இளைய தலைமுறையினரின் ஆளுமை
வளர்ச்சிக்குப் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி வலியுறுத்தும் ஆறு
கட்டளைகள்
முனைவர் இரா.மோகன்
இளைய தலைமுறையினரின் ஆளுமை வளர்ச்சிக்குப் பேராசிரியர்
வா.செ.குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன்) வலியுறுத்தும் கட்டளைகள் ஆறு.
அவையாவன:
-
1.
‘வாழ்வில் எதிர்நீச்சல் முன்னேற்றப் பயணம்’ எனத் தெளிக!
-
2.
‘இயலும் என்பவர்க்கு எதுவும் அரிதல!’ என உணர்க!
-
3.
‘விதிக்கு ஒரு விதிசெய் திண்மை’யைப்
பெறுக!
-
4.
‘பெருமிதம் கலந்த பண்பின் பீடுடை
வாழ்வு’ வாழ்க!
-
5.
திடம், குவிந்த சிந்தை, செயலின் திறம் என்னும் மூன்றும் கைவரப்
பெற்றுத் தெய்வ நிலையை அடைக!
-
6.
‘மண்ணில் விண் சமைப்போர்’ஆக உயர்க!
இனி, ஒவ்வொரு கட்டளை குறித்தும் நிரலே காணலாம்.
1.
‘வாழ்வில் எதிர்நீச்சல் முன்னேற்றப் பயணம்’ எனத் தெளிக!
“ … என்
பயணம் பெரிது: செலும்
பாதை நெடிது” (குலோத்துங்கன் கவிதைகள், ப.117).
என்பது வா.செ.கு.வின் ஒப்புதல் வாக்குமூலம். அவரது கருத்தில் ‘மனித
வாழ்வு முடிவில்லாத முன்னேற்றப் பயணம்’, ‘வாழ்வில் எதிர்நீச்சல்
முன்னேற்றப் பயணம்’. வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைய தலைமுறையினர்
அனைவரும் தம் பாதை எது எனத் தேர்ந்து, அதில் பயணம் மேற்கொள்ள வேண்டும்,
வாழ்வில் எதிர்நீச்சல் இட்டு முன்னேற வேண்டும் என்ற முனைப்பைத் தம்
மனத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
“மாறுவதும் எங்களினம்; நிமிடங் தோறும்
வளர்வதும் எங்களினம்; படிஒவ் வொன்றாய்
ஏறுவதும் எங்களினம்” (கு.க., ப.30)
என்னும் வா.செ.கு.வின் வரிகள் ஒவ்வோர் இளைஞரின் தாரக மந்திரமாக –
குறிக்கோள் முழக்கமாக – இருத்தல் வேண்டும். ‘பயணமும் தெளிந்து, செல்லும்
பாதையும் வகுத்து, நாளும் அயர்விறந்து உழைப்போர் யாவும் அடைகுவர்’
என்பது குலோத்துங்கம்.
2.
‘இயலும் என்பவர்க்கு எதுவும் அரிதல!’
இன்றைய இளைஞர்களுக்கு வா.செ.கு. வலியுறுத்த விரும்பும் செய்தி, ‘இயலும்
என்பவர்க் கெதுவும் அரிதல, எழுந்து நிற்பவர்க்(கு) இமயம் தடையல’ (கு.க.,
ப.136) என்பது ஆகும். வாழ்வில் வெற்றி பெற விழையும் இளையோர்க்கு அவர்
காட்டும் வழிமுறை இதுதான்;
“ … … சக்தி
முழுமையும் குவிந்த காலை
இயல்வது வெற்றி; இங்கு
ஏழைஎன் றெவரு மில்லை!” (கு.க., ப.200)
‘ஏழை என்று இங்கு எவரும் இல்லை’ என்பது வா.செ.கு.வின் அழுத்தம்
திருத்தமான கருத்து ஆகும். ‘முயலும் மானிடன் முடிவு காணுவன், முன்னர்த்
தோற்பினும் பின்னர் வெல்லுவன்’ என ஆழமாக நம்புகின்றார் வா.செ.கு. வெற்றி,
தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது சக்தி முழுவதையும் குவித்து,
வெற்றிக்குப் பாடுபடுமாறு இளைஞர்களை ஆற்றுப்படுத்துகின்றார் வா.செ.கு.
3.
விதிக்கு ஒரு விதிசெய் திண்மை
இளைய தலைமுறையினர் விதியை எண்ணி விழுந்து கிடக்காமல், விதிக்கு ஒரு விதி
செய்யும் திண்மையைப் பெற வேண்டும் எனக் கருதுகின்றார் வா.செ.கு.
“இமயச் சிகரம் வளரட்டும்; தொடர்ந்து
ஏறும் வலிமை எம்கால் பெறட்டும்” (கு.க., ப.66)
என எண்ணுகின்றவர்களாக இந்தியத் திருநாட்டின் இளைஞர் ஒவ்வொருவரும்
உருவாக வேண்டும் என்பது வா.செ.கு.வின் கனவு. அவரே ‘தணியாத தாகம்’
என்னும் கவிதையின் முடிவில் முத்தாய்ப்பாகக் கூறுவது இதுதான்.
“சோதனைத் தீயினில் வெந்து நிமிர்ந்தவர்
தோல்வியை ஏற்பதிலை – அட
சாதனைப் பாதையில் முன்னடி வைத்தவர்
தாகம் தணிந்ததிலை’ (கு.க., ப.74)
சாதனைப் பாதையில் முன்னடி வைத்தவர் ஒருபோதும் தன் தாகம் தணிந்ததில்லை;
வேகம் குறைந்ததில்லை. அவர்கள் விதிக்கு ஒரு விதி செய்யும் மனத்திண்மை
பெற்றவர்களாக விளங்குவார்கள். கம்ப ராமாயணத்தில் ‘விதியின் பிழை இதற்கு
நீ என்னை வெகுண்டது?’ என்று இராமன் கேட்ட போது, ‘விதிக்கு விதியாகும்
என் வில்தொழில் காண்டி’ என இலக்குவன் சொன்ன மறுமொழி இங்கே நினைவுகூரத்
தக்கதாகும்.
4.
பெருமிதம் கலந்த பண்பின் பீடுடை வாழ்வு
‘பெரிதொன்று காண்பம் எனும் பீடுடை நெஞ்சினன் யான், தரை வாழ்வில்
நின்றாலும் தவ வாழ்வை மேற்கொண்டேன்’ (கு.க., ப.660)
எனத் தம் நிலையைத் தெளிவுபடுத்தும் வா.செ.கு.வுக்கு மிகவும் விருப்பமான
சொல் ‘பீடு’ என்பது. இச்சொல் அவரது கவிதைகளில் பயின்று வருவதைக் காணலாம்.
‘யான் நிலத்திடை தேவன்: எந்தன் நெறியினில் தாழ்வ தில்லேன்’ (கு.க., ப.273)
என அறுதியிட்டு உரைக்கும் வா.செ.கு., ‘பெருமிதம் ஒளிரும் நெஞ்சம்,
பீடுசேர் நடையும் கொண்ட திரு’ வினைப் பாடவே பெரிதும் விரும்புகின்றார்.
‘வாரணம் நடந்த தன்ன, மலையெழுந்து அசைந்த தன்ன, பெருமிதம் கலந்த பண்பின்,
பீடுடை வாழ்வு’ (கு.க., ப.67)
வாழுமாறு அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்து-கின்றார்.
“பெருமிதம் சேர் பீடுநடைப்
பெரியோன், பெருந் தலைவன்” (கு.க., ப.3)
என்பது பெருந்தலைவர் காமராசருக்கு வா.செ.கு. சூட்டும் புகழாரம் ஆகும்.
5. திடம் +
குவிந்த சிந்தை + செயலின் திறம் = தெய்வ நிலை
வா.செ.கு.வின் கருத்தியலில், மனிதனே யாவரினும் முதன்மையானவன்; மனிதமே
எல்லாவற்றிலும் முக்கியமானது. பட்டம், பதவி, பெயர், புகழ், செல்வம்,
செல்வாக்கு – இவை எல்லாம் மனித வாழ்வில் நிலையானவை அல்ல; வள்ளுவர்
மொழியில் சுட்ட வேண்டும் என்றால் ‘ஆகுல நீர பிற!’ ‘மனிதனின் மேல் ஒரு
தேவனை இதுவரை, வையகம் கண்டதிலை’ (கு.க., ப.576),
என்றும், ‘எப்பொருளும் எவ்வுறவும் மானிடத்தின், ஏற்றம் போல் என் மனதை
ஈர்த்த தில்லை!’ (கு.க., ப.125)
என்றும் மனிதனையும் மானிடத்தையும் வானளாவப் போற்றுவார் வா.செ.கு. மேலும்
அவர், மனிதன் தேவன் ஆவதற்கான – தெய்வ நிலையை அடைவதற்கான –
வழிமுறையினையும் ‘சிந்தையும் தோளும்’ என்னும் கவிதையில்
எடுத்துரைக்கின்றார்:
“திடமுடன், குவிந்த சிந்தையும், செயலின்,
திறமும் சேர்ந்தால் தெய்வமு மாவோம்” (கு.க., ப.205)
இவ்வரிகளையே ஓர் அறிவியல் விதியைப் போல இரத்தினச் சுருக்கமாக நாம்
இப்படிக் கூறலாம்:
திடம் + குவிந்த சிந்தை + செயலின் திறம் = தெய்வ நிலை
6.
விண் சமைப்போர் வருக!
இந்தியத் திருநாட்டின் இளைஞர் யாவரும் ஒருபோதும் ‘வேடிக்கை மனித’ராக
வாழ்தல் கூடாது. வினையாளராக – புத்துலக வேட்பாளராக – வாழ்க்கை, நடைமுறை,
பழமரபு யாவற்றையும் மாற்றுபவராக – மண் மீது விண்ணைச் சமைப்பவராக –
வாழ்ந்து காட்ட வேண்டும். இதுவே இளைஞர் உலகிற்கு வா.செ.கு. விடுக்கும்
இன்றியமையாத செய்தி ஆகும். ‘விண் சமைப்போர் வருக’ என்னும் கவிதையில்
அவர் இளைய பாரதத்திற்கு முன்-வைக்கும் அறைகூவல் இதுதான்:
“வேடிக்கை மனிதரை யாம்
வேண்டுவதொன் றில்லை. . . நிதம்
மேற்செல்லும் பயணம்
விழைகின்றார் வருக! இவண்
விண் சமைப்போர் வருக!” (கு.க., பக்.242-243)
‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்னும்
பழமொழியை நம்பி, ‘விண்ணிலே உள்ளது எனும் மாளிகையை எண்ணி, மேலே
பார்த்திருப்போர்’ நம் நாட்டிற்கு ஒருபோதும் தேவையில்லை; ‘மண்ணிலே
தாமாக மாளிகை ஒன்று ஆக்க, மனங்கொண்ட சிற்பிகளே’ இன்று தேவை.
‘இந்நிலத்தில், இப்பிறப்பில் இயலும்’ என்ற உறுதியான நம்பிக்கை- யோடும்,
‘நாள்தோறும் முன்செல்வது மனிதம்’ (கு.க., ப.266)
என்னும் உயரிய குறிக்கோளுடனும், ‘மேலதினும் மேல தேடும் விழைவுடன், மண்
மீது விண்ணைக் காண’த் துடித்தெழுந்து செயலாற்றும் ஆளுமைத் திறம் மிக்க
இளைஞர்களாலேயே உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும் என ஆழமாக
நம்புகின்றார் வா.செ.கு. அத்தகைய இளைஞர்களை உருவாக்கும் நோக்குடனேயே
தமது இறுதி மூச்சு வரை இடைவிடாது, இமைப்பொழுதும் சோராது எழுதியும்
பேசியும் வாழ்ந்து காட்டியும் வந்த ஓர் ஆற்றல்சால் ஆளுமையாளர் வா.செ.கு.
ஆவார் சுருங்கக் கூறின்,
“உழைப்பறியா வாழ்வுதனில் உயிர்ப்பொன் றில்லை;
உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்’ (கு.க., 267)
என்பதுவே குலோத்துங்கத்தின் சாரம்; பிழிவு எனலாம்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|