன்முறைகளும், எதிர்ப்புகளும், கலவரங்களும் தோன்றினாலும், இந்தியாவில் இங்கிலாந்து ஆட்சியை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான அரசியல் இயக்கம் தோன்றவில்லை. இவ்வாறான சூழலில்தான் தேசியக்கவி பாரதியார் பிறந்தார். 1897ஆம் ஆண்டு அவர் எழுதிய முதல் கவிதையிலேயே கல்வி கற்பதற்குப் பொருளுதவி இல்லையே என்ற வருத்தத்தை

'கைப்பொருள் அற்றான் கற்பது எவ்வகை?
பொருளான் ஆன்றக் கல்வியும் வரவில:
கல்வியான் அன்றிப் பொருளும் வரவில:
முதற்கண் கல்வியே பயிறல் முறைமையாம்
அதற்குப் பொருளிலை ஆதலின் அடியேன்
வருந்தியே நின்பால் வந்த டைந்தனன்'
7 என்று பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட பாடல் வரிகள், கல்வி கற்பதற்காக பாரதி அனுபவிக்கும் துயரையும், இந்தியாவில் அக்காலக் கட்டத்தில் கல்வி கற்க விரும்பிய ஏழை, எளிய மக்கள் இத்துயர நிலையை சந்திக்க நேர்ந்தது என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது.

வேளாண்மையின் முக்கியத்துவம்

வேளாண் தொழிலே இந்தியாவின் முதுகெலும்பு. மனித வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாப் பொருட்களுள் முதன்மையாக விளங்குவது உணவு ஆகும். உணவு பற்றாக்குறை நீங்க வேண்டுமெனில் வேளாண்மை வளம் பெற வேண்டும். நமது இந்திய வேளாண்மை எவ்வாறு வளர்ச்சிப் பெற வேண்டுமென்ற தனது கனவை, பாரதி 'நெல் சாகுபடி' என்ற கட்டுரையில் எழுதுகையில் நோய் இல்லாத நாற்றுகளை, ஆறு முதல் ஒன்பது அங்குல இடைவெளியில், நாற்றின் வேரை நிலத்திற்குள் பலமாக ஊன்றி நடவேண்டும் என்று எழுதியுள்ளார். இவ்வாறு வேளாண் தொழில் சிறப்படைய பாரதி வலியுறுத்திய கருத்துகளும், இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மையை முதன்மைப்படுத்திட வேண்டும் என்ற அறிக்கையும் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. அதேநேரத்தில், கடந்த
15முதல் 20 ஆண்டுகளாக வேளாண்விளை நிலங்களின் அளவு குறைந்து வருகிறது. இதை எச்சரிக்கும் விதமாக பாரதியார், 'வியாபாரம் செய்வதும், பெரிய இயந்திர சாலைகள் ஏற்படுத்துவதும், செயற்கைப் பொருட்களை விருத்திப்படுத்துவதிலுமே கண்ணாயிருக்கிறார்கள். அதனால், ஜனங்கள் தங்கள் கிராமங்களிலுள்ள பயிர்த் தொழில்களைக் கைவிட்டு பட்டணங்களில் போய் வசிக்கின்றனர். அதனால், விளைபொருளென்பதே அடியோடு போய்விட்டது. பொன்விளையும் நாட்டில் நமக்கு ஜீவணத்திற்கே அபாயம் என்றால் உலகம் சிரிக்குமல்லவா?'8 என்று வினா எழுப்பி நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.

மேற்கண்ட கூற்றினை ஆராயுங்கால், நம் இந்திய நாட்டைவிட செழிப்பான நாடு வேறு எதுவும் இல்லை என்பதும், அதனை மேன்மேலும் நாம் செழிப்படையச் செய்ய வேண்டுமேயன்றி, உணவுப் பற்றாக்குறை, பசி, பட்டினி, பஞ்சம், வறுமை போன்ற சீரழிவுகளுக்கு ஆட்படாமல் இருக்க வேண்டுமென்றும் பாரதி எச்சரிக்கிறார். வேளாண் தொழில் செய்வோர் பெரும்பான்மையான அளவில் வாழும் இந்தியாவில், வேளாண்மையை புறந்தள்ளினால் சமூகத்தில் குற்றங்கள் மலிந்து அமைதி கெட்டுவிடும் என்று உளவியலாளர்கள் இன்று சுட்டும் உண்மையை அன்றே பாரதியார் சுட்டிக்காட்டியுள்ளார். பாரதி வேளாண்மையைப் போற்றும் விதமாக

'வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்'
9
'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
'
10 என்று குறிப்பிடுகிறார்.

நெசவுத்தொழில் நலிதல்


இந்திய நாட்டின் கைத்தொழில்களில் நெசவுத் தொழில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இத்தொழிலை நம்பியே பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடிமையானப் பின்னர், இந்தியக் கைத்தொழில்கள் நலிவடைந்தன. இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய நெசவுத் தொழில் நலிந்ததைப் பற்றி பொருளியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் எடுத்துரைத்து வந்தனர். கார்ல் மார்க்சு, நெசவாளர்கள் படும் துயரினை அறிந்து நெஞ்சுருகினார். இதை, 'வணிக வரலாற்றிலேயே காணமுடியாத துயரத்தைப் பார்க்க முடிந்தது. இந்தியாவின் சமவெளியைப் பருத்தி ஆடை நெய்யும் நெசவாளர்களின் எலும்புகள் வெளுக்கச் செய்தன'
11 என்ற கூற்று வெளிப்படுத்துகிறது. இந்நிலை பாரதியார் காலத்திலும் தொடர்ந்து இருந்து வந்தது.

நெசவாளர்கள் பொரளாதாரத்தில் மேன்மையடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமெனில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். 'மேல்நாட்டு விசைத்தறிகளால் ஏற்படும் போட்டியை வெல்வதற்கு இந்தியர்களுக்கு தொழில் திறமையும் கல்வியும் இருத்தல் அவசியமென்று குறிப்பிட்டு, தொழில் முயல்வோர்க்கு சர்.பிட்டி தியாகராயர் வழிகாட்டுகிறார்'12 என்று பாரதியார் குறிப்பிட்டுள்ள கருத்தாக்கம் நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தீபமாக ஒளிர்வதை காணலாம். நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பாரதியார்,

'பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதிகுவிப்போம்'
13

என்று பண் பாடி, நெசவாளர்கள் பார் போற்ற வாழ வேண்டுமென்று விரும்புவதைக் காணமுடிகிறது.

தொழில் வளர்ச்சியின் இன்றியமையாமை

நமது இந்திய நாட்டின் உற்பத்தியை பெருக்குவதற்காக பல்வேறு தொழில்கள் செய்து சுயசார்பான பொருளாதாரத்திற்கு வழிவகுப்போம் என்பார் பாரதி. தொழில்கள் என்ற தலைப்பில் 'இந்தியா' ஏட்டில்
1910 ஆம் ஆண்டில் பாரதி குறிப்பிட்ட கருத்துகளும், சேலத்தில் கிடைக்கின்ற உயர்ந்த இரும்பு கனிமம் பற்றியும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுபோன்றே, அலுமினியம், மாங்கனீசு, துத்தநாகம், தங்கம், வயிரம் செம்பு போன்ற உலோகங்களின் உற்பத்திப் பற்றியும், கண்ணாடி, ஜிப்சம், கருங்கல் போன்ற தொழில்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

'இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே!'
14
'திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானமெய்தி
வாழ்வ மிந்த நாட்டிலே'
15

என்னும் பாடல்களில் பாரதியார் இந்தியாவில் பல்வேறு தொழில்கள் செய்யப்பட்டதையும், இந்தியாவின் கனிம வளம் பற்றியும் எடுத்துரைப்பதைக் காணமுடிகிறது. இவ்வாறு, இத்தனை வளங்களும் நிரம்பிய நம் நாட்டில் நேர்மையான வழியில் தொழில் செய்து இவ்வுலகில் வாழ்வாங்கு வாழவும் அறிவுறுத்துகிறது.

சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு ஆதரவு

2.8.1907
ஆம் ஆண்டில் 'இந்தியா' ஏட்டில் தூத்துக்குடி சுதேசிக் கப்பல் நிறுவனம் உருவாவது குறித்து வரவேற்றும், வ.உ.சி. அவர்கள் எடுக்கும் பல்வேறு முயற்சிகள் பற்றியும் பாரதி பாராட்டியுள்ளார். 1906ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் சுதேசிக் கப்பல் போக்குவரத்துக் கழகம் பதிவு செய்யப்பட்து. 'தூத்துக்குடிக்கும் கொழும்புவிற்கும் கப்பல்கள் நடத்துவதற்கு ஐந்து இலட்ச ரூபாய் மூலதனம் போதுமானது. இந்த மூலதனத்துடன் கப்பல் நடத்தும் தொழிலில் சகல செலவும் நீக்கி வருடம் ஒன்றுக்கு பத்து இலட்சம் ரூபாய் லாபம் கிடைக்கத்தக்கதாய் உள்ளது. இவ்வளவு பெரிய லாபத்தை கொடுக்கும் தொழில் வியாபாரம் வேறெதுவும் இல்லை. இத்தகைய தொழிலை சென்ற பல வருடங்களாக அன்னிய நாட்டவர்கள் கைப்பற்றிக் கொண்டு அதில் கிடைக்கும் லாபத்தில் சிறிதளவுக்கூட நம்மை அடையவிடாமல் நம் தேசத்தையும், குறிப்பாக தென்னாட்டையும் மிக்க வறுமைக்கு உட்படுத்திவிட்டார்கள். நமது சுதேசம் மற்ற நாடுகளைப் பார்க்கிலும், உயரிய நிலைக்கு வருவதற்கு நாம் இவ்வுலகில் உள்ள துறைமுகங்களுக்கு நமது 'சுதேசிக் கப்பல்' போக்குவரத்து இருக்கும்படி செய்வது அவசியமாகின்றது'16 என்று பாரதி குறிப்பிட்டுள்ளார்.

சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு பண உதவி தேவை என்பதை அறிந்த பாரதி பொதுமக்கள் தானாக முன்வந்து உதவிடுமாறும் 'இந்தியா' ஏட்டில் கேட்டுக் கொள்கிறார். செல்வந்தர்கள் இந்த நிறுவனத்திற்கு உதவி செய்யாதவர்களாய் இருப்பதைக் கண்டு பாரதி விமர்சனம் செய்துள்ளமையைக் காணமுடிகிறது. 'ஏழைகள், அன்றாடம் ஜீவனம் செய்வோர், வக்கீல் குமாஸ்தாக்கள், சொற்பத் தொழிலாளிகள் ஆகிய நாம் எல்லோரும் சேர்ந்து இந்த பெரும் முயற்சி அழிந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும். நாம்தான் ஒரே ஊக்கமாக மறுபடியும் மூச்சை பிடித்துக் கொண்டு 'ஏலேலோ' பாடி கப்பலை மேலே அபிவிருத்தி அடையும்படி தள்ள வேண்டும்'17 என்றும் ' தூத்துக்குடி கம்பெனி நமது முதல் பெரும் முயற்சி ஆகும். இதை கைவிட்டுவிட்டால் நம்மை பிறகு உலகத்தில் யாருமே நம்பமாட்டார்கள். உலகத்தார் எல்லாம் சிரிப்பார்கள். நம்மை நாமே நம்பாத நிலைக்கு வந்து விடுவோம்'
18 என்றும் பாரதி தமது கட்டுரையிலே சுதேசிக் கப்பல் போக்குவரத்து பற்றிய செய்திகளைப் பதிவு செய்து மக்களிடையே விழிப்புணர்வு அடையச் செய்து, இந்திய பொருளாதாரம் மேன்மையடைய வழிவகை செய்தார்.

பாரதி கூறிய மேற்கண்ட கூற்றுகளை நாம் சற்று சிந்தித்தால், நமது சமுதாயத்தில் செல்வம் படைத்தவர்கள் ஒரு பிரிவாகவும், ஏழை எளியவர்கள் ஒரு பிரிவினராகவும் இனம் பிரித்து காட்டியுள்ளமை வெளிப்படுகிறது. இந்த போக்கு இன்றளவும் மாற்றம் பெறாமல் நிலைபெற்றுள்ளதையும் காணமுடிகிறது. மேற்கண்ட பொருளாதாரச் சிந்தனைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக பாரதி

'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்'
19

'சிங்களத் தீவினுக்னோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்'
20

என்று பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்சார்பு வாணிகம்


13.6.1908ஆம் ஆண்டில், பாரதி 'இந்தியா' ஏட்டில் எழுதிய கட்டுரையில், நாடு வணிகத்தில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்காக 'கைத்தொழில்கள் ஏற்படுத்துதல், சில்லரை வியாபாரங்களை சுதேசமாகத் திருப்பதல், உள்நாட்டு வணிகர்களுக்கே அளித்தல், கைத்தொழில் உற்பத்தி மையங்களில் இருந்து வணிகம் செய்யும் இடங்களுக்க சரக்குகளை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து ஊர்திகள், கப்பல்கள் ஆகியவற்றை உள்நாட்டினரே ஏற்று நடத்துதல்'21 என்ற கருத்துகளை முன்வைக்கிறார். இதன் மூலம் நாம் அறியும் கருத்து யாதெனில், பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்றபோது எவ்வாறு, அந்நிய ஆதிக்க சக்திகள், பொருளாதார வளர்ச்சி காரணிகளை தங்களின் பிடிக்குள் கொண்டு வந்தனர் என்பதை உணர்ந்துதான் பாரதி உள்நாட்டு பொருள் வளர்ச்சியில், சில்லரை, வணிகம். உள்கட்டுமானம், போக்குவரத்து உட்பட அனைத்தும் இந்தியர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த தொலைநோக்குப் பார்வையே நம் நாட்டிற்கு நலம் பயப்பது என்பது திண்ணம். பாரதியின் இக்கூற்றுக்கு அரண் சேர்க்கும் வகையில்,

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பலநாட்டினர் வந்தே
நந்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே'
22 என்றும்

'வெட்டுக் கனிகள் செய்து தங்க முதலாம்
வேறு பலபொருளுங் குடைந்தெடுப்போம்
எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்'
23

என்ற பாடல்கள் அமைந்துள்ளன.

தொகுப்புரை:

பசி, பட்டினி, பஞ்சம், வறுமை போன்ற சீர்கேடுகள் ஏற்படாமல், நமது இந்தியப் பொருளாதாரம் அமைதல் சாலச் சிறந்தது என்ற பாரதியின் பொதுவுடைமை தொலைநோக்கு பார்வை உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படுகிறது. மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டுமென்ற பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும். மேலை நாட்டுடன் தொடர்பு கொண்டு வணிகம் செய்வதில், நாம் உலக மக்களின் நம்பிக்கை பெற நேர்மையான முறையில் செயலாற்றிட வேண்டும். புதுமையான தொழில்கள் பல செய்து, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற பாரதியின் பெருவேட்கை அவரது பாடல்களில் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்று பாரதி வலியுறுத்துகிறார். மேற்கண்டவாறு பாரதியார் கண்ட பொருளீட்டும் நெறிகள் யாவும் தமிழர்கள் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கே என்பது திண்ணம்.

அடிக் குறிப்புகள்

1. குறள்,236
2. பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.47
3. பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.47
4. பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.26
5. பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.27
6. பேரா.மு. நாகநாதன், பாரதியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள், பக்.19,20
7. பேரா.மு. நாகநாதன், பாரதியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள், ப.21
8. பேரா.மு. நாகநாதன், பாரதியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள், ப.48
9. பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.27
10.பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.66
11.பேரா.மு. நாகநாதன், பாரதியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள், ப.58
12 பேரா.மு. நாகநாதன், பாரதியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள், ப.58
13.பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.28
14.பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.236
15.பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.65
16.பேரா.மு. நாகநாதன், பாரதியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள், பக்.62.63
17.பேரா.மு. நாகநாதன், பாரதியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள், ப.64
18.பேரா.மு. நாகநாதன், பாரதியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள், ப.64
19.பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.27
20.பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.27
21.பேரா.மு. நாகநாதன், பாரதியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள், ப.66
22.பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.27
23.பாரதியார், பாரதியார் பாடல்கள், ப.27



முனைவர் பொ.திராவிடபிரேமா,
தமிழ்த்துறைத் தலைவர்,
கொன்சாகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
காத்தாம்பள்ளம், எலத்தகிரி
– 635 108,
கிருட்டிணகிரி மாவட்டம்.

 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்