காலத்துக்கேற்ற கோலம் கொள் தமிழ்

கலாநிதி பால.சிவகடாட்சம்

“வான் குருவி கட்டும் கூடும், பூச்சிகள் ஆக்கும் அரக்கும், பட்டுப் புழுக்கள் தோற்றுவிக்கும் நூலும், புழுக்கூடும், தேனீக்கள் கட்டும் தேன் கூடும் வேறு எவராலும் செய்யமுடியுமா? ஓவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை உண்டு என்று உணர்பவர்கள் எதனையும் தாம் மட்டுமே செய்யமுடியும் என்று வல்லமை பேசமாட்டார்கள்” என்னும் பொருள் தரும் ஒரு பாடல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில் உண்டு.

வான் குரீஇக் கூடு அரக்கு வால் உலண்டு நூல் புழுக்கோல்
தேன் புரிந்தது யார்க்கும் செயல் ஆகா - தாம் புரீஇ
வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோ ஒருவர்க்கு
ஒல்காது ஓரொன்று படும்.


                                                        - சிறுபஞ்ச மூலம் 25

இதே கருத்தைத் தரும் பாடல் ஒன்றைப் பிற்கால ஔவையார் தாம் வாழ்ந்த காலத்துத் தமிழில் பாடிவைத்தார்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது.

                                                          - ஔவையார்

“வான் குருவியின் கூடு, கடினமான அரக்கு, கறையான்புற்று, தேன்கூடு, சிலந்திவலை இவற்றைச் செய்ய வேறு எவராலும் முடியாது. நாம் எல்லாவற்றிலும் வல்லவர்கள் என்று வீரம் பேசவேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒன்று எளிதாக இருக்கும்.” இது ஔவையின் பாடல் தரும் செய்தி.

சிறுபஞ்சமூலத்தில் சொல்லப்பட்டதையும் அதை இலகுபடுத்தி ஔவை சொன்னதையும் இன்று எல்லோரும் விளங்கிக்கொள்ளும்படி வேண்டுமானால் இப்படி சொல்லமுடியும்.

தூக்கணாங் குருவிக்கூடு மரத்தில் தொங்கும்போது பார்த்திருப்பீர்கள். மரக்கொம்பில் அரக்குப் பூச்சிகள் கொம்பரக்கு என்னும் மெழுகு செய்து வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். காட்டு வெளியில் கறையான் எடுத்த பழைய புற்று எழுந்து நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள் கட்டிவைத்த அறுகோண அறைகள் கொண்ட தேன் மெழுகுக் கூட்டைப் பார்த்திருப்பீர்கள். சிலந்தி பின்னிய சிக்கலான வலையையும் பார்த்திருப்பீர்கள். இவற்றுள் ஒன்றைக்கூட யாராகினும் ஒருவர் செய்துகாட்ட முடியுமா? எதையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவன் நான் என்று எடுத்ததற்கெல்லாம் வீரம் பேசாதீர்கள். ஓவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும்.





Could anyone build a nest like the one built by the weaver bird? Could anyone make silk akin to that made by silkworm? Could anyone erect a structure like that of a termite mount? Who else could construct a honey comb other than the honey bees? Who could create something like the lac produced by lac insect on tree branches? Could anyone think of making a web like the one designed and built by a spider? Never extol yourself saying you are the one who could do any job. Everyone is capable of doing something which others may find difficult.

Translation of a poem written in old Tamil by Kariyaasaan in sixth century and later adapted by Auvaiyaar.

 


கலாநிதி பால.சிவகடாட்சம்

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்