நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்! ‘

பேராசிரியர் இரா.மோகன்

‘கவியரசர் பாரதியாரின் பாடல்களில் இருந்து மானுட வாழ்வைச் செம்மைப்படுத்தும் – செழுமைப்படுத்தும் – முத்தாய்ப்பான மூன்று வரிகைளைத் தேர்ந்தெடுத்துத் தாருங்கள்’ என்று யாரேனும் கேட்டால், மறுகணமே நம் நினைவுக்கு வரும் பாரதியாரின் மூன்று முத்திரை வரிகள் இவை தான்:

“மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும்.”

எதற்கும் அசையாத, கலங்காத உறுதியான மனம் – எப்போதும் இனிய சொற்களையே வழங்கும் இயல்பு – எந்நாளும் நல்லதையே நினைத்திருக்கும் திறம்: இவை மூன்று பண்புகளும் ஒரு மனிதனிடம் பொருந்தி இருந்தால் போதும், அவன் மாமனிதனாக வாழ்வில் உயருவது என்பது உறுதியிலும் உறுதி.

“அச்சம் இல்லை அழுங்குதல் இல்லை . . .
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்     
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்”    

என விநாயகர் நான்மணி மாலையில் அஞ்சாமையின் உச்சத்தில் நின்று, அறுதியிட்டு உரைக்கும் பாரதியார் தமது ‘புதிய ஆத்திசூடி’யிலும் ‘சிதையா நெஞ்சுகொள்’ என இரத்தினச் சுருக்கமாக மொழிவார்.

‘யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே’ எனத் திருமூலர் யாவரிடமும் இன்சொல் பேசுவதைத் தலையாய ஓர் அறமாகக் குறிப்பிடுவார். வள்ளுவர் பெருமானும் ‘இனியவை கூறல்’ அதிகாரத்தில் பண்புடையவனாய் இருத்தலும் இன்சொல் கூறுதலும் தான் ஒருவனுக்கு அணிகலன் ஆகும் என்பார்.

“ பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

  அணியல்ல மற்றுப் பிற”

என்பது வள்ளுவர் வாக்கு.

வாழ்வில் நல்லதையே நினைத்து வந்தால், நல்லதே நடக்கும். ‘எண்ணத்தில் நலம் இருந்தால் எல்லாமே நலமாகும்’ என்பது மேலோர் மணிமொழி.

ண்ணத்தின் வலிமையை உணர்த்தும் இந்தியப் பழங்கதை ஒன்று:

வெயிலும் புழுக்கமும் நிறைந்த பகற்பொழுதில் ஒரு வழிப்போக்கன் நீண்ட தூரம் நடந்து சென்றான்; நண்பகல் ஆனதும், களைப்பின் காரணமாக வழி ஓரத்தில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தான்.

அது சாதாரண மரமன்று என்பதையும், அது நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் கொடுக்கும் கற்பகத் தரு என்பதையும் அறிந்தான்.

சோர்ந்து போன தனது கால்களைத் தடவிக் கொண்டே ‘படுப்பதற்கு ஒரு மென்மையான மெத்தை கிடைத்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்’ என்று நினைத்தான் அவன்.

நினைத்து முடிப்பதற்குள் ஒரு மென்மையான, ஆடம்பரமான மெத்தையில் அவன் படுத்திருந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.

‘வலிக்கின்ற என் கால்களைப் பிடித்துவிட ஓர் அழகான இளம்பெண் இங்கே இருந்தால்…’ என்று நினைத்து முடிப்பதற்குள்ளேயே ஓர் இளவயது மங்கை அவனது படுக்கையின் அருகே தோன்றினாள்; வலித்த அவனது கால்களை இதமாகப் பிடித்து விட்டாள்.

அவன் உண்மையிலேயே வியப்படைந்தான். ‘இப்போது எனக்குத் தேவைப்படுவதெல்லாம் என் பசியைப் போக்குவதற்கான சுவை மிக்க உணவும், குடிப்பதற்கு மதுவும்’ என்று நினைத்தான்.

உடனே விதவிதமான உணவும் மது வகைகளும் அவன் முன் குவிந்தன. மகிழ்ச்சியோடு அவற்றை உண்டு முடித்து, ஆடம்பரமான படுக்கையில் ஆயாசமாகச் சாய்ந்தான் அவன். வேறு என்ன கேட்கலாம்?

அவனுக்கு முழு மன நிறைவு. நன்றாக ஓய்வெடுத்தான். மனம் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றது.

ஒரு குட்டித் தூக்கம் போட முற்பட்டான். இந்நிலையில் அவன் மனதில் ஓர் எண்ணம் ஓடியது. ‘திடீரென ஒரு புலி தோன்றி, என்னைத் தாக்கினால்…?’ என்று எண்ணி முடிப்பதற்குள், உண்மையிலேயே ஒரு புலி தோன்றி, அவனைத் தாக்கி, கடித்துக் குதறியது.

நமது எண்ணங்களுக்கு மிகுந்த ஆற்றல் உண்டு. வாழ்வில் எப்போதும் நல்லதையே நினைத்தால், நல்லதே நடக்கும்; மாறாக, தீயதையே நினைத்துக் கொண்டிருந்தால், தீயதே விளையும். நண்பர்களே, இக் கதை உணர்த்தும் செய்தி இதுதான்.


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
 


 


 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்