சிவகங்கைச்
சரித்திரக் கும்மி (வரலாற்று ஆவணம்)
முனைவர் சிலம்பு நா.செல்வராசு
(சென்னை, காவ்யா பதிப்பகம் 2017-லில் வெளியிட்ட முனைவர் ஆ.மணியின்
சிவகங்கைச் சரித்திரக் கும்மி (என்ற) சிவகங்கை நகர்க்கும்மி என்ற
நூலுக்கு வழங்கப்பட்ட அணிந்துரை)
‘தமிழர்க்கான
வரலாறு எழுதுதல்’ என்னும் கருத்தியல் அண்மைக்காலமாக உரத்துப்
பேசப்பெறும் பொருண்மையாகும். ஒற்றைத் தேசியத்தை நோக்கி நகரத்
தொடங்கியுள்ள இந்தியப் பன்மைச் சமூகங்கள் விழிப்படைந்துள்ள நேரம் இது.
தத்தமக்கான வரலாற்றுப் பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுக்கும் பணியில்
பன்மைச் சமூகங்கள் இப்போது இயக்கம் பெற்றுள்ளன.
தமிழரைப் பொறுத்தவரை அவர்க்கான தனித்த வரலாறே இல்லை என்று கூறப்பட்ட
காலம் உண்டு. வடமொழி பண்பாட்டு உறவுக்குப் பிந்தைய சூழல் தாம் தமிழரின்
வரலாறு ஆனது எனப் பெருமைபட மொழிந்த காலம் அது. இருபதாம் நூற்றாண்டின்
முதல் பத்தாண்டுகளில் வி. கனகசபைப்பிள்ளை ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு
முற்பட்ட தமிழ்ச்சமூகம்’ என்னும் ஆய்வு வந்த பின்னரே தனித்த
அடையாளத்தோடு கூடிய தமிழர் வரலாறு எழுதுதல் எழுச்சி பெற்றது.
தமிழ்ச்சமூகம் முதலானவை வரலாற்று உணர்வற்ற சமூகங்கள் என்றெல்லாம்
மதிப்பிடக்கூடிய ஒரு பொதுக் கருத்து பல தளங்களிலும் பேசப்பட்டு வரும்
சூழலை எடுத்துக்கூறும் பக்தவச்சல பாரதி (2013) வரலாறு இல்லாமல் உலகில்
எந்த சமூகமு இல்லை என்பதை இனவரைவியலாலர்கள் கண்டறிந்த உண்மை என்றும்,
தொல் பழங்காலம் முதல் மலைகளிலும் காடுகளிலும் தனித்தொதுங்கி வாழும்
தொல்குடிகளிடம்கூட அவர்களின் குடி வரலாறு வழக்காறுகளில் புதைந்து
கிடக்கின்றன என்றும் விளக்குவர் (பக்தவச்சல பாரதி. 2013).
பிரிட்டீஷ் இந்தியாவில் எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாமே ஆங்கில ஆட்சி
நன்மை பயப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விளங்கியவை. மேலும்,
மன்னராட்சிப் பரப்புகள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு
ஒரு நாடாக உருவாக்கப்பட்ட பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. இவை ஒற்றைத்
தேசியம் அதன் பெருமிதம் ஆகியவற்றைப் பேசின. ஆனால் இன்று காலம்
மாறியுள்ளது. ஒற்றைத் தேசியத்திலிருந்து பன்மைத் தேசியத்தை நோக்கி நாடு
நடையிடத் தொடங்கியுள்ளது. இச்சூழலில் எத்தகு வரலாறு தேவைப்படுகிறது?.
ஒரு பெரும் தேசம் முழுமைக்குமான வரலாற்றை முன்னெடுக்க வேண்டிய தேவை
கடந்த காலகட்டத்தில் ஏற்பட்டது. தேசத்தின் விடுதலைக்குப் பிறகு
தேசத்தின் உறுப்புகளாகத் திகழும் சமூகங்கள் முன்னேற வேண்டும்.
அவற்றுக்கான வசதி வாய்ப்புகள் பெருக வேண்டும் என்பதே இன்றைய விழைவாக
உள்ளது. இந்நிலையில் நுண்ணோக்கிய ஆய்வுமுறை மூலம் முழுமையைக்
கட்டமைக்கும் பகுதிகளை ஆராய வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.
இச்சமூகங்களின் வரலாற்றைத் தேடுவதால் மட்டுமே அவர்களுக்கான இருப்பை
நிலைநிறுத்த முடியும்; எதிர்பார்ப்புகளுக்கு விடை காணமுடியும். அந்த
வகையில் சமூகங்களின் இனவரலாறு என்பது எண்ணற்ற தரவுகளின் மூலங்களைக்
கொண்டு மீட்டுருவாக்கப்பட வேண்டும் (பக்தவச்சல பாரதி 2013).
தமிழர்க்கான வரலாறு எழுதுதல் எனும் கருத்தியலில் முன்சுட்டப்பட்ட
கருத்து மிகு முதன்மை பெற்றதாகக் கருதப்படவேண்டும். ஓர் இனத்திற்கான ;
குழுவிற்கான வரலாற்றை எப்படி மீட்டெடுப்பது?.
சடங்குகள், திருவிழாக்கள், கூத்துகள், கதைப்பாடல்கள், கதைகள் உள்ளிட்ட
எண்ணற்ற வழக்காறுகளில் அந்தந்தச் சமூகத்தின் வரலாறு ஆண்டுதோறும்
மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்டு எடுத்துரைக்கப்படுகின்றன. இவ்வாறான
நிகழ்த்துதலில் பழங்கால வரலாற்றின் அர்த்தங்கள் உறைகல்லாக உறைந்து
கிடப்பதை மானிடவியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். இவற்றை
மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது ஆராய்ச்சியாளர்களின் கடமையாகவும்
காலத்தின் கட்டாயமாகவும் ஆகியுள்ளதைச் சுட்டுதல் வேண்டும். இந்தப்
பின்னணியில் பேராசிரியர் ஆ. மணி அவர்களின் ‘சிவகங்கைச் சரித்திரக்
கும்மி’ எனும் நூலை ஆராயவேண்டியுள்ளது.
பேராசிரியர் ஆ.மணி அவர்களைச் சங்க இலக்கியம் சுட்டும் ’சிறுமுது குறைவி’
என்பதுபோலச் ’சிறுமுதுகுறைவர்’ என அழைத்தல் தகும். சிறு வயதிலேயே
முதுக்கு ஆகிய பெரும் ஆய்வுப்பண்புகள் வாய்க்கப்பெற்றவர் என்று
அத்தொடருக்குப் பொருள் கொள்ளுதல் வேண்டும். பண்டைத் தமிழ் இலக்கண
இலக்கியங்களில் ஆழங்காற்பட்ட அறிவு, உரையாசிரியர்தம் திறத்தை
மதிப்பிடும் தகுதிப்பாடு, மூலபாடம் பற்றிய முறையான கல்விநலம் என்று
தமிழில் திறம் பெற்று விளங்குபவர். இந்தியக் குடியரசுத் தலைவரின்
செம்மொழித் தமிழ்க்கான விருதையும் பெற்றிருப்பவர்.
இவர் பதிப்பித்து ஆரய்ந்திருக்கும் ‘சிவகங்கைச் சரித்திரக் கும்மி என்ற
சிவகங்கை நகர்க்கும்மி’ எனும் இலக்கியத்தை இயற்றியவர் இராமநாதபுரம்
சேதுபதிகளிடம் அட்டவணைக்காரராக (கணக்காளராக) இருந்த ஆறுமுகத்தின் பேரன்
முத்துசாமி ஆவார். இவ்வாறு வரலாற்றோடு கூடிய இலக்கிய வகைமைகளைப்
படைப்பது அக்காலத்துத் தமிழ் மரபாக இருந்துள்ளது. சான்றாக, ’ஆனந்தரங்க
ராட் சந்தமு’ எனும் குறவஞ்சி நாடகத்தைக் கூறமுடியும். ஆனந்தரங்கபிள்ளை
மீது பாடப்பட்ட இக்குறவஞ்சி நடிப்பதற்கு ஏற்ற கலைவடிவம் கொண்டது;
இவ்வாறே சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் ஆடுவதற்குரிய கலைவடிவமாகவே
படைக்கப்பட்டுள்ளது.
சின்ன மருது பெரிய மருது என்றழைக்கப்பட்ட மருது சகோதரர்களின் வரலாறே
இக்கும்மியின் மையப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் உருவாக்கம் ஐந்து வகையிலான தன்மைகளை அடிப்படைகளாகக்
கொண்டமைவதை உணரமுடிகின்றது.
1.
நூலின் பதிப்புமுறைகள்
2. நூலை வரலாற்று ஆவணமாக மாற்றுதல்
3. இலக்கியப் பனுவல் எனும் வகையில் அதன் சிறப்புகளை எடுத்துக் கூறுதல்
4. கும்மி எனும் நிகழ்த்துகலை வடிவமாகவும் கொள்ளத் தூண்டுதல்
5. நாட்டார் வழக்காற்றுப் பனுவலாக விளக்குதல்
நூலின் பதிப்பு முறைகள்
நூலாசிரியர் தொடர்ந்து பழம்பனுவல் பற்றிய பதிப்பு வரலாற்றை ஆராய்ந்து
வருபவர் என்ற வகையில் பதிப்பு பற்றிய கருத்தியல் இவருக்குக்
கைவரப்பெற்றுள்ளது. ஒரு நூலைப் பதிப்பிக்க வேண்டிய நெறிமுறைகள் எவை
என்பது முகப்புப் பக்கங்களில் தரப்பட்டுள்ளது. பழைய பதிப்பாசிரியரின்
பதிப்புமுறையும் துணை கொள்ளப்பெற்றுள்ளது. பாடலுக்குரிய கருத்து
விளக்கங்கள் பின்னிணைப்பாக அல்லது குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன.
வரலாற்று ஆவணம்
இந்நூலை ஒரு வரலாற்று ஆவணமாக மாற்றுவதிலேயே பதிப்பாசிரியர் பெருங்கவனம்
கொண்டுள்ளமை தெரியவருகின்றது. கும்மிப் பாடலின் கருத்து விளக்கங்கள்
சிறுசிறு தலைப்பிட்டு வரலாற்று நிகழ்வுகளாகத் தரப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளோடு ‘சிவகங்கைச் சீமை வரலாற்று
நிகழ்வுகள்: ஒரு கண்ணோட்டம்’ எனும் பகுதி சிவகங்கைச் சீமையின்
வரலாற்றுச் செய்திகளை ஆண்டு அடிப்படையில் விவரித்துச் செல்வதை
அறியமுடிகின்றது. 1736ஆம் ஆண்டு தொடங்கி 1911 வரையிலான வரலாற்று
நிகழ்வுகள் முதன்மையானவை. இவை நூலின் கருத்தோடு ஒப்பிடும்வண்ணம்
பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. தவிர இருபதிற்கும் மேற்பட்ட வரலாற்று
நூல்களை ஆராய்ந்து, அவற்றில் உள்ள செய்திகளின் அடிப்படையில்
அடிக்குறிப்புகள் தரப்பட்டுள்ள தன்மை இந்நூலை ஒரு வரலாற்று ஆவணமாக
மாற்றியுள்ளது.
இலக்கியப் பனுவல்
ஓர் இலக்கியமாக இக்கும்மியைப் படித்துத் துய்ப்பதற்கேற்ற
பதிப்புமுறைகளும் இந்நூலில் உண்டு. உ.வே.சா. நீண்ட அகராதிகளைப்
பின்னிணைப்பாகத் தருவதுபோன்று இப்பதிப்பாசிரியரும் மாந்தர் பெயர்,
தெய்வப்பெயர், நாடு; நகர்; ஆறு பெயர்கள், அருந்தமிழ்ச்சொற்கள்,
வடசொற்கள், பிறமொழிச் சொற்கள் எனப் பல தலைப்புகளில் அகராதிகளை
உருவாக்கியுள்ளமை பாராட்டிற்குரியது. கும்மிப்பாடல் பற்றிய இலக்கிய
வரலாற்றுச் செய்திகளும் கும்மிப்பாடல் பட்டியலும் இந்நூலுக்குக் கூடுதல்
சிறப்பினைத் தந்துள்ளன.
நிகழ்த்துகலை வடிவம்
சிவகங்கைச் சரித்திரக்கும்மி என்னும் கும்மிப்பாடல் நிகழ்த்துகலை வடிவம்
பெறத்தக்கதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மகளிர் கூடி வட்டமாக
நின்று கும்மி அடித்துப் பாடத்தக்க வகையில் இசை வடிவம் பெற்றதாகவும் இது
அமைந்துள்ளது. நீண்ட இலக்கியமாக அமைந்துள்ள இச்சிற்றிலக்கியத்தை
நிகழ்த்துகலைக்கு ஏற்பக் கால அளவைச் சுருக்கு மகளிர்க்குப் பாடம் சொல்லி
அரங்கேற்ற வாய்ப்பும் உள்ளது.
நாட்டார் வழக்காற்றுப் பனுவல்
பதிப்பாசிரியர் ஆ.மணி அவர்கள் நாட்டார் வழக்காற்று மரபு பற்றி நீண்டதொரு
விளக்கத்தைத் தந்துள்ளார். நாட்டார் வழக்காற்றில் கும்மிப்பாடல் பெறும்
இடம் எது என்பதை மதிப்பீடும் செய்துள்ளார். நாட்டுப்புற வழக்காற்று
இலக்கிய வகைமையாக இதனைக் கருதுதல் வேண்டும் எனும் கருத்தியலைப் பகுதி
இரண்டில் மிக விரிவாகத் தந்துள்ளதைக் குறிப்பிடுதல் வேண்டும்.
நிகழ்த்துகலை
மரபிலிருந்து தோற்றம் பெற்ற நாட்டார் வழக்காற்றுப் பனுவல் ஒன்று
செவ்விலக்கியத் தன்மையோடு வரலாற்று ஆவணமாக உருவான நிலையை இந்நூல் மிக
விரிவாகவே விளக்கி இருக்கிறது. இன்றைய ‘வரலாறு எழுதுதல்’ எனும் அரசியல்
சார்ந்த கருத்துநிலையில் ஒரு வட்டாரத்தின் வரலாறாக ஒரு குடி சார்ந்த
வரலாறாக வல்லாண்மையை எதிர்த்து வீழ்ந்து விளிம்புநிலை நோக்கி
உந்தப்பட்ட ஒரு வரலாற்றை மீண்டும் மையத்திற்குள் கொண்டு வரும் ஒரு
வரலாறாக இந்நூல் உருவாக்கம் கொண்டுள்ளது. இதற்காக நூலாசிரியர்
பாராட்டத்தக்கவராகிறார். ஏற்கனவே பன்னூல் புலமைபெற்ற பேராசிரியர் ஆ.மணி
அவர்கள் இன்னமும் பல நூல்களை உருவாக்கிட வாழ்த்துகள்.
துணைநூல்
பக்தவச்சலபாரதி.
2013. வரலாற்று மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம் வெளியீடு.
முனைவர்
சிலம்பு நா. செல்வராசு,
தமிழ்ப் பேராசிரியர்,
புதுச்சேரி.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|