பாரதியாரின் நகைச்சுவை உணர்வு

பேராசிரியர் இரா.மோகன்


‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராது இருத்தல்’ என்னும் உயரிய குறிக்கோளுடன், ‘பீடுடைய பெம்மான் இவனன்றே!’ என வையகம் போற்ற வாழ்ந்து காட்டியவர் கவியரசர் பாரதியார் (1882-1921). ‘குறுகத் தறித்த குறள்’ போல் அவர் இம்மண்ணுலகில் வாழ்ந்தது என்னவோ 39 ஆண்டுகளே; ஆனால் ஒருவர் 390 ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு செயல்களைச் செய்து முடிப்பாரோ, அவ்வளவு அரும்பெரும் பணிகளையும் தம் குறுகிய வாழ்நாளில் திறம்படச் செய்து காட்டியவர் பாரதியார். ‘அக்கிரகாரத்து அதிசயப் பிறவி’ என அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பெற்ற வ.ரா., ‘மகாகவி பாரதியார்’ என்னும் தம் நூலில் குறிப்பிடுவது போல், ‘பாரதியாருக்கு அவரது நெருக்கடியான காலங்களில் எல்லாம் துணையாக நின்ற உணர்வுகள் இரண்டு. ஒன்று, கடவுளிடம் பக்தி; இன்னொன்று அபரிமிதமான நகைச்சுவை’. இந்த இரண்டு உணர்வுகளும் எந்த நிலையிலும் பாரதியாரை விட்டு அவரது இறுதி மூச்சு வரை அகன்றதே இல்லை எனலாம்.

ஒரு முறை பாரதியாரும் வ.ரா.வும் காலை வேளையிலே சீனிவாஸாச்-சாரியாரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். வழியிலே பிரெஞ்சு இலக்கியத்தின் பெருமையையும் விக்டர் ஹ்யூகோ அவர்களின் மேதைமையைப் பற்றியும் வெகு நேர்த்தியாக, வ.ரா.வுக்குப் பாரதியார் எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகிறார். திடீரென்று திண்ணையில் இருந்து ஒரு பையன், ‘இளமையில் கல்’ என்று படித்த குரல் கேட்கிறது. உடனே பாரதியார், ‘முதுமையில் மண்’ என்கிறார். வ.ரா.வுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. ‘மேதை’ என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று எண்ணித் திகைத்துப் போகிறார் அவர். அப்போது பாரதியார் வ.ரா.விடம் பின்வருமாறு சொல்லுகிறார்:

“ஓய்! உமக்குத் தர்க்க சாஸ்திரப் பயிற்சி இல்லை போலிருக்கிறது! இளமையிலே கல்லா யிருப்பவன் முதுமையில் கவனிப்பாரற்ற மண்ணாவது நிச்சயம். இதைப் பற்றி நீர் ஏன் அதிசயப்படுகிறீர்? இரண்டாயிரம் வருஷங்களாக, நமது மூதாதைகள் இளமையில் கல்லாகவும் முதுமையில் மண்ணாகவும் இருந்திருந்து போய்விட்டார்கள். நம் காலத்திலே நமக்கு எதை எடுத்தாலும் திகைப்பும் திண்டாட்டமுமாக இருக்கிறது. இளமையிலே தகதகவென்று மின்னும் கோடி சூரியப் பிரகாசத்துடன் நமது குழந்தைகள் ஜொலிக்க வேண்டும். அப்படி ஜ்வலித்தால், அவர்கள் முதுமையில் மண்ணாக மாட்டார்கள். உலகத்தார்கள் அவர்களை மதிப்பார்கள். பின்சந்ததியார்கள் போற்றுவார்கள். இல்லாவிட்டால் நாம் இப்பொழுது பழி சுமத்துவது போல, நம்மை நம் பின்சந்ததியார்கள் தூற்றுவார்கள்”.

இதுபோல் அபரிமிதமான நகைச்சுவை உணர்வு பாரதியாரின் தனிவாழ்வில் பல்வேறு சூழல்களில் இயல்பாகவும் உடனடியாகவும் வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம்.

எள்ளல், இளமை, பேதைமை, மடம் என்ற நான்கின் காரணமாக நகைச்சுவை உணர்வு தோன்றும் என்பார் தொல்காப்பியர். அவர் ‘உள்ளப்பட்ட நகை’ என நகைச்சுவைக்கு ஒரு சிறப்பு அடைமொழியையும் சேர்த்துக் கையாளுவார். ‘உள்ளப்பட்ட நகை’ என்றதனால், ‘உள்ளத்தொடு படாத நகையும்’ அதாவது ‘மனத்தொடு பொருந்தாத பொய்யான நகையும் உண்டு’ என நாம் உய்த்துணரலாம். பாரதியார் தம் கவிதைகளில் நகைச்சுவை உணர்வின் பல்வேறு நிலைகளையும் பாங்குறக் கையாண்டுள்ளார். சான்றாக,

“கொஞ்சமோ பிரிவினைகள் – ஒரு
கோடியென்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பு என்பான் – அப்பன்
ஆறுதலை என்று மகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்”


என்று பாரதியார் நெஞ்சு பொறுக்காமல் எள்ளல் சுவையும் அங்கதச் சுவையும் மிளிரப் பாரத ஜனங்களின் தற்கால நிலைமையைப் படைத்துள்ளார். பாரத தேசத்தில் ஒரு குடும்பத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுவது முக்கியமான பிரச்சினையில் அல்லவாம்; ‘பாம்புக்கு எத்தனை தலை?’ என்பது போன்ற கவைக்கு உதவாத பொருளில் தானாம். இந்தக் கருத்து வேறுபாடு எளிதில் தீராதாம்; நெடுநாள் பகையாக நீடித்து நிற்குமாம்.

பாரதியின் கவிப் பெருமையைப் பறைசாற்றும் படைப்பு ‘கண்ணன் பாட்டு’. கண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் தோழனாகவும் அரசனாகவும் சீடனாகவும் சற்குருவாகவும் குழந்தையாகவும் விளையாட்டுப் பிள்ளையாகவும் காதலனாகவும் காந்தனாகவும் காதலியாகவும் ஆண்டாளாகவும் குலதெய்வ-மாகவும் பாவித்துப் பாரதியார் பாடியுள்ள பாடல்கள், வ.வே.சு. ஐயர் குறிப்பிடுவது போல். ‘அ~ர ல~ம் பெறுமான’ தரமும் திறமும் படைத்தவை. இவற்றுள், ‘கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை’ பாரதியாரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும் ஒரு நல்ல கவிதை ஆகும். பாரதியின் பார்வையில் கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளையாம்; தெருவிலே பெண்களுக்கு அவனால் ஓயாத தொல்லையாம். அவன் அப்படி என்னதான் செய்வான் என்கிறீர்களா? இதோ, பாரதியாரே நகைச்சுவை உணர்வு நனி சொட்டச் சொட்டப் பாடுகிறார். கேளுங்கள்:

“தின்னப் பழங்கொண்டு தருவான் – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன், என்னையன் என்றால் – அதை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்…
அழகுள்ள மலர் கொண்டு வந்தே – என்னை
அழஅழச் செய்துபின், ‘கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்’ என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.
பின்னலைப் பின்னின்று இழுப்பான் – தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்…
அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்”

இங்ஙனம் கண்ணன் இளம்பெண்களிடம் செய்யும் வேடிக்கைக் குறும்புகள் சுவை மிக்கவை. ‘இளமை’ காரணமாக எழும் இக் குறும்புகள், படிப்பவர் நெஞ்சில் நகைச்சுவை உணர்வை அலைஅலையாய் எழுப்ப வல்லவையாகும்.

“முல்லைச் சிரிப்பாலே - எனது
          மூர்க்கந் தவிர்த்திடுவாய்”


என்பது கண்ணனின் குழந்தைச் சிரிப்புக்குப் பாரதியார் சூட்டியுள்ள புகழாரம் ஆகும். ‘அது (குழந்தை) சிரித்தால் ரோஜாப்பூ நகைப்பது போலிருக்கும்’ என்று தம் கதை ஒன்றிலும் உவமை நயத்துடன் குழந்தையின் சிரிப்பழகைச் சொல்லோவியம் ஆக்கியிருப்பார் பாரதியார்.

‘குயில் பாட்’டில் குயில் குரங்கிடமும் மாட்டிடமும் காதல் மொழி பேசுவது போல் பாரதியார் படைத்திருக்கும் பகுதிகள், இயல்பான – நயமான – மென்மையான நகைச்சுவை உணர்வுக்குச் சொந்தக்காரர் பாரதியார் என்பதைப் பறைசாற்றுவன ஆகும்.

பாரதியார் உலகிற்கு ஒரு கவிஞராக அறிமுகம் ஆன அளவிற்கு ஒரு கதை ஆசிரியராக அறிமுகம் ஆகவில்லை; கட்டுரை ஆசிரியராகவும் மிகுந்த புகழ் பெறவில்லை. பாரதியாரைப் பொறுத்த வரையில் நகைச்சுவையாளர் என்ற பரிமாணம் பெரிதும் வெளிப்பட்டிருப்பது கதைகளில் தான். பதச்சோறாக, பாரதியார் ‘ஞான ரத’த்தில் படைத்துக் காட்டி இருக்கும் சுவையான ஒரு மண்ணுலகக் காட்சி இதோ:

“என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வந்து ஏனென்றாள். ‘தலைநோவு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா’ என்றேன். ‘ஆமாம்; இரண்டு நாளைக்கொரு முறை இதொரு பொய்த்-தலைவலி வந்துவிடும், என்னை வேலை யேவுகிறதற்காக. அதெல்லாம் சரிதான். பால்காரி வந்து மத்தியானம் பணம் கேட்டுவிட்டுப் போனாள். ராயர் வீட்டு அம்மாள் குடக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்னாள். ராயர் நேற்றே சொன்னாராம். இந்த மாதம் குழந்தைக்குக் காப்பு வாங்க ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள். என்னைத்தான் ஏமாற்றுகிறது வழக்கமாகவே போய்-விட்டது. இன்னம் அது இது என்று ஆயிரங் கணக்கு சொன்னாள். அன்று மாலை அவள் சொல்லிய கணக்குகளை எல்லாம் தீர்க்க வேண்டுமானால் குறைந்த ப~ம் மூன்று ல~ம் ரூபாய் வேண்டும் என்று என் புத்திக்குப் புலப்பட்டது. கடைசியாக ‘தெருவிலே போகிற நாய்களுக்கெல்லாம் பணத்தை வாரி யிறைக்கிறது; வீட்டுச் செலவைப் பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது; இப்படிச் செய்து கொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண் தான் கிடைக்கும்’ என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள்.

‘தலைநோவு தீர்ந்து போய்விட்டது. நீ தயவு செய்து கீழே போகலாம்’ என்று வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொண்டேன்”.

பாவேந்தர் பாரதிதாசன், ‘ஞானரதம் போல் ஒரு நூல் எழுத நானிலத்தில் ஆளில்லை’ எனப் பாரதியாரின் படைப்புத் திறத்திற்குச் சூட்டிய புகழாரம் நூற்றுக்கு நூறு சரியே என இப்பகுதியை மனம் கலந்து பயில்வோர் உணரலாம்.

மெல்லிய நகைச்சுவை உணர்வு பாரதியாரின் கதைகளில் – குறிப்பாக, கதைமாந்தரைப் பற்றிய அவரது வருணனைகளில் – இழையோடி நிற்கக் காண்கிறோம். இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில சுவையான வருணனைப் பகுதிகள் இதோ:

“தமையனாருக்குக் கோட்டையில் ரெவினியூ போர்டு ஆபீஸிலே உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீசில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் ‘ப்ரமோஷன்’”.

“பணம் என்ற மாத்திரத்திலே பிணமும் வாயைத் பிறக்கும் என்பது பழமொழி. சுப்புசாமிக் கோனார் ஏறக்குறையக் கொட்டாவியளவுக்கு வாயைப் பிளந்தார்”.

“திருவல்லிக்கேணியிலே ‘செ… சங்கம்’ என்பதாக ஓர் தேசபக்தர் சபை உண்டு. அதில் தேச பக்தர்கள் தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து, ‘காரியங்கள்’ – ஒரு காரியமும் நடக்கவில்லை – நடத்தினோம். நாங்கள் தேச பக்தர்கள் இல்லையென்று, அந்தச் சபை ஒன்றுமில்லாமற் போனதிலிருந்தே நன்கு விளங்கும். நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; ‘காலணா’வின் அடியார்க்கும் அடியார்”.

இங்ஙனம் நகைச்சுவை உணர்வு பளிச்சிடும் இடங்கள் பாரதியாரின் கதைகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

‘வேடிக்கைக் கதைகள்’ என்ற தலைப்பிலேயே பாரதியார் சில கதைகளைப் படைத்துள்ளார்; கதைகளில் வரும் மாந்தர்களுக்கு நகைச்சுவை உணர்வு கொப்பளிக்க ‘அந்தரடிச்சான் சாஹிப்’, ‘செத்தான் சாஹிப்’, ‘மூர்ச்சே போட்டான் சாஹிப்’, ‘மிளகாய்ப் பழச்சாமி’, ‘கரியன்’, ‘கடற்கரையாண்டி’ என்றாற்போல் வேடிக்கையான பெயர்களை வைத்துள்ளார். ‘ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகள்’ போல் அங்கதச் சுவையும் நகைச்சுவையும் பாரதியாரின் கதைகளில் ஆங்காங்கே களிநடம் புரிந்து நிற்கக் காண்கிறோம்.

பாரதியாரின் கட்டுரைகளிலும் அவ்வப்போது நகைச்சுவை மூன்றாம் பிறை போல் தலைகாட்டி நிற்பதைக் காண முடிகின்றது. சான்றாக, ‘சமூகம்’ பற்றிய அவரது கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருக்கும் நகைச்சுவைக் குறிப்பு வருமாறு:

“ஒருவன் யோக சாஸ்திரம் பழகப் போய் மௌன விரதம் எடுத்தான். அப்போது அவனுக்கு வயிற்றுக் கடுப்பு வந்தது. பல கடன்காரர்கள் வந்தார்கள். ஒரு புது சிஷ்யன் வந்தான். இராத்திரியில் இரண்டு திருடர்கள் வந்தார்கள். இரண்டு விருந்துகள் வந்தன. ஒரு கல்யாணம் வந்தது, அவசியமாய்ப் போய்த் தீர வேண்டியது. இன்னும் பல விஷயங்கள் வந்தன, ஒரே நாளில்! அவன் மௌன விரதத்தைக் கலைத்து விட்டான். உடனே வயிற்றுக் கடுப்பு தீர்ந்து போய்விட்டது. கடன், சிஷ்யன், திருடன், கல்யாணம் தீர்ந்து போய்விட்டன. மறுநாள் ஒரு தொல்லையுமில்லை”. இங்ஙனம் எல்லோருடைய வாழ்விலும் நிகழும் அனுபவத்தினைத் தமக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சுவையாகக் கூறிச் சென்றுள்ளார் பாரதியார்.

நிறைவாக ஒரு கருத்து: ம.ப.பெரியசாமித் தூரன் குறிப்பிடுவது போல், “கவிதைகளிலும் உரைநடைகளிலும் நகைச்சுவை கொப்பளிக்கப் பாரதியார் எழுதுவதிலே வல்லவர். நகைச்சுவை என்றால் ஒரு தடவை சிரித்துவிட்டுப் போகக் கூடியதல்ல. பாரதியாருடைய நகைச்சுவை எப்பொழுதும் இன்பம் அளிப்பதாகும். இந்த நகைச்சுவை தான் பாரதியாரை கொடிய வறுமையிலும் காத்திருக்கின்றது என்பதை அறியலாம்”.


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.




 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்