வையத்துள் வாழ்வாங்கு வாழ கலாமின் பத்துக் கட்டளைகள்

முனைவர் இரா.மோகன்


'தேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு' எனத் தம் புகழ் பெற்ற திரைப்பாடல் ஒன்றில் குறிப்பிடுவார் கவியரசர் கண்ணதாசன். நாம் இவ்வாக்கினைச் சற்றே மாற்றி, 'தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் கட்டளைகள் பத்து' எனக் கூறலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழக் கலாம் தம் எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்தியுள்ள பத்துக் கட்டளைக் குறித்து இங்கே காணலாம்.

1. கனவு காணுங்கள்!

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் என்றதும் நம் எல்லோருடைய நினைவுக்கும் முதலில் வருவது 'கனவு காணுங்கள்!' என்னும் அவரது முத்திரை மொழியே ஆகும். கலாமின் அகாரதியில், 'கனவு என்பது ஒருவர் தமது தூக்கத்தில் காண்பது அல்ல. ஒருவரைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே உயரிய கனவு - இலட்சியக் கனவு!' இன்னும் ஒரு படி மேலே சென்று, 'கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்' என்பார் அவர். இளைய தலைமுறையினர் கனவு காண்பதோடு மட்டும் நின்று விடாமல், கனவை நனவாக்கும் முயற்சியிலும் - காரியத்திலும் - முழுமூச்சுடன், முனைப்புடன் ஈடுபட வேண்டும். அதுவே கலாம் இளைய தலைமுறையிடம் எதிர்பார்ப்பது. 'கனவு, கனவு, கனவு அவசியம். கனவுகள் எண்ணங்கள் ஆகும், எண்ணங்கள் செயல்களாக வடிவெடுக்கும்' எனத் தருக்க நெறி நின்று மொழிவார் கலாம்.

2. இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்!

'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவர், 'சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' எனப் 'பெருமை' அதிகாரத்தில் உரைப்பார். வள்ளுவரின் கருத்தையே அப்துல் கலாம் வேறு சொற்களில் இப்படிக் கூறுகின்றார்:

'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்'.

பிறப்பு எல்லோருடைய வாழ்விலும் நிகழும் ஒரு பொது நிகழ்வு; அவ்வளவே. ஆயினும், இறப்பு என்பது அப்படி அன்று; பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான வாழ்வில் ஒரு மனிதன் ஆற்றும் பணிகளால் அவன் இறப்புக்குப் பிறகும் பெருமையோடு நினைவுகூரப் பெறுவான்.

3. வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி

ஒருவர் தம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி எது? கலாமின் கருத்தில், 'வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி' ஆகும். மேலும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியையும் கலாம் பிறிதோர் இடத்தில் சுட்டிக்காட்டுகின்றார். 'வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி, அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள்' என்பதே கலாம் உணர்த்தும் மகிழ்ச்சி மந்திரம் ஆகும்.

'முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள்' என வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுறுத்துகின்றார் கலாம். அதற்கு அவர் சொல்லும் காரணம் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. 'இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் விளைந்த குருட்டாம்போக்கான வெற்றி!' என்று விமர்சித்து விடுவார்களாம். எனவே, கண்ணும் கருத்துமாக இருந்து நாம் வாழ்வில் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்க வேண்டும்; ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. முடியும் என்பது மூலதனம்!

மதுரை மாநகரில் ஓடும் ஆட்டோ ஒன்றின் முதுகில் எழுதப் பெற்றிருந்த அருமையான வாசகம் இது:

'முடியுமா என்பது முட்டாள்தனம். முடியாது என்பது மூடத்தனம். முடியும் என்பது மூலதனம்'. இத் திருவாசகத்தினைத் தமக்கே உரிய பாணியில் நச்சென்ற மொழியில், 'முடியாது என்று நீ சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டிருக்கிறான்' எனக் குறிப்பிடுகின்றார் கலாம். எனவே, 'நம்மால் முடியுமா?' என ஐயப்படுவதை நீக்கி, 'முடியாது' என எண்ணிக் கலங்குவதைத் தவிர்த்து, 'முடியும்' என நம்பிக்கையோடு, விடாமுயற்சியும் முறையான பயிற்சியும் மேற்கொண்டால் ஒருவர் வாழ்வில் வெற்றி வாகை சூடுவது என்பது உறுதி. 'வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்' என்னும் கவிஞர் தாராபாரதியின் வைர வரிகள் இங்கே நினைவுகூரத் தக்கன.

5. திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்!

உலகில் திறமை இல்லாதவர் என எவரும் கிடையாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான திறமை குடிகொண்டிருக்கும். அதனை அடையாளம் கண்டு, வளர்த்துக் கொள்ள முயல வேண்டும். வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டு இராமல், வாய்ப்புகள் எப்போது வரும் என எதிர்பார்த்துக் காத்திராமல், தகுதியையும் திறமையையும் வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து முயன்றால், வெற்றியானது வழி கேட்டுக் கொண்டு நம்மிடம் வந்து சேரும்.

6. பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்!

கடல் என்றால் அலைகள் இருப்பது போல், வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்; பிரச்சினைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளியவும் கூடாது; பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள எண்ணி நழுவிச் செல்லவும் கூடாது; பிரச்சினைகளைப் பொறுத்துக் கொண்டு போகவும் நினைக்கக் கூடாது. 'பிரச்சினைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள்' என்பதே கலாம் வலியுறுத்தும் தாரக மந்திரம். 'இன்னல்களும் பிரச்சினைகளும் நாம் வளர்ச்சி அடைவதற்காகக் கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை' எனக் கலாம் காட்டும் வழியில் வாழ முற்பட்டால், பிரச்சினைக்குப் பிரச்சினை தரும் நெஞ்சுரத்தை நாம் உறுதியாகப் பெற்று விடலாம்.

7. எதிர்காலம் உண்டு என நம்புங்கள்!

பாட்டுக்கொரு புலவர் பாரதியார் புதிய ஆத்திசூடியில் 'சோதிடந்தனை இகழ்!' எனப் பறைசாற்றுவார். பாரதியின் வாக்கைப் பொன்னே போல் போற்றும் கலாமுக்கும் சோதிடத்தில் - கைரேகை பார்ப்பதில் - கடுகளவும் நம்பிக்கை இல்லை; அதிர்ஷ்டம், தலைவிதி ஆகியவற்றிலும் அவருக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை. 'உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால், கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு' என இளைய தலைமுறைக்குக் கலாம் அறிவுறுத்துவது நோக்கத் தக்கது.

8. மேலே மேலே பறந்து செல்லுங்கள்!

'உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்' என்னும் வள்ளுவர் வாக்கிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் கலாம். எண்ணத்தில் உயர்வு, சொல்லில் கனிவு, செயலில் பணிவு என்னும் மூன்று வாழ்வியல் விழுமியங்களையே அவர் பெரிதும் போற்றுகின்றார். அவரைப் பொறுத்த வரையில், 'சிறு குறிக்கோள் என்பது குற்றம்' ஆகும். 'உங்களுக்குச் சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அவற்றைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்' என்பது இளைய தலைமுறைக்குக் கலாம் வலியுறுத்தும் ஒரு பொன்னான வழிகாட்டுதல் ஆகும்.

9. நமக்குள்ளே ஒரு தெய்விக அக்னி!

இந்த உலகில் மனிதராகப் பிறப்பெடுத்த எவரும் சாதாரணமானவர் அல்லர்; திட்டமிட்டு முயன்றால், எவரும் சாதனையாளர் ஆக முடியும் வாழ்வில் முத்திரை பதிக்க இயலும். தடம் பார்த்து நடப்பதை விட, மனித வாழ்வில் தடம் பதித்துச் செல்வதே மேலானது. 'நாம் அனைவரும் நமக்குள்ளே ஒரு தெய்விக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக் கொழுந்து விட வைத்து, அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை' எனத் தம் 'அக்னிச் சிறகுகள்' என்னும் தன்வரலாற்று நூலில் எடுத்துரைக்கின்றார் கலாம்.

10. சிரிப்பு எனும் மாமருந்தினைப் போற்றுங்கள்!

எண் வகை மெய்ப்பாடுகளைக் குறிப்பிடும் நுற்பாவில் நகைச்சுவைக்கே முதலிடம் தருகின்றார் தொல்காப்பியர். வள்ளுவர் அனுபவப் பொருள் விளங்கத் தம் குறட்பா ஒன்றில் 'இடுக்கண் வருங்கால் நகுக!' என்கிறார். பிறிதொரு குறட்பாவிலும் அவர், 'யாரோடும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இப்பேருலகம் பகற்காலத்தும் இருளாகும்' என மொழிகின்றார். அப்பர் பெருமான் சிவபெருமானின் கொவ்வைச் செவ்வாயில் விளங்கும் குமிண் சிரிப்பினை நெஞ்சாரப் போற்றிப் பாடுகின்றார். காவியக் கவிஞர் வாலியும் தம் பங்கிற்குச் 'பவளக் கொடியில் முத்துக்கள் பூத்தால் புன்னகை என்று பேராகும்!' எனக் கற்பனை நலத்தோடு காதலியின் புன்னகைக்குப் புகழாரம் சூட்டுகின்றார். வாழையடி வாழை என நகைச்சுவை உணர்வைப் போற்றி வரும் ஆற்றல்சால் பாடைப்பாளிகளின் வரிசையில் அப்துல் கலாமும் சேர்ந்துள்ளார்.

'சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும்' எனச் சிரிப்பின் சிறப்பினை எடுத்துரைக்கின்றார் கலாம்.

'தங்கள் எவ்வாறு நினைவுகூரப்படுவதை விரும்புவீர்கள்?' என ஒரு நேர்காணலில் கேட்கப் பெற்ற வினாவுக்குப் கலாம் தந்த அற்புதமான மறுமொழி இது:

'கோடிக்கணக்கான மக்களின் முகங்களில் புன்னகையை வரவழைத்தவர் என்று...!' இதுவே கலாமின் ஒட்டுமொத்த வாழ்வும் வாக்கும் உணர்த்தும் தலையாய செய்தி  ஆகும்.


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.



 

 

 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்