மகிழ்ச்சியின் திறவுகோல்

பேராசிரியர் இரா.மோகன்

'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத் தங்கமே!' என மொழியும் கவியரசர் கண்ணதாசனின் புகழ்பெற்ற தத்துவப் பாடல் ஒன்று உண்டு. இறைவனுக்கு மட்டுமன்றி, மகிழ்ச்சிக்கும் இக் கூற்று பொருந்தி வருவதே ஆகும். உண்மையான மகிழ்ச்சியைத் தேடி இருக்கும் இடத்தை விட்டு விட்டு, அதை எங்கெங்கோ, எதில் எதிலோ தேடி அலைகின்றான், ஆலாய்ப் பறக்கின்றான் மனிதன். முடிவில்இ மகிழ்ச்சியின் திறவுகோல் தன்னிடமே உள்ளதை அவன் அனுபவத்தில் உணர்கிறான். இவ் வாழ்வியல் உண்மையை அழகுற உணர்த்தும் சூஃபி கதை ஒன்று:

செல்வந்தன் ஒருவன் தேடலை மேற்கொண்டிருந்தான். அவன் தேடிக் கண்டடைய முயன்றது மகிழ்ச்சியை. அவனிடம் நிறையப் பணம் இருந்தது. மகிழ்ச்சியின் திறவுகோலை யார் கொடுத்தாலும், அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதற்கு அவன் தயாராக இருந்தான். அவன் எத்தனையோ ஆசான்களிடம் சென்றான். ஆனால், மகிழ்ச்சியை எவராலும் அவனுக்கு வழங்க முடியவில்லை. அவன் ஒரு பை நிறைய வைரங்களைக் கொண்டு சென்றான். ஒரு குருவிடம் சென்று, 'இந்த வைரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நான் பேரின்பம் அடைவதற்கான வழியினைச் சொல்லுங்கள்' என்று கேட்டான். இப்படி பல குருமார்களை அவன் பார்த்தாயிற்று. மகிழ்ச்சியின் இரகசியம் தான் அவனுக்குக் கிடைக்கவில்லை.

பிறகு ஒரு சூஃபி குருவிடம் சென்றான் அவன். அந்த சூஃபி குரு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். செல்வந்தன் தனது வைரப் பையைக் குருவின் முன் வைத்தான். 'இதோ, கோடிக் கணக்கான பெறுமானம் உள்ள வைரங்கள். எனக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள், இந்த வைரங்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்' என்றான்.

அந்த சூஃபி குருவோ வைரங்கள் இருந்த பையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

செல்வந்தன் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்தான். பிறகு கூச்சல் போட்டபடி அவனும் குருவைப் பிடிப்பதற்காக ஓடினான். அந்த ஊரின் அத்தனை தெருக்களும் மூலை முடுக்குகளும் குருவிற்கு அத்துப்படி. எனவே அவர் எளிதாய் ஓடினார்.

'திருடன்... திருடன்! என்னுடைய வைரங்களைத் திருடிக் கொண்டு ஓடுகிறான். அவன் குருவல்ல, மோசக்காரன். அவனைப் பிடியுங்கள்!' என்று உரக்கக் கூவியபடி பின்தொடர்ந்து ஓடினான் செல்வந்தன். ஆனால், அவனால் குருவைப் பிடிக்க முடியவில்லை.

ஊர் மக்கள் கூடினர்; 'கவலைப்படாதே!' என்றனர்.

'நான் எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்? என் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது, அத்தனையும் வைரம். கிடைக்கவில்லை என்றால் நான் ஒரேயடியாக அழிந்து போக வேண்டியது தான்!' என்று புலம்பினான் செல்வந்தன். தற்போது ஊர்க்காரர்களும் அவனுடன் சேர்ந்து குருவைத் தேடினர்.

முன்பு செல்வந்தன் தம்மைச் சந்தித்த அதே மரத்தடியில் குரு பையுடன் அமர்ந்திருந்தார். செல்வந்தன் அவர் அருகே ஓடிச் சென்று 'கப்'பென்று அவரிடம் இருந்து பையைக் கைப்பற்றினான். பையைத் திறந்து பார்த்தான். வைரங்கள் அப்படியே இருந்தன. 'கடவுளே! உனக்கு நன்றி!' என்ற படி செல்வந்தன் வைரங்கள் அடங்கிய பையைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்; நிம்மதிப் பெருமூச்சினை விட்டான்.

சூஃபி குரு இப்போது செல்வந்தனைப் பார்த்துக் கேட்டார், 'தற்போது நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா, இல்லையா?' என்று.

அவன் சொன்னான், 'ஆம், மகிழ்ச்சியாக இருக்கிறேன், இதற்கு முன்பு ஒருபோதும் இத்தனை மகிழ்ச்சியாக நான் இருந்ததில்லை!' என்று.

நண்பர்களே, 'நமது மகிழ்ச்சியின் திறவுகோல் நம்மிடமே உள்ளது!' என்பது இப்போது உங்களுக்கு நன்கு புரிந்திருக்குமே!.


முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.




 

 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்