சமூகத்தை நிமிர்த்தும் ஏற்றமிகு எழுத்துக்குச் சொந்தக்காரர்
பேராசிரியர் இரா.மோகன்
‘நான்காம்
தமிழ்ச் சங்கம்’ எனச் சிறப்பிக்கப் பெறும் மதுரை செந்தமிழ்க்
கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் (1986-1991) பயின்ற நன்மாணவர்
அ.ச.மு.முனியாண்டி. அவர் மாணவப் பருவத்திலேயே கவிதைப் போட்டிககள்
பலவற்றிலே கலந்து கொண்டு வெற்றி வாகை சூடிய ஆற்றலுக்குச் சொந்தக்காரர்;
1989-ஆம் ஆண்டில் ‘கல்லூரியின் சிறந்த மாணவராக’த் தெரிவு செய்யப்பெற்ற
பெருமைக்கு உரியவர் தற்போது விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த பாணான்
குளத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும்
முனியாண்டியின் படைப்புக்கள் ‘அமுதசுரபி’, ‘காக்கைச் சிறகினிலே’,
‘காலச் சுவடு’, ‘தினமலர்’, ‘தினகரன்’, ‘மாலை முரசு’, ‘தமிழ் முரசு’
முதலான இதழ்களில் அவ்வப்போது வெளிவந்துள்ளன. 26 ஆண்டுக் கால
இடைவெளிக்குப் பிறகு முனியாண்டி சிதறிக் கிடந்த தமது கவிதைகளை எல்லாம்
ஒன்று திரட்டி ‘சூரியனைச் சுடுமா சூரியகாந்தி?’ என்னும் தலைப்பில் ஒரு
தொகுப்பாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
எது கவிதை?
‘எது கவிதை?’ என்னும் வினாவுக்கு அ.ச.மு.முனியாண்டி ஒரு நீண்ட கவிதை
வடிவிலேயே விடை தந்துள்ளார். அதில் அவர் கவிதைக்கு வகுத்துத்
தந்திருக்கும் பதினைந்து வரைவிலக்கணங்கள் வருமாறு:
கவிதை எனப்படுவது யாது எனின்,
1. சொப்பனச் சோம்பலில் சுருண்டு கிடப்பவரை வீரிய வார்த்தைகளால் எழ
வைப்பது.
2. தமிழ் முன் வரம் பெறுவது.
3. சிந்தனைச் சிறகை விரிப்பது.
4. நிலைத்து நின்று ஒளி தரும் நிலவு.
5. வாடி நின்ற மனிதரை வாழ வைப்பது.
6. கேள்விகள் ஆயிரத்தை உருவாக்குவது.
7. பிறரைச் சாதிக்க வைப்பது.
8. இருளில் உள்ளவர்க்கு ஒளி முகவரி தருவது.
9. உழைப்பவனின் உயர்வைப் போற்றுவது.
10. விடியும் என்ற நம்பிக்கை.
11. ஏழைகளின் இரைப்பையை நிரப்புவது.
12. உழைக்கும் பாட்டாளியைக் கூட்டாளியாக்குவது.
13. எழுத்தால் தேசத்தை நிமிர்ந்து நிற்கச் செய்வது.
14. அறியா சனங்களின் அவலம் கண்டு அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது.
15. பூக்களைப் போல் எளிமையாகப் பறிக்கத் தக்கது.
(சூரியனைச் சுடுமா சூரியகாந்தி, பக்.23-27)
‘கவிதை வரும்’ என்னும் தலைப்பில் படைத்த பிறிதொரு கவிதையில் முனியாண்டி,
அனுபவக் கவிதை, ஏக்கக் கவிதை, கோபக் கவிதை, நம்பிக்கைக் கவிதை, ஞானக்
கவிதை, தமிழ்க் கவிதை எனத் தமக்குள் பல்வகைக் கவிதைகளும் ஊற்றெடுத்து
வரும் அரிய தருணங்களை அழகுறப் பட்டியல் இட்டுள்ளார் (பக்.30-31).
முனியாண்டியைப் பொறுத்த வரையில் கவிஞர் என்ற முறையில் ‘யாதுமாகி நிற்பது’
பாரதியே; இறப்பே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உயிர்ப்புள்ள கவி
ஆளுமை பாரதியே. ஒரு கவிதையில்,
“கவிதைகளைத் தோட்டாக்களாக்கி
வெள்ளையர்களின் / உயிரை உலுக்கிய
கவிதைத் துப்பாக்கி நீ!” (ப.36)
எனப் பாரதியாரைச் செவ்வனே அடையாளம் காட்டும் முனியாண்டி,
“அறிவை நெட்டெழுத்தாக்கிக் / கொண்டவனே!
ஆயுளை நீ ஏன் / குற்றெழுத்தாக்கிக் கொண்டாய்?” (ப.38)
எனப் பாரதியாரிடமே வினவுவது படிப்பவர் உள்ளத்தை உருக்குவதாகும்.
‘கவிதைக் கீற்றுகள்’ என்னும் தலைப்பில் முனியாண்டி புனைந்திருக்கும்
நறுக்-சுருக் கவிதை சிந்தனைக்கு விருந்தாக விளங்குவதாகும்.
‘துளிப்பாப் பேழை’
‘துளிப்பாப் பேழை’ என்னும் உட்தலைப்பில் இடம்பெற்றிருக்கும்
முனியாண்டியின் கவிதைகள் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நடப்புக்களை
விமர்சன நோக்கில் எடுத்துக்காட்டுகின்றன; அங்கதக் குறிப்புடனும்
இலக்கிய நுட்பத்துடனும் எள்ளி நகையாடுகின்றன. இவ்வகையில் சிறந்து
விளங்கும் சில துளிப்பாக்களை ஈண்டுக் காணலாம்.
“வாடி நிற்கும்
உயர்திணை மரங்கள்
பட்டதாரிகள்” (ப.43)
என்பது இன்றைய இளைய தலைமுறை பற்றிய கவிஞரின் படப்பிடிப்பு. ‘உயர்திணை
மரங்கள்’ என்ற சொல்லாட்சி வாடியே நிற்காமல், விழிப்புணர்வு பெற்று,
தனக்கென வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளும் ஆளுமைத் திறத்தினை இளைய
பாரதம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தி
நிற்கின்றது.
“வறுமை தின்றது எழுத்தாளனை
சாகாமல்
வாழ்கிறது கவிதை” (ப.46)
என்னும் துளிப்பா, வறுமையில் செம்மையாக வாழ்ந்து காட்டிய ஓர் எழுத்தாளனை
நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. “காலம் கவிஞனைக்
கொன்றுவிடும் – அவன், கவிதை காலத்தை வென்றுவிடும்” என்றும் வைர வரிகள்
இங்கே ஒப்புநோக்கத்தக்கன.
“புல்லாங்குழல்
ஆகாத மூங்கில்
முதிர்கன்னி” (ப.49)
என்பது முதிர்கன்னியரின் அவலத்தைச் சித்திரிக்கும் கவிஞரின் துளிப்பா.
“மணப்பந்தலில்
ஒரு கொள்ளைக்காரன்
மாப்பிள்ளையாக” (ப.45)
வரதட்சனைக் கொடுமைக்கு எதிரான கவிஞரின் சாட்டை அடி இத்துளிப்பா.
“நிலவிற்காகத் தவமிருந்து
வானம் பறிபோனது
சுதந்திரம்” (ப.49)
என்னும் துளிப்பா சுதந்திரம் பற்றிய கவிஞரின் கூர்மையான விமர்சனம்.
“மறுபடியும் வாங்க முடியுமா?
நாட்டிற்கு விடுதலை
அரசியல்வாதிகளிடம் இருந்து…” (ப.46)
இத்துளிப்பா ‘வெள்ளையரிடம் இருந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுவிட்டோம்;
கொள்ளையரிடம் இருந்து மறுபடியும் விடுதலை பெற முடியுமா?’ என்னும்
வினாவினை முன் வைக்கும் நல்லதோர் அரசியல் சாடல்!
“உன்னைப் பார்த்தவுடன்
நிறுத்திவிட்டேன்
அகநானூறு படிப்பதை…” (ப.47)
மலரினும் மெல்லிய காதல் உணர்வின் செவ்வி தலைப்பட்டிருக்கும் அழகிய
துளிப்பா இது!
உள்ளங்கவர் குறுங்கவிதைகள்
நீண்ட கவிதைகளைக் காட்டிலும், குறுங்கவிதைகள் படிப்பவர்களின்
உள்ளங்களைச் சட்டென்று கவர்ந்து விடுகின்றன. ‘குறுங்கவிதை அணிவகுப்பு’
என்னும் பகுப்பில் இத்தகைய உள்ளங்கவர் குறுங்கவிதைகள் பல
இடம்-பெற்றுள்ளன. இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க குறுங்கவிதைகள்
சிலவற்றை இங்கே காணலாம்.
இன்று நடப்பது கலியுகம் தான் என்பதற்கான சான்று இக்கவிதை; ஒரு கோடி
மதிப்பீட்டில் வீடு; வீடெங்கும் பளபளக்கும் சலவைக் கற்கள்; வீட்டைச்
சுற்றி நந்தவனம்; உல்லாசமாய் நீந்த நீச்சல் குளம்; உடைக்குப்
பொருத்தமான வாகனங்கள். ஞாயிற்றுக்கிழமை, குடும்பத்தோடு கிளம்புகிறான்
ஒரு செல்வன். எங்கே தெரியுமா?
“முதியோர் இல்லத்தில் இருக்கும்
தாய் தந்தையரைப் பார்க்க!” (ப.63)
கவிஞர் முனியாண்டியின் கண்ணோட்டத்தில் நிகழ்காலத்தின் தனிப்பண்பு என்பது
இதுதான்:
“அன்றைய நாடு / வெண்கொற்றக் / குடையின் கீழ்!
இன்றைய நாடு / கட்-அவுட்டின் கீழ்!” (ப.51)
கட்-அவுட் கலாச்சாரம்’ என்றல்லவா இப்போக்கு இன்று
குறிப்பிடப்-படுகின்றது!
கவிஞரின் அகராதியில் ‘சாதி’ என்ற சொல் நாடார், பிள்ளை, முதலியார்,
செட்டியார் என்றாற்போல் வழக்கில் உள்ள சாதிப் பாகுபாடுகளைக் குறிக்க-
வில்லை; பிறர் போற்ற எதையேனும் ‘சாதி’ – ‘சாதித்துக் காட்டு!’ – இதுவே
உண்மையில் ‘சாதி’ என்பதன் மெய்ப்பொருள் ஆகும். இத்தொகுப்பில் இடம்
பெற்றுள்ள பல கவிதைகளில் சாதிக் கொடுமைக்கு எதிராகச் சாவு மணி
அடித்துள்ளார் முனியாண்டி.
எதையும் வித்தியாசமான கோணத்தில் – முற்போக்கான பார்வையில் – அணுகுவது
என்பது கவிஞர் என்ற முறையில் முனியாண்டியின் படைப்பாளுமையில் தூக்கலாகக்
காணப்பெறும் தனித்திறன் ஆகும். நமக்கெல்லாம் மணிமேகலை என்ற உடன்
நினைவுக்கு வருவது அமுதசுரபியைக் கொண்டு மக்களின் வயிற்றுப் பசியைத்
தீர்த்த பாங்கு தான். முனியாண்டியோ,
“ஊருக்கெல்லாம் / வயிற்றுப் பசி தீர்த்த /
மணிமேகலை
உதயகுமாரன் மனதை மட்டும் / பட்டினி போட்டாள்!” (ப.58)
என்கிறார். இக் கவிதைக்கு அவர் சூட்டி இருக்கும் தலைப்பு ‘பட்டினி’
என்பதாகும்.
கிளி சோதிடத்தில் கவிஞருக்கு நம்பிக்கை இல்லை; என்றாலும், பார்க்கிறார்.
ஏன் தெரியுமா? இதோ கவிஞரின் விடை:
“சோதிடனின்
பசியைத் தீர்க்கவும்,
கிளியின்
சில வினாடி / விடுதலையைக் காணவும்…” (ப.55)
‘திசை எங்கும் காற்று வீசத்தான் செய்கிறது; ஆனாலும் அது யாரிடமும்,
எதற்காகவும் கை நீட்டுவதில்லை. ஏனென்றால், இயற்கையின் வளர்ப்பு அப்படி’
என உரைக்கும் கவிஞர், ஆறறிவு படைத்த மனிதன் அங்ஙனம் உயர்வாக நடந்து
கொள்ளவில்லை என்கிறார். அதற்கு அவர் காட்டும் காரணம்:
“ எதற்கெடுத்தாலும் கை நீட்டுகிறான்
மனிதன் / அவன் புத்தி இப்படி!” (ப.70)
பெருமாள் கோயில் வாசல். துளசி விற்கும் பெண்ணிடம் கேட்ட காசைக்
கொடுக்காமல் பேரம் பேசுகிறார் ஒரு பக்தர். அந்தப் பெண்ணோ
பெருந்தன்மையோடு, ‘கொடுக்கறதக் கொடுத்துட்டு வாங்கிட்டுப் போங்க!’
என்கிறாள். ‘அந்தப் பெண்ணின் மனசும் துளசிதான்’ (ப.51) என்ற
முத்தாய்ப்பான வரியுடன் கவிதையைப் முடிக்கிறார் முனியாண்டி.
முப்பது வயதான ஒரு முதிர்கன்னி மூன்று பவுன் இல்லாததால் திருமணம்
நடக்காமல் வீட்டுச் சன்னலுக்குள் முடங்கிக் கிடக்கிறாளாம். எதிரில்
உள்ள கோயிலுக்குள் முந்நூறு பவுன் அணிந்து மங்கலமாய்க் காட்சி
அளிக்கிறாளாம் மாரியம்மாள்.
“நகை கேட்டால்
தருவாளா அம்மா?” (ப.52)
என்ற நறுக்கான கேள்வியுடன் நிறைவு பெறுகிறது கவிதை.
இத்தகைய திறமான குறுங்கவிதைகள் கவிஞரை ஒரு சீர்திருத்த மனப்பான்மையும்
முற்போக்குச் சிந்தனையும் கொண்டவராக நமக்கு அடையாளம் காட்டுகின்றன.
நிரல்படுத்தி, நிரந்தினிது கூறும் கவிதைகள்
நிரல்படுத்தி, நிரந்தினிது பாடிச் செல்வது என்பது ஒரு கவிதை உத்தி.
இதில் கவிப்பேரரசு வைரமுத்து கைதேர்ந்தவர். ‘சின்னச் சின்ன ஆசை’,
‘கண்ணுக்கு மை அழகு’ என்னும் அவரது திரைஇசைப் பாடல்கள் இவ்வகையில்
அமைந்தவை. முதல் பாடலில் ஆசைகளும், அடுத்த பாடலில் அழகுகளும் முறையே
வரிசையாகப் பாடப்பெற்றிருக்கும். கவிஞர் முனியாண்டியும் இவ்வுத்தி
முறையைத் திறம்படக் கையாண்டு சில கவிதைகளை இயற்றியுள்ளார். பதச்சோறாக,
முனியாண்டியின் ‘மதிப்பு’ என்னும் கவிதையில் இருந்து சில உயிர்ப்பான
வரிகளை – நிரல்பட அமைந்த கருத்தியல்களை – இங்கே சுட்டிக் காட்டலாம்.
“வாளுக்கு மதிப்பு / களத்தில்
வான்மழைக்கு மதிப்பு / நிலத்தில்
நாவிற்கு மதிப்பு / வார்த்தையில்
பூவிற்கு மதிப்பு / வாசத்தில்
கவிதைக்கு மதிப்பு / பொருளில்
கடவுளுக்கு மதிப்பு / அருளில்…
முகத்திற்கு மதிப்பு / அழகில்
அகத்திற்கு மதிப்பு / அறிவில்
தோளுக்கு மதிப்பு / மாலையால்
நாளுக்கு மதிப்பு / வேலையால்
பிறப்பிற்கு மதிப்பு / கருவறையால்
இறப்பிற்கு மதிப்பு / கல்லறையால்…” (பக்.83-86)
இக் கவிதையில் விழுமிய நோக்கில் அமைந்த 36 மதிப்புக்களை நிரல்படுத்தி,
நிரந்தினிது குறிப்பிட்டுள்ளார் முனியாண்டி.
ஒரு வரம் – இரண்டு வழி – மூன்று மனம் – நான்கு மொழி – ஐந்து பார்வை –
ஆறு நிழல் – ஏழு புன்னகை – எட்டு நிலவு – ஒன்பது வார்த்தை – பத்து
வாழ்க்கை என ஒன்று முதல் பத்து வரை ‘கேள்!’ என்னும் தலைப்பில் ஏறு
முகமாக ஓர் அருமையான கவிதையையும் முனியாண்டி படைத்துள்ளார். இக்
கவிதையின் முடிவில் அவர் கேட்கும் பத்து வகையான வாழ்க்கைகள் வருமாறு:
1. சத்திய வாழ்க்கை, 2. சமத்துவ வாழ்க்கை, 3. அன்பு வாழ்க்கை, 4. அமைதி
வாழ்க்கை, 5. எளிமை வாழ்க்கை, 6. எல்லோரும் போற்றும் வாழ்க்கை, 7. பிறரை
நேசிக்கும் வாழ்க்கை, 8. பிரபஞ்சம் போற்றும் வாழ்க்கை, 9. இருக்கும்
போது மனித வாழ்க்கை, 10. இறந்த பின் புனித வாழ்க்கை! (ப.80).
உணர்வுகளை முன்னிறுத்தி சமூகத்தை வெளிக்காட்டும் முயற்சி
“தமிழ்க் கவிதை வரலாற்றில் சங்கக் கவிதைகளுக்குப் பிறகு உணர்வுகளை
முன்னிறுத்தி சமூகத்தை வெளிக்காட்டும் முயற்சி அழுத்தமாகப்
புதுக்கவிதைகளில் தான் இடம்பெறுகிறது எனலாம்” (புதுக்கவிதை – ஒரு
புதுப்பார்வை, ப.111) என மொழிவார் பேராசிரியர் பாலா. அவரது கூற்றினை
மெய்ப்பிக்கும் வகையில் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘சமுதாயப்
பதிவுகள்’ என்னும் பகுப்பில் நிறையக் கவிதைகள் காணப்படுகின்றன.
“இங்கு
உண்மையானவர்கள் / அரசியல் அனாதைகள்
பொய்யானவர்கள் / மக்களின் / செல்லப் பிள்ளைகள்” (ப.100)
என இன்றைய நிதர்சன உண்மையை அம்பலப்படுத்தும் போதும்,
“காலம் / தனது நாட்காட்டியில்
உன்னைக் கிழிக்கப்படும் / தேதியாக வைக்கக் கூடாது;
சமூகத்திற்குச் சொல்லும் / சாகாத சேதியாக
வைத்திருக்க வேண்டும்” (ப.103)
என இளைய தலைமுறையினரின் நெஞ்சங்களில் விழிப்புணர்வை விதைக்கும் போதும்,
“பிறக்கும் போதே / வறுமைப் பாம்பு தீண்டியதால்
சவலைகளாக / இந்தியத் தலைமுறைகள்” (ப.109)
என இந்தியத் தலைமுறைகளின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டும் போதும்,
“ஒரு இந்து / திரியாக
இசுலாமியர் / நெய்யாக
கிறித்தவர் / விளக்காக
உலகம் உள்ளவரை / எரியட்டும் / சமாதான விளக்கு” (ப.113)
என உலக சமாதானத்திற்குக் குரல் கொடுக்கும் போதும்,
“ சமூகத்திற்காக
நீ பொதுநலமாய் / இருந்தால் தான் பெருமை” (ப.115)
என இளைய பாரதத்திற்கு அறிவுறுத்தும் போதும்,
“நல்லது சாதிப்போரை விட
தீயது தரும் / சாதிப் போர் அதிகமானதால்
புத்தனைத் தந்த / போதி மரம்
கலவர நோயால் / பாதி மரமானது” (ப.124)
எனச் சாதிக் கொடுமையைச் சாடும் போதும்,
“ஏழைகளுக்காக
எதையும் செய்வோம் / என்கிறீர்கள்
ஆனால் / அவர்கள் முதுகை விட்டு
எப்போது / இறங்கப் போகிறீர்கள்?” (ப.131)
என ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராகக் கூரிய கேள்விக் கணையினைத் தொடுக்கும்
போதும், உணர்வுகளை முன்னிறுத்தி சமூகத்தை வெளிக்காட்டும் முயற்சி
முனியாண்டியின் கவிதைகளில் அழுத்தமாக இடம்பெற்றிருக்கக் காண்கிறோம்.
முதியோர் இல்லத்தில் இருக்கும் தாத்தாவுக்கும் பாட்டிக்கும், பெற்றோரது
அன்பு கிடைக்காத ஒரு பேரன் எழுதும் கடித வடிவில் இத்தொகுப்பில் இடம்
பெற்றிருக்கும் கவிதை முனியாண்டியின் முத்திரைக் கவிதை ஆகும்.
“முதுமையில் காப்பாற்றுவான் என்ற
உங்கள் நம்பிக்கையைப் / பொய்யாக்கிய
என் தந்தை நலம்.
பணக்கார மருகளும் / அரசு வேலை பார்க்கும்
என் அம்மாவும் நலம்.
நான் மட்டும் நலமில்லை”
எனத் தொடங்கும் பேரனின் கடிதம்,
“ என் வெண்டைப் பிஞ்சுவிரல் பிடித்து
வீதியில் நடந்தபடி வீரக்கதைகள்
சொல்ல நீ (தாத்தா) இல்லை.
விளையாடிக் களைத்து வந்தபின்
தலையைக் கோதி / மடியில் போட்டுக்கொள்ள
பாட்டி இல்லை”
எனத் தனது இழப்புக்களை உருக்கமாகப் பதிவு செய்து,
“ நீ (பாட்டி) இருக்கும் / முதியோர் இல்லத்தில்
அவர்களுக்கும் / இடம் போட்டு வை.
இந்தச் சூழலில் / வளர்ந்ததால்
அவர்களை அங்குதானே / அனுப்ப முடியும்?” (பக்.135-138)
என்னும் பேரனின் உணர்ச்சி மிகு கேள்விக் கணையோடு நிறைவு பெறுவது
முத்தாய்ப்பு.
காதலின் மறுபக்கம்
“காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி,
ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை, உரிமையுள் எல்லார்க்கும்
உரியது, நட்பினுள் இருபாலாரையும் இணைப்பது, கல்வியுள் கசடறக் கற்க
வேண்டுவது, நாணினுள் நனி நாணுடையது, ஒழுக்கத்துள் விழுமியது” (தமிழ்க்
காதல், ப.267) எனக் காதலுக்குப் புகழாரம் சூட்டுவார் மூதறிஞர்
வ.சுப.மாணிக்கனார். இத்தகைய காதலின் மென்மையையும் மேன்மையையும்
முனியாண்டி தம் கவிதைகளில் அழகுற எடுத்துக்காட்டியுள்ளார்.
“ வாசிக்கப் புத்தகம் / நேசிக்க அன்பு
யாசிக்க தானம் / யோசிக்க அறிவு
வாழ்க்கைக்கு நீ!...
மண்ணுக்கு மனம் / பெண்ணுக்குக் குணம்
இரவுக்கு நிலவு / உறவுக்கு நினைவு
வாழ்வதற்கு நீ!” (பக்.143-144)
எனக் காதலியின் உறவினை ஒரு கவிதையில் வானளாவப் போற்றிப் பாடியுள்ளார்
முனியாண்டி,
“பெண்ணே! / நீ இருந்தால் என்னோடு
என் வாழ்வில் / வாண வேடிக்கை!
நீ இல்லாது போனால் / எனது வாழ்வே வேடிக்கை!” (ப.205)
என்பது கவிஞர் படைக்கும் ஒரு காதலனின் ஒப்புதல் வாக்குமூலம்.
இங்ஙனம் காதலின் மேன்மையை மட்டும் பாடாமல் – காதலியின் உயர்வை மட்டும்
போற்றாமல் – காதலின் மறுபக்கத்தையும் உள்ளது உள்ளபடி பாடி இருப்பது
கவிஞர் முனியாண்டியின் தனித்தன்மை ஆகும். காதல் என்ற பெயரில் இன்றைய
இளைய தலைமுறையினர் மேற்கொள்ளும் உடற்-கவர்ச்சியையும் பருவக்
கிளர்ச்சியையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை; காதலில் தோல்வி கண்டு தாடியை
வளர்த்துப் பைத்தியமாய் அலைந்து திரிவதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை.
பரந்த உலகை நோக்கி அறிவின் பார்வையை விசாலம் ஆக்குமாறும், நட்பின்
எல்லையை விரிவாக்குமாறும் கவிஞர் இளையோர்க்கு அறிவுறுத்துகின்றார்.
அவரது கண்ணோட்டத்தில் காதலில் தோல்வி கண்டால் ஆணோ, பெண்ணோ வேறொருவரைத்
திருமணம் செய்துகொண்டு புதியவர்களாய் மாறுவது வாழ்க்கை இல்லை;
சமூகத்தின் வேர்களாய் இருப்பதே வாழ்க்கை.
“நான் / நாட்டிற்காகக்
களம் இறங்கி விட்டேன் / போய் வா!” (ப.203)
எனக் கவிஞர் படைக்கும் இளைஞன் ஒருவன் காதலைத் துறந்து தன்னைக்
கைவிட்டுச் செல்லும் இளம்பெண்ணை வழியனுப்பி வைக்கின்றான். பிறிதோர்
இளைஞன் காதல் தோல்வியால் கலங்கிக் கையற்று முடங்கிப் போய்விடாமல்,
“நான் கூடினால் / பயன்படுத்திக் கொள்ள
சமூகம் இருக்கும்போது / சத்தியம் மறந்த / நீ எதற்கு?” (ப.188)
என மனத் திண்மையோடு கேட்கின்றான்.
விடியும் என்ற நம்பிக்கை
இலட்சியம்’ என்னும் தலைப்பில் படைத்த கவிதையில்,
“எழுதுகோலின் இலட்சியம் / தான் தலைகுனிந்து
ஏற்றமிகு கருத்துக்களைத் தந்து / சமூகத்தை நிமிர்த்துவதுதான்”
(ப.93)
என அறுதியிட்டு உரைக்கின்றார் கவிஞர் முனியாண்டி. இங்ஙனம்
எழுது-கோலுக்கு இலட்சியம் வகுப்பதோடு நின்றுவிடாமல், ஏற்றமிகு
கருத்துக்களை இமைப் பொழுதும் சோராது எடுத்துரைத்து இச் சமூகத்தை
நிமிர்த்தும் பணியில் தமது எழுதுகோலைச் செவ்வனே பயன்படுத்தி வருகின்றார்
கவிஞர் அ.ச.மு.முனியாண்டி எனலாம். ஒரே வரியில் இரத்தினச் சுருக்கமாக
மதிப்பிட வேண்டும் என்றால், அன்பு இளவல் அ.ச.மு.முனியாண்டியின்
அகராதியில் ‘விடியும் என்ற நம்பிக்கை’யே கவிதை எனலாம்.
முனைவர்
இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|