மொழிபெயர்ப்பு – சில அடிப்படைக் குறிப்புக்கள்

முனைவர் ஆ.மணி

உரைக்களம்

மொழிபெயர்ப்பு பற்றிய சில அடிப்படைக் குறிப்புக்களை முன்மொழிவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும். மொழிபெயர்க்கும் முறைகளைப் பற்றியோ, மொழிபெயர்ப்பின் நுட்பங்களைப் பற்றியோ விளக்கும் நோக்கம் இவ்வுரைக்கு இல்லை. மாறாக ஒரு செவ்வையான மொழிபெயர்ப்புக்கு நாம் மனங் கொள்ள வேண்டிய சில அடிப்படைக் குறிப்புக்களை இவ்வுரை உரைக்க முற்படுகின்றது. ஒரு வகையில் சொன்னால், இவ்வகைச் சிந்தனைகள் தமிழில் இதுகாறும் அதிகம் சிந்திக்கப்படாதவை என்றே சொல்லலாம். தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்வோருக்குச் சில வழிகாட்டல்களை உரைப்பதும் இவ்வுரையின் நோக்கமாகும். செவ்வியல் நூல்களின் மொழிபெயர்ப்பை உளங்கொண்டு இவ்வுரை அமைந்தாலும், குறுந்தொகையில் சிறப்புக் கவனம் செலுத்த முற்படுகின்றது. சான்றுக் கருத்துக்கள் பான்மையும் குறுந்தொகையிலிருந்தே அமைக்கப்பட்டுள்ளன. இம்முயற்சிக்குக் குறுந்தொகைப் பதிப்புக்களும் பிற செவ்வியல் நூல்களும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. இனி, மொழிபெயர்ப்பு பற்றிய சில அறிமுகச் செய்திகளைக் காணலாம்.

தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்புச் சிந்தனைகள்

தமிழின் தொன்மை சான்ற நூலாகிய தொல்காப்பியத்திலேயே மொழிபெயர்ப்புப் பற்றிய கருத்துருக்கள் இடம்பெற்றுள்ளன என்பதிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பின் வரலாற்றை உணரலாம். மரபுநிலை திரியா நூல்கள் முதல் நூல், வழி நூல் என இரு வகைப்படும் என மொழிந்த தொல்காப்பியர் (தொல். மரபி. தமிழ. 2008, 1593) வழி நூல் நான்கு வகைப்படும் என்கின்றார். அவையாவன : தொகை நூல், விரி நூல், தொகை விரி நூல், மொழிபெயர்ப்பு நூல். நூற்பாக்கள் வருமாறு:

”வழியின் நெறியே நால்வகைத் தாகும்” (தொல். மரபி. தமிழ. 2008, 1596),

”தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே”
(தொல்.மரபி.தமிழ.2008, 1597)

மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்பதற்கு இளம்பூரணர் (வ.உ. சிதம்பரம் பிள்ளை 1935: 481*), ” வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும்” எனச் சுருக்கமாக எழுதிச் செல்கின்றார்.

பேராசிரியர் (எஸ். கனக சபாபதி பிள்ளை 1935: 1357) இவ்வகையில் கூடுதல் விளக்கங்களைத் தந்துள்ளார். அவர்தம் கருத்தை அறிவது பயனுடையது. ”மொழிபெயர்த்தலென்பது, பிற பாடையிற் செய்யப்பட்ட பொருளினைத் தமிழ் நூலாகச் செய்வதுவுந் தமிழ்நூலுள் வழிநூற்கு மரபாமென்றவாறு. அதர்ப்பட வென்பது நெறிப்பட வென்றவாறு. நெறிப்படுதலென்பது அவ்வாறு மெழிபெயர்த்துச் செய்யுங்கால் அது கிடந்தவாற்றானே செய்யப்படும். தொகுத்தும் விரித்துந் தொகைவிரியாகவுஞ் செய்ததனாற் பயமில்லை, தமிழர்க்கும் ஆரியர்க்குமென்பது. மொழிபெயர்த்தெனவே பொருள் பிறழாமை பெற்றாம். வழக்கு நூலுள்ளும் மொழிபெயர்த்து யாக்கப்படுவன உளவோவெனின், - அற்றன்று; அது வேண்டுமே? வேதப்பொருண்மையும் ஆகமப் பொருண்மையும் நியாயநூற் பொருண்மையும் பற்றித் தமிழ்ப்படுக்குங்கால் அவற்றிற்கும் இதுவே இலக்கணமென்றற்கு மொழிபெயர்த்தலையும் இவற்றுக்கட் கூறினானென்பது”.

தமிழண்ணல்(2008: 548) ”மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் – மொழிபெயர்ப்பு எனத் தோன்றாதவாறு மூல நூல் போலவே தோற்றுமாறு அதனொடு பொருந்த யாப்பது” எனப் பொருளுரைப்பார்.

தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்துக்களைத் தொகுத்து நோக்கும்பொழுது பின்வரும் கருத்துக்கள் தெளிவாகின்றன. இளம்பூரணர் பிற மொழியிலிருந்து அதுவும் வட மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதை மட்டும் மொழிபெயர்ப்பெனக் கருதியுள்ளார் என்பதை மேற்கண்ட அவர்தம் உரையின்மூலம் அறிய முடிகின்றது. பேராசிரியரும் வடமொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படுகின்ற மொழிபெயர்ப்புக்களையே குறித்துள்ளார் என்பதைத் ’தமிழர்க்கும் ஆரியர்க்கும் பயனில்லை’ என்பதால் அறியலாம். தமிழில் இருந்து வடமொழிக்குச் செய்யப்படுகின்ற மொழிபெயர்ப்புக்களையோ, வடமொழி நீங்கலான பிறமொழிகளுக்குச் செய்யப்படுகின்ற மொழிபெயர்ப்புக்களையோ, வடமொழி நீங்கலான பிற மொழிகளில் இருந்துத் தமிழுக்குச் செய்யப்படுகின்ற மொழிபெயர்ப்புக்களையோ தொல்காப்பிய உரையாசிரியர்கள் இவ்விடத்தில் கருதிப் பார்க்கவில்லை. ஒருக்கால், தமிழில் செய்யப்படும் வழிநூல்களுக்கான இலக்கணமே தொல்காப்பியரால் உரைக்கப்படுவதால் உரையாசிரியர்கள் அவற்றை இவ்விடங்களில் எடுத்துரைக்காமல் சென்றுள்ளனர் எனக் கருதலாம்.

மொழிபெயர்ப்பு குறித்துப் பேராசிரியர் தந்துள்ள பின்வரும் குறிப்புக்கள் இக்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பயன் தருவன எனலாம். மொழிபெயர்ப்புச் செய்யும் போது அம்மொழிபெயர்ப்பு மூலநூலில் உள்ளவாறே அமைய வேண்டும். மூலத்தைத் தொகுத்தோ, விரித்தோ, தொகைவிரியாகவோ மொழிபெயர்க்கக்கூடாது. அவ்வாறு செய்வது பயனற்றது. மொழிபெயர்ப்பு என்றே தொல்காப்பியர் ஆளுவதால், மூலநூற் பொருளில் இருந்து பிறழாமல் செய்யவேண்டும். வேதம் நியாய நூல் ஆகியவை பேராசிரியர் காலத்திலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை அவர்தம் உரைப்பகுதி நமக்கு உணர்த்துகின்றது. மொழிபெயர்ப்பு எனத் தோன்றாதவாறு மொழிபெயர்த்தல் என்ற தமிழண்ணலின் கருத்தும் ஓராற்றான் பொருத்தமுடையதே என்பதை இக்கால மொழிபெயர்ப்புக்கள் சிலவற்றைக் காணும்போது உணரமுடிகின்றது. இனி, மொழிபெயர்ப்புக்கு அணியமாகும் ஒரு மொழிபெயர்ப்பாளர் மேற்கொள்ளவேண்டிய அடிப்படைப் பணிகளை அறியலாம்.

மொழிபெயர்ப்புக்கு முன்நிலைகள்

ஒரு நூலை மொழிபெயர்க்கப் புகும்முன் மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றிய விழிப்புணர்வு தமிழ்ச் சூழலில் போதுமான அளவில் உள்ளதென்று சொல்லிவிட இயலாது. சான்றாக, குறுந்தொகையை மொழிபெயர்க்க முனையும் ஒருவர் தாம் அத்தொகையின் பதிப்புக்களைப் பற்றிய விரிவான கருத்துக்களை அறிந்தவராகவும், அந்நூலின் பதிப்புக்களில் செவ்வையான பதிப்பு எதுவென்றும் தெரிந்தவராகவும் இருக்க வேண்டிய இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் பான்மையான மொழிபெயர்ப்பாளர்கள் தம் கையில் கிடைத்த அல்லது அறிந்துள்ள ஒரு பதிப்பையே நம்பி மொழிபெயர்க்க முற்படுகின்ற நிலையே நிலவுவதாகத் தெரிகின்றது (விதிவிலக்குகள் இருக்கலாம்). பழந்தமிழ் நூல்களைப் பொருத்தவரையில் அவற்றின் முதற்பதிப்புக்கள் மிகச் செவ்வையாக அமைந்துள்ளன என்று கூறிவிட இயலாது. உ.வே. சாமிநாதையரின் பழந்தமிழ்ப் பதிப்புக்களில்கூட முதற்பதிப்பைக் காட்டிலும் இரண்டாம் / மூன்றாம் பதிப்புக்களே திருத்தங்கள் பல பெற்றுச் செம்மை பெற்றுள்ள உண்மையைப் பதிப்பு வரலாறுகளை நுணுகிக் கற்போர் அறிவர். குறுந்தொகையின் முதற்பதிப்பாகிய தி.சௌ.அரங்கனார் பதிப்பு பல நிலைகளில் சிறப்புக்களைக் கொண்டிருப்பினும், மூலபாட நிலையில் முற்றும் திருத்தமுற அமைந்துள்ளது எனக் கூறிவிட இயலாது. இவ்வுண்மை முன்னரே வையாபுரிப் பிள்ளையாலும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுந். 85ஆம் பாடல் வாயிலாக வந்த பாணற்குத் தோழி, வாயில் மறுத்தது என்னும் கூற்றில் அமைந்த வடம வண்ணக்கன் தாமோதரன் பாடிய பாடலாகும். அப்பாடலின் முதலடி,

”யாரினு மினியன் போன பின்னே” (தி.சௌ.அ. 1915, குறுந். 85)

எனத் தி.சௌ. அரங்கனாரால் எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தலைவியைப் பிரிந்து அவளுக்கும் எனக்கும் துன்பம் தந்த தலைவன், பாணன் வாய்ச்சொற்களில் மட்டும் தான் எல்லோரையும்விட இனியவனாக இருக்கின்றான் எனக் கூறித் தோழி வாயில் மறுக்கின்ற தன்மையில் அமைந்த அப்பாடலடி மூலபாடத்தைப் பிரித்துப் படிப்பதில் நேர்ந்த குறைபாட்டால், தலைவியைப் பிரிந்த பின்னரே அவன் எல்லோரையும் விட பேரன்புடையவனாக இருக்கின்றான் எனப் பொருள் கொள்ளுமாறு தி.சௌ. அரங்கனாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை மொழிபெயர்த்தால் அது குறுந்தொகைப் பாடலின் மொழிபெயர்ப்பாகுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு பழந்தமிழ்ப் பாடல்களைப் பிரித்துப் படிப்பதில் முற்காலப் பதிப்பாசிரியர்கள் பலவாறாக இடர்ப்பட்டுள்ளனர் என்பதைச் சி.வை. தாமோதரம் பிள்ளையின் பின்வரும் கருத்துரை உணர்த்தக் காணலாம்.

"சம்பளத்திற்காக ஏடெழுதுவோரது சாதாரண கல்வித் திறமையையும், எழுத எழுத வழுக்கள் அதிகப்படும் விதத்தையும், பழைய காலத்து ஏட்டுச் சுவடிகள் அடைந்திருக்கும் ஈனஸ்திதியையும், பாடங் கேட்டோர் இல்லாத தன்மையையும் நோக்கில்" (சி.வை.தா. 1885 : 6*) என்றும், "விடியல வெஙகதிரகாயும வெயமல கலறை" என்னும் வாக்கியத்தையும் ஓர் பரிபாடற் செய்யுளையுஞ் சரியாய்ப் பிரித்துணர்தற்கு எத்தனை புலவரிடங் கொண்டு திரிந்தேன்? எத்தனை வித்துவான்களுக்குக் கடிதமெழுதிக் கை சலித்தேன்? எனக்கு வந்த மறுமொழிகளை வெளியிட்டுச் சொன்னால் மிகவும் வெட்கக்கேடென்றறிக" (சி.வை.தா. 1885: 8*) என்றும், "சரகத்தை சாகமென்றும், அளபை அன்பென்றும், இதரவிதரத்தை இதாவிதா வென்றும், திகந்தராளத்தைத் திகந்தாரளமென்றும், மென்மையை மேன்மையென்றும், தபுதார நிலையைத் தபுதரா நிலையென்றும், மூதலவன் என்பதை முதல்வனென்றும் இன்னும் பலவாறாக மயங்கினோர் பெயர் பெற்ற வித்துவான்களே யாதலின்" (சி.வை.தா. 1885: 8*) என்றும், "ஏடு கையிற் பிடித்தவுடன் அதன் எழுத்துத் தேகவியோகமான தந்தை கையெழுத்துப் போற் தோன்றிற்றென்று கண்ணீர் பெருக அழுத கதையுமுண்டென்றோ?" (சி.வை.தா. 1885 : 8*) என்றும், "காலாந்தரத்தில் நூல்களுந் செய்யுட்களும் அடைந்திருக்கும் மாறுபாடு இவ்வளவிற்றெனற்பால தன்று" (சி.வை.தா. 1885 : 8*) என்றும், "அடித்தொகை சீர்த்தொகைகள் மாறுபட்டுப் பாவே வேறுபட்டுப் போயினவும் அனேகம் உள" (சி.வை.தா. 1885 : 9*) என்றும், "இவற்றுள் அனேகம் இக்காலத்து இல்லாத நூற்களில் உள்ளனவாயின் யாதுதான் செய்தற்பாலது? " (சி.வை.தா. 1885: 10*) என்றும் வரும் சி.வை.தா.வின் கூற்றுக்கள் சுவடிகளின் நிலையையும், அக்காலத்திலிருந்த தமிழ்ப்புலவர்களின் கல்வித் திறத்தையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றன. தி.சௌ. அரங்கனாரும் இவ்வகையில் சிக்கலுக்கு ஆட்பட்டவரே என்பதை உணரமுடிகின்றது. எனினும், மூலபாட நோக்கில் அவர்தம் பதிப்பு திருத்தம் பெறவேண்டிய ஒன்றே என்பதையும் அறியமுடிகின்றது. உ.வே. சாமிநாதையரின் பதிப்பில் குறுந். 85ஆம் பாடலின் முதலடி ” யாரினு மினியன் பேரன் பினனே” எனத் திருத்தம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகைப் பதிப்புக்களில் செவ்வையான பதிப்பு எனக் கருதப்பெறும் உ.வே. சாமிநாதையரின் பதிப்பும் மூலபாட நிலையில் திருத்தம் பெறவேண்டிய ஒன்றே என்ற உண்மையும் இவண் அறியப்பட வேண்டிய செய்தியாகும். அதனையும் அறிவோம்.

கபிலரால் பாடப்பட்ட குறுந்தொகையின் 13ஆம் பாடல் தலைவன் தோழியிற் கூட்டங்கூடி ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய, வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது என்னும் கூற்றில் அமைந்ததாகும்.

‘மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருதலைச் சேக்கு நாட
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே’
(உ.வே.சா. 2009, குறுந்.13)

இப்பாடலுக்கு உ.வே.சா. தந்துள்ள பதவுரை (மூலபாடம் நீங்கலான பகுதி) வருமாறு: ’ மேலே உள்ள புழுதி முற்ற நீங்கும்படி பாகனால் கழுவப்பட்ட யானையைப்போல பெரிய மழையை ஏற்றுத் தூய்மையுற்ற பெரிய சருச்சரையை உடைய துறுகல்லானது பசுமையை உடைய ஓரிடத்தில் தங்குகின்ற மலைநாட்டை உடைய தலைவன் காமநோயைத் தந்தான் அதனால் முன்பு குவளை மலரைப் போன்று இருந்த என்னுடைய அழகிய கண்கள் இப்பொழுது பசலை நிறம் நிரம்பப் பெற்றன” (உ.வே.சா. 2009: 33).

குறுந். 13ஆம் பாடலையும் உ.வே.சா.வின் பதவுரையையும் இணைத்து நோக்கும்பொழுது சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைக் காண்போம்.

  • 1. துறுகல், யானையைப் போல இருந்தது எனக் கபிலர் கூறவேண்டிய தேவை என்ன?. அவ்வாறு கூறியதால் பாடல் பெற்றுள்ள சிறப்புப்பொருள் என்ன?.
     

  • 2. துறுகல், யானைபோல இருந்தது என்ற உவமை இப்பாடலில் இடம்பெறாவிட்டால் பாடலுக்கு நேரும் இடையூறு என்ன?. பாடலில் அவ்வுவமையின் இடம் என்ன?.
     

  • 3. பசுமையுடைய ஓரிடத்தில் தங்கியது எது? துறுகல்லா? துறுகல் இடம்பெயரும் தன்மையுடையது அல்ல. எனவே, பசுமையுடைய அவ்விடத்தில் தங்கியது இடம்பெயரும் தன்மையுள்ள ஓர் உயிரினம் ஆதல் வேண்டும். அவ்வாறாயின் அவ்வுயிர் எது?.
     

  • 4. தலைவன் எனக் கொள்ளலாம் எனில், அவன் காமநோய் தந்தவனே அல்லாது, தங்கியவன் அல்லன். மேலும், சேக்கும் என்பது அஃறிணைக்குரிய வினை ஈறேயன்றி, உயர்திணை ஈறு அன்று. எனவே, அவ்விடத்தில் தங்கியது வேறொரு உயிரினம் ஆதல் வேண்டும். அது எது?.
     

  • 5. உ.வே.சா.வின் உரையிலும் பிற உரைகளிலும் ஆண்டுத் தங்கிய உயிரினம் எதுவென்ற குறிப்பு இடம்பெறாதது ஏன்?.

இவ்வினாக்களுக்கு உரிய விடை குறுந்தொகைக்கு எழுந்துள்ள எந்தவொரு உரையிலும் இல்லை. உரையாசிரியர்கள், ஆய்வாளர்கள் யாரும் இதுபற்றிச் சிந்தித்துள்ளதாகத் தெரியவில்லை. இக்கட்டுரையாளர் எழுதிய ஒருதலையா? ஒருகலையா? (காவ்யா தமிழ் – கலை, இலக்கியம், பண்பாட்டுக்கான காலாண்டிதழ், 2014 அக்டோபர் – டிசம்பர், பக். 105 – 109) என்னும் கட்டுரையே இவ்வகையில் எழுந்த முதற்கட்டுரை என்பது இவண் அறியத்தக்கது. அக்கட்டுரையின் ஒரு பகுதியை இவண் தருவது மேற்கண்ட வினாக்களுக்கு விடை கிடைக்க உதவும் ஆதலின், அதனை ஈண்டுத் தருவோம்.

குறுந்தொகையின் 13ஆம் பாடலுக்குக் கொள்ளப்பட்டுள்ள ஒருதலை, ஒருதலைச், ஒருகலை, ஒருகலைச் ஆகிய பாடங்கள் இதுகாறும் குறுந்தொகைக்கு உரையெழுதியுள்ளோராலும் பதிப்பித்தோராலும் முன்மொழியப்பட்டுள்ளன. அவை பொருத்தமுடைய பாடங்களாகத் தோன்றவில்லை என்பதை இதுகாறும் கண்ட விளக்கங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே பாடலின் பொருளை முழுமையாக உணர்த்துகின்ற புதிய பாடத்தைத் தேடலாம். அதற்கு முதற்படியாக முந்தைய பதிப்பாசிரியர்கள் (சுவடிகளைக் கண்டு அவற்றை மூலமாகக் கொண்டு குறுந்தொகையைப் பதிப்பித்தவர்கள்) தொகுத்துத் தந்துள்ள பாடவேறுபாடுகளைக் காணலாம்.
ஒருதலை என்ற பாடத்திற்கு ’ஒருகலை’ என்பதைச் சோ. அருணாசல தேசிகர் (1933 : 5) பாடவேறுபாடகக் காட்டியுள்ளார். உ.வே. சாமிநாதையர் (1983 : 36) ’ஒருத்தலைச், ஒருதலை’ ஆகியவற்றையும், இரா. இராகவையங்கார் (1996 : 49) ’ஒருகலை, ஒருதலை, ஒருத்தலைச்’ ஆகியவற்றையும், ஈவா வில்டன் (2010: 104) ‘ ஒருதலை, ஒருதலைச், ஒருத்தலைச், ஒருகலை, ஒருகலைச்’ ஆகியவற்றையும் பாடவேறுபாடுகளாகக் காட்டியுள்ளனர். உ.வே.சா. வெளியிட்ட குறுந்தொகை முதற்பதிப்பில் (1937:117) ’ஒருத்தலைச் சேக்கும்’ என்ற பாடமொன்றைச் சுட்டியுள்ளார். 1983 ஆம் ஆண்டுப் பதிப்பில் ’சேக்கும்’ என்ற பாடவேறுபாடு விடப்பட்டுள்ளது. இவற்றுள் பொருத்தமுடையதாகத் தோன்றும் ‘ஒருத்தலைச்’ என்ற பாடத்தின் பொருத்தத்தினை அறிவோம்.

புதிய பாடமும் சங்கப் பாடல் மரபும்

மிகுதியான மழை பெய்ததால் கரிய சருச்சரை உடைய துறுகல் அழுக்கறக் கழுவப்பட்ட யானை போலத் தோன்றுவதால் (துணையைப் பெறாமையால்) வருத்தமுடைய ஆண்யானை (துறுகல்லின் அருகில் வந்து) தங்குகின்ற குறிஞ்சி நாட்டுத் தலைவன் எனக்கு நோய் தந்தான். எனவே குவளை போன்ற கண்களில் பசலை படர்ந்தது என்ற கருத்துடையது கபிலரின் பாடல். துறுகல்லையும் அவன் நாட்டு ஆண் யானை தன் துணையெனக் கருதும் இயல்புடையதாகவும் தலைவனோ என்னைப் பிரிந்து நோயைத் தருதல் தகுதியாகுமோ? என்பது தலைவியின் கருத்து. ஒருத்தல் என்பது ஆண் யானையைக் குறிக்கும். இதனை,

‘ஏறு மேற்றையு மொருத்தலுங் களிறுஞ்
சேவுஞ் சேவலு மிரலையுங் கலையு
மோத்தையுந் தகரு முதளு மப்பரும்
போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும்
யாத்த வாண்பாற் பெயரென மொழிப’.
(தொல்.மரபி. 557)

‘புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய காரமோ டொருத்த லொன்றும்’
(தொல்.மரபி. 590)

’வார்கோட் டியானையும் பன்றியு மன்ன’
(தொல்.மரபி. 591)

எனவரும் தொல்காப்பிய நூற்பாக்களும், ‘ஓமை குத்திய வுயர்கோட் டொருத்தல்’ (குறுந்.396:4) எனவரும் குறுந்தொகைப் பாடலடியும் உணர்த்துகின்றன. குறுந்.13ஆம் பாடலடியை ஒருத்தலைச் என்றே பாடங் கொள்ளுவதற்குப் பின்வரும் சங்கப்பாடல்கள் சான்றுகளாக அமைவதைக் காண்க.

துறுகல்லைத் தன் துணையெனக் கருதி ஆண்யானை அதனைத் தழுவுதலைப் ‘புகர்முக வேழம், இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூஉநின், குன்றுகெழு நன்னாட்டு’ எனத் தாம் பாடிய ஐங்குறுநூற்றின் 239ஆம் பாடலில் கபிலரே விளக்கமுற எடுத்தாண்டுள்ளதைக் காணும்போது குறுந்.13ஆம் பாடலிலும் ஒருத்தலைச் எனப் பாடங்கொள்வதே பொருத்தமுடையதாகும் எனக் கூறத் தோன்றுகின்றது.

நக்கீரரும் தம்முடைய அகநானூற்றுப் பாடலில், ‘குறுங்கா லிற்றிப் புன்றலை நெடுவீ, ழிரும்பிணர்த் துறுகற் றீண்டி வளிபொரப், பெருங்கை யானை நிவப்பிற் றூங்கும்’ (அகநா.57) என மேற்கண்ட கருத்தினை ஓராற்றான் ஆண்டுள்ளார். துறுகல் யானைபோலத் தோன்றும் என்ற கருத்து,

‘யானை …. தூறிவர் துறுகற் போலப் போர் வேட்டு
வேறுபல் பூளையொ டுழிஞை சூடி’
(பட்டினப்.231-235)

‘காழ் மண்டெஃகங் களிற்றுமுகம் பாய்ந்தென, ……,
துறுகல் சுற்றிய சோலைவாழை’
(மலைப்.129-131)

‘களிறு மலைத் தன்ன கண்கூடு துறுகல்’ (மலைப்.384)

‘கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்’
(குறுந்.111:4-5)

‘பொருத யானைப் புகர்முகங் கடுப்ப
மன்றத் துறுகன் மீமிசைப் பலவுடன்
ஒண்செங் காந்த ளவிழு நாடன்’
(குறுந்.284:1-3)

ஆகிய சங்கப் பாடல்களில் ஆளுமை பெற்றுள்ளது. எனவே கபிலரின் குறுந்.13ஆம் பாடலின் மூன்றாம் அடியைப் ‘பைத லொருத்தலைச் சேக்கும் நாட’ எனப் பாடங்கொள்வதே ஏற்புடையதாகத் தோன்றுகின்றது.

இதுகாறும் கண்ட கருத்துக்களால், பாடலின் மூலபாடம் குறுந்தொகைப் பதிப்பாசிரியர்களால் இதுகாறும் முறையாக அறியப்படாமையால் சங்கப் புலவர்களில் மிகுதியான பாடல்களைப் பாடிய கபிலரின் பாடலே இன்னும் சரியாகப் பொருளுணரப்படாமல் இருக்கின்றது எனில், பிற பாடல்களின் நிலை என்ன? என நினைக்கும்போது இரக்கம்தான் மிகுகின்றது.

மூல நூலே இன்னும் சரியாக உணரப்படாமல் இருக்கும்போது, இவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்ப்புக்களைச் செய்தளிப்பது எவ்வகையில் நியாயம்? எனக் கேட்கத் தோன்றுகின்றது. மொழிபெயர்ப்புக்கள் செவ்வையாக அமைய வேண்டுமாயின் மூல நூல் பிழைகளிலாமல் அமைய வேண்டும். எனவே, செவ்வியல் நூல்களை மூலபாடத் திறனாய்வுமுறையில் அணுகிச் செம்மையான பாடங்களை முடிவு செய்தளிப்பது செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் கடமையாகும். செல்வாக்குடையவர்களையும் / தெரிந்தவர்களையும் கொண்டு மூலபாட ஆய்வுகளை மேற்கொள்ளாது, தகுதியுடையோரைக் கொண்டு முறையான ஆய்வுகளை மேற்கொண்டுச் செவ்வியல் நூல்களின் மூலபாடத்தைச் சீரமைத்துச் செவ்விய பதிப்புக்களை வெளியிட்டு, அதன் அடிப்படையிலான மொழிபெயர்ப்புக்களை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையாகும். செவ்விய பதிப்புக்கள் உடன் கிடைக்கவில்லையாயின், மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட பதிப்பு இதுவெனக் குறிக்கும் பண்புடையவராக மொழிபெயர்ப்பாளர் இருத்தல் வேண்டும். அவ்வாறு குறிப்பது தமிழுக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் நன்மை பயக்கும் செயலாகும்.

முடிப்புரை:

செவ்வியல் நூல்கள் இன்னும் செவ்வையான மூலபாடப் பதிப்புக்களைப் பெற்றுள்ளதாகத் தோன்றவில்லை. மேலும், பாடல்களின் பொருளும் பொருத்தமுற உரையாசிரியர்களால் விளக்கப்பட்டுள்ளதாகவும் தோன்றவில்லை (விரிவுக்கு: ஆ. மணி 2013: 257 – 262, 2011 : 39 – 47). இவற்றின் அடிப்படையிலான மொழிபெயர்ப்புக்கள் எவ்வகையில் தமிழின் சிறப்புக்களைப் பிற மொழியினருக்கு உணர்த்தும் என்பது சிந்திக்க வேண்டிய வினாவாகும். அதற்கான முதல் வித்தினை இடுவது இவ்வுரையின் நோக்கமும் பயனும் ஆகும்.

துணைநூல்கள்

  • 1. அரங்கன். தி.சௌ. (உரை ஆ.& பதி.ஆ.). 1915. குறுந்தொகை மூலமும் புத்துரையும். வேலூர் : வித்யரத்னாகர அச்சுக்கூடம்.

  • 2. அருணாசல தேசிகர். சோ. (பதி.ஆ.). 1933. குறுந்தொகை மூலம். சென்னை : பி.என். அச்சகம்.

  • 3. அறவேந்தன். இரா. 2010. குறுந்தொகை-பதிப்பு வரலாறு (1915-2010). சென்னை : காவ்யா.

  • 4. ஆசிரியர் குழு (பதி.ஆ.). 1957. குறுந்தொகை. சென்னை : எஸ். இராசம்.

  • 5. ஆசிரியர் குழு (பதி.ஆ.). 1981 (இரண்டாம் பதிப்பு). அகநானூறு. சென்னை : நியு செஞ்சுரி புக் அவுசு.

  • 6. இராகவையங்கார். இரா. (உரை ஆ.). 1996. குறுந்தொகை விளக்கம். அண்ணாமலை நகர் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

  • 7. இராசாராம். துரை. (உரை ஆ.). 2008 (இரண்டாம் பதிப்பு). குறுந்தொகை தெளிவுரை. சென்னை : திருமகள் நிலையம்.

  • 8. இராமரத்தினம். (உரை ஆ.). 2002. குறுந்தொகை மூலமும் உரையும். சென்னை : கங்கை புத்தக நிலையம்.

  • 9. கனக சபாபதி பிள்ளை. எசு.(பதி.ஆ.). 1935. தொல்காப்பியப் பொருளதிகார இரண்டாம் பாகம் (பேராசிரியம்). சென்னை: சாது அச்சுக்கூடம்.

  • 10. சக்திதாசன் சுப்பிரமணியன் (உரை ஆ.). 2008. குறுந்தொகை மூலமும் விளக்கவுரையும். சென்னை : முல்லை பதிப்பகம்.

  • 11. சண்முகம்பிள்ளை. மு. (உரை ஆ.). 1994 (மறுஅச்சு). குறுந்தொகை மூலமும் உரையும். தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழகம்.

  • 12. சரவணமுத்து. இரா. (உரை ஆ.). 2006. குறுந்தொகை நறுமணம் – மூலமும் உரைவீச்சும். சென்னை: சாரதா பதிப்பகம்.

  • 13. சாமிநாதையர். உ.வே. (உரை ஆ.). 1983. குறுந்தொகை. அண்ணாமலை நகர் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

  • 14. சாமிநாதையர். உ.வே. (பதி.ஆ.). 1974 (ஏழாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும். சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.

  • 15. சாமிநாதையர். உ.வே.(உரை ஆ.). 1937. குறுந்தொகை. சென்னை: கேசரி அச்சுக்கூடம்.

  • 16. சிதம்பரனார். சாமி. (உரை ஆ.). 1983. குறுந்தொகைப் பெருஞ்செல்வம். சென்னை : இலக்கிய நிலையம்.

  • 17. சிவசுப்பிரமணியன். வே. (பதி.ஆ.). 1990 அகநானூறு – களிற்றியானை நிரை மூலமும் உரையும். சென்னை : உ.வே.சா. நூல் நிலையம்.

  • 18. சுந்தரமூர்த்தி. கு. (பதி.ஆ.). 1985. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-பேராசிரியர் உரை. அண்ணாமலை நகர் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

  • 19. சுப்பிரமணியன். ச.வே. (பதி.ஆ.). 2008. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் – மூலம் முழுவதும். சென்னை : மணிவாசகர் பதிப்பகம்.

  • 20. சோமசுந்தரனார். பொ.வே. (உரை ஆ.). 1961. ஐங்குறுநூறு. சென்னை : கழகம்.

  • 21. சோமசுந்தரனார். பொ.வே. (உரை ஆ.). 1965 (மறு அச்சு). குறுந்தொகை. சென்னை : கழகம்.

  • 22. தண்டபாணி. துரை (உரை ஆ.). 2001. குறுந்தொகை தெளிவுரை. சென்னை : உமா பதிப்பகம்.

  • 23. தமிழண்ணல்(உரை ஆ.). 2002. குறுந்தொகை. கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.

  • 24. திருவேந்தி (உரை ஆ.). 2009. குறுந்தொகை – கவிதை அறிமுகம். சென்னை : சந்தியா பதிப்பகம்.

  • 25. நாகராசன். வி. (உரை ஆ.). 2004. குறுந்தொகை – தொகுதி 1. சென்னை : நியு செஞ்சுரி புக் அவுசு.

  • 26. பசுபதி. ம.வே. (பதி.ஆ.). 2010. செம்மொழித் தமிழ் – இலக்கண இலக்கியங்கள். தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழகம்.

  • 27. பழனியப்பன். வெ. 1990. தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள். அண்ணாமலை நகர் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

  • 28. பாலகிருட்டிண முதலியார். இர. (மொ.பெ.ஆ.). 2009. குறுந்தொகை. திருச்சிராப்பள்ளி : பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

  • 29. பாலசுப்பிரமணியம். கு.மா. (உரை ஆ.). 2007. குறுந்தொகை – தமிழ்க்காதல். சென்னை : பாரதி புத்தகாலயம்.

  • 30. பிரேமா. இரா. (உரை ஆ.). 1999. குறுந்தொகை மூலமும் உரையும். சென்னை : வர்த்தமானன் பதிப்பகம்.

  • 31. புலியூர்க்கேசிகன் (உரை ஆ.). 1978 (மூன்றாம் பதிப்பு). குறுந்தொகை தெளிவுரை. சென்னை : பாரி நிலையம்.

  • 32. மணி. ஆ. (க.ஆ.). 2013. வைரம் – ஆர் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு, சென்னை: ஆர் அனைந்திந்திய ஆராய்ச்சிக் கழகம்.

  • 33. மணி. ஆ. 2011. குறுந்தொகை உரைநெறிகள். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.
    34. மணி.ஆ. (க.ஆ.). 2011. புதிய பனுவல் பன்னாட்டு ஆய்விதழ், சென்னை: இரா. சீனிவாசன்.

  • 35. மனோன்மணி சண்முகதாசு. 2000. குறுந்தொகை – ஒரு நுண்ணாய்வு. சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

  • 36. வையாபுரிப் பிள்ளை.ச. (பதி.ஆ.). 1967(இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியம்(பாட்டும் தொகையும்) தொகுதி - 1. சென்னை: பாரி நிலையம்.

  • 37. ilakkiyam.com Accessed on 14.11.12.

  • 38. library.senthamil.org Accessed on 14.11.12.

  • 39. maduraiproject.org. Accessed on 14.11.12.

  • 40. Wilden, Eva. (Ed.). 2010. A Critical Edition and an Annotated Translation of the Kuruntokai (vol.I). Pondicherry: Ecole Francaise D’Extreme-Orient.



    மொழிபெயர்ப்பு – சில அடிப்படைக் குறிப்புக்கள்
    முனைவர் ஆ.மணி,
    துணைப்பேராசிரியர் - தமிழ்,
    இணைத்தேர்வாணையர்,
    பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
    புதுச்சேரி – 605 003

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்