'தூரத்து உறவு' என்ற சிறுகதையின் வாயிலாக வைரமுத்து
வெளிப்படுத்தும் சமூகச் சிந்தனைகள்

பேராசிரியர் சு.அட்சயா


முன்னுரை

கதைசொல்லல் என்பது உலகின் எல்லா இனக்குழுக்களுக்குமான பொதுப்பண்புதான். ஆனால் படைப்பாளுமையால் கட்டமைக்கப்பட்ட சிறுகதை என்பது அமெரிக்கா, ஐரோப்பிய மேதைகளால் உலகமொழிகளுக்குப் பரவிய ஒரு கலைவடிவம். அதுமொழிவழி வந்த பெருங்கலையின் அடிப்படையாகப் பிறந்த ஒரு நுண்கலை. சிறுகதை என்பது நவீன இலக்கியவடிவம் எட்கர் ஆலன்போ தொடங்கி ஆற்றல்மிக்க மேதைகளால் உருவம் தந்து செழுமைப்படுத்தப்பட்டது. இன்று சிறுகதை என்பது எல்லா கோட்பாடுகளின் கோடுகளையும் திமிறிக் கிழித்து வெளியேறியுள்ளது என்ற போதிலும் எட்கர் ஆலன்போ வகுத்த சிறுகதை இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகள் முற்றிலும் அழிந்தொழியவில்லை என்று சிறுகதை ஆசிரியர் வைரமுத்து முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். மாறாத சத்தியத்தின் நித்தியத்தையும், மனித வாழ்வின் சிறுமைகளைக் கடந்து பெருமைகளின் பெருமை காண்பதையும் உள்ளோசையாகக் கொண்டிருக்கின்றது இவரது படைப்பு. கவிதைகளிலும், பாடல்களிலும், புதினங்களிலும் கடைந்து கிடந்த இவர் சிறுகதை என்ற வடிவத்தை கையில் எடுத்துள்ளார்.

ஒரு சிறுகதைக்கு உருவம் உடல்போன்றது எனில் அதன் உள்ளடக்கம் உயிராகிறது. உருவத்தைக் கொடுப்பது படைப்பாளியின் திறம். உள்ளடக்கம் என்பதெல்லாம் சமூகம் கொடுத்த வரம். வ.வே.சு அய்யரும், கு.ப.ராவும், பி.எஸ்.ராமையாவும், புதுமைப்பித்தனும், மௌனியும், விந்தனும், ஆர்.சூடாமணியும். கு.அழகிரிசாமியும், கி.ராஜநாராயணனும், தி.ஜானகிராமனும், ஜெயகாந்தனும் படைத்தற்குமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று மலைத்து நின்ற எனக்குக் கையைப்பிடித்து அழைத்துக் கருப்பொருள் தந்தது என்காலம் என்று சிறுகதை ஆசிரியர் வைரமுத்து முன்னுரையில் கூறுகிறார். இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இவருடைய 'தூரத்து உறவு' என்ற சிறுகதையின் வாயிலாக வெளிப்படும் சமூக சிந்தனைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கவிஞர் கண்ணதாசன் கூறும் தாய்மையின் சிறப்புகள்

தாய் என்பவள் ஒவ்வொருவரையும் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்து வைப்பவள். தன் மக்களைச் சமூகத்தோடு இணைத்து வைக்கும் செயலைச் செய்பவள். தந்தை, உறவினர், சுற்றுப்புறம் ஆகிய அனைத்தையும் அறிய வைப்பவள். இமையைப் போல் தன் மக்களைக் காத்து நின்று நல்ல சமுதாயத்தை உருவாக்கும் முதல் காரணி இத்தாயே ஆவாள். உலகில் சிறந்தது தாய்மை, அது தூய்மை, அது நேர்மை அது வாய்மை அதன் பேர்தான் தாய்மை என்கிறார் கவிஞர். 'இருக்கும் பிடிசோறும் தனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோயில் அது' என்ற தாய்மையை இறைவன் வாழும் ஆலயமாக கண்ணதாசன் கூறுகிறார்.

தாய், தந்தையைப் பேணுதல்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைப்படி நாம் வழிபடவேண்டும் என்பர். நாம் வாழும்போது முதலில் தாயையும், தந்தையையும் மதித்து நடக்கவேண்டும் அப்பொழுதுதான் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் என்பது ஒளவையார் ஆத்திச்சூடியில்,

'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்ற தாய், தந்தை இருவரையும் தெய்வம் என்றே கூறுகின்றனர். அவ்வகையில் இயேசுகாவியமும் தாயையும், தந்தையையும், போற்றவேண்டும் என்று முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதை இறைவன் கூறுவதை பின்வரும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

'தாயை போற்று தந்தையைக் போற்று
தத்துவம் மறந்தால் செத்தொழி நீயென
உங்கள் முன்னோர்க் குணர்த்தினார் இறைவன்
அப்படி இருக்க அறிவில்லாமல்
மடிப்பணம் கொடுத்து மாதா பிதாவைத்
துரத்தும் நீங்களா சொல்வது இதனை?'


என்ற காவிய வரிகளின் வாயிலாக நாம் பெற்றோர்களை நம்மிடையே வைத்து மதித்து, பாதுகாக்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

தான் தனது என்ற சுயநலம் பெருகிவிட்ட உலகில் பெற்றோரைப் பேணவேண்டும். உற்றாருக்கு உதவிடவேண்டும் என்ற எண்ணம் மறைந்து கொண்டேவருகிறது. பத்துமாதம் சுமந்து பெற்றுப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த அன்னையையும் அறிவூட்டிய தந்தையையும் முதியோர் காப்பகத்திலோ அல்லது தெருக்களிலோ அல்லாட விட்டுவிட்டுத் தான்மட்டும் தன் மனைவி மக்களுடன் சுகமாக வாழவேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைய சமுதாயத்திடம் மேலோங்கி நிற்கிறது.

இத்தகைய நிலைக்கு வைரமுத்துவின் தூரத்து உறவு என்ற சிறுகதையின் கதாபாத்திரமான சிவராமன் உதாரணமாகத் திகழ்கிறான். அமெரிக்காவில் வசிக்கின்ற சிவராமன் தன் தந்தையின் சாவுக்கு வருகின்றான். தன் தந்தையின் இறுதிச்சடங்கினை முடித்த கையுடன் மூன்றுமாதம் தங்கி இருந்து தனது தாயார் வாழ்ந்து வருகின்ற வீட்டை விற்று பணம் பெறுகின்ற பிள்ளையின் மனதினை 'தூரத்து உறவு' என்ற சிறுகதை நமக்கு உணர்த்துகின்றது. தாய் அந்த வீட்டில் வசித்தால் அந்த வீடு வேண்டும். தாயார் அந்த வீட்டில் வசிக்காவிட்டால் வீடே தேவையில்லை என்று தாயாரை முதியோர் இல்லத்தில் விடுகின்ற நிலையினை இக்கதை உணர்த்துகின்றது.

தாயென்பவள் உயிருக்கும் மேலானவள். அப்படி எனக்கு இவ்வுலகை காட்டிய தாய்க்கு இன்று பிள்ளைகள் பாசம் காட்டாத நிலையினையையும், பெற்றத் தாயை பேணிக்காக்காத பிள்ளை தன் தாயை முதியோர் இல்லத்தில் விடுகின்ற நிலையினையும் பின்வரும் சிறுகதை வரிகள் நன்கு மெய்ப்பித்துக்காட்டுவதை,

'கவலையே படாதீங்க, இனி உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் இவங்க அம்மாதான்'. என்றார். பழத்தோட்டத்தின் காப்பாளார். அந்த விடுதிக்குள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருக்கும் பெருசுகளைப் பார்த்தால் சென்னையில் கையாலாகாத மகன்களின் கணக்கு வழக்குத் தெரிந்தது.

மாதம் பன்னிரண்டாயிரம் என்ற கணக்கில் ஐந்து மாதம் அச்சாமாக அறுபதாயிரம் கொடுத்தான். 'மருத்துவச் செலவு தனி' ஒரு துணை பட்ஜெட் போட்டக் காப்பாளர்.
மகன் கைகளைப் பிடித்துக் கொண்டு அடிக்கடி பேசப்பா சிவராமா என்று தாடைப் பிடித்துக் கெஞ்சினாள். வாசலில் நின்று தூணைப்பிடித்தபடி அம்மா. ஆகட்டும் என்று சொல்லி வைத்தான் மகன் தூணைப்பிடித்தபடி மகன்போன வாடகைக் காரையே பார்த்து நின்றாள். திருப்பத்தில் அவன் கண்ணாடி இறக்கிக் கைகாட்டுவான் என்பது அவளது 'பெத்த' நம்பிக்கை. அதனாலாயே தன் ஒரு கையை உயர்த்தியபடி நின்றாள். கார் தான் மறைந்தது – கண்ணாடி இறங்கவில்லை. உயர்த்திய கரம் கீழே விழுந்தது' (வைரமுத்து, தூரத்து உறவு, பக்கம் 23)


என்ற சிறுகதை வரிகளின் வாயிலாக பெற்றோர்களைத் தன்னுடன் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற நிலை மறந்த பாசமற்ற பிள்ளைகளின் மனப்போக்கினை ஆசிரியர் வைரமுத்து படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

தாயின் காலடி தான் சொர்க்கம் என்பதை மறந்து தாயின் சொத்தை விற்ற மகனின் இரக்கமற்ற செயலினை இச்சிறுகதை வரிகள் உணர்த்துகின்றன.

'ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே'


என்ற பொன்முடியாரின் பாடல் தாயின் சிறப்பையும், தந்தையின் கடமையையும் எடுத்துரைக்கின்றது. ஒரு பிள்ளையை பெற்றெடுத்து வளர்ப்பது தாயின் கடமையாகும். அவ்வாறாக தாய் தன் பிள்ளையை சீரோடும் சிறப்பாகவும் பேணி வளர்க்கிறாள்.

தந்தை அவனை சான்றோன் ஆக்குகிறாள். பெற்றோர்களின் கடமை இங்கு சரிவர செய்யப்படுகின்றது. ஆனால் பிள்ளைகள் தன் கடமைகளைச் செய்யத் தவறியவர்களாக உள்ளனர். பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்பதை அறியமுடிகின்றது. இச்சிறுகதையின் கதாபாத்திரமான சிவராமனைப் போல் எண்ணற்ற சிவராமன்கள் நம் சமுதாயத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியமுடிகின்றது.

பிள்ளைகளின் கடமை பெற்றோர்களை பாதுகாத்தல் என்பதாகும். ஆனால் தற்கால சமூகத்தில் பிள்ளைகள் தன்னுடைய தாய் தந்தையரை பேணிக்காக்காமல் முதியோர் இல்லங்களில் விடுகின்ற இரக்கமற்ற மனிதர்களும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இச்சிறுகதையின் வாயிலாக அறியமுடிகின்றது. மனம் படைத்தவனே மனிதன் என்ற நிலைமாறி மனிதநேயமற்ற மனிதர்களின் சிந்தனைகளை சிறுகதையாசிரியர் வைரமுத்து பதிவு செய்துள்ளதை அறியமுடிகின்றது. மாறி வருகின்ற நாகரிக உலகத்திலே தாய் தந்தையரைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கின்ற பிள்ளைகளின் போக்கினை இன்று ஏராளமாக பார்க்கின்றோம்.

தாயைச் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை


என்பதை ஒவ்வொரு பிள்ளையும் உணரவேண்டும்;. அவ்வாறு உணர்ந்தால் நாட்டில் முதியோர் இல்லங்களே முளைக்காமல் போகும் என்ற நிலையினை பிள்ளைகள் நினைத்தால் பெற்றோர்களை பேணி வளர்ப்பாளர்கள் என்பதை அறியமுடிகின்றது.

தந்தையின் இறுதிச் சடங்கு முடித்தகையுடன் தாய் வாழ்ந்த வீட்டை விற்று பணத்தை பெற்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறான் சிவராமன். தன் தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு பணத்தையும் கட்டிவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டான் சிவராமன். நியூயார்க்கின் ஜே.எஃப்.கே ஏர்போர்டடுக்கு வரவேற்க வருகிறாள் அவன் மனைவி கௌசல்யா. எப்படியிருக்கே? குழந்தை எப்படியிருக்கு' என்றான். 'ஓ.கே - ஃபைன்' என்றாள். 'பணம் பத்திரமா?' 'ஷியூர்' என்றாள். ஏன் ஒருமாதிரியிருக்க என்று கேட்கிறான் சிவராமன். 'மூணுமாச லீவுல உங்க சர்வீஸ் கட்டாயிருக்கும் பிரமோஷன் பாதிக்குமா?
கவலைப்படாதே ஓவர்டைம் பண்ணி ஈடுகட்டிடுவேன்'.

'சரி நான் கேட்டது வாங்கிட்டு வந்திருக்கீங்களா'? என்றாள் கௌசல்யா. 'ஐயோ...ஜார்ஜி டவுன் சந்துக்குள் இருக்கு நீ சொன்ன ஸ்வீட் கடை நானே நடந்து போயி வாங்கிட்டு வந்திருக்கேன். கணவனுக்கு உணவு பரிமாறினாள் கௌசல்யா அப்போது எங்க நான் வாங்கி வந்த ஸ்வீட்? அதையும் எடுத்து வை' என்று கணவன் கூறுகிறான். ஸாரி, துக்க வீடடுக்காரங்க ஸ்வீட் சாப்பிடக்கூடாது என்கிறாள். அப்பா செத்துதான் மூணுமாசமாச்சே, இப்ப சாப்பிட்டா என்ன தப்பு என்று சிவராமன் கேட்கிறான். வேணாம் ஒங்க அம்மா செத்து இன்னும் மூணுமணிநேரம் கூட ஆகவில்லை என்ற செய்தியை கௌசல்யா சிவராமனிடம் கூறும் உரையாடல் பின்வருமாறு.

'ஏய் அப்பா செத்துதான் மூணுமாசமாச்சே. இப்ப சாப்பிட்டா என்ன தப்பு?'
'வேணாம். ஓங்க அம்மா செத்து இன்னும் மூணு மணி நேரம் கூட ஆகல?'
'ஏய்! என்ன சொல்ற...?'
அவன் உதறி எழுந்தான்.
'நீங்க அட்லாண்டிக் கடல்ல பறந்துக்கிட்டிருக்கும் போதே செய்தி வந்தது. வந்தவுடன் ஒங்க 'மூட் அவுட்' பண்ணக்கூடாதுன்னுதான் சொல்லாம இருந்தேன். அவன் அப்படியே தலையில் கைவைத்துத் தரையில் சரிந்து சுவரில் சாய்ந்தான். இதான் ...இதுக்குத்தான் நான் சொல்லல. 'ஓ'ன்னு கத்துவீங்க. உணர்ச்சிவசப்படுவீங்க. 'ஜெட்லாக்' தீவுல அதுக்குள் ஓடிப்போயி இந்தியாவுக்கு டிக்கெட் போடுவீங்க. இன்னொரு செலவு - இன்னொரு பயணம் - இன்னொரு களைப்பு தேவையா? நீங்க போறதுனால ஒங்கம்மா பொழைச்சுக்குவாங்களா? நீங்க போகலைன்னா ஒங்கம்மாவ எரிக்காமலோ, புதைக்காமலோ வச்சுக்குவாக்களா? ஒங்கம்மா என்ன லெனின் உடலா? தைலத்துல போட்டு வைக்கிறதுக்கு? மாமியாங்கிற முறையில் எனக்கும் வருத்தம்தான். அமெரிக்க வருத்தம்- இந்திய வருத்தம்ன்னு தனித்தனியா இருக்கா என்ன? எங்க பட்டாலும் வருத்தம்தான். எழுந்திருங்க ஷிவ். இறுதிச்சடங்க இங்கிருந்தே எப்படிப் பண்ணலாம்னு யோசிக்கலாம். 'பிராக்டிகலா இருங்க 'எமோஷன'ப் பாக்காதீங்க: ப்ரமோஷனப் பாருங்க' (வைரமுத்து தூரத்து உறவு. பக்கம் 24-25)


என்ற சிறுகதை வரிகளின் வாயிலாக பாசத்தை மறந்த கதாபாத்திரங்களின் மன உணர்வினை அறிய முடிகின்றது. தன் கணவனின் தாய் இறந்துவிட்ட செய்தியைக் காட்டிலும் கணவனின் ப்ரமோஷன் தான் பெரியது என்று நினைக்கின்ற பேராசை பிடித்த மருமகளின் மன உணர்வினை அறியமுடிகின்றது. மனைவி சொல்லே மந்திரம் என்று நினைக்கின்ற சிவராமனின் மனநிலையை அறியமுடிகின்றது. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள். ஆனால் தாயைக் காத்த தனயனாக இல்லாமல் தாயைத் தவிக்கவிட்ட தனயனையும் தாய்க்கு இறுதிசடங்கு செய்யாத தனயனையும் இச்சிறுகதை வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்பார்கள். இப்பழமொழிக்கேற்ப பணம்தான் பெரிது என்று கௌசல்யா நினைக்கிறாள். தன் கணவனின் தாயாரின் குணத்தைப் பற்றி புரியாத இரக்கமற்ற மனம் படைத்தவள் கௌசல்யா என்பதை அறியமுடிகின்றது.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஆயம் நாமறிந்த முதல் தெய்வம் அவர்களே தாயைப் பணிந்தவன் கோவிலுக்குப் போகவேண்டாம். உன் தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது என்கிறார் நபிகள் நாயகம். பெற்றோரை மதித்துப் பேணுதல் என்பது இன்றளவும் பெரியோரால் போற்றப்படும் நற்குணம் ஆனால் இன்று எத்தனை வீடுகளில் தகுந்த கவனிப்போடு மரியாதையோடு பெற்றோர்கள் நடத்தப்படுகிறார்கள்? அயல்நாட்டு மோகத்துக்கு ஆளாகி மேலைநாட்டுப் பாணியில் வாழ விரும்பும் நம்நாட்டு மக்கள் முதியோர் இல்லத்தையும் உருவாக்கிவிட்டார்கள். பெற்றோரின் சொத்தைப் பெற்றுக் கொள்ளும் பிள்ளை பெற்றோரை வைத்துப்பேண வேண்டாமா? ஆயிரம் உறவுகளை விலைக்கு வாங்கலாம். அவை வந்து போகலாம் ஆனால் அன்னையும் பிதாவும் மறுபடியும் வரமுடியாது. இக்கூற்றிற்கேற்ப பெற்ற தாயினை முதியோர் இல்லத்தில் விட்ட பிள்ளை, பெற்ற தாயின் சொத்துக்களைப் பெற்றப் பிள்ளை பெற்றத்தாயின் இறுதிச்சடங்கிற்கு வராமல் ஸ்கைப்பில் தன் தாயின் இறுதிச்சடங்கை பார்த்துக் கொண்டிருப்பதை பின்வரும் சிறுகதை வரிகள் மெய்ப்பித்துக்காட்டுவதை,

'எழுந்திருங்க ஷிவ். இறுதிச்சடங்க இங்கிருந்தே எப்படிப் பண்ணலாம்ன்னு யோசிக்கலாம். பிராக்டிகலா இருங்க. 'எமோஷனாப் பாக்காதீங்களூ ப்ரமோஷனப் பாருங்க' கணவனை நிமிர்த்தி காஃபி சாப்பிட வைத்தாள் கௌ. துரிதமாக இயங்கினாள். பழத்தோட்டக் காப்பாளரைத் தொலைபேசியில் அழைத்தாள்.

அறுபதாயிரம் முன்பணத்தில் அம்மா தங்கியிருந்ததற்காகப் பத்தாயிரத்தைக் கழித்துக் கொள்ளுங்கள். மீதி ஐம்பதாயிரத்தில் இறுதிச் சடங்கைச் செய்து முடியுங்கள். அதற்குமேலும் செலவாகியிருந்தால் உங்கள் பணம் டாலரில் பணம் வந்து சேரும்'
மறுநாள் அதேநேரம் தோளோடு தோளுரசக் கணவனும் மனைவியும் கண்ணிமைக்காமல் கணிணித் திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெசன்ட்நகர் மயானத்துக்கும் மென்ஹாட்டனுக்குமான 13,462 கிலோ மீட்டர் தூரத்தில் 'ஸ்கைப்பில்' எரிந்து கொண்டிருந்தாள் அம்மா.
'ஆறிப்போயிடும் ; டீ சாப்பிடுங்க' என்றாள் கௌ தன் கோப்பையை உறிஞ்சிக்கொண்டே (வைரமுத்து, தூரத்து உறவு, பக்கம் 25).

என்ற சிறுகதை வரிகளின் வாயிலாக இன்றைய சமுதாயத்தின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியிருப்பதை அறியமுடிகின்றது. தாயின் இறுதிச்சடங்கை செய்து முடிக்காத பிள்ளைகளின் போக்கினை உணரமுடிகின்றது. இக்கதையின் கதாபாத்திரமான கௌசல்யாவின் இரக்கமற்ற மனதினை படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர் வைரமுத்து. பெற்றத்தாய்க்கு இறுதிக்கடன் செய்வதுதான் எந்த ஒரு பிள்ளைக்கும் கடமையாக இருக்கவேண்டும். தாய்க்கு கடமை செய்யத் தவறிய மகனின் மனஉணர்வினை உணரமுடிகின்றது. பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்கிற பழமொழியினை மெய்ப்பித்துக் காட்டியுள்ளார் இக்கதையில் கதாபாத்திரமான சிவராமன் என்பதை அறியமுடிகின்றது. கௌசல்யா கதாபாத்திரம் மாமியாருக்குச் செய்யவேண்டிய கடமைகளிலிருந்து விலகி நிற்பதை உணரமுடிகின்றது. பணம் பத்தும் செய்யும் என்ற கூற்றின் அடிப்படையில் பணத்தைத்தான் பெரிதாக நினைத்தாலே தவிர பாசத்தினை அவள் நினைக்கவில்லை. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழிக்கு ஏற்புடையவளாக கௌசல்யா செயல்பட்டிருக்கிறாள். சிவராமன் மட்டுமல்ல சிவராமனைப் போல் எண்ணற்ற சிவராமன்கள் தங்களுடைய சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசித்துக் கொண்டுள்ளனர். இவர்களும் தாய்க்கும் தந்தைக்கும் கடமை செய்யத் தவறியவர்களாவர்கள் வெளிநாட்டில் வசிப்பது தவறில்லை. ஆனால் எங்கு இருந்தாலும் தன் தாய் தந்தையரைப் பாதுகாக்க மறந்துவிடக்கூடாது என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். நாம் செய்கின்ற அதே தவறுகளைத்தான் நம் சந்ததிகளும் செய்வார்கள் என்பதை எண்ணத்தில் கொண்டு ஏற்றமிக்க சிந்தனைகளில் நாம் செயல்படவேண்டும் என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். இருக்கும் ஒருசோறும் தனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோயில்' என்ற தாய்மையின் சிறப்பினை பெற்றப்பிள்ளைகள் அனைவரும் உணரவேண்டும்.

தொகுப்புரை:

இக்கட்டுரையின் வாயிலாக தாய்மையின் சிறப்புகளை அறியமுடிகின்றது. தாய், தந்தையை தவிக்கவிட்டு விட்டு தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசிக்கின்ற பிள்ளைகளின் சுயநலப்போக்கினை அறியமுடிகின்றது. தான் வாழ்ந்த வீடே உலகம் என்று நினைத்த தாயினை முதியோர் இல்லத்தில் விட்டவுடன் அந்த தாயின் மனம் வேதனையில் வெந்து இவ்வுலகை விட்டு உயிர்நீத்த தாயின் மனநிலையை அறியமுடிகின்றது. எந்த ஒரு தாயும் தன் வாழ்நாளில் கடைசி காலத்தில் தன் பிள்ளைகளுடன் இருக்கவேண்டும் என்ற ஏக்க உணர்விற்கு ஏமாற்றம் தந்த சிவராமனின் இரக்கமற்ற செயலினை அறியமுடிகின்றது. சமுதாயத்தில் முதியோர்களை வீட்டின் அங்கத்தினராக நினைக்காமல் முதியோர் இல்லங்களில் விடுகின்ற அவலநிலை நாட்டில் பெருகிவருவதை அறியமுடிகின்றது.

காலங்காலமாக பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகளை பிள்ளைகள் செய்யாமல் பழத்தோட்டக் காப்பாளர் செய்கின்ற அவலநிலையினை அமெரிக்காவில் இருந்து கௌசல்யாவும், சிவராமனும் தன் தாய் ஸ்கைபில் எரிந்து கொண்டிருப்பதை பார்க்கின்ற இரக்கமற்ற மனிதர்களும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியமுடிகின்றது.

தாயைச் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை


என்பதை நினைவில் நிறுத்தினால் நம்நாட்டில் பெருகிவருகின்ற முதியோர் இல்லங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தப்படும் என்பதை இனிவருகின்ற தலைமுறையும் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறையினரும் எண்ணிப் பார்க்கவேண்டும்.


முனைவர் சு.அட்சயா
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி
கோவை.




 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்