கம்பனில் வெளிப்படும் மனித மாண்புகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


ரு செயலைச் செய்கிற உணர்வு, அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் தன்மை மறைந்து விட்டால், அதாவது 'வினை' என்ற ஒன்றில்லையேல் அதனால் ஏற்படும் பாவ, புண்ணியங்களும் இல்லாதொழிகின்றன. பாவம் அழிவது நல்லதே, ஆனால் புண்ணியம் சேராவிட்டால் எப்படி என்று தோன்றக் கூடும். நன்றாக யோசித்துப் பார்த்தால், நம்மால் செய்ய முடியும் என்றுள்ள காரியங்களுக்கு மட்டுமே நாம் 'நான் செய்தேன்' என்று உரிமையும், பெருமையும் பேசுகிறோம். நமது எல்லைக்கப்பால் நடக்கின்றவற்றுக்கு, எதிர்பாராத நடப்புகளுக்கு, ஏன் நாம் நினைப்பதற்கும், விரும்புவதற்கும் மாறான செயல்களுக்கு 'கடவுள் சித்தம்-அவர் இப்படிச் செய்ய முடிவெடுத்து விட்டால் யாரால் தடுக்க முடியும்?' என்கிறோம். நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ளது மட்டுமல்ல, நாம் செய்யும் எல்லாக் காரியங்களுக்குமே அவர்தான் காரணம் என்கிற ஞானம் வந்து விட்டால், பிறகு அதில் நமக்கென்று என்ன சொந்தம் இருக்க முடியும்? வழக்கமாக, 'கடவுள் பார்த்துக்கொள்வார்' என்று படிக்காமல் பரிட்சைக்குப் போனால் முடிவு என்னவாகும் என்று பலர் கேட்பார்கள். வெற்றிப் பெற வைக்க வேண்டுமென கடவுள் நினைத்தால், படிக்காமல் சென்றால் கூட ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததை நினைவு கூர்ந்து எழுதி தேர்வடையலாம். அப்போது நாம் 'அதிர்ஷ்டவசமாக', படிக்க முடியாமல் போனாலும், சிந்தித்து பதிலெழுதி தேர்வடைந்து விட்டேன் என்று நம் அறிவின் மீது பெருமிதம் கொள்வோம்.

மாறாக, சில வேளைகளில் கடைசி நிமிடம் வரை படித்து விட்டுப் போனாலும், அந்த வினாடியில் அவை மறந்து போகும். அல்லது எதிர்பாரா ஏதோ ஒரு தடையினால் ஒரு மனிதனைப் போல இன்னொருவர் இருப்பதில்லை. பல கோடி மக்கள் இருப்பினும், கை ரேகைகள் ஒத்திருப்பதில்லை என்பதை அறிவோம். சமீபத்தியக் கண்டுபிடிப்பொன்று புல்லாக இருப்பினும், ஒவ்வொன்றும் தனி அடையாளம் கொண்டிருக்கிறது என்று கூறுகிறது. இப்படி உருவில் தனித்தன்மை இருந்தபோதிலும், ஒவ்வொரு இனமும் தனக்கென சில குணங்களைக் கொண்டிருக்கின்றன. அதில் வேறுபாடு அதிகமில்லை. அதனால்தான் நாய் நன்றியுள்ளது, நரி தந்திரமானது, காக்கை ஒத்து வாழும் குணமுடையது என்றெல்லாம் கூறுகிறோம். மனிதர்களையும் இவ்வாறு கூறு போட்டுப் பிரிக்க முடியும். அதனால்தான் ஒத்த குணங்களும், ஒத்த விருப்பங்களும், ஒத்த இலட்சியங்களும் உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து எதையும் சாதிக்க முடிகிறது. ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடிகிறது. ஆயிரம் பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், அவற்றினூடே பிரியாதிருக்க முடிகிறது.

வாழ்க்கை அனுபவங்கள், வளரும் சூழல், பெற்ற அறிவு, சிந்தனை இவை மாறுபடுவதால், பார்க்கும் கண்ணோட்டம், எடுக்கும் முடிவுகள் இவை மனிதனுக்கு மனிதன் வேறுபடலாம். ஆனால் அவனது உணர்வும், மனமும் பெரும்பாலும் ஒன்றுபட்ட நிலையிலேயே செயல்படுகின்றன. இன்பத்தை நாடுவதும், துன்பத்தைத் தவிர்க்க எண்ணுவதும், தான் விரும்பியது கிடைக்காதபோது ஏமாற்றம் கொள்வதும், அதை அடைந்தே தீருவது என்று அதன்மீது வேட்கைக் கொள்வதும், இடையே கிடைக்காமல் போய்விடுமோ என்ற தாபத்தில் கோபம் கொள்வதும்; எல்லாருக்கும் பொதுவானது. அநேகமாக, இந்த வட்டத்திற்குள்தான் அனைவரும் அடக்கம். இதையே 'மனித இயல்பு' என்று சொல்லுகிறோம். இந்தச் சராசரி தரத்திலிருந்து இவற்றை அடக்கி, மேம்பட்டு உயர்பவர்களைப் போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் அல்லது பின்பற்ற விழைகிறோம். இதிலிருந்து தாழ்ந்து போகிறவர்களை, நம் தரத்திற்கேற்ப மன்னிக்கிறோம், திருத்துகிறோம் அல்லது விட்டுவிலகுகிறோம்.

இந்த மனித இயல்பு கூடக்குறைய இருக்க முடியுமே தவிர, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் நிரவியே இருக்கிறது. ஒரு அனுபவம் நேரிடும் போது உடனடியாக வெளிப்படுவது இந்த இயல்;புதான். சிலர் அதை அறிவால் அடக்கி, சீர் தூக்கிப் பார்த்து, மாறாக, தன் இச்சைகளை அடக்கியேனும் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள். ஒரு சிலருக்கு அதை மீள முடிவதில்லை. இந்த மனித இயல்புகளை மீறுபவருக்குக் கூட அந்தரங்கத்தில் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கலாம். வீணாக எதையோ இழக்கிறோமோ என்ற குறுகுறுப்பும், கழிவிரக்கமும் ஊடாடிக் கொண்டிருக்கலாம். இதுவும் மனித இயல்புதான்!

இந்த உணர்வுகளை எடுத்த எடுப்பிலேயே வென்று விடுபவர் யாருமில்லை. இதனால்தான் ஞானியரும், மேதைகளும் புலனடக்கம் பற்றியும், அதைக் கடைப்பிடிக்க முடியா மனித பலவீனம் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்.

'தனியனேன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு பற்றுஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான்சுறவின் வாய்ப்பட்டு
இனிஎன்னே உய்யும்ஆறு என்றுஎன்று எண்ணி
அஞ்சு எழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேன்'


என்கிறார் மாணிக்கவாசகர். (துணை ஏதும் கிடைக்கப் பெறாத நான், பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கிறேன். துன்பம் என்னும் பேரலை வந்து மோதுகிறது. மாதர் மயக்கம் என்னும் காற்று வீசி என் மனதைக் கலக்குகிறது. ஆசை என்னும் சுறாமீன் என்னை விழுங்க வருகிறது. இனி உய்யும் வகை யாது என்று பலவாறு எண்ணுகிறேன்)

'சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
வந்து நின்னடிக் காட்செய என்றால்
வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே'
என்கிறார் வள்ளலார்.

இந்தக் கண்ணோட்டத்தில் இராம காவியத்தினைக் கவனிக்கும்போது, அதில் பங்கு கொள்கிற ஆண் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்தச் சாதாரண மனித இயல்புகளை வென்றவர்களாகவே உள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு சிறிதும் தயங்காது, தங்கள் முடிவுகளைப் பற்றிய உறுத்தலோ, வருத்தமோ இன்றிச் செயல்படுகின்றனர். தங்களைப் பற்றி மட்டுமல்ல, தங்களைச் சுற்றியுள்ளோரின் உணர்வுகளைப் பற்றியும் கூடச் சிந்தித்தார்களா என்ற ஐயம் எழுகிறது. அந்த அளவு உடனடியான பெரும் முடிவுகளைச் சடுதியில் எந்தப் போராட்டமும், கலக்கமும் இன்றி எடுக்கின்றனர். முடிவு எடுத்தபின்னரும் அதுபற்றி நினைத்துப் பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி எந்தச் சலனமுமின்றி ஓர் இலட்சியவாதியாக, ஒரு குறிக்கோளை நோக்கியே பயணிக்க வேண்டுமென்றால் சராசரி மனித உணர்வுகளை வென்றவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அந்த அளவு ஏதோ ஒரு வகையில் 'தெய்வாம்சம்' பொருந்தியவர்களாகவே அவர்களைக் காண்கிறோம்.

பால காண்டத்திலேயே, அயோத்தியின் சிறப்பைப் பற்றிக் கூறவந்த கம்பன் 'பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன 'செங்கண் மால்' பிறந்து, ஆண்டு, அளப்ப அருங்காலம் திருவின் வீற்றிருந்தனன்' (நகரப்படலம்-98) என்று ராமனுக்குக் கட்டியம் கூறிவிட்டான். எனவே ராமனை ஒரு தெய்வப்பிறவியாகவே நோக்குதல் நலம். இதை உறுதிப்படுத்துவது போலவே அகலிகை மீட்பு நடைபெறுகிறது:

'கண்ட கல்மிசைக் காகுந்தன் கழல் துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
பண்டை வண்ணமாய் நின்றனள் .....'
(பால.அகலி.465)

அறியாமை இருள் நீங்கி, ஞானமுற்றவன் பரமன் திருவடிகளை அடைவதைப் போல, அகலிகை முன்னைய வடிவத்தோடு எழுந்தாள் என்று ஐயமற தெரிந்துகொள்கிறோம். இதனால்தான் பரசுராமன் தன் வீரதீர பராக்கிரமச் செயல்கள் பற்றிய வர்ணனைகள் அனைத்தையும் சொல்லக் கேட்ட ராமன், 'முறுவல் எய்தி, நன்று ஒளிர் முகத்தன் ஆகி', 'நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக' எனத் தனக்குரிமையான வில்லைத் தானே வாங்கும் நோக்கில் கூறுகிறான். அடுத்து அரியணை ஏறுமுன் கைகேயி 'பரதன் நாடாளட்டும், நீ காடு சென்று பதினான்கு ஆண்டுகள் கழித்து வா' எனக் கூறியபோது, குழப்பமோ, வியப்போ, ஏன் என்ற கேள்விக்குறியோ இன்றி 'அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்ற' முகம் கொள்ள ஒரு சாதாரண மனிதனால் முடியுமா என்பது சந்தேகமே! விராதன் சீதையைக் கொண்டு செல்ல முயன்றபோதும், 'சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக' (ஆரணி.விரா.22) அவனால் இருக்க முடிந்தது. அகலிகை போன்று விராதனும், ராமன் காலடி பட்டதும் 'பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் சுட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் விட்டு விண்ணிடை விளங்கினன்'.(ஆ.வி.45). போர்க்களத்தில் ராவணனுடைய வில்லுக்கெதிராய் அம்பு தொடுத்தபோது கூட ராமன் 'முறுவல் எய்திய முகத்தினன்' ஆகவே விளங்குகிறான். சிகரம் வைத்தாற்போல ராவணன் வாயிலாகவே கம்பன்,

'எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை'


                                                                                                  (யுத்த.கும்ப.17)

என்று கூறுகிறான்.

இப்படி எல்லா நிலைகளிலும், அதாவது மனித இயல்புள்ள ஒருவன் கோபமோ அல்லது வருத்தமோ கொள்ளும் இடங்கள் அத்தனையிலும் ராமன் நிலை குலையாது புன்சிரிப்புத் தவழ நிற்கக் காண்கிறோம். இந்த 'தெய்வாம்சமே' ராமன் மீது இன்றுவரை சாட்டப்படும் குற்றங்களான 'வாலி வதை', 'சீதையின் தீக்குளிப்பு' இரண்டுக்கும் பதில் கூற வல்லது. தீமை தோற்க வேண்டும், அதற்கு இடமளித்திருக்கும் மாயைக் கலைய வேண்டும், ஆன்மா மீட்படைய வேண்டும் என்றால் இறைவன் வலிய ஆட்கொள்ள வேண்டும்.அவன் கண் முன் இன்ப துன்பமும், ஆக்கல் அழித்தலும், 'பொய்ம்மையும், வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்ற வள்ளுவத்திற்கிணங்க நன்று-தவறுகளும் ஒன்றே! 'ஆத்மா பிறப்பற்றது, என்றுமுள்ளது. சரீரம் கொல்லப்படும்போதும் இது கொல்லப்படுவதில்லை. இந்நிலையில் யார் யாரைக் கொல்ல முடியும்?' (பகவத்கீதை2-20,21), 'எல்லாப் பிராணிகளின் முதலும், நடுவும், முடிவும் நானே!' (பகவத்கீதை10-20) இந்த நோக்கில் வாலியின் முடிவை 'வதமாக' எப்படிக் கொள்ள முடியும்? இந்த உண்மையை உணர்ந்தே வாலியும் 'மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!' என்று பரவசப்படுகிறான்.(கிட்.வாலி.129)இதே கோணத்தில் செய்யப்பட்டதுதான் தாடகை வதமும். 'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்' என விசுவாமித்திரர் சொல்லும்போது, 'அறன் அல்லவும் எய்தினால்' (பால.தாட.44) கூட இதைச் செய்து முடிப்பேன் என ராமன் கூறவில்லையா? தாடகை இராவணனுக்குப் பாட்டி என்ற உறவைக் கம்பன் 'பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள்' (யுத்த. அங்கதன்32) என்று கூறுகிறான். எனவே விசுவாமித்திரனுடைய தவத்திற்கு பாதுகாப்பும், ராவணன் ராமனால் கொல்லப்படுவான் என்ற நம்பிக்கை தேவர்கள் பெறவும் செய்தது இந்த வதையும்!

இனி மிக மிக நுட்பமான 'சீதையின் தீக்குளிப்பில்' ராமன் நிலையினைப் பார்ப்போம். அலங்காரம் செய்ய மறுத்த சீதையை, அது ராமனின் விருப்பம் எனக்கூறிச் சம்மதிக்க வைக்கிறான் வீடணன். இதற்கிடையே ராமனும், அரக்கர்கள் சீதையைக் காணும்பொருட்டு கூடுவதைத்; தவிர்க்க எண்ணி விலக்குவோரைக் கடிய விரும்பி, வீடணனிடம் கோபமாகப் பேசுகிறான். பின்னர் சீதையைக் காண்கிறான்: அதுவும் எப்படிப்பட்ட சீதையை!?

'கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்'
(யுத்த.மீட்சி.60)

'தன்னைப் பிரிந்தாலும், உயிர்களுக்கு நல்லருள் புரிகின்ற தர்மம் போன்றவளை அன்பின் தலைவன் ஆழ்ந்து நோக்கினான்'. ஒரு கணவன், மனைவி மீது அன்பும், ஆசையும், நம்பிக்கையும் கொண்ட ஒருவன் போலப் பார்த்தான்! இங்கு அவனது 'அவதார' நோக்கு ஆரம்பமாகிறது. தெய்வாம்சம் பொருந்தியவர்களும் உலக வாழ்க்கையின் போது உலகத்தோடு ஒட்டி வாழ்ந்தாக வேண்டியுள்ளது. தன்னை இறைவனின் குமாரன் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஏசு, எத்தனையோப் புதுமைகளைச் செய்து மக்களை பிரமிக்கச் செய்தவர், தான் வாழ்ந்த சூழலுக்கேற்ப 'மனுமகனுக்குத் தலை சாய்க்க இடமில்லை' என்று கூறவும், தன்னையேச் சிலுவைச் சாவுக்குக் கையளிக்கவும் வேண்டியதாயிற்று.

திரு ஜெயகாந்தன் மிக ஆழகாகக் கூறுகிறார்: 'இறுதியில் என்ன மிஞ்சுகிறது என்று காட்ட எல்லாமே வேண்டும். தர்மம் வெல்லும் என்று காட்ட அதர்மம் வேண்டும். ஒழுக்கத்தின் சிறப்பைப் பேச ஒழுக்கக் கேட்டின் விளைவையும் சொல்ல வேண்டும். ராமன் சரயு நதியில் மூழ்கி மாள வேண்டுமென்று யார் ஆசைப்படுவார்? சீதையைப் பூமி பிளந்து விழுங்கியதில் யாருக்குச் சம்மதம்? டெஸ்டிமோனாவைச் சந்தேகித்து ஒதெல்லோ அவளைக் கொன்றது யாருக்கு உடன்பாடு? அம்பிகாபதிக்குக் கொலைத் தண்டனைக் கிடைத்ததில் யாருக்கு மகிழ்ச்சி? பாலை மணலில் கயஸ் பைத்தியமாகத் திரிவதில் யாருக்குத் திருப்தி? 'வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் உங்களைச் சுற்றி நிகழும் வாழ்வின் சோகத்தை மறந்து திரிகிறீர்களே, இதையும் பாருங்கள்' என்று காட்டவே அவர்கள் அவற்றைப் படைத்தார்கள்!' அது போல சீதையைக் காணக் கூடியிருப்போர் மனதில் தோன்றக் கூடியக் கேள்விகளுக்குப் பதிலளித்து, தன் அன்புக்குரியவள் மாசற்றவள் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறான் ராமன் தற்போது. எனினும், அந்தக் கொடுமையைப் பொறாத கம்பன் 'பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா'(படம் எடுத்துச் சீறுகின்ற பாம்பென) என்கிறான். குற்றமற்றவளைக் கடுஞ் சொற்களால் தாக்கி, 'உன் நிலையை சாதித்துக் காட்டு' என்று கூறிய ராமன், அதற்குப் பிறகு பேசவில்லை, பேச இயலவில்லை போலும்! ஆனால் கம்பன் ஒரு அருமையான சொல்லால் ராமன் சீதையை மனமார ஏசவில்லை எனஅவன் செய்கைக்கு முலாம் பூசுகிறான். 'ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும் வாடிய இல்லையால், உணர்த்துமாறு உண்டோ?' (யுத்த.மீட்சி.87) (ராமனின் ஊடல் கோபத்தால், தனக்கு உண்டாகிய வியர்வைத் துளிகள் உலரா நிலையில் வேறென்ன சொல்லி உணர்த்துவது?) என்று அக்னித் தேவன் வழி பேசுகிறான், ராமன் கொண்டது ஊடலேயன்றி வேறெதுவுமில்லை என்பதுபோல். இறுதியாக ராமன் ஊருக்கே, உலகத்திற்கே தெரிவிப்பது போன்று,

'அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு ஆதலால்
இழிப்பு இல சொல்லி, நீ இவளை 'யாதும் ஓர்
பழிப்பு இலள்' என்றனை, பழியும் இன்று இனிக்
கழிப்பிலள்'
(யுத்த.மீட்சி-97)

என்று சீதையின் கற்பினை நிலைநாட்டுகிறான்!

வானுலகில் தேவர்கள் தங்கள் தவத்திற்கு ஊறு செய்யும் அரக்கர்களை அழித்து, தங்களை காக்கும்படி வேண்ட, திருமால் 'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய், கானினும், வரையினும், கடி தடத்தினும் சேனையோடு அவதரித்திடுமின் சென்று' (பால.திரு அவதா.20) என்று கூறியதோடு,

'மசரதம் அனையவர் வரமும், வாழ்வும் ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்
கசரத துரக மாக் கடல்கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி
வளையொடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளையவர்கள என அடிபரவ ஏகி, நாம்
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்'
(பால.திருஅவதா.21-22)

ஐயத்திற்கிடமின்றி விண்ணுலக தேவர்கள் குரங்கினங்களாக, அரக்கர்களின் வர பலத்தையும், வாழ்வையும் அழிக்கத் தானே தசரதன்மகனாகவும், தன் படைக்கலங்களான சங்கும், சக்கரமும், படுக்கையான அனந்தனும் தனக்கு இளையோராகவும் பிறப்போம் என்றுவாக்களித்ததாகக் கூறுகிறான் கம்பன். (இதில் சங்கு-சத்துருக்கன், சக்கரம்-பரதன், அனந்தன்-இலக்குவன் என்பர். வான்மீகம் விஷ்ணுவின் பாதி அம்சம் ராமனாகவும், நாலில் ஒரு அம்சம் பரதனாகவும், மீதி அம்சம் இலக்குவன்-சத்துருக்கன் ஆகவும் பிறப்பெடுத்தது என்கிறது) மனித உருவில் இருந்தபோதும் இந்த 'தெய்வாம்சம்'தான் அவர்களை ஒரு 'ளரிநச அயn' அளவில் மிகைப்படுத்தப்பட்ட சக்தியோடு உலவ வைக்கிறது. இதுமட்டுமல்ல, தெளிவாகவே நான்முகன், 'முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன்' - முன்பே கரடிகட்கு அரசனான 'சாம்பவந்தன்' என்பவனாக நான் வந்து பிறந்துள்ளேன் என்று கூறியதாகச் சொல்கிறான் கம்பன் (பால.திருஅவ.25) அடுத்து வரும் பாடல்களில் (26-27) இந்திரன் வாலி, அவன் மகன் அங்கதனாகவும், சூரியன் வாலியின் தம்பி சுக்ரீவனாகவும், அக்கினி நீலன் என்ற வானரத் தலைவனாகவும் பிறப்பதாகவும், காற்றுத் தேவன் 'மற்று எனது கூறு மாருதி' என, 'புராரி மற்றுயானும் காற்றின் சேய்' (திரிபுரத்தை எரித்த சிவபிரான் யானும் வாயுகுமாரனான அனுமனாகப் பிறக்கிறேன்) என்று வாக்களிப்பதாகவும் காண்கிறோம். இந்தப் பிண்ணனி அசுரரை ஒழிக்க, தேவலோகமே திரண்டு வந்ததை சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கிறது.

தொகுப்புரை:

  • இதுவரை நாம் எப்படி வாழ்ந்திருந்த போதிலும், இனியேனும் பலர் சென்று வழிகாட்டிய அந்த 'பேரின்ப வீட்டுக்கு'ச் செல்லும் திசையில் செல்ல முயல்வோம். மலை உச்சிக்குச் செல்ல அடிவாரத்திலிருந்து பல பாதைகள் இருக்கலாம். இதிலும் 'என் பாதைதான் சிறந்தது' என்ற குறுகிய நோக்கு வேண்டாம். மத வெறிக்கு இந்த எண்ணம்தான் அடிப்படை. அவரவர் வழியில் அவரவர் செல்லட்டும். முடிவு ஒன்று தான். அப்படியே தன் பக்தி மார்க்கத்தில் பற்றும், அதன் சிறப்பை மற்றவர்கள் உணரவில்லையே என்ற ஆதங்கமும், 'தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்கிற முறையில் எல்லோருக்கும் அதை அறிவிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தால் - அதை 'நமது நடத்தைத் தெரிவிக்கட்டும்'. குன்றின் மேல் வைத்த விளக்காக, இறை ஒளி நம் மூலம் பரவி எல்லோரையும் ஈர்க்கட்டும். வழி காட்டட்டும்!

  • குறிக்கோளை விடாது, அடுத்துள்ளவர் போல் நாமும் வாழ வேண்டும் என்று சொத்தும், புகழும் சேர்க்க விரும்புவது போல, இறைவனின் அருளைச் சேர்க்க ஆவலும், ஆர்வமும் கொள்வோம். 'வாழ்க்கை எப்போதும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அளிக்கிறது-அதன் பெயர் நாளை' என்பார்கள். அந்த 'நாளை' நமக்கு இறைவனில் தன்னை மறக்கும் நாளாகட்டும். பாலில் கலந்து விட்ட நீராக, பிரித்துணர இயலாத பிணைப்பாக இறை-மனித உறவைக் காண்போம். ஏனெனில் இதில் கூட 'இறைவனின் சன்னிதானத்தில் நாம்' என்றும், 'இறைவனோடு இரண்டறக் கலப்பது' என்றும் இரண்டு வகை நம்பிக்கை உண்டு;. இங்கே பாலோடு சேர்ந்துவிட்ட நீர் தனித்துத் தெரிவதில்லை என்கிற 'அத்வைதம்' (கடவுளில் கலந்து 'நாம்' மறைந்து போவது), தனித்துத் தெரியாவிடினும் பால்-நீர் என்ற இரண்டுமே உள்ளது என்கிற 'துவைதம்' இரண்டும் கூட உண்மையில் ஒன்றைக் குறிப்பதாகவே ஆகிறது.

     

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 035
 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்