நாஞ்சில் நாடன் சிறுகதை காட்டும்
குடும்ப உறவுகள்
முனைவர் சு.அட்சயா
முன்னுரை
உலகம்
முழுமையும் வாழும் மனிதர்கள் தாம் வாழும் காலகட்டங்களில்
உணர்த்தப்படுகின்ற விழுமியங்களுக்கும் மதிப்பீடுகளுக்கும் கட்டுப்பாடு
உடையவர்களாக வாழ்ந்துள்ளனர். மனத்தில் உதித்தெழுகின்ற எண்ணம் சொல்லாக
உருவெடுத்து செயலாக வடிவம் கொள்ளும்பொழுது அச்செயலின் அடிப்படையில்
அம்மனிதன் 'நல்லவன்; என்றும் தீயவன் என்றும் இனம் காட்டப்படுகின்றான்.
ஒழுக்க வழியின் நெறி நின்று உயர்ந்த குறிக்கோள்களை நோக்கிய வாழ்வாகத்
தன் வாழ்வின் திசையை அமைத்துக் கொள்ள வேண்டியது தனிமனிதனின்
கடமையாகின்றது. தனிமனிதனுடன் இணைகின்ற மக்கள் கூட்டம் குடும்பமாகப்
பரிணாமம் பெறும்போது, தனிமனிதனின் செயல்பாடுகளால் குடும்பம்
மேன்மையுறுவதும் சிக்கல்களுக்கும் பிளவுகளுக்கும் ஆட்பட்டு கீழ்நிலையை
எய்துவதும் இயல்பாகின்றது. ஆதலால் குடும்பம் என்னும் சக்கரம்
சுழல்வதற்கு அச்சாணியாகத் தலைவனும் சக்கரத்தின் வலிமையாகக் குடும்ப
மாந்தர்களும் இயங்கவேண்டும். குடும்ப மாந்தர்களின் இயக்கம்
குடும்பங்களுக்கு குடும்பம் மாறுபட்டும் வேறுபட்டும் இயங்குகின்றன.
நீலவேணி டீச்சர் என்ற சிறுகதையில் இடம்பெறுகின்ற குடும்ப மாந்தர்களின்
உறவுகளைப் பற்றி எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அண்ணன் தங்கை உறவு
மனிதன் குடும்பம் அல்லது சமுதாயத்தைச் சேர்ந்துதான் வாழ்கின்றான்.
அதனால் அவனுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உறவுகள் ஏற்பட்டுக் கொண்டே
இருக்கின்றன. ஒருவனது வாழ்வில் பெரும்பகுதி குடும்பத்தோடு
தொடர்புடையதாகவே அமைகிறது. உண்மையான ஆதரவும் குடும்பத்தின் மூலமாகவே ஒரு
மனிதன் பெறுகிறான். மனிதன் கூடி வாழும் இயல்புடையவன். எந்த ஒரு மனிதனும்
பிறருடைய உதவியின்றி வாழமுடியாது. ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கின்றனர்.
உறவு என்பது நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டும் ஏற்படலாம். இந்த உறவு
என்பது இரண்டு மனிதர்களுக்கிடையே உள்ள தொடர்பை குறிக்கிறது. அக்காலம்
முதல் இக்காலம் வரை அண்ணன் தங்கை உறவுநிலை என்பது ஒரு உன்னதமான உறவு
நிலையாகும். பொன் வைத்த இடத்தில் பூ வைத்துப் பார்ப்பதற்கு அண்ணன் என்ற
உறவால்தான் முடியும். அண்ணன் தன் தங்கையோடு பிறந்ததையே பெருமையாக
நினைக்கும் காட்சியினைக் கண்ணதாசன்,
'ஒரு கொடியில் இருமலர்கள் மலர்ந்ததம்மா
அண்ணன் தங்கை உறவுமுறை பிறந்ததம்மா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா -அண்ணன்
கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா - தங்கை
வாழ்வுக்காக என் சுகத்தைக் கொடுக்கிறேனம்மா'
என்ற பாடல் வரிகளின் வாயிலாக அண்ணன் தங்கை பாசத்தினை அறியமுடிகின்றது.
இப்பாடல் வரிகள் தங்கையின் வாழ்வுக்காக அண்ணன் தன் சுகத்தைக்
கொடுக்கின்ற நிலையினை அறியமுடிகின்றது. ஆனால் நீலவேணி டீச்சர் என்ற
சிறுகதையின் கதாபாத்திரமான நீலவேணியின் அண்ணன் தன் வாழ்க்கை
சுகத்தைத்தான் பெரிதாக நினைத்தானே தவிர தன் தங்கையின் வாழ்க்கை சுகமாக
இருக்கவேண்டும் என்ற நினைப்பே இல்லாத நிலையினை சிறுகதை ஆசிரியர்
நாஞ்சில் நாடன் பின்வரும் சிறுகதை வரிகளில் மெய்ப்பித்துக் காட்டுவதை,
'அவள் மணமாகிப் போகாமல் இருப்பது அண்ணனுக்கு ஆறுதல் பெருமூச்சு,
பெற்றோர் தனிமை, முதியோர் இல்லம், உடல்நலக்குறைவு, அகாலத் தொலைபேசி
அழைப்பு என நேரத்தையும் நிம்மதியையும் கொலைக்குக் கொடுக்க வேண்டாம்' (நாஞ்சில்
நாடன், நீலவேணி டீச்சர், பக்.78)
என்ற சிறுகதை வரிகளின் வாயிலாக நீலவேணியின் அண்ணனின் சுயநலப்போக்கினை
படம்பிடித்துக் காட்டியுள்ளார் சிறுகதை ஆசிரியர் நாஞ்சில் நாடன் என்பதை
அறிய முடிகின்றது. அண்ணனின் கடமை தன் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்
துணையை அமைத்துத் தரவேண்டும் என்பதாகும். ஆனால் இச்சிறுகதையில்
இடம்பெறுகின்ற நீலவேணியின் அண்ணன் தங்கையின் வாழ்வுக்காக தன் சுகத்தைக்
கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை தங்கையின் மனதை புரிந்து கொள்ளாத
கதாபாத்திரம் என்பதை அறியமுடிகின்றது. தந்தை தாய்ப்பேண், தாயைச் சிறந்த
கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற முதுமொழியினைப்
பின்பற்றி வாழாத ஒரு கடமையைச் செய்யாத கதாபாத்திரமாக இருப்பதை
அறியமுடிகின்றது.
'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனேளூ
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனேளூ
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனேளூ
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனேளூ
ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.'
(பொன்முடியார், புறம்: பாடல்எண் - 312)
என்ற சங்கப்பாடல் குடும்ப மாந்தர்களின் கடமையை எடுத்துரைக்கின்றது.
பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்னையும், சான்றோனாக்கிய தந்தையையும் மறந்து
வெளிநாட்டில் வசிக்கின்ற பிள்ளைகளின் மனநிலையினை இச்சிறுகதை வரிகள்
நமக்கு உணர்த்துகின்றது. மேலும் தற்கால சமுதாயத்தில் பெற்றோர்களை
முதியோர் இல்லங்களில் விடுகின்ற அவல நிலையினையும் மறைமுகமாக
சுட்டிக்காட்டியுள்ளார் சிறுகதை ஆசிரியர் என்பதை அறியமுடிகின்றது.
இச்சிறுகதையின் கதாபாத்திரமான நீலவேணிக்கு 39 வரண்கள் வந்து பெண்
பார்த்துத் திருமணம் தடைபட்டு கொண்டே இருந்தது. அவளது தாயும் தந்தையும்
பேசுகின்ற உரையாடல்,
'எல்லாம் சரியாக இருக்கு... பொருத்தமும் இருக்கு பையன் தரமாட்டும்
இருக்கான். நல்ல ஆளுகள், ஆனா ஒரு காரியந்தான் யோசிக்கணும். பையனுக்கு
ரெண்டாங்கெட்டு'
'அது எப்படி' என்றாள் அம்மா.
39
முடிந்து 40
நடந்து கொண்டு இருப்பவளுக்கு ரிஷ்ய சிருங்கர் போலப் பெண் வாசம் முகராத
ஆண்மகன் கிடைப்பான் என எதிர்பார்க்கிறாள் போலும்!
எல்லாம் கூடிவந்தது. வெற்றிலை கைமாற நாள் குறித்தார்கள். குறித்தபின்
மாமியாராக வரும் பேறுடைத்தவள் மாரடைத்து இறந்து போனாள். 'அக்கியானியமும்
வந்து விட்டது மாப்பிள்ளை வீட்டாருக்கு' (நாஞ்சில் நாடன், நீலவேணி
டீச்சர், பக்.75) என்ற சிறுகதை
வரிகளின் வாயிலாக நீலவேணியின் திருமணம் தடைப்பட்டதற்கான காரணத்தை
அறியமுடிகின்றது. நீலவேணிக்கு சரியான திருமணவயதில் திருமணம் செய்து
கொடுக்காமல் இருக்கின்ற அவளது பெற்றோர்களின் பொறுப்பற்ற நிலையினை
அறியமுடிகின்றது. இரண்டாந்தாரமாக நிச்சயித்த திருமணமும் அவளது மாமியார்
இறந்து விட்டதால் நின்றுவிட்டது. சமுதாயத்தில் இந்த மூடநம்பிக்கைகள்
இன்றும் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பதை இச்சிறுகதை வரிகளின் வாயிலாக
அறியமுடிகின்றது.
நீலவேணிக்கு 42
வரண்கள் வந்து பெண் பார்த்து சென்றுவிட்டார்கள். மாப்பிள்ளை வீட்டார்
பெண்ணை நிராகரிப்புச் செய்வதாக கூறும் காரணங்கள் என்ன என்பதை,
'42
என்பது தற்போதைய வரிசை எண். எத்தனை எத்தனை காரணங்கள் நிராகரிப்புக்கு?
ஐந்து பவுன் பேரத்தில் தட்டியது, மாற்றல் கிடையாது என வழுகிறது.
நிறக்குறைவு என நிராகரிப்பானது, மூங்கில் கழிபோல் என்றும், முன்பல்
தூக்கல் என்றும், வக்கை நாடி என்றும், ஏறுநெற்றி என்றும், கொக்குக்
கழுத்து என்றும், கூனல் முதுகு என்றும், மூலநட்சத்திரம் என்றும், என்ன,
'உம்' கொட்டுகிறீர்கள்? நாற்பத்து இரண்டையும் சொல்லவியலும்?' (நாஞ்சில்
நாடன், நீலவேணி டீச்சர், பக்.74)
என்ற சிறுகதை வரிகளின் வாயிலாக பெண்ணின் திருமணத்தடைக்கான காரணங்களை
அறியமுடிகின்றது. சமுதாயத்தில் பெண்ணின் திருமணத்தடைகளுக்கு பல்வேறு
காரணங்கள் இருந்தாலும் வரதட்சணை என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது
என்பதையும் சமுதாயத்தில் பெண்களுக்கு நடைபெறுகின்ற அவலங்களை படம்
பிடித்துக் காட்டியுள்ளார் நாஞ்சில் நாடன் என்பதை அறியமுடிகின்றது.
டெக்டாஸில் இருந்து வந்தனர் நீலவேணியின் அண்ணன் குடும்பத்தினர்.
அப்பொழுது நீலவேணியும் அவளது அண்ணியும் உரையாடும்போது நீங்க ஒத்தைக்கு
ஒரு மகதானே! உங்கள் தந்தையை உங்க கூடக் கூட்டீட்டுப் போங்க என்றாள்.
நானா அழைத்துப் போக மாட்டேங்கறே எனது தந்தை வரமாட்டேன் என்கிறார் என்று
கூறுகிறாள். அதனால் என்ன ரெண்டாந்தாரமா யாரையும் பார்த்து திருமணம்
செய்து வைக்கலாமே எத்தனை காலத்துக்கு தனியாளா உங்கப்பா இருப்பார் என்று
நீலவேணியும் கேட்கிறாள் அப்பொழுது அவளது அண்ணியும் நீலவேணியும் பேசும்
உரையாடல், இடம்பெறுவதை பின்வரும் சிறுகதை வரிகள்,
'அதைத்தான் சொல்ல வந்தேன். மதினி தப்பாட்டு
எடுத்துக்கிட மாட்டேன்னா, ஒரு காரியம் கேக்கட்டா' என்ன?
'அப்பாவுக்கும் விருப்பம் இருக்கு... உங்களுக்கும் சம்மதம்னா சிம்பிளா
முடிச்சிரலாம்...'
நீலவேணிக்குச் சிரிப்பு வந்தது கூடவே, கண்கள் சிவந்து பொங்கின.
'என்ன ஒன்றுமே சொல்ல மாட்டங்கியோ?'
'அண்ணனுக்குத் தெரியுமா?'
'பேசீட்டேன்'...
'அவனுக்குச் சம்மதாமா' எனக் கேட்க குரல் கம்மியது மதினி விரல்கள், சீவி
முடித்துக் கூந்தலைப் பின்னல் போடுவதில் இருந்தன. சற்றுப் பொறுத்துச்
சொன்னாள்.
'அவங்க சம்மதம் இல்லாட்டா கேப்பனா?
காலமெனும் கொதிக்கும் எண்ணெய் உருளியில்
முறுகிச் சிவக்கின்றன உறவுகள்.
'மழையில் நனைந்த மத்தளம் கொட்ட, கீறி
உடைந்த வரிசங்கம் நின்றூத, அண்ணன்
மாமனார் வந்து கைத்தலம் பற்றக் கனாக்
காணும் நேரம்தான்.'
43... நல்ல வரிசை எண்ணா?
(நாஞ்சில் நாடன், நீலவேணி டீச்சர், பக்.79)
என்ற சிறுகதை வரிகளின் வாயிலாக நல்ல வரண் கிடைப்பான் என்று காத்திருந்த
நீலவேணிக்கு, அண்ணனின் மாமனார் வரணாக அமைவதற்கு நீலவேணியின் அண்ணனும்
சம்மதம் தெரிவித்துள்ள அவலநிலையினை படம் பிடித்துக் காட்டியுள்ளார்
நாஞ்சில் நாடன் என்பதை அறியமுடிகின்றது. நீலவேணிக்கும் அவனது
அண்ணிக்கும் 4
வயது வித்தியாசம்தான். தனது மகள் வயதில் உள்ள ஒரு பெண்ணை திருமணத்தடை
காரணமாக திருமணம் செய்து கொள்கின்ற பொருந்தாமணங்கள் சமுதாயத்தில்
இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை அறியமுடிகின்றது அண்ணனின்
கடமை தன் தங்கைக் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துது தரவேண்டும் என்பதாகும்.
ஆனால் இப்புதின கதாபாத்திரம் நீலவேணியின் அண்ணன் தன் கடமை உணராத
கதாபாத்திரம் என்பதை அறியமுடிகின்றது. நீலவேணியின் அண்ணனைப் போன்று
இச்சமுதாயத்தில் நிறைய அண்ணன்கள் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை
இச்சிறுகதை வரிகள் நமக்கு உணர்த்துகின்றது.
தொகுப்புரை:
நீலவேணி டீச்சர் என்ற சிறுகதையின் வாயிலாக குடும்ப உறவுகளின் மனநிலையை
படம்பிடித்துக் காட்டியுள்ளார் நாஞ்சில் நாடன் என்பதை அறியமுடிகின்றது.
இச்சிறுகதையின் வாயிலாக நீலவேணியின் அண்ணனின் சுயநலப்போக்கினை
அறியமுடிகின்றது. தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தராவிட்டாலும்
பரவாயில்லை, பெற்றெழுத்த தாய் தந்தையரைப் பேணிக்காக்க மறந்த தனயனாக
நீலவேணியின் அண்ணன் மட்டுமல்ல இக்கதாபாத்திரத்தின் வாயிலாக சமுதாயத்தில்
எத்தனையோ மகன்கள் தன் கடமையை மறந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்
என்ற நிதர்சனமான உண்மையை சிறுகதை ஆசிரியர் மெய்ப்பித்துக்
காட்டியுள்ளார் என்பதை அறியமுடிகின்றது. திருமண வயதை கடந்த பெண்களின்
மனஉணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுகின்ற அவலங்களையும் நீலவேணி என்ற
கதாபாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளதை
அறியமுடிகின்றது.
முனைவர் சு.அட்சயா
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி
கோவை.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|