திருக்குறளின் பழையவுரைகள் பத்தா ?
முனைவர் ஆ.மணி
உரைக்களம்
திருக்குறளுக்கு உரையெழுதியோர் பதின்மர் என்பது வழக்காறு. ஆனால்
கிடைத்துள்ள உரைகளைக் காணுங்கால், இக்கருத்து பொருத்தமுடையதாகுமா?
என்பதை அறிவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும். இவ்வுரை முயற்சிக்குத்
திருக்குறள் உரைப்பதிப்புக்களும், ஆய்வு நூல்களும்; கட்டுரைகளும்
துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.
திருக்குறள் பழையவுரைகள் – தனிப்பாடற்செய்தி
தமிழர்களின் தனிப்பெரும் நூல்களுள் ஒன்றாகிய திருக்குறள்
பழங்காலத்திலேயே பதின்மரால் உரை செய்யப்பட்ட பெருமைக்குரியது என்பர்.
அப்பதின்மரின் பெயர்களைத் தொகுத்துரைக்கும் தனிப்பாடல் வருமாறு:
“தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிமே லழகர் பருதி – திருமலையர்
மல்லர் கவிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தார் இவர்” (சோமசுந்தர வுபாத்யாயர் 1847: 6*)
இத்தனிப்பாடல் திருக்குறள் உரையாசிரியர்களைக் காலவரிசைப்படுத்தி
உரைக்கவில்லை. மாறாகத் தாமாகத் தனிவரிசை கொண்டு உரைக்கின்றது என்பது
ஆய்வாளர் பலரின் கருத்தாகும். இப்பாடலில் ஐந்தாம் உரையாசிரியராகக்
குறிக்கப்படும் பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை செய்த பதின்மரில்
பத்தாமவர் என்பர் ஆய்வாளர்.
”இப்பதின்மருள் இன்று பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள்,
காலிங்கர் ஆகிய ஐவர் இயற்றிய உரைகள் கிடைத்து அச்சில் வெளிவந்துள்ளன.
ஏனையோர் உரைகள் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்தில் (5.6) இரண்டு
குறள்களுக்குத் தாமத்தர், நச்சர், தருமர் ஆகிய மூவர் உரைகள்
கிடைத்துள்ளன. மற்ற உரைகள் மறைந்தது தமிழிலக்கிய உலகிற்குப் பெரிய
இழப்பாகும்” (மு.வை. அரவிந்தன் 2008: 338).
திருக்குறளின் பழையவுரைகள் பத்தா?
பழங்காலத்தில் திருக்குறளுக்கு உரையெழுதிய இப்பதின்மரேயன்றி, இயற்றியவர்
பெயர் முதலியன தெரியாத இரண்டு பழையவுரைகளும் கிடைத்துள்ளன.
அவ்வுரைகளுள் ஒன்றை உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் வெளியிட்டுள்ளது.
மற்றொரு உரை பரிதியார் உரையைத் தழுவிச் செய்யப்பட்டதாகும் என்பர் (மு.வை.அரவிந்தன்
2008: 339). இரண்டாம் உரை அதாவது பரிதியார் உரையைத் தழுவிச்
செய்யப்பட்ட உரை பதிக்கப்பட்டு வெளிவந்த உரையா? என்பதைப் பற்றி
மு.வை.அரவிந்தன் (2008: 339) ஏதும் கூறவில்லை. எனவே, அவ்வுரை
ஏட்டுச்சுவடிகளில் உள்ள உரையாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.
சரசுவதி மகால் நூல்நிலையம் 1990ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள திருக்குறள்
– பழையவுரை, அறத்துப்பால் அளவில் அமைந்ததாகும். இப்பழையவுரையாசிரியர்
பெயர் தெரியவில்லை. எனினும், தாயுமானவர் காலத்திற்குப் பிற்பட்டவர்
என்பர். பொருட்பாலின் ஒரு பகுதி வரை இவ்வுரை கிடைத்துள்ளபோதிலும்,
அறத்துப்பால் மட்டும் இவண் பதிப்பிக்கப்பட்டுள்ளது என்ப. இவ்வுரை
பரிதியார் உரையைப் பின்பற்றி அமைந்துள்ளது என்றும் கூறுவர் (அ.மா.பரிமணம்
1990: III, XVIXVII). மு.வை.அரவிந்தன் கூறுவது இவ்வுரையோ அல்லது வேறு
உரையோ அறிகிலோம். எனினும் மு.வை. அரவிந்தனின் நூல் முதன்முறையாக 1968
இல் வெளிவந்தது. சரசுவதி மகால் உரையோ 1990 இல் வந்தது எனவே,
இப்பழையவுரையை வேறுரையாகக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
திருக்குறளுக்குக் கவிராஜ பண்டிதர் உரை என்னும் பெயரில் பழையவுரை ஒன்றை
1949 ஆம் ஆண்டில் அ.சக்கரவர்த்தி என்பவர் சென்னை, சாது அச்சுக்கூடத்தின்
மூலம் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார் (கே.எம்.வேங்கடராமையா 1991: 35).
சமண சமயச் சார்புடைய இவ்வுரை 1991ஆம் ஆண்டில் கே.எம்.வேங்கடராமையாவால்
திருக்குறள் (ஜைன உரை) என்ற பெயரில் சரசுவதி மகால் நூல்நிலையம் வழியாகப்
பதிப்பிக்கப்பட்டுள்ளது. அ.சக்கரவர்த்தி பயன்படுத்திய ஆறு சுவடிகளிலும்
அப்பழையவுரை எழுதிய உரையாசிரியர் பெயர் இல்லை என்றும், எல்லீஸ் தம்
பதிப்பில் எழுதியுள்ள இரு குறிப்புக்களில் ஜைனச் சார்பு உரைய எழுதியவர்
கவிராச பண்டிதன் என்று குறித்துள்ளார் எனவும் கூறியுள்ள வேங்கடராமையா
தம் பதிப்பில் உரையாசிரியர் பெயர் சுட்டாமல் விட்டமைக்குக் காரணம் என்ன?
என்பதை ஏனோ கூறவில்லை. எனினும், இவ்வுரையாசிரியர் பழங்காலத்தவர் எனக்
கருதலாம். இவ்வுரையை மறுபதிப்புச் செய்த வேங்கடராமையா இவ்வுரையாசிரியர்
காலம் எதுவெனக் கூறாமைக்கும் காரணம் இன்னதெனக் கூற இயலவில்லை. ஒரு
பதிப்பை மறுபதிப்புச் செய்வோர் முதல் பதிப்பின் பெயரை முற்றும்
மாற்றிவிடுவதால் பதிப்பு வரலாற்றில் குழப்பம் ஏற்படும் என்பது
குறிக்கத்தக்க செய்தி ஆகும்.
16ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படுகின்ற திருமேனி காரி இரத்தினக்
கவிராயர் (இ.சுந்தரமூர்த்தி 1980: XXXI) திருக்குறள் நுண்பொருள்மாலை
என்னும் உரையொன்றை எழுதினார். அவ்வுரை பரிமேலழகர் உரைக்குச்
செய்யப்பட்ட உரையாகும். இவ்வுரை செந்தமிழ் இதழில் வெளிவந்தது என்ப. இ.
சுந்தரமூர்த்தி இவ்வுரையை 1980 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். கோவை,
தேன்மொழி நூலகத்தார் இதனை வெளியிட்டுள்ளனர்.
மணிவாசகர் பதிப்பகம் 2008ஆம் ஆண்டில் திருக்குறள் பழையவுரை – 4 என்னும்
பெயரில் ச.கிருஷ்ணமூர்த்தியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நான்கு
தொகுதிகளாக வெளியிடக் கருதி, இரண்டாம் தொகுதியாகக் காமத்துப்பாலை
வெளியிட்டுள்ளது. இதன் அறத்துப்பால் 2007 இலில் வெளிவந்துள்ளது என்ப.
இப்பதிப்பில் உள்ள உரை அச்சில் வராத பழைய உரையை ஓர்
ஓலைச்சுவடியிலிருந்து நகல் செய்யப்பட்டது என்பர் (ச.கிருஷ்ணமூர்த்தி
2008: 4). அச்சுவடி பற்றிய எந்தவொரு தகவலும் பதிப்பாசிரியரால்
தரப்படாதது, ஒரு வகையில் ஐயத்தை எழுப்புவதைத் தவிர்க்க இயலவில்லை.
ச.கிருஷ்ண மூர்த்தி (2008: 4 – 5) பதிப்பித்த திருக்குறள் பழைய உரை – 4
பொருட்பால் திகுதி – 1 இல், திருக்குறள் பழைய உரை – 4 நான்குதொகுதிகள்
உருவான வரலாறு என்னும் தலைப்பில் அவருடைய மகள் பூவிழி எழுதிய
முன்னுரையில் திருக்குறள் உரைச்சுவடி மேல் சித்தாமூர் ஜினகாஞ்சி
மடத்தில் இருந்து பெறப்பட்ட சுவடி என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும்,
அச்சுவடியில் உள்ள உரை கவிராஜ பண்டிதர் உரையன்று என்ற குறிப்பும்
தரப்பட்டுள்ளது. இச்செய்தி மேலும் சிந்திப்பதற்குரியது.
கு.மோகனராசு (2005: 93) பிற்கால உரையாசிரியர்கள் (காலங்கள் தெளிவில்லை)
என்னும் தலைப்பில் 1. கவிராச பண்டிதர், 2. திருக்குறள் ஜைன உரையாசிரியர்,
3. திருக்குறள் பழைய உரையாசிரியர் (1), 4. திருக்குறள் பழைய
உரையாசிரியர் (2) ஆகிய நால்வர் உரைகளைக் குறித்துள்ளார். முதலிரு உரைகள்
மேற்கண்ட (சக்கரவர்த்தியாலும், வேங்கடராமையாவாலும் பதிப்பிக்கப்பட்ட)
உரையா? என்பதை அறிவதில் இடர்ப்பாடுகள் உள. ஆய்வுநூல்களைப் பொருத்தவரை
அவற்றில் பதிப்புக்கள், உரைகள் முதலியவற்றைப் பயன்கொள்ளும்போதும்,
ஆளும்போதும் முழுமையான விவரங்களைத் (குறைந்தபட்சம் நூலின் முழுமையான
பெயர், பதிப்பாசிரியர் பெயர் / உரையாசிரியர் பெயர், பதிப்பாண்டு,
பதிப்பு விவரம் ஆகியவற்றைத்) தருவது பயனுடையதாகும். இந்நிலை பலர்
நூல்களில் இல்லாதநிலை ஏமாற்றமளிக்கின்றது.
தி.தாமரைச்செல்வி (2012: ப.எ.இ. (தொடர் எண்: 317)) தந்துள்ள திருக்குறள்
பதிப்பு வரலாறு ஆண்டு நிரல் என்ற பட்டியலில் ச.கிருஷ்ணமூர்த்தி 1993 இல்
தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை மூலமாகத் திருக்குறள் பழையவுரை
ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மெய்யப்பன்
பதிப்பகம் மூலம் 2007 ஆம் ஆண்டு, திருக்குறள் பழைய உரை – 4 (அறம்) (ஓலைச்சுவடியில்
இருந்து நகல் செய்து ஒப்பீட்டாய்வு) என்னும் பதிப்பினைச் ச.கிருஷ்ண
மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தியும் அவரால் (2012: ப.எ.இ. (தொடர் எண்:
451)) தரப்பட்டுள்ளது. எனினும், 2008 இல் ச. கிருஷ்ணமூர்த்தி
வெளியிட்டுள்ள திருக்குறள் பழைய உரை – 4 பொருட்பால் தொகுதி – 1,
திருக்குறள் பழைய உரை – 4 பொருட்பால் தொகுதி – 2, திருக்குறள் பழைய உரை
– 4 காமத்துப்பால் ஆகிய பதிப்புக்கள் பற்றிய குறிப்புக்கள் எவையும்
தரப்படவில்லை.
திருக்குறள் பழையவுரை – 4 காமத்துப்பால் பதிப்பின் இறுதியில் பயன்பட்ட
நூல்கள் என்னும் தலைப்பில் ச.கிருஷ்ண மூர்த்தி ( 2008: 366) திருக்குறள்
பழையவுரை – 3, ச. கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு
என்னும் பதிப்பொன்றைக் குறித்துள்ளார். தாம் பதிப்பித்த ஒரு நூல்
பற்றிய முழுமையான விவரங்களைக் கூடத் தர இயலாமைக்குக் காரணம் என்ன?
என்பதை அறிய இயலவில்லை.
ச.கிருஷ்ணமூர்த்தி 2008ஆம் ஆண்டுக் காமத்துப்பால் பதிப்பில் பழையவுரை –
4 எனக் குறித்துள்ளமையால், அதற்கு முன்னைய பழையவுரைகள் மூன்று உள்ளன
என்பது தெளிவாகின்றது. ஆனால், அவ்வுரைகள் பிறர் பதிப்பித்துள்ள
பழையவுரைகளையும் சேர்த்துக் கூறியதா? அல்லது தாம் கண்டறிந்து
பதிப்பித்த பழையவுரைகளைக் கொண்டு கூறியதா? என்பதைப் பற்றிய எந்த ஒரு
விவரமும் 2008 பதிப்பில் இல்லை. எனவே, கிருஷ்ணமூர்த்தியால்
குறிக்கப்படும் பழையவுரைகளின் எண்ணிக்கை குறித்து ஏதும் கூற இயலவில்லை.
இவ்வுரைகளின் காலமும் பதிப்பாசிரியரால் குறிக்கப்படவில்லை. எனினும்,
பழையவுரை என்ற தொடர் 18ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட உரைகளையே குறிப்பது
தமிழுலகின் வழக்கமாகும். அதனை மனங்கொண்டு இவ்வுரைகள் பழையவுரைகளாகக்
கருதப்பட்டுள்ளன. தகுந்த தரவுகள் கிட்டினால் இக்கருத்து மாற்றம் பெறவும்
கூடும் என்பதை மனங்கொள்க.
திருக்குறள் பழையவுரைகள் பத்தன்று; பதினாறு
திருக்குறளுக்குப் பழங்காலத்தில் அதாவது 18ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்ச்
செய்யப்பட்ட உரைகள் எத்தனை என்பதைப் பற்றியும், தனிப்பாடல் கூறும்
பதின்மர் உரைகள் நீங்கலான வேறு உரைகளும் கிடைத்துள்ளன என்பதைக் கண்டோம்.
இதுகாறும் ஆராய்ந்த கருத்துக்களிலிருந்து திருக்குறளுக்குச்
செய்யப்பட்ட பதின்மர் உரைகளுக்குப் பின்னர் 1. உ.வே.சா. நூல்நிலையம்
வெளியிட்ட பழையவுரை, 2. மு.வை.அரவிந்தனால் குறிக்கப்பட்டுள்ள பரிதியார்
உரையைத் தழுவிச் செய்யப்பட்ட உரை, 3. சரசுவதி மகால் நூல்நிலையம்
வெளியிட்ட பழையவுரை (இவ்வுரை மு.வை. அரவிந்தனால் குறிக்கப்படாத உரையாக
இருந்தால்), 4. அ.சக்கரவர்த்தியாலும், கே.எம். வேங்கடராமையாவாலும்
பதிப்பிக்கப்பட்ட கவிராஜ பண்டிதர் உரை / சைன உரை, 5. திருமேனி காரி
இரத்தினக் கவிராயரின் நுண்பொருள்மாலை, 6. ச.கிருஷ்ணமூர்த்தியால்
பதிப்பிக்கப்பட்ட பழையவுரை - 4 ஆகிய ஆறு பழையவுரைகளையும் (18ஆம்
நூற்றாண்டுக்கு முற்பட்டவை மட்டும்) காணமுடிகின்றது. ஆக,
திருக்குறளுக்குச் செய்யப்பட்ட பழையவுரைகள் பத்தன்று; பதினாறு எனக்
கூறுவதே இனிப் பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. பழையவுரைகளைத்
தொகுத்துரைக்கும் தனிப்பாடலைப் பாடியவர் இப்பழையவுரைகளைக் கண்டதில்லை
என்றே கூறலாம். இங்குக் குறிக்கப்பட்ட பழையவுரைகள் கிடைக்காத
பழையவுரைகளாக இருக்கலாமே என்ற ஐயம் சிலருக்குத் தோன்றலாம். ஆனால்
கிடைத்துள்ள பதிப்புக்கள் அதற்குச் சான்றாக அமையாமையால், இதனைப் பற்றி
எதுவும் கூற இயலவில்லை. மேலும், பழையவுரைகளில் கிடைக்காதவை ஐந்து; ஆனால்,
கிடைத்தவையோ ஆறு பழையவுரைகள். எவ்வாறாயினும், பழையவுரைகள் பத்தென்ற
கருத்து பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.
முடிபுகள்:
1. ஒரு
பதிப்பை மறுபதிப்புச் செய்வோர் முதல் பதிப்பின் பெயரை முற்றும்
மாற்றிவிடுவதால் பதிப்பு வரலாற்றில் குழப்பம் ஏற்படும் என்பது
குறிக்கத்தக்க செய்தி ஆகும்.
2. ஆய்வுநூல்களைப்
பொருத்தவரை அவை பதிப்புக்கள், உரைகள் முதலியவற்றைப் பயன்கொள்ளும்போதும்,
ஆளும்போதும் முழுமையான விவரங்களைத் (குறைந்தபட்சம் நூலின் முழுமையான
பெயர், பதிப்பாசிரியர் பெயர் / உரையாசிரியர் பெயர், பதிப்பாண்டு,
பதிப்பு விவரம் ஆகியவற்றைத்) தருவது பயனுடையதாகும். இந்நிலை பலர்
நூல்களில் இல்லாதநிலை ஏமாற்றமளிக்கின்றது.
3. பழையவுரை
என்ற தொடர் 18ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட உரைகளையே குறிப்பது
தமிழுலகின் வழக்கமாகும். அதனை மனங்கொண்டு இவ்வுரைகள் (உ.வே.சா. நூல்
நிலையப் பதிப்பு முதலானவை) பழையவுரைகளாகக் கருதப்பட்டுள்ளன. தகுந்த
தரவுகள் கிட்டினால் இக்கருத்து மாற்றம் பெறவும் கூடும்.
4. திருக்குறளுக்குச்
செய்யப்பட்ட பழையவுரைகள் பத்தன்று; பதினாறு எனக் கூறுவதே இனிப்
பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. பழையவுரைகளைத் தொகுத்துரைக்கும்
தனிப்பாடலைப் பாடியவர் இப்பழையவுரைகளைக் கண்டதில்லை என்றே கூறலாம்.
துணைநூல்கள்:
1. அரவிந்தன்.
மு.வை. 2008 (இரண்டாம் பதிப்பு). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர்
பதிப்பகம்.
2. ஆறுமுக
நாவலர். (பதி.ஆ.). 1861 (துன்மதி ஆண்டு). திருக்குறண் மூலமும்
பரிமேலழகருரையும். சென்னபட்டணம்: வாணிநிகேதன வச்சுக்கூடம்.
3. கிருஷ்ணமூர்த்தி.
ச. (பதி.ஆ.). 2008. திருக்குறள் பழைய உரை – 4. காமத்துப்பால். சிதம்பரம்:
மெய்யப்பன் பதிப்பகம்.
4. கிருஷ்ணமூர்த்தி.
ச. (பதி.ஆ.). 2008. திருக்குறள் பழைய உரை – 4. பொருட்பால் – தொகுதி -
1. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
5. கிருஷ்ணமூர்த்தி.
ச. (பதி.ஆ.). 2008. திருக்குறள் பழைய உரை – 4. பொருட்பால் – தொகுதி -
2. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
6. சுந்தரமூர்த்தி.
இ. 1980. திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய திருக்குறள்
பரிமேலழகர் உரை நுண்பொருள் மாலை. கோவை: தேன்மொழி நூலகம்.
7. சுந்தரமூர்த்தி.
இ. 2006. திருக்குறள் சில அரிய பதிப்புகள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
8. சுந்தரமூர்த்தி.இ.
2006. பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன். சென்னை: மணிவாசகர்
பதிப்பகம்.
9. சோமசுந்தரவுபாத்தியாயர்.(பதி.ஆ.).
1847 (பிங்கல –புரட்டாசி). திருக்குறள் மூலமும் இதன் பலவுரைகளினுஞ்
சிறந்த பரிமேலழகருரை வாக்கியங்களுள் பலர்க்கும் பயன்படற்குரிய பலவுந்
தழுவி வெளிப்படையாக்கித் திருத்தணிகைக் கந்தப்பையர் குமரர் சரவணப்
பெருமாளையரால் செய்யப்பட்ட உரையாகிய தெளிபொருள் விளக்கமும்,
திருவள்ளுவமாலையுரையும். சென்னப்பட்டணம்: பாரதிவிலாச அச்சுக்கூடம்.
10.
தாமரைச்செல்வி. தி. 2012. திருக்குறள்
பதிப்பு வரலாறு. புதுச்சேரி: செயராம் பதிப்பகம்.
11.
பரிமணம். அ.மா. (பதி.ஆ.). 1990.
திருக்குறள் – பழைய உரை – அறத்துப்பால். தஞ்சாவூர்: சரசுவதி மகால்
நூல்நிலையம்.
12.
மோகனராசு. கு. 2005. திருக்குறள் உரைவகைகள். சென்னை: மணிவாசகர்
பதிப்பகம்.
13.வேங்கடராமையா. கே.எம். (பதி.ஆ.). 1991. திருக்குறள் (ஜைன உரை).
தஞ்சாவூர்: சரசுவதி மகால் நூல்நிலையம்.
முனைவர்
ஆ.மணி,
துணைப்பேராசிரியர் - தமிழ்,
பாரதிதாசன் அரசினர் மகளிர்
கல்லூரி,
புதுச்சேரி – 605 003,
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|