‘நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு’
பேராசிரியர் இரா.மோகன்
வீரத்
துறவி விவேகானந்தரைப் போல நம்பிக்கையின் வலிமையைப் பறைசாற்றியவர்கள்
வேறு யாரும் இருக்க முடியாது. “எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில்
நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்” (விவேகானந்தரின் அறிவுரைகள், ப.1)
என்பது அவரது மணிமொழி. விவேகானந்தரின் கருத்தியலில் ‘உலக வரலாறு என்பது
தன் மீது நம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே ஆகும்’ (ப.1)
அத்தகைய தன்னம்பிக்கை, நமக்கு உள்ளே இருக்கும் அளப்பரிய ஆற்றலை வெளியே
வரவழைக்கிறது. நாம் எதையும் சாதிக்க முடியும், நமக்குள்ளே
பொதிந்திருக்கும் அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு
உண்மையாக முயற்சி மேற்கொள்ளாத போது தான் நாம் தோல்வி அடைகிறோம்.
‘நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில்
நம்பிக்கை – இதுவே மேன்மையின் இரகசியம்’ (ப.1) என அறுதியிட்டு
உரைக்கின்றார் விவேகானந்தர்.
கவியரசர் பாரதியாரும் தமது கட்டுரை ஒன்றில், “நம்பிக்கை உண்டானால்
வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் என்னவென்றால் விடா
முயற்சி. மனத்திற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை தடைப்படுமா?
முயற்சி தூங்குமா? இடுக்கண் பயமுறுத்துமா? உள்ளம் சோருமா?...
நம்பிக்கையே காமதேனு: அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்” (பாரதியார்
கட்டுரைகள், பக்.35-36) என நம்பிக்கையின் இன்றியமையாத பண்பையும்
பயனையும் எடுத்துரைக்கின்றார்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘மாயா பஜார்’ பகுதியில் (அக்டோபர் 4, 2017)
‘ஜெயிக்கப் போவது யாரு?’ என்னும் தலைப்பில் ஜெயஸ்ரீ எழுதி இருந்த
சிறுவர் கதை ஒன்று இவ்வகையில் நோக்கத்தக்கது. படிப்பவர் உள்ளத்தை
ஈர்க்கும் அக்கதை வருமாறு:
“முல்லைக் காட்டில் ஒரு பெண் சிங்கம் அழகான குட்டியை ஈன்றது. சிங்கக்
குட்டியின் ஒரு கால் சற்றுக் குட்டையாக இருந்தது கண்டு தாய்ச் சிங்கம்
வருத்தம் அடைந்தது.
‘நம்மைப் போற்ற சிங்கங்கள் வேட்டையாடினால் தான் சாப்பிட முடியும்.
விரைவாக ஓடினால் தான் இரையைப் பிடிக்க முடியும். உன் மகள்
எதிர்காலத்தில் எப்படி வாழப் போகிறாளோ?’ என்று சிங்கக் குட்டியைப்
பார்க்க வந்த மற்ற சிங்கங்கள் கவலைப்பட்டன.
‘என் மகளுக்குக் குறை தெரியாமல், தைரியத்தையும் தன்னம்பிக்-கையையும்
ஊட்டி வளர்ப்பேன். அவளால் ஒரு சிங்கத்தைப் போல் கம்பீரமாக வாழ முடியும்’
என்று தனக்குள் சொல்லிக் கொண்டது தாய்ச் சிங்கம்.
தான் நினைத்தது போலவே குட்டியை வளர்க்கவும் செய்தது தாய்ச் சிங்கம்.
நடக்கவும் ஓடவும் பழகியது. அடிக்கடி தனக்கும் குட்டிக்கும் ஓட்டப்
பந்தயம் வைத்தது. ஒவ்வொரு முறையும் தாய்ச் சிங்கம் குட்டியை விட
மெதுவாக ஓடி அதை வெற்றி பெற வைத்தது. இதனால் சிங்கக் குட்டி தன் குறை
தெரியாமல் மகிழ்ச்சியாக வளர்ந்து வந்தது.
அன்று சிங்கக் குட்டிகளுக்கான ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்கச் சிங்கக்
குட்டி மகிழ்ச்சியாகக் கிளம்பியது. போட்டியில் தன் மகள் ஏதாவது
சங்கடத்தை அனுபவித்து விடக் கூடாது என்ற கவலையில் குகைக்குள்
படுத்திருந்தது தாய்ச் சிங்கம்.
பந்தயம் முடிந்தது. சிங்கக் குட்டி அம்மாவைத் தேடி, குகைக்கு வந்தது.
தாய்ச் சிங்கமும் குட்டியும் ஒன்றும் பேசாமல் ஒன்றை ஒன்று பார்த்துக்
கொண்டிருந்தன.
சிங்கக் குட்டி தாயின் தோளில் சாய்ந்து கொண்டு, ‘பந்தயத்தில் உன்னை
மாதிரி மெதுவாக ஓடி, எனக்காக யாரும் விட்டுக் கொடுக்கலை’ என்றது.
தாய்ச் சிங்கம் கண் கலங்கியது.
‘பரவாயில்லை, போட்டியில் கலந்து கொள்வது தான் முக்கியம். வெற்றி பெறுவது
முக்கியம் இல்லை. என்றாவது ஒரு நாள் நீயும் பந்தயத்தில் ஜெயிப்பாய்’
என்று கூறிக் குட்டியை அணைத்துக் கொண்டது தாய்ச் சிங்கம்.
‘எனக்காக யாரும் விட்டுக் கொடுக்கலைன்னாலும் நீ கற்றுக் கொடுத்த
தைரியத்தாலும் தன்னம்பிக்கையாலும் பந்தயத்தில் ஜெயிச்சிட்டேன் அம்மா!’
என்று சிரித்தது சிங்கக் குட்டி.
மகிழ்ச்சியில் தாய்ச் சிங்கம் துள்ளிக் குதித்தது”.
‘தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, இதில் யார்கொலோ சதுரர்?’ என்ற படி,
இக் கதையில் உடற்குறை தெரியாத வண்ணம் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும்
உள்ளத்தில் ஊட்டி ஊட்டித் தனது குட்டியை வளர்த்த தாய்ச் சிங்கத்தைப்
பாராட்டுவதா? அல்லது, தாய் கற்றுக் கொடுத்த தைரியத்தையும்
தன்னம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டு, ஓட்டப் பந்தயத்தில் கலந்து
கொண்டு, விடாமுயற்சியோடு போராடி வெற்றி வாகை சூடிய சிங்கக் குட்டியைப்
போற்றுவதா? ‘நம்பிக்கை உண்டானால், வெற்றி உண்டு’ என்னும் அனுபவப்
பாடத்தை இச் சிறுவர் கதை உணர்த்தி இருக்கும் பாங்கு நனி நன்று.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|