உளவியல் நயமும் நுட்பமும் பொருந்திய குறுந்தொகைப் பாடல் 

பேராசிரியர் இரா.மோகன்

குறிஞ்சித் திணையில் அமைந்த குறுந்தொகை 176-ஆம் பாடலை இயற்றியவர் வருமுலையாரித்தி என்னும் பெண்பாற் புலவர். ‘தோழி கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது’ என்பது  இப் பாடலின் துறைக் குறிப்பு. ‘தலைவன் தன் குறையினை முடித்து, விருப்பத்தினை நிறைவேற்றி வைக்கும்படி தோழிக்கு உரைப்ப, தோழி தலைவியை அணுகித் தலைவனை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது’ என்பது இதன் விளக்கம்.

தோழியின் கூற்றாக அமைந்த வருமுலையாரித்தியின் குறுந்தொகைப் பாடல் வருமாறு:

“ஒரு நாள் வாரலன்; இருநாள் வாரலன்;
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனின் போகி யோனே;
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த

ஏறுடை மழையின் கலிழும்என் நெஞ்சே!”    
      

“தலைவன் ஒரு நாள் மட்டும் வந்தான் அல்லன்; இரண்டு நாட்கள் மட்டும் வந்தான் அல்லன்; பல நாட்களாக நம்மைத் தேடி வந்தனன்; நம்மிடம் பணிவினை வெளிப்படுத்தும் சொற்களைப் பலமுறை கூறி, என்னுடைய நல்ல நெஞ்சத்தினை நெகிழச் செய்த பிறகு (அவ்வாறு அவன் இரந்து நின்று மொழிந்ததை மறுத்ததால்) மலை மேல் முதிர்ந்த தேனடை, தன்பால் உள்ள தேனை ஒருவரும் கொள்ளாது கீழே விழுந்து பயனின்றிப் போவதைப் போல, திரும்ப வாராதே போய்விட்டான். இப்போது நமக்குப் பற்றுக்கோடாக விளங்கும் தந்தை போன்ற அத் தலைவன் எங்கே இருக்கின்றானோ? பலவகையான வேற்றுமைப்பட்ட நிலப்பகுதிகளை உடைய நல்ல நாட்டில் பெய்த இடியுடன் கூடிய மழைநீர், கலங்கி வருவது போல என் நெஞ்சம் இதை எண்ணிக் கலங்குகின்றது” என்பது இப் பாடலின் தெளிவுரை.

தொல்காப்பியர் வகுத்துத் தந்த நோக்கு நெறி நின்று ஆராயும் போது இக் குறுந்தொகைப் பாடலில் புலனாகும் நயங்களும் நுட்பங்களும் வருமாறு:

1.   “ பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ
        பெண்மை உடைக்கும் படை”     
         (1256)

எனக் காமத்துப் பாலில் வரும் குறட்பாவின் விரிவாக்கமே இக் குறுந்தொகைப் பாடலின் முதல் மூன்று அடிகள் ஆகும். ‘பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி என், நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை’ என்னும் குறுந்தொகைப் புலவரின் கருத்து மகளிர் உளவியலுக்குப் (Woman Psychology) பெரிதும் ஒத்து வருவதாகும். பன்மாயக் கள்வனான தலைவன் பணிமொழியினைப் பெண்மையை உடைக்கும் படையாக வள்ளுவர் உருவகம் செய்திருப்பதும் நோக்கத்தக்கது.

2.   “ஒருநாள் செல்லலம், இருநாள் செல்லலம்,
        பலநாள் பயின்று பலரொடு செல்லினும்”   
   

என்னும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் அடிகள் (101: 1-2) ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.

3.   தலைவனுக்கு மலையின் இடத்தில் முதிர்ந்து வீழ்ந்த தேனடையைப் புலவர் உவமை கூறி இருப்பது பாராட்டத்தக்கது. ‘மலைத்தேன் இதுவென மலைத்தேன்’ எனக் கவியரசர் கண்ணதாசனும் தம் திரை இசைப் பாடலில் காதல் வயப்பட்ட ஒரு தலைவனின் கூற்றாக எடுத்தாளுவார்.

4.   “ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?” என்னும் இக் குறுந்தொகைப் பாடலின் ஐந்தாம் அடி, சங்க இலக்கியத்தில் (புறநானூறு, 307) பயின்று வருதலின், அக்காலச் சொற்கோவையின் இருப்புத் தொடராகக் (Stock Phrase) கொள்ளுதல் வேண்டும். ‘ஆசாகு எந்தை என்றது – யாவர்க்கும் பற்றுக் கோடாகும் தலைமைத் தன்மையுடையான் என்று பொதுவாகக் கூறுவாள் போன்று தலைவனுடைய தலைமைத் தன்மையை யானும் கண்டு மகிழ்கின்றேன் எனத் தன் உடம்பாடு குறிப்பாலுணர்த்தியவாறாம்’ (குறுந்தொகை மூலமும் உரையும், ப.316) என நுண்ணிதின் எடுத்துரைப்பர் பொ.வே.சோமசுந்தரனார்.

5.   இப்பாடலின் ஈற்றில் நெஞ்சத்தின் கலக்கத்திற்கு மழை நீரின் கலக்கத்தைப் புலவர் உவமை கூறியுள்ளார். “வேற்று நாட்டிற் பெய்த மழை நீர் அந்நாட்டில் தெளிவுடையதாக வீழினும் அந்நீர் வெள்ளம் அயல் நாட்டிற் புகும் போது கலங்கி வருமாதலின் அதனை உவமை கூறினாள்” (குறுந்தொகை மூலமும் உரையும், ப.334) என இவ்வுமையில் நுட்பம் காண்பர் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சா.

6.   தலைவனைத் தலைவியோ தோழியோ ‘தந்தை’ (‘எந்தை’) எனக் குறிப்பிடும் மரபு ‘அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி?’ (குறுந்தொகை 93:2-3) என்ற அள்ளூர் நன்முல்லையாரின் பாடலாலும் அறியப்படும்.

7.   முடிவாக, தலைவனின் முறையீட்டினையும் தனது உள்ளத்து உணர்வையும் கருத்தில் கொண்டு தலைவி தலைவனை ஏற்றுக் கொள்ளல் வேண்டும் என்பதுவே தோழியின் வேண்டுகோள்.

இங்ஙனம் உளவியல் நயமும் நுட்பமும் பொருந்திய பாடல்கள் குறுந்தொகையில் நிறைய உள்ளன.



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.




 

 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்