இறந்தும் இன்றளவும் இறவாது வாழும் எம்.ஜி.ஆர்.

பேராசிரியர் இரா.மோகன்



“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?”


                                  (திரையிசைப் பாடல்கள், இரண்டாவது தொகுதி, ப.
8)

என்னும் கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகளுக்கு ஓர் உயிருள்ள உதாரணமாக விளங்கி வருபவர் எம்.ஜி.ஆர். அவர் மண்ணுலகில் வாழ்ந்தது எழுபது ஆண்டுகளே (
1917-1987); மறைந்து முப்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும், இன்றளவும் ஏழை எளிய மக்களால் உள்ளன்போடு நினைக்கப் பெற்று வரும் ஓர் உயிர்ப்புள்ள ஆளுமையாளர் எம்.ஜி.ஆர். ஆவார். அவரது நூற்றாண்டு விழா தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவின் பிற மாநிலங்-களிலும், உலக நாடுகள் பலவற்றிலும் சிறப்பாகக் கொண்டாடப் பெற்று வருவதும் இவ்வுண்மையை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும்.

‘புரட்சித் தலைவர்’, ‘பொன்மனச் செம்மல்’, ‘மக்கள் திலகம்’, ‘இதய தெய்வம்’ என்றெல்லாம் போற்றப்படும் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் இருந்து இன்றைய இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய இன்றியமையாத பாடங்கள் பல உண்டு. இலங்கையில் உள்ள கண்டி நகரில்
17.01.1917-இல் பிறந்த எம்.ஜி.ஆர்., இரண்டரை ஆண்டுகளுக்குள் தமது தந்தையார் கோபால மேனனை இழந்தார்; மூன்றாம் வகுப்பு வரையே அவரால் படிக்க முடிந்தது; இளமையில் கொடிய வறுமையில் வாடினார். பின்னாளில் 1968-ஆம் ஆண்டில் ‘பொம்மை’ இதழுக்காக ஜெயலலிதா அம்மையார், எம்.ஜி.ஆரைப் பேட்டி கண்டபோது, ‘நடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?’ என்று கேட்டதற்கு ‘வறுமை’ என ஒற்றைச் சொல்லில் பதில் கூறினார் எம்.ஜி.ஆர். (தொகுப்பு: எஸ்.கிருபாகரன், எம்.ஜி.ஆர். பேட்டிகள், ப.11).

திரை உலகில் எம்.ஜி.ஆர் ஒரு நாயகனாக உயர்வதற்கு
12 ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது. அவர் சிறுவேடத்தில் முதன்முதலில் நடித்த படம் ‘சதி லீலாவதி’; இப்படம் 1936-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அவர் நாயகனாக முதன்முதலில் நடித்த படம் ‘ராஜகுமாரி’; இப் படம் 1947-ஆம் ஆண்டில் வெளிவந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் சோர்ந்து விடாமல் – முடங்கிப் போகாமல் – எம்.ஜி.ஆர். தமது தகுதிகளை வளர்த்துக் கொண்டார்; தமக்கான நேரம் வரும் வரை பொறுமையாகக் காத்திருந்தார். திரையுலக வாழ்வின் போது அவர் இரு பெரும் சோதனைகளை எதிர்கொள்ள நேரிட்டது; ஒருமுறை அவரது கால் முறிந்தது; இன்னொரு முறை அவர் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளானார். ஆனால் எந்தத் துன்பமும் அவருக்குத் துன்பம் செய்யவில்லை; மாறாக, அவர் தான் துன்பத்திற்குத் துன்பம் தந்தார்.

“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்”
(
623)

என்னும் வள்ளுவர் வாய்மொழி, எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரையில் வாழ்வியல் உண்மை ஆயிற்று. ‘சதி லீலாவதி’யில் தொடங்கிய அவரது கலைப் பயணம் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டிய’னில் நிறைவு பெற்றது; ஏறத்தாழ
43 ஆண்டுக் காலத் திரையுலகப் பயணத்தில் எம்.ஜி.ஆர். 136 படங்களில் நடித்து முடித்தார்; நடுவண் அரசின் பாரத ரத்தினம் (பாரத ரத்னா), தாமரைத் திரு (பத்மஸ்ரீ) உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்து சிறப்புச் சேர்த்தன.

கணக்குக் கேட்டதற்காக தி.மு.க. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மயக்கமோ கலக்கமோ மனத்திலே குழப்பமோ கொள்ளாமல் எம்.ஜி.ஆர். எடுத்த உறுதியான, துணிச்சல் மிக்க நிலைப்பாடு, மேலாண்மை இயலில் பேசப்படும் ‘முடிவு எடுத்தல்’
(Decision Making) என்னும் நோக்கில் மிகவும் முக்கியமானது. ‘ஒருவர் வாழ்வில் தம்மை எதிர்கொள்ளும் தடைக் கற்களைத் தடந்தோளின் துணைகொண்டு படிக்கற்கள் ஆக்கி முன்னேற வேண்டும்’ என்பதை நெருக்கடியான இக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் செயல்பட்டு மெய்ப்பித்தார்.

திரையுலகில் தடம் பதித்தது போலவே, அரசியல் உலகிலும் எம்.ஜி.ஆர். பத்து ஆண்டுகள் (
1977-1987) முதலமைச்சராக வீற்றிருந்து சாதனை படைத்தார். பெருந்தலைவர் காமராசர் முன்னெடுத்த இலவச மதிய உணவுத் திட்டத்தினை அவர் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தி, பல்வேறு இடையூறுகளை வெற்றி கொண்டு அதனைத் திறம்பட நடைமுறைப்படுத்தி உலக நாடுகளின் ஒட்டு-மொத்தப் பாராட்டினைப் பெற்றார்; தமிழ்ப் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்-கழகம் ஆகிய பல்வேறு பல்கலைக்கழகங்களைத் தோற்றுவித்து உயர்கல்வி வளர்ச்சிக்கு உற்றுழி உதவினார்; தமிழறிஞர்களின் குழந்தைகள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பினை முதன்முதலாக உருவாக்கித் தந்தார்; இதழியல் துறையில் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்த்திருத்த முறை பின்பற்றப்படுவதற்கு வழிகோலினார்; அரசு சார்பில் அமைந்த உணவு-விடுதிகளுக்கு ‘ஓட்டல் தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டினார். இங்ஙனம் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்து தொண்டாற்றி தமிழக மக்களின் உள்ளங்களில் நிலைத்த இடத்தினைப் பெற்றார் எம்.ஜி.ஆர்.

எதையும் உடன்பாடாகச் சிந்திப்பதும், எப்போதும் உயர்வாக எண்ணுவதும் எம்.ஜி.ஆரின் ஆளுமையில் குடிகொண்டிருந்த இரு தனிப்பெரும் பண்புகள் ஆகும். திரைப்பாடல் ஆயினும், வசனம் ஆயினும், திரைப்படத்தின் தலைப்பு ஆயினும் எம்.ஜி.ஆர். என்றால், அவை அனைத்தும் எப்போதும் உடன்பாடாகவே இருக்கும். ‘நாளை நமதே – இந்த நாளும் நமதே!’, ‘எங்கே போய்விடும் காலம் – அது என்னையும் வாழ வைக்கும்!’, ‘தர்மம் தலைகாக்கும் – செய்த தர்மம் தலைகாக்கும்!’ என்றாற் போல் எம்.ஜி.ஆரின் பாடல்கள் கேட்பவர் நெஞ்சங்களில் நம்பிக்கை நாற்றுகளை ஊன்றுவதாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் வெற்றிப் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘வெற்றி, வெற்றி’ என்று அவர் மகிழ்ச்சி பெங்கச் சிரித்துக் கொண்டே முழங்குவதாகத் தொடங்கும். ‘நல்லதுக்குக் காலம் இல்லை’ என்று வைத்திருந்த திரைப்படத் தலைப்பை எம்.ஜி.ஆரே ‘நல்லவன் வாழ்வான்!’ என்று மாற்றியதாகத் கூறுவர்; இதே போல, ‘நீதிக்குத் தலைவணங்கு!’ என்ற தலைப்பும் நீண்ட சிந்தனைக்குப் பிறகு எம்.ஜி.ஆரால் வைக்கப் பெற்றதே என்பர். ஒரு திருடனாக நடித்தாலும் எம்.ஜி.ஆரின் திரைப்படத்திற்குப் ‘பாசம்’ என்றே பெயர் வைக்கப் பெற்றிருக்கும்.

இன்று உலக அளவில் கல்வி இயலார் வலியுறுத்தி வரும் ‘விழுமியக் கல்வி’
(Value Education) நோக்கிலும் எம்.ஜி.ஆரின் வாழ்வும் வாக்கும் அலசி ஆராயத்தக்கவை ஆகும். தாய், தந்தையரைப் போற்றுவது, சத்தியத்தைப் பின்பற்றுவது, சமத்துவத்தைக் காப்பது, தமிழின் உயர்வினைப் பறைசாற்றுவது, விருந்து பேணுவது, மனித நேயத்தோடு வாழ்வது, முற்போக்காகச் சிந்திப்பது, சாதிமத வேறுபாடுகளுக்குச் சாவுமணி அடிப்பது, குழந்தைகளைக் கொண்டாடுவது, பெண்மையைப் போற்றுவது முதலான உயரிய விழுமியங்-களுக்கு எம்.ஜி.ஆர். தம் வாழ்விலும் வாக்கிலும் இறுதி மூச்சு வரை முதன்மை தந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ‘ரத்தத்தின் ரத்தமே!’ என்ற அவரது விளி இவ் வகையில் சிறப்பாக அமைந்த ஒன்றாகும். தாம் உயிர் பிழைத்ததற்குச் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் இரத்தத்தைத் தானமாகத் தந்ததே காரணம் என்பதை நினைவுகூரும் விதத்தில் அவர் இங்ஙனம் மக்களை விளிப்பதை வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டிருந்தார்.

முத்தாய்ப்பாக, ‘இளைஞர் சமுதாயத்திற்குத் தாங்கள் கூறும் அறிவுரை என்ன?’ என்று ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது, எம்.ஜி.ஆர். அந்தக் கேள்விக்குத் தந்த பதில் இது தான்:

  • 1. உடலைப் பேணிக் காப்பது; தேகப் பயிற்சி செய்வது; உண்மைக்கு மட்டும் மதிப்பளிப்பது; உள்ளத் தூய்மையைத் பெறுவது; எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும் உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது; பொருளாதாரக் கலையைக் கற்பது; தற்காப்புக்கு ஏற்ற ஒரு கலையைக் கற்பது.
     

  • 2. மாணவர்களாக இருந்தால் படிப்பு முடிந்து வெளிவரும் வரை அரசியலில் நேரடித் தொடர்பு கொள்ளாமல் இருப்பது; சாதி மதப் பிரிவுகளைக் களையும் மனப்பக்குவம் பெறுவது.
     

  • 3. நீந்தக் கற்றுக் கொள்வது போன்றவற்றைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்பதே இளைஞர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.”
    (தொகுப்பு: எஸ். கிருபாகரன், எம்.ஜி.ஆர். பேட்டிகள், ப.
    214)

    “ அவனை (எம்.ஜி.ஆரை),
    அந்தகன் வெல்லவில்லை;
    அவன்தான்
    அந்தகனை வென்றான்;
    ஆதலால்தான் –
    அவன் –
    இறந்தும் – இன்றளவும்
    இறவாது நின்றான்!” (இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள், ப.
    196)
    என்னும் ‘காவியக் கவிஞர்’ வாலியின் அமுத மொழிகளோடு இக் கட்டுரை நிறைவு பெறுவது சாலவும் பொருத்தமாக இருக்கும்.


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.

 

 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்