‘சிந்தனைக் கவிஞர்’ கவிதாசனின்
கவிதைகளில் நம்பிக்கை நாற்றுகள்
முனைவர் இரா.மோகன்
தமிழ்
கூறு நல்லுலகம் பாரதியாரைத் ‘தேசியக் கவிஞர்’ என்றும், பாரதிதாசனைப்
‘புரட்சிக் கவிஞர்’ என்றும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைக்
‘குழந்தைக் கவிஞர்’ என்றும், நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையைக்
‘காந்தியக் கவிஞர்’ என்றும், சுரதாவை ‘உவமைக் கவிஞர்’ என்றும், காசி
ஆனந்தனை ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்றும், குலோத்துங்கனை ‘ஆய்வறிவுக் கவிஞர்’
என்றும் போற்றிக் கூறுவது போல், கவிதாசனைச் ‘சிந்தனைக் கவிஞர்’ எனக்
குறிப்பிடுவது நன்கு பொருந்தும். கோவை பூ.சா.சோ.கல்வி நிறுவனங்களில்
பயின்ற மாணவர், ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறையின்
இயக்குநர், உற்பத்தித் திறன் குழுவின் தலைவர், தன்னம்பிக்கை
அறக்கட்டளையின் நிறுவநர், பாரதியார் பல்கலைக்-கழக ஆட்சிப் பேரவை
உறுப்பினர் என்றாற் போல் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கவிதாசன்,
‘உணர்வுகளின் மேலாண்மையியல்’ என்ற பொருளில் ஆராய்ந்து முனைவர் பட்டம்
பெற்றவர்; தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவருக்குத் ‘தமிழ்ச்
செம்மல்’ என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. ஆண்டுதோறும் தமது
பிறந்த நாளான ஆகஸ்டுத் திங்கள் 29-இல்
கவிதாசன் தம்முடைய புதிய நூல் ஒன்றினை வெளியிடுவதை வழக்கமாகவும்
வாடிக்கையாகவும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
“உள்ளத்தில் இருந்து உணர்வுகள் கொப்பளிக்கும் போது, அதைச் செதுக்கிச்
செதுக்கித் தாள்களில் வார்த்தெடுப்பது என் வேள்வி” (‘எழுதுகிறேன்…’,
வெற்றிப் பூக்கள், ப.4) என
மொழியும் கவிதாசன் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும், கருத்துக்களையும்
சிந்தனைகளையும் அவ்வப்போது கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் பொன்மொழித்
தொகுப்புக்களாகவும் வெளியிட்டு வந்துள்ளார். “இளைஞர்களை நெருங்கி, தோழமை
ததும்பத் தோள் தொட்டுப் பேசுகிற தொனியில் இந்தக் கவிதைகள்
எழுதப்பட்டுள்ளன” (‘விருட்சங்களின் விதைப் பண்ணை’, வெற்றியின் விதைகள்,
ப.4) என மரபின் மைந்தன் முத்தையா,
கவிதாசனின் கவிதைகளைக் குறித்துக் கூறியுள்ள மதிப்பீடு, அவரது
தன்னம்பிக்கைக் கட்டுரைகள், பொன்மொழிகள் ஆகியவற்றிற்கும் பொருந்துவதே
ஆகும்.
“கனவு மேகங்கள் / கருக் கொள்ளும் போது
மன வெளியில் / கவிதை மின்னல்
பட்டுத் தெறிக்கும்!” (முன்னேற்றத்தின் முகவரிகள், ப.7)
எனத் தம் கவிதைப் பிறப்பு குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும்
கவிதாசன், ‘சூழ்நிலையில் கரைந்து போகிறவன் சாதாரண மனிதன்; சூழ்நிலையைக்
கடந்து போகிறவன் சாதனையாளன்’ (‘நன்றியின் மடியில்’, வெற்றியின் விதைகள்,
ப.6) என்னும் தம் மணிமொழிக்கு
ஏற்பத் தமது தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் வாயிலாக இளைய தலைமுறையினரைச்
சாதனையாளர்களாக உருவாக்கும் உயரிய பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருவது
போற்றத்தக்கது.
எது கவிதை?
‘எது கவிதை?’ எனக் காலங்காலமாகக் கேட்கப்பட்டு வரும் அடிப்படையான
வினாவுக்குக் கவிதாசன் தரும் விடை இது:
“
1. எது விதையாகிறதோ –
2. எது உயிராகிறதோ –
3. எது உணர்வாகிறதோ –
4. எது மருந்தாகிறதோ –
5. எது வாழ்வாகிறதோ –
6. எது முக்காலத்திலும் வாழ்கிறதோ
–
அது கவிதை!” (வெற்றிப்
பூக்கள், ப.71)
இங்கே விதை – உயிர் – உணர்வு – மருந்து – வாழ்வு – முக்காலத்திலும்
வாழ்தல் (நிலைபேறு) என்னும் பொருள் பொதிந்த சொற்களைக் கொண்டே கவிதையின்
பண்பையும் பயனையும் கவிதாசன் உணர்த்தி இருப்பது சிறப்பு. கவிதாசனின்
கண்ணோட்டத்தில் கவிதை எனப்படுவது படிப்பவர் நெஞ்சங்களில் நல்ல
விழுமியங்களை விதைப்பது; மொழிக்கு உயிர் எனக் கருதத்தக்கது; மனிதனின்
உணர்வினை ஒழுங்குபடுத்துவது; மனக் கவலைக்கு மருந்தாக வல்லது; வாழ்வின்
அடிப்படையை வகுத்துத் தருவது; கால வெள்ளத்தைக் கடந்து நிற்பது. இங்ஙனம்
பொது நோக்கில் மட்டுமன்றி, சிறப்பு நிலையில் தமது கவிதைகள் குறித்துக்
கவிதாசன் வழங்கி இருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் வருமாறு:
“எனது கவிதைகள் / கனவுகளின் தொகுப்பு அல்ல
இலட்சியக் கனவின் / சிறகு விரிப்பு!
விடியலுக்காக – / விடியாத இரவுகளில்
நான் இருந்த / தவத்தின் வரம்!...
அனுபவ வயலில் / நான் அறுவடை செய்த
கருத்து மணிகளின் குவியல்!...
நெஞ்சில் பதிவான / நிகழ்வுகளின்
சிறப்புப் பதிப்புகள்!” (வெற்றியின் விதைகள், பக்.9-10)
கவிதாசனின் அகராதியில் கவிஞன் என்பவன் ‘மொழியின் தலைமகன்’ ஆவான்;
‘கவிதைகள் – கவிஞன் மொழிக்குச் சூட்டும் மதுர கிரீடங்கள்!’ ஆகும் (கருவறை
ஓலங்கள், பக்.51-52).
இனி, ‘சிந்தனைக் கவிஞர்’ கவிதாசனின் கவிதைகளில் வெளிப்படும் நம்பிக்கை
நாற்றுகளைத் தொகுத்தும் பகுத்து ஈண்டுச் சுருங்கக் காண்போம்.
I.
ஓரடிகளில் அமைந்த தன்னம்பிக்கை
ஒளிச்சுடர்கள்
ஆத்திசூடி அமைப்பில் ‘தன்னம்பிக்கை ஒளிவீச்சு!’ என்னும் தலைப்பில் அகரம்
முதல் ஓகாரம் வரையில் கவிதாசன் படைத்துள்ள ஓரடிக் கவிதைகளின் அழகிய
அணிவகுப்பு:
1. அறிவைக் கூர்மை செய்! – ‘அறிவு
அற்றம் (அழிவு வராமல்) காக்கும் கருவி’ (குறள் 421)
என்பார் வள்ளுவர்; எனவே, இக் கருவியைக் கூர்மை செய்யுமாறு
அறிவுறுத்துகின்றார் கவிதாசன்.
2. ஆற்றல் பெருக்கு! – வாழ்வில்
வெற்றி வாகை சூடுவதற்கான முதற் படி நம்மிடம் புதைந்துள்ள ஆற்றலைக்
கண்டறிந்து அதனைப் பெருக்கிக் கொள்வது தான்.
3. இப்பொழுதே செய்! – எந்தச்
செயலையும் நாளைக்கு என ஒத்தி வைக்காமல் – தள்ளிப் போடாமல் – இப்பொழுதே
செய்தல் நன்று. ‘ஒன்றே செய்க – ஒன்றும் நன்றே செய்க – நன்றும் இன்றே
செய்க – இன்றும் இன்னே (இப்பொழுதே) செய்க!’ என்னும் முன்னோர் அமுத மொழி
இங்கே நினைவு கூரத்தக்கது.
4. ஈடுபாடு கொள்! – எதையும்
ஏனோதானோ என்று கடனுக்குச் செய்யாமல் மனம் ஈடுபட்டுச் செய்தல் வேண்டும்
என்பது கருத்து.
5. உன்னை நம்பு! – முதலில் ஒருவன்
தன்னை நம்புவது – தன் ஆற்றலில் நம்பிக்கை வைப்பது – தான் முக்கியமானது,
முதன்மையானது.
6. ஊக்கப்படுத்திக் கொள்! –
‘ஊக்கமது கைவிடேல்’ என்ற ஆத்திசூடியின் மறுகோலம் இது.
7. எதிலும் முதன்மை கொள்! –
‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்’ (குறள் – 596) என்றபடி, எதிலும்
முதன்மை பெறுவதை – முதல் இடத்தை அடைவதை – இலக்காகக் கொள்ளல் சிறப்பு.
8. ஏற்றுக்கொள்! – உணர்ச்சி
வயப்படாமல், வாழ்வில் எதையும் இயல்பு என ஏற்றுக் கொள்ளல்.
9. ஐந்து மணிக்கு எழு! – ‘வைகறைத்
துயில் எழு!’ என்ற அறநெறியின் புத்தாக்கம்!
10. ஒருங்கிணைந்து செயல்படு! –
வெற்றி பெறுவதற்கான திறவுகோல் இது!
11. ஓர் இலக்கில் நில்! – கவனச்
சிதறல்களுக்கு இடம் தராமல் ஓர் இலக்கிலேயே நின்று, இடைவிடாமல் முயன்று
அதனை அடைதல். (மூன்றாவது கை, ப.63)
‘மாணவர் ஆத்திசூடி’ (வெற்றிப் பூக்கள், ப.81)
என்னும் தலைப்பில் கவிதாசன் படைத்துள்ள பன்னிரு சூடிகளும் இங்கே
கருத்தில் கொள்ளத் தக்கவை. இளைய தலைமுறையினர் இவற்றைப் பொருள் உணர்ந்து
பயின்று, வாழ்க்கையில் பின்பற்றி வந்தால் வெற்றி மீது வெற்றி வந்து
சேரும் என்பது உறுதி.
II.
‘எண்ணங்களே ஏணிப்படிகள்’
அறம் – பொருள் – இன்பம் போல, எண்ணம் – சொல் – செயல் என நிரல்படச்
சுட்டுவது இலக்கிய மரபு; வழக்கு. அலைஅலையாய் நமது ஆழ்மனத்தில்
பிறப்பெடுக்கும் எண்ணங்களே நாம் வழங்கும் சொற்களில் வெளிப்படும்;
பின்னர் இச் சொற்களே செயல்களாக உருவெடுக்கும். எனவே ‘எண்ணங்களே
ஏணிப்படிகள்’ என இரத்தினச் சுருக்கமாக மொழிகின்றார் கவிதாசன்.
தூய்மையான எண்ணங்கள் புனிதமான செயல்கள் ஆகும் என்றும், மாசு கலந்த
எண்ணங்கள் மனித வாழ்வைச் சீர்குலைக்கும் என்றும் கூறும் அவர்,
இளையோர்க்கு வலியுறுத்தும் இன்றியமையாத செய்தி இதுதான்:
“எண்ணங்களைச் சீரமைத்தால்
எவரெஸ்ட்டாய் உயர்ந்திடலாம்;
பார் போற்ற வாழ்வதற்குப்
பாதையொன்று அமைத்திடலாம்!” (வெற்றியின் விதைகள், ப.31)
‘மனம் போல் வாழ்வு’ என்னும் முதுமொழியை அடியொற்றி, ‘எண்ணம் போல ஏற்றம்’
என்கிறார் கவிதாசன்.
III.
உறங்கும் போதும் விழிப்புணர்வோடு இருப்பது முக்கியம்!
‘விழி! எழு! இலக்கை அடையும் வரை இமைப் பொழுதும் சோராது உழை!’ என
முப்பெரும் தாரக மந்திரங்களை இளைய தலைமுறையினர்க்குத் தமது செய்தியாக
வழங்கினார் வீரத் துறவி விவேகாநந்தர். அவரது அடிச்சுவட்டில் கவிதாசனும்,
“இளைஞனே! / உனது
சூரிய விழிகளைத் திறந்திடு!” (மூன்றாவது கை, ப.7)
என இளையோர்க்கு அறிவுறுத்துகின்றார்; தொடர்ந்து,
“விழித்திருப்பது மட்டும் / முக்கியமில்லை!
விழிப்புணர்வோடு / இருப்பது தான்
அதைவிட முக்கியம்!...
எழ வேண்டும் என்ற / எண்ணத்தை நெருப்பாக்கு!” (ப.24)
என வலியுறுத்துகின்றார். மேலும் அவர்,
“உனக்குள் / ஒளிந்திருக்கும் ஆற்றலைத்
தேடு! மீண்டும் தேடு!” (ப.37)
என்றும்,
“எந்தச் / சூழலையும்
உனக்குச் / சாதகமாக்கு!” (ப.40)
என்றும்,
“உறங்கும் போது கூட / உனது விழிப்புணர்வு
விழித்தே இருக்கட்டும்!” (ப.51)
என்றும்,
“சாதனைகளை / வரலாற்றில் பதிக்க
முயற்சியும் பயிற்சியும்
உனதுஇரு சிறகுகள் ஆகட்டும்!” (ப.52)
என்றும் வாழ்வில் தடம் பதித்துச் சாதனையாளராக உயர இளைய தலைமுறையினருக்கு
வழிமுறை காட்டுகின்றார்.
கோவை வானொலி நிலைய முன்னை இயக்குநர் ஜெ.கமலநாதன் குறிப்பிடுவது போல்,
“இவை பொழுதுபோக்குக் கவிதைகள் அல்ல; பொழுதைப் பயன் மிக்கதாக்கும்
உத்வேகக் கவிதைகள்; தளர்ச்சி நீக்கி மலர்ச்சி தரும் கவிதைகள்; தயக்கம்
நீக்கி வேகம் நல்கும் கவிதைகள்; சோர்வினைப் போக்கிச் சுடர் தெறிக்க
வைக்கும் கவிதைகள்” (முன்னுரை, மூன்றாவது கை, ப.6).
IV.
முன்னேற்றத்தின் முகவரி
‘முன்னேற்றத்தின் முகவரி’ என்னும் தலைப்பில் வடித்த தன்னம்பிக்கைக்
கவிதையில்,
“நேற்று என்பது / உடைந்த பானை!
நாளை என்பது / மதில் மேல் பூனை!
இன்று என்பது / உன் கையில் உள்ள வீணை!”
என நறுக்குத் தறித்தாற் போல் நயம்பட உரைக்கும் கவிதாசன்,
“முடங்கிக் கிடந்தால் / சிலந்தியும்
உன்னைச் சிறைபிடிக்கும்
எழுந்து நடந்தால் / எரிமலையும்
உனக்கு வழி கொடுக்கும்!” (முன்னேற்றத்தின் முகவரிகள், பக்.46-47)
என முன்னேற்றத்திற்கான முகவரியினை அடையாளம் காட்டுகின்றார். கவிஞரின்
நோக்கில், வாழ்வில் முன்னேற விழைவோர் முதலில் செய்ய வேண்டியது,
‘தள்ளிப்போகும் எண்ணத்தை முதலில் கிள்ளிப் போடுவது!’ அடுத்து, ஆற்ற
வேண்டுவது, ‘முயற்சிச் சிறகுகளை திசைகள்தோறும் விரிப்பது!’ ‘உழைப்பே /
முன்னேற்றத்திற்கு / நாம் செய்யும் முதலீடு!’ (ப.14):
இதுவே வாழ்வில் முன்னேற்றம் காணக் கவிதாசன் முன்மொழியும் தாரக மந்திரம்!
V.
நிகழ்காலமே
நிரந்தரமானது!
வாழ்வின் பொருளை உணர்ந்து, தெளிந்த சிந்தனையோடு பயணம் மேற்கொள்ள
வேண்டும். பயணத்தின் இடையே தோல்விகள் நம்மைத் தாக்கலாம்; தோல்வியின்
சுவடுகளில் கவலைகள் பிறப்பதற்கு ஒருபோதும் நாம் இடம் கொடுக்கக் கூடாது.
மாறாக, தோல்விகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றில் இருந்து பாடங்களைக்
கற்றுக்கொள்ள வேண்டும். உதிர்ந்து போன இறந்த காலத்திற்காகக் கவலைப்படக்
கூடாது; எதிர்கால ஏக்கத்திலும் கரைந்து போய்விடக் கூடாது.
“நொடிகள் தோறும் / வாழக் கற்றுக்கொள்!
நிகழ்காலமே நிரந்தரமானது!...
வாழ்க்கையின் கையில் /தோல்வியும் ஒரு பாட நூல்!
ஆழ்ந்து பயின்று விடு!
கவலைகளுக்குத் தீ மூட்டி / உற்சாகத்திற்கு உயிர்கொடு!”
(வெற்றியின் விதைகள், ப.66)
என இளைய தலைமுறைக்கு அறிவுறுத்துகின்றார் கவிதாசன்.
VI.
இரண்டு கைகளையும் இயக்கும் மூன்றாவது கை!
நம் இரண்டு கைகளையும் இயக்கும் மூன்றாவது கை எது தெரியுமா? இவ்
வினாவுக்குக் கவிதாசன் கூறும் விடை:
“அது தான்… நமது
தன்னம்பிக்கை!” (கருவறை ஓலங்கள், ப.19)
இந்தத் தன்னம்பிக்கை ஒருவரது நெஞ்சில் கொலுவிருந்தால் என்ன எல்லாம்
செய்யும்?
1. மனிதனின்
கையைப் பிடித்து இலட்சியப் பாதையில் அழைத்துச் சென்று வெற்றிக்கு வழி
வகுக்கும்!
2. முயற்சி
என்னும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உட்கார வைத்து மணி மகுடம்
சூட்டும்!
3.
வீழ்ச்சியை வீழ்த்திக் காட்டும் ஆற்றலாய் விசுவரூபம் எடுக்கும்!
4.
வாழ்க்கைப் பயணத்தில் சறுக்கி விழச் செய்யும் தோல்விப்
பள்ளத்தாக்குகளைக் கடந்திடக் கையில் ஊன்றுகோலாய் இருந்து உற்றுழி உதவும்!
‘வெற்றி தேவதை தேடுகிறாள்’ என்னும் தலைப்பில் எழுதிய பிறிதொரு
கவிதையிலும்,
“நீ / தன்னம்பிக்கையுடன்
எழுந்து நின்றால்
இமயம் கூட / உனக்கு இடுப்பளவு தான்!” (வெற்றிப் பூக்கள், ப.12)
எனத் தெளிவுபடுத்துகின்றார் கவிதாசன்.
VII.
வெற்றி பெறும் மனம்
“படுத்துக் கிடப்பவனுக்கு
வாழ்க்கை ஒரு சுகம்!
எழுந்து நடப்பவனுக்கு
வாழ்க்கை ஒரு வரம்!” (முன்னேற்றத்தின் முகவரிகள், ப.76)
என ஒரு குறுங்கவிதையில் அழகுற மொழியும் கவிதாசன்,
“முடியும் / என்று முயன்றால்
எரிமலையையும் / எளிதில்
பனிமலையாக்க / முடியும்!” (முன்னேற்றத்தின் முகவரிகள், ப.58)
என இளைய பாரதத்தின் நெஞ்சங்களில் நம்பிக்கையை ஆழமாக விதைக்கின்றார்.
‘வெற்றி பெறும் மனம்’ என்னும் தலைப்பில் படைத்துள்ள பிறிதொரு
கவிதையிலும்,
“உன்னால் முடியும் / என்கிற
நினைப்புதான் / வெற்றியின் உயிர்மூச்சு!”
(கருவறை ஓலங்கள், ப.22).
எனப் பறைசாற்றுகின்றார் அவர். இவ் வகையில் கவிதாசன் எடுத்துரைக்கும்
வெற்றிக்கான வாய்பாடு இதுதான்:
தன்னம்பிக்கை + தெளிந்த அறிவு + ஆழ்ந்த சிந்தனை + அமைதியான மனம் =
வெற்றி
‘ஆம்! எல்லாம் மனப்பக்குவம் தான்!’ என முத்தாய்ப்பாகவும் முடிந்த
முடிபாகவும் கூறுகின்றார் கவிதாசன்!
VIII.
வெற்றியின் இரகசியம்
‘இழுக்கண் வருங்கால் நகுக!’ என்றார் வள்ளுவர். கவிதாசனோ, ‘புண்படும்
போதெல்லாம் புன்னகை செய்! புதிய பாடத்தை நெஞ்சில் வை!’ என இளையோர்க்கு
வழிகாட்டுகின்றார். அவரது கருத்தியலில் வெற்றியின் இரகசியம் இது தான்:
“அவமானப்படும் போதெல்லாம் / புது அவதாரம் எடு!
விழும் போதெல்லாம் / விசுவரூபம் எடு!
இது தான் / வெற்றியின் ரகசியம்!” (வெற்றியின் விதைகள், ப.25)
கவிதாசனைப் பொறுத்த வரையில், ‘வெற்றி என்பது விழாமல் இருப்பதல்ல –
ஒவ்வொரு முறை விழும் போதும், விசுவரூபம் எடுப்பது தான்!’ வாழ்க்கையில்
தேடலின் அருமையை உணர்ந்து, ஆற்றலை அதிகப்படுத்தி, முயற்சியை
முழுமைப்படுத்தினால் வெற்றியானது நம் வீட்டு முகவரியை விசாரித்துத்
தெரிந்து கொண்டு தானே வந்து சேரும்!
IX.
வெற்றியாளர் இலக்கணம்
ஒரு வெற்றியாளரது இலக்கணமாகத் கவிதாசன் வகுத்துக் கூறும் பண்பு நலன்கள்
வருமாறு:
-
1.
கவனித்து / கற்றுக் கொள்ளபவர்!
-
2.
கேள்விக் கணைகளை / எய்து எய்து / விளக்கக் கனிகளைப் / பெறுபவர்!
-
3.
வாய்ப்புக்களுக்கு / வலைவிரித்துக் காத்திருப்பவர்!
-
4.
பிரச்சினை முடிச்சுக்களை / அவிழ்க்கும் செயல் கரங்களை / நீட்டுபவர்!
-
5.
கடந்த காலம் / கற்றுத் தந்த பாடங்களை / மனதில் பதித்து / எதிர்காலத்
திட்டத்தைத் தீட்டுபவர்!
-
6.
புதுப்புது வழிகளை / வகுத்து
முயல்பவர்!
-
7.
தன்னைத் தானே / ஆய்வு செய்து / திருத்தி அமைப்பவர்!
-
8.
தனது செயல்திறனை / அதிகரிக்க முயல்பவர்!
9. குறைவான நேரத்தில் /
கூடுதல் பணிகளைச் / செய்து முடிப்பவர்!
-
10.
பண்பில் குழைத்து / சொற்களை எடுப்பவர்!
-
11.
சாதனை ஊரை அடைய / இலட்சியப் பாதையில்
/ திட்ட வாகனத்தை / வியர்பையால் இயக்குபவர்!
இந்த பதினொரு பண்பு நலன்களையும் பட்டியல் இட்டு விட்டு நிறைவாக,
“நீங்கள் வெற்றியாளர்,
ஆம்!
நீங்கள் வெற்றியாளர்!” (முன்னேற்றத்தில் முகவரிகள், பக்.73-76)
என வாசகரையும் உளப்படுத்திக் கவிதையை முடித்திருப்பது முத்தாய்ப்பு;
நல்ல நயம்.
X.
வெற்றி வாழ்க்கை வசப்படுவதற்கான வழி
கவிதாசன் தமது ஒட்டுமொத்தப் படைப்புக்களின் வாயிலாக இளைய பாரதத்திற்கு
வழங்கியுள்ள முதன்மையான செய்தி இதுவே:
“என்னடா வாழ்க்கை / என்பதற்காக அல்ல வாழ்க்கை!
எதிர்நீச்சல் போட்டு / நிமிர்ந்து நிற்பதற்கே வாழ்க்கை!”
(வெற்றிப் பூக்கள், ப.72)
சரி, வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்பது எங்ஙனம் எனக் கேட்டால் அதற்கும்
‘வெற்றியின் திசைகள்’ என்னும் கவிதையில் தக்க மறுமொழியினைத் தந்து
கூறியுள்ளார் கவிதாசன்:
1.
“ வெற்று வாழ்க்கையை / வெற்றி வாழ்க்கையாக்க
கல்வியின் சுடரை / உள்ளத்தில் ஏற்று!...
2.
முதுமையில் / புன்னகை சிந்துவதற்கு
இளமையில் / வியர்வை சிந்து!”
(வெற்றிப் பூக்கள், பக்.31-32)
சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் கருத்தியலில், படிப்பும் உழைப்பும் பெற்று,
பயிற்சியும் முயற்சியும் கொண்டு, தன்னம்பிக்கையோடும் துணிவோடும் நடை
பயிலும் ஒருவருக்கு வெற்றி மங்கை வசப்படுவது என்பது உறுதியிலும் உறுதி.
‘சேர வாரீர் செத்தீரே” எனத் தாயுமானவர் உலகத்தவரை அழைத்தது போல,
“வரலாறுகளைப் / படித்தது போதும்
இனி, / வரலாறுகளைப் படைப்போம்
எழுந்து வா!” (கருவறை ஓலங்கள், ப.79)
என இளைய தலைமுறையினருக்கு அறைகூவல் விடுக்கின்றார் கவிதாசன். இதுவே
சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் ஒட்டுமொத்தப் படைப்புலகின் பாவிகம் எனலாம்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|